செண்பக ஜெகதீசன்

justice scale

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.

-திருக்குறள்- 118 (நடுவு நிலைமை)

 

புதுக் கவிதையில்…

 

சாய்ந்தால் ஒரு பக்கம்,

துலாக்கோலில்

எடைவராது சரியாய்..

 

சாயாமல் ஒரு பக்கமாய்,

ஆராய்ந்து வழங்கிடும் நீதி

அணியாகும் சான்றோருக்கே…!

 

குறும்பாவில்…

 

சாயாத துலாக்கோலாய்

சாற்றிடும் நீதிதான்,

சான்றோருக்கு அழகு…!

 

மரபுக் கவிதையில்…

 

சரியாய் எடையைப் போடுதற்கு

சமநிலை கொண்ட துலாக்கோலில்

ஒருபுறம் சாயா நிலைபார்த்தே

ஒழுங்காய் வைக்கணும் இருதட்டும்,

தெரிந்திடு இதுகதை நீதியிலும்,

தவறியும் ஒருபுறம் சாராதே

உரைத்திடும் நல்ல தீர்ப்பதுதான்

உயர்த்திடும் பரிசாம் சான்றோர்க்கே…!

 

லிமரிக்…

 

சரியாய்ப்பார் சீர்தூக்கும் கோல்,

போகாதுபார் ஒருபுறம் மேல்..

பகிர்ந்தளிக்க பாதி,

சரிசமமாய் நீதி

புகழ்சேர்க்கும் சான்றோர் பால்…!

 

கிராமியப் பாணியில்…

 

எடபோடு எடபோடு

தொடாமலே எடபோடு,

சரிசமமா எடபோடு

சாயாம எடபோடு,

கத்தரிக்கா நெறுத்தலும்

கவனமாத்தான் எடபோடு,

சாயாம நெறுத்தாத்தான்

சரியான எடக்கோலு- ரெம்ப

சரியான எடக்கோலு..

 

இதுபோல நீதிசொல்லு

எல்லார்க்கும் நீதிசொல்லு,

சரியான நீதிசொல்லு

சாயாம நீதிசொல்லு,

பேருவரும் ஒந்தனுக்கே

பெருமவரும் சந்ததிக்கே,

அதுக்கு,

நீதிசொல்லு நீதிசொல்லு

நெசத்திராசா நீதிசொல்லு,

சரியான நீதிசொல்லு

சாயாம நீதிசொல்லு…!

 

படத்திற்கு நன்றி: http://blog.memberclicks.com/bid/251450/Striking-the-work-life-balance

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறளின் கதிர்களாய்… (11)

  1. சாயாமல் எடை போடு நீதி மானுக்கு அதுவே அழகு-அருமை

  2. //பேருவரும் ஒந்தனுக்கே

    பெருமவரும் சந்ததிக்கே,//

    நன்று! வாழ்த்துக்கள்.

  3. குறும்பா மிகவும் அருமை ஐயா.
    திருக்குறளையும்விட குறைந்த சொற்களின் எண்ணிகையில் அதே கருத்தை எளிமையாகவும் கூறிவிட்டீர்களே!!!!!

    அன்புடன்
    ….. தேமொழி

  4. திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம், தேமொழி ஆகியோரின்
    கருத்துரைகளுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *