Blog

  • குறவன் பாட்டு-26

    குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல்

     

    மாட மாளிகை மயக்கும் கேளிக்கை,

    காடு கண்டதில்லை, குறவர் கொண்டதில்லை,

    நாடி ஒடுங்கவே நடக்கும் சுமையில்லை,

    கோடி மக்களுக்கும் கவலை துளியில்லை !                                                                                      212

     

    அதிகாலை வரைஉறங்க கானகத்தில் வாய்ப்பில்லை,

    அயர்ந்தாலும் பறவைகள் கண்மூட விடுவதில்லை,

    அகம்குளிரக் கண்ணுறங்கி, ஆசைதீர்ந்து எழுந்துவரும்,

    அழகுமெத்தையில் புரண்டுறங்கும் வாழ்க்கை நகரிலே!                                                             213

     

    எழுந்து சென்று உடல் நடுங்க,

    பொழிந்து கொட்டும் அருவிக் குளிரில்,

    கலைந்தும் கலையா ஆடையுடன்,

    நனைந்து உறையத் தேவை யில்லை!                                                                                                      214

     

    இதமான வெந்நீரில் தனியாக ஒருஅறையில்,

    எவரும் பார்ப்பா ரென்னும் பயமின்றி,

    உற்சாக மனம் கொண்டு, மணம்

    உற்றுச் சிறந்த பொருளிட்டு நீராடலாம்!                                                                                                  215

     

    குளிக்கும் முன்னர் காலைக் கடனை,

    கழிக்கவும் கலங்கும் நிலை இல்லை,

    அதற்கும் தனியோர் அறை உண்டு,

    அங்கும் நறுமணக் காற்றுண்டு!                                                                                                                       216

     

    கனி பறிக்கக் காய் பறிக்கக்,

    கண் கவரும் மலர் பறிக்கக்,

    கால் கடுக்க நடக்க வேண்டாம்,

    கான் கடந்து சலிக்க வேண்டாம்!                                                                                                                   217

     

    கடல் போன்ற பரப் பளவில்,

    கடை விரித்துக் காத்து நிற்கும்,

    “கருணைக் கடலோர்” பலர் உண்டு,

    களைப்பின்றி அனைத்தும் அங்கே வாங்கிடலாம்!                                                                            218

     

    அழகுக்கு அழகு சேர்க்கப் பல,

    அழகான நிலையங்கள் ஆங்காங்கே இங்குண்டு,

    அதிரூப சுந்தரியாய் அனைவரையும் மாற்றிவிட,

    அவருக்கு அறிவாற்றல் திறன் உண்டு!                                                                                                     219

    Share
  • முப்பால் கொடுத்த முனிவரே !

     
    செழியன்
    முப்பால் கொடுத்த முனிவரே ! thiru
    இன்று

    ‘திருவள்ளுவர் தினம்’

    அறிவித்து விட்டது.. அரசு விடுமுறையுடன்
    இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது.
    உனது குறளுக்கும் – குரலுக்கும்
    இருந்தாலும், புரிந்துகொண்டார்கள்
    உன்னையும், உன் குறளையும்’ – இப்படி
    ‘அறத்துப்பால் தந்தாய் ‘
    அறம்..மறந்து. -.. மறுத்து
    சேவை எனச் சொல்லி, அவரவர்
    தேவைகளுக்காக, கொள்ளை,கூட்டுக்கொள்ளை, ஏமாற்று
    என கோடிகோடியாய் பொருள் சேர்த்து, பாதுகாக்க
    ‘ அற ‘ க்கட்டளை அமைத்துக்கொண்டார்கள் – இது அவர்கள்
    உணர்ந்த ‘ அறத்துப்பால்

    பொருட்பாலில்
    ‘ குடி செயல் வகை ‘ என ஒரு அதிகாரம் தந்தாய்
    ‘ குடி ‘ செயலோ வகை வகையாக நடக்கிறது.
    தெருவுக்குத் தெரு
    பள்ளிக்கருகே… கோவிலுக்கருகே
    தனியார் பார்.. அரசு பார்… அனுமதியுடன்
    வயசு வித்தியாசம் இல்லாமல் அருந்தலாம்
    அவமானப்படாத அரசுக்கு
    வருமானம் பல கோடிகளில்
    இது … இவர்கள் குடித்த ‘ பொருட்பால் ‘

    காமத்துப் பால் தந்தாய் – இதில்
    காமத்தின் மேல் வெறி கொண்டு
    வல்லுறவு- வன்புணர்ச்சி – தனியாக_கூட்டாக
    வயது பேதம் இன்றி
    உறவு பேதம் இன்றி
    வக்கிர உணர்ச்சியில் – மிருகத்தையே மீறினார்கள்.

    திருவள்ளுவரே !
    முப்பால் கொடுத்த உனக்கு
    நாட்டுக்குஅப்பால் – கடலில்
    வானுயர்ந்த உருவச்சிலை..
    நீ கொடுத்த முப்பாலும் வீணானதோ ?
    விரக்தியில்..விட்ட கண்ணீர்தான்
    கடலில் விழுந்து, கடலே பொறுக்காமல்
    சுனாமியாக சுழற்றிஅடித்ததோ ?
    சிலையாய் நின்றுவிட்டாய். – உயிரோடிருந்தால்
    நிலைகுலைந்து
    தலை சாய்ந்து இருப்பாய்…. நல்லவேளை.
    இன்று திருவள்ளுவர் தினம்.
    எழுத்தாணி கொண்டு
    எழுதிய உன் இதயம் கிழித்திட்டாலும்
    இந்த வலி இருக்குமோ உனக்கு !

     

    Share
  • பொங்கல் வாழ்த்து…

    செண்பக ஜெகதீசன்bullock-index

     கழனியில் விளைந்தநெல் அரிசிபொங்கி

    காட்டு மஞ்சள் இஞ்சியுடன்

    பழவகை காய்கறி சேர்த்துவைத்து

    பகலவன் கதிர்முன் படைத்துவைக்கும்

    உழவர் திருநாள் நந்நாளில்

    உறவாய்த் தமிழர் ஒன்றிணைந்தே

    பழகி என்றும் பயனுறவே

    பகர்வோம் பொங்கல் வாழ்த்தின்றே…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.123rf.com/photo_9745647_bullocks-with-yoke-to-pull-the-plow–old-agricultural-work-recall-in-the-italian-countryside.html

     


     

    Share
  • பொங்கலோ பொங்கல்! (2014)

     

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே! எங்கும் மங்கலம் பொங்கட்டும்!! நன்மைகள் பெருகட்டும்!!

     

    pongreet11-1024x604

    மகத்துவம் மிக்க மகரசங்கராந்தி – பொங்கல் திருவிழா..!

     

    ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

     

    ஆனந்தப் பொங்கல்

    பொங்கலோ பொங்கல் - Copy

     

    மனதைத் திருப்பிக் கொடு மாயவா..

     

    திரை கடலோடி…..

     

    பொங்கட்டும் பானைகள்

     

    பொங்கல் பள்ளு

    pongal-899

     

    தமிழ் இலக்கணம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்

     

    மஞ்சு விரட்டு

     

    பொங்கலும் பொங்கும் போல்புராஃபும்!…

     

    தைப் பொங்கல் வைப்போம்

    பொங்கலோ பொங்கல்-2

    முந்தானை முட்டாள்!

     

    ‘கனுப்பொங்கல்’, ‘கா’….’கா’….’கா’

     

    பொங்கலோ…. பொங்கல்! பெண்களோ….பெண்கள்!

     

    பொங்கலோ பொங்கல்

     

    பழமை மாறாத ‘பொங்கல்’!…

     

    தைப் பொங்கல் வைப்போம்

     

    படைப்போம் பொங்கல்!

     

    தை மகளே வா வா (மருமகளே மெட்டில்)

     

    pongal-happy-pong-1294646905

     

    Share
  • புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

    கே.எஸ்.சுதாகர்

    [புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]

    உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

    ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்னும்போது அதில் ‘மக்கள்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ‘புகலிட இலக்கியம்’ என்னும்போது அதில் ‘வாழ்விடம்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

    புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் யார்? ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்’ என்கின்றார் செங்கை ஆழியான். ‘புலம்பெயர் இலக்கியம், புலம்பல் இலக்கியம்’ என்கின்றார் ஜெயகாந்தன். ‘பிரச்சனைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு ஓடும் காகக்கூட்டம்’ என்கின்றார் டொமினிக் ஜீவா. மேலும் கம்பவாரிதி ஜெயராஜும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் இன்னும் பலதுறை விற்பன்னர்களும் வந்துகொண்டிருக்கும் வேளையில் எழுத்தாளர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெளிவாகவே சொல்லிவிடுகின்றார் சுஜாதா.

    அக, புற நெருக்கடிகளான சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமது வாழ்விடங்களை விட்டுப் புதிய இடங்களை நோக்கிச் சென்றவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என சுருக்கமாகச் சொல்லலாம். அவர்களின் படைப்புகளை ‘புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளிகளின் படைப்புகள்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

    உண்மையில் மன்னர் காலத்திலிருந்தே இந்தப்புலம்பெயர்வு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின்னர் திரைகடலோடி திரவியம் தேடப் புறப்பட்டவர்களும், காலணியாட்சியாளர்களால் தமது தேவைக்காக இழுத்துச் செல்லப்பட்டவர்களுமாக மக்களைப் புலம்பெயர வைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய ஒடுக்குமுறை, பஞ்சம், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கில் அடித்தட்டுத் தமிழர்களில் பெருண்பான்மையானவர்கள் கப்பலேறியதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தரவுகள் சொல்கின்றன. மலேசியாவில் பினாங்கிற்கும், இலங்கையில் மலையகத்திற்கும் மற்றும் சிங்கப்பூர், பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளுக்கும் இந்தியத்தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். அடுத்து சுயமாக – வேலை தேடி சீக்கியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் செட்டியார்கள் முஸ்லிம் வணிகர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள். ஈழத்துமக்கள் புலம் பெயர்ந்தமைக்கும் இந்தியமக்கள் புலம்பெயர்ந்தவைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துமக்கள் அரசியல் மற்றும் பொருள் தேடும் காரணங்களால் புலம் பெயர்ந்தார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தார்கள். வசதி வாய்ப்புப்பெற்றவர்கள் ஐரோப்பியநாடுகள் கனடா அவுஸ்திரேலியா செல்ல, ஏனையோர் தமிழ்நாடு சென்றார்கள்.

    மலேசியாவின் முதல் தமிழ் நாவல் எழுதியவர்களாக தமிழகத்தின் வெங்கடரத்தினமும் புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தவரும் சொல்லப்படுகின்றார்கள். அடுத்து மலேசியாவின் புலம்பெயர்வாழ்வைச் சித்தரிக்கும் நூல்களாக ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி'(1962) , ‘கடலுக்கு அப்பால்'(1950) என்ற நாவல்களும் ஆர்.சண்முகம் எழுதிய ‘சயாம் மரண ரயில்’, ரங்கசாமியின் ‘லங்கா நதிக்கரையில்’, குமரனின் ‘செம்மண்ணில் நீல மலர்கள்’, இளம்வழுதியின் ‘லட்சியப்பாதை’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் ‘புயலிலே ஒரு தோணி’ தமிழுக்கு வளம் சேர்க்கும் நாவல்களில் ஒன்று எனலாம். தாயகம் பற்றிய கனவுகளுடன் வாழும் ஒருவனை இரண்டாவது உலகமகாயுத்தம் எப்படிச் சுவீகரித்துக் கொள்கின்றது என்பதையும், யுத்தத்தின் வெற்றி தோல்விகள் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் எழுதியுள்ளார் சிங்காரம். 1942இல் ஜப்பான்நாடு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை காடுகளூடாக ஒரு ரயில்பாதையை நிர்மாணித்தனர். இதில் 15000 போர்க்கைதிகளுடன் மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த ஆசியத்தொழிலாளர்களும் ஈடுபட்டனர். கடும் உழைப்பு, உணவின்மை, தொற்றுநோய் காரணமாக பலர் இறந்தனர். இவற்றைப் பின்னணியாகக் கொண்டது ‘சயாம் மரண ரயில்’ நாவல். மலேசியாவில் இன்று ரெ.கார்த்திகேசு, கே.பாலமுருகன் போன்றோர் நாவல் எழுதி வருகின்றனர்.

    சிங்கப்பூரிலிருந்து இளங்கோவன், ஜெயந்தி சங்கர் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளிற்குச் சென்றவர்களின் வாரிசுகள் இன்று தமிழே தெரியாமல் தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் இலக்கியப்பதிவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப்பற்றித் தெரியவில்லை. இலங்கையின் மலையகத்திற்கு கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக எண்ணற்ற தமிழர்கள் பிடித்துச் செல்லபட்டார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களையும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைக்குள்தான் அடக்கவேண்டும்.

    தமிழரின் புலம்பெயர்ந்த இலக்கியம் என்றதும் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்களின் எழுத்துகள்தான். இலங்கை அரசியல் நிலவரம், இராணுவத்தாக்குதல்கள், இயக்கங்களிடையேயான சகோதரச் சண்டைகள் காரணமாக பலர் தமிழகத்திற்கும் பிரான்ஸ், கனடா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர்.

    கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

    தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி'(1998), ‘வினாக்காலம்'(1998), ‘அக்னி திரவம்'(2000), ‘உதிர்வின் ஓசை'(2001), ‘ஒரு புதிய காலம்'(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’ என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’  என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது.

    ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார். எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்.

    ‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன ‘மனித உரிமைவாதி’ எனக்கூறும் கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். ஐந்து தமிழ்தேசியவாத இயக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘மறைவில் ஐந்து முகங்கள்’ தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பானது. இவரது ‘Blood and Terror’ (2006), ‘His Royal Highness, The Tamil Tiger’ (2012) ஆங்கில நாவல்களில் முதலாவது நாவல் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ நாவலை ஒட்டியது. அமெரிக்க பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இரண்டாவது ஆங்கில நாவல் விடுதலைப்புலிகளின் சமாதான கால வரி வசூலிப்பை கருவாகக் கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் – ஆசிரியர் – மாணவிகளை மையமாகக் கொண்ட ‘சிவப்பு நரி’ நாவல் கதையைத் தழுவியது. உள்நாட்டு போர்க்கால அரசியல் புயலும், மனித அவலங்களும் நாவல்களின் சதையும் உயிருமாயுள்ளன.

    மற்றும் ‘மண்ணின் குரல்’, அமெரிக்கத் தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும் ‘அமெரிக்கா’ ,  தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிக்கும்‘குடிவரவாளன் (AN IMMIGRANT)’   என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் –

    ‘திசை மாறிய தென்றல்’, ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் –

    ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் –

    ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (போர்க்காலச் சூழ்நிலையைக் கொண்டது), விகடனில் வெளிவந்த ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர்.

    ஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள்.

    பார்த்திபனின் படைப்புகளும் பெரும்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய ‘பாதி உறவு’ என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.

    பொ.கருணாகரமூர்த்தி புதிய முயற்சிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். மூன்று குறுநாவல்கள் கொண்ட ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற படைப்பைத் தந்திருக்கின்றார்.

    பிரான்ஸ்

    நாகரத்தினம் கிருஷ்ணா—தமிழகத்துப் படைப்பாளி—‘நீலக்கடல்'(2005), ‘மாத்தாஹரி'(2008) என்ற நாவல்களையும் ‘காதலன்'(2008), ‘வணக்கம் துயரமே’ என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களையும் தந்துள்ளார். ‘நீலக்கடல்’ நாவல் 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுகுப் பிரெஞ்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்ற தமிழர்களின் துயரவாழ்க்கையைச் சொல்கின்றது.

    ஷோபாசக்தி – கதைக்களத்தில் மட்டுமல்லாது புனைவிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் ‘கொரில்லா’ நாவல், போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினைச் சொல்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 15 வயதுச் சிறுவனாகிய ஷோபாசக்தியின் துயரங்களைச் சொல்லும் இந்த நாவல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவரின் அடுத்த நாவல் ‘ம்’. வெலிக்கடை சிறைக்கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என்பவற்றுடன் தொடர்புபடும் நேசகுமாரன் என்ற பாத்திரமும், புலம்பெயர்ந்தநாட்டில் அவனின் பதின்ம வயது மகள் நிறமியின் கர்ப்பத்தையும் இணைக்கும் பின் நவீனத்துவப் போக்குக் கொண்ட நாவல் இது.

    தூயவன் – யுத்த காண்டம்(2006)

    மா.கி.கிறிஸ்ரியன் – உள்ளத்தில் மட்டும்(1998), புயலுக்குப் பின்

    சுவிற்சலாந்து

    இந்த வருடம் வந்த நாவல்களில், சயந்தனின் ‘ஆறா வடு’ பெரிதாகப் பேசப்படுகின்றது. தமிழினி பதிப்பகமாக வந்திருக்கும் இந்த நாவலில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்றாலும் நடுநிலமையுடன் அங்கதச்சுவை கொண்டு எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்ட காலத்து(1987) சம்பவங்கள் தொடக்கம் 2002 சமாதான காலம் வரை நடந்த சம்பவங்கள் பற்றி பேசும் வரலாற்று நாவல் இது.

    நோர்வேயில் வாழும் படைப்பாளியான இ.திஜாகலிங்கம் அழிவின் அழைப்பிதழ்(1994), நாளை(1999), பரதேசி(2008), திரிபு(2010), எங்கே(2011), வரம்(2009) என்று பல நாவல்களைத் தந்திருந்தபோதிலும் இவை எதுவுமே பரவலாகப் பேசப்படவில்லை.

    டென்மார்க்கிலிருந்து எழுதும் ஜீவகுமாரன் – மக்கள்… மக்களால்… மக்களுக்காக… (2009), கடவுச் சீட்டு (2013) என்ற நாவல்களையும்,  சங்கானைச் சண்டியன்(2010) என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். அ.பாலமனோகரன் ‘தாய்வழி தாகங்கள்’ என்றொரு நாவலை வெளியிட்டுள்லார்.

    லண்டனில் புலம்பெயர்ந்து வாழும்

    ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஒரு கோடை விடுமுறை’, ‘தேம்ஸ் நதிக்கரையில்’, ‘அம்மா என்றொரு பெண்’, ‘தில்லையாற்றங்கரையில்’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ போன்ற பல நாவல்களை எழுதியிருக்கின்றார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பல மாறுபாடான கருத்துகளைக் கொண்ட ‘ஒரு கோடை விடுமுறை’ பலராலும் பேசப்பட்ட நாவலாகும்.

    வவனியூர் இரா.உதயணன் சுருதி பேதமடைகிறது (2008), விதி வரைந்த பாதையிலே(2009), நூல் அறுந்த பட்டங்கள் (2009), பனி நிலவு (2010), உயிர்க்காற்று (2010) என்ற நாவல்களை எழுதியுள்ளார். இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.

    இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் சலவைத்தொழிலாளர்கள் பற்றிப்பேசுகின்றது. இதுவும் விடுதலைப்புலிகளால் தடைசெய்யபட்டது. இவரது இன்னொருநாவல் ‘கசகறணம்’, தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வை ஆயுதக்குழுக்கள் எப்படிச சிதைத்தார்கள் என்பதைச் சொல்கிறது. இனத்தகராறில் எரிக்கபட்ட அக்கரைபற்றுச் சந்தையில் வியாபாரம் செய்யும் நான்குபேரைச் சுற்றிச் செல்லும் கதை.

    மற்றும் முடிந்த கதை தொடர்வதில்லை(1999) என்ற நாவலை எழுதிய முல்லை அமுதன் (இ.மகேந்திரன்) எழுதியிருக்கின்றார்.

    அவுஸ்திரேலியா தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

    அவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள்.

    எஸ்.பொ எவரும் எழுதத்துணியாத படைப்புகளைத் தந்தவர். இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும் நாவல் மாயினி(2007). இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை அலசப்படுகின்றது.

    மாத்தளை சோமுவின் பேசப்படும் படைப்புகளாக ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’, ‘எல்லை தாண்டா அகதிகள்’, ‘மூலஸ்தானம்’, ‘நான்காவது உலகம்’ என்பவற்றைச் சொல்லலாம். இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர்.

    முருகபூபதியின் நாவல் பறவைகள்(2001). சாகித்திய விருது பெற்றது. ‘என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நாவல் இது.

    என்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது. இவற்றுள் வண்ணாத்திக்குளம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் (Butterfly Lake – Samanala Weva) மொழிபெயர்க்கப்பட்டது. உனையே மயல் கொண்டு ஆங்கிலத்தில் (Lost In You) மொழிபெயர்க்கப்பட்டது. மற்றும் ‘அசோகனின் வைத்தியசாலை’ (2013) – முழுமையாக அவுஸ்திரேலியாவைக் களமாகக்கொண்டு ஒரு மிருக மருத்துவரின் வாழ்வனுபங்களையும் வெள்ளை இனத்தவர்களின் கலாச்சாரம் அதிலிருக்கும் சிக்கல்கள்  முடிச்சுகள் பற்றி பேசும் நாவல்.

    கபிலன் வைரமுத்துவின் படைப்பு ‘உயிர்ச்சொல்'(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில் நிகழும் குழப்பத்திற்கு இணையாக தமிழகத்து அரசியல் குழப்பத்தையும் இணைத்து நாவல் செல்கின்றது.

    மறைந்த எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு –  பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு? எது நிஜம்? என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.

    மற்றும் மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000), பாமினி செல்லத்துரை எழுதிய ‘சிதறிய சித்தார்த்தன்’ North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்—நாவல் மணம் பட்டும்படாமலும் வீசுகின்ற ஞாபகப் பதிவுகள்—பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்—யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். ‘நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது’ என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவறுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன.

    புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்கள் கொண்டிருக்கும் உட்கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    1. தாய்நாட்டுப் பிரச்சினைகள் / நினைவுகள்

    2. அகதி நிலை

    3.என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பி வாழ்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கும் – புதிய சூழலோடு இயைபாக்கமடைந்து வாழும் அவர்களின் இளைய சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள்

    4. தாயகத்திற்கும் புகலிடத்திற்குமிடையேயான குடும்ப உறவுகள், உணவுப்பழக்கங்கள், காலநிலை வேறுபாடுகள், மொழி, ஆண் – பெண் உறவுகள், பெண்ணியம் தொடர்பானவற்றை ஒப்பீடு செய்தல்

    5. அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை

    புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினரின் படைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன? இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா? புலம்பெயர்ந்து சென்ற கலாமோகன், சுசீந்திரன், பாலமனோகரன்(Bleedings Hearts) போன்றவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த, தாம் வாழும் நாட்டு மொழிகளிலும் எழுதக்கூடியவர்களாக உள்ளனர்.

    கனடாவில் வாழும் இலங்கையரான சியாம் செல்வதுரை, கதிர் பாலசுந்தரம், அவுஸ்திரேலியாவில் வாழும் நிரோமினி டி சொய்சா ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையுடையவராக இருக்கின்றனர். தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களை, தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அதேபோல தமிழிலே பரிச்சயமில்லாமல் பிரெஞ், டொச், நோர்வேஜிய மொழிகளில் எழுதும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளையும் தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ளலாமா?

    அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்று அவர்களின் புகலிடப்படைப்புகளுக்கு முப்பது வயது வந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் சிலருக்கு தாம் தாயகத்தில் வாழ்ந்த காலத்தைவிட புகலிடத்தில் நீண்ட காலங்கள் வாழ்ந்துவிட்டார்கள். இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும். உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை, ஈழத்து அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தமது பார்வையை வேறு திசைகளுக்குத் திருப்பாதவரைக்கும் வளம் சேர்க்கும் நாவல்களைக் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.

    Share
  • தேரில் ஏறும் முன்னம் ..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    த்ரீஃபோர்த் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டும், காதிலிருந்து  கழுத்துவரை தொங்கியபடி ஊஞ்சலாடியது தங்கச் சங்கிலி. பச்சை ஜேட் ஜெம் மாலை கழுத்தைப் பிடித்து இழுக்காத குறையாக கனத்தது.  தலை முடியை மொத்தமாகத் தூக்கி பனானா கிளிப் போட்டும் சில முடிகளை உதிரியாக பறக்க விட்டும் புதுமையான ஹேர் ஸ்டைலில் அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி. மஞ்சள் முகத்தில் இரண்டு கரு வண்டுகளும் ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு குறி வைத்துக் காத்திருப்பது போல முகமே சொன்னது.  ‘விளம்பர மாடல்’ அழகியாகக் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன் நின்று டச் அப் செய்து கொண்டேஅதன் வழியாக ரேனுவைப் பார்த்தவளின் கண்களில் குறும்பும், வெட்கமும் ஒன்று சேர,

    என்னடி ப்ரீத்தி….’சண்டே’யும் அதுவுமா இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷல்..? இப்படிக் கிளாமரா எங்கடி கிளம்புற? சம்திங் ராங்… என்கிட்ட சொல்லேன்….சந்தோஷப் பட்டுட்டுப் போறேன்…ப்ரீத்தியைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்கிறாள் ரேணுகா.

    ‘டேட்டிங்’……என்று சொல்லிவிட்டு உதட்டைக் குவித்து மெல்லிய விசிலடித்தபடியே கஷ்டப்பட்டுத் திரும்பிப் பின் அழகையும் பார்த்து திருப்திப் புன்னகை தவழ ரேணுகாவை நோக்கி புயலென வந்தவள் தொப்பென்று அவளருகில் உட்கார்ந்து கொள்கிறாள் ப்ரீத்தி.

    யாருடி.அது?..புதுக்கதையா இருக்கு…உங்க வீட்டுல தெரிஞ்சா…’டின்னு’ கட்டிடுவாங்க, தெரியுமொன்னோ? “ஊரு விட்டு ஊரு வந்து…..காதல் கீதல் பண்ணாதடீ …பேரு கெட்டுப் போகும்படி…ஆப்பு உனக்கே வைக்காதடி…” என்று கட்டைத் தொண்டையில் பாடிக் காண்பிக்கிறாள் ரேணு.

    சீ….லூஸு  லூஸு …..உன் தகர ‘வாயை வெச்சுகிட்டு சும்மா இருடி’….! என்று பதிலுக்கு ராகம் பாடிவிட்டு, ரேணுவின் அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு….” விஷ்ணு, அதான் அந்த ‘மலையாள மம்மூட்டி’…..இந்த சண்டே டேட்டிங் போகலாம் வரியான்னு கூப்பிட்டான்….அவனுக்கு என் மேலே ஒரு கண்ணு இருந்ததை விட எனக்கு அவன் மேலே ரெண்டு கண்ணும் மனசும் இருந்தது….அதான்.. சும்மாப் போய் அப்படி என்ன தான் இருக்கு இந்த டேட்டிங்குலன்னு பார்த்துட்டு வந்துடலாம்னு போறேன்.

    எங்க போகப் போறே..? சொல்லித் தொலைச்சிட்டுப் போ….! ஆனா….நீ இப்படிப் பண்றது எனக்குப் பிடிக்கலை. அவனே ஒரு அம்மாஞ்சி மாதிரி இருப்பான்….உனக்கும் அவனுக்கும் செட்டே ஆவாது…விட்ரு. போயும் போயும் நீ தான் அந்த ட்யூப் லைட்ட….சைட் அடிக்கிறே…!
    வம்புக்கிழுத்தாள் ரேணு.

    போதும்….உன்னோட ஜோசியம்…! உனக்கு பொறாமை வந்திருச்சு…? ப்ரீத்தி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்..

    அதெல்லாம் ஒரு மண்ணும் கெடையாது…..நீ எவன் கூட வேணா டேட்டிங்,போட்டிங் எங்க வேணாப்  போ….உங்க வீட்டுல தெரிஞ்சி உன்னை ஷூட்டிங் பண்ணினா அதுக்கு  நான் பொறுப்பில்ல…! என்னை நம்பி அனுப்பிச்சிருக்காங்க ஞாபகம் இருக்கட்டும், என்ற ரேணுகா தலையணையைக் கட்டிக் கொண்டு நான் இன்னிக்குப் பூரா நல்லாப் படுத்துத்  தூங்கப் போறேனே…என்னைக் கடிக்கிற எறும்பு இன்னிக்கு ஊர்கோலம் போகப்போவுதாம்…. என்று கவிழ்ந்து படுத்துக் கொள்கிறாள். ப்ரீத்தி கிளம்பத் தயாராகிறாள்.

    ஏய்….ரேணு….உன் ‘கைனியை’ எடுத்துட்டுப் போவா…என்று அவளது ‘கைனெடிக் ஹோண்டா’ வின் சாவியை எடுக்கப் போனதும், துள்ளிக் குதித்து எழுந்த ரேணு….அதத் தொட்டீன்னா பாரு…..! ஏன்…விஷ்ணுவுக்கு வாகனம் ஒண்ணும் இல்லியா? வெச்சிருப்பானே…..ஒரு தகர டப்பா …! அதை உருட்டிட்டு வரச்சொல்லி  வந்து கூட்டீட்டு போய்ட்டு கொண்டு வந்து விடச் சொல்லு…சுத்த மக்காயிருக்கியே..நேத்துத் தான் நான் என் வண்டிக்கு  ‘டாங்க் ஃபுல்’ பண்ணினேன்….அம்மாடி…! நீ எடுத்துட்டு போய் மொத்த சிட்டியை சுத்தி உரிஞ்சிட்டு கடைசீல காய்ஞ்ச கூடா கொண்டு வந்து நிப்பாடிடுவ…..அனுபவம் பேசுதும்மா ..அனுபவம் பேசுது..! என்று விவேக் ஸ்டைலில் சொல்லிவிட்டு சாவியை எடுத்துத் தலையணை அடியில் வைத்துக் கொள்கிறாள் ரேணுகா.

    அல்பம்…அல்பம்…..என்று திட்டிய ப்ரீத்தி…..நாளைக்கு ப்ராஜெக்ட்ல ‘இது டௌட்டு’ன்னு என்கிட்டே வருவேல்ல …அப்புடு சூடு…! என்று ஷூவில் காலை நுழைத்துக் கொண்டே…..”பை..டி அல்பம்….என் வண்டியவே எடுத்துட்டுப் போறேன்….என்ன..! அதுக்கும் என்னை மாதிரியே பிரேக் இல்லை…!…எங்கியாச்சும் முட்டி…..என்று ப்ரீத்தி முடிக்கவில்லை….

    இந்தா…..தொலை….மனசு கேட்கலை….என்று சாவியைத் தூக்கி ப்ரீத்தியிடம் வீச, அவள் லபக் கென்று பிடித்தவள்….உன்கிட்ட  செண்டிமெண்ட் பிட்டு தான் வொர்க் அவுட் ஆகுது…! நல்லபடியாக் கேட்டால்…..கொடுக்க மாட்டே…அனாவசியமா இன்னிக்கு என்னைப் பொய் சொல்ல வெச்சுட்டே…ம்ம்ம்..எனிவே ….. பை…என்று கதவைச் சார்த்தி விட்டு மறைந்தாள் ப்ரீத்தி.

    னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா …ப்ரீத்தி,  பாடிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியது ரேணுவுக்கும் கேட்டது.அதைத் தொடர்ந்து கைனி  உறுமிவிட்டு மறைந்தது.

    அறை திடீரென வெறிச்சோடியது போலிருந்தது ரேணுவுக்கு. ப்ரீத்தியும் ரேணுவும் பல வருடப் பழக்கம். ஒரே பள்ளி, ஒரே காலேஜ் என சேர்ந்து கும்மி அடித்து விட்டு…கேம்பஸ் இண்டர்வியூல  ரெண்டு பேரும் சேர்ந்து செலெக்ட்  ஆன விஷயம் தெரிஞ்சதும்…ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டாடி….சென்னையிலிருந்து பெங்களூருக்கு வேலைக்கு வந்தவர்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

    எட்டு மாதங்கள் ஒழுங்கா ஓடின வண்டி….இப்பத் தான் தடம் மாற ஆரம்பிச்சுருக்கு…அதுவும் ப்ரீத்திக்கு. அவங்க வீட்டுல அவளுக்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் ரேணுவுக்கும் தெரியும்.இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப் போகுதோ? என்று எண்ணியவள், “சீக்கிரமா வந்து சேரு”. என்று ப்ரீத்திக்கு ஒரு மெசேஜ், அடித்து அனுப்பி விட்டு, எழுந்து அறையைப் பூட்டி விட்டு உறங்கிப் போனாள் .

    தூக்கம் ரேணுகாவை கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றது.வித விதமான ஆடையில் ப்ரீத்தி விஷ்ணுவுடன் ஆடியபடி கூடவே கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. எத்தனை மணி நேரம் தூங்கினாளோ, புரண்டு படுத்தவளை சாம்சங் ”
    “அய்யய்யய்யோ ஆனந்தமே
    நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
    நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே… ” என்று அழைத்தது…

    மின்னிய கைபேசியை எடுத்து…..ராட்ஷசி ….வந்துட்டா போலிருக்கு….நினைத்துக் கொண்டே….எழுந்து கைபேசியை மூடி வைத்துவிட்டு கதவைத் திறக்கிறாள்.

    காலையில் பனிமலர் போலப் போனவள் ப்ரீத்தி வரும்போது அலைந்து திரிந்து அலுத்துப் போய் கசங்கிய காகிதமாய் நின்றிருந்தாள் .

    அவளது அந்தக் திருக்கோலத்தைப் பார்த்த ரேணுகா….னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா….என்று பாடியவள்,,
    வா…வா… ப்ரீத்தி….ஒரே நாள்ல இப்படித் தேய்ஞ்சு போய் வந்திருக்கே….என்னாச்சுடி ? ரேணுவின்  அதிர்ச்சி  அவள் குரலாக பேசியது.

    ஹப்பாடி…..! என்ற ப்ரீத்தி அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் . கனவெல்லாம் கலைஞ்சு போச்சு…ஆனால் ரொம்ப நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே, அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மனம் விட்டு, வாய் விட்டு கல கலவென்று பெரிதாகச் சிரித்தாள்

    என்ன ஒரே நாள்ல இப்படி மந்திரிச்சி விட்டுட்டானே அவன்…? படுக்குறா…புரளுறா …..சிரிக்கிறா….இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…ப்ரீத்தி சத்தமாகப் பாடினாள்.

    என்னாச்சுடி உனக்கு? காதல் கிறுக்கு பிடிச்சிருச்சா? போச்சு போ..நீ விழுந்துட்டே…இனிமேல் அவ்ளோதான். இத்தனை நேரமா எங்கெல்லாம் போனீங்க?

    நேரா பானர்கட்டா ரோட்ல இருக்குற ‘கோபாலன் இன்னோவேஷன் மால்’ தான் போனோம்….விஷுக்கு அங்க போகணும்னு ரொம்ப நாளா ஆசையாம். எனக்கும் பார்க்கணும்னு தான் இருந்துச்சு, சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

    ஒரே நாள்ல விஷ்ணு உனக்கு விஷுவாகிப் போனானா? சரி..அந்த ‘ஜெயதேவா ஃப்ளை ஓவர்’ பக்கத்துல இருக்கே அதுவா..? வாய் பிளந்தவள், அங்கெல்லாம் போனா நம்ம சொத்தை எழுதி வாங்கி நடுத்தெருவுல விட்டுருவாங்கடி…அவ்ளோ டெம்ப்டிங்கா இருக்குமே…..நானும் வந்திருப்பேன்…என்று அலுத்த குரலில் மெல்லச் சொல்கிறாள் ரேணுகா.

    நடந்து நடந்து செருப்பு ரெண்டு இன்ச் தேஞ்சு போச்சு.  ‘கார்டை’ இழுத்து இழுத்து ‘கத்தையும்’ கரைஞ்சு போச்சுடி …! ‘ஸ்வைப் பண்ணும்போது மஜாவா இருந்துச்சு…..வெளில வந்து மனசுக்குள்ள கணக்குப் போட்டதும், ‘பகீர்’ னுச்சு .

    க்ரெடிட்டா ….டெபிட்டா …?

    ஆத்திரத்தை  மூட்டாதடி….நானே……ஹி ……ஹி ……ஹி …….ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …!

    என்னடிது  பிரகாஷ் ராஜ் ஸ்டைல்ல…..சிரிக்கிற…? அவரு தான் டென்ஷன் வந்தா இந்த மாதிரி சிரிப்பாரு…உனக்கும் அது தொத்திக்கிச்சா என்ன..? கட்டிப்புடி வைத்தியம் தான் பண்ணணுமா …..? இல்ல பண்ணியாச்சா..?

    தேவுடா…தேவுடா…எழுமல தேவுடா…சூடுடா..சூடுடா…இந்தப் பக்கம் சூடுடா…! கட்டை தொண்டையில் பாடியபடியே  ரேணு…இன்டக்ஷனை  ஆன் பண்ணி பாலைச் சூடு செய்தாள். ” காலேல ஒன்பது மணிக்குப் போன பொண்ணு இப்படி ராத்திரி பத்தரைக்கு வந்து நின்னு,,பைத்தியமட்டமா சிரிச்சா….நான் எங்கிட்டுப் போவேன்…டீ …..பயமுறுத்தாதடி …பொழுது விடிஞ்சா டூட்டிக்கு போகணும். இப்படிச் சிரிச்சு கூத்தடிக்கும்படிக்கு அப்படி என்ன தான் ஆச்சு உன் டேட்டிங்கு…? கேள்வி கேட்டா இந்தச் சிரிப்பு சிரிக்கிற…?

    ஆஃபீஸ்ல அந்த விஷ்ணு உன்னை லோ லோன்னு  ஃபாலோ  பண்றான்னு எனக்கும் தெரியும்….நீயும் கண்டும் காணாத மாதிரி மனசுக்குள்ள ‘பல்பை’ எரியவிட்டுட்டு ரெக்கையெல்லாம் கட்டிக்கிட்டுப் பறந்து பறந்து உள்ளுக்குள்ளே புழுங்குறதும் எனக்குத் தெரியும்.அவன் சரியான ‘ட்யூப்’ டி. ப்ரீத்தி..! ஆமா…ஷாப்பிங் பண்ணினியே ஒரு கவரையும் காணோம்….எங்கியாச்சும் சிரிச்சுட்டே விட்டுட்டு வந்துட்டியா என்ன? என்னெல்லாம் வாங்கித் தந்தான் உன் விஷ்ணு?

    இதைக் கேட்டதும்…மறுபடியும் ஹி ஹி ஹி ஹி ஹி  என்று விட்டு நிறுத்தியவள்…..’உட்லண்ட்ஸ் ஷூ’… ‘ரெய்ட் & டேலர்’ல ரெண்டு செட் ஃபார்மல்ஸ் , கோபாலன் சினிமாஸ்ல போய்  ‘நோ ப்ராளம்” ஹிந்தி மூவி பார்த்துட்டு, ‘சாய் சிவ சாகர்ல’ ‘சவுத்  இந்தியன் ஃபுட்’ ஒரு கட்டு கட்டிட்டு , ‘பாஸ்கின் ராபின்ஸ்ல’ டெசெர்ட்….ம்ம்ம்…அமேசிங்….என்று ரேணுகாவின் வயிற்றில் நெய்யை ஊற்றினாள் ப்ரீத்தி.

    அடடா….அடடா…..என்று பாலை ஆத்திக்கொண்டே… எங்கே ஷூவைக் காமி..பாக்கறேன் ..! நீ ரொம்ப லக்கிடி..ப்ரீத்தி. சந்திச்ச முதல் நாள்லயே…லக்கி ப்ரைஸ் அடிச்சாப்பல இத்தனை வாங்கிட்டு வந்திருக்கே..? விஷ்ணு ரொம்ப நல்ல ஆள்டி …அவனை  கை நழுவ விட்டுடாதே. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் எல்லாம் வொய்ஃ ப்புக்கு எது வாங்கணும்னாலும் கணக்குப் பார்க்குறாங்களாம். எங்க அண்ணி சொல்லி வருத்தப்பட்டுச்சு. சரி நீங்க என்னென்ன பேசினீங்க…சொல்ல விருப்பப்பட்டா சொல்லு இல்லாட்டி வேண்டாம்…எனக்குத் தூக்கம் வருது….பிகு  பண்ணிக் கொண்ட ரேணுகா ”ய்ஷ்ஷ் ஷ் ஷ் ‘என்று டம்ப்ளரை உதட்டோடு வைத்து க் கொண்டு முகத்தை உயர்த்திக் கடைசி சொட்டுப் பாலை உறிஞ்சிக் குடித்தாள் .

    பேசினோம்….நிறைய….பேசினோம்….!அதாவது, அவங்களுக்கு கேரளாவுல திரிச்சூர் பக்கத்துல ‘சாலக்குடி’ ல ஒரு ஒட்டு வீடு சொந்தமா இருக்காம். கூடவே ரெண்டு தங்கச்சிகளாம். அப்பா இல்லியாம்…அம்மா மட்டும் தானாம். அம்மா ஒரு ஹார்ட் பேஷன்டாம்…தங்கச்சி ரெண்டு பேருக்கும் படிப்பு வராமால் பத்தாவதோட நிப்பாட்டி இப்போ வரன் பார்த்துண்டு இருக்காங்களாம்.வீட்டுல ரெண்டு பலா மரம், நாலு மாமரம், ஆறு தென்ன மரம், ஒரு சந்தன மரம் கூட இருக்காம்…!

    ரெண்டு நாய்….ஒரு டஜன் பூனை, பாம்பு….தேளு …இதெல்லாம் இருக்கறதா சொல்லவே இல்லியா…? இடைமறித்த ரேணு…நான் தான் சொன்னேன்ல….அவன் ஒத்து வரமாட்டான்னு….நீ சொல்றதைக் கேட்கும்போதே ஆஸ்பத்திரி வாடை வருது…பேசாமே கழண்டுக்க…!
    நீ அவுங்க வீட்டுக்குப் போனேன்னு வெய்யி…உன்னியும் சந்தன மரம் கணக்காத் தான் பார்ப்பானுங்க…அப்டியா விஷயம்….ஆளு நல்லா எடை போட்டுத் தான் வெரட்டிருக்கான்.

    கொஞ்சம் உன் ஸ்பீக்கரை மூட்றியா ?  அவன் அவனோட குடும்பத்தைப் பத்தி உண்மையைத் தான சொன்னான்….அப்படி இப்படின்னு பொளந்து கட்டி அளந்து பொய் சொல்லலியே. அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

    போச்சுடா…….! நீ கண்டிப்பா அக்மார்க் லூஸு தான்னு அவன் நினைச்சிருப்பான்டி .

    அப்பறம்?

    ம்ம்ம்ம்..என் குடும்பத்தைப் பத்திக் கேட்டான்..

    ஹோஹோ…..நீயும் சொல்லிருப்பியே…எங்கப்பா பெரிய டாக்டர், அம்மா ஒரு காலேஜ்ல பிரின்சிபால், நான் என் ஆத்துல ஒரே பொண்ணு,சென்னையில சொந்தமா போரூர்ல ரெண்டு பங்களா இருக்கு. பத்தாததுக்கு அப்பாவுக்கு ஒரு நர்சிங் ஹோம் வேற இருக்கு, நான் எஸ் ஆர் எம் காலேஜுல  என்ஜினீயரிங் ஐ.டி  முடிச்சுட்டு நேரா இங்க வேலைக்கு சேர்ந்தாச்சு…எடுத்த எடுப்புல முப்பதாயிரம் சம்பளம்…நீயும் இப்படில்லாம் ‘பீலா’ விட்டியா?.அப்டியே என்னைப் பத்தியும் சொல்லி வெச்சியா?

    போடி…இப்படியெல்லாம் சொன்னால் நான் ஏதோ என்னைப் பத்திப் பீத்திக்கிறேன்னு நினைச்சிட மாட்டானா..? அதனால அதெல்லாம் ஒண்ணுமே  சொல்லலை.

    அப்பறம்..?

    நானும் சாதாரண குடும்பத்துலேர்ந்து தான் வரேன்னு சொல்லி வெச்சேன்.

    இப்பத் தான் நீ புத்திசாலியா யோசிச்சிருக்கே..அவன் நினைச்சா மாதிரி நீ வசதியா இருக்கலைன்னு நினைச்சி இப்ப ஐயா கழண்டுக்கப் பார்த்திருப்பானே.

    அது தான் இல்லை…..”அம்மா….ரொம்ப நல்லதாப் போச்சு”ன்னு மட்டும் சொன்னான்.

    அப்பறம் என்ன தாண்டி நடந்துச்சு….?

    ரெண்டு பேருமா மூவி போனோமா, அங்கே ….

    அங்கே….?

    உன் மூஞ்சி….நெனைப்பைப் பாரு…இவ்ளோ கியூரியஸா…?

    படம் ‘ரொம்ப போர்’ன்னு சொன்னான். உடனே நானும், சரி…வா போகலாம்…எனக்கும் பிடிக்லைன்னு படத்துல பாதீலயே  கிளம்பிட்டோம். வெளிய வந்ததும், ஆயிரம் ரூபாய் தண்டம்…ன்னு சொல்லிண்டான். நானும் நினைச்சேன்..என்னோட ஒரு நாள் சம்பளம் கோவிந்தா….ன்னு. என்றாள்  ப்ரீத்தி.

    அவனோட காசு தானே..போட்டும்…இப்பவே நீ ஏன் கவலைப் படறே? .விடு.

    கடுப்பக் கிளப்பற பார்த்தியா….அம்புட்டும் என் துட்டுடி….! அவன்  பர்ஸையே தொறக்கலை. உன்னை மாதிரியே அவனும் அல்பம்…!

    சொல்ல மாட்டே…என் வண்டில பெட்ரோல் கீதா….இல்ல எம்டியா? அல்பத்துக்கே ஆப்பு வெய்க்கிறவ நீ..! சரி இது கிடக்கட்டும் நீ சொல்லு…நம்ம ஹீரோ பத்தி.

    அதான் சொன்னேனே…சுத்த ஜீரோ ன்னு..! அவன் ஷாப்பிங்ல ஒண்ணுமே வாங்கலை. இருந்தும் நான் தான் உனக்கு இது நல்லா இருக்கும்னு சொல்லி  இதை வாங்கிக்க….அதை வாங்கிக்க…ன்னு வாங்கினேன்…! விஷு வேண்டவே  வேண்டாம்னு தான் சொன்னான்.

    நீ…சுத்த ஏமாளி டீ …என்ன ஒரு பத்தாயிரத்தைப் பந்தாடியிருப்பியா?

    பாக்கியை யாரு ஆடுவா….? மொத்தம் இருபதாயிரம் ஆச்சு…!

    இந்த மாசம் வாடகையை முழுசும் நீயே கட்டிடு….! என்று வம்புக்கு இழுத்தாள் ரேணுகா..!

    எலி ஏரோப்பிளேன் ஓட்டச் சொல்லுதாக்கும்…? ப்ரீத்தி ரேணுகாவைப் பார்த்து கிளியின் குரலில் பேசினாள்.

    கேக்குறவ கேனையா இருந்தா, எலி கூட எலிகாஃப்டர் ஒட்டிச்சுன்னு சொல்லலாம்னு  தான் சொல்லுவாங்க…ம்ம்..அப்பறம் என்னாச்சுடி….எனக்குத் தூக்கம் வருது. சீக்கிரம் போன கதையைச் சொல்லி முடி.

    ரேணு……எப்படியும் எங்க வீட்ல எனக்கு ரொம்ப மும்முரமா மாப்பிள்ளை பார்க்குறாங்க, இல்லையா, இந்த நேரத்துல நானே விஷ்ணுவைப் பத்தி எங்க ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறான்னு சொல்லி விஷயத்தைச் சொன்னால் , எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரிசா எதிர்ப்பு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கு நாள் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.சரிதானே நான் சொல்லுறது?

    ஆமாம்…..கரெக்ட் தான்…ஆனால் நீ இப்படி ஊரைச் சுத்தினா….?

    வீட்ல பார்க்குற மாப்பிள்ளை கிட்டக் கூட கொஞ்சம் தனியாப் பேச அனுமதி கொடுப்பாங்க. அந்த நிமிஷத்துல நம்மால அவரைப் பத்தி என்னத்தப்  பெரிசா கண்டு பிடிச்சிட முடியும்?  அதனால தான் நானே விஷ்ணுவைத் தெரிந்தெடுத்தேன், ஆனாலும் எனக்கொரு டௌட்.
    அவனோட கொஞ்ச நாள் பழகிப் புரிஞ்சுண்டா நாளைக்கே ஃபியூச்சர்ல எந்தப்  ப்ராப்ளம் வந்தாலும் அதுக்கு நானே பொறுப்புன்னு சொல்லிக்கலாம்.அதனால தான் இந்த டேட்டிங்க்கு நானும் சரின்னு கிளம்பினேன்.

    ஆனா…

    விஷு எதுக்குமே ஒரு காசு கூட செலவு செய்யலைடி …ஒரு கிஃப்ட் கூட வாங்கி இந்தான்னு தரத் தோணலை. என்னைப் பத்தி எதுவுமே சரியாக் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. பூரா பூரா அவன் வீட்டுப் புராணம் தான். நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்…இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு.  இதுல ஒரு ஜோக் என்ன தெரியுமா?

    ம்ம்ம்……என்ன?

    கிளம்பும்போது சொல்றான்….’என் தங்கையோட ஷாப்பிங் வந்த ஒரு ஹாப்பினெஸ் இருக்குன்னு’ அப்படியே,  தாங்கியூ  ஃபார் யுவர் கிஃப்ட்ஸ்…ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.

    அடப்பாவி…! ரேணுகா திறந்த வாயை மூடாமல் நின்றாள். வெச்சானா உனக்கு சரியான ‘ஆப்பு’.

    நல்ல வேளை ……விஷுவைப் பத்திப் புரிஞ்சுண்டேன்….இல்லாட்டி அவன் பாக்குறான்…பாக்குறான்னு …ஒரு ‘இது’ வை டெவெலப் பண்ணிக்கிட்டு பிரச்சனையில் விழறதுக்கு முந்தி,  நல்லவேளை தப்பிச்சேன். இப்பக் கூட அவனைப் பாக்கும்போது அவன் கடைசில சொன்ன வார்த்தை மட்டும் தான் மனசுல நிக்கும்…சொல்லிக் கொண்டே….. னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா..என்று சந்தோஷமாகப் பாடும் ப்ரீத்தியுடன் இணைந்து ரேணுவும் பாடுகிறாள்.

    தனது அறையை நோக்கி வண்டியில் சென்று  கொண்டிருகந்த விஷ்ணுவுக்கு மனசுக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தது.
    “எத்தர தான் நன்னாயிட்டுச் சம்பாதிச்சாலும், இப்படியா செலவு செய்வா? பணத்தைப் பத்தின ஒரு பிரக்ஞையே இல்லாமே கண்டதெல்லாம் வாங்கி பணத்தை தண்ணியா செலவு செய்து, அம்மா, தங்கைகள், நான் கூட இப்படி எல்லாரும் நம்மாத்தில் ஒருமிச்சு ரொம்ப சிக்கனமா இருக்கச்சே.இவள் மாத்ரம்  இப்படி ‘தூம்தாம்’ பண்ணினா, கண்டிப்பா பிற்பாடு பல பிரச்சனை தானாத் தேடி வரும்.நல்லவேளையா, ரூம்மேட் ராகுல் கொடுத்த ஐடியாப் படி ‘இந்த முதல் சந்திப்புலயே’ டீசண்டா கழண்டுக்க முடிஞ்சது. ரூமுக்குப் போனதும் அம்மாவுக்கு கடுதாசி, சிக்கனமா இருக்கத் தெரிஞ்ச ஒரு பொண்ணைச் சீக்கிரமாப் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி  எழுதி வைக்கணம், என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறான்.

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Share
  • குறளின் கதிர்களாய்… (18)

      செண்பக ஜெகதீசன்hay-index

     

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

    வைத்தூறு போலக் கெடும்.

    -திருக்குறள்- 435 (குற்றங்கடிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    எளிதில் பற்றி

    எரிந்து சாம்பலாகிவிடும்

    தீயின்முன் வைக்கோல்..

     

    தெரிந்திடு இதை,

    குற்றம்

    வருமுன்னே காத்திடு

    வாழ்க்கையைக் காத்திட,

    வைக்கோலாய் அழியுமுன்னே…!

     

    குறும்பாவில்…

     

    தீமுன்னே வைக்கோலாய் அழிவு,

    குற்றம் வருவதற்குள்

    காத்திடாதார் வாழ்வு…!

     

          மரபுக் கவிதையில்…

     

    எரியும் தீயின் முன்பிருந்தால்

    எரிந்தே சாம்பலாய் வைக்கோலும்

    திரிந்திடும் கதைதான் தெரிந்ததுவே,

    தேவை இக்கதை இக்கணம்தான்

    வருத்திடும் குற்றம் வருமுன்னே

    விரைவாய்க் காத்திடு வாழ்வதையே,

    அருகில் வந்தபின் அழுதாலும்

    அழிந்திடும் வாழ்வெனும் வைக்கோலே…!

     

    லிமரைக்கூ…

     

    முன்விழுந்த வைக்கோலை எரித்திடுமே தீ,

    முன்காத்திடா குற்றமது

    முடித்திடும் மனிதவாழ்வை தெரிந்திடு நீ…!

     

    கிராமியப் பாணியில்…

     

    காத்திடுநீ காத்திடு- கொடுங்

    குத்தம் வருமுன்ன காத்திடு..

     

    குத்தம் வந்தா வாழ்வழியொம்- மனுச

    வாழ்வழியொம்,

    குத்தம் வந்தா கெட்டழியொம்- எல்லாம்

    கெட்டழியொம்..

     

    தீக்க முன்ன வக்கோலுபோல

    தீஞ்சழியொம்- வாழ்க்க

    தீஞ்சழியொம்..

     

    அதால,

    காத்திடுநீ காத்திடு- கொடுங்

    குத்தம் வருமுன்ன காத்திடு…!

     

    படத்துக்கு நன்றி

     http://olegvolk.net/newsite/texturelibrary/textures-artificial.html 

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • சிரித்தாலும் கண்ணீர் வரும்.. அழுதாலும் கண்ணீர் வரும்..- கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..

    அழுதாலும் கண்ணீர் வரும்..

     

    மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

    பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

    குழந்தை உள்ளம்..
    கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி
    கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம்
    காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..

    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    (ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) …

    தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!

    திரைப்படம் – பெண் என்றால் பெண்
    பாடல் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல்கள் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..
    அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும்
    பிரிவினிலே அழுகை வரும்
    அழுதாலும் சிரித்தாலும்
    சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
    குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..
    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

    கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மௌனமே மிகச் சிறந்த தவச்செயல் என்பதற்கு நிறையக் காரணம் சொல்லலாம் போல. பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது கூட மௌனத்தை விட சிறந்த பதில் ஏதுமில்லை. அது போல மௌனத்தை விட கடினமான செயலும் ஏதுமில்லை. சும்மா இரு, சொல்லற’ என்று சும்மாவா சொல்லிச் சென்றார்கள் பெரியவர்கள்? மௌனமாக இருப்பது என்பது மனிதனால் அவ்வளவு எளிதான செயலாக எப்போதும் இருந்ததில்லை.

    மனிதனுக்கு ஆதியில் எப்போது பேசும் சக்தி கிடைத்ததோ அப்போதிலிருந்து தன் பிராண சக்தியில் பாதி பலம் இழந்துவிட்டானோ என்றும் படுகிறது. எல்லோருக்கும் பேசத் தெரியுமென்பதால் பேசிப் பேசியே நாட்டைக் கெடுத்து தானும் கெட்டவர்கள் பலபேர். சும்மா இருப்பதால் சுகம் அதிகம் என்பதோடு பேசினால் கெடுதலே அதிகம் என்பதை உணர்ந்தவர் பெரியோர்கள்.

    ஆகையினால் மௌனத்தில் சக்தி அதிகம். மௌனத்தால் கிடைத்த சக்தியைப் பயன்படுத்தியே ஆதிகாலத்தில் நம் சனாதன தர்மத்தை நம் முன்னோர்களான ரிஷிகள் நிலைநிறுத்தினார்கள் என்று சொல்வர். காஞ்சிப் பெரியவர்களின் மௌன விரதமும், ஸ்ரீரமண மகரிஷிகளின் மௌன விரதமும் பல பயன்களைப் பெற்றுத் தந்தன என்பதை மறுக்கமுடியுமா.. பிரபல தத்துவாசிரியர் பால் பிரண்டன் எப்படி வாய்மூடி மௌனமாக இருந்த ரமணமகரிஷியின் கண்களிலிருந்தே குருபோதனை தன்னை நோக்கி வந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். காதலிலும் மௌனம் பேரங்கம் வகிக்கிறது. வாய்பேசுவதை விட மௌனத்துக்கு காதலில் பலவகைப் பதில்கள் காணலாம் என்பதை திருக்குறளிலிருந்து கம்பராமாயணம் வரை பல நூல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மௌனத்தின் பேரழகையும் பேராற்றலையும் வர்ணிக்கும் கவிதையொன்று:

    மௌனத்தின் பாடல்:

    சொற்கூச்சல் பொழுதுகளில்Fakhrudeen (Ibnu Hamdun)
    உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
    நேசத் தென்றல் வீசும் இதயங்களை
    வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
    காலக் காற்று
    தலைமுடி கலைக்கையில்
    சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
    வார்த்தைகள் புதைந்த
    வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
    முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
    ஒரு தவம் போல் நீள்கிறாய்
    வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
    ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

     

    அறியாமையின் நர்த்தனத்தை
    ஏளனப் பார்வையால் வீழ்த்தி
    மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
    புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
    குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
    நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
    அவ்வப்போது நாற்றமெடுக்கும்
    ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
    பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
    வாழ்வாங்கு வாழ்கிறாய்.

    பின்
    பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
    ‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

    அந்தக் கடைசி இரண்டு வரிகளில் பேச்சுகள் வெடித்தெழும் தருணத்தையும் மௌனத்தின் மரணத்தையும் எளிமையாகவும் அருமையாகவும் விவரித்த திரு இப்னு ஹம்துன் அவர்களின் கவிதைக்காக இந்தவார வல்லமையாளர் விருது பெறுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு அண்ணா கண்ணனின் தொலைக்காட்சி கவிதை

    பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
    நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு

    வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
    முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு

    Share
  • எது வெற்றி?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கடந்த ஒரு மாதமாக நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானி கோர்பகாடே சம்பந்தப்பட்ட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  இதில் யாருக்கு வெற்றி?  அமெரிக்கா தனக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளவில்லை.  ஆனால் இந்தியாவில்தான் பல தரப்பு அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியா கொடுமைக்கார அமெரிக்காவை வென்றுவிட்டதாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.

    அமெரிக்க நாட்டுச் சட்டப்படி அமெரிக்கா நடந்துகொண்டிருக்கிறது.  கோர்பகாடே தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கு விசா வாங்கும் வகையில் பல பொய்கள் சொல்லியிருக்கிறார்.  விசா விண்ணப்பத்தில் வாரம் ஒரு முறை விடுமுறை கொடுப்பதாகவும் உடல்நலமில்லாமல் இருக்கும்போதும் விடுமுறையில் பிரயாணம் செய்யும்போதும் எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாட்களிலும் சம்பளம் கொடுப்பதாகவும் அதுவும் மணிக்கு 9.5 டாலர் கொடுப்பதாகவும் வாரத்திற்கு நாற்பது மணி நேரமே வேலை வாங்குவதாகவும் அதற்கு மேல் அந்தப் பெண் வேலைசெய்ய நேரிட்டால் ஓவர்டைம் சம்பளம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த விதிகள் எல்லாம் அமெரிக்கச் சட்டப்படி வீட்டில் வேலைசெய்பவர்களுக்கு அவர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.  இப்படி ஒப்பந்தம் போட்டால்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தன்னுடன் வீட்டுவேலைக்குக் கூட்டிப் போகும் பெண்ணுக்கு விசா வாங்கலாம் என்பதால், முதல் ஒப்பந்தத்தில் தானும் கையெழுத்திட்டு அந்தப் பெண்ணையும் அவருடைய கணவரையும் கையெழுத்திட வைத்திருக்கிறார்.

    விசா வாங்கி முடித்த பிறகு அந்தப் பெண்ணோடு இன்னொரு ஒப்பந்தம் தயார்செய்திருக்கிறார்.  அதில் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை எல்லாம் மீறி செயல்பட்டிருக்கிறார்.  இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மணிக்கு 3.3 டாலர் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.  ஆனால் எத்தனை மணி நேரம் வேலைசெய்ய வேண்டும், ஓவர்டைம் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை.  ஒரு வேளை வேலைக்குக் கூட்டிவந்த பெண் பின்னால் தன் மேல் வழக்குப் போட்டால் இருக்கட்டும் என்று இரண்டாவது ஒப்பந்தத்தைத் தயாரித்திருக்கிறார்.  அதிலும் அந்தப் பெண்ணின் கையெழுத்தையும் அவர் கணவரின் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார்.  அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டாவது ஒப்பந்தத்தில் கூறியவை சட்டப்படி தவறானவை.  அதனால் அது மிகப் பெரிய குற்றம்.   அமெரிக்காவில் சட்டம் எல்லோருக்கும் பொது.  அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்று சட்டத்தை வேண்டும்போல் வளைக்க முடியாது.

    இந்தியாவில் சட்டம் செயல்படும் முறை இதற்கு மாறானது.  பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்.  அதற்கு மேல் இருக்கவே இருக்கிறது லஞ்சம்.  யாரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம்.  இது இந்தியாவின் தலைவிதி.  அதுவும் ஏழைகளை எப்படியும் நடத்தலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது.  மணிக்கணக்கில் சம்பளமா? வாரத்திற்கு ஒரு முறை விடுமுறையா?  உடல்நலக்குறைவு என்றால் அதற்கும் வேலைக்காரர்களுக்குச் செலவழிக்கவேண்டுமா?  இதெல்லாம் இந்தியாவில் கேள்விப்படாத விஷயங்கள்.  அதனால்தான் வேலைசெய்ய அழைத்துச்சென்ற பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஒன்றும் பேசாமல், இந்திய தூதரகத்தில் வேலைபார்த்த ஒரு பெண் தன் சொந்த விஷயத்தில் செய்த சட்ட மீறலைக் கண்டிக்கத் துணிந்த அமெரிக்க அரசின் சட்டத்துறையின் செயலை ‘அமெரிக்கா இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது’ என்று எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் குறை கூறுகிறார்கள்.  பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழியினர் ஒருவர் கோப்ரகடேவை அமெரிக்கா நடத்தியது சரியில்லை என்று கூறியிருக்கிறார்.  எத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மனப்பாங்கு அவரிடம் இன்னும் இருப்பது வேதனை தருகிறது.

    இந்தியாவுடனான தன் உறவு இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இதை இப்படியே இழுத்துக்கொண்டு போக வேண்டாம் என்பதற்காகவும் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்தது.  தங்கள் சட்டப்படி குற்றம் செய்த கோப்ரகடேயை குற்றம் புரியவில்லை என்று சொல்லவும் விரும்பவில்லை; அதே நேரத்தில் கோப்ரகடேயின் மீது வழக்கைத் தொடர்ந்து இந்திய அரசுக்கு மேலும் வெறுப்பேற்றவும் விரும்பவில்லை.  இதனால்தான் கோப்ரகடேயை நாட்டை விட்டே வெளியேற்றுவது என்று முடிவுசெய்தது.  கோப்ரகடேயை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு அதிகாரி, ‘இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம்’ என்று சொன்னதற்கு கோப்ரகடே, ‘நீங்கள் ஒரு நண்பரை இழந்துவிட்டீர்கள்.  பதிலாக ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அவளுடைய கணவனான ஒரு குடிகார டிரைவரையும் பெற்றிருக்கிறீர்கள்’ என்றாராம்.  குற்றம் புரிந்த கோப்ரகடேக்கு, தன்னுடைய குற்றத்தை வெளிக்குக் கொண்டுவந்த பெண்ணை விட தான் அந்தஸ்தில் மேலானவள் என்ற அகங்காரம் இருக்கிறது.  அதனால்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.  கோப்ரகடே வீட்டில் வேலைசெய்ய வந்த பெண் தலைமறைவாகி இவர் மேல் புகார்கொடுத்ததும் இந்தியாவில் இருந்த அந்தப் பெண்ணின் கணவரை மனைவியின் இருப்பிடம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார்கள் கோப்ரகடேயின் உறவினர்கள்.  இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    கோப்ரகடே தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.  அப்படித் தவறே செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி அதை நிரூபித்திருக்கலாமே.  ஏன் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்க வேண்டும்?

    இப்படி வந்தவருக்கு விமானநிலையத்தில் அப்படி ஒரு வரவேற்பாம்.  அவரை வரவேற்க வந்த அவர் தந்தை பத்திரிக்கையாளர்களை நோக்கி ‘எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்.  120 கோடி மக்கள் ஒன்று சேர்ந்தால் நியாயம் கிடைத்தே தீரும்’ என்று பேசியிருக்கிறார்.  கோப்ரகடே அமெரிக்கச் சட்டத்திற்குப் பயந்து இந்தியாவுக்கு ஓடி வந்ததா இந்தியாவின் வெற்றி?  மேலும் தன்னையும் தன்னுடைய மகளையும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டனவாம்.  அவர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருக்கிறதாம்.  குற்றம் புரிந்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட ஒருவரையும் அவரது தந்தையையும் ஆளும் வர்க்கத்தில் சேர்க்க இந்திய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.  என்னே இந்தியப் பண்பாடு?

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (7)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ரிச்யமுக மலையில் அச்சத்தோடு காத்திருந்த சுக்ரீவனுக்கு அனுமன் ராம லக்ஷ்மணர்களை அறிமுகம் செய்வித்து ”இவர்கள் ஸீதாதேவியை அரக்கன் ராவணனிடமிருந்து மீட்க தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறார்கள்” என்று பகர்ந்தான். அச்சம் நீங்கிய சுக்ரீவனும் தான் வாலியிடம் பட்டபாடு அனைத்தையும் விவரித்தான்..

    …..நானும் அண்ணன் வாலியும் ரத்தபாசத்தோடு கிஷ்கிந்தையில் வாழ்ந்த நாட்களில் பலசாலியான மாயாவி என்னும் அரக்கன் வாலியை மல்யுத்தத்திற்கு அழைத்தான். இருவருக்குமிடையே நடந்த உக்கிரமான போரில் இருவரும் ஒரு குஹைக்குள் நுழைந்தனர். அண்ணன் என்னை வெளியே காத்திருக்கச் சொன்னான். நாட்கள் உருண்டோடின. ஒருநாள் குஹையிலிருந்து பெருகிவந்த குருதியைப் பார்த்து வாலியை மாயாவி கொன்றுவிட்டான் எனக்கருதி அவ்வரக்கன் வெளியே வராதபடி அக்குஹையை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு நகர் திரும்பினேன். வானர மூத்தோர் கேட்டுக்கொண்டபடி கிஷ்கிந்தை அரியணை ஏறினேன். திடீரென ஒரு நாள் வாலி நாடுதிரும்பி என்மீது சினம் கொண்டு, ‘மோசக்காரா, என்னைக் குஹையில் அடைத்துவிட்டு என்னரசை கைப்பற்றிவிட்டாயா’ என்று கூறி என்னை நையப்புடைத்து, ‘இனி உன் உறவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி என் மனைவி ருமையையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டே துரத்திவிட்டான். நானும் ஏனைய அமைச்சர்களும் எவ்வளவு விளக்கியும் வாலியின் கோபம் அடங்கவில்லை. மேலும் நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தான். முன்பு துந்துபி எனும் அரக்கனைக் கொன்றபின் வாலி தன் காலால் அந்த சவத்தை உதைத்தபின் அது அருகாமையில் உள்ள மதங்கரின்  ஆசிரமத்தில் வந்து வீழ்ந்த்து. அதனால் சினம்கொண்ட அம்முனிவர், ‘எவனால் இப்புனித ஆசிரமம் கறையடைந்ததோ அவன் இம்மலையில் அடியெடுத்து வைத்தால் அவன் தலை சுக்குநூறாக உடையக்கடவது’ என சாபமிட்டார். அதனால் இங்கு வாலி வரமுடியாது. ஆகவே நான் இங்கு ஒளிந்து வாழ்கிறேன்…

    “ராமா! நம்மிருவர் சோகமும் சமமாக இருப்பதால் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். முதலில் நீங்கள் வாலியைக் கொன்று என் ருமையை மீட்டுக் கொடுத்தபின், நான் உங்களுக்கு ஸீதாதேவியை மீட்க உதவுகிறேன்” என்றான் சுக்ரீவன்.

    “அப்படியே” என்றான் ராமன். பின்னர் அவர்கள் இருவரும் அக்கினி சாட்சியாக நட்பு செய்துகொண்டனர். அதேநேரத்தில் இலங்கைச் சிறையில் உள்ள ஸீதை, வாலி மற்றும் அரக்கர்கோன் ராவணன் இம்மூவரின் இடது கண்களும் துடித்தன.

    இருந்தாலும் சுக்ரீவனுக்கு ’ராமனால் மகாபலம் பொருந்திய வாலியை வதம் செய்யமுடியுமா?’ எனும் ஓர் ஐயம் ஏற்பட்டது. மலைப்பகுதியில் கிடந்த துந்துபியின் எலும்புக்கூட்டினைக் காட்டி, ”தொலை தூரத்தில் உள்ள கிஷ்கிந்தையிலிருந்து வாலி தன் காலால் அவ்வரக்கனின் சடலத்தை இங்கு விழச்செய்தான். அத்தகைய பலசாலி என் அண்ணன்” என்றான். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராமன் தன் வலது கால் கட்டைவிரலால் அந்த எலும்புக்கூட்டினை பல யோசனை துரத்திற்கப்பால் விழச்செய்தான். “இது இப்போது காய்ந்துபோன எலும்புக்கூடல்லவா?” என்று கூறிய சுக்ரீவன்மீது சினம் கொள்ளாமல், “நண்பா, உன் ஐயப்பாடு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்தால் உனக்கு என் பராக்கிரமத்தின்மீது நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராமன்.

    சுக்ரீவன் அம்மலையில் வளர்ந்திருக்கும் ஏழு மரா மரங்களைச் சுட்டிக்காட்டி, “சிறுவயதில் நானும் அண்ணனும் இங்கு விளையாட வருவோம். அப்போதெல்லாம் வாலி ஒரு மரத்தைப் பற்றி  வேகமாக ஆட்டுவான். உடனே ஏனைய மரங்களும் புயலில் சிக்கியதுபோல் ஆடும். அப்படிப்பட்ட வல்லவன் வாலி” என்றான்.

    முகத்தில் இளநகையோட ராமன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய, ஒரே சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக இருந்த அவ்வேழு மரங்களும் சடசடவென சாய்ந்தன. மகிழ்ச்சியில் திளைத்த சுக்ரீவன், “ராமா என்னை மன்னியுங்கள். வாலியின் வலிமையை  நன்கறிந்த நான் அதனை உங்களுக்குச் சொல்ல முற்பட்டேன்” என்று கூறி அவன் அடிபணிந்தான்.

    அவ்வளவில் அம்மரங்களின் வேரடியில் உறங்கிக் கொண்டிருந்த வாசுகி என்னும் அரவரசன் எழுந்து ராமன் கண்களுக்கு மட்டும் தெரிந்தவாறு, “அண்ணலே, கிருத யுகத்தில் அமிர்தத்திற்காக பாற்கடலில் வடவரையை மத்தாக்கி என்னை நாணாக்கிக் கடைந்தபோது, என் உடலில் ஏற்பட்ட காயங்களைத் தங்கள் திருக்கரத்தின் ஸ்பர்சத்தினால் ஆறவைத்தீர்கள். அப்போது நான் என் களைப்பு நீங்க உறங்க ஒரு இடம் தேவை என்றேன். ‘யாரும் சுலபமாக நெருங்க முடியாத ரிச்யமுகத்தில் உறக்கம்கொள். அடுத்த திரேதா யுகத்தில் நான் மானிடனாக ராமன் எனும் பெயரோடு அவதரித்து அங்கு வருவேன். அந்த ராமன் வரும் வரை காத்திரு. நெளிந்திருக்கும் உன் உடல்மீது ஏழு மரா மரங்கள் வளர்ந்து எனக்கு அடையாளம் காட்டியவாறு நிற்கும்  (அதனால்தான் வாலி ஒரு மரத்தை ஆட்டும்போது வாசுகியின் நெளிவால் இதர மரங்களும் ஆடின). உன்மீது வளர்ந்த அம்மரங்களை நான் வீழ்த்தியதும் நீ களைப்பு நீங்கி உன் இடத்திற்குச் செல்லலாம்’ என்றீர்கள். உங்கள் கருணைக்கு நன்றி. இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று கூறி வணங்கி தன்னிடம் சேர்ந்தான்.

    வாசுகி அகன்றதும், ராமன், “சுக்ரீவா, இனி தாமதிக்க வேண்டாம். நாளை காலை நீ வாலியை வலுச்சண்டைக்கு இழு. நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும்போது நான் வாலியைக் கொல்கிறேன்” என்றான்.

    அப்படியே சுக்ரீவன் செய்ய, ராமன் சற்று ஆலோசனையில் விழுந்த அளவில் வாலி சுக்ரீவனை பலவாறு தாக்கி மண்ணில் புரட்டி எடுத்தான். அடிபட்ட இளவானரன் அலறியடித்துக் கொண்டு ராமனிடம் ஓடி வந்து, “உன்னால் வாலியைக் கொல்ல முடியாதென்றால் எதற்கு என்னை ஏவிவிட்டாய்? நான் பேசாமல் இங்கேயே இருந்திருப்பேன் அல்லவா?” என்று குரோதம் பொங்கக் கதறினான்.

    ராமன் அவனை பரிவோடு தடவிக்கொடுத்து, “நண்பா, என்னை மன்னிக்கவேண்டும். இதற்கு முன் நான் வாலியைப் பார்த்ததில்லை. இரட்டையாரான நீங்கள் ஒரே உரு கொண்டிருப்பதால் என்னால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது லக்ஷ்மணன் உனக்கு ஒரு மலர்க்கொடியை மாலையாக அணிவிப்பான். இந்த வித்யாசத்தால் நான் வாலியை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டு அவனை வீழ்த்துகிறேன் பார்” என்றான்.

    சுக்ரீவன் வாலியை மீண்டும் யுத்தம்புரிய விளித்தான். மனைவி தாரை தடுத்தும் கேளாமல் வாலி வெளிவந்து சுக்ரீவனோடு மல்யுத்தம் செய்தபோது ராமனின் அம்பு கிஷ்கிந்தை மன்னனைத் தாக்கி வீழ்த்தியது. தன்னைக் கொல்ல வல்லவன் யார் என்று நினைத்து அந்த அம்பினை வாலி நோக்கியபோது, கம்ப நாட்டாழ்வார் வர்ணிப்பது போல்,

    மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

    இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

    செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்.

    [மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயே இனிவரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, தான் தனியே தடுக்கவல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான ‘இராம’ என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்]

    உடனே சினம் மேலோங்க, “மறைவிலிருந்து கொல்வதுதான் சத்யபராக்கிரமனான உன் தர்மமோ?” என்று வாலி பரிகசித்து ராமன்மீது வசைமாரி பொழிந்தான். பின்னர் இருவருக்கும் நடந்த வாக்குவாத முடிவில் வாலி தன் பிறன் மனைவியைக் கவர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, “ராமா, நாங்கள் வானரர்கள். தவறு செய்வது எங்கள் இயல்பு. வருங்காலத்தில் என் தம்பி தவறேதேனும் செய்தால் அவன்மீது இதே அம்பை எய்துவிடாதே. அவனுக்கும் என் மகன் அங்கதனுக்கும் இனி நீதான் காப்பு” என்று சொல்லி உயிர் நீத்தான்.

    (​தொடரும்)

    Share
  • பூ மரம்கூட புது தினுசுதான்

    நிர்மலா ராகவன்

     

    விமானத்தில் தனது இருக்கையைத் தேடியபடி, மேலே இருந்த எண்களைப் பார்த்தபடி நடந்தாள் சுபத்ரா.

    அவள் ஒருவழியாக அமர்ந்ததும், பக்கத்திலிருந்தவர் புன்னகையுடன் அவளை வரவேற்றார்.

    “ஸ்டேட்ஸுக்கா?” அனாவசியமாகக் கேட்டாள். கோலாலம்பூரில் புறப்பட்டால், அந்த மாஸ் விமானம் அங்குதான் போகிறது — வழியில் ஒரு மணி நேரம் துபாயில் நிற்பதைச் சேர்க்காவிட்டால்.

    தலையை ஆட்டினார் அந்த இளைஞர்.

    “நானும்தான்!” என்றாள் பெருமையுடன். “ என் பெண் — ஒரே பெண்தான் எனக்கு — அங்கே போய் பத்து வருஷமாச்சு…,“ முதன்முறை விமானப் பயணம் என்பதால் உண்டான படபடப்புடன் மூச்சு விடாமல் பேசினாள் சுபத்ரா.

    ஏதோ, மரியாதைக்குச் சிரித்துவைத்தால், வரப் போகும் இருபது மணி நேரத்திற்குமேல் இவள் பேசித் துளைத்து விடுவாளோ என்ற பயம் எழுந்ததோ, என்னவோ, அவள் பக்கம் திரும்பாது, முன்னிருக்கையின் பின்பகுதியிலிருந்த பையைத் துழாவி, விமானத் தொலைகாட்சியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டார் சகபயணி.

    சுபத்ரா கைப்பைக்குள் எதையோ தேடி எடுத்தாள். வெளிர் நீலக் காகிதம் — விமானத் தபாலில் வந்த வேற்று நாட்டுக் கடிதம் என்பதைப் பறைசாற்றியது. இரண்டே வாக்கியங்கள் தாம்:

    அன்புள்ள  அம்மா,

    இத்துடன் ஒரு டிக்கட் அனுப்பி இருக்கிறேன். முதலில் விசா எடுத்துக் கொள்ளவும்.

    சாரு

    பத்து வருடங்களாக அவள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்பதுகூடத் தெரியாது. தான் தவித்த தவிப்பு மகளுக்குப் புரிந்திருக்குமா? எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாகத்தான் இப்போது — தாயின் கடைசிக் காலத்தில் — அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ளத் தோன்றியிருக்க வேண்டும்.

    கடந்து போனதை நினைக்கும்போது, கோபமோ, வருத்தமோ எழவில்லை. எத்தனையோ அழுதாகிவிட்டது. மனம் மரத்துப் போயிருந்தது. என்ன நடக்கும், ஏன் நடந்தது என்பதே புரியாததுதான் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருந்தால், அமைதி கெடுவதுதான் மிச்சம். மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம். ஐம்பது வருட வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்த பாடம் அது.

    கைக்குழந்தையுடன் பூவிழந்து நின்றிருந்தவளைத் தன்னுடன் சிற்றூரில் வைத்துக்கொண்டால், அவள் சமூகத்தின் வாயினாலேயே சிறுகச் சிறுகச் சாகடிக்கப் படுவாள் என்று புரிந்துகொண்டிருந்த தந்தை செய்த உபகாரம் அவளை நகர்ப்புறத்தில் இருந்த ஹாஸ்டலில் சேர்த்து, மேற்படிப்பு படிக்கவைத்தது. உத்தியோகம் கிடைத்து, ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தாள். வயிற்றுப்பாட்டைச் சமாளிக்க முடிந்தது. ஆனால், இருபத்து இரண்டே வயதாகி இருந்தவளின் உணர்வுகளால், `உன்னை அனுபவிக்க கணவன் இல்லை. எல்லா ஆசாபாசங்களையும் துறந்துவிட்டு, கருமத்திலேயே கண்ணாக இருந்து, போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்!’ என்னும் எழுதப்படாத நிர்ப்பந்தத்தை ஏற்கத்தான் முடியவில்லை.

    அவளுடைய வீட்டின் ஓர் அறையில் குடியிருந்தான் அவன். “நீங்க வீட்டு வேலை செய்யறப்போ, பாப்பாவை நான் பாத்துக்கிறேன்! ரொம்ப திண்டாடறீங்களே! எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!” என்று வலிய வந்து நட்பு கொண்டபோது, அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. தனியாளாக இருக்கிறான், பாவம்! அதுதான் பிறருடைய ஆதரவு வேண்டியிருக்கிறது என்றுதான் எண்ணினாள்.

    “சாருக்குட்டி ஒங்க சாயல் இல்லீங்க. அவங்கப்பா மாதிரியோ?” என்பான் கலகலப்பாக.

    `அவருடைய முகம்கூட எனக்குச் சரியாக நினைவில்லை!’ என்று சொல்லவா முடியும்!

    “குழந்தைக்கு உடம்பு இப்படி கொதிக்குதே! இனிமே டாக்ஸி பிடிச்சு, டாக்டர்கிட்ட போக நேரமாகிடும். வாங்க! என் பைக்கில போகலாம். அட, ஆபத்துக்குப் பாவமில்லீங்க!” அவனுடைய வற்புறுத்தலில் அவளுடைய தயக்கம் சிறிது குறைந்தாலும், அவன் தோளில் ஒரு கை பதிக்கையில் சுபத்ராவின் உடல் லேசாக அதிர்ந்தது.

    “குழந்தைக்கு டிப்தீரியா. கொஞ்சம் தாமதமா வந்திருந்தா..,” என்று டாக்டர் பயமுறுத்தியபோது, ஆபத்பாந்தவனாக  வந்த அவன்மேல் நன்றி சுரந்தது. தனக்கு நெருங்கியவன் என்று தோன்றிப் போயிற்று.

    அதை உணர்ந்தவனாக அவனும், “இந்தக் காலத்திலே யாராவது ஒங்கமாதிரி எப்பவும் வெள்ளைப் புடவையே கட்டுவாங்களா? அப்படி என்ன வயசாகிடுச்சு ஒங்களுக்கு, ஒலகத்தையே துறக்க?” என்று உரிமையுடன் கோபித்தான்.

    பல வருடங்களுக்குப்பின், முதன்முதலாக நீலவண்ணப் புடவை அணிந்தபோது, பயமும் வருத்தமும் மகிழ்வும் கலந்து வந்தன. பட்ட மரம் புத்துயிர் பெற்றது போலிருந்தது.

    எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டதும், விழிகள் விரிய நின்றான். “நீங்களா! யாரோன்னு நினைச்சேன்!”

    சுபத்ராவுக்குப் பெருமையும், வெட்கமுமாக இருந்தது.

    மறுநாள் அவள் வேலைக்குப் புறப்பட்டபோது, “வாங்களேன்! நானே கொண்டு விடறேன்,” என்று அவன் அழைத்தபோது, ஏனோ மனம் துள்ளியது. அவனுடைய குட்டையான, குண்டு உடலுக்கு அப்பால் இருந்த எதுவோ அவளை அவன்பால் ஈர்த்தது.

    `பஸ்ஸில் கும்பலில் இடிபட்டுக்கொண்டு, பலரும் உரசப் போகும் கண்ராவிக்கு இது தேவலை!’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.  அவளது கை தோளில் பதிந்தபோது, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்.

    அவர்கள் உறவில் எப்போது, எப்படி நெருக்கம் ஏற்பட்டது என்றெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது மனக்குமுறலை வாய்திறவாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் ஆதரவுடன் அவன் ஏதாவது சொல்வதைக் கேட்கும்போது, வாழ்க்கை அவ்வளவு தனிமையாக, வறண்டதாக இல்லை.

    அவனுடைய அணைப்பில் படுத்திருக்கும்போது எழுந்த குற்ற உணர்ச்சி கோபமாக மாறியது. தன்னை இப்படி நிராதரவாக விட்டுப்போனது அகாலமாக மறைந்த கணவனின் குற்றம்.

    விவரம் தெரிந்த நாளாய், ஒரு பெண் தனியாக வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, ஒப்புக்கு தம்பியையாவது துணைக்கு அனுப்பிய தாயின் குற்றம்.

    `ஆண்கள் சாப்பிட்டபின்தான் பெண்கள் சாப்பிடலாம்; ஆண்கள் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது; அவர்கள் செய்வது தப்பாகத் தோன்றினாலும், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடாது; ஆண்கள் பிற பெண்களை மட்டம் தட்டினால், அதை ஆமோதிப்பதுபோல் சிரித்துவைக்க வேண்டும்’ — இவ்வாறு சிறு சிறு வழிகளில் தம்மையும் அறியாது, `ஆண்களைச் சார்ந்து நிற்க வேண்டும்’ என்று கற்கிறார்கள் பெண்கள். வெள்ளை ஆடையும் விபூதியும் அணிந்தால் மட்டும் ஆசாபாசங்கள் ஒழிந்து விடுமா?

    தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, அனுசரணையாக இருந்தவனின் உறவு சுபத்ராவுக்கு வேண்டியிருந்தது. இதனால் மற்றுமொரு நெருங்கிய உறவு துண்டித்து விடலாம் என்பதை அவள் நினைத்துப் பார்க்கவுமில்லை.

    விவரம் புரிந்ததும், மகள் சாரு அவனோடு தாயையும் தவிர்த்தாள்.

    “நான் அமெரிக்கா போறேன், அடுத்த வாரம்!”

    `நீயுமா என்னைத் தனியாக விட்டுப் போகப் போகிறாய்?’ என்று கேட்க நினைத்த சுபத்ரா, “எதுக்கு சாரு?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாள்.

    “என்னால தாங்க முடியலேம்மா. இந்தக் கண்ராவியைப் பாக்கக் கூடாதுன்னுதான் அப்பா போயிட்டார்,” என்று பொருமினாள்.

    எதையும் பதிலாக அளிக்க முடியாமல், அத்தாயால் அழத்தான் முடிந்தது. கணவர் இருந்திருந்தால், அவள் ஏன் இப்படி இழிந்து போயிருக்கப்போகிறாள்!

    அழுகையினூடே வாதமும் சமாதானமும் செய்துகொண்டாள். சாருவுக்கு இன்னும் விவரம் புரியவில்லை. தாயைப்போல் தானும் சமுதாயம் பழிக்கும் வண்ணம் நெறி தவறி நடந்து விடுவோமோ என்ற பயம் இந்தப் பருவத்தில் ஏற்படுவது சகஜம்தான். தானே நாலு இடங்களுக்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகினால், அப்போது புரியும் — தான் செய்யாத குற்றத்துக்கு எவ்வளவு துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது ஒரு தமிழ்ப் பெண் என்று!

    யாரோ தோளில் தட்ட, நினைவுலகத்துக்கு மீண்டாள் சுபத்ரா. “விரைவில் உங்கள் உணவு வருகிறது. தயவு செய்து நேராக உட்காருங்கள்!” பெண்மையின் வளைவுகளை ரசனையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த, உடலை ஒட்டிய பாத்தேக் உடை, மாறாத புன்முறுவலுடன் நின்றிருந்தாள் விமான பணிப்பெண். `அது எப்படி சிலருக்கு எப்போதும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது? அவர்களுக்கெல்லாம் துயரமே கிடையாதோ?’ என்று யோசித்தாள் சுபத்ரா.

    உப்பு சப்பில்லாத சாப்பாட்டை விழுங்கி வைத்தாலும், உட்கார்ந்த நிலையில் தூங்குவது எளிதாக இல்லை. விட்ட இடத்திலிருந்து நினைவுகள் நீண்டன.

    சாரு போன மறு ஆண்டிலேயே, “வீட்டிலே எனக்கு கல்யாணம் நிச்சயிச்சு இருக்காங்க,” என்று சுவற்றைப் பார்த்தபடி கூறிவிட்டு, அவள் திகைப்பைக் கவனியாதவன்போல, அறையைக் காலி செய்துகொண்டு போனான் அவன். நாற்பது வயதுக்காரியுடன் இனியும் என்ன சல்லாபம் என்று நினைத்தானோ!

    அவனைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? தாலி கட்டியவளாக இருந்தால், இப்படி எளிதாக உதறிவிட்டுப் போக முடிந்திருக்குமா?

    என்னுடைய இளமையையும், தனிமையையும் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு…ஹூம்! நடந்ததற்கு அவன் மட்டுமா குற்றவாளி?

    அடுத்தடுத்து வந்த வருடங்கள் கசப்பிலும் சுயநிந்தனையிலும் கரைந்தன. சாருவின் கடிதம் அதை மாற்றியது. இனி வரப்போவது புதிய, இனிமையான வாழ்வு.

    உற்சாகத்துடன் பாத்ரூமில் தலை வாரி, அங்கே வைக்கப்பட்டிருந்த லோஷனை வறண்டிருந்த முகத்தில் பூசிக்கொண்டாள் சுபத்ரா.

    ஒரு நாள் பொழுதுக்கும் மேலாக விமானம் விண்வெளியில் பறந்தபோது அமைதியாக உட்கார்ந்திருந்த பயணிகள், அது தரையைத் தொட்டதும் அதற்கு மேலும் பொறுக்காதவர்களாக, நெருக்கியடித்து அதன் வாசலுக்கு வந்தார்கள்.

    கூட்டத்தைப் பின் தொடர்ந்தாள் சுபத்ரா. சுங்கப் பரிசோதனை முடிந்து, வெளித்தளத்திற்கு வந்தாள். தெரிந்த மொழிதான். ஆனாலும், பேசும் விதத்தில் மாறுபட்டு, வேற்றுமொழியாகக் கேட்டது. எல்லாருமே எதையோ பிடிக்க ஓடுவதுபோல் தோன்றியது.

    `இந்தக் கும்பலில் சாருவை எப்படித் தேடுவது?’ என்ற அச்சம் எழுந்தபோதே, இரு கைகள் அவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டன. “அம்..மா!” தொனி மேலிருந்து கீழே இறங்கிற்று, கொஞ்சலாக.

    யார், சாருவா இது?!

    ஒரு உபசாரத்திற்குக்கூட சிரிக்கத் தோன்றாது, தாய்மைப் பூரிப்புடன் இருந்த மகளின் உருவத்தையே விறைத்துப் பார்த்தாள் சுபத்ரா.

    “எப்போ கல்யாணம் ஆச்சு?” ஏக்கமாகக் கேட்டாள். `இதைக்கூட எனக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டாய், பார்த்தாயா?’ என்ற குற்றச்சாட்டு அதில் தொக்கி இருந்தது.

    “ஆகலே!” மகள் புன்னகைத்தாள். தாயின் திகைப்பைக் கண்டு சிரித்தாள்.

    “இங்கே அப்படித்தாம்மா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா, சேர்ந்திருக்கலாம். கல்யாணம் செய்துக்கிட்டு, அப்புறம் சண்டை பிடிச்சுக்கிட்டு, டைவோர்ஸ், அது, இதுன்னு திண்டாடறது பெரிய முட்டாள்தனம். மனக்கசப்பு ஏற்பட்டா, சுமுகமா பிரிஞ்சு, ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். மனசுக்குப் பிடிச்சவரா, இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவார்?”

    “குழந்தை?”

    “மூணு வருஷம் சேர்ந்திருந்தா, கூட இருக்கிற பார்ட்னர்தான் அதோட அப்பா”.

    அவளையும் அறியாமல், சுபத்ராவின் நினைவில் அவன் வந்து போனான்.

    “ரொம்ப முன்னேற்றமான நாடும்மா இது. நீங்க இனிமே இங்கேயே இருக்கலாம். அங்கே சமைக்கிறதை இங்கே சமைச்சுட்டுப் போங்களேன்! பேரனைக் கொஞ்சிய மாதிரியும் இருக்கும்.” நைச்சியமாகப் பேசினாள் சாரு.  “இங்கே பச்சைக் குழந்தையை யார்கிட்டேயாவது விட்டுட்டு, வேலை முடிஞ்சபிறகு ராத்திரி அழைச்சிட்டு வரணும். ஏகப்பட்ட செலவு, அலைச்சல்!”

    சுபத்ராவின் உற்சாகம் மறைந்தது. தாய்மீது உள்ள பாசத்தால் தன்னை நாடு விட்டு நாடு வரவழைக்கவில்லை இவள். பிறக்கப் போகும் குழந்தைக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி, ஆயா நான்!

    “என்னம்மா, பேச்சே காணோம்?”

    வெளியில் பார்வையை ஓடவிட்டு, “இங்கே எல்லாமே — பூ, மரம்கூட — நான் இதுவரைக்கும் பாக்காத தினுசா இருக்கு!” என்று பெருமூச்செறிந்தாள் சுபத்ரா.

    Share
  • ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 2

    ஆப்ரஹாம் லிங்கன்

    (வரலாற்றுத் தொடர் நாடகம்)

    பகுதி 2

    ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    (1809-1865)

    காட்சி 4 பாகம் -1

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹூக் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது.  ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாடுகிறார்..

    வில்லியம் ஸீவேர்டு: (வந்து கொண்டே)  இன்று முக்கியச் செய்தி ஏதேனும் இருக்கிறதா ?

    எட்வின் ஸ்டான்டன்:  ஆமாம் ! மிக முக்கியத் தகவல் ! மகிழ்ச்சி தரும் தகவல் ! நமது ஐக்கியப் படைகளுக்கு வெற்றி ! மாபெரும் வெற்றி !  நமது ஜெனரல் ஜியார்ஜ் மெக்கிலாலன் தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீயின் படைகளை ஆன்டியெட்டம் (Antietam) என்னும் இடத்தில் முறியடித்தார்.  படு தோல்வி அவருக்கு ! பலத்த வீழ்ச்சி தென்னவருக்கு ! இனியவர் மீண்டு எழ முடியாது என்று தெரிகிறது !  அலையடிப்பு இப்போது திரும்பி விட்டது !

    மாண்ட்கொமரி பிளேர்: (ஸ்டான்டனைப் பார்த்து) பிரஸிடெண்ட்டைக் கண்டு பேசினீரா ?

    ஸ்டான்டன்:  பிரஸிடெண்டுடன் பேசிய பிறகுதான் இங்கு வருகிறேன் !

    கிடியான் வெல்லெஸ்:  பிரஸிடெண்ட் என்ன சொன்னார் ?

    ஸ்டான்டன்:  வெற்றிச் செய்தி கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தார் !  அவர் கூறியது : கடேசியில் கடவுள் நம் மேல் கருணை பூண்டார்.  நமது குறிக்கோள் நேர்மையானது என்பதற்குக் கடவுள் சாட்சியாக நின்றார் ! வெற்றி நமது நேர்மையை நிரூபித்தது என்று பூரித்தார் ! இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

    பர்னெட் ஹூக்:  அடுத்து அவரது “பூரண விடுதலைச் சட்டம்” (Emancipation Law) உரையை முழக்கப் போகிறார் !  என் கருத்து : அந்த அறிவிப்பு தவறு என்பது !  இப்போது அறிவித்துப் பிரசிடெண்ட் தனது பெயரைக் கறைப்படுத்திக் கொள்வார் !  அமெரிக்க மக்களின் வெறுப்பைத் தேடிக் கொள்வார் !  அதை நாம் நிறுத்த வேண்டுமே !

    ஸீவெர்டு:  இதுவரையில் நாம் கற்றுக் கொண்டது என்ன ?  நம்மவரில் உன்னத மனிதர் பிரசிடெண்ட் என்பது !  நம்மைப் புறக்கணித்து அவரது போக்கிலே அவர் சென்றாலும் அவர் வெற்றி அடைவதைக் காண்கிறோம் !  அவர் ஒரு தீர்க்கதரிசி !  இது என் அனுபவம் !

    பர்னெட் ஹூக்:  நாட்டில் எங்கும் அவரை வெறுப்பவர் அதிகமாகி விட்டார் என்பது நானறிந்து கொண்டது !

    பிளேர்:  அமெரிக்காவை நேர்மையான திசையில் இழுத்துச் செல்பவர் பிரசிடெண்ட் ஒருவர்தான் ! அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கு !

    பர்னெட் ஹூக்:  அவருக்கு எதிராய்ப் பலர் கிளம்பி இருக்கிறார் என்பது ஒற்றர் மூலமாக நான் அறிந்தது !

    ஸீவேர்டு:  ஆனால் அந்த எதிர்ப்பு நிச்சயம் இங்கில்லை !

    பர்னெட் ஹூக்:  நானிதைச் சொல்ல அருகதை அற்றவன் !  நான் கேட்கிறேன் !  பூரண விடுதலைச் சட்டம் என்றால் என்ன ?  எனக்குப் புரிய வில்லை.  நாம் போரிடுவது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பதற்கு !  அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தை உகந்த காலத்தில் கொண்டு வருவதுதான் நல்லது.  இப்போது பூரண விடுதலையை அவரது தனிப்பட்ட வேட்கையாய்க் காட்டிக் கொள்வது சரியா ?  அமெரிக்க ஐக்கியம் முதலில் நிலைநாட்டப்பட வேண்டும் !  அதற்குப் பிறகுதான் கறுப்பருக்குப் பூரண விடுதலை கிடைக்கும் !  விடுதலை என்றால் எனக்குப் புரிகிறது !  பூரண விடுதலை என்றால் எனக்குப் புரியவில்லை !  உங்களுக்குப் புரிகிறா ?  எனக்குக் குழப்பமாக உள்ளது !

    ஸீவேர்டு:  பர்னெட் !  நீவீர் சொல்வது தவறு !  அவருக்குச் சிறிதும் குழப்பமில்லை !  குழப்ப மெல்லாம் உம்மைப் போன்று புரியாதவருக்கு !  அவர் பல தடவை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.  அமெரிக்க ஐக்கியமே அவரது முதல் மூச்சு !  அடிமைத்தன ஒழிப்பைப் பற்றி அவரது கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை !  பிரிந்து போன அமெரிக்க ஐக்கியம் இப்போது இறுக்கிக் கட்டப் படப் போகிறது !  அவரது அடுத்த மூச்சு விடுதலை அளிப்பு !  விடுதலைச் சட்டம் !  சுடச்சுட விடுதலை அறிவிப்பை முழக்க முற்படுவது அவரது கடமை !  விடுதலையில் பாதி விடுதலை என்பது கிடையாது !  பூரண விடுதலை என்பது எனக்குப் புரிகிறது !  உமக்கு அவரது முன்னைப் பேச்சு நினைவிருக்கிறதா ?  “அடிமைகளில் எவரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பேன் !  எல்லாக் கறுப்பரையும் விடுவிப்பதால் ஐக்கியம் பாதுகாக்கப்படும் என்றாலும் நானதைச் செய்து முடிப்பேன் !  சிலரை விடுவித்துப் பலரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் ஐக்கியத்தைக் காக்கச் செல்வேன்.” இப்படிச் சொன்னார்.  பிரசிடெண்ட் மிகவும் தெளிவாக இருந்தார் ! இருக்கிறார் !  அவரது அசையாத தீர்மானம் இப்போது : அடிமை நீக்குச் சட்ட அறிவிப்பு !  அதில் கால தாமதம் செய்ய மாட்டார் !  அவரை யாரும் நிறுத்த முடியாது !

    பர்னெட் ஹூக்:  எனக்குப் புரிகிறது அது !  ஆனால் அதை வேறு விதமாகச் செய்யக் கூடியவரும்  இருக்கிறார் என்பது என் கருத்து.

    பிளேர்:  அவரெல்லாம் இவரைப் போல் தீர்க்க தெரிசனத்துடன் செய்ய மாட்டார் என்பது என் கருத்து.

    எட்வின் ஸ்டான்டன்:  எனக்கும் பிரசிடெண்ட் அறிவிப்பு மீது பூரண உடன்பாடில்லை !  ஆனால் அவர் ஒருவரது போக்குதான் நேர்மையாகத் தெரியுது எனக்கு !  இந்த இக்கட்டான கட்டத்தில் இடர்களை ஏற்றுக் கொண்டு நெஞ்சம் தளராமல் நிமிர்ந்து நின்று போரைத் திறமையாக நடத்தி வருகிறார்.  இப்போது அதன் நற்பலனை எல்லாரும் அனுபவிப்பார் !  ஐக்கியப் பிணைப்புக்கு வெற்றி !  அடிமைக் கறுப்பருக்கு விடுதலை !  ஒரு கல்லில் விழுபவை இரு கனிகள் ! அவரது குறிக்கோள் நிறைவேறி வருகிறது !  நேர்மையான குறிக்கோள் !

    unnamed (2)

    பர்னெட் ஹூக்:  ஆனாலும் போர் முடிந்து தோரணம் கட்டுவதற்குள் பூரண விடுதலை அறிவிப்பை விடுவிக்க வேண்டுமா ?

    வெல்லெஸ்:  அறிவிக்கப் போவது உமக்கு நிச்சயமாகத் தெரியுமா ?

    பர்னெட் ஹ¥க்:  ஆமாம் !  இன்று அவர் அறிவிக்கப் போகிறார் நிச்சயம் !  அவரது கைப்பிரதி என் கண்களில் பட்டது !

    வெல்லெஸ்:  அப்படியானல் அவருக்கு என் ஆதரவு உண்டு !  அறிவிப்பில் தவறில்லை !

    ஸீவேர்டு:  மிஸ்டர் ஸ்டான்டன் !  ஜெனரால் ராபர்ட் லீயின் படைகள் யாவும் வீழ்ந்து விட்டனவா ?

    ஸ்டான்டன்:  இன்னும் முடிய வில்லை !  ஆனால் அவரது படையில் பலர் மடிந்தனர் ! சிலர் ஓடிப் போயினர் !  ஒரு சிலர் களத்தில் இன்னும் காலூன்றிப் போரிடுகிறார் !  எந்த சமயத்திலும் அவர் சரணடைந்து வெள்ளைக் கொடியைக் காட்டலாம் !  தென்னகத்தின் பெரிய ராணுவத் தளபதி ராபட் லீ நமது சாதாரணத் தளபதி மெக்லாலனிடம் தோல்வி அடைந்தார் !

    ஸீவேர்டு:  பாராட்டுத் தந்தி அனுப்புனீரா ?  அமெரிக்க யூனியனுக்கு மாபெரும் வெற்றியல்லவா ?

    ஸ்டான்டன்:  பிரஸிடெண்ட் தந்தி முதலில் சென்றது !  அடுத்தது எனது வாழ்த்துத் தந்தி !

    (அப்போது பணியாள் வந்து பிரசிடெண்ட் லிங்கன் வருவதை அறிவிக்கிறான்.  அனைவரும் அமைதியாக வாசலை நோக்குகிறார்.  ஆப்ரஹாம் லிங்கன் அறைக்குள் நுழைகிறார்.  அனைவரும் எழுந்து நிற்கிறார்.)

    காட்சி -4 பாகம் -2

    unnamed (3)

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. லிங்கன் வந்ததும் எல்லா அரசாங்க உறுப்பினரும் எழுந்து நின்று குட் மார்னிங் சொல்லி வந்தனம் தெரிவிக்கிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் எல்லோருக்கும். உட்காருங்கள்.

    வில்லியம் ஸீவேர்டு: நல்ல செய்தி எங்கள் காதில் விழுந்தது மிஸ்டர் பிரசிடெண்ட் !

    unnamed (4)

    Civil War Picture

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! முதன்முதல் வெற்றிக்கண் நம் பக்கம் திரும்பியுள்ளது ! நான் பாராட்டுத் தந்தி கொடுத்திருக்கிறேன் ஜெனரல் மெக்லாலனுக்கு ! தென்னகத்தின் பராக்கிரமசாலி ஜெனரல் ராபர்ட் லீயைத் தோற்கடித்தது சாதாரணச் செய்தி இல்லை ! அதுவோர் மகத்தான செய்தி ஸீவேர்டு ! அமெரிக்க வரலாறு மாறப் போகிறது ! அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லப் போகிறேன் இப்போது.

    பர்னெட் ஹூக்: நான் காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் அறிவிப்பைக் கேட்க !

    ஆப்ரஹாம் லிங்கன்: முதலில் வேடிக்கை நடிகர் மிஸ்டர் ஆர்டிமஸ் வார்டு (Mr. Artemus Ward) அறிவிப்பைக் கூறுகிறேன். (பையிலிருந்து ஓர் அச்சுத் தாளை எடுத்து வாசிக்கிறார்)

    “யுடிகாவில் (Utica) மேலிடத்துக் கொந்தளிப்பு”

    எட்வின் ஸ்டான்டன்: (லிங்கனை இடைமறித்து) மிஸ்டர் பிரசிடெண்ட் ! முதலில் அரசாங்கப் பிரச்சனையைக் கேட்க வேண்டும் நாங்கள் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) சரி பேசுவோம் அரசாங்கப் பிரச்சனையை !

    unnamed (5)

    Civil War Soldiers

    ஸீவேர்டு: மெக்லாலன் ராபர்ட் லீயை விரட்டிக் கொண்டு போகிறார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படித்தான் தோன்றுகிறது. முதன்முதல் ராபர்ட் லீயிக்குத் தோல்வி ! ஜெனரல் மெக்லாலன் தீரத்தனம் இப்போது தெரிகிறது ! ஆனாலும் ராபர்ட் லீ முற்றிலும் முறியடிக்கப்பட வேண்டும் ! நிச்சயம் முடிவின் துவக்கம் உதயமாகி விட்டது ! மெக்லாலனால் முடியா விட்டால் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட்டை (General Ulysses Grant) நாம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் போர் முடியத் தாமதமாகும் ! தவறில்லை அந்த முடிவெடுத்தாலும் !

    மாண்ட்கொமரி பிளேர்: ஜெனரல் கிரான்ட் மிகவும் குடிப்பார் அல்லவா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: என்ன பிராண்டு குடிப்பார் என்று சொல்வீர் ? அவருக்கு வண்டியிலே சில பாரல்கள் அனுப்பி வைக்கிறேன் ! அவர் கால்வைத்த இடமெல்லாம் வெற்றிகள்தான் ! ஜெனரல் என்றால் அவர்தான் உண்மையான ஜெனரல் !

    பர்னெட் ஹூக்: வேறு ஏதோ அறிக்கை விடப் போவதாகச் சொன்னீர்களே மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! சில வாரங்களுக்கு முன் ஸீவேர்டிடம் முதல் பிரதி எழுத்தறிக்கையைக் காட்டினேன் ! அதை அரசாங்க அறிவிப்பாக வாசிக்க வேண்டும் நான் !

    பர்னெட் ஹூக்: அதன் சாராம்சம் என்ன வென்று கூறுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அறிவிப்பு !

    unnamed (6)

    Sumter Fort

    பர்னெட் ஹூக்: (வெல்லெஸிடம் மெதுவாக முணுமுணுத்து) நான் முன்பே சொன்னேன் அல்லவா ? எல்லாரும் கேட்கலாம் இப்போது. (லிங்கனைப் பார்த்து) இப்போது என்ன அவசரம் அந்த அறிவிப்புக்கு ? எல்லாருக்கும் தெரிந்ததே ! இந்த கொடிய போரே அதற்காகத்தானே நடக்கிறது !

    ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது அறிவிக்கத் தேவையில்லை என்பது உமது கருத்து ! கேட்டுக் கொண்டேன் அதை ! ஆனால் தருணம் வந்து விட்டது கோமான்களே ! அறிவிக்கும் தருணம் வந்து விட்டது ! அடிமைகளை விடுவிக்கும் தருணம் வந்து விட்டது ! ஆயிரமாயிரம் கால் விலங்குகள் அறுக்கப்படும் காலம் வந்து விட்டது ! எனக்குத் தெரிகிறது அந்தத் தருணம் ! உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன ? எனக்குத் தருணம் வந்து விட்டது ! நான் காத்திருக்க முடியாது ! நூற்றுக் கணக்கான வருடங்களாய் இந்த விடுதலைத் தருணத்துக்கு ஆயிரமாயிரம் கறுப்பு அடிமைகள் காத்திருக்கிறார்கள் ! ஆனால் நான் காத்திருக்க முடியாது !

    கிடியான் வெல்லெஸ்: முழு அறிவிப்பையும் முதலில் வாசித்துக் காட்டுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: தருணம் வந்துவிட்டது ! இந்த நேரத்தை நாம் நழுவ விடக் கூடாது ! வரலாறு உருவாகும் தருணம் ! வாசிக்கிறேன் கேட்பீர் !

    “நம் இறைவனின் நன்னாளான இந்த ஜனவரி முதல் தேதியில் (1863) அறிவிக்கப் படுகிறது இது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அடிமைகளாய்க் கட்டுப்பட்டுள்ள கறுப்பருக்கும், அமெரிக்க ஐக்கியத்துக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டோருக்கும் இந்த அறிவிப்புக்குப் பிறகு நிரந்தர விடுதலை.”

    இன்னும் மூன்று மாதக் காலம் உள்ளது இந்த அறிவிப்பு நடப்பதற்கு ! மேலும் இந்த அரசியல் நியதிக்குப் பல உப அறிவிப்புகள், நிபந்தனைகள், தண்டனைகள் இன்னும் எழுதப்பட இருக்கின்றன. மேலும் தென்னகக் கோமான்களுக்கு இழப்பீடு, கறுப்பருக்கு நிதி உதவி, இடவசதி, நிலவசதி ஊழிய வசதி, கல்வி வசதி ஆகியவையும் விளக்கமாக எழுதப்பட வேண்டும்.

    unnamed (7)

    பர்னெட் ஹூக்: (முந்திக் கொண்டு) நானிந்த அறிவிப்பை இந்த சமயத்தில் நீங்கள் வெளியிடுவதை எதிர்க்கிறேன். உள்நாட்டுப் போர் முடிந்து இன்னும் புகை மண்டலம் அடங்க வில்லை. அதற்குள் என்ன அவசரம் ? வெற்றி முழுவதும் பெற்ற பிறகு அறிவித்தால் என்ன ? இது நமது ஐக்கியத்தை இன்னும் முறிக்குமே தவிர மேலும் இணைக்காது ! தென்னவர் மனப்புண் ஆறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் ! அதற்குள் அடிமைகளை நீக்குவது வெந்த புண்ணில் ஈட்டியைப் புகுத்துவது போலிருக்கும் !

    வெல்லெஸ்: எனக்கும் புரிய வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ! எதற்காக இப்பொது திடீரென இந்த அறிவிப்பைத் திணிக்க வேண்டும் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இது எனது புதிய திணிப்பு அறிக்கை இல்லை ! இந்த பிரிவினைப் போரைத் துவக்கி வைத்த காரணியை வேரோடு பிடுங்க வேண்டும் ! அதுதான் என் குறிக்கோள் ! நான் உயிரோடு உள்ள போதே இதைச் செய்து முடிக்க வேண்டும் ! வேறெவருக்கும் இதைச் செய்யத் துணிவில்லை ! உறுதியில்லை ! ஊக்கமில்லை ! இரும்பு சூட்டோடு கனிந்துள்ள போதே அதை அடித்து வடிவமைக்க வேண்டும் ! இந்தத் தருணமே தக்க தருணம் என்று என் ஆத்மா என்னைத் தூண்டுகிறது !

    பர்னெட் ஹூக்: ஆறு மாதங்களுக்கு முன் “நியூ யார்க் டிரிபியூன்” (New York Tribune) தெளிவான ஓர் அறிவிப்பை வெளியிடும்படி உங்களை வற்புறுத்திய போது நீங்கள் அவரை உடனே இகழ்ந்தீர்கள் ! நினைவிருக்கிறதா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருண மில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதென அறியாத சமயத்திலே அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! இந்தக் கொள்கையில் நீங்கள் எல்லாம் என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

    unnamed (8)

    ++++++++++++

    “முன்னொரு முறை நான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘நான் எடுத்துக் காட்டிய பல்வேறு முறைகளில் எந்த விதத்திலும் அடிமைத்தன ஏற்பாடுகள் தவறான தென்று கருதாத ஒருவன் நம்மிடையே இருப்பானாகில் அவன் அமெரிக்க மண்ணில் தடம் வைக்கத் தகுதியற்றவன். அவன் நம்மோடு சேர்ந்து வாழக் கூடாது. அடிமைத்தன ஏற்பாடுகள் நம்மிடையே இருப்பதைப் புறக்கணிப்பவன், அதைத் திருப்தியான முறையில் அரசியல் ஆட்சி நியதி நெறிப்படி நீக்குவதில் உள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ளாதவன் நமது அரங்கில் இருப்பானாகில் அவன் நமது அமெரிக்கத் மண்ணில் தடம் வைக்கத் தகுதியில்லாதவன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    “அடிமைத்தன ஒழிப்பைத் தவறாகக் கருதும் மனப்போக்கு பரவி வரும் இந்தச் சமயத்தில், நான் சொல்கிறேன் : இதுவரை இந்த அடிமைத்தனக் கொடுமை போல் வேறு ஏதாவது நமது அமெரிக்க ஐக்கியத்தைச் சீர்குலைக்கப் பயமுறுத்தி யுள்ளதா ? நாம் பற்றிக் கொண்டுள்ள முக்கியமான இதய இச்சை என்ன ? நமது உரிமைச் சுதந்திரம் ! எதிர்கால வாழ்வு வளம் ! அந்த இரண்டையும் பயமுறுத்தி வருவது அடிமைத்தன வைப்பு என்பது தவிர வேறில்லை என்று உங்களுக்குத் தெரிகிறதா ?

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீஃபென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு !

    ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)

    unnamed (9)

    (செப்டம்பர் 17, 1862)

    காட்சி -4 பாகம் -3

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹஃக் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹ¥க் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடுகிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதெனத் துடிக்கும் சமயத்திலே விடுதலை அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! கொள்கை ஒன்றைப் பின்பற்றி நிலைநாட்டுவது என் பொறுப்பு. தவறான தருணத்தில் வெளியிட்டு மக்கள் அதைப் புறக்கணிபதற்கு இல்லை ! அப்படிச் செய்வது தேசக் கடமை ஆகாது. நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு ! மேரிலாண்டிலிருந்து எதிர்ப்புக் கலகவாதிகள் துரத்தப்பட்ட பின் வெற்றி நம் பக்கம் என்பது உறுதியாகி விட்டது ! அந்த வெற்றிப் புத்தொளியோடு, பலிவாங்கப் பட்ட யூனியன் அடிமை ஒழிப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என் ஆத்மா உந்தியது ! அந்த உறுதி மொழியை நான் முன்பு எடுத்துக் கொண்டது எனக்கும் என்னைப் படைத்தவனுக்கும் ! புரட்சிக்காரர் விரட்டப் பட்டதும் நான் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் ! ஆதலால் உமது தடைமொழியை நான் நிராகரிக்கிறேன் ! உமது தனிப்பட்ட எதிர்ப்புக் கருத்துக்களை மதித்துக் கொண்டு நானிந்த முடிவெடுக்கிறேன். இந்த முடிவுக்கு நீங்கள் யாவரும் உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று நான் மன்றாடிக் கேட்கிறேன்.

    unnamed (10)

    பர்னெட் ஹ¥க்: (சட்டென) இது ஆவேச அறிவிப்பாகத் தெரியுது எனக்கு. சிந்தித்து வெளியிடும் அறிவிப்பாய்த் தோன்ற வில்லை எனக்கு.

    லிங்கன்: (தொடர்ந்து) மற்றுமொரு கருத்தைச் சொல்கிறேன். இந்தப் பிரச்சனையில் மற்றவர் என்னை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றெனக்குத் தெரியும். ஆனால் அரசியல் நியதிப்படி என்னை உடன்பட வைத்துப் பொதுமக்கள் ஆதரவையும் பெற்று என் ஆசனத்திலிருந்து அமர்ந்து கொண்டு அவர் செய்ய வேண்டும் ! மகிழ்ச்சியோடு நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால் இப்போது என் ஆசனத்தில் அமர்ந்து அதைச் செய்வோர் யாரு மிருப்பதாகத் தெரிய வில்லை. தேர்ந்தெடுத்த முடிவைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டியது என் கடமை ! அதை நான் செய்தே தீர வேண்டும்.

    ஸ்டான்டன்: சிந்தித்து முடிவு செய்ய சில நாட்கள் தாமதப் படுத்துவீரா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    சேஸ்: இப்போது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நமது முதற் கடமை.

    unnamed (11)

    பர்னெட் ஹஃக்: அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு !

    லிங்கன்: சீமான்களே ! வரலாற்றிலிருந்து நாம் தப்பிக்க ஓட முடியாது. நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் நம்மை யாரும் மறக்கப் போவதில்லை ! தனிப்பட்டோருக்குப் பொதுநபர் மதிப்பளிக்க மாட்டார். அடிமைகளுக்கு விடுதலையை அறிவிக்கும் போது நாம் விடுபடுவோருக்கு சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். ஒன்று நாம் நேர்மையோடு அடிமைகளைக் காப்பாற்றுவோம் அல்லது வேதனையோடு நாம் இறுதியில் இழந்து போவோம் !

    (லிங்கன் எழுந்து நின்று அடிமைகள் விடுதலை அறிவிப்பு வெளியீட்டுத் தாளை மேஜை மீது வைத்துக் கையொப்பமிட்டு “ஜனாதிபதி முத்திரை” இட்டு ஒரு பெருமூச்சு விடுகிறார்.)

    “அடிமைகள் யாவரும் இந்த விடுதலை அறிவிப்புக்குப் பிறகு என்றும் சுதந்திர மனிதர்.” சீமான்களே உங்கள் யாவரது உடன்பாடுகளை நான் வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன்.

    (எல்லா அரசாங்க அதிகாரிகளும் எழுந்து நிற்கிறார். ஸீவேர்டு, வெல்லெஸ், பிளேர் மூவரும் லிங்கனுக்குப் புன்முறுவலுடன் கைகுலுக்கி வெளியேறுகிறார். ஸ்டான்டன், சேஸ் லிங்கனுக்குத் தலைவணங்கிப் பின்பற்றிச் செல்கிறார். பர்னெட் ஹ¥க் ஒன்றும் செய்யாமல் நேர்நோக்கி விரைகிறார்)

    unnamed (12)

    லிங்கன்: மிஸ்டர் ஹஃக் ! சற்று நில்லுங்கள் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் !

    பர்னெட் ஹஃக்: (போனவர் திரும்பி நின்று) சொல்லுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    (எல்லாரும் போன பிறகு லிங்கன் பேசுகிறார்.)

    லிங்கன்: உட்காருங்கள் மிஸ்டர் ஹஃக் ! நமது உரையாடல் இன்னும் முடியவில்லை !

    (ஹஃக் நாற்காலியில் உட்காருகிறார்)

    லிங்கன்: ஒருவர் உடன்பாடில்லாத ஒன்றைச் சொல்லிய பிறகு அதை மீண்டும் கூற வேண்டும் என்று வற்புறுத்துவது அவரை அவமானப்படுத்தத்தான் என்று நான் நினைக்கிறேன். அது பலன் அளிக்கும். ஆனால் அத்தனை எளிதாக என்னை யாரும் அவமானப் படுத்த முடியாது. எனக்கு இங்கு எதிர்ப்புக்கள் இருப்பது தெரியும் !

    பர்னெட் ஹஃக்: என்ன ? உங்களுக்கு எதிர்ப்பா ? எங்கே அமெரிக்க நாட்டிலேயா ?

    லிங்கன்: இல்லை ! அரசாங்க உறுப்பினருக்குள்ளே !

    பர்னெட் ஹஃக்: எதிர்ப்பென்று நான் கருத வில்லை ! அதைக் குறைகூறல் என்று சொல்வேன் !

    லிங்கன்: எதற்காகக் குறை கூறுகிறார் ? என் வழிகளைத் திருத்தவா ? அல்லது என்னை அடுத்து வராதபடிக் கவிழ்த்தவா ?

    பர்னெட் ஹஃக்: சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! அதுதான் !

    லிங்கன்: முதலில் நீவீர் ஏன் அப்படிச் சொல்ல வில்லை என்னிடம் ?

    பர்னெட் ஹஃக்: மறைமுகமாகக் கூறினோம் !

    லிங்கன்: என் ஆசனத்தில் அமர்ந்து நீவீர் சிந்திக்க வேண்டும் !

    பர்னெட் ஹஃக்: அறிவிலோ திறமையிலோ நான் உங்களை மிஞ்ச முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ! ஆனால் குறை கூறுவோன் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது !

    லிங்கன்: நான் சொல்வது அதுவல்ல ! என் பொறுப்பைச் சுமந்து கொண்டு நீவீர் சிந்திக்க வேண்டும் என்பது என் ஆலோசனை !

    பர்னெட் ஹஃக்: நான் அந்தப் பொறுப்புக்குப் போட்டியிடத் தகுதியற்றவன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    unnamed (13)

    லிங்கன்: அப்படியானால் அறிவில்லாமல், திறமையில்லாமல், பொறுப்பில்லாமல்தான் நீவீர் என்னுடன் இதுவரைத் தர்க்கமிட்டு வந்தீரா ?

    பர்னெட் ஹஃக்: (கோபத்துடன்) பொறுப்பில்லாதவன் என்று என்னை அவமானப் படுத்துகிறீர் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: உமது தர்க்கப் போக்கு அதைத்தான் எனக்குக் காட்டுகிறது !

    பர்னெட் ஹஃக்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !

    (பர்னெட் ஹஃக் ஆவேசமாய் எழுந்து கொண்டு விரைந்து போகிறார்)

    +++++++++++

    unnamed (14)

    “நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் !”

    ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)

    “இந்த ஆழமான போர் வேதனை விரைவாக மறைந்துவிடப் பரிவோடு நாம் நம்பிக்கை வைக்கலாம். அல்லது மெய்வருந்திப் பிரார்த்தனை செய்யலாம். ஆயினும் 250 ஆண்டுகளாய் நாம் கடுமையாக உழைத்துச் சேமித்த சொத்துக்கள் எல்லாம் பலனற்றுச் சிதைக்கப் படவும், சவுக்கடியில் சிந்திய குருதிக்கு ஈடாக வாள் மூலம் பலிவாங்கி இந்தப் போரை நீடிக்கவும் கடவுள் விரும்பினால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல் இப்போதும் சொல்லப்பட வேண்டும்: ‘இறைவனின் நியாயத் தீர்ப்புகள் மெய்யானவை, நேர்மையானவை என்று.’

    ஆப்ரஹாம் லிங்கன், இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்புரை (மார்ச் 4, 1865)

    “கடவுள் சாதாரணப் பொதுமக்களைப் பெரிதும் விரும்புகிறார் ! அதனால்தான் அவர் பெருத்த எண்ணிக்கையில் அவர்களை உண்டாக்கி இருக்கிறார்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “அமெரிக்க எஜமானர்கள் தாமாகவே முன்வந்து தமது அடிமைகளை விடுவிக்கும் முன்பு ரஷ்யா முழுதையும் ஆளும் ஏகாதிபதி தன் கீரீடத்தைக் கீழே எறிந்துவிட்டு அதன் குடிமக்களுக்கு விடுதலையை அறிவித்திடுவார்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (1855)

    unnamed (15)

    (செப்டம்பர் 17, 1862)

    காட்சி -4 பாகம் -4

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹஃக் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடி ஆத்திரப்பட்டுத் தன் பதவியை விட்டு விலகுகிறார்.

    unnamed (16)

    பர்னெட் ஹஃக்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !

    (பர்னெட் ஹஃக் ஆவேசமாய் எழுந்து விரைவாகச் செல்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: (பொறுமையாக) மிஸ்டர் பர்னெட் ஹ¥க் ! ஆத்திரப்பட்டு எதுவும் செய்யாதீர். உங்கள் எதிர்ப்பு வாதத்தை நான் கேட்க விரும்பினேன் ! அதைக் கேட்டு நான் வருந்த வில்லை ! நீங்கள் ஏன் பதவி விலக்கம் செய்ய வேண்டும் ? என் மீது கோபப்பட்டு உங்கள் நல்ல பதவியை விட்டுவிடுவது பொறுப்பற்றது !

    பர்னெட் ஹஃக்: நான் முன்பே செய்ய நினைத்தேன். தருணம் கிடைத்தது இப்ப்போது ! உங்கள் மீது கோபமில்லை எனக்கு !

    ஆப்ரஹாம் லிங்கன்: பின் யார் மீது கோபம் ? எதற்காகச் செய்கிறீர் ?

    பர்னெட் ஹஃக்: உங்கள் மீது எனக்குக் கோபமில்லை ! உங்கள் போர்க் கொள்கை மீது கோபம் ! தென்னவரை வடபுறத்தார் தோற்கடித்து இப்போது அடிமையாக்கப் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! பழைய அடிமைகள் விடுவிக்கப்பட்டு இப்போது புது அடிமைகள் உருவாக்குகிறீர் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) நல்ல விளக்கம் கொடுத்தீர் என் கொள்கைக்கு ? நான் பழைய அடிமைகளை விடுவித்துப் புது அடிமைகள் படைக்கிறேனா ?

    பர்னெட் ஹ¥க்: தென்னவர் தாமாகத் தம் அடிமைகளை விடுவிக்க வேண்டும் ! அமெரிக்க ஜனாதிபதி அதை அழுத்தமாகத் திணிக்கக் கூடாது !

    unnamed (17)

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) தென்னவரிடம் கேட்டு வந்து என்னிடம் சொல்வீரா எப்போது அவர் அடிமைகளுக்கு விடுதலை அளிப்பார் என்று ? வற்புறுத்தப் படாத எந்த உன்னத கொள்கைக்கும் விடிவு காலம் வராது ! கருணை யில்லாத மனிதர் உருமிக் கொண்டு எதிர்ப்பார். உள்நாட்டுப் போர் நிறுத்தப்படும் போது அடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி விடுதலை செய்ய அரசியல் நியதிகள் வடிக்கப்பட்டுச் சட்டங்களாய் எல்லா மாநிலங்களிலும் நிறுவப்பட வேண்டும். அது என் தலையாய கடமை ! அதைத் தடுக்க நீவீர் முயல்கிறீர்.

    பர்னெட் ஹஃக்: மிஸ்டர் பிரசிடெண்ட் ! இப்படித் தீவிரக் கொள்கை உடைய உங்கள் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது ! அதனால்தான் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: சிலருடைய பேச்சில், போக்கில் துரோகம் காணப்படுகிறது.

    பர்னெட் ஹஃக்: துரோகம் செய்வோருக்கு எதிராய்ப் போரிடுகிறோம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை துரோகம் செய்வோரைத் தோற்கடிப்போம் ! நான் அவருடன் அமர்ந்து சமாதான உரையாடி அவரைத் திருத்த முயல்வேன்.

    பர்னெட் ஹஃக்: அவ்விதம் புரியும் அரசியல் தந்திரம் பலவீனமானது.

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை அது மனித நன்னம்பிக்கையில் செய்வது. அது மனித நேயத்தில் புரிவது. உம்மைப் பல நாட்களாய் நான் கவனித்து வருகிறேன். ரிப்பபிளிக்கன் கட்சியில் எனக்குப் பின்னால் நீவீர் சதிவேலை செய்து வருவது எனக்குச் தெரியும். என்னைக் குறைகூறுவது பற்றிக் கவலை இல்லை எனக்கு ! ஆனால் உமது சதிவேலைகள் நான் இரண்டாம் முறை பிரசிடெண்டாக வரக்கூடாது என்னும் குறிக்கோளில் நடக்கின்றன. நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் ! இப்போது நடுக்கட்டத்தில் பொறுப்பற்றுப் பதவியை விட்டு விலகிச் செல்கிறீர் ! உம்மைத் தடுத்து நிறுத்துவேன் என்று எண்ண வேண்டாம் ! தாராளமாய் வெளியேறலாம் ! தயங்காமல் விலகிச் செல்லலாம் ! உம்மைப் போன்ற சங்கிலித் தொடர்பு வலுவுள்ள வடத்தை பலவீனமாக்கி விடும் ! நீவீர் போகலாம் !

    (பர்னெட் ஹஃக் வேகமாய் வெளியேறுகிறார். லிங்கன் மேஜை மணியை அடிக்கிறார். பணியாள் வருகிறான்.)

    unnamed (18)

    ஆப்ரஹாம் லிங்கன்: மிஸ்டர் ஹேயை உள்ளே வரச் சொல் ! (பணியாள் போகிறான். மிஸ்டர் ஹே நுழைகிறார். லிங்கன் ஷேக்ஸ்பியரின் “புயல்” (Tempest) நாடகத்தைக் கையில் எடுக்கிறார்.)

    மிகவும் களைத்துப் போய் உள்ளேன். நான் வாசிக்கும் அந்த வரிகள் உனக்குத் தெரியும். எங்கே அவற்றைப் படி ! மீண்டும் நான் கேட்க வேண்டும் (லிங்கன் நூலை ஹேயிடம் கொடுத்துச் சாய்வு நாற்காலில் ஓய்வாக அமர்கிறார்)

    மிஸ்டர் ஹே: (புயல் நூல் பக்கத்தை எடுத்து வாசிக்கிறார்)

    நம் நடிகர்களின் கூத்தாட்டம்

    இப்போது ஓய்ந்தது !

    நான் முன்னு ரைத்தது போல்

    எல்லாமே உணர்ச்சி மயம் !

    காற்றோடு கரைந்தது

    மெலிந்து போய் ! அந்தக்

    காட்சியின் வேரற்ற

    பின்னலாய்ப் போனது !

    பரம்பரைச் சொத்தாய் வந்திடும்

    முகில் தொடும் கோபுரங்கள்,

    மகத்தான மாளிகைகள்,

    மௌன ஆலயங்கள்,

    மாபெரும் பூகோளம் கூட

    மறைந்து போய்விடும் (ஒருநாள்) !

    இச்சிற்றுருவ

    அணிவரிசை மறைந்தது போல்

    எல்லாத் தளவாடமும்

    இடம் பெயர வேண்டும் !

    நாமதை ஒத்தவர் தாம் ! யாவும்

    கனவுகள் கட்டிய

    காட்சி போன்றவை !

    சின்னஞ் சிறிய நம்முடை

    வாழ்வினைச் சுற்றிலும்

    வட்ட மிட்டுள்ளது

    தூக்கம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! நாமதை ஒத்தவர்தான் ! கனவுகள் கட்டிய காட்சி மாளிகையில் நமது வாழ்வு சிறிதுதான் !

    +++++++++++

    நமது கடவுளின் ஆண்டான 1863 ஜனவரி முதல் தேதி முதலாக எந்த மாநிலத்திற்குள்ளும் அல்லது மாநிலமாக மதிக்கப்பட்ட பகுதிக்குள்ளும் அடிமைகளாக அடைபட்டிருப்போரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளை எதிர்த்துப் புரட்சி செய்த மக்களும் இனிமேல் விடுவிக்கப் படுகிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கமும், அதன் இராணுவமும், கடற்படையும் அந்த மக்களின் விடுதலையை ஏற்றுக் கொண்டு அவ்விதம் அவர்கள் மெய்யாக விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்த எந்த நடைமுறைகளையும் கையாளாமல் நிரந்தரமாய் நிலைநாட்டி வரும்.

    ஆப்ரஹாம் லிங்கன் (அடிமைகள் விடுதலை அறிவிப்பு) (ஜனவரி 1, 1863)

    “எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அந்த தேசம் அல்லது அவ்விதம் உருவாகி உறுதியடைந்த ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் மாபெரும் ஓர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அந்தக் களத்தில் ஒரு பகுதியை போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்துத் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் எல்லோரும் கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையது.”

    ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் உரைமொழி (நவம்பர் 19, 1863)

    unnamed (19)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -1

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிராண்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிராண்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான்.

    நேரம்: மாலை வேளை.

    ஜெனரல் கிராண்ட்: (மேஜை மீதிருக்கும் கடிகாரத்தைப் பார்த்தபடிப் பரபரப்புடன்) ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது. இதற்குள் ஜெனரல் மீடு (Major General Meade) செய்த முடிவு தெரிந்திருக்க வேண்டுமே ! (டென்னிஸைப் பார்த்து) டென்னிஸ் !

    டென்னிஸ்: (எழுந்து முன்வந்து) சொல்லுங்கள் ஸார்.

    unnamed (20)

    States that were keeping Slaves

    ஜெனரல் கிராண்ட்: இந்த தகவல் தாள்களை எல்லாம் காப்டன் டெம்பிள்மன்னிடம் (Captain Templeman) கொடுத்திடு. பிறகு கர்னல் வெஸ்டிடம் (Colonel West) கேள் : இருபத்தி மூன்றாம் படைக்குழு (Twenty Third Division) இன்னும் போர்க்களத்தில் ஈடுபட்டுள்ளதா வென்று, போகிற போது சமையல்காரரிடம் சொல் : பத்து மணிக்கு சூப்பைக் கொண்டு வரவேண்டும் எனக்கு என்று. நேற்று அனுப்பியது குளிர்ந்து போய் விட்டதென்று புகாரிடு ! இன்றாவது சூடாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்.

    டென்னிஸ்: அப்படியே சொல்கிறேன் ஸார் ! (வேகமாய்ப் போகிறான்)

    unnamed (21)

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! கொடு அந்த தளப்படத்தை (Map) ! (மாலின்ஸ் தளப்படத்தைக் கொடுக்கிறார்) (கிராண்ட் சில நிமிடங்கள் ஊன்றிப் பார்த்த பின்) எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை ! மேஜர் மீடு தூக்கிப் போனால் ஒழிய சில மணி நேரங்களில் முடிய வேண்டிய போரிது ! ஜெனரல் ராபர்ட் லீ பெரிய வீரர்தான் ! ஆனால் அவர்கூட இப்போது மீள முடியாமல் சிக்கிக் கொண்டார் ! (தளப்படத்தில் பென்சிலால் வட்டமிடுகிறார்)

    காப்டன் மாலின்ஸ்: ஜெனரல் ! இதுதான் தென்னவரின் இறுதி மூச்சு ! அவரது முதுகெலும்பு முறிந்தது ! அவர்கள் நம்மிடம் சரண் அடைவதைத் தவிர வேறு கதியில்லை ! இதுதான் இறுதி முடிவு !

    ஜெனரல் கிராண்ட்: (சிரித்துக் கொண்டு) ஜெனரல் ராபர்ட் லீ சரணடைந்தால் நாமெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் !

    unnamed (22)

    Lincoln’s Famous Gettysburg Speech

    காப்டன் மாலின்ஸ்: கடவுளே ! மகத்தான நிகழ்ச்சியாக இருக்கும் ஜெனரல் !

    ஜெனரல் கிராண்ட்: அமெரிக்க வரலாற்று மகத்துமாக இருக்கும் ! ஒரே குண்டில் இரண்டு கோட்டைகள் வீழ்கின்றன ! பிரிந்த மாநிலங்கள் ஒருங்கிணையும் ! அடிமைக் கறுப்பருக்கு விடுதலை ! ஆனால் அதற்கு பெருத்த வெகுமதி அளித்தோம், ஆயிரக் கணக்கான உயிர்ப்பலிகள் !

    காப்டன் மாலின்ஸ்: என் மனைவி மகனை எல்லாம் சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே இனிக்கிறது.

    ஜெனரல் கிராண்ட்: நீ சொல்வது உண்மை மாலின்ஸ் ! அடுத்த வாரம் என் மகன் பள்ளிக்கூடம் போகிறான். நானும் அவன் கூடச் சென்று பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருவேன்.

    (டென்னிஸ் வருகிறான்)

    டென்னிஸ்: (சல்யூட் செய்து) ஜெனரல் ஸார் ! இருபத்தி மூன்றாம் படைக்குழு இன்னும் போர் புரிவதாகக் கர்னல் வெஸ்ட் கூறுகிறார் ! சமையல்காரர் வருத்தம் தெரிவித்தார் சூப் குளிர்ந்து போனதற்கு !

    ஜெனரல் கிராண்ட்: நன்றி டென்னிஸ் ! நீ போகலாம் ! (டென்னிஸ் போகிறான்) (மாலின்ஸைப் பார்த்து) அந்த துப்பாக்கிகளை இன்று பகலில் அனுப்பினீரா ?

    காப்டன் மாலின்ஸ்: ஆமாம் ஜெனரல் ! சொன்னபடி அனுப்பி விட்டேன்.

    unnamed (23)

    (அப்போது ஒரு பணியாள் வருகிறான்)

    பணியாள்: (சல்யூட் செய்து) பிரசிடெண்ட் லிங்கன் இங்கு வந்து கொண்டிருக்கிறார்

    (ஜெனரல் கிராண்ட், காப்டன் மாலின்ஸ் இருவரும் எழுந்து நிற்கிறார்கள். லிங்கன் உள்ளே நுழைகிறார். பின்னால் மிஸ்டர் ஹேயும் வருகிறார். லிங்கன் கரம் நீட்டி ஜெனரல் கையை முறுவலுலோடு குலுக்குகிறார். காப்டன் மாலின்ஸ் சல்யூட் செய்வதற்கு லிங்கன் பதில் சல்யூட் செய்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: என்னால் பொறுத்திருக்க முடியவில்லை ! போர் எப்படி நடக்கிறது ?

    (லிங்கன், கிராண்ட், மாலின்ஸ் மூவரும் நாற்காலியில் அமர்கிறார்கள்)

    ஜெனரல் கிராண்ட்: ஜெனரல் மீடு தகவல் அனுப்பியுள்ளார் : ஜெனரல் ராபர்ட் லீயும் அவரது படைகளும் முப்புறம் அடைபட்டு விட்டதாம். இன்னும் உள்ளது மூன்று மைல் தூரம்தான் ! அதுவும் குறுகிக் கொண்டே போகுது !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியால் போர் முடியப் போகுது ! கடவுளுக்கு நன்றி கூறுவேன் கோடி முறை !

    ஜெனரல் கிராண்ட்: இந்த மூன்று மைல் தூரப் போரில் ஏதாவது திடீர் மாறுதல் ஏற்பட்டால் ஒழிய வேறு சந்தேகம் இல்லை ! போர் ஓயப் போகுது உண்மை ! ஜெனரல் மீடு அனுப்பும் கடைசித் தகவலை எதிர்ப்பார்த்துள்ளேன் !

    unnamed (24)

    ஆப்ரஹாம் லிங்கன்: இனிமேல் எங்காவது போர் நடக்குமா ?

    ஜெனரல் கிராண்ட்: இன்றிரவு மட்டும் ஓரிரண்டு இடங்களில் நடக்கலாம் ! நடக்காமல் முடங்கி ஓய்ந்தும் போகலாம் ! ஆனால் ராபர்ட் லீக்குத் தெரியும் ! இனி ஒரு பலனும் அவருக்கு இல்லை ! சரண் அடைவதைத் தவிர ஜெனரல் லீக்கு வேறு வழியில்லை ! அடைப்பட்டு விட்டார் ! நமது முற்றுகையிலிருந்து அவர் இனிமேல் தப்பவே முடியாது !

    (பணியாள் வந்து ஒரு தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் கையில் தந்து விட்டுப் போகிறான்)

    ஜெனரல் கிராண்ட்: (முறுவலுடன்) நல்ல செய்தி ! திட்டமிட்டபடி நமது படையினர் முப்புறமும் சுற்றிக் கொண்டாராம் ! ராபர்ட் லீ சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை ! ஜெனரல் மீடு 10 மணி நேர அவகாசம் லீயிக்குக் கொடுத்திருக்கிறாராம் ! சரண் அடைய வேண்டும் ! அல்லது சாகத் துணிய வேண்டும் ! காலை ஆறு மணிக்குள் போரின் முடிவு தெரிந்து விடும் ! (அந்த தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் லிங்கனிடம் தருகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: கடவுளின் கருணை நமது பக்கம் விழுகிறது. ஜெனரல் ராபர்ட் லீயை அடைத்து முற்றுகை செய்வது அத்துணை எளியதா ? ஜெனரல் மீடு பாராட்டுக்குரியவர் !

    ஜெனரல் கிராண்ட்: எனது சம்பவ நிரலின்படி இதுதான் இறுதித் தளப்போர் ! இனிமேல் எந்த இடமும் இல்லை !

    ஆப்ரஹாம் லிங்கன்: பயங்கர யுத்தம் ! நம் பக்கம் யாருக்கும் தண்டனை தர வேண்டுமா ?

    ஜெனரல் கிராண்ட்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஒரு குற்றவாளியைச் சுட வேண்டும் நாளை !

    unnamed (25)

    ஆப்ரஹாம் லிங்கன்: சுடுவதைத் தவிர்க்க முடியாதா ? யாரவன் ?

    காப்டம் மாலின்ஸ்: அவன் ஓர் அயோக்கியன் ! பெயர் வில்லியம் ஸ்காட் ! காலை சூரியோதயத்திற்கு முன் அவன் அத்தமித்துப் போவான் ! சுட்டுத் தள்ளும் குழு காலையில் அவனைச் சுட்டுத் தள்ளும் ! நாளை இந்நேரம் அந்த ஆளைக் காண மாட்டோம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: எங்கே இருக்கிறான் இப்போது ? செம்மையாக விசாரணை செய்தீரா ?

    காப்டன் மாலின்ஸ்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஜெயிலுக்குள் இருக்கிறான் ! காவல் செய்யும் போது தூங்கி விழுந்து நமது படைக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பளித்தவன் ! அவன் நாட்டுத் துரோகி !

    ஆப்ரஹாம் லிங்கன்: அவன் சாவதற்குள் நான் ஒருமுறை பேச வேண்டும் ! அழைத்து வாருங்கள் என்னிடம் !

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !

    (காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)

    unnamed (26)

    +++++++++++++

    எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அத்தேசம் அல்லது அவ்விதம் உருவாகிப் வலுப்பெற்ற ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் ஒரு பெரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அக்களத்தின் ஒரு பகுதியைப் போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்து நம் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் ஒருங்கே கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளளும் தகுதி உடையது.

    நாம் செய்ய வேண்டி எஞ்சியுள்ள உன்னத பணிகளை முடித்து விட நம்மை நாம் இங்கே அர்ப்பணித்துக் கொள்வோம். மேன்மையான தேச நேசமுடன் உயிர் கொடுத்தோர் மூலமாக எதற்குப் போராடித் தம்மை முழுமையாகக் கொடுத்தாரோ அக்கொடை வீணாகாமல் அதே காரணத்துக்காக நாமும் மிகுந்த நேசமுடன் தீர்மானம் செய்வோம். இந்த தேசம் கடவுளுக்குக் கீழ்ப் படிந்து குடிமக்களுடைய அரசாங்கம், குடிமக்களுக்காக அரசங்கம், குடிமக்கள் ஆளும் அரசாங்கம் என்பவை பூமியிலிருந்து அழியாது புதியதோர் சுதந்திரத்தைப் பிறப்பிக்கும்.

    ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் பேருரை (நவம்பர் 19, 1863)

    unnamed (27)

    “யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் நாம் கவனமாய்க் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -2

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிரான்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிரான்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட படைவீரன் வில்லியம் ஸ்காட்டை விலங்கிட்டு லிங்கன் முன்பாக இழுத்து வருகிறார் படைக் காவவர் இருவர்.

    நேரம்: மாலை வேளை.

    unnamed (28)

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !

    (காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: அவன் செய்த குற்றம்தான் என்ன ?

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மன்னிக்க முடியாத குற்றம் ! மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது அவனுக்கு ! நாளைக் காலை உதயத்தில் சுட்டுத் தள்ளும் பட்டாளம் அவனைச் சுட்டுக் கொல்லும்.

    ஆப்ரஹாம் லிங்கன்: தண்டனை கொடியதாகத் தெரிகிறது ! குற்றமென்ன செய்தான் கூறுவீர் ?

    ஜெனரல் கிரான்ட்: நேற்றுச் செய்த காவல் காப்பில் அவன் தூங்கிப் போய்விட்டான் ! கடமை உணராத கயவன் அந்தப் படைவீரன் ! அவனுக்கு மன்னிக்கத் தகுதியில்லாதவன் மிஸ்டர் பிரசிடென்ட் ! அத்தகைய மாந்தர் மன்னிக்கப் படுவதால் இராணுவத்தின் ஒழுக்க விதிகள் கறைபட்டு விடுகின்றன. அந்தச் சமயத்தில் பகைவர் யாராவது நமது இராணுவப் படை முகாமுக்குள் நுழைந்திருந்தால் என்னவாகும் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் தூங்கிப் போனான் என்று விசாரித்தீரா ?

    ஜெனரல் கிரான்ட்: விசாரணையில் நானும் கலந்து கொண்டேன், மிஸ்டர் பிரிசிடென்ட் வில்லியம் ஸ்காட் இரட்டை வேளைப் பணி புரிய (Double Guard Duty) ஒப்புக் கொண்டான். காரணம் நோயில் விழுந்த அவன் தோழனுக்கு உதவி செய்ய ! அவன் காவற் கூண்டில் தூங்கிக் கிடந்ததைப் படைவீரர் சிலர் கண்டுபிடித்துப் புகார் செய்தனர் !

    ஆப்ராஹாம் லிங்கன்: மிஸ்டர் கிரான்ட் ! உமது நியாயத் தீர்ப்பு என்ன ? சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு தண்டனை கொடுக்க முடியாதா ?

    ஜெனரல் கிரான்ட்: மரண தண்டனையைத் தவிர்த்து வெறும் தண்டனை விதிக்கத்தான் நானும் முதலில் நினைத்தேன். இராணுவச் சட்டப்படிச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற விதியை முறிக்க விருப்பமில்லை எனக்கு ! போர் மும்முரத்தில் மிகச் சிக்கலான தருணம் ! நானே நமது இராணுவச் சட்டத்தை முறிக்கத் தயங்கினேன் ! நாளை காலை உதயத்திற்குள் கயவன் சுடப்பட வேண்டும். அதுதான் என் முடிவும் தீர்ப்பும் !

    ஆப்ரஹாம் லிங்கன்: போர் முடியும் தருவாயில் இன்னும் ஓர் உயிர் போக வேண்டுமா ? இனிமேல் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை ! எங்கே அவன் ?

    காப்டன் மாலின்ஸ்: ஈதோ ! ஸ்காட்டை அழைத்து வருகிறார்.

    (கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்ட வில்லியம் ஸ்காட்டை இரு படைக் காவலர் இழுத்து வருகிறார். மரண நிழல் அவன் முகத்தில் தெரிகிறது. இருபது வயதுப் படை வாலிபன் லிங்கனைக் கண்டதும் விழிக்கிறான்.)

    unnamed (29)

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் பெயர் என்ன ?

    படைவீரன்: வில்லியம் ஸ்காட் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நான் யாரென்று தெரியுமா ?

    வில்லியம் ஸ்டாட்: தெரியும் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் வயதென்ன ? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் நீ ?

    வில்லியம் ஸ்காட்: இருபது ஸார் ! வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: உன்னை இராணுவக் குற்றவாளியாய்ச் சிறை செய்திருப்பதாக ஜெனரல் சொல்கிறார்.

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: காவல் காக்கும் கூடத்தில் நீ தூங்கினாயா ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: கடமைப் பணியில் தூங்கிப் போவது தீவிரக் குற்றம் தெரியுமா ?

    வில்லியம் ஸ்காட்: அதை நான் அறிவேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நின்று கொண்டு காவல் புரியும் போது எப்படித் தூக்கம் வந்தது ?

    வில்லியம் ஸ்காட்: கண்விழிக்க முடியவில்லை ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: என்ன நீண்ட தூரம் கால்நடைக் காவல் புரிந்தாயா ?

    வில்லியம் ஸ்காட்: இருபத்தி மூன்று மைல்கள் நடந்தேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நீ இரட்டை வேளைக் காவல் வேறு செய்தாயா ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    unnamed (30)

    ஆப்ரஹாம் லிங்கன்: யார் உனக்கு இரட்டை வேளைப் பணி கொடுத்தது ?

    வில்லியம் ஸ்காட்: யாரும் ஆணையிடவில்லை ஸார் ! நானே முன்வந்து செய்தேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் அப்படிச் செய்தாய் ?

    வில்லியம் ஸ்காட்: வேலை செய்ய வேண்டிய என் தோழன் ஏனாக் ஒயிட் (Enoch White) நோயில் படுத்து விட்டான் ஸார். கடும் காய்ச்சல் அவனுக்கு ! நான் அவனுக்காக அவன் வேலையை எடுத்துக் கொண்டேன் ஸார். நாங்கள் இருவரும் வெர்மான்டைச் சேர்ந்தவர்கள் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: வெர்மான்டிலா நீ வசிக்கிறாய் ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் ! எங்களுடைய வயல் அங்கேதான் இருக்குது ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது யாரந்த வயலை மேற்பார்வை செய்வது ?

    வில்லியம் ஸ்டாட்: என் தாயார் ஸார் ! என்னிடம் தாயின் படம் உள்ளது ஸார். (பையிலிருந்து ஒரு படத்தை எடுக்கிறான்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் தாயிக்கு நீ செய்த குற்றம் தெரியுமா ? நீ நாளைக் காலையில் சுடப் பட்டுச் சாகப் போவது உன் தாயிக்குத் தெரியமா ?

    வில்லியம் ஸ்காட்: தாயிக்குத் தெரியாது ஸார் ! தாயிக்குச் சொல்லக் கூடாது ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: தாயிக்கு ஏன் தெரியக் கூடாது என்று சொல்கிறாய் ?

    unnamed (31)

    Fig. 6 The Beginning of the End

    வில்லியம் ஸ்காட்: நான்தான் சாகப் போகிறேன் நாளைக்கு ! அந்தச் செய்தியைக் கேட்டு என் தாய் சாகக் கூடாது ஸார் ! நான் உயிரோடு இருக்கிறேன் என்பது என் தாயுக்கு ஆயுளை நீடிக்கும் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? உன் தாய் சாக வேண்டியதில்லை ஸ்காட் ! . . . நீயும் சாக வேண்டியதில்லை ! ஒருவரைச் சுடுவதால் இருவர் ஏன் சாக வேண்டும் ?

    வில்லியம் ஸ்காட்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஸார் ? நான் குற்றவாளி. . . . ?

    ஆப்ரஹாம் லிங்கன்: யாரும் உன்னைச் சுடப் போவதில்லை நாளை !

    வில்லியம் ஸ்காட்: யாரும் என்னைச் சுடப் போவதில்லையா ஸார் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை ! விடுதலை உனக்கு ! போ நீ சுதந்திர மனிதன் !

    வில்லியம் ஸ்காட்: (குப்பென அழுகையுடன்) நன்றி ஸார் ! நன்றி ஸார் ! (தரையில் மண்டியிட்டு அழுகிறான். மேலே கைகளைக் கூப்பி வணங்கிக் கண்களை மூடிக் கொள்கிறான்.)

    unnamed (32)

    Fig. 7 Lincoln’s Gettysburg Speech

    ஆப்ரஹாம் லிங்கன்: (காவலரை பார்த்து) அவிழ்த்து விடுங்கள் விலங்குச் சங்கிலியை ! அவனுக்கு விடுதலை ! அவன் பேச்சில் உண்மையைக் கண்டேன் ! அவன் கண் விழிக்க முடியாமல் போன காரணத்தை நம்புகிறேன் ! (ஜெனரல் கிரான்டைப் பார்த்து) அவன் குற்றத்தை நான் மன்னித்து விட்டதாக எழுதி நீக்கி விடுங்கள் ! ஸ்காட் ஒரு கடமை வீரன் ! அந்த நிலையில் எந்தப் படைக் காவலனும் தூங்கித்தான் போவான் ! இரட்டை வேளைக் காவல் புரியக் காப்டன் முதலில் அனுமதித்தது தவறு ! (காவலரைப் பார்த்து) ஸ்காட்டை ஜெனரல் மீடு இருக்கும் போர்க்களத்துக்குக் கூட்டிச் செல்வீர் ! சங்கிலியை நீக்குவீர் முதலில் ! ஸ்காட் சுதந்திர மனிதன் !

    (விலங்குச் சங்கிலிகளை நீக்கி விட்டுக் காவலர் வில்லியம் ஸ்காட்டை கௌரமாக அழைத்துச் செல்கிறார்)

    unnamed (33)

    ++++++++++

    “என் ஆரம்ப காலத்தில் ஜெரனல் ராபர்ட் லீ யிடமிருந்து இராணுவப் பயிற்சியில் நான் நிறைய கற்றிருக்கிறேன். அப்போது அவர் பயிற்சி அளிக்கும் படை வீரராய் இருந்தார். எங்கள் எல்லாரையும் விடப் பன்முறையில் உயர்ந்தவர் ராபர்ட் லீ ஒருவர்தான் ! பகைவர் ஆயினும் உயர்ந்த வீரர் அவர் ! இந்த ஒப்பந்த நிகழ்ச்சி எனக்கு மிக்க உணர்ச்சி பொங்குவதாய் இருக்கும் ! என் முன் தலை குனியும் ஜெனரல் ராபர்ட் லீயைக் காணவே என் கண்கள் கூச்சம் அடையும் ! வாய் பேசவே நாணும் ! கைகள் குலுக்கவே தயங்கும் ! கால்கள் நிற்கவே நடுங்கும் !”

    அமெரிக்க யூனியன் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட்

    “. . . தனிப்பட்ட உரிமைகளுக்கும், கொடைகளுக்கும் காரணமான கடவுளின் நியாயத்தைப் போற்றி நமது தேசத்தின் பிறழ்ந்த போக்கிற்கும், கீழ்ப்படியாமைக்கும் பாப மன்னிப்பு கேட்கட்டும் அவர்கள் (தென்னவர்) ! அத்துடன் வேதனை தரும் உள்நாட்டுப் போராட்டத்தில் விலக முடியாது பங்கெடுத்தவரால் விதவையானோர், அனாதியானோர், துக்கமடைவோர், துன்பப்படுவோர் ஆகியோருக்குக் கடவுள் கருணை காட்ட வழிபடட்டும் அவர்கள் ! மேலும் சமாதானத்தை அனுபவிக்கவும், சீரிய மனநிலை நிலவிடவும், ஐக்கியப் பண்பாடு அமைந்திடவும், கடவுளின் கரங்கள் தேசக் காயங்களை ஆற்றி விரைவில் மீண்டும் புத்துயிர் பெற மெய்வருந்திப் பிரார்த்திக்க வேண்டும் அவர்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (அறுவடை நன்றிப் பொழுவுரை) (Proclamation of Thanksgiving) (அக்டோபர் 3, 1863)

    unnamed (34)

    “மாஸ்ஸசுசெட்ஸ் ஜெனரலின் இடத்தில் பணிபுரியும் அதிகாரி தான் தயாரித்த ஓர் அரசாங்கப் போர் அறிக்கையை எனக்குக் காட்டினார். போர்க்களத்தில் புகழோடு உயிரைப் பலிகொடுத்த ஐந்து புதல்வரின் அன்னை நீதான் என்பதை அந்த அறிக்கையில் நான் கண்டேன். அந்தப் பேரிழப்பின் சோகத்திலிருக்கும் உனக்கு நான் ஆறுதல் கூற முயலும் வார்த்தைகள் எப்படி வலுவிழந்து பலனற்றதாய் நேர்மையின்றி இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உயிர் கொடுத்துப் பாதுகாத்த நமது குடியரசின் நன்றியைப் பரிவோடு உனக்குக் கூறாமல் என்னால் சும்மா இருக்க இயலாது. நமது மேலுலகப் பிதாவிடம் உனது பேரழப்பு வேதனையைக் குறைக்க நான் பிரார்த்திக்கிறேன். விடுதலைப் பலி பீடத்தில் உனது நேசப் புதல்வர் அனைவரும் உன்னதத் தியாகம் செய்த பெருமையை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (நவம்பர் 21, 1864)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -3

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், ஹே, மற்றும் காவலர் பணியாட்கள்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு தற்காலியக் கூடாரம்.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். போர்க்கூடாரத்தில் ஆப்ரஹாம் லிங்கனும் ஹேயும் தூங்கிக் கொண்டிருக்கிறார். பொழுது புலர்ந்து வெளுக்கிறது. பணியாள் சுடச்சுட ஆவி பொங்கும் கா·பியைச் சில பிஸ்கட்டுகளுடன் தட்டில் ஏந்தி வருகிறான். ஆப்ரஹாம் லிங்கன் மெதுவாக விழித்தெழுகிறார். பணியாள் மேஜையில் கா·பி, பிஸ்கட் தட்டை வைக்கிறான்.

    நேரம்: காலை வேளை.

    unnamed (35)

    Location of Surrender McLean House

    ஆப்ரஹாம் லிங்கன்: (விழித்து எழுந்து கொண்டு) குட் மார்னிங் !

    பணியாள்: குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (பிஸ்கட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு) நன்றி ! (பணியாள் போகிறான்). (ஹேயைப் பார்த்து) ஹே ! (சத்தமாக) ஹே ! எழுத்திடு ! உன் கா·பி ஆறிப் போகுது !

    ஹே: (எழுந்த வண்ணம்) குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் ஹே ! கா·பியைக் குடிப்பீர் !

    ஹே: நன்றி மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: மணி என்ன ?

    ஹே: ஆறு மணி ஸார்.

    (அப்போது ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட் வேகமாக உள்ளே நுழைகிறார்)

    ஜெனரல் கிரான்ட்: குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் ! குட் மார்னிங் ஹே !

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் ஜெனரல் !

    ஹே: குட் மார்னிங் ஸார் !

    unnamed (23)

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட்! நேற்றிரவு உங்கள் தூக்கத்தைக் கலைக்க நான் விரும்பவில்லை. ஜெனரல் மீடு ஒரு முக்கியத் தகவல் அனுப்பியிருந்தார். ஜெனரல் ராபர்ட் லீ காலை நான்கு மணிக்குப் போரை நிறுத்துவதாகச் சொல்லியிருக்கிறார். சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: (சற்று அமைதியாக இருந்து, கண்ணீருடன் பெருமூச்சு விட்டு) நான்கு வருடங்களாக நாமெல்லாரும் இந்த நம்பிக்கை தினத்துக்குத்தான் காத்திருந்தோம் ! மெய்யாக அந்த நாள் நம்மை நெருங்கும் போது எத்தனை எளிதாக வருகிறது ? ஜெனரல் கிரான்ட் ! நீங்கள் இந்த தேசம் பிரிந்து போகாமல் பிணைத்து விட்டதுதான் பெரிய செய்தி ! அமெரிக்க ஐக்கியத்தை நிலைநாட்டும் எனது கனவை நினைவாக்கிய போர் ஜெனரால் நீங்கள்தான் ! அடிமை கறுப்பருக்கு விடுதலை அளிக்க வேண்டும் எனது தீராத தாகத்தைத் தீர்த்தவர் நீங்கள்தான் ! அமெரிக்க வரலாற்றில் விடுதலை வீரரான உமது பெயர் வாழையடி வழியாக வந்து கொண்டே இருக்கும் ! உமது தளராதப் போர்த் திறமைக்கும், வெற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றி ! (கண்ணீருடன் கையை நீட்டி கிரான்ட் கரத்தைக் குலுக்குகிறார்.)

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் ! தேச ஐக்கியத்தைக் காப்பாற்றிய உங்கள் பெயர்தான் வரலாற்று முக்கியத்துவம் பெறும். ஜெனரல் ராபர்ட் லீ திறமைமிக்க ஒரு போர் வீரர் ! அவரிடம் இராணுவப் பயிற்சியைக் கற்றவன் நான் ! அவரை வீழ்த்த முடியுமா என்று நான் கலங்கியதுண்டு. என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையால்தான் நான் வெற்றி பெற்றேன் ! நீங்கள் அளித்த ஊக்கத்தால் எனக்கு இரட்டிப்பு வலுமை கிடைத்தது ! நான் மட்டும் தனியாக இந்த உள்நாட்டுப் போரை நடத்தியிருக்க முடியாது !

    unnamed (24)

    ஆப்ரஹாம் லிங்கன்: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) இப்போது எங்கே இருக்கிறார் ஜெனரல் ராபர்ட் லீ ?

    ஜெனரல் கிரான்ட்: ஜெனரல் லீ இங்கே வந்து கொண்டிருக்கிறார் ! அவருக்கும் முன்பாக நமது ஜெனரல் மீடு இங்கு வந்து விடுவார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஜெனரல் ராப்ர்ட் லீ ஒப்பந்தம் செய்ய எங்கே காத்திருப்பார் ?

    ஜெனரல் கிரான்ட்: மெக்லீன் மாளிகையில் அறை ஏற்பாடாகி இருக்கிறது மிஸ்டர் பிரசிடென்ட் ! ஜெனரல் ராபர்ட் லீயை நீங்கள் வரவேற்க வருகிறீர்களா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை கிராண்ட் ! அது உங்கள் வேலை ! அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை ! போர்க்களத்தில் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டியது போர் புரியும் ஜெனரல் ! அரசியல்வாதிகள் அல்லர் ! ஜெனரல் ராபர்ட் லீயிடம் பரிவாக நடப்பீர் ! நமது பகைமைகள் இன்றுடன் நீங்கி விட்டன ! தேச ஐக்கியம் ஒன்றாகும் போது நமக்குள்ள விரோதங்கள் மறையட்டும்.

    ஜெனரல் கிரான்ட்: (தன் பையிலிருந்து அச்சடித்த ஒரு தாளை எடுத்து) ஈதோ ஒப்பந்த நகல் ! நான் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் படித்துப் பாருங்கள் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (தாளை வாங்கி நிபந்தனைகளைப் படிக்கிறார்) ஒப்பற்ற நிபந்தனைகள் ஜெனரல் கிரான்ட் ! நான் கூட இத்தனை பரிவுடனும், அழுத்தமுடனும் எழுதியிருக்க மாட்டேன். மேன்மையான ஒப்பந்தம் ! உங்களுக்கு மேதமை அளிக்கும் ஒப்பந்தம் ! (கிரான்டிடம் தாளைத் திருப்பிக் கொடுக்கிறார்)

    (அப்போது ஒரு பணியாள் சல்யூட் செய்து உள்ளே நுழைகிறான்.)

    பணியாள்: ஜெனரல் மீடு வந்திருக்கிறார் இங்கே !

    unnamed (25)

    ஜெனரல் கிரான்ட்: உள்ளே வரச் சொல் அவரை ! (பணியாள் போகிறான்.) (லிங்கனைப் பார்த்து) என் ஆரம்ப காலத்தில் ஜெரனல் ராபர்ட் லீ யிடமிருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அப்போது அவர் காப்டனாக இருந்தார். எங்கள் எல்லாரையும் விடப் பன்முறையில் உயர்ந்தவர் ராபர்ட் லீ ஒருவர்தான் ! பகைவர் ஆயினும் உயர்ந்த வீரர் அவர் ! இந்த ஒப்பந்த நிகழ்ச்சி எனக்கு மிக்க உணர்ச்சி பொங்குவதாய் இருக்கும் ! என் முன் தலைகுனியும் ஜெனரல் ராபர்ட் லீயைக் காணவே என் கண்கள் கூச்சம் அடையும் ! வாய் பேசவே நாணும் ! கைகள் குலுக்கவே தயங்கும் ! கால்கள் நிற்கவே நடுங்கும் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஜெனரல் கிரான்ட் போர் ஒப்பந்தத்தைத் தைரியமாய்ச் செய்கிறார் என்று !

    (அப்போது ஜெனரல் மீடு உள்ளே நுழைகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: வாழ்த்துக்கள் ஜெனரல் மீடு ! செயற்தக்க செய்கை செய்தீர் ! பெறத்தக்க வெற்றியைப் பெற்றீர் ! பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! (ஜெனரல் மீடின் கையைக் குலுக்குகிறார்)

    unnamed (36)

    +++++++++

    கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது : டச் நாட்டுக் கிராமத்தான் ஒருவன் தன் தோழனிடம் ஒரு சமயம் சொன்னானாம். “ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் போது வண்டியில் குதிரையை மாற்றக் கூடாது” என்று.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது (ஜூன் 9, 1864)]

    “நாம் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே. நாம் பகைவராக மாறிவிடக் கூடாது. உணர்ச்சி ஆவேசத்தில் நமக்குள் மனமுறிவு ஏற்பட்டாலும் நமது பாசமும் பந்தமும் அறுந்துவிடக் கூடாது. புதிரான நினைவு அம்புகள் ஒவ்வொரு போர்க் களத்திலிருந்தும், தேசீய இடுகாட்டிலிருந்தும் நீண்டு, அகண்ட இந்த நிலத்தில் உயிருடன் வாழும் ஓர் இதயத்தையும் தொடும். அந்தத் தடத்தை மனிதப் பண்பாட்டின் தெய்வீகம் மறுபடியும் தொடும் போது அமெரிக்க ஐக்கிய முழக்கத்தை ஓங்கி உயர்த்தி வலுப்படுத்தும்.

    ஆப்ரஹாம் லிங்கன், முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)

    என்னுடைய சித்தாந்த நியதியில் திடீர் நிகழ்ச்சிகள் (Accidents) என்று குறிப்பிடப்படும் சம்பவங்கள் கிடையா ! ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். நிகழ்கால விளைவுக்குக் காரணம் கடந்த காலம் ! அதுபோல் எதிர்கால விளைவுக்குக் காரணம் நிகழ்காலம். இவை யெல்லாம் முடிவற்ற ஒரு தொடர்ச் சங்கிலியாக எல்லைக் குட்பட்ட நிலையிலிருந்து முடிவில்லா நிலைக்கு நீள்பவை.

    ஆப்ரஹாம் லிங்கன்

    unnamed (37)

    போர் முடிந்து சமாதான ஒப்பந்தம்

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -4

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், லிங்கனுக்குக் கீழ்ப் பணி செய்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட், ஹே, மாலின்ஸ் மற்றும் காவலர் பணியாட்கள். சரணடையும் தென்னக ஜெனரல் ராபர்ட் லீ மற்றும் அவரது துணைத் தளபதிப் படை வீரர்கள்.

    இடம் : வெர்ஜினியா: போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு தற்காலியக் கூடாரம். பிறகு சாமாதான ஒப்பந்தம் செய்யும் மெக்லீன்ஸ் மாளிகை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடிந்து தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீ தோல்வியுற்று முன்வந்து சரணடைகிறார். ஜெனரல் லீ சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மெக்லீன்ஸ் மாளிகையில் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. ஜெனரல் கிராண்டை ஒப்பந்தம் செய்ய விட்டு விட்டு லிங்கன் வாஷிங்டன் போகிறார்.

    நேரம்: பகல் வேளை.

    unnamed (38)

    Fig. 3 The Signing Ceremony of Surrender

    ஆப்ரஹாம் லிங்கன்: வாழ்த்துக்கள் ஜெனரல் மீடு ! செயற்தக்க செய்கை செய்தீர் ! பெறத்தக்க வெற்றியைப் பெற்றீர் ! பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! (ஜெனரல் மீடின் கையைக் குலுக்குகிறார்)

    ஜெனரல் மீடு: (கையைக் குலுக்கியபடி) மிக்க நன்றி மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: போர் ஓய்ந்து விட்டதா ? அல்லது இன்னும் நடந்து கொண்டிருக்கிறதா ?

    ஜெனரல் மீடு: கடுமையாக சுமார் இரண்டு மணி நேரம் இன்று போர் நடந்தது ! அதோடு போர் ஓய்ந்தது ! மிஸ்டர் பிரசிடென்ட் ! போர் முடிந்தது !

    ஆப்ரஹாம் லிங்கன்: மிக்க நன்றி கடவுளுக்கு ! மிக்க நன்றி உங்களுக்கு ! இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் ஜெனரல் ராபர்ட் லீ தங்கி இருக்கிறார் ?

    ஜெனரல் மீடு: பக்கத்தில்தான் தங்கியிருக்கிறார் ஜெனரல் லீ ! மிஸ்டர் பிரசிடென்ட் ! நாம் குறிப்பிடும் இடத்தில் நம்மைச் சந்திப்பதாகவும் சொல்லித் தகவல் அனுப்பியிருக்கிறார். இன்று சரண்டைய நம்மிடம் வருகிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: நல்ல செய்தி ! நானொன்று கேட்க வேண்டும். வாலிபப் பையன் ஒருவன் உங்கள் இராணுவ முகாமுக்கு நேற்று வந்தானா ? அவன் பெயர் வில்லியம் ஸ்காட் !

    unnamed (39)

    ஜெனரல் மீடு: ஆமாம் மிஸ்டர் பிரசிடென்ட் ! வந்தவனை நேராக போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தோம் ! ஆனால் ஸ்காட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆனால் என்று ஏன் நிறுத்திக் கொண்டீர் ?

    ஜெனரல் மீடு: (வருத்தமோடு) ஸ்காட் எதிரிகளால் சுடப்பட்டு மாண்டான் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (ஆர்வமோடு) என்ன ? போரில் கொல்லப் பட்டானா அந்த அப்பாவி வாலிபன் ? பாவம் அவன் அன்னை ! போர் முடிந்து தாயைக் காண ஆவலோடிருந்தான் ! இப்போது போர் முடியும் போது அவன் ஆயுளும் முடிந்தது !

    ஜெனரல் மீடு: ஆமாம் மிஸ்டர் பிரசிடென்ட் ! நீங்கள்தான் காப்பாற்றியதாகச் சொல்லி ஆனந்தம் அடைந்தான் அந்த வாலிபன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) நமது ·பயரிங் ஸ்குவாடால் மாள வேண்டியன், பிழைத்துச் சென்று இறுதியில் போரிட்டு வீர மரணம் அடைந்தான் ! விநோதமான உலகம் இது ! போர்க் களத்தில் வீர மரணம் அடைய வேண்டும் என்று கடவுள் அவனைப் படைத்திருக்கிறார். (ஜெனரல் கிராண்டைப் பார்த்து) கிராண்ட் ! வில்லியம் ஸ்காட்டுக்கு வெறி விழாவில் வீரப் பதக்கம் அளிக்க வேண்டும் நீங்கள் !

    ஜெனரல் கிராண்ட் (பையிலிருந்த தாளில் வில்லியம் ஸ்காட் பெயரைக் குறித்து) மறக்க மாட்டேன் அந்த வாலிபனை மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (ஜெனரல் மீடைப் பார்த்து) புரட்சிக்காரர் யாரும் உயிரோடு பிடிக்கப் பட்டுள்ளாரா ?

    ஜெனரல் கிராண்ட்: நூற்றுக்கு மேலாக இருக்கிறார் ! அவர்களைத் தூக்கில் போடவா அல்லது. ·பயரிங் ஸ்காவாட் சுட்டுத் தள்ளவா என்று யோசிக்கிறேன் !

    unnamed (21)

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை ! இனி யாரையும் சுடவும் வேண்டாம் ! கயிற்றில் சுருக்கிடவும் வேண்டாம் ! எத்தனைக் கொடிய புரட்சிக்காரராக இருந்தாலும் சரி அவரை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்துங்கள் பயமுறுத்தி ! அது போதும் ! சிறைக் கதவுகளைத் திறந்து விடுங்கள் ! போர்க் கைதிகளைப் பயமுறுத்தி விரட்டி விடுங்கள் ! குட் பை கிராண்ட் ! சமாதான உடன்படிக்கை முடிந்த பிறகு விரைவில் வாஷிங்டனுக்கு வாருங்கள் ! போருக்குப் பிறகு தென்னக மாநிலங்களின் நிலையைக் கண்காணிப்பது பற்றி நான் உரையாட வேண்டும்.

    (கிராண்ட் கைகளைக் குலுக்கி விட்டு லிங்கன் வெளியே போகிறார். எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்கிறார். ஜெனரல் மீடு சல்யூட் செய்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (ஜெனரல் மீடைப் பார்த்து) யார் ஜெனரல் ராபர்ட் லீயுடன் இருப்பது ?

    ஜெனரல் மீடு: அவரது லெஃப்டினென்ட் ஜெனரல்தான் கூட இருப்பவர் ஸார் !

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! ஜெனரல் ராபர்ட் லீ மாளிகைக்கு வருவதை உடனே அறிவிக்க வேண்டும் நீ ! ஜெனரல் மீடு ! நீங்கள்தான் ஜெனரல் லீயை வரவேற்க வேண்டும் மாளிகையில் !

    மாலின்ஸ்: அவரது வருகையை அறிவிக்கிறேன் ஸார் !

    ஜெனரல் மீடு: ஜெனரல் லீயை நான் வரவேற்கிறேன் ஸார் !

    ஜெனரல் கிராண்ட்: சமாதான ஒப்பந்தம் எனது பெரிய பணி ! சரித்திர முக்கியத்துவம் பெறும் மகத்தான தேசப்பணி !

    unnamed (40)

    ஜெனரல் மீடு: ஆமாம் ஸார் ! இதற்குத்தான் நான்கு ஆண்டுகள் நாம் போராடினோம் ! ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்தோம் ! இந்த தருணத்துக்குத்தான் நாம் காத்திருந்தோம் !

    ஜெனரல் கிராண்ட்: நமது போராட்டத்தில் நியாயம் இருந்தது ! நாம் யாவரும் நமது குறிக்கோளை முழுமையாய் நம்பினோம் ! நமது வெற்றி உன்னதமானது ! நமது தீர்மானம் வலுவானது ! ஒரு பெரும் போர்த் தளபதியை வெல்லும் திறமை நமக்கு உண்டானது ! அத்தனை தகுதிகளும் ஆப்ரஹாம் லிங்கனால் கிடைத்தவை ! அவரது உயர்ந்த குறிக்கோள் வெற்றி ஈந்தது நமக்கு ! போருக்குத் தகுந்த காரணம் கிடைத்தது ! லிங்கனின் தளராத ஊக்கம் நமக்குக் கிடைத்தது ! நாம் எல்லாம் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட வைத்த பெருமை லிங்கனைச் சாரும் !

    ஜெனரல் மீடு: ஆமாம் ஸார் ! பிரிந்து போன மாநிலங்களை சேர்த்த பெருமை பிரசிடென்ட் லிங்கனையே சாரும் !

    ஜெனரல் கிராண்ட்: உங்களுக்குத் தெரியுமா ? ரிப்பபிளிகன் கட்சியில் சில முட்டாள்கள் அடுத்த தேர்தலில் பிரசிடெண்ட் லிங்கனை நான் எதிர்த்து நிற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் ! என் சுயப் பெருமை எனக்கு இருக்குது ! ஆப்ரஹாம் லிங்கன் உயிரோடு உள்ளது வரை அவர்தான் அமெரிக்காவின் பிரசிடென்ட் ! எனக்கும் உமக்கும் பிரசிடென்ட் ! நான் அவருக்குப் பிறகுதான் !

    மாலின்ஸ்: (உள்ளே வந்து கொண்டே) ஜெனரல் ராபர்ட் லீ மாளிக்கைக்கு வந்திருக்கிறார் !

    ஜெனரல் மீடு: ஜெனரல் கிராண்ட் ! நான் ஜெனரல் லீயை வரவேற்றுச் சமாதான உடன்பாடு ஏற்பாடுகளைச் செய்கிறேன்.

    unnamed (23)

    (ஜெனரல் மீடு சல்யூட் செய்து தனது உடைவாளை மாட்டிக் கொண்டு மாளிகைக்குப் போகிறார். ஒப்பந்த மாளிகையில் ஜெனரல் மீடு வரவேற்கிறார் தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீ தன் உடைவாளுடன் உள்ளே நுழையும் போது. பின்னால் அவரது படையாட்கள் தொடர்கிறார். ஜெனரல் லீயின் முகம் சோகமாகத் தெரிகிறது. ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட் தன் படைகளுடன் உள்ளே நுழைகிறார். ஜெனரல் கிராண்ட் கைதூக்கி சல்யூட் செய்ய ஜெனரல் ராபர்ட் லீயும் சல்யூட் பதிலுக்குச் செய்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (ஜெனரல் லீயை பார்த்து) ஸார் ! உங்கள் விஜயம் எனக்குப் பெரு மதிப்பாகத் தெரிகிறது ! உங்கள் வருகையால் நாங்கள் பெருமை பெறுகிறோம்.

    ஜெனரல் ராபர்ட் லீ: (பணிவுடன்) உங்கள் வெற்றியை நான் ஏற்றுக் கொள்கிறேன் ! எனது வலிமை குன்றவில்லை ! ஆனாலும் என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் ! நிபந்தனை யற்ற சரணம் என்பக்கம் ! நான் எந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் ஜெனரல் கிராண்ட் !

    ஜெனரல் கிராண்ட்: (மேஜை மீதிருந்த பெரிய உறையிலிருந்து அச்சடித்த தாளை எடுத்து ஜெனரல் லீயிடம் கொடுக்கிறார்.) நிபந்தனைகள் எல்லாம் எளியவைதான் ! உங்களால் முடியாத வினைகள் அல்ல ! உங்களுடைய ஒப்புதலுக்கு ஏற்றவை என்பது என் அபிப்பிராயம் !

    ஜெனரல் ராபர்ட் லீ: (கையில் வாங்கிப் படித்த பிறகு) எல்லாம் பரிவோடு எழுதப்பட்டவை. ஒப்புக் கொள்கிறேன் அனைத்தையும் ! ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் !

    ஜெனரல் கிராண்ட்: அதனை ஆவலுடன் கேட்க எதிர்நோக்குகிறேன்.

    unnamed (41)

    Abraham Lincoln

    Who Saved the Nation

    ஜெனரல் லீ: எங்கள் ஆயுதங்களை எல்லாம் உங்கள் வசம் இன்றே இப்போதே ஒப்படைக்கிறோம் ! எங்கள் பீரங்கிகள் எல்லாம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் இந்த அனுமதி மட்டும் வேண்டும் எனது குதிரைப்படை வீரருக்கு ! அவரது குதிரைகளை அவரிடமே விட்டுவிட அனுமதி அளியுங்கள் தயவு செய்து ! அந்தக் குதிரைகள் அவருக்குச் சொந்தமானவை ! அவரது சொந்த நிதியில் வாங்கிய குதிரைகள் அவை ! அரசாங்கக் குதிரைகள் அல்ல அவை !

    ஜெனரல் கிராண்ட்: எனக்குப் புரிகிறது ! அவரது குதிரைகள் அவருக்குத் தேவை ! அமைதிக் காலத்தில் வயல் வேலைக்களுக்குத் தேவை ! அவ்விதமே அவரது குதிரைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நான் சமாதான ஒப்பந்தத்தில் அவருக்கு அனுமதியை எழுத்தில் எழுதித் தருகிறேன்.

    ஜெனரல் லீ: உங்கள் நிபந்தனைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், (மேஜை மேல் இருக்கும் ஒப்பந்தத் தாள்களில் பல இடங்களில் தனது கையெழுத்தை இடுகிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (அதே தாள்களில் குதிரை வீரருக்கு விட்டுவிடும் குதிரைகள் பற்றி அனுமதி எழுதி அவரும் பல இடங்களில் கையொப்பம் இடுகிறார்.)

    (ஜெனரல் ராபர்ட் லீ தன் உடைவாளுடன் உறையை அவிழ்த்து ஜெனரல் கிராண்டிடம் மரியாதையாக ஒப்படைக்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (உடைவாளை வாங்கி மீண்டும் ஜெனரல் லீயிடம் கொடுத்து) இந்த வாள் இருக்கும் இடத்திலே இருக்கட்டும். இது உங்கள் உரிமை வாள் !

    (ஜெனரல் லீ தன் உடைவாளை வாங்கிக் கொள்கிறார். இரு ஜெனரல்களும் சல்யூட் செய்து கைகுலுக்கிக் கொள்கிறார்கள். பிறகு ஜெனரல் லீ தனது ஒப்பந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு படையாட்களுடன் மாளிகையை விட்டு நீங்குகிறார்.)

    +++++++++

    unnamed (4)

    Lincoln Memorial

    Washington D.C.

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !

    கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை !

    தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !

    அருகில் துறைமுகம், ஆலய மணி கேட்கும் !

    வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !

    ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !

    ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !

    கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்கிறார் காப்டன் மரித்துப் போய் சரிந்து !

    வால்ட் விட்மன் (Walt Whitman) (1819-1892)

    (புல்லின் இலைகள்)

    +++++++++++++

    புயல் அடித்தது இரவிலே !

    ரோஜா இழக்கும் தன் பெருமை !

    மழைத்துளி பொழியும் !

    வேனிற் காலப் பரிதியின்

    ஒளிச்சுடர் மங்கும் !

    பனித்துளி கழுவின மலர்க் குமிழை !

    நன்றியும் புகழ்ச்சியும்

    நம் குருதியில் கலந்திடும்

    நறுமண ரோஜா மலராய் !

    ஜான் டிரிங்க்வாட்டர், நாடக ஆசிரியர்

    +++++++

    unnamed (42)

    “நான் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவன் அல்லன் ! புனிதக் கடவுளே எனக்குதவி செய் ! என் வாழ்வும், வளமும் ஆத்மாவும் தென்னவர்க்கே உரியது ! இந்த தேசம் வெள்ளைக்காரருக்காக உண்டாக்கப் பட்டது, கறுப்பனுக்காக இல்லை ! ஆ·பிரிக்கன் அடிமைத்தனத்தை நமது உன்னத வேளாண்மைக்காரர் அரசியல் கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது கடவுள் தன்னருமைத் தேசத்துக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்றாகக் கருதுவேன்.”

    ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) (1864)

    “யாங்க்கி ஏதேட்சை அதிகாரத்தில் இனங்கள் கலப்பாகி வெள்ளை அமெரிக்கா மானமிழந்து மூழ்கிப் போவதை விட லிங்கன் செத்து ஒழிவது மேலானது ! நமது இன்னல்கள் எல்லாவற்றுக்கும் காரணமானர் அவர்தான் ! கடவுள் அவரைத் தண்டிக்கவே என்னைக் கருவியாக்கி யுள்ளார்.”

    ஜான் வில்கிஸ் பூத்.

    +++++++++++

    unnamed (43)

    Lincoln Private Box

    உள்நாட்டுப் போரில் வெற்றி

    காட்சி -6

    (இறுதிக் காட்சி)

    (ஏப்ரல் 14 1865)

    (மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டது)

    பங்கெடுப்போர் : ஆப்ரஹாம் லிங்கன், எட்வின் ஸ்டான்டன் (Secretary of War), மேரி லிங்கன், மிஸ் கிளாரா ஹாரிஸ், மேஜர் ஹென்றி ராத்போன், ஜான் வில்கிஸ் பூத்.

    இடம் : ·போர்டு தியேட்டர், வாஷிங்டன் D.C.

    இப்போதைய காட்சி: ·போர்டு நாடக அரங்கில் உயர் மட்டத்தில் இருக்கும் பால்கனிப் பெட்டி அறைகள். ஒன்றில் ஆப்ரஹாம் லிங்கனும் மிஸிஸ் லிங்கனும் அமரப் போகிறார். எட்வின் ஸ்டான்டன் மற்றும் மிஸ் கிளாரா ஹாரிஸ், ஹென்றி ராத்போன் அதே பெட்டி அறையில் இருக்கிறார். சுமார் 1000 பேர் நாடகக் கொட்டகையில் அமர்ந்து நாடகம் பார்க்கிறார்கள். நடக்கும் நாடகம் : நமது அமெரிக்கப் பங்காளி (Our American Cousin). நாடகம் நடக்க ஆரம்பித்து விட்டது.

    நேரம்: இரவு வேளை. (8:15 PM)

    unnamed (44)

    Lincoln Assassination

    In His Private Box

    தியேட்டர்

    நாடக மேடையில் நிஜ நாடகம் !

    மிஸ் கிளாரா ஹாரிஸ்: இன்று புனித வெள்ளிக்கிழமை (Good Friday). ஏசு நாதரைச் சிலுவையில் அறைந்த நாள் ! பிரசிடென்ட் லிங்கன் இன்று நாடகம் பார்க்க வருவதாகக் கேள்விப் பட்டேன். நாடகம் ஆரம்பித்து விட்டது ! இன்னும் அவர் ஏன் வரவில்லை ! நாடக அரங்கில் இன்று கூட்டம் அதிகம் !

    ஹென்றி ராத்போன்: ஆமாம் ! போர் முடிந்து விட்டது ! பொழுது போக்கத் திரளாக மக்கள் வந்ததில் ஆச்சரிய மில்லை ! ஏன் தாமதம் தெரியவில்லை ! நிச்சயம் இன்று நாடகம் பார்க்க வருவதாக லிங்கன் என்னிடம் சொன்னார்.

    (அப்போது கீழ்த் தளத்தில் தொப்பியால் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவன் அங்கும் இங்கும் அலைகிறான். அவன் ஜான் வில்கிஸ் பூத் எனப்படும் நாடக நடிகன். பெண்டிரை மயக்கும் வசீகர குணம் பெற்றவன்)

    ஜான் வில்கிஸ் பூத்: (கடுகடு முகத்துடன்) இன்றே இறுதிக் காட்சி ! அது எனக்குத் தெரியும் !

    unnamed (45)

    Booth Running away after  Assassinating Lincoln

    நாடக பணியாளி: (சிரித்துக் கொண்டு) நீ நடிகன். உனக்கு டிக்கட் தேவையில்லை ! நீ எங்கும் போகலாம். ஆமாம் உனக்கென்ன தெரியும் ?

    வில்கிஸ் பூத்: இன்று லிங்கன் நாடக பார்க்க இங்கு வருகிறார் என்று காலையில் கேள்விப் பாட்டேன் ! வெற்றி பெற்ற அவருக்கு நேராக நானொரு வெகுமதி கொடுக்கப் போகிறேன் ! இந்த தினத்துக்காக நான் வெகு நாட்கள் காத்திருந்தேன்.

    நாடக பணியாளி: நீ அதிஷ்டசாலி ! நேராகப் பார்க்கும் யோகம் யாருக்குக் கிடைக்கும் ? ஆமாம் என்ன வெகுமதி அளிக்கப் போகிறாய் ?

    வில்கிஸ் பூத்: அது ரகசியம் ! அவரது இடம் எதுவெனத் தெரியுமா ?

    நாடகப் பணியாளி: (மேல் மட்ட பால்கனிப் பெட்டியைக் காட்டி) அதோ அந்த அலங்கார முதல் பெட்டிதான் பிரசிடென்டுக்காக சுத்தமாக்கப் பட்டுள்ளது. அமெரிக்கக் கொடியும் தொங்குகிறது பார் !

    வில்கிஸ் பூத்: நன்றி ! நான் போகிறேன் ! என் வேலை இன்று முடிந்தாக வேண்டும் ! இந்த வாய்ப்பு இனி கிடைக்கா தெனக்கு ! (திடீரெனக் கூட்டத்தில் புகுந்து மறைகிறான்)

    unnamed (46)

    Lincoln on Death Bed

    (April 14, 1865)

    (கூட்டத்தில் திடீரெனப் பரபரப்பு ! ஒருத்தி “அதோ பிரசிடென்ட் லிங்கன்” என்று எழுந்து கத்துகிறாள். நாடக அரங்குக்குள் மேரி லிங்கனுடன் காவலர் சூழ ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். எல்லாம் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். சிலர் “நீடு வாழ்க லிங்கன்” என்று கூட்டத்தில் கத்துகிறார் ! “ஒழியப் போகிறாய் நீ” என்று வில்கிஸ் பூத் முணு முணுக்கிறான். கூட்டத்தில் பாராட்டு ஆரவாரம் பன்மடங்கு பெருகுகிறது)

    ஆப்ரஹாம் லிங்கன்: (படிமேல் நின்று கொண்டு, பரவசமாய்) என்னருமை அமெரிக்க மக்களே ! உங்கள் பரிவான பாராட்டு என்¨னைப் பரவசப் படுத்துகிறது ! உங்கள் பாசம் என் நெஞ்சில் ஆழ்ந்து பதிகிறது ! இருள் மண்டிய நான்கு கடுமையான ஆண்டுகள் போராடி நாம் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஜெனரல் ராபர்ட் லீ நமது ஜெனரல் யுலிஸிஸ் கிராண்டிடம் சரணடைந்து இன்று நான்காம் நாள் ! இன்னும் ஒரே ஒரு தளத்தில் சிறு போர் நடந்து வருகிறது. ! அதுவும் சீக்கிரம் நிற்கும் நிச்சயம் ! நமக்கு முழு வெற்றி கிடைப்பது நிச்சயம் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). பல்லாயிரக் கணக்கான போர் வீரர்களைப் பலி கொடுத்துப் பிரிந்த மாநிலங்களை மீண்டும் இணைத்தோம் ! தென்னவர் நமக்குப் பகைவர் அல்லர் ! சண்டை செய்தாலும் நமக்கவர் சகோதரர்கள் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). இந்த நேரம் நான் சொல்ல வேண்டியது அதிகமில்லை ! நாட்டின் கொந்தளிப்பை யெல்லாம் நான் கட்டுப்படுத்தி விட்டேன் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது ! கொந்தளிப்புகள்தான் இப்போது என்னைக் கட்டுப்பாடு செய்கின்றன ! அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் கண்முன் வரும்போது நான் ஒரே நம்பிக்கையில் நிமிர்ந்து நிற்கிறேன் ! நாம் நமது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றி விட்டோம் ! அந்தக் குறிக்கோளில் எனக்கு அசையாத நம்பிக்கை ! மேலும் ஒரு மாபெரும் மனிதத் தவறை நமது மாநிலங்களில் நீக்கப் போகிறோம் ! (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்). அந்த மகத்தான பணிக்கு என்னை பங்கேற்க வைத்த கடவுளுக்கு நான் பல்லாயிரம் முறை நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்).

    (நடந்து கொண்டிக்கும் நாடக அரங்கத்தில் உள்ள நடிகரும் நாடக உரையாடலை நிறுத்தி லிங்கன் பேருரைக் கேட்டுக் கைதட்டுகிறார். நாடகம் முடியும் தருவாய். “இதுதான் கடைசி காட்சி” என்று ஓர் அறிவிப்பு மேடையில் கேட்கிறது ! ஆப்ரஹான் லிங்கனும் மேரி லிங்கனும் காவலர் சூழப் படியேறித் தமது பால்கனியில் அமர்கிறார். கடைசிக் காட்சி துவங்கிறது. சில நிமிடங்கள் கழித்து ஒரு காவலன் கழிப்பறைக்குச் செல்வதைக் கவனிக்கிறான் வில்கிஸ் பூத். அடுத்த காவலனிடம் தன் பெயர் அறிவிப்பு வில்லையைக் காட்டி, பிரசிடெண்ட் தன்னைக் காண வரச் சொன்னதாகப் பொய் சொல்லிச் சட்டென லிங்கன் இருக்கும் பெட்டிக்குள் நுழைகிறான். துப்பாக்கியை விரைவாக எடுத்து லிங்கனைக் குறிவைத்துத் தலையில் சுடுகிறான். லிங்கன் சத்தமின்றி முன்னே கவிழ்ந்து விழுகிறார். குருதி குப்பெனச் சிந்துகிறது ! மேரி லிங்கன் கணவர் முன் மண்டி யிட்டு அழுகிறார். வில்கிஸ் பூத் பெட்டியிருந்து முன்னே தாவி நாடக மேடையில் குதித்து காலில் காயப் பட்டு நொண்டி நொண்டி திரைக்குப் பின்னால் ஓடுகிறான். நாடக நடிகர்கள் ஒன்றும் புரியாது விழிக்கிறார் !)

    unnamed (47)

    Lincoln Casket

    கூட்டத்தில் ஒருவர்: (துப்பாக்கிச் சத்தம் கேட்டு) லிங்கன் சுடப்பட்டார் ! அதோ கொலைகாரன் ! பிடியுங்கள் ! பிடியுங்கள் ! கொல்லுங்கள் அவனை அதோ ஓடுகிறான் !

    (கீழே மக்கள் பீதி அடைந்து ஓடுகிறார் ! சிலர் வில்கிஸ் பூத்தை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.

    நாடகம் தடைப்பட்டு நடிகரும் பயந்து ஓடுகிறார். நாடக அரங்கில் பெரும் கொந்தளிப்பு)

    மிஸ் கிளாரா: டாக்டர் இருந்தால் வாருங்கள் பால்கனிக்கு ! (இரண்டு டாக்டர்கள் மேலே ஓடி வருகிறார்.) பிரசிடெண்டைக் காப்பாற்றுங்கள் ! (லிங்கன் பேச்சு மூச்சில்லாமல் தரையில் கிடக்கிறார் ! ஒருவர் தலையணை ஒன்றைக் குருதி சிந்தும் கழுத்தடியில் வைக்கிறார். குருதி பொங்கி ஓடுகிறது.)

    கூட்டத்தில் பலர்: தூக்கில் இடுங்கள் துரோகியை ! கொளுத்துங்கள் தியேட்டரை ! எரியட்டும் நாடகக் கொட்டம் !

    எட்வின் ஸ்டான்டன்: (கண்ணீர் பொங்க) மகத்தான கீர்த்தி பெற்றார் ! புவிக்குள்ளே முதன்மை யுற்றார் ! பணியை முடித்ததும் பாரை விட்டு நீங்குகிறார் ! விடை பெறாமல் விடை பெறுகிறார் !

    (மேரி லிங்கன் கதறிக் கதறி அழுகிறார்.)

    unnamed (48)

    முடிவுரை:

    ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.

    வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

    unnamed (49)

    Lincoln Body at the

    White House

    ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.

    1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.

    unnamed (50)

    Lincoln Funeral Procession

    1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

    அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”

    1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். உள்நாட்டுப் போரால் 630,000 பேர் இருபுறமும் பலியானார் என்று அறியப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த நான்காம் நாள், ஆப்ரஹாம் லிங்கன் வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத்தால் (John Wilkes Booth) சுடப்பட்டு அடுத்த நாள் மரித்தார். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

    பின்னுரை:

    ஆப்ரஹாம் லிங்கன் புனித வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 13, 1865) ·போர்டு தியேட்டரில் இரவில் சுடப்பட்டு மறுநாள் காலை 7:22 மணிக்குக் காலமானார். பிறகு லிங்கனின் சடலம் பெட்டியில் இடப்பட்டு பல இடங்களுக்கு இரயில் பயணத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சென்ற இட மெல்லாம் அமெரிக்க மக்கள் திரள் திரளாய் வந்து கண்ணீர் சிந்தி வருந்தினார். மே 4, 1865 ஸ்பிரிங் ஃபீல்டு, இல்லினாய்ஸ், ஓக் ரிட்ஜ் அடக்கத் தளத்தில் லிங்கன் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொலைகாரன் வில்கிஸ் பூத் தேடப்பட்டு ஏப்ரல் 26 1865 ஆம் தேதி காவலரால் சுட்டுக் கொல்லப் பட்டான். மற்றும் கொலைச் சதியில் பங்கெடுத்த நால்வருக்கு விசாரணை நடந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

    unnamed (51)

    Lincoln Sculpture

    At South Dakota

    (நாடகம் முற்றிற்று)

    ***************************

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    unnamed (52)

    மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்)

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !

    கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை !

    தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !

    அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !

    வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !

    ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !

    ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !

    கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்கிறார்

    காப்டன் மரித்துப் போய்க் கவிழ்ந்து !

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !

    எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காக !

    சங்க நாதம் முழங்கும் உனக்காக !

    தோரணம், மலர் வளையம் உனக்காக !

    காத்திருக்கும் திரள் கடற் கரையில் !

    அழைப்பது மாந்தர் உன்னைத் தான் !

    ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !

    உன் தலைக் கடியில் என் கைகள் !

    இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !

    கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !

    சில்லிட்டுக் கிடக்கிறீர் செத்த உடலாய் !

    மௌனமாகி விட்டார் என் காப்டன் !

    வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடல் !

    பிதா என் கைத் தொடுகை உணர வில்லை !

    இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !

    பாதுகாப்பு நங்கூரம் கப்பலுக்கு ! பயணம் முடிந்தது !

    பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !

    கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !

    தடுமாற்றம் துக்கம் என் கப்பல் தளத்தில் !

    சில்லிட்டு கிடக்கிறார் விழுந்தென்

    காப்டன் செத்த உடலாய்க் கப்பல் தளத்தில் !

    unnamed (51)

    **********

    ******************************

    ஆப்ரஹாம் லிங்கன் பொன்மொழிகள் (1809-1865)

    1. “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”

    ஆப்ரஹாம் லிங்கன்

    2. “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    3. “உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என் பெயர் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும் ! உயர்ந்த மானிடர் ஒருவருடன் வாழ்ந்தேன் என்று வரலாறு என்னைப் போற்ற வேண்டும் ! அவர் எத்தகைய உன்னத மனிதர் என்று எனக்குத்தான் மற்றவரை விட நன்றாகத் தெரியும் ! இப்படிச் சொல்லும் போது எனக்குப் புல்லரிப்பு உண்டாகுது !”

