தொலைத்ததும்…….கிடைத்ததும்..! (6)

ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி

சட்டென்று திரும்பிய மலர்விழி ‘நானும் இங்கியே இதுங்களோடவே இருந்துகிட்டு என்ன தான் ஆவுதுன்னு ஒரு கை பார்த்துப்புடறேன்..’ ஒரு ஓரமாக இருந்த சோபாவில் தொப்பென்று கீழே அமர்ந்து கொண்டாள் .

அடுத்த சில நொடிகளில், அவளை இருவர் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி அழகு படுத்தி கண்ணாடி முன்பு கொண்டு நிறுத்தியதும் ..

நானா… இது? நான் என்ன இம்புட்டு அழகா..?..என்று கன்னத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தவள் அருகிலிருந்த பெண்ணிடம் எப்ப சூட்டிங்கு ? என்று கேட்கும்போது மனசுக்குள் ’16 வயதினே’ மயில் வந்திறங்கினாள்.

அடுத்தடுத்து நடந்தவை அவளுக்கே வியப்பாக இருந்தது. உயர்ந்த உணவு வகைகள் தந்து அவளை உண்ணச் சொன்னதும் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த இடம் ரொம்ப சொர்கமாட்டம் இருக்குதே.இங்கனயே இருந்திடலாம் போல ..ஆனால் நான் ஊருக்கு எப்படிப் போவேன்? என்ற கலக்கமும் மனத்துக்குள் வராமல் இல்லை. இரண்டு மனம் அவளுக்குள் தவித்தது.

அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாக இருந்தது பார்த்து இவளுக்கே சந்தேகம். அவர்களது கண்கள் எதையோ பேசத் துடிப்பது மலருக்குப் புரிந்தது.

ஒருத்தியிடம் மெல்லக் கேட்கிறாள்…மலர்.

நீ எங்கேர்ந்து இங்க வந்தே..?

பெங்களூரு…

நீ…? இன்னொருத்தியைப் பார்த்ததும்..

தும்…..! ஐம் ஃப்ரம் டெல்லி…

அரண்டுதான் போனாள் மலர்.

எனக்கு செல்ஃபோன் பேசணும்….! உங்க யார்கிட்ட மொபைல் இருக்கு….?

இல்லை…இங்க சிக்னல் கிடைக்காது. ஃபோனும் கிடையாது. யாரும் இங்க பேசிக்கக் கூடாது. மெல்லிய முனகலில் வந்தது வார்த்தையாய் அடுத்தவளிடமிருந்து.

அப்ப….இங்க எல்லாரும் அடிமைங்க போல….மனசுக்குள் நினைத்தவள்,

யாருக்கு சுதந்திரம் வேணும்? சாடையில் கேட்ட மலரைப் பார்த்து, அவர்கள்

கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்.

இது மலருக்குள் ஒரு சவாலை உண்டு பண்ணியது. அதுவே ஒரு சின்ன நெருப்புப் பொறியாக கிளர்ந்து, ஜ்வாலையாக கொழுந்து விட்டு கனன்றது.

எப்பிடியாச்சும் நான் தப்பிச்சிப் போகணும்….இவங்களயும் காப்பாத்தியாகணும்.

அப்ப, இந்தப் பாண்டியண்ணன்……ஷீலா…இவங்களையும் இங்கனக்குள்ள வராமல் தடுக்க என்ன செய்ய…? மனம் முழுதும் ஒரே எண்ணத்தில் தவித்தாள் மலர்.

அடுத்தது என்ன…? என்ற அந்த ஒரே எண்ணமே அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

அறயில் இருந்தவர்களை பிடித்து கன்னாப் பின்னாவென்று அடிக்க ஆரம்பித்தாள்…..ஒரே நாளில் தலைப்பின்னலை பிரித்துப் போட்டபடி, தனது துணிகளைக் கிழிக்கத் துவங்கியவள் சிறிது சிறிதாக அசல் பைத்தியம் போலானாள்.

சற்று முன் அழகாகக் காண்பித்த கண்ணாடி அவளை இப்போது பைத்தியம் போல் காண்பித்தது. மனசுக்குள் திருப்தி பட்டுக் கொண்டவளாக மலர் அருகிலிருந்தவளைப் பளார் என்று அரைகிறாள்.

அடுத்த சில நிமிடங்களில், அந்தக் கதவு திறக்கப் படுகிறது. திறந்தவன் பாண்டி.

அவனைப் பார்த்ததும் தான் மலருக்கு உயிரே வந்தது. இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல்….பைத்தியம் போலவே சுவரைப் பிராண்டிக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு போனான் அவன்.

அவர்களை, ஒரு பெரிய ஹாலுக்குள் நிறுத்தி வைத்த ஒருவர்…..

இவளுக்கு நாங்க ட்ரீட்மென்ட் தருவோம்….இங்க கையெழுத்துப் போட்டுட்டு விட்டுட்டுப் போ…என்றார்.

என்னா….சார்….நம்ம கையிலேயேவா? எப்பிடி இருந்த பொண்ணு சார்… அந்தப் பாளாப் போன மானேஜர் மட்டும் இப்ப என் கையில சிக்கினாண்டு வையி…..அவன் டா…..ரா….யிருவான். பாண்டியின் வெறி பிடித்த குரலுக்கு அவர் சிறிது தடுமாறியது தெரிந்தது..

எங்கள இப்ப இப்படியே விட்டா…நான் இத்த கூட்டீட்டுப் போயி அதும் வீட்ல விட்டுருவேன். இல்லாங்காட்டி……விஷயம் வேற மாதிரி போகும்….பரவாயில்லையா?

கட கட வென்று சிரித்துக் கொண்டே,,என்ன எலி மிரட்டுது..? என்று நமுட்டுச் சிரிப்புடன், கைபேசியைத் தூண்டினார் அவர்.

என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தினான்

தொடரும்

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க