விசாலம்
விசாலம்
சு.கோதண்டராமன்
இனி, கதையில் வெளிப்படையாகத் தெரியும் முக்கியக் கருத்துகளைக் கவனிப்போம்.
பெண்மையின் தெய்விகம்
பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார். இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.
காதலின் உயர்வு
சின்னக் குயிலியைக் கேட்காமல் அவளுடைய தந்தை அவளை நெட்டைக் குரங்கனுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கிறான். அவளுடைய இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மாமன் மகன் மாடன் தன்னை மணக்குமாறு வற்புறுத்துகிறான். மனம் அவனிடம் ஈடுபடாவிட்டாலும் அவள் கருணையினால் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். (நம் சமுதாயத்தில் பெண்ணின் இயல்பான நாட்டம் பற்றிக் கவலைப்படாமல் வேறு பல காரணங்களுக்காக அவளது மண வாழ்வைப் பலி ஆக்குவது இங்குக் காட்டப்படுகிறது.) சேர இளவரசனிடம் மட்டுமே அவளுக்கு உண்மையான காதல் ஏற்படுகிறது. அது அந்தப் பிறவியில் நிறைவேறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது நிறைவேறுவது குறித்து நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காதல் செய்வீர் உலகத்தீரே; அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்று அவர் காதலை உயர்த்துவது இங்கும் எதிரொலிக்கிறது.
கற்பின் மாட்சி
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.
”ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்
பெண் குலப் பீழை
மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,
பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.
நகைச் சுவை
சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.
ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,
ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்
பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்
என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.
அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.
பேடைக் குயிலிதனைப் பேசியது: – ”வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
ஒளியைப் போற்றல்
இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில் என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே
…….
வேண்டுமடி எப்போதும் விடுதலை
என்ற வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.
முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார். எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.
‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.
‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.
‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
**
அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத்திடுவோம், ”பல்லாண்டு வாழ்க!” என்றே.
‘பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்,
எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’
இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது.
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நடுவில் ஓரிடத்தில்
சோலையிடை, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.
கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,
…….
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.
தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
பவள சங்கரி
தலையங்கம்
சென்னையில் மட்டும் தினமும் 28 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் ஆவின்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனையாகின்றன. டோட்லா, ஹெரிட்டேஜ் , திருமலா, ஜெர்சி, போன்ற தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த முடிவு செய்து, ஆகஸ்ட் 15 , 2013 நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 2 விலை உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலையுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என்று தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையே தொடரும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆவின் பால் விற்பனையில் , அட்டை தாரர்களுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு, அதிகபட்ச விற்பனை விலையை விட, பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி , “டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர். ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று அறிவித்திருந்த சூழ்நிலையில்,
நேற்று, சேலத்தில் விவசாயிகள் பாலை தெருவில் கொட்டி மண் பானையை உடைத்திருக்கிறார்கள். பாலுக்கு அதிக விலையும், கூடுதல் மானியமும் கேட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலத்தில் நடத்தியிருகிறார்கள். போராடுவது அவர்கள் உரிமை. அதைப்பற்றி கூறவில்லை. ஆனால் போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. பல நூறு லிட்டர் பாலை தெருவில் கொட்டித்தான் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்பதில்லையே? பால் என்பது மாட்டின் இரத்தம் அல்லவா. தான் பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயை தெய்வமாகப் போற்றுகிறோம். ஆனால் ஊர் பெற்ற குழந்தைகளுக்குத் தன் பாலைக் கொடுத்து உயிர் வளர்க்கும் உன்னதமான ஒன்றை இப்படித் தெருவில் கொட்டலாமா? இதை அனாதை குழந்தைகளுக்கோ அல்லது ஆதரவற்ற நோயாளிகளுக்கோ இலவசமாகக் கொடுத்திருக்கலாமே.. ஜப்பான் மக்கள் போராடும் முறையை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. சம்பள உயர்வு கேட்டு போராடும்போது, தங்கள் எதிர்ப்பைக்காட்ட பல மணி நேரங்கள் அதிகமாக சம்பளம் வாங்காமல் உழைப்பார்கள். எத்தனை ஆக்கப்பூர்வமான சிந்தனை இது! வாயில்லா அந்த சீவன்களின் இரத்தத்தை எடுத்து இப்படித் தெருவில் வீச நமக்கு யார் உரிமை கொடுத்தது. அந்த சீவன்கள் பேச முடிந்தால் இந்நேரம் கதறி அழுதிருக்கும் அல்லவா.. அவைகள் எதிர்த்து நின்று போரிட ஆரம்பித்தால் நம் கதி என்னாகும்? இந்த போராட்டத்தின் விளைவுகள் எப்படியிருந்தாலும், இதுபோன்று தெருவில் பாலைக் கொட்டி போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேதனை!
பவள சங்கரி
தலையங்கம்
இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக ஆன பின்பு நம் நாட்டின் அரசியலமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற சில வரையறைக்குட்பட்டு சட்ட அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த சட்ட அமைப்பை ஏற்படுத்தி 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றைய சூழலுக்கேற்ப சில திருத்தங்கள், அல்லது புதிய சட்டங்கள் அசாதாரண சூழ்நிலையில் ஏற்படுத்தப்படவேண்டிய அவசரச் சட்டங்கள் அவசரமாக ஏற்படுத்தப்படுகின்றன. பின்பு அவை பாராளுமன்ற அங்கீகாரத்தோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டங்களாகின்றன. சென்ற வாரம் மத்திய மந்திரிசபை கூடி அதை அங்கீகாரம் செய்து ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த அவசரச் சட்டம் இல்லையென்றால் பெரும் பிரச்சனை ஏதும் வந்திருக்கப்போவதில்லை. உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கைகள் இருக்க வேண்டியதுதானே நியாயம்? இதற்கு எதற்கு அவசரச் சட்டம்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அவர்களைக் காப்பாற்ற எதற்கு அவசரச் சட்டம்? குடியரசுத் தலைவர் திருப்பியனுப்பிய பிறகாவது அந்த அவசர சட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.
காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பொறுமையாக வந்து, எனது கட்சியில், எனது அரசாங்கத்திலும் இப்படி நடக்கலாமா என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கேட்கிறார். ‘முட்டாள்தனமான அவசரச் சட்டம்’ என்கிறார். உடனடியாக வெளிநாட்டிலிருந்து, நான் திரும்பியவுடன் இதுபற்றி விவாதிக்கலாம் என்கிறார் பிரதமர். இன்று, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்கள் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் , 7 அரசியல் தலைவர்கள் மற்றும் 4 உயர் அதிகாரிகள் உட்பட 45 பேரை குற்றவாளிகள் என்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்குரிய தண்டனை 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். நாளை இவர்களுடைய தண்டனை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். மேலும் 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதிலிருந்து அவரை தப்புவிப்பதற்காகத்தான் இந்த அவசரச் சட்டம் என்று அறியும்போது கேலிக்கூத்தாகிப்போன சட்ட ஜனநாயகத்தை எண்ணி மக்கள் வெட்கப்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இது போன்று எட்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதுதான் வேதனையின் உச்சம். மக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வையல்லவா இது தோற்றுவிக்கிறது. நம்முடைய உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதியரசர்கள் மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள். அவர்கள் எடுக்கும் மிகச்சரியான முடிவுகளை ஏற்காமல், அவசரச் சட்டங்கள் மூலமாக குற்றவாளிகளை ஏன் தப்புவிக்க வேண்டும். மேலும் இந்த அவசரச் சட்டத்தின் மூலமாக ஏனைய அரசியல் குற்றவாளிகளும், தப்புவிப்பதற்கு ஏதுவாகிவிடுகிறது என்பதுதானே உண்மை நிலை. இப்படிப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு எப்படி ஊழலற்ற நாணயமான ஆட்சியை வழங்க முடியும் என்று மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையே இது ஏற்படுத்தியுள்ளது! எல்லாம் காலக்கொடுமை!
திவாகர்
இந்த வார செய்தி முழுவதும் விக்கிபீடியா – தமிழ் பற்றியதுதான். பயனுள்ள கட்டற்ற கலைக் களஞ்சியமாக வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியா, பலருக்கும் அடிப்படை அறிவை ஊட்டுகின்ற பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றது.
இருந்தாலும் இன்று நம் தாய்மொழியாம் தங்கத் தமிழில் ஏறத்தாழ 55000 கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன என்பதும் சுமார் 900 படைப்பாளிகள் இதற்கு பங்களிக்கிறார்கள் என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆங்கிலத்துக்கு நிகராக நம் தமிழைக் கொண்டு செல்ல நாம் அதிகம் உழைக்கவேண்டும் என்ற உண்மையை உணர்ந்தாலும் அந்தப் பயணத்திலே நாம் முன்னேறி வருகிறோம் என்ற விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்படி நினைக்கையில்தான் சமீபத்தில் ஹிந்து நாளிதழில் தமிழ் விக்கிபீடியாவில் பத்தாம் ஆண்டு நிகழ்வைப் பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில்
http://www.thehindu.com/sci-tech/technology/internet/tamil-wikipedia-to-celebrate-10-years/article5176688.ece?homepage=true

ஒரு இடத்தில் 77 வயது செங்கை பொதுவன் என்பார் 2580 கட்டுரைகள் விக்கி தமிழில் எழுதியிருப்பதாகவும் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் தமிழ் விக்கியில் இடம்பெற முயற்சிப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த 77 வயது செங்கை பொதுவன் அவர்களது தமிழ்ச் சேவை பாராட்டுக்குரியது.. அவர் முயற்சி மென்மேலும் பெருகவேண்டும் என்பது எம் அவா. இந்த முகமறியா விக்கி முகவர்தான் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு சு. ரவியின் கைவண்ணத்து ஓவியமும் பாடலும்:
தங்கச் சூரியன் தகதக வென்று
கீழை வானில் கிளர்ந்து எழுந்தது!
வேத மதத்தை மூடியிருந்த
தூசினை எல்லாம் துலக்கி அழித்து
இந்த மதத்துக் கீடிலை என்றது.
சோம்பிக் கிடந்த இந்திய இளைஞரைத்
தட்டி எழுப்பித் தன்னிலை உணர்த்தி
“எழுமின், விழிமின், இலக்கினை முயன்று
தொடுமின்” என்று தோள்தட்டிச் சொன்னது!
படம் உதவி: விக்கிமீடியா – https://ta.wikipedia.org/s/weg
சாகர் பொன்னியின்செல்வன்
11. எகிப்திய கடவுள்கள்.
லக்ஸரில் ஆரம்பிக்கும் எங்கள் பண்டை எகிப்திய கோயில் விஜயங்களை பற்றி சொல்லுவதற்கு முன்னர் எகிப்திய கடவுள்களை அறிமுகம் செய்வது என்பது அவசியமாகும். நைல் நதி தீரத்தில் பிறந்து தழைத்த பண்டை எகிப்திய கலாச்சாரமானது இந்திய இந்து மதம், கிரேக்க கலாச்சாரம் போலவே பல கடவுள்களை கொண்டது. மேலும் அரசர்கள் எல்லாம் கடவுளின் அம்சமாகவும் போற்றப்பட்ட ஒரு கலாச்சாரம்.
எகிப்திய கடவுள்கள் ஒன்றுக்கு ஒன்று உறவு கொண்டவர்கள். பல கடவுள்களுக்கு பல்வேறு மிருகங்களின் தலை அமைந்திருப்பது விசேஷம். கடவுள்கள் சில நேரம் ஆள் வடிவதிலும் சிலநேரம் மிருகவடிவமாகவும் சிற்பங்களில் செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் வானத்திற்கும் தனி கடவுள்கள் இருந்தன, நுட்(Nut) எனப்படுவது பெண் கடவுள், இந்த கடவுள் வளைந்து குனியும் பெண்ணாக வடிவமைக்கப்படும். அந்த பெண்ணின் உடலில் நட்சத்திரங்களை இரவை குறிக்க அமைத்தனர்.
பூமியை குறிக்கும் கடவுளானது கெப் (Geb) எனப்படும், இந்த ஜெப் நுட்டின் கணவன் இந்த கடவுள் தரையில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுவது வழக்கம். இவர்களை பிரித்து நிற்கும் மனிதனாக தோற்றம் அளிப்பது காற்று கடவுளான ஷு(Shu). மேலே எழுபவன் என்ற அர்த்தம் கொண்ட காற்று வானத்தையும் பூமியையும் பிரிகின்றது. ஷு ஜெப் மற்றும் நுட்டின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது(படம் 1).
நுட் ஜெப் தம்பதியின் பிள்ளைகள் ஒசிரிஸ் (Osiris),ஐசிஸ் (Isis), சேத் (Seth) மற்றும் நேப்திஸ் (Nephthys) என்கிற கடவுள்கள். பண்டை எகிப்திய கலாச்சாரத்தில் சகோதரியை மனம் செய்து கொள்வது வழக்கம் எனவே ஒரிரிஸ் ஐசிசையும், சேத் நேப்திசையும் திருமணம் செய்து கொண்டதாக வழக்கு.
ஒசிரிஸ் மம்மிமையை போல வடிவம் கொண்ட கடவுள். பதவி ஆசையில் செத் தான் சகோதரன் ஒசிரிசை கொன்றதாக சொல்கின்றனர்.ஒசிரிஸ் இறந்தவர்களை காக்கும் பாதாள கடவுள்.
ஐசிஸ் எனபடும் அன்னை கடவுள், தலையில் கொம்புகளோடு காணப்படும், இவர் தான் எகிப்தியர் மிகவும் போற்றும் ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் தாய். பரோக்கள் அனைவரும் ஐசிசின் குழந்தைகள் என்று சொல்லிகொண்டனர்.(படம் 2)
செத் எனும் கடவுகள் ஒநாய் போன்ற மிருகத்தின் தலை கொண்டதாக சிலைகளில் காணலாம், இந்த கடவுள் அமைதியின்மையின் கடவுள், எல்லா பெருந்துயர்களையும் இவர் தான் கொடுப்பதாக நம்பினார்கள்.
ஹோரஸ் பருந்தின் தலை கொண்ட மனிதனாகவும் வெறும் பருந்தாகவும் வடிவமைக்க பட்ட கடவுள். இவர் தான் தந்தையை கொன்ற செத்தை வெற்றி கொண்டு எகிப்தின் முழுமுதல் அதிபர் ஆனார் என்றும், அந்த யுத்தத்தில் ஹோரஸின் ஒரு கண் பறிக்கப்பட்டது , அதனை மீண்டும் பெற்று வெற்றி கொண்டார் ஹோர்ஸ், எனவே ஹோரசின் கண் தனியாக வழிபடப்படுவதும் உண்டு.
இன்னொரு முக்கிய கடவுள் ரா (Ra) பருந்தின் தலையும் அதன்மேலே சூரியனின் சக்கரம் கொண்ட மனிதனாக தோன்றும் ரா சூரிய கடவுள், தினமும் நுட் இவரை விழுங்கி காலையில் துப்புவதாக மக்கள் நம்பினார். ரா அமுன் (Amun) எனப்படும் இன்னொரு முக்கிய கடவுளோடோடு சேர்ந்து தோன்றுவதை அமுன்ரா (AmunRa) என்று அழைத்தனர்.
ஹதோர் (Hathor) எனப்படும் பெண் தெய்வம், ஹோரசின் மனைவி, இவர் நன்மைகளை தரும் காக்கும் தெய்வம் இவர் தலையில் மாட்டின் கொம்புகளோடு சூரிய சக்கரமும் கொண்ட பெண்ணாக காட்சி தருவார்.
ஆடின தலை கொண்ட தெய்வம் க்ணும் (Khnum), இவர் தான் படைக்கும் கடவுள்,மனிதர்களை இவர் நைல் நதி மன்னைக்கொண்டு செய்தார் என்று கூறினார்கள்.
முதலையின் தலையை கொண்ட கடவுள் சொபேக்(Sobek) இவர், நைல் நதியையும் அதன் வளங்களையும் அளிக்கும் கடவுள்.
தோத் (Toth) எனப்படும் கடவுள் எழுத்தையும் , அறிவையும் தரும் கடவுள், இந்த தெய்வம் ஒரு கொக்கின் தலை கொண்டு வடிவமைக்கப்பட்ட மனிதன்.
அனுபிஸ்(Anubis) எனப்படும் கடவுள் குள்ள நரியின் தலையுடன் தோன்றும் கடவுள், இவர் எகிப்திய வழக்கமான மம்மிபடுத்தும் கடவுள், இவர் இறந்தவர்களின் கடவுள் என்றும் சொல்லலாம்.
இப்போதைக்கு கடைசியாக செக்மெட் (Sekhmet) எனப்படும் சிங்கமுக பெண்ணோடு முடித்துக்கொள்வோம் இவர் போர்தெய்வம்.
எல்லா கடவுள்களும் சில நேரத்தில் கையில் ஒரு திறவுகோல் போன்ற ஒரு வைத்திருக்கும், இது அடுத்த வாழ்கையை அடைவதற்கு உள்ள பாதையில் உள்ள கதவினை திறக்கும் சாவி.
எகிப்தியர்கள் இறந்த பின் அடுத்த வாழக்கை தொடர்வதாகவும் அதனால் தான் உடலை பதப்படுத்தி மம்மிகள் உருவாகினார்கள். மேலும் அந்த பயனத்திற்கு துணை புரியவே கூடவே, உணவு, மது, மிருகங்கள் மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தனர். இந்த சாவியானது அப்படி பட்ட புனர் ஜென்மம் அடைய உதவும் திறவுகோல்.
இப்படியாக எல்லா கடவுள்களை பற்றி கூறியவாறு எங்களை வேனில் கர்நாக் (Karnak) கோவிலை நோக்கி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி. இந்த கோவிலானது உலகத்திலேயே இரண்டாவது பெரிய கோவில் என்றார். பல தூரம் பரந்திருக்கும் இதனை விட பெரிய கோவில் வலகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் (Ankorwat) கோவில் மட்டுமே என்றும் உரைத்தார்.
அப்பேற்பட்ட மகத்தான கோவிலை காணும் ஆவல் தாங்காமல் மேல்ல எங்கள் வண்டியை விட்டு கீழிறங்கினோம். கண் முன்னே தெரிந்ததோ செங்கல சூலை போன்றதொரு கட்டடம். இது என்னடா இதனை பார்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று தோன்றியது (படம் 3).
(தொடரும்)
(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)
-மேகலா இராமமூர்த்தி
’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’ என்று பட்டினப் பாலை ஆசிரியரால் பாராட்டப்பெறுகின்ற காவிரியன்னை தாலாட்டும் சோழவள நாட்டின் அரசனாய்ப் புலவர்கள் போற்றும் சிறப்போடு விளங்கியவன் நலங்கிள்ளி. அவனுக்கு நெருங்கிய உறவினனான நெடுங்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு சோழநாட்டின் மற்றோர் பகுதியை ஆண்டு வந்தான். யாது காரணத்தாலோ அவர்கள் இருவருக்கும் சுமுக உறவு நிலவவில்லை.
பெருவீரனாய் விளங்கிப் புகழ்பெற்றான் நலங்கிள்ளி. அவனுடைய உடன்பிறந்த தம்பியான ‘மாவளத்தானும்’ போர்களிலும், இன்னபிற அரசியல் செயற்பாடுகளிலும் அண்ணனுக்குப் பெரிதும் உதவி வந்தான். ஆனால் நெடுங்கிள்ளியைப் பெருவீரன் என்று சொல்வதற்கில்லை. அரசியல் பகையினால் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்குமிடையே அடிக்கடிப் போரும், பூசலும் நிகழ்ந்தவண்ணமே இருந்தது.
ஒருமுறைச் சோழநாட்டைச் சார்ந்த ’ஆவூர்’ என்ற இடத்தில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தபோது ‘மாவளத்தான்’ ஆவூரை முற்றுகையிட, அதுகண்டு அஞ்சிய நெடுங்கிள்ளி தனக்குச் சொந்தமான ‘உறையூருக்கு’ச் சென்றான்; அங்கும் அவனைத் துரத்திச் சென்றனர் நலங்கிள்ளியும் அவன் தம்பியும். நெடுங்கிள்ளியின் நிலை இரங்கத் தக்கதாய் இருந்தது. அவன் தன் கோட்டைக்குள்ளேயே அஞ்சிப் பதுங்கியிருந்தான்.
இந்நிகழ்வுகளையெல்லாம் கண்டும், கேட்டும் பெரிதும் வருத்தமுற்ற செந்தமிழ்ப் புலவரும் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவர்மாட்டும் பேரன்பு கொண்டவருமான ‘கோவூர் கிழார்’ நலங்கிள்ளியின் அரண்மனைக்குச் சென்று அவனைக் கண்டார். கோவூர் கிழாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த ‘நலங்கிள்ளி’ அவரை அன்போடு வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டான். பின்பு,”‘புலவர் பெருமானே! அவசர வேலையாக உறையூர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்; அதனால் உங்களோடு அதிகநேரம் அளவளாவ அவகாசம் இல்லை; மன்னித்து விடை கொடுங்கள்!” என்று பரபரப்போடு பேசியபடியே அவையிலிருந்து நகர முயன்றான்.
அவன் எங்கு அவ்வளவு அவசரமாகப் போகிறான் என்பதை நன்கு அறிந்த புலவர்பெருமான், “பொறு நலங்கிள்ளி! இவ்வளவு அவசரமாக எங்கேயப்பா புறப்பட்டுவிட்டாய்? உன் உறவினான நலங்கிள்ளியோடு போர் புரியத்தானே?” என்றார் அமைதியாக.
ஆச்சரியத்தோடு புருவத்தை உயர்த்திய நலங்கிள்ளி புலவரை நோக்கி, “அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்று வினவினான்.
”எனக்கு மட்டுமா…..சோழ நாட்டிலுள்ள அனைவருக்குமே தெரிந்த செய்திதானே உங்கள் இருவரின் பகை” என்றார் குரலில் வேதனை தொனிக்க.
“என்ன செய்வது புலவரே….? ஆதியிலிருந்தே எனக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஒத்துவரவில்லை. அதனால் முற்றுகையும், போரும் தவிர்க்க இயலாதவையாகிவிடுகின்றனவே….?”
“நீ இப்படிப் பேசுவது நன்றாகயில்லை, நலங்கிள்ளி. இஃது உன் பேராண்மைக்கும் அழகன்று! போகட்டும், நான் கேட்கின்ற சில கேள்விகளுக்கு மட்டும் பதில்சொல்லிவிட்டு நீ புறப்படு! நான் தடுக்கவில்லை.”
”கேளுங்கள் புலவரே…உங்கள் கேள்விகளுக்குப் பதில்சொல்லிவிட்டே புறப்படுகின்றேன்”
“நல்லது நலங்கிள்ளி!” என்ற கோவூர் கிழார் தொடர்ந்து….”நீ ஒருவனை முற்றுகையிடச் செல்கிறாயே, அவன் பனம்பூ மாலை (பனம்பூ – சேரர்களின் அடையாளப்பூவாகக் கருதப்பட்டது)அணிந்த சேரனா?”
”இல்லை”
”அப்படியானால்….ஒருவேளை வேப்பம்பூ மாலை (வேப்பம்பூ – பாண்டியர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்த பாண்டியனோ?”
“இல்லவேயில்லை புலவரே!”
”அப்படியானால் அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை (ஆத்தி(ஆர்) – சோழர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்தவன்தானா?”
”கோவூர் கிழாரே! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா என்ன..? நெடுங்கிள்ளியும் என்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழ குலத்தவன்தான் என்பது தாங்கள் அறியாததா?”
”அறிவேன் நலங்கிள்ளி; நன்றாக அறிவேன். அதனை உனக்கு ஞாபகப்படுத்தவே இவ்வாறு கேட்டேன். அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழர் தொல்குடியைச் சேர்ந்தவன்தான்; அதனை நீ மறந்துவிட்டுப் போருக்குப் புறப்படுகிறாயே? இதன் பின்விளைவுகளை நீ உணரவில்லையே! என்ற வருத்தம்தான் எனக்கு.”
”என்ன சொல்லவருகிறீர்கள் புலவர்பெருமானே! சற்று எனக்கு விளங்குமாறு சொல்லுங்கள்!”
”தெளிவாக….உடைத்தே சொல்லிவிடுகிறேன் நலங்கிள்ளி. நீ யாரோடு போர் செய்ய விரும்புகிறாயோ, அவனும் உன்னைப் போலவே புகழ்வாய்ந்த சோழர்குடியைச் சேர்ந்தவனே. நீங்கள் இருவரும் மேற்கொள்ளப்போகும் போரில் இருவரும் வெற்றிபெறுவது என்பது இயற்கையில் நடவாத காரியம்; உங்களில் யார் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ சோழர்குடிதான்! உங்கள் இருவரின் பகையும், பூசலும் உம்குடிக்குப் பீடுதருவதன்று! அதுமட்டுமா? ’கொடியால் பொலிகின்ற தேருடன் பவனிவருகின்ற’ உம்மைப் போன்ற மற்ற வேந்தர்களுக்குப் பேருவகையையும், பெருமகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியது நும் பகை; இதனை மறவாதே!” என்றார் கோவூர் கிழார்.
அனுபவமும், அறிவும் செறிந்த கோவூராரின் மொழிகள் நலங்கிள்ளியைச் சிந்திக்க வைத்தன. அதன்காரணமாக அவன் நெடுங்கிள்ளிமீது மேற்கொள்ளவிருந்த முற்றுகைப் போரைக் கைவிட்டான். தனக்கு நல்லறிவு புகட்டிய புலவரை மீண்டும் அன்போடு அணைத்துக் கொண்டான்.
நலங்கிள்ளியின் மனத்தை மாற்றிப் போரைக் கைவிடவைத்த கருத்தாழம் மிக்க அப்பாடல் இதுவே..
“இரும்பனை வெண்தோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன்
நின்னகண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேறல் இயற்கையு மன்றே, அதனால்
குடிப்பொரு ளன்றுநும் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே.” (புறம்: 45)
கோவூர் கிழாரின் பாடலை இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும்போது பல்வேறு எண்ண அலைகள் மனக் கடலில் கொந்தளிக்கவே செய்கின்றன. நம் தமிழர்கள் மட்டும் சாதி, மதம், அரசியல் என்ற பல்வேறு அற்பக் காரணங்களின் அடிப்படையில் சிதறிக் கிடக்காமல், தம் (அரசியல்) சுயலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் மனிதாபிமானத்தோடும், ஒற்றுமையோடும் ஒருமித்துக் குரல் எழுப்பியிருந்தால் – தம் எதிர்ப்பைப் பலமாக வெளிப்படுத்தியிருந்திருந்தால்… அண்டை நாட்டில் நம் சகோதரத் தமிழர்கள் இப்படி இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்களே..! அதனைத் தவறவிட்டுவிட்டோமே! அவ்விழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறோம்? அதனை எண்ணும்போது விழியோரம் அருவி பொழியவே செய்கிறது.
இனியாவது தமிழர்களாகிய நாம் நமக்குள்ளிருக்கும் இனச் சண்டை, மதச் சண்டை, அரசியல் காழ்ப்பு ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளியேவராமல் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருப்போமானால் பேரழிவு நமக்குத்தான் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை!
இக்கருத்தையே நம் மகாகவியும்,
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த”
ஞானம்வந் தால்பின் நமக்கெது வேண்டும்?” என்று எளிய தமிழில் எடுத்தோதினான்.
புறநானூற்றுப் புதையலை ஆராய, ஆராய அதிலிருந்து முத்துக்களாகவும், மணிகளாகவும் வெளிப்படும் அரசியல் சிந்தனைகளுக்கும், அறநெறிசார் வாழ்வியல் கோட்பாடுகளுக்கும் அளவேயில்லை. எனினும் காலஅளவு கருதி ஒருசிலவற்றை மட்டுமே தொட்டுக்காட்ட இயலுகின்றது.
ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறமுடியும்! புறநானூற்றைப் படித்தால் கோழையும் வீரனாவான்; அறிவிலியும் அறிஞனாவான்; சுயநலவாதியும் பொதுவுடைமையைப் போற்றுவான். எனவே தமிழர்களாகிய நாம் புறநானூற்றைக் கற்போம்; மற்றவர்க்கும் கற்பிப்போம். எலிப்பொறியில் சிக்குண்ட எலிபோல் எப்போதும் கணிப்பொறியே கதியென்று கிடக்காமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சங்கத் தமிழையும் சற்றே பருகுவோம். ‘புத்தகங்கள் வெறும் காகிதங்கள்தான்; ஆனால் படிக்கப் படிக்க அவை ஆயுதங்களாக மாறும்!” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். நம் சங்கத்தமிழ் நூல்களும் அப்படிப்பட்டவையே!
என்னருமைத் தமிழ்மக்களே! நல்ல தமிழை நாளும் கற்போம்; வாழ்வில் உயர்வோம்!
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு!!
(முற்றும்)
ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி
பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி
எனது மனது எனும் கண்ணாடியாம் அதை
குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து
’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம்
இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன்.
புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார்
குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து
விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன்.
சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்!
முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று.
ஜய ஹனுமான ஞான குன ஸாகர
ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1)
வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம்
வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன்
ராம தூத அதுலித பல தாமா
அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2)
அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன்
அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன்
மஹா வீர விக்ரம பஜரங்கி
குமதி நிவார ஸுமதிகே சங்கி (3)
மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ!
தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!
கஞ்சன பரன விராஜ ஸுவேஸா
கானன குண்டல குஞ்சித கேஸா (4)
பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ!
மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன்
ஹாத பஜ்ர ஒளர த்வஜா பிராஜை
காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5)
வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன்
முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன்
ஷங்கர ஸுவன கேஸரி நந்தன
தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6)
சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ
உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே வணங்கும்
வித்யாவான குணி அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர (7)
கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ!
சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய்
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா
ராம லகன ஸீதா மன பசியா (8)
இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே!
இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே!
சூக்ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா
விகட ரூப தரி லங்க ஜராவா (9)
சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய்
பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு இரையாக்கினாய்.
பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10)
பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய்
ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்
லாய ஸஜீவன லகன ஜியாயே
ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11)
இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய்
அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார்
ரகுபதி கீன்ஹி பகுத படாயீ
தும மம ப்ரிய பரத சம பாயீ (12)
உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான்
எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான்
ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம்
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம் (13)
உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து
தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே!
ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா
நாரத ஸாரத ஸஹித அஹிஸா (14)
யம குபேர திக்பால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15)
ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள்
நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள்
அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே
அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட!
தும உப்கார ஸுக்ரீவஹிம் கீன்ஹா
ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16)
குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு
தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே!
தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா
லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17)
உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன்
வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே!
ஜுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18)
பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய
பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே!
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாந்தி கயே அசரஜ நாஹீம் (19)
அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ
விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே!
துர்கம காஜ ஜகத கே தேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே (20)
இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும்
வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே
ராம துஆரே தும ரக்வாரே
ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21)
இராமனது வாயில் காவலன் நீ
உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே!
சப ஸுக லஹை தும்ஹாரி ஸரனா
தும ரக்ஷக காஹு கோ டர்னா ………………… (22)
எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே
நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்?
ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை
தீனோம லோக ஹாங்க தே காம்பை ……. (23)
உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின்
முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே!
பூத பிஷாச நிகட நஹீம் ஆவே
மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24)
அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும்
பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!
நாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25)
எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே
என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால்
ஸங்கட தே ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26)
எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ
அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார்
ஸப பர ராம தபஸ்வி ராஜா
தின்கே காஜ சகல தும ஸாஜா ……….. (27)
இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின்
பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ!
ஒளர மனோரத ஜோ கோயி லாவை
ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28)
உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம்
உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே!
சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா
ஹை பரசித்த ஜகத உஜியாரா …. (29)
யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே
உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே
சாது சந்த கே தும ரக்வாரே
அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30)
சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும்
அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய நீயே!
அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா
அஸ வர தீன ஜானகி மாதா.. (31)
சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும்
சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி
ராம ரஸாயன தும்ஹரே பாஸா
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32)
இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு
இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு
தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜன்ம ஜன்ம கே துக பிஸ்ராவை .. (33)
உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே
ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே!
அந்த கால ரகுபர புர ஜாயி
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34)
அந்திம காலத்தில் இராமனின் இருப்பிடம் அடைவோர்
அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர்
ஒளர தேவதா சித ந தரயி
ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35)
அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே
பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே!
ஸங்கட கடை மிடை சப பீரா
ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36)
எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின்
எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே.
ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி
க்ருபா கரஹ குருதேவ கீ நாயி … (37)
ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே
பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே!
ஜோ ஷத பார பாட கர கோயி
சுட்ஹி பந்தி மஹாஸுக ஹோயி (38)
எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ
அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!
ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா
ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39)
எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ
அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி.
துலஸிதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா. (40)
துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம்
அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே!
பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப
ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப
சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே!
எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!
படத்திற்கு நன்றி:
http://festivalchaska.blogspot.in/2013/04/bajrangbali-hd-wallpaper-stylish.html
மலர் சபா
புகார்க்காண்டம்- 09.
கனாத்திறம் உரைத்த காதை
கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்
கோவலன் கண்ணகியிடம் கூறினன்:
சேயிழையே! நான் சொல்வது கேள்;
நீ குறிப்பிட்ட இச்சிலம்புதனை
முதல் எனக் கொண்டு
மிக்க புகழுடைய
மாடமதுரைக்குச் சென்று
வணிகம் செய்து
முன்பு நான் இழந்திட்ட பொருட்களையும்
தொலைத்திட்ட அணிகலன்களையும்
மீட்டெடுக்க முடிவு செய்துள்ளேன்.
இதழ்விரிந்த மலர்களையுடைய
மாலையணிந்தவளே..
நீயும் என்னுடம் புறப்படுவாயாக!
முற்பிறவியில் செய்திட்ட
ஊழ்வினை உருத்து வந்து
மதுரைக்குப் போகும்படி தூண்ட
அவ்வினையதன் ஏவல் மேற்கொண்டு
மறுதினம், காலைக் கதிரவன் உதித்து
வைகறை இருளை ஓட்டும் முன்பே
அவ்விருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
வெண்பா
மாதவி வசந்தமாலையிடம் கூறிய
“மாலை வாராராயின் காலை காண்போம்”
என்ற மொழியைக்
கண்ணகி கண்ட கனவது
பயனற்றதாக்கிவிட்டது.
ஊழ்வினை உருத்து வந்து
நெஞ்சைத் தூண்டி நிற்க
காலைக் கதிரவன் வைகறை இருளை விரட்டுமுன்னே
கண்ணகியுடன் புறப்பட்டுச் சென்றான் கோவலன்.
கனாத்திறம் உரைத்த காதை முற்றிற்று.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 83
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
படத்துக்கு நன்றி:
http://www.hindustantimes.com/photos-news/Photos-World/venustransit/Article4-866678.aspx
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் உங்கள் பிரச்னைகளை நம்பிக்கையான ர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது.
ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல, ஆரோக் கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல் களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.
மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்த சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறருக்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.
கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.
கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாக செயல்படுவது அவசியம்.
துலாம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்மு டைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரி மைஎடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளி படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக் யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.
தனுசு: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டார தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாண ங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், பெண்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக்காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள்.
மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.
கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.
மீனம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக் கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.
சுபாஷிணி ட்ரெம்மல்
உலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேலாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது. புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காட்சிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல. ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கிறதா என்பதே கேள்வி. இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்டத் தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர். அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம். அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம். அவரது உருவப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம். இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம். வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.
உலகில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம். தனி மனிதரின் ஆன்ம பலமும், ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அத்தகைய பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களைக் காண்கிறேன்.
அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன். வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை. வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.

வள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன் இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இவை அக்காலச் சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள். வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகிறது.

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது. அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை. இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன் ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.
வ.உ.சி. ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை, தமிழ்க்கல்வி, ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூல்களை புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது. வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.
அவர் எழுதி வெளி வந்த நூல்கள்:
மெய்யறிவு
மெய்யறம்
எனது பாடல் திரட்டு
வ. உ.சி. கண்ட பாரதி
சுயசரிதை
இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:
மனம் போல வாழ்வு
அகமே புறம்
வலிமைக்கு மார்க்கம்
சாந்திக்கு மார்க்கம்
இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:
சிவ ஞான போதம்
இன்னிலை
திருக்குறள்
வ. உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.
1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி
உயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புகள் நிறைந்தோருக்கும் மட்டுமே கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன. அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன. வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:
தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
சிவஞான போதம்
சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அறியும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா? இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:
விவேக பாநு
தமிழ் நேஷனல்
பத்திரிகை
இந்து நேசன்
சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள். தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார். 1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார். பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனது அரசியல் பெருஞ்செயல்’ என்ற தலைப்பில் அச்சு வடிவம் கண்டுள்ளது. இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.
இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா? வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை, உயர்வான வாழ்வியல் நெறி முறைகள், தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு, அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகிறேன். இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும் என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன். இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.
இந்த சிந்தனைகளுடனேயே இங்கிருந்து புறப்படுவோம். வேறொரு நாட்டில் மற்றுமொரு அருஙகாட்சியகத்தை நாம் அடுத்து காண வேண்டுமல்லவா?
தொடரும்
சத்திய மணி
தேசத்தை நேசித்தான் பாசத்தை சுவாசித்தான்
வாசத்தில் வாசம் கொண்டு சத்சங்கம் போதித்தான் ()
புவனியின் மைந்தனாக பிறந்திடினும் சிங்கம்தான்
பவனிவரும் போதினிலோ உரமேற்றும் வங்கம்தான்
இவனுரையைக் கேட்டாலே பலமேற்றும் அங்கம்தான்
அவன்கருத்தை ஏற்றாலே இளங்கன்றும் பொங்கும்தான்()
குருவான ராமகிருஷ்ண பதங்கண்டு கற்றிட்டான்
கருவானக் காவியங்களை உரையிட்டு முற்றிட்டான்
தருவாக மடங்களென்னும் பள்ளிகளை கட்டிட்டான்
உருவாக இளையபாரதம் எழுகவென்று தட்டிட்டான்()
பூமியிலே சொர்க்கம் எங்கள் நாடென்று சாதித்தான்
காவியிலே இருந்தாலும் தான் கற்பூரம் ஆகிட்டான்
ஆன்மீக ஆற்றினில் வெள்ளப் பெருக்காக ஓடிட்டான்
வான்போல நினைவு திறனால் புவியோரை மயக்கிட்டான்()
வேகத்தின் வலிமை பேச்சில் விவேகன் ஆனந்தம்
மேகத்தை முடியில் தரித்த நரேந்தர மாணிக்கம்
யோகமுடன் தேகவலிமை நீதிநெறி தனைக்காப்போம்
ஆகமுடன் தேசபக்தி போதித்த வழியேற்போம்()
படத்திற்கு நன்றி: http://www.sv150.info/wp-content/uploads/2011/11/Swamiji_Wallpaper03_1920X1080.jpg
தஞ்சை வெ.கோபாலன்
கோயிற்றிருவகவல்
நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப் பொய் வாழ்க்கையை உடலை யோம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றிய மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும்
பிறந்தன பிறந்த பிறவிகள் தோறும்
கொன்றனை யனைத்தும் அனைத்து நினைக்கொன்றன
தின்றனை யனைத்தும் அனைத்து நினைத் தின்றன
பெற்றனை யனைத்தும் அனைத்து நினைப் பெற்றன
ஓம்பினை யனைத்தும் அனைத்து நினை யோம்பின
செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை
சுவர்க்கத் திருந்தனை நரகிற் கிடந்தனை
இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை
ஒன்றொன் றொழியாது உற்றனை யன்றியும்
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை யிதனுள்
பீளையும் நீரும் புலப்படும் ஒரு பொறி
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீருந் தவழும் ஒரு பொறி
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி
வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி
சலமுஞ் சீழும் சரியும் ஒருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து
கடிமலர் கொன்றை சடைமுடிக் கடவுளை
ஒழிவருஞ் சிவபெரும் போக இன்பத்தை
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலர இகபரம் அறவொரு
முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்
திருச்சிற்றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே.
