முதுமையின் புன்னகை குழந்தைப் புன்னகை

 

 எஸ்.வி. வேணுகோபாலன்

 

News_45642

அடுத்திருப்பதைப் பளிச்செனக் காட்டிவிடும் கண்ணாடியைப் போல, உள்ளம் கடுத்திருப்பதைக் காட்டிவிடுகிறது முகம் என்றார் வள்ளுவர். சாலையில் வேகமாகக் கடக்கும் முகங்களில் எத்தனை ஆயாசம். நடையில் எத்தனை சோர்வு. உள்ளம் களைத்துப் போவதை மறைக்கவும், மறக்கவும் முடியாத எத்தனையோ சோகச் சிறுகதைகள் ஒவ்வொரு திருப்பத்திலும்.மகிழ்ச்சியால் ததும்பும் மனம் இலேசாக இருக்கிறது.

வேதனையால் நிரம்பும் உள்ளம் கனக்கிறது. வலி, அவமதிப்பு, புறக்கணிப்பு, தேடியது கிடைக்காதது, கிடைத்தது நிலைக்காதது, நிலைப்பது வேண்டாமல் போய்விடுவது, போனது மீளாதது, மீண்டது ஆகாதது.. என அடுக்கடுக்காய்த் துன்பங்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. உறவுகள், நட்பு எல்லாவற்றுக்கும் வரைகோடுகளும், எல்லைக்கோடுகளும் சித்திரங்களை மாற்றி எழுதும்போது சிக்கல்கள் தோன்றிவிடுகின்றன. இறுக்கமாகும் மனது நெகிழ்ந்து கொடுக்க மறுக்கிறது. அதன் அடுத்த பயணம் சுமைதாளாது வெடிக்கும் நிலைகளை நோக்கி நகர்கிறது.

மன நலம் காப்பது மனிதர்களை மேலும் அழகானவர்களாக ஆக்குகிறது. உள்ளார்ந்த சிரிப்பைச் சிந்தும் மனிதர்கள் மற்றவர்களை விடவும் வசீகரமாகத் தெரிகின்றனர்.உடல் சார்ந்த சிரமங்களை மீறி அன்பார்ந்த புன்னகையைத் தவழவிடும் மனிதர்கள் விரைந்து குணமடையும் வாசல்களைத் திறந்து கொள்கின்றனர்.

மனம், உள்ளம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் புறக் காரணிகள்தான் அகமும் புறமுமாய் மனிதர்களது நிலையைப் பெரிதும் தீர்மானிப்பது. பொருளாதாரம் ஒரு முக்கிய காரணி. வாழ்க்கை முறை அடிப்படைக் காரணி. சமூகம் சார்ந்த வாழ்க்கை அணுகுமுறை, பகிர்ந்து கொள்ளும் உளப்பாங்கு, வெளிப்படைத் தன்மை, பரஸ்பரம் அடுத்தவர் குரல்களை மதிக்கும் பண்பு, பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் விஷயங்களை பகுத்து ஆராயும் திண்மை போன்றவை கால காலமாக நமது பண்பாட்டின் அடிச்சுவடுகளாய் இருந்து வருபவை. ஆனால் வேகமான தாராளமயமும், மூர்க்கமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் சந்தைமயமும் நமது அடிப்படை குணாம்சங்களை காவு வாங்குகின்றன.

எதற்காக எதைத் தேடி எங்கே ஓடுகிறோம் என்ற தெளிவில்லாத சம கால துரத்தல் வேட்டையில் கையில் வந்தடையும் பணத்திற்கு எதிர் விகிதத்தில் உள்ளங்கள் வெறுமை அடைகின்றன.

“மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என்றான் மகாகவி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். எது எப்படிப் போனாலும் நம் வேலை முடிந்தால் சரி என்று ஓடும் அன்றாட வாழ்க்கை, இப்படியான கருணை, கரிசனம், நேயம், புல், பூ பூக்காத வறட்சி உள்ளங்களோடு வீட்டுக்குள் வந்து அடைய வைக்கிறது. புத்தகங்களைக் காட்டிலும் அதிகம் மருந்துகளால் நிரம்புகின்றன நமது அலமாரிகள்.

உலக சுகாதார நிறுவனம், 1992 முதல் அக்டோபர் 10 அன்று உலக மன நல தினமாக அனுசரித்து வருகிறது. மன நல சம்மேளனத்துடன் இணைந்து கடைப்பிடிக்கப்படும் இந்த தினத்தில், இந்த ஆண்டு முதியோர் குறித்த சிறப்பு கவனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

“பழுத்த ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரித்ததாம்” என்பது மூத்தோர் சொல். தான் கடக்க வேண்டிய எதிர்கால மைல் கல்லில் இன்று உட்கார்ந்திருக்கும் முதியோரை அடுத்தடுத்த தலைமுறை மதிக்கத் தவறுகிறது. சந்தைப் பொருளாதார விதிகளோடு இணைந்த இந்தத் தலைமுறை இடைவெளி உடல்மொழியிலும், பார்வையிலும், பகிர்தலிலும் மிகப் பெரிய வன்முறையாக வெளிப்படுகிறது. கூனிக் கூசிக் குறுகிப் போகும் முதியோர் உள்ளம் வறண்ட நிலத்தை விடவும் அதிகப் பரிமாணத்தில் வெடித்துப் பிளந்துவிடுகிறது. பின்னர் அதன் மீது எவ்வளவு நீரூற்றினாலும் ஒரு பசுந்தளிரை அது வெளியே நீட்டித் தர இயலாது போகிறது.

பேராசிரியர் ச. மாடசாமி தொகுத்திருக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று: நான்கு மகன்களாலும், மருமகள்களாலும் அவமதிக்கப் படும் மூதாட்டி ஒருத்தி வீட்டை விட்டு வெளியேறி ஊரின் புறத்தே இருக்கும் பாழடைந்த வீட்டினுள் போய் நின்று கொள்கிறாள். தான் படும் பாட்டைக் குறித்த அவளது அடக்கமாட்டாத வேதனையின் கூக்குரல் ஒலிக்க ஓலிக்க ஒவ்வொரு சுவராய் பெருத்த ஓசையோடு இடிந்து விழும்.

அண்மையில் விகடன் இதழில் அ. முத்துலிங்கம் எழுதியுள்ள ‘கடவுச் சொல்’ என்ற அற்புதமான சிறுகதை மனிதர்கள் அருகே வந்து பேசுகிறது. தங்களோடு ஒத்துப் போகத் தெரியவில்லை என்று வயதான தாயைப் பிள்ளைகள் மிகுந்த பொருட்செலவில் வசதியான விடுதியில் குடிவைத்தும் அந்த முதியவள் படும் தனிமையின் அவஸ்தையைச் சொல்கிற கதை அது.

நோயினாலும், பொருளாதார சிக்கல்களாலும், குடும்பப் பிரச்சனைகளாலும், தனிமைத் துயரிலும், உளச் சோர்வின் பொருட்டும் பாதிக்கப்படும் முதியோர் குறித்த அக்கறையை, இந்த உலக மன நல தினம் முன்னுக்குக் கொண்டுவருகிறது. முதுமை உடலில் ஏராளம் சுருக்கங்களைக் கொண்டு வருகிறது. ஆனால், அக்கறையான கவனிப்பின்அன்பு உள்ளங்கள் சுருங்கிப் போகாது பார்த்துக் கொள்கிறது. முதியோரது புன்னகை, குழந்தையின் புன்னகையைப் போலவே இதமளிப்பது. மற்றவர்களது முகங்களையும் சேர்த்து அலங்கரிப்பது.

– நன்றி:தீக்கதிர்: அக்டோபர் 10, 2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *