Blog

  • வாழ்க்கை நலம் – 45

    குன்றக்குடி அடிகள்

    45. வாய்மையே பேசுக!

    சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. “சத்” என்ற சொல்லுக்குப் பொருள் “உள்ளது” என்பது.  உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

    உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincerely) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது, கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

    எனவேதான் “சத்தியமே கடவுள்” என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செலவழித்தார்.

    உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙனம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை.  மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

    உள்ளதை உள்ளவாறே  கூறுதல் பற்றி, மகாவீரர், “நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம்.  அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்” என்று கூறுவதை அறிக.

    ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் “வாய்மை” என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.

    வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

    ஒருவர் பிறிதொருவரைபற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

    “வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை யிலாத சொலல்”
    (திருக்குறள் –  291)
    என்று கூறுகிறது.

    வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

    நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளிய வேண்டும்.  செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல.  ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

    வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களையே கூறுக.

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (10)

    ராமஸ்வாமி ஸம்பத்

    அனுமனுக்குப் பசி எடுத்தது. உடனே அருகே இருந்த ஈச்சமரத்தினை தன் பலத்தால் தழைத்தபோது அம்மரம் மளக்கென்று சாய்ந்தது. அச்சத்தத்தினைக் கேட்டு இரு அரக்கக் காவலாளர்கள் அங்கு வந்து அனுமனைக் கண்டு அவன்மீது பாய்ந்தனர். தன் கரத்தால் ஒரு குத்துவிட ஒருவன் மாய்ந்தான். மற்றவன் ஓடிச்சென்று ஒரு நூறு அரக்கர்களை அழைத்து வந்தான். அதற்குள் அனுமன் அந்த மரத்தைப் பெயர்த்து அவர்கள்மீது வீச ஒரிருவரைத் தவிர மற்ற எல்லோரும் மாண்டனர்.

    ஒரு வானரத்தின் இந்த சாகசம் ராவணனின் செவிக்கு எட்டியது. கோபம் அனல் பறக்க தன் அமைச்சனின் மகனான ஜம்புமாலி எனும் வீரனை படையுடன் அனுப்பி ”அக்குரங்கினைத் தீர்த்துக்கட்டிவிட்டு வா” என்று பணித்தான். அனுமன் சில நொடிகளில் அப்படையை முறியடித்தான். ஜம்புமாலியின் மரணம் ராவணன் மனதில் முதல் முதலாக அச்சத்தை ஏற்படுத்தியது. உடனே தன் இளையமகன் அக்‌ஷகுமாரனை ஏவ அவனும் உற்சாகமாகப் போரிட்டாலும் முடிவில் அனுமனால் கொல்லப்பட்டான்.  துயரம் மேலோங்க ராவணன் தன் மூத்த மகன் இந்திரஜித் என்கிற மேகநாதனை அழைத்து, “நீ எப்படியாவது அந்த வானரனைக் கொன்றோ உயிருடன் சிறை பிடித்தோ வெற்றியோடு வரவேண்டும். இந்திரனையே தோற்கடித்த உனக்கு இது எளிதான பணியே” என்றான்.

    இந்திரஜித் உக்கிரமாகப் போர் புரிந்து, இறுதியில் பிரம்மாஸ்திரத்தை ஏவ அனுமன் அதற்குக் கட்டுப்பட்டு கீழே வீழ்ந்தான். (பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு முஹூர்த்த காலம் அந்த அஸ்திரத்திற்குக் கட்டுப்படுவதாக அனுமன் முன்பு அவரிடம் வாக்களித்திருந்தான்). கீழே கிடந்த அனுமனை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி நகரெங்கும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இதற்குள் முஹூர்த்த காலம் கடந்து விட்டது. இருந்தாலும் ராவணனைக் காணவேண்டி அவன் கட்டுபட்ட நிலையிலேயே இருந்தான்.

    தன் முன் நிறுத்தப்பட்ட அனுமனிடம் சீற்றம்கொண்ட ராவணன் “ஏ குரங்கே! நீ யார் அனுப்பி இங்கு வந்தாய்? நீ இந்திரனை அல்லது குபேரனைச் சேர்ந்தவனா?” என வினவினான்.

    செல்வச் செழிப்போடு கூடிய ராவண தர்பாரை கண்டதோடு ஸாம கானம் செய்து சிவபிரானை மகிழ்வித்த முகப்பொலிவொடு விளங்கும் இலங்கேசனை நோக்கி ஆச்சரியத்தோடு ‘இவ்வளவு உயர்நிலையில் இருந்தும் இவன் ஏன் பிறன் மனை விழையும் கீழ்த்தரமான செயலை புரிந்துள்ளான்?’ என நினைத்தான் அனுமன். பின்னர் தன்னை ராம தூதனாக அறிமுகம் செய்து கொண்டு, “இலங்கை வேந்தே! உனக்கு நற்புத்தி புகட்டவே இங்கு வந்திருக்கிறேன். உன்னைத் தன் வாலில் கட்டியவாறு ஏழு சமுத்திரங்களில் நீராடிய வாலியை எளிதாகக் கொன்றவர் என் தெய்வம் ராமன். உன்னைப் பாடாக படுத்திய கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்ற பரசுராமனின் கர்வத்தை அடக்கியவர் என் ஈசன். அவர் மனைவியான ஸீதையை வஞ்சகமாகக் கடத்தி வந்திருக்கிறாய். மஹாவீரனான ராமனிடம் அவர் மனைவியை ஒப்படைத்து அடைக்கலம் கோருவாயாக. அந்த சரணாகத வத்ஸலன் உன்னை மன்னிக்கத் தயங்கமாட்டார். இல்லாவிடில் நீயும் உன் அரக்கர் குலம் அனைத்தும் அழிவது உறுதி” என்றான். ராவணனின் இருபது கண்களிலும் தீப்பொறி பறந்தது. “யாரங்கே! இந்த மதம்கொண்ட குரங்கை வெட்டிப்போடுங்கள்” என்று கர்ஜித்தான்.

    அப்போது அவன் இளவலான விபீஷணன், “அண்ணா, இவன் தன்னைத் தூதுவன் எனக் கூறுவதால் இவனைக் கொல்வது ராஜதர்மம் ஆகாது” என்றான். “ஓஹோ, அப்படியானால் இக்குரங்கின் வாலில் துணியைச் சுற்றி அதனை எரித்து விடுங்கள். அதுதான் இவனுக்குச் சரியான தண்டனை. ஒரு வானரனுக்கு வால்தானே பெருமை” என்றான் ராவணன்.

    அரக்கர்கோனின் ஆணையைக் கேட்ட அசோகவனத்து அரக்கிகள் ஸீதையிடம் இதைச்சொல்லி, “எட்ட இருந்தாலும் நாங்கள் அந்த குரங்கு உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டோம். அத்துமீறி இங்கு நுழைந்த அந்த குரங்கின் வாலைக் கொளுத்தியது அதற்கு ஏற்ற தண்டனை தான்” என்றனர்.

    இதைக்கேட்ட ஜானகி உள்ளம் பதைபதைத்து, ‘ஓ அக்கினி பகவானே! நான் கற்புடையவள் என்பது உண்மையாயின் என் மனாளன் என்னைத் தவிர எந்த மங்கையையும் ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பமாட்டான் என்பது உண்மையாயின் என் மகன் அனுமனைச் சுடாமல் குளிர்ச்சி தருவாய்’ என்று மனத்தில் சூளுரைத்தாள்.

    அனுமனுக்கு ஒரே ஆச்சரியம். ‘இது என்ன வினோதம்? நெருப்பு என்னைச் சுடவில்லையே! ஓஹோ! இது அன்னையின் ஆசி போலும்’ என நினைத்தான். அடுத்த கணம் தன் தளைகளைத் தகர்த்தெரிந்து இலங்கை ராஜதானியில் உள்ள பல கட்டிடங்களையும் சோலைகளையும் அக்கினிக்கு இரையாக்கினான்.

    ’ஐயோ தவறு செய்துவிட்டோமே! அசோகவனமும் கொழுந்துவிட்டு எரிகிறதுபோல் இருக்கிறதே!’ என்று ஒரு கணம் வருத்தத்தில் ஆழ்ந்த அவன் செவிகளில் ‘என்னே அனுமனின் சாதுர்யம்! அசோகவனத்தின்மீது தீ பரவாமல் மற்றைய இடங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கி  இருக்கிறானே!’ என வானில் உலவும் சாரணர்களின் உரையாடல் தேன்மாரியென விழுந்தது.

    தன் வாலில் எரியும் நெருப்பை கடல் நீரில் தோய்த்து அணைத்தபின், அசோகவனத்திற்குச் சென்று அன்னையை வணங்கி, “தாயே! அண்ணலும் இளவலும் எம்மரசன்  சுக்ரீவனும் வெகு விரைவில் தங்களை மீட்க இங்கு வருவார்கள். தயவு செய்து அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடாதீர்கள். ராமன் வரும் வரை காத்திருங்கள்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டான்.

    பின்னர் இலங்கைக் கடற்கரையில் உள்ள அரிஷ்டம் எனும் குன்றின்மீதேறி அங்கிருந்து மேற்கு திசை நோக்கி விசும்பில் தாவினான். இனி, ராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் அனுமனுக்காகக் காத்திருக்கும் நிலைதான். ’திரும்பிவரும்போது உன்மீது இளைப்பாறுவேன்’ என்று சொல்லியதால் காத்திருந்த மைனாகக் குன்றினை செல்லமாகத் தடவிகொடுத்து, அனுமனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கீழ்க்கடற்கரையில் காத்திருக்கும் அங்கதன், ஜாம்பவான் முதலோரை மகிழ்விக்கும் வண்ணம் “கண்டேன் ஸீதையை” என உரக்க சப்தமிட்டவாறு தரையில் இறங்கினான்.

    வானரர் அனைவரும் அனுமனை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அனைத்தையும் விவரமாகக் கூறி, “இனி தாமதம் செய்யக்கூடாது. அண்ணல்  இந்நற்செய்திக்காகக் காத்திருக்கிறார். நாம் உடனே கிஷ்கிந்தை சொல்லவேண்டும்” என்று அனுமன் சொல்லவும், அவர்கள் புறப்பட்டனர்.

    விரைவில் கிஷ்கிந்தை அடைந்த பின், கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட ராமனிடம் அனுமன் தனது இலங்கை அனுபவங்களை ஒன்று விடாமல் விளக்கி, ”கற்புக்கரசியான ஸீதையைக் காணும் பாக்கியத்தை தங்கள் அருளால் பெற்றேன்” என்றான். கம்பன் நடையில் அதனைக் காண்போம்:

    உன் குலம் உள்ளதாக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய

    தன் குலம் தன்னதாக்கி தன்னை இத்தனிமை செய்தாள்

    வன் குலம் கூற்றுக்கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து

    என் குலம் எனக்குத்தந்தாள் என்இனிச்செய்வது எம்போய்?

    [என் அன்னையான ஸீதை உனது குலம் உன் புகழால் சிறப்பு பெறுமாறு செய்தாள். உயர்ந்த புகழை உடையவள் தான் ஒருத்தியே என்னும் சிறப்பைப் பெற்ற தான்பிறந்த குலத்தை தன்னால் சிறப்பு பெற்றதாகச் செய்தாள். தன்னைப் பிரித்துத் தனித்து வருந்தும்படி செய்த ராவணனது கொடிய குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர்கள் குலம் நல்வாழ்வு பெறச்செய்தாள். எனது வானர குலத்தை உயர்த்தியதோடு, எவரும் புகழும் சிறப்பை எனக்குக் கொடுத்தாள். இவற்றைவிட இனி அவள் செய்யத்தக்கது  வேறு என்ன இருக்கிறது?]

    மேலும் அனுமன் கூறுவான்: “அண்ணலே! தாங்கள் அவள் கண்ணிலும் உள்ளீர், கருத்திலும் உள்ளீர், காயத்தின் எப்பகுதியிலும் உள்ளீர். கற்பிற்கே அணிகலனாகத் திகழும் அன்னையின் புனித மேனி புழுதி படிந்திருந்தாலும், அல்லும் பகலும் அனவரதமும் தங்களைப் பற்றிய சிந்தனையால் பொலிவு பெற்று விளங்குகிறது. இலங்கையர் கோமானின் ஆர்ப்பாட்டத்தையும் அதட்டலையும் அரக்கிகளின் மிரட்டல்களையும் துரும்பெனக் கருதி லட்சியம் செய்யாவிட்டாலும் ஒருகணம் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்ற அவள் எண்ணத்தை தங்கள் அருளால் இவ்வெளியேன் தடுத்து நிறுத்த முடிந்தது. இன்னும் ஒரு மாதமே காத்திருப்பதாக அன்னை என்னிடம் கூறினாள். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் அரக்கர் குலத்தை அழித்து அன்னையை மீட்கும் பணியில் ஈடுபடவேண்டும்.”

    பின்னர் ஸீதை கொடுத்த சூளாமணியை அனுமன் பவ்யமாகக் கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்ட ராமன் தன் மார்பில் வைத்துக் கொண்டன். அவன் கண்கள் குளமாகின. கண்ணீர் ஆறெனப் பெருகிவர, ராமன் “ஸீதையும் நானும் இன்று உயிரோடு இருக்கின்றோம் என்றால் அப்பெருமை உன்னையே சாறும்” என்று சொல்லி அனுமனை அணைத்துக் கொண்டான்.

    முக்திதரும் களிப்பைவிட ராமனின் இந்த அரவணைப்பு மகத்தானது என்பதனை அனுமன் உணர்ந்தான். எவராலும் செயற்கரிய செயலைப் புரிந்து ஸீதை மற்றும் ராமனின் துயர் தீர்த்த இந்த வாயு புத்திரனை ஒரு கணம் கம்ப ராமாயணத் தனியன்களில் ஒன்றான கீழ்க்கண்ட பாடலோடு துதிப்போம்:

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கினைக் கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

    [ஐம்பூதங்களில் ஒன்றான வாயு தேவனால் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் வழியே, ஐம்பூதங்களில் ஒன்றான நீரை (கடலை) தாண்டி இராமனுக்காக்ச் சென்று, ஐம்பூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்றெடுத்த ஸீதையைக் கண்டு, பின்பு பகைவர் ஊரான இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தவனான அந்த அனுமன் எம் செயல் இனிதே முடியக் கருணையோடு காப்பானாக.]

    (​தொடரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..93

    சக்தி சக்திதாசன்

     

    Duggan1 Duggan2

     

    அன்பினியவர்களே!

    இனிய வண்க்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாடு சுபீட்சமானதாக, கட்டுக்கோப்புடன் மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுப்பதாக, சுதந்திரமான மனநிலை கொண்ட மக்கள் வாழும் ஒரு தேசமாகப் பரிணமிப்பதற்கு அந்நாட்டின் சட்ட திட்டங்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

    இச்சட்ட ஒழுங்கைச் சரியாக நிலைநாட்டுவதற்கு அந்நாட்டின் காவற்துறையின் பங்கு மிகவும் பிரதானமாகிறது.

    காவற்துறையின் செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைபடுத்த வேண்டுமாயின் அக்காவற்துறையின் மீது அந்நாட்டு மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதோடு அக்காவற்துறை ந்ந்ந்ந்ந்ந்நடுநிலை தவராது செயற்படுகிறது எனும் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

    எப்போது இந்த நம்பிக்கை அற்றுப் போகிறதோ அப்போது அங்கு சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்து போகக்கூடிய சூழல் உருவாகிறது.

    2011ம் ஆண்டு நடுப்பகுதியில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் ஏற்பட்ட கல்வரங்களைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

    இக்கலவரத்தின் பின்ன்ன்ன்ன்னனி பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்!

    மார்க் டூகன் என்பவர் இங்கிலாந்தில் வாழும் கறுப்பு இன மக்களில் ஒருவர். ஒருநாள் இவர் சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்த போலிசார் அவ்வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ய முற்பட்ட வேளையில் ஏற்பட்ட களாபரத்தில் மார்க் டூகன் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார்.

    நிராயுதபாணியான எமது உறவினரைச் சுட்டுக்கொலை செய்தார்கள் போலிசார். அவர் கறுப்பு இனைத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை என குற்றம் சாட்டினர் அவரது உறவினர்கள்.

    போலிசார் தரப்பில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருந்தது அதைக் கவிடும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் செவிமடுக்காத காரணத்தால் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடே அவர்து மரணத்திற்குக் காரணம், என வாதிடப்பட்டது.

    அச்சமயம் அந்நிகழ்வை நடத்திய போலிசார் அங்கம் வகிக்கும் நகரின் போஓஒலிஸ் நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்ட்ட்டம் அங்கு கலவ்ரமாக உருப்பெற்று அது நாடு முழுவதும் பரவியது.

    இதுவே அக்கலவரத்தின் பின்னனி.

    சரி அதை இப்போது இங்கு அலசுவதற்கு என்ன காரணம்?

    போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை நியாயபூர்வமானதா என்பதை விசாரிக்கும் மரண விசாரணை நடந்து முடிந்து அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இத்தீர்ப்பு ஊடகத்துறையில் ஏற்படுத்திய சர்ச்சையைப் பற்றிக் கொஞ்சம் விளக்கவே இம்முயற்சி.

    இந்நிகழ்வு நடந்த நேரத்தில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருக்கவில்லை, ஆனால் அவர் காரில் அமர்ந்திருக்கையில் அவரிடம் துப்பாக்கி இருந்தது. போலிசாரின் இத்துப்பாக்கிப் பிரயோகம் ஒரு நியாயமான தற்காப்பு நடவடிக்கையே மார்க் டூகனின் மரணம் நியாயபூர்வமானது

    இதுவே அவ்விசாரணைக் குழுவின் தீர்ப்பாக அமைந்தது.

    கைகளில் துப்பாக்கி இல்லையெனில் அத்துப்பாக்கி எங்கே?

    அது அவர் சுடப்பட்டு விழுந்த இடத்திற்கு அருகில் சற்றுத் தொலைவில் விழுந்து கிடந்தது.

    இதன் விளக்கம்?

    காரில் துப்பாக்கியுடன் இருந்த மார்க் டூகன் போலிசார் தனது வாகனத்தை சோதனையிடப் போவதை அறிந்ததும் விரைவாகத் தன் துப்பாக்கியை வெளியே வீசியெறிந்திருக்கிறார். அவரது இந்நடவடிக்கையைத் தம்மை நோக்கி அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் போவதாகப் புரிந்து கொண்ட போலிசார் தற்காப்புக்காக துப்பாக்கியை உபயோகித்துள்ளார்கள்.

    இதுவே பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பேரைக் கொண்ட நடுவர் குழுவினருக்கு அளிக்கப்பட்ட சாட்ச்சியங்களில் இருந்து அறியப்பட்டது.

    ஆனால் மார்க் டூகன் அவர்களின் உறவினர்களும், ஆத்ரவாளர்களும் இது போலிசாரின் திட்டமிட்ட நடவடிக்கை. மார்க் டூகன் ஒரு கறுப்பர் எனும் காரணத்தினால் போலிசார் நிறவெறி காரணமாக அவ்ரைப் பழி வாங்கியுள்ளார்கள் என்ற வாதம் தலைதூக்குகிறது.

    இங்கிலாந்தின் காவற்துறை நிறவெறி தலைதூக்கி ஆடும் ஒரு அமைப்பாக இருக்கிறது. தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று இவர்கள் ஊடகங்களில் குற்ரம் சாட்டுகிறார்கள்.

    நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப் போவதில்லை என்கிறார்கள்.

    இங்கேதான் மிகப்பெரிய சிக்கல் எழுகிறது. பல சமூகங்கள் வாழும் ஒருநாட்டில் பெரும்பான்மையோரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு காவற்துறை தமது கடமையைச் சரிவர செய்ய முடிகிறதா?

    அவர்கள் நியாயபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளூஊஊக்குக் கூட நிறவெறி சாயம் பூசப்படுகிறதா? இக்கேள்வி மிகவும் யதார்த்தமானதே!

    இங்கிலாந்து போன்றதொரு நாட்டில் பல சமூகங்கள், பல கலாச்சாரங்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் துரதிர்ஷ்டவசமாக கணிப்புகளின் படி குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் பெரும்பான்மையாக ஒரு சமூகத்தையோ அன்றி ஒரு நிறத்தையோ கொண்டவர்களாக இருந்தால் அவர்களை நோக்கிய போலிசாரின் நடவடிக்கைகளுக்கு நிறவெறி முத்திரை குத்தப்படுமாகில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு நிலைநாட்டப்படும்?

    இந்நிலையில் உள்ள காவற்துறையினரைப் பார்த்துப் பரிதாபப்படுவது ஒன்றே எமக்கு ஏற்படக்கூடிய உணர்வாகிறது.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக மார்க் டூகன் எனப்வர் நிராயுதபாணியாக சுடப்பட்டார் என்று கூக்குரலிடும் அதே மக்கள் அவரை பற்றிய பின்னனியைப் பற்ரி குறிப்பிட மறந்து விட்டார்கள்

    அவர் பயங்கர குற்றச் செயல்கள் புரியும் குழுவில் அங்கம் வகிப்பவர், பல கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டவர்
    பல குர்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர், ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என்பவர்ரைக் கையாண்டவர்.

    இவைகளும் அவரைப் பற்றி இபோது பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள். இப்படியான பின்னனி கொண்ட ஒருவரைப் பின் தொடர்ந்து சோதனை செய்யும் போது அவர் துப்பாக்கி வைத்திருந்தால் அதற்கான நியாயமான நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

    மறுபக்கம் பார்த்தால் போலிசார் இதைவிட அவர் உயிருக்கு உத்த்ரவாதம் அளிக்க வேறு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமா?

    விவாதங்கள் பலமாகத் திடர்கின்றன. லண்டன் காவற்திரையின் பொறுப்பாளர், காவற்துறையினர் மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது உண்மைதான் அதை மீட்பதற்கு ஏற்ற நடப்டிக்கைகள் நாம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    அதனோடு அதன் ஒரு பாகமாக இனிமேல் போலிசார் இத்தகிய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தம்மீது ஒரு வீடியீ கமிராவை அணிந்து கொள்வதன் மூலம் அவர்களது நடவ்டிக்கை முழுவதும் பதிவு செய்யப்பட்டு அவர்களது நடவடிக்கையை மக்களுக்கு வெளிப்படையாக்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்று மட்டு எமக்குப் புரிய வேண்டும் போலிசார் இத்தகிய ஒரு ஆய்வுக்குட்படுத்தப்படுமளவிற்கு இங்கிலாந்து மக்களுக்கு ஜனநாயக் உரிமைகள் இருப்பது குறித்துப் பாராட்ட வேண்டும்.

    குற்றவாளியோ இல்லையோ ஒரு உயிர் பறிபோனதற்காகவும், அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்காகவும் பரிதாப்பட வேண்டியதும் மனிதாபிமானமே!

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    1970ல் வெளிவந்த நவக்கிரகம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்! வி.குமார் இசையில் சிவக்குமார் லட்சுமி திரையில் தோன்றும் பாடல்!

    கவிஞர் வாலியின் கற்பனையில் இசையின் இணை பக்க பலமாய் அமைந்திட பருவகாலக் காற்றுபோல இந்தப் பாடல் நம் மனதில் இடம் பிடித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    பாடலின் பல்லவியில் உள்ள கவித்துவம் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. காதலின்துடிப்பை ஒவ்வொரு வரியும் சொல்லிமகிழ..

    பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடிபோல் துளிர்விட்டு.. கிளைவிட்டு.. மலர்விட்டு வளரும் காதலின் சுகங்கள் கோடியன்றோ?

    இயற்கையாய் நடக்கும் மழைத்துளி

    .. சாரல்.. இவற்றையெல்லாம் தனக்கேற்றவாறு கவிஞர் பாடலுக்குள் பிடித்துவர.. அலைகள்கூட இவர்களை இணைக்கப் பாலமிட்ட கதையையும் சொல்கிறார் பாருங்கள்!

    அலைமோதும் எண்ணங்களில் இளங்கிளிகள் பருவப் பாடத்தை பயின்றுகொண்டிருக்க.. பெண்ணுக்கே பெருமை சேர்க்கும் நாணம் இங்கே என்ன செய்கிறது பாருங்கள்..

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

    இந்த கற்பனை வளம் மிக்க கவிஞர்களுக்கே கைவரும்! கவிஞர் வாலியின்கைவண்ணம் அக்கற்பனையை கொடிகட்டிப்பறக்கவிடுகிறது இங்கேதான்!

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

    அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டதோ

    வரலாம்.. தொடலாம் மணநாள் வரும்போது

    தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது..

     

    உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது

    நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

     

    மழைத்தூரல்போட்டு சாரல்வந்து உன்னை நனைத்தது – அது

    உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது

    அது துளித்துளியாய் எனது தோளில் இடம்பிடித்தது

    இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது!
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds

    உன்னை தொட்ட காற்று – Unnai thotta kaatru vanthu
    Share
  • பாலைப்பூப்பெண்

    முனைவர் இலட்சுமிi-cryndex

    ஒற்றைப் பூவாய்

    மலர்ந்து  தோட்டத்தில்

    மணம் வீசி

    நிற்கையிலே எட்ட

    நின்று வேலிக்கப்பால்

    கைநீட்டி பறித்தவனுக்கு

    பூ சொந்தமா!

    தோட்டத்தில் இருந்து

    மணம் பரப்பியதால்

    மட்டும் தோட்டத்திற்கு  உரிமையாகுமா?

    தெய்வத்திற்கு

    அர்ப்பணம் செய்யக்

    காத்திருக்கும் பூவின்

    யோசனையை யார்

    கேட்பார்?

    நல்ல விலை கொண்டு

    நாயை விற்பார்

    அந்த நாயிடம் யாரும்

    யோசனை கேட்பதில்லை……

    எங்கோ பாரதியின் மௌன

    அழுகை ஆரம்பம்!

     

    http://www.dailymaverick.co.za/article/2013-02-08-the-agony-of-south-africas-daughter-anene-booysen-the-agony-of-south-africa/

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 17

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -17

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

    j 1

    j2

    j3
    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • குறவன் பாட்டு-27

    குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

    நீராவிக் குளியல்கள் நடத்திடலாம், கொஞ்சம்

    சீராகக் கேசத்தை அமைத்திடலாம், தொடர்ந்து

    ஈராறு மாதங்கள் அங்கு சென்றால்,

    பூலோக ரம்பை என ஆகிடலாம்!                                                                                                                   220

     

    வெள்ளரிப் பிஞ்சை வெட்டி எடுத்து

    வெண்ணையில் கொஞ்சம் தொட்டு எடுத்து,

    கண்களின் மேலே இட்டு எடுத்தால்,

    காந்தப் பார்வை பெற்று ஒளிரலாம்!                                                                                                           221

     

    அழகுக்குப் பொருத்தமாக, அங்கத்தை இறுக்கமாகத்,

    தழுவி நிற்கும் உடை உண்டு!

    கழுத்துக்கு வெகுதொலைவில், தோளிரண்டில் நிற்காமல்,

    நழுவி நிற்கும் உடையும் உண்டு!                                                                                                                222

     

    நாவோரம் சுவையூறும் பலநூறு பலகாரம்,

    நகரத்து அடுமனையில் நாள்தோறும் உருவாகும்,

    பாலூறும் தேனூறும் பல்வேறு இனிப்புகளும்,

    பகலிரவு பேதமின்றி எப்போதும் கிடைக்குமிடம்!                                                                              223

     

    சர்வதேச உணவுகளும் சுலபத்தில் கிடைத்துவிடும்!

    சர்வசதா காலமும், சந்தோசம் இருக்குமிடம்,

    சிள்வண்டாய் எப்போதும் ரீங்காரம் ஒலித்திருக்கும்

    செல்வங்கள் நிலைத்திருக்கும் சிங்காரப் பெருநகரம்!                                                                     224

     

    கர்மயோக ஞானங்கள் கற்றுத்தரத் தனித்தஇடம்,

    வர்மக்கலை தர்மங்கள் கற்பிக்க வேறுஇடம்,

    “கர்ணமகா ராஜாக்கள் கனிவோடு” உலவுமிடம்,

    மர்மமான தேசம்போல் மந்திரங்கள் சொல்லுமிடம்!                                                                       225

     

    கோபுரம் உயர்ந்திருக்கும், கோயில்கள் நிறைந்திருக்கும்,

    மாபெரும் அன்னதானம் மும்முறை தினம்நடக்கும்,

    மாளிகைச் செல்வங்கள் கோயிலை அலங்கரிக்கும்,

    மானிடர் உள்ளங்கள் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கும்!                                                                      226

     

    பேரிடர் வந்தாலும் அரசாங்கம் துணையிருக்கும்,

    ஆரிருள் கொள்ளாமல் அனைவரையும் காத்துநிற்கும்,

    ஓரிடம் தப்பாமல் எல்லோர்க்கும் அன்பளிப்பை

    வாரித்தந்து இலவசமாய் வாழ்வ ளிக்கும்!                                                                                            227

    Share
  • குறளின் கதிர்களாய்… (19)

    செண்பக ஜெகதீசன்fireimages

    அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

    விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

    -திருக்குறள்- 691 (மன்னரைச் சேர்ந்தொழுகல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அருகில் நெருங்கிச் சென்றால்

    சுடும்,

    அகன்றாலே அதிகமாய்,

    அணுகாது வெப்பம்..

     

    அதுதான் தீயின் குணம்,

    ஆட்சியாளரின் குணமும் அதுதான்..

     

    அதனால்தான் அவரை

    அதிகம் நெருங்காமலும், விலகாமலும்

    அடுத்திருக்கக் கற்றிடு,

    அதுதான் நல்லது…!

     

    குறும்பாவில்…

     

    தீக்காய்வதுபோல் பழகிடு

    அதிகம் அகலாமலும் நெருங்காமலும்,

    ஆட்சியாளர் உறவு நிலைத்திட…!

     

         மரபுக் கவிதையில்…

     

    அருகினில் சென்றால் சுட்டிடும்தீ,

    அகன்றே அதிகம் சென்றிட்டால்

    வருவ தில்லை வெப்பமென்பதால்

    வேண்டும் நடுநிலை தீக்காய்ந்திட,

    அரசியல் களமதில் ஆட்சியாளர்

    அருகினில் அதிகம் நெருங்காமல்

    பெரிதும் விலகிச் செல்லாமலே

    பார்த்திடு பயனெலாம் பெற்றிடவே… !

     

    லிமரைக்கூ…

     

    அருகிலும் எட்டியுமின்றிக் காய்ந்திடு தீ,

    அதுபோல் ஆட்சியாளரிடம் மிக

    அணுகாமலும் விலகாமலும் பழகிடு நீ…!

     

    கிராமியப் பாணியில்…

     

    குளுர்காயி குளுர்காயி

    தீயிலத்தான் குளுர்காயி,

    கிட்டப்போனா சுட்டுப்புடும்

    எட்டிப்போனா சூடுயில்ல..

     

    அதால,

    மெதமான சூட்டுலத்தான்

    எதமாநீ குளுர்காயி..

     

    ராசாங்கக் கதயிதுதான்,

    ரெம்ப சூச்சிப்பா நடந்துக்கணும்..

     

    ராச்சியத்த ஆளுகிற

    ராசாங்க மனுசர்கிட்ட

    நெருங்காம வெலகாம

    நேர்த்தியாத்தான் பழகிடணும்..

     

    தீப்போல சுட்டுப்புடும்

    தெரியாம நெருங்கிட்டா,

    தெரியாம எதுத்திட்டா..

     

    எல்லாம்

    தெரிஞ்சி நடந்துக்கோ,

    நல்லாப்

    புரிஞ்சி நடந்துக்கோ…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.datacenterjournal.com/it/flame-malware-big-story-or-old-news/

            

    Share
  • யாருக்கு நஷ்டம் ?

    பி. தமிழ் முகில் நீலமேகம்

     

    ” கமலா ரொம்ப பாவம்பா. அவளுக்கு பரீட்சைன்னாலே ரொம்ப பயமாம். கிளாஸ்ல வைக்கிற சின்ன டெஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா எழுதீடறா, ஆனால், மாதப் பரீட்சை, அரைப் பரீட்சை, கால் பரீட்சைல எல்லாம் பெயில்  ஆயிடறா. ஏன்னே புரியல. ஒவ்வோர் பரீட்சை முடிந்து, விடைத்தாள் குடுக்கும் போது, டீச்சர் என்னைய கூப்பிட்டு கேக்கறாங்க. என்னைய, அவளுக்கு படிக்க உதவ சொல்லி இருக்காங்க. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபுடிக்கணும். அவளும் நல்லா படிக்க உதவணும் ” மிகுந்த அக்கறையுடன் தன்  தோழி  சுனந்தவிடம் கூறிக் கொண்டிருந்தாள்  சில்வியா.

     

    சில்வியா, கமலா, சுனந்தா மூவரும் ஒரே வகுப்பில் பயிலும் தோழிகள். கமலா சற்று படிப்பில் பின்தங்கி இருந்தபடியால், அவளுக்கு உதவிட சில்வியாவிடம் சொல்லியிருந்தார் ஆசிரியர். கமலாவிற்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது, சந்தேகங்களை நிவர்த்தி செய்வது, பாடங்களை ஒப்பிக்கச் செய்வது, வகுப்புத் தேர்வுகளை திருத்திக் கொடுப்பது என்று சில வேலைகளை சில்வியாவிற்கு கொடுத்திருந்தார். கமலா மீது தனிக் கவனம் எடுத்துக் கொண்டார் ஆசிரியர். ஆனாலும் ஏனோ, கமலா வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், ஏனோ மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வியுற்றாள்.

    அன்று, எப்போதும் வழக்கமாக நடக்கும் வகுப்புத் தேர்வு இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து, முதல் பாட வகுப்பின் போது, தேர்வு நடப்பதாய் இருந்தது. மதிய உணவினை முடித்துக் கொண்டு, வகுப்பிற்கு வந்து, தன்  இருக்கையில் அமர்ந்தாள்  சில்வியா. நடக்கவிருக்கும் தேர்வுக்கான பாடங்களை ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் அமர்ந்திருந்த இருக்கையின், முன்னால் இருந்த இருக்கைக்கு அடியில் ஒரு நோட்டுப் புத்தகத்தினை கவனித்தாள். காற்றில், நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் வேகமாய்ப் பறந்தன. காலில் படும்படியாக கீழே கிடக்கிறதே என்று குனிந்து எடுத்தாள்.

     

    அது ஓர்  தேர்வு ஏடு.  அதனை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஏட்டில், கடைசியாய் எழுதிய தேர்வுக்குப் பின், சில வெற்றுத் தாட்கள் விடப்பட்டு, அடுத்த பக்கத்தில், அன்றைய தேர்வுக்குரிய பாடத்தில் உள்ள  முக்கிய கேள்விகளுக்குரிய விடைகள் அனைத்தும் தெளிவாக, அடித்தல், திருத்தல் இல்லாமல், அழகாக எழுதப் பட்டிருந்தது. அது யாருடையது என்று பார்த்த சில்வியாவிற்கு  மேலும் அதிர்ச்சி. அது கமலாவினுடையது.

     

    “இந்தப் பெண் இத்தனை நாளாய் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறாளே ! ” என்று ஆத்திரம் வந்தது. அடுத்த நொடியே, ” இந்த கமலா நம்மை ஏமாற்றுவதாய் எண்ணிக் கொண்டு, தனையறியாது, தன்னையே  ஏமாற்றிக் கொண்டிருக்கிறாளே ! இதற்கோர் முடிவு கட்ட வேண்டும்” என்றெண்ணிய சில்வியா ஆசிரியரிடம் விஷயத்தை கூறிவிட்டாள்.

     

    மதிய வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு,  கமலாவின் ஏமாற்று வேலைகளைக் கேள்விப்பட்டதும், ஆத்திரம் மேலோங்கியது. அவளது முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், இப்படி ஏமாற்றி வந்துள்ளதே இப்பெண் என்ற எண்ணத்துடன், கமலாவை அழைத்தார். அவளிடம் கேட்ட கேள்விகள் எதற்கும் பேசாமல் அவள் மௌனம் சாதிக்கவே, மேலும் கோபம் கொண்டு, சடாரென்று மேசையின் மீதிருந்த பிரம்பினை எடுத்து கமலாவை விளாசித் தீர்த்து விட்டார்.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கமலா  பள்ளிக்கு வருவதில்லை. மாற்றுச் சான்ரிதழ் வாங்க பதினைந்து நாட்கள் சென்ற நிலையில், பள்ளிக்கு வந்திருந்தாள். அப்போது, அவள் தன்  சக தோழியிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாள்.

    ” ஆமா. பொம்பளைப் புள்ளைங்க படிச்சு என்ன ஆகப் போகுது ? நாளைக்கி கல்யாணம் பண்ணி, சமைச்சு போட்டு, பிள்ளைங்கள பாத்துக்கறதுக்கு, இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கணுமா என்ன ? ” என்றாள். கல்வி வேண்டாமென எண்ணுகிறாளே, இதனால் யாருக்கு நஷ்டம் ?

    அறியாமை இருளைத் தேடி, ஓர் பயணத்திற்கு ஆயத்தமானாள் கமலா. உணராத உள்ளங்கட்கு வேதம் ஓதி என்ன ஆகப் போகிறது ? இதனால், பின்னாளில் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை எங்ஙனம்  எதிர்கொள்ளப் போகிறாள் ?

    Share
  • இளமை கொலுவிருக்கும் – கவிஞர் கண்ணதாசன்

    இளமை கொலுவிருக்கும்..

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    அந்தக் காலத்தில் இந்தப் பாடல் பெற்ற வரவேற்பு அமோகம்!  ஆம் மோகம் குடியிருக்கும் வரிகள்!  அதற்கேற்ற காட்சியமைப்பு!! இந்தப் பாடல் இரண்டு முறை படத்தில் வரும்! கதாநாயகி பாடுவதாகவும்.. மற்றுமொரு முறை கதாநாயகன் பாடுவதாக!

    மொத்தத்தில் இப்பாடல் வரிகள் பெண்மையைப் போற்றுகின்றன. பெண் இல்லையென்றால் இவ்வுலகில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை நம் முன் வைக்கிறது!  கவிஞரின் இதயத்திலிருந்து ஆழமான அழுத்தமான வரிகள் விழுந்திருக்கின்றன!

    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?

    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?

    Statement of facts.. வார்த்தைகளில் சொல்லிவைத்தால் அது வரியாக இருக்கும்!  வளமையாக கவிதையில் சொல்லி வைத்தால் அது பாடலாகும்! இரண்டு வரிகள்தான்!  எத்தனைப் பொருள்!!

    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

     

    பெண்ணைப் பாடாத கவிஞன் எங்கே?  இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..  அவள் இயற்கை தந்திருக்கும் சீதனப் பரிசல்லவோ?

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

     

    பழைய பாடல்தான்!  மனதில் பதியும் பாடல்!  இளமையை ஏற்றிவைத்து பெண்மையைப் போற்றிவைக்கும் பாடல்!

     

    பாடல்: இளமை கொலுவிருக்கும்  

    திரைப்படம்: ஹ்லோ மிஸ்டர் ஜமீன்தார்
    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
    இயற்றியவர்:  கவிஞர் கண்ணதாசன்

    இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
    ஆண்டு: 1962

    ஒஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    அஹா அஹா ஹ ஹா ஹா ஹா ஒஹோ ஒஹோ ஒஹோஹோ

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

     

    http://www.youtube.com/watch?v=MGUAdeSS0xA

     

    http://www.youtube.com/watch?v=K1eC8lxqusk

    இளமை கொலுவிருக்கும் (ஆண்) – Ilamai koluvirukkum (male)
    இளமை கொலுவிருக்கும் (பெண்)-Ilamai Koluvirukkum (Susila)
    Share
  • The light of Arunachala english poem

    விசாலம்annamaimages
    There the sun with valor and brightness,
    Experienced the death at the age of seventeen .
    Overcame the death and the victory was seen ,
    Researching what is “I”and asking “who am i”?
    got enlightened ascending very high ,
    Discarding the studies deeply gone into meditation ,,
    Thou were in the cave  for further realization ,
    Threw away all  had  only the cloth of loin .
    with only thought of athma and paramathma to join
    The bliss from Arunachala kept on blowing .
    “Atman reveals itself” the theme started flowing ‘
    The name Venkatraman became ” Maharishi  Ramana”
    Thou are the embodiment  of suguna ,
    The lord Arunachala’s call made the body fall ,
    On the auspicious Good friday it was the jyothi”s call,
    Arose the magnificent  light flashed and moved up
    Mingling with Arunachala towards the North up.
    Aham Bramhasmi  was shining up to the brim .
    In his teaching and principles  let us all swim .
    Asato ma satgamaya
    Tamaso ma jyothir gamaya
    Mrithyorma amritham gamaya ,
    OM SANTHI SHANTHI SHANTHI :
    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்றுச் சோறைப் பெறும் மாதம். உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, அந்தப் பொங்கும் மகிழ்ச்சியை மங்கலமாகக் கொண்டாட வழி வகுத்த மாதம். தாம் மட்டுமல்லாமல் தம்மால் ஆதரிக்கப்பட்டுவரும் கால்நடைகளையும் சிங்காரித்து அழகுபார்த்து ஆராதனை செய்து சந்தோஷத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிரும் மாதம். உழவர்களின் பொன்னான மாதம்.

    இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இந்த இருபது-இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வந்த பசுமைப் புரட்சி உலகின் வயல் வளத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இயற்கையாகவே வரவேண்டிய தானிய உணவுகள், காலம் பார்த்துக் கிடைக்கவேண்டி பயிரிட வேண்டிய உணவுப் பயிர்கள் பெருகி வரும் மக்கள் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டும் வளர்ந்து வரும் நாகரீக உலகின் வசதிக்கேற்பவும், சுலபமாகவும் அதே சமயத்தில் மிக அதிக அளவில் உற்பத்திப் பெருக்கத்தையும் ரசாயனப் பொருட்கள் உதவியின் மூலம் பெற்றுக்கொண்டு வருவதை உலகெங்கும் கண்டு வருகிறோம். நிச்சயமாக உழவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக நம் நாட்டை அறிவித்துக் கொள்ளலாம். மகிழ்ச்சியான விஷயம்தானே.. ஆனால் அப்படி இல்லைதான். உற்பத்தி அதிகமானாலும் உழவர்களுக்கு உற்பத்திக்கான செலவு வகைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் உழவர் சமுதாயம் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்படுகின்ற காலங்கள் இவை.

    311091_106473259466111_178984958_nஇதைப் பற்றி நிறைய எழுதலாம். உற்பத்திச் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி, கடனைத் திருப்பமுடியாமல் உழவர்கள் நாடெங்கும் தற்கொலை செய்துகொள்வதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது. இத் தருணத்தில் உழவர்களைப் போற்றுவோம் என்று நமக்கு உறுதியாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல் உழவர்களைப் போற்றும் குறட்பாக்களை எழுதி பொருளையும் அழகாக விவரித்துப் பதிவிட்ட திண்டுக்கல் தனபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். இதோ அவரது பதிவின் சுட்டி.

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html.

    படித்துப் பாருங்கள். உழவின் அருமை புரியும். ஆதிகாலத்திலேயே சொல்லப்பட்ட கருத்துகள் இன்றும் பொருந்தும் வகையில் இருப்பதற்காக ஒரு பெருமையும், அதே சமயத்தில் இந்த உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாமும் உதவி செய்து கை கொடுக்கவேண்டிய உந்துதலும் கிடைக்கும்

    திரு தனபாலன் உழவர்களுக்கு மட்டும் தோழரல்ல. அவர் எல்லாப் பதிவர்களுக்கும் தோழர். எங்கெங்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தானே வலிய வந்து உதவும் பண்பாளரான திரு தனபாலன் அவர்களை இந்தத் தைமாதத்து வாரத்தில் வல்லமையாளராக வந்தமைக்கு வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திருமதி காயத்ரி பாலசுப்ரமணியம்:

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.

    Share
  • கோபல்ல கிராமம் – புத்தக மதிப்பு​ரை

    மதிப்பு​ரை: ரஞ்சனி

    கோபல்ல கிராமம்

    எழுதியவர்: கி. ராஜநாராயணன்

    பதிப்பகம்: காலச்சுவடு

    விலை: ரூ. 150

    பக்கங்கள் : 199

    வெளியான ஆண்டு: 1976

    gopalla gramam

    ஆசிரியர் குறிப்பு:

    ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் கதைகளில் கரிசல் பூமியும் அங்கு வாழ்ந்த மக்களும்தான் கதைக் களம், கதை மாந்தர்கள். இவரது கதைகளுக்கு பின்புலம் தனது தந்தையாரிடத்தில் இவர் கேட்ட கதைகள் தாம்.

    எனது பணிவான வேண்டுகோள்

    சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த மூத்த எழுத்தாளரை விமரிசிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை. அதனால் நான் இங்கு பகிர்ந்து இருப்பது நான் படித்து ரசித்த ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் இருந்து சில துளிகள். என்னைக் கவர்ந்த பாத்திரங்கள், வியக்க வைத்த நிகழ்வுகள் அவ்வளவே. இதைப் படித்துவிட்டு சிலராவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் எனது ஜென்மம் சாபல்யம் பெறும். ஏற்கனவே படித்தவர்கள் என்னுடன் கூட இன்னொருமுறை கோபல்ல கிராமத்திற்குப் போய்வரலாம்.

    கோபல்ல கிராமம்

    ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது.  கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன் கோபல்ல கிராமம் விரிகிறது. கோட்டை கட்டி வாழ்ந்தவர்கள் இல்லை; அந்த வீட்டை சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருந்ததனால் கோட்டையார். ‘ரொம்பத் தாட்டியாக வாழ்த்த குடும்பம்; இப்போது சிதிலமடைந்த வீடும், இடிபாடுகள் அடைந்த கோட்டைச் சுவரும் புராதன சின்னங்கள் போல சோகமாய் நின்று கொண்டிருக்கின்றன’. கோட்டையார் வீட்டு சகோதரர்கள் ஏழு பேர்கள். அண்ணன் தம்பி ஏழுபேரும் குடும்பத்தில் ஒவ்வொரு ‘இலாகா’வை நிர்வகித்தார்கள்.

    இந்த சகோதரர்களின் கதையை வாசித்துக் கொண்டே இருக்கும்போது அந்த கதைக்குள் ஒரு கதைசொல்லியாக 137 வயதான பூட்டி மங்கத்தாயாரு அறிமுகம் ஆகிறாள்.  ‘எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும்’ மங்கத்தாயாருவை ‘பார்க்கும்போதெல்லாம் ரோமத்தை எல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்’ என்கிறார் கி.ரா.

    இவள் கதை சொல்லும் அழகில் நாமும் அவளைப்போலவே நேரம் காலம் தெரியாமல் லயித்து விடுகிறோம். அந்த லயிப்பில் இவள் வர்ணிக்கும் சில அமானுஷ்யங்கள், இவள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதெல்லாம் கேள்வி கேட்கப்படாமல் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்டுவிடுகிறது. மங்கத்தாயாரு தாங்கள் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பி வந்த கதையை சொல்லும்போது அந்தக் கதைக்குள்  ஒரு பெண்மணி தனது பெண் துளசியின் கதையை சொல்லுகிறார். கதைக்குள், கதைக்குள், கதை!

    மங்கத்தாயாருவின் கதையின் கதாநாயகி சென்னாதேவி தன் அழகால் எல்லோரையும் தன்னை கையெடுத்துக் கும்பிடும் தேவியாக நினைக்க வைக்கிறாள். ஆனால் அத்தனை அழகு இருக்கும் பெண்ணின் வாழ்க்கை துன்பமயமாகத்தான் இருக்கும் என்று மங்கத்தாயாரு சொல்லும்போதே நம் மனம் பதறத் தொடங்கிவிடுகிறது. என்ன ஆகியிருக்கும் சென்னாதேவிக்கு? துலுக்க ராஜாவிற்கு ராணியாக வாழ்க்கைப்படும் ‘அதிர்ஷ்டம்’ உண்டாகிறது சென்னாவிற்கு. திருமணத்திற்கு முன் தினம்தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டவர்கள் பசு மாமிசத்தை தங்களுக்கு விருந்தாகக் கொடுக்க இருக்கிறார்கள் என்று! அதிர்ந்து போய் அங்கிருந்த தப்பி ஓடிவரும் இவர்கள் வந்து சேருவது ‘அரவ’ (தமிழ்) தேசத்திற்கு. அங்கு தங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் கோபல்ல கிராமம். இந்தப் பூர்வ கதை மங்கத்தாயாருவின் மூலம் சொல்லப்படுகிறது.

    நிகழ்காலத்தில் நடக்கும் கதை இரண்டாம் அத்தியாத்தில் தொடங்குகிறது. ‘காதுல பாம்படம் போட்டுக்கொண்டு, சேப்புக் கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் ஈருசுரு ஆள்’ மங்கம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறாள். வழியில் ஊருணியில் இறங்கி நீர் குடிக்கும்போது ஒரு வழிப்போக்கனால் கொல்லப்படுகிறாள் அவளது காதுகளில் தொங்கும் பாம்படங்களுக்காக. முதல் அத்தியாயத்திலேயே கோபல்ல கிராமத்தின் பஞ்சாயத்து பற்றி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்லிவிடுவதால் இந்தக் கொலைக்கு என்ன தண்டனை, அது எப்படி நிச்சயிக்கப்படுகிறது, எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதெல்லாம் நமக்குள் கதையை ஊன்றிப் படிக்க உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள். பூர்வ கதைக்கும் இப்போது நடக்கும் கதைக்கும் நடுவில் வேறு வேறு மனிதர்களின் கதைகள் – எல்லாமே கோபல்ல கிராமத்தின் கதைதான்.

    சீரியஸ்ஸான கதையாக இருக்குமோ என்று இந்தப் புத்தகத்தைப் படிக்க யோசிப்பவர்களுக்கு இந்த கோபல்ல கிராமத்தின் காமெடியன் அக்கையாவின் வேடிக்கை வினோதங்கள் நல்ல சிரிப்பு விருந்து. சுந்தரப்ப நாயக்கரை ‘புதூச் சுண்ணாம்பு எடுத்துக்க…’ என்று சொல்லி ஏமாற்றுவதும், தான் ரொம்பவும் அழகி என்ற இறுமாப்பால் இவரை மதிக்காமல் இருக்கும் துண்டபண்டு (கோவைப்பழம் போல சிவப்பாக இருந்ததால் வந்த பெயர்) வெங்கிடம்மாவை விளையாட்டாக ஒரு பொய்யைச் சொல்லி பழி வாங்குவதும் இவரது முத்திரை காமெடிகள். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல; ஒரு கண்டுபிடிப்பாளியும் கூட! கோடை உழவு முடிந்து, முதல் மழை பெய்ததும் விதைப்புக்குத் தயாராக்க நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு ஒத்தைக் கலைப்பையை வைத்துக் கொண்டு உழுவதால் உழுது முடிக்கும் முன்பு மழை வந்துவிடும். மழைக்கு முன் உழுது முடிக்க அன்று அக்கையாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கலப்பை கரிசல் காட்டில் பெருத்த மாறுதலையும், பரபரப்பையும் அந்த நேரத்தில் உண்டு பண்ணியது. அக்கையா சொல்லும் ராஜகுமாரனின் கதை நிச்சயம் படித்து, ரசித்து, சிரித்து மகிழ வேண்டிய ஒன்று. அக்கையாவின் தலைமையில் கிராம மக்கள் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் ‘சந்திப்பு’ நடத்துவது இந்நாளைய திரைப்படங்களில் வரும் ‘க்ளைமேக்ஸ்’ காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை!

    ஜோஸ்யம் எங்க்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா, ஜலரங்கன் யாரைச் சொல்ல, யாரை விட? இவர்களது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை! ஒரு நிகழ்வு! இப்படி பல பாத்திரங்கள் நம்முடன் சகஜமாக உலா வருகிறார்கள். எழுத்தாளருக்கும் நமக்கும் இடையில் இடைவெளி என்பதே இல்லை என்பதே இந்தக் கதையின் சிறப்பம்சம்.

    நான் இங்கு சொன்னது 25% அவ்வளவே. மீதி 75% புத்தகம் வாங்கி நீங்களாக படித்து ரசிக்க வேண்டியவை. திரு கிரா வின் நடையின் கோபல்ல கிராமம் நம் கண் முன் உயிர்த்தெழுந்து வருகிறது என்று சொன்னால் மிகைப்படுத்தல் இல்லை.

    Share
  • மழைவில் மனிதர்கள் – புத்தக மதிப்புரை

    மதிப்புரை – விஜயஸ்ரீ சிந்தாமணி

    முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் திரட்டிய நினைவுகளின் தொகுப்புக் கட்டுரைகளே “மழைவில் மனிதர்கள்”. ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இவர், தமிழ் இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். யாரும் எழுதலாம், எதைப் பற்றியும் எழுதலாம் என்றாலும் சுவைபட எழுதுவது சிலருக்கே கைவந்த கலை. அப்படி ரசனையாக எழுதும் திறன் பெற்றவர் ஜெயந்தஸ்ரீ. இவரது நினைவுக்குறிப்புகள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. மனிதர்களின் இயல்பைக் கண்ணாடிபோல் காட்டுகின்றன.மொழிகளில் இவர் பெற்றுள்ள புலமையும், கதாசிரியராகவும், இதழாசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பெற்ற அனுபவமும் இவரது எழுத்துக்கு மெருகூட்டுகின்றன.

    Mazhaivil ManithargaL - Cover

    பெண் எழுத்தாளர்களில் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தச் சிலரில் இன்றைய தினம் முதன்மையாக நிற்பவர் ஜெயந்தஸ்ரீ. இவரது பல திறமைகளில் மேலோங்கி நிற்பது நகைச்சுவையாக எழுதும் திறன். ‘உப்புமாஞ்சலி’, ‘ஆதலால், தூங்கச்செல்வீர்’, ‘யாண்டுபலவாக’, ‘மறக்கத்தெரிந்தமனமே’, ‘ஆஈன, மழைபொழிய’ என்று எதைப் பற்றி இவர் எழுதினாலும் அதைப் படிக்கையில் வயிறு புண்ணாகிறது, சிரித்துச் சிரித்து. நகைச்சுவை என்றால் பிறரை எள்ளி நகையாடுவதுதான் என்பது பலரது கொள்கை. ஆனால்ஜெயந்தஸ்ரீ தன்னுடைய ஓயாத தும்மல், ஞாபகமறதி, நகரை விட்டு நகர்ந்து வீடு கட்டி வாழ்வது, தலைச்சாயம் பூசுவது போன்ற தன் அனுபவங்களை சோகமும், ஹாஸ்யமும் ஒருங்கே இணைத்துச் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார். இவரது கைவண்ணத்தில் அவை வெகுளித்தனமும், ஹாஸ்யமும் நிரம்பி ரசனையாக மாறிவிடுகின்றன. முழங்கால் வலியில் கூட வசீகரம் காணும் ரசிகத்தன்மை இவரிடம் நிறைய உள்ளது. பிறர் மனத்தை நோகச் செய்யாமல் சுயஎள்ளல் செய்துகொள்ளும் ஒருவரை யாருக்குத் தான் பிடிக்காது?

    எழுத்தாளர்களுக்கு கூர்ந்து நோக்கும் திறன் தேவை. இந்த எழுத்தாளர் மனித இயல்புகளைக் கூர்ந்து நோக்கி படம்பிடித்துக் காட்டுகிறார். ‘வட்டத்தின் மூலையில்’ பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பயணி, ‘நிஜப்போலி’யில் பூனையை வரவேற்றுத் தன் வீட்டைக் காட்டும் பெண்மணி, திறமை இருந்தும் வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாத ‘மற்றும்பலர்’ என இவர்களை உதாரணம் காட்டலாம். நாய், பூனை, பூச்சி போன்ற ஐந்தறிவு பெற்ற ஜீவராசிகளின் தன்மைகளையும் ஆராய்ந்திருக்கிரார். முற்றம், பரண், கதவு, பேனா என்றுஅஃறிணை பொருள்களின் குணாதிசயங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

    Mazhaivil ManithargaL - Back Cover

    இவரது இருமொழிப் புலமையும் கவிதை நடையும் நம்மை வசீகரிக்கின்றன. மாக்பெத்வரிகளை மின்னல் கீற்றாக மொழிபெயர்க்கும் மாணவன், ‘பௌர்ணமி போலப் பால் ஊத்தறேன்’ என்னும் பால்காரன், ‘பூவு ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?’ என்று கேட்கும் பாட்டி என்று எளிய மனிதர்களின் வார்த்தைகளின் கவிதை ஜாலத்தில் மயங்கி, நம்மையும் மயங்க வைக்கிறார். ஆலிஸின் அதிசய உலகப் பூனையின் புன்சிரிப்பைப் போல ‘நிஜப்போலி’யில் வரும் பூனையின் புன்சிரிப்பும், பூனை சென்ற பின்னும் அந்தரத்தில் நிற்கிறது! ‘திறந்திடு செசெமே’யில் தீக்குளித்து, பூட்டிய உள்ளில் இறந்த அத்தை மட்டுமில்லாமல், டேவிட் காப்பர்பீல்ட், ஜேன் அயர், ஆலிவர் ட்விஸ்ட் போன்ற ஆங்கில இலக்கிய மாந்தர்கள், அலிபாபாவின் அண்ணன் காசிம் எல்லோரும் பூட்டிய கதவின் பின் என்ன மனநிலையை அடைந்திருப்பார்கள் என்ற பறந்துபட்ட சிந்தனை இலக்கிய சிந்தனையாளர் ஜெயந்தஸ்ரீக்கு உண்டாகிறது.

    ‘குறுந்தொகையில் பெண்குரல்’ என்பது அன்றைய பெண்ணின் குரல், இன்றைய பெண்ணின் ஆவேசப் பேச்சுக்கு முற்றிலும் மாறானது என்று இவர் கண்ட ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது. ‘பாரதியை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்; நிராகரிப்பதென்றால் முழுமையாக நிராகரியுங்கள்’ என்று சொல்லும் துணிச்சல் படைத்த அறிவாளி.

    இவரது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் இவரது உரைநடையே ஓர் உல்லாச ஓடை போல், சின்னஞ்சிறுமி போல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒடுங்கிய வெண்கல உருளி நிலா, வீட்டிற்கு ஓட்டுக் குல்லாய் போன்ற உருவகங்களை வேறு யாரால் எழுத முடியும்? ‘இரண்டுகால் பூச்சியும், ஆறுகால்அவளும்’ தலைப்பே கவிதைத்தன்மை கொண்டிருக்கிறது அல்லவா?முற்றுப்புள்ளி அளவில் வளர்ந்த பூச்சிக்கும், அவளுக்கும் நடக்கும் போராட்டத்தில் அவள் பூச்சியாகவும், பூச்சி அவளாகவும் மாறிவிடுகின்றனர்.

    குருவிகள், முதியோர் இல்லங்களில் தொலைக்கப்பட்ட பெற்றோர்கள், குழந்தைத்தன்மையைத் தொலைத்த குழந்தைகள் அனைவரும் காணாமல் போய்விட்டனர் என்று துடிக்கிறார் நெஞ்சில் நேசத்தைச் சுமந்த ஜெயந்தஸ்ரீ. வேப்பமரம் வெட்டப்படுமுன், காக்கை மின் கம்பியில் அடிபட்டு இறந்து போகும் முன் அவைகளிடம் தனக்கு இருந்த பாசத்தை வெளியிடாமல் இருந்ததற்காக வருந்துகிறார் இந்தக் கருணையுள்ளம் கொண்ட தாய்.

    ஜெயந்தஸ்ரீயின் மொழிப்புலமை, நகைச்சுவை உணர்வு, உல்லாச உரைநடை, கவிதைநோக்கு, மனிதநேயம் யாவும் கலந்து, அறிவுக்கு விருந்தாக, வண்ணச்சித்திரமாக வானவில் போல் ஆனந்தத்தைத் தருகிறது ‘மழைவில் மனிதர்கள்’.

    நூல்:                                          மழைவில் மனிதர்கள்

    ஆசிரியர்:                              முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

    பதிப்பு:                                     திரிசக்திபப்ளிகேஷன்ஸ்

    முதல் பதிப்பு:                     ஏப்ரல் 2010

    மொத்தப் பக்கங்கள்:     240

    Share