குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

நீராவிக் குளியல்கள் நடத்திடலாம், கொஞ்சம்

சீராகக் கேசத்தை அமைத்திடலாம், தொடர்ந்து

ஈராறு மாதங்கள் அங்கு சென்றால்,

பூலோக ரம்பை என ஆகிடலாம்!                                                                                                                   220

 

வெள்ளரிப் பிஞ்சை வெட்டி எடுத்து

வெண்ணையில் கொஞ்சம் தொட்டு எடுத்து,

கண்களின் மேலே இட்டு எடுத்தால்,

காந்தப் பார்வை பெற்று ஒளிரலாம்!                                                                                                           221

 

அழகுக்குப் பொருத்தமாக, அங்கத்தை இறுக்கமாகத்,

தழுவி நிற்கும் உடை உண்டு!

கழுத்துக்கு வெகுதொலைவில், தோளிரண்டில் நிற்காமல்,

நழுவி நிற்கும் உடையும் உண்டு!                                                                                                                222

 

நாவோரம் சுவையூறும் பலநூறு பலகாரம்,

நகரத்து அடுமனையில் நாள்தோறும் உருவாகும்,

பாலூறும் தேனூறும் பல்வேறு இனிப்புகளும்,

பகலிரவு பேதமின்றி எப்போதும் கிடைக்குமிடம்!                                                                              223

 

சர்வதேச உணவுகளும் சுலபத்தில் கிடைத்துவிடும்!

சர்வசதா காலமும், சந்தோசம் இருக்குமிடம்,

சிள்வண்டாய் எப்போதும் ரீங்காரம் ஒலித்திருக்கும்

செல்வங்கள் நிலைத்திருக்கும் சிங்காரப் பெருநகரம்!                                                                     224

 

கர்மயோக ஞானங்கள் கற்றுத்தரத் தனித்தஇடம்,

வர்மக்கலை தர்மங்கள் கற்பிக்க வேறுஇடம்,

“கர்ணமகா ராஜாக்கள் கனிவோடு” உலவுமிடம்,

மர்மமான தேசம்போல் மந்திரங்கள் சொல்லுமிடம்!                                                                       225

 

கோபுரம் உயர்ந்திருக்கும், கோயில்கள் நிறைந்திருக்கும்,

மாபெரும் அன்னதானம் மும்முறை தினம்நடக்கும்,

மாளிகைச் செல்வங்கள் கோயிலை அலங்கரிக்கும்,

மானிடர் உள்ளங்கள் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கும்!                                                                      226

 

பேரிடர் வந்தாலும் அரசாங்கம் துணையிருக்கும்,

ஆரிருள் கொள்ளாமல் அனைவரையும் காத்துநிற்கும்,

ஓரிடம் தப்பாமல் எல்லோர்க்கும் அன்பளிப்பை

வாரித்தந்து இலவசமாய் வாழ்வ ளிக்கும்!                                                                                            227

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குறவன் பாட்டு-27

  1. குறத்தியின் ஏக்கம்,
    நல்ல
    கவிதை ஆக்கம்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *