கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

உனக்கொரு தாய்போல்

தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

நான் கடவுளைக் கண்டேன் என்
குழந்தை வடிவிலே..
அவன் கருணையைக் கண்டேன்
கொஞ்சும் மழலை மொழியிலே..
பால்வடியும் உன் முகத்தில்
ஆயிரம் கனவு கண்டேன்
நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
அந்த நினைவில் வாழ்கின்றேன்
உனக்கொரு தாய்போல்
தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
கடல்போல் பெருகாதோ
பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

கவிஞர் வாலி……..!

கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

பெறுகை
காவியக் கவிஞர் வாலி
சென்னை

கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
உரிமை பெற்ற உள்ளங்கள் ..
யாரென இன்னுமா தெரியவில்லை?
கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

அன்புடன்..
காவிரிமைந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.