    மேரி டாட் லிங்கன்

    4.  எனது அதிமுக்கிய பணி அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பது; அடிமைத்தனத்தை ஒழிப்பதோ அல்லது விட்டுவிடுவதோ அல்ல ! அடிமைகளை விடுவிக்க முடியாமல் போய் அமெரிக்க ஐக்கியத்தை மட்டும் காப்பாற்ற முடிந்தால் அதைச் செய்து முடிப்பேன். அடிமைகள் அனைவருக்கும் விடுதலை கிடைத்து ஐக்கியத்தைக் காப்பாற்ற முடிந்தாலும் அதைச் செய்து முடிப்பேன். சில அடிமைகள் மட்டும் விடுவிப்பாகி மற்றவர் விடப்பட்டு ஐக்கியத்தைக் காக்க முடிந்தாலும் அப்படியே செய்து முடிப்பேன். அடிமைத்தனத்தை நீக்கிக் கறுப்பருக்கு விடுவிப்புக் கிடைக்க முனைவது, அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்க எனக்குதவும் என்று நான் நம்புகிறேன். எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை நான் தவிர்ப்பேன், காரணம் அது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்காது. நான் முனைந்து புரிபவை என் குறிக்கோளைப் பாதித்தால், என் போராட்டத்தைக் குறைப்பேன் ! நான் துணிந்து செய்பவை என் குறிக்கோளுக்கு உதவி செய்தால் என் போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்வேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்

    5. “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”

    6. “நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.”

    7. “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் என்ற நம்பிக்கையில் உங்களை விட்டு நீங்குகிறேன் !”

    8. “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    9.  “எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர்கள் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

    10. “கடவுளுக்குக் கீழ் ஒரு புதிய விடுதலை மறுமலர்ச்சி உருவாகி இந்தத் தேசம் மக்களுடைய அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்பது நிலைப்படப் போரில் செத்து மாய்ந்தவர் உயிர் அர்ப்பணம் வீணாகப் போகாது நாமெல்லாம் இங்கே உறுதியாகத் தீர்மானம் செய்வோம்.

    ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

    11.  “ஒருபோதும் அதற்கு முரண்பாடாக நான் எதுவும் கூறவில்லை. “சுதந்திரப் பேருரையில்” (Declaration of Independence) விளக்கியபடி, வாழும் தகுதி, விடுதலை உணர்ச்சி, இன்பத்தை நாடும் வேட்கை போன்ற எல்லா வித இயற்கை உரிமைகள் பெறுவதற்கு ஒரு நீக்ரோவுக்கு அருகதை கிடையா தென்பதற்கு எந்தக் காரணமும் இருக்க வில்லை. வெள்ளை மனிதனைப் போல் அவற்றை அனுபவிக்கக் கறுப்பு மனிதனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. பல முறைகளில் கறுப்பன் எனக்கு நிகரானவன் இல்லை என்று நீதிபதி டக்லஸ் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக நிறத்தில் இல்லை. ஒருவேளை ஒழுக்க நெறியிலும், கல்வி அறிவிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தான் விரும்பும் உணவைத் தன் கையால் எடுத்து உண்ணும் தகுதியில் எனக்குச் சமமானவன். நீதிபதி டக்ளஸ¤க்கும் சமமானவன்; உயிர்வாழும் மற்ற எல்லா மனிதருக்கும் சமமானவன்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    12.  “நாம் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே. நாம் பகைவராக மாறிவிடக் கூடாது. உணர்ச்சி ஆவேசத்தில் நமக்குள் மனமுறிவு ஏற்பட்டாலும் நமது பாசமும் பந்தமும் அறுந்துவிடக் கூடாது. புதிரான நினைவு அம்புகள் ஒவ்வொரு போர்க் களத்திலிருந்தும் தேசீய இடுகாட்டிலிருந்தும் நீண்டு, இந்த அகண்ட நிலத்தில் உயிருடன் வாழும் ஓர் இதயத்தையும் தொடும். அந்தத் தடத்தை மனிதப் பண்பாட்டின் தெய்வீகம் மறுபடியும் தொடும் போது அமெரிக்க ஐக்கியக் கூட்டு முழக்கத்தை ஓங்கி உயர்த்தி வலுப்படுத்தும்.

    ஆப்ரஹாம் லிங்கன், முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)

    13.  “நாமெல்லாம் சுதந்திரம் வேண்டும் என்று முழக்கி வருகிறோம். அந்தச் சொல்லை நாமெல்லாம் பயன்படுத்தும் போது ஒரே பொருளை மனதில் எண்ணுவது இல்லை. விடுதலை என்றால் தாம் விரும்பியபடி தமக்கும் தமது ஊழியத்துக்கும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர் சிலர். மற்றும் சிலர் பிறரையும் பிறரது ஊழியத்தையும் தாம் விரும்பியபடி நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர். இவை இரண்டு சுதந்திரமும் வேறானவை மட்டுமல்ல. விடுதலை என்னும் ஒரே பெயரில் நிலவும் முரண்பாடான வெவ்வேறு செயல்கள். அவை விடுதலை என்னும் பெயரில் நடைபெறும் அடக்குமுறை என்பது எனது குறிப்பீடு.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 18, 1864)

    14.  மனத் திருப்தியற்ற என் தேச மக்களே ! தற்போதைய உள்நாட்டுப் போர்ப் பிரச்சனையைத் தீர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. என் கைகளில் இல்லை ! அரசாங்கம் உங்களைத் தண்டிக்கப் போவதில்லை. நேரடிராகத் தாக்குவோராய் நீங்கள் எண்ணப் படுவதற்கு உங்களிடம் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தைச் சிதைப்பைத் தடுக்க நீங்கள் மேலுலகில் உறுதிமொழி எடுத்துப் பதிவு செய்யப்பட வில்லை. ஆனால் அரசாங்கப் பாதுகாப்புக்கும், அதன் நீடித்த நிலைப்புக்கும், அதற்காகப் போராடவும் நான் எல்லாருக்கும் மேலான உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

    ஆப்ரஹாம் லிங்கன், [முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)]

    எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டையின் (Fort Sumter) முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் ! அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் ? அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா ? அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் ? காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ! ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ! அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா ? நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது.

    ஆப்ரஹாம் லிங்கன் (1862)

    “வரம்புமீறிய அரக்கத்தனம் (The Demon of Intemperence) மேதைகளின் குருதியையும், பெருந்தன்மையையும் உறிஞ்சுவதில் பேருவகை பெறுவதாகத் தெரிகிறது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 22, 1842)

    “கடவுளின் நியதியே (Will of God) மேலோங்கி நிற்கும். (அடிமைத்தன ஒழிப்பு) போட்டியில் ஒவ்வொரு கட்சியும் கடவுளின் நியதிப்படி நடப்பதாய் வாதாடுகிறது. இருதரப்பார் கருத்தும் தவறாக இருக்கலாம். ஆயினும் இரண்டில் ஒரு கட்சி நிச்சயம் தவறாக இருக்க வேண்டும். கடவுள் ஒரே சமயத்தில் ஒரே கருத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிர்ப்பாகவும் இருக்க முடியாது. இப்போதைய உள்நாட்டுப் போரில் கடவுளின் குறிநோக்கம் (Purpose) எந்த ஒரு கட்சியின் வினைப் போக்குக்கு வேறுபட்டு இருக்கலாம். ஆயினும் மனம்போல் செய்யும் மக்களின் நேரடிப் பங்கீடுகள் மட்டுமே கடவுளின் நியதியைப் பின்பற்றப் பயன்படுகின்றன.”

    ஆப்ரஹாம் லிங்கன், (செப்டம்பர் 2, 1862)

    “போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால் அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தைத் தவிர்க்க அரசியல் முறையில் தர்க்கமிட்டு முடிவு காணலாம். அவ்விதமின்றி நாட்டைத் துண்டாக்கும் உரிமையைத் தென்னகம் மேற்கொண்டால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாட்டுப் பிரிவினையைத் தடுத்து நாமதைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மாநிலமும் ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு நமது பிதாக்கள் உறுதி கூறியதை நிலைநாட்டவும், அமெரிக்க யூனியன் நிச்சயம் போரைத் துவக்கும். நாங்கள் நாட்டைப் பிரிக்க விட மாட்டோம். நாம் இருவரும் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே ! நாம் பகைவராய் மாறக் கூடாது ! உணர்ச்சி வசப்பட்டு மனமுறிவு ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் பந்த பாசம் முறியக் கூடாது !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “பண்டைப் பண்பியல் (Conservatism) என்றால் என்ன ? அது புதுமைக்கும், முயலாததற்கும் எதிராகப் பண்டைத்தனத்தையும், முயன்றதையும் மட்டும் எடுத்துக் காட்டுவதா ?”

    ஆப்ரஹாம் லிங்கன் (கூப்பர் கல்வியகப் பேருரை, பிப்ரவரி 27, 1860)

    “என்னால் இந்த மாபெரும் வெள்ளை மாளிகையைத் தற்காலிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. உங்களுடைய எந்தக் குழந்தையும் என் தந்தையின் புதல்வனைப் போல் வந்திட நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதற்கு நானே ஒரு வாழும் சான்று.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 22, 1864)

    “நமது போராட்டத்தில் ஒருவேளை நாம் தோற்றுவிடலாம் என்று நிகழக்கூடிய ஒரு நினைப்பில், நியாயமென்று நாம் உறுதியாய் நம்பும் ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. அது அச்சமூட்டி என்னை வலிவிழக்க வைக்காது.”

    ஆப்ரஹாம் லிங்கன், (டிசம்பர் 26, 1839)

    “நமது பழைய நற் கப்பலான அமெரிக்க யூனியனை, இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வில்லை யானால், அடுத்ததோர் பயணத்தில் வேறெவருக்கும் முன்னின்று இயக்க ஒரு வாய்ப்புக் கிடைக்காது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 15, 1861)

    “மாஸ்ஸசுசெட்ஸ் ஜெனரலின் இடத்தில் பணிபுரியும் அதிகாரி தயாரித்த ஓர் அரசாங்கப் போர் அறிக்கையை எனக்குக் காட்டினார். போர்க்களத்தில் புகழோடு உயிரைப் பலி கொடுத்த ஐந்து புதல்வரின் அன்னை நீதான் என்பதை அந்த அறிக்கையில் நான் கண்டேன். இந்தப் பேரிழப்பின் சோகத்திலிருக்கும் உனக்கு நான் ஆறுதல் கூற முயலும் வார்த்தைகள் எப்படி வலுவிழந்து பலனற்றதாய் நேர்மையின்றி இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உயிர் கொடுத்துப் பாதுகாத்த நமது குடியரசின் நன்றியைப் பரிவோடு உனக்குக் கூறாமல் என்னால் சும்மா இருக்க இயலாது. நமது மேலுலகப் பிதாவிடம் உனது பேரழப்பு வேதனையைக் குறைக்க நான் பிரார்த்திக்கிறேன். விடுதலைப் பலி பீடத்தில் நேசப் புதல்வரை உன்னதத் தியாகம் செய்த பெருமையை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (நவம்பர் 21, 1864)

    நான் அறியாதவன் அல்லன். அது நிச்சயம். எப்படி நியாயம் இருக்க முடியும் ? நீக்ரோக்களை அடிமையாய் வைத்திருப்பதை வெறுக்கும் ஒருவன் எப்படி வெள்ளை மாந்தருக்குள் கீழ் வகுப்பு இனத்தார் இருக்க உடன்படுவான் ? நமது சீர்குலைவு சீக்கிரமாய் முன்னேற்றம் அடைவதாகத் தெரிகிறது ! “எல்லா மனிதரும் சமமாகப் படைப்பானவர்” என்று முழக்கி ஒரு தேசத்தை நாம் உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது நாம் அதை மெய்யாக வாசிப்பது இப்படி: “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர், நீக்ரோக்களைத் தவிர !

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

    அறியாதவன் என்று சொல்லப்படும் நான் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் போது மேற்கூறப்பட்ட அந்த வாசகம் இப்படி வாசிக்கபடும் : “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர் நீக்ரோக்களைத் தவிர, அன்னியரைத் தவிர, காத்தலிக் மதத்தாரைத் தவிர !” அந்த நிலை வந்தால் சுதந்திரத்தைப் பாசாங்கு இல்லாமல் வழிபடும் வேறெந்த நாட்டுக்காவது நான் புலம்பெயர்ந்து போய்விடுவேன். உதாரணமாக வஞ்சகக் கலப்பின்றிச் சுத்தமான ஏதேட்சை அதிகாரம் அரசாளும் ரஷ்யாவுக்கு போகலாம்;

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

    என்னுடைய சித்தாந்த நியதியில் திடீர் நிகழ்ச்சிகள் (Accidents) எனப்படுபவை எவையும் கிடையா ! ஒவ்வொரு விளைவுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும். நிகழ்கால விளைவுக்குக் காரணம் கடந்த காலம் ! அதுபோல் எதிர்கால விளைவுக்குக் காரணம் நிகழ்காலமாக இருக்கும். இவையெல்லாம் முடிவற்ற ஒரு தொடர்ச் சங்கிலியாக எல்லைக் குட்பட்ட நிலையிலிருந்து முடிவில்லா நிலைக்கு நீளும்.

    ஆப்ரஹாம் லிங்கன்

    “என் மீது விழுந்த தாக்குதலுக்குப் பதில் தராது படிக்க மட்டும் நேர்ந்தால் இந்தக் கடையை மூடிவிட்டு வேறு பணிக்குப் போய்விடலாம். என்னால் கூடுமான வரை உன்னதப் பணியைச் செய்ய நான் முற்படுவேன். நான் மடிந்து போகும்வரை அப்படியே பணியாற்றி வருவேன். என் பணியின் விளைவுகள் பயனுள்ளதாயின், என் மீது தூற்றியவை புறக்கணிப்படும். ஆனால் அந்த விளைவுகள் தவறாக முடிந்தால், “நான் செய்தவை எல்லாம் ஒப்பற்றவை என்று பத்து தேவதைகள் பாராட்டினாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, அவருக்குக் கொடுப்பதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் நேர்மையாக நடந்து உரிமை உள்ளவருக்குச் சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். நாமந்த முயற்சியில் நேர்மையைக் காப்பாற்றலாம் அல்லது அவமதிக்கப்பட்டு உலகின் உன்னத நன்னம்பிக்கையை இழந்து போய்விடலாம். வேறு வழிமுறைகளால் வெற்றி அடையலாம். ஆனால் நமது குறிக்கோள் தோல்வி அடையக் கூடாது. நமது பாதை வெளிப்படையானது, அமைதியானது, பரிவு பந்தமுள்ளது. இம்முறையைப் பின்பற்றினால் உலகம் கைதட்டி நம்மை வரவேற்கும். கடவுள் நம்மை நிரந்தரமாய் ஆசீர்வதிப்பார்.”

    ஆப்ரஹாம் லிங்கன், (Second Annual Message to Congress, Dec 1, 1862)

    “இரு தரப்பாளரும் போர் மீது வெறுப்பைக் காட்டுகிறார். ஆனால் அவர்களில் ஒரு தரப்பாளர் தேசம் துண்டாகாமல் நீடிக்கப் போரிட முற்படுகிறார். அடுத்தவர் தேசம் நாசமாகட்டும் என்று போரை வரவேற்றுக் கொள்கிறார். ஆம் அந்தப் போரும் வந்தது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (Second Inaugural Address, March 4, 1865)

    “தனக்குள் எதிராகப் பிளவு பட்ட ஓர் அரசாங்க மன்றம் நிலைத்து நிற்காது. இந்த அரசாங்கம் பாதி விடுதலையிலும் பாதி அடிமைத்தனத்திலும் இயங்கிக் கொண்டு நிரந்தரமாக நிலைக்காது என்பது என் நம்பிக்கை ! நமது அமெரிக்க ஐக்கியம் முறிந்து போகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை ! நமது அரசவை மன்றம் வீழ்ச்சி அடைந்திடும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை ! ஆனால் அது துண்டாவது தடுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒன்று எல்லா மாநிலங்களும் சேர்ந்து விடுதலையை ஏற்கும் அல்லது மாறாக (அடிமைத்தனம் நிலவும்) மாநிலங்களாய் எல்லாம் வேறுபடும் !

    ஆப்ரஹாம் லிங்கன் [ஸ்பிரிங்ஃபீல்டு பேருரை, இல்லினாய்ஸ் ஜூன் 16, 1858]

    “எனது பதவி ஏற்புரை ஆற்றிய மாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறினேன் : எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிக்க உரிமை அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துக் கைக்கொள்வதற்கும், சுங்கவரி, வருமான வரி வசூலிக்கவும் பயன்படுத்தப்படும். நமது கோட்டைகளை முடிந்த அளவு எந்த முறையிலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் உடனே ஜெனரல் ஸ்காட்டுக்கு ஆணை இட்டது மேலும் உங்கள் பூரண சம்மதத்தை அப்போது பெற்றது. அதற்கு முற்றிலும் விதிவிலக்காக நீங்கள் இப்போது என்னை வற்புறுத்துவது : சம்டர் கோட்டை முற்றுகையை விட்டு நாம் விலக வேண்டும் என்பது !”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 1, 1861)

    “யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைக்கும் நாம் கவனமுடன் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)

    கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது : டச் நாட்டுக் கிராமத்தான் ஒருவன் தன் தோழனிடம் ஒரு சமயம் சொன்னானாம். “ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் போது வண்டியில் குதிரையை மாற்றக் கூடாது” என்று.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது (ஜூன் 9, 1864)]

    கடந்த காலக் கொள்கைகள் யாவும் நிகழ்காலக் கொந்தளிப்புப் பிரச்சனைக்குத் தகுதியுள்ளவை அல்ல. இந்தத் தருணம் நமக்குப் பேரளவு தொல்லை கொடுத்து வருகிறது. நாமும் அந்த அளவுக்கு உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டும். இந்த நமக்குப் பிரச்சனை புதியது. நாமும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். புதிய முறையில் போராட வேண்டும். நம்மை நாமே விடுவித்துக் கொண்டு பிரிவினையிலிருந்து நமது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் ஆண்டு காங்கிரஸ் தகவலுரை (டிசம்பர் 1, 1862)]

    நேர்மையே நமக்கு உறுதி அளிப்பது என்பதில் நாம் நம்பிக்கை வைப்போம். அந்த நம்பிக்கையில் இறுதிவரை நமக்குப் புரிந்த அளவு நமது கடமைகளைத் தீவிரமாய் நாம் செய்து முடிக்க வேண்டும்.

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 1860)

    “எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி அளிப்பது, வெள்ளையரைக் கலப்பு மணம் புரிவது ஆகியவற்றையும் நான் ஆதரிக்க வில்லை. இந்த இரண்டு இனங்களும் சமூக அரசியல் சமத்துவமோடு ஒருமைப்பாடுடன் வாழ முடியாதபடித் தடுக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. அப்படி அவர்கள் சேர்ந்திருக்க இயலாத நிலையில் வாழ நேர்ந்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் அமைப்பாட்டில்தான் வசிக்க முடியும் என்பது என் எண்ணம். வெள்ளை இனத்துக்குத்தான் உயர்ந்த நிலை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்றவர் கருத்துக்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஆனால் வெள்ளைக்காரனுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்படுவதால், நீக்ரோக்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (Fourth Debate with Stephen A Douglas at Charleston, Illinois) PP 145-146 [September 18, 1858]

    “ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (சுதந்திர அறிவிப்பின் போது) எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்று முழக்கினோம் ! ஆனால் இப்போது நாம் வேறொரு அறிவிப்பை ஆரம்பித்திருக்கிறோம் : அதாவது சில மனிதர் மற்றவரை அடிமையாக வைத்துக் கொள்வது சுய ஆட்சி அரசாங்கத்தின் புனித உரிமை என்று !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “வடக்கரான அவர் (Stephen Douglas) இன வேறுபாட்டுக் கொள்கையில் தென்னவர்தான் ! சட்ட வாக்கெடுப்பில் அடிமைத்தன ஒழிப்பு வீழ்ந்தாலும் சரி அல்லது வென்றாலும் சரி அவர் கவலைப் படமாட்டார் ! ஆனால் பெரும்பான்மை யான வடக்கர் அடிமைத்தன முறையை ஆதரிக்க வில்லை. ஆப்ரஹாம் லிங்கனும் பெரும்பான்மையான வடக்கரும் அடிமைத்தன ஒழிப்புக்குப் பாதை வகுத்து அதையே ஓர் புனிதக் குறிக்கோளாகவும் கடைப்பிடித்தார்.”

    ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி ·பிங்கில்மன் (Finkleman)

    (ஸ்டீஃபன் டக்லஸ் இல்லினாய்ஸ் டெமாகிராடிக் கட்சி -ஜனாதிபதிப் போட்டி அரசியல்வாதி)

    “கடவுள் உங்களைப் படைத்ததே அடிமைத்தனத்தை ஒழிக்கத்தானே ! உங்கள் பிறவிப் பயனை கறுப்பராகிய நாங்கள் அனுபவிப்போம் ! எங்களை விடுவிக்கப் போரில் உங்கள் மனிதர் மடிகிறார் ! தென்னக நரகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்து என்ன செய்யப் போகிறோம் ? எப்படி வாழப் போகிறோம் ? எங்க இனத்துக்கு அறிவில்லை ! படிப்பில்லை ! பணமில்லை ! தனியே வாழக் குடிசை இல்லை ! எப்படி வாழ்வோம் இனிமேல் ? அடிமையாய் உள்ள போது குடியிருக்க ஒரு குடிசையாவது இருந்தது ! உண்ண உணவாவது கிடைத்தது ! அங்கே அடிமையாய் வேலை செய்து பிழைத்தோம் ! இனி எங்கே வேலை செய்வோம் ? என்ன வேலை செய்வோம் ? தென்னகத்திலே நாங்கள் எப்படி வெள்ளையர் வீட்டருகே வாழ முடியும் ? அடிமையாய்ப் பிறந்தேன் ! அடிமையாய் வளர்ந்தேன் ! இனி விடுதலை மனிதனாய் எப்படி வாழ்வேன் ?”

    வில்லியம் கர்டிஸ் (லிங்கனிடம் உரையாடிய 72 வயது நீக்ரோ)

    “அமெரிக்கத் தேச அரசியல் அமைப்பு நியதிப்படி (National Constitution) முதல் ஜனாதிபதி பதவி பெற்று ஏற்புரை நிகழ்த்தி 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அந்த ஆண்டுகளில் 15 பல்வேறு புகழ்பெற்ற உன்னதக் குடிமாந்தர் அடுத்தடுத்துப் பதவி ஏற்று அரசாங்கத்தை ஆட்சி செய்தார்.  அநேக தேச இன்னல்களில் அவர்கள் கடந்து சென்று முடிவில் பெரு வெற்றி பெற்றார்.  நான் இப்போது அதே பணியை விசித்திரமான பேரிடர்களுக்கு இடையில் அரசியல் நியதிப்படி நான்கு ஆண்டுகளுக்குச்  செய்ய நுழைகிறேன்.  முன்பே இருக்கும் ஒரு தவறைப் பின்பற்றி இப்போது நம் தேசத்தின் ஐக்கியத்தைத் தகர்க்கச் சிலர் இங்கு தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (முதல் பதவி ஏற்புரை) (மார்ச் 4, 1861)

    “அமெரிக்க இராணுவப் படையில் 200,000 கறுப்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.  அறிவு மிக்க அமெரிக்க நீக்ரோக்களுக்கும் படைவீரராக நமக்குப் பணிபுரிவோருக்கும் வாக்குரிமை அளிக்க விரும்புகிறேன்.  அவர்களைத் தவிர மற்ற எல்லாக் கறுப்பரும் வாக்குரிமை பெறத் தகுதி பெற்றவரே !  இவ்விதம் நான் லூயூசியானாவில் கூறியிருப்பது மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உள்நாட்டுப் போர் வெற்றியைப் பாராட்டிப் பேசியது) (ஏப்ரல் 11, 1865) 

    “மிஸ்டர் லிங்கன் ஆற்றிய உரையில் இப்படிக் கூறினார் : ‘முதலில் இந்த அரசாங்கம் நமது மூதாதையப் பிதாக்கள் விட்டுச் சென்றபடி விடுதலை மாநிலங்களாகவும் அடிமை மாநிலங்களாகவும் நிரந்தரமாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ளாது ! ஒன்று எல்லா மாநிலங்களும் அடிமைத் தனத்தை விடுவிக்க வேண்டும். அல்லது எல்லா மாநிலங்களும் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த அமெரிக்க ஐக்கியம் நீடித்திருக்காது.”

    ஸ்டீஃபென் டக்லஸ் டெமாகிராட் போட்டியாளர் (அக்டோபர் 15, 1858)

    “நமது மூதாதையப் பிதாக்கள் இந்த அரசாங்கத்தைப் பாதி விடுதலையாகவும் பாதி அடிமைத்தனமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கருதியதாக ஸ்டீ·பென் டக்லஸ் அனுமானிப்பது உண்மை இல்லை. அடிமைத்தன வைப்புச் செம்மை யானது என்றும் அதை அரசியல் ஆட்சி நியதி முன் மொழிகிறது என்று டக்லஸ் அனுமானிப்பதாகத் தெரிகிறது. உண்மை என்ன வென்றால் நம்மிடையே இருந்து வந்த அரசியல் நியதியை அப்படியே அவர்கள் விட்டுவிட்டனர் என்பதுதான். அவ்விதம் விட்டுச் சென்றாலும் அநேக இடங்களில் உடன்பாடில்லாது இருந்ததை அவர்கள் தெளிவாகக் காட்டி இருக்கிறார்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீஃபென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    ***************************

    தகவல்

    Based on The Play

    Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

    1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html 2. Chambers Encyclopedia (1968 Edition) 3. Encyclopaedia Britannica (1973 Edition) 4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition) 5. Britannica Concise Encyclopedia (2003 Edition) 6. The Oxford Dictionary of Quotations New Edition (1992) 7. The Wordsworth Dictionary of Quotations (1997) 8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961) 9. Lincoln The Unknown By Dale Carnegie (1959) 10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter [1958].

    11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

    12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

    13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

    14. Freedom – A Novel of Abraham Lincoln & the Civil War By : William Safire (1988)

    15. The American Civil War – A History – By : Mark Saunders (1993)

    +++++++++++++++++

    Share
  • நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி

     

    [Giovanni Cassini]

    (1625-1712)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

    “காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”

    டேடன் (Taton)

    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

    காலிலியோ (1564-1642)

    முன்னுரை:    உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டிஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவி மையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !

    காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலை நோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலை நோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய ‘நீள்கோளச் சனியைத்’ [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக் கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்!  அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.

    சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே!  பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டு களுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்!  காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக் கோளை அடைந்து அரிய தகவல் சேமித்து வருவதுடன் திட்ட மிட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்து  பத்தாண்டுகளுக்கு மேலாக உளவித் தகவல் அனுப்பிக் கொண்டு வருகிறது !

     

     

    காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

    கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி’ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, கருநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

    அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை’ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

     

     

    சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

    காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை’ [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீனின் தூதர்’ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

     

    கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

    சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

    காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகிய வற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

    காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

     

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

    பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார்.  பூதக்கோள் வியாழனுடைய பட்டைகளையும், புள்ளி களையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

    ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

    வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

    கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

    1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.


    முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்க கத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.

    அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் ‘ஒளித்திரிபைக்’ [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

    பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

    பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!

    காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

    1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவ வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


    காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

    1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.

    கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளியாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!

    படங்கள் : நாசா

    தகவல்:

    1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

    2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O ‘Connor.

    3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

    4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

    5 Giovanni Cassini By : J. J. O’Connor & E. F. Robertson

    6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

    7. http://en.wikipedia.org/wiki/Giovanni_Domenico_Cassini (Wikipedia On Cassini) (Nov 21, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 11, 2014

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share