குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல்

 

மாட மாளிகை மயக்கும் கேளிக்கை,

காடு கண்டதில்லை, குறவர் கொண்டதில்லை,

நாடி ஒடுங்கவே நடக்கும் சுமையில்லை,

கோடி மக்களுக்கும் கவலை துளியில்லை !                                                                                      212

 

அதிகாலை வரைஉறங்க கானகத்தில் வாய்ப்பில்லை,

அயர்ந்தாலும் பறவைகள் கண்மூட விடுவதில்லை,

அகம்குளிரக் கண்ணுறங்கி, ஆசைதீர்ந்து எழுந்துவரும்,

அழகுமெத்தையில் புரண்டுறங்கும் வாழ்க்கை நகரிலே!                                                             213

 

எழுந்து சென்று உடல் நடுங்க,

பொழிந்து கொட்டும் அருவிக் குளிரில்,

கலைந்தும் கலையா ஆடையுடன்,

நனைந்து உறையத் தேவை யில்லை!                                                                                                      214

 

இதமான வெந்நீரில் தனியாக ஒருஅறையில்,

எவரும் பார்ப்பா ரென்னும் பயமின்றி,

உற்சாக மனம் கொண்டு, மணம்

உற்றுச் சிறந்த பொருளிட்டு நீராடலாம்!                                                                                                  215

 

குளிக்கும் முன்னர் காலைக் கடனை,

கழிக்கவும் கலங்கும் நிலை இல்லை,

அதற்கும் தனியோர் அறை உண்டு,

அங்கும் நறுமணக் காற்றுண்டு!                                                                                                                       216

 

கனி பறிக்கக் காய் பறிக்கக்,

கண் கவரும் மலர் பறிக்கக்,

கால் கடுக்க நடக்க வேண்டாம்,

கான் கடந்து சலிக்க வேண்டாம்!                                                                                                                   217

 

கடல் போன்ற பரப் பளவில்,

கடை விரித்துக் காத்து நிற்கும்,

“கருணைக் கடலோர்” பலர் உண்டு,

களைப்பின்றி அனைத்தும் அங்கே வாங்கிடலாம்!                                                                            218

 

அழகுக்கு அழகு சேர்க்கப் பல,

அழகான நிலையங்கள் ஆங்காங்கே இங்குண்டு,

அதிரூப சுந்தரியாய் அனைவரையும் மாற்றிவிட,

அவருக்கு அறிவாற்றல் திறன் உண்டு!                                                                                                     219

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறவன் பாட்டு-26

  1. காடு காணா நாகரீகம்
    நாட்டில் வந்ததைக்
    காட்டும் கவிதை நன்று…!

  2. @@திரு.செண்பக ஜெகதீசன்,

    தங்களின் வாசிப்பிற்கும் பின்னூட்டக் கருத்திற்கும் நன்றி நண்பரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.