இந்தப் பாடலில் அடிகளார் சொல்ல வந்த கருத்து நமது வேத வேதாங்கங்கள் சொல்லுகின்ற பழம்பெரும் கருத்துதான். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எனும் சொல் வழக்கு நம்மிடையே உண்டு. இந்த உலகம் எப்போதும் இயங்கிக் கொண்டே யிருக்கிறது. இயக்கம்தான் சக்தி. ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த விநாடி அவ்விடத்தைக் கடந்த நீர் அடுத்த விநாடி எங்கே இருக்கும் தெரியாது நமக்கு. ஆனால் தொடர்ந்து ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த நிலையில் இப்போது பார்த்த நீர் எங்கே செல்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை.
உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, தோன்றியதன் நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ, காலம் வந்ததும் அது மறைந்து விடுகிறது. ஒன்று மறைந்தது உணராமல் மற்றொன்று அங்கு தோன்றுகிறது. எட்ட இருந்த இந்த இயற்கையில் விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு இங்கு ஏற்படுகின்ற இந்த மாற்றங்கள் அத்தனை இலகுவில் தெரிய வாய்ப்பில்லை. அந்த இயற்கையின் மர்மத்தை பாமரர்களும் உணரும்படியாக அடிகளார் இந்தப் பாடலில் கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார்.
ஓ! மனிதர்களே! இந்த இயற்கையின் விளையாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருக்கும் மானுட ஜன்மங்களே, சற்று நினைத்துப் பாருங்கள். உலகில் பிறப்பு எடுத்து பேய் போன்று உடல் படைத்து சோதனைகள் எனும் பேய்க்காற்று சுற்றிச் சுழற்றி ஆட்டுவிக்கும் போதில், சிவனை நினை, அந்த பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சிதம்பரநாதனை, நடராசப் பெருமானை மனத்தில் நினை.
பாரதி சொன்னது போல “உலகெலாம் பெரும் கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்” என்றானே, அந்தக் கருத்துக்கு மூலம் இந்த பட்டினத்தார் வாக்குதான். எப்படி எனக் கேட்கலாம்?
தனது சுயசரிதையை “கனவு” எனும் தலைப்பில் எழுதத் துவங்கிய பாரதி முதலில் பட்டினத்துப் பிள்ளையின் இந்த வரிகளோடுதான் துவக்குகிறான். ஆகவே மேற்சொன்ன கருத்துக்கு ஊக்கமளித்தது கீழ்கண்ட இந்த வரிகள்தான்: அது
“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே”
கனவின் முதலடிகள் “வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்” என்பதுதான். இந்த கனவின் கருத்தும் பட்டினத்தடிகளின் இந்த ‘யாக்கை நிலையாமை’ குறித்ததுதான்.
இந்தக் கோயிற்றிருவகவல் பாடலில் அடிகள் சொல்ல வந்த கருத்து பல்வேறு செயல்கள் எப்படி முன்பு இருந்ததென்பதையும், அது பின்னர் எங்ஙனம் மாறுகிறது, மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறுகிறது என்பதை பலசொல்லி விளக்க முயல்கிறார்.
இவ்வுலகில் பிறந்த அனைத்தும் ஓர் நாள் அழிந்தே தீரும், அப்படி அழிந்த அனைத்தும் மீண்டும் இங்கு வந்து பிறந்தே தீரும். இறைவன் படைப்பின் இரகசியமே இதுதான். இன்று தோன்றியது நாளை மறைகிறது. நாளை மறந்தது மற்றொரு நாள் மீண்டும் தோன்றுகிறது.
இன்று இந்த பூமியைக் கட்டியாளும் பார்போற்றும் சீமானாக விளங்குபவன், காலவோட்டத்தால் கீழ்நிலை அடைந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கலாம். காலத்தின் கோலத்தால் தெருவோரம் கிடந்து வருத்தப்படுபவன் நாளையே தலையெடுத்து பாராளும் வேந்தனாக ஆகலாம். எவன் எப்போது எப்படி ஆவான் என்பதை அவனைத்(பரம்பொருள்) தவிர வேறு யாரறிவார் என்பது அடிகளின் கூற்று. இன்று உறவு நட்பு என்று கூடி மகிழ்ந்து வாழுவோர் நாளை விதியின் வசத்தால், காலவோட்டத்தின் கட்டாயத்தால் பிரிந்து வருந்தி வாழ நேரலாம். மகிழ்ந்து கூடி திருமண பந்தத்தால் கட்டுப்பட்டவர்கள் கூட குறுகிய காலத்தில் பிரிந்து நீ யாரோ, நான் யாரோ என்று வாழ்வதில்லையா?
இன்று தலைவாழை இலைபோட்டு பஞ்ச பரமான்னம் அருந்தினாலும், நாளையும் அவை உண்டவனிடம் அப்படியேவா இருக்கப் போகிறது. மறுநாள் அது கழிவுப் பொருள். அதை யார் சீண்டுவார்கள். புத்தம்புது பட்டாடை விரும்பி இன்று அணிந்தாலும் நாளை அது தூய்மை செய்யப்பட வேண்டிய அழுக்கு அல்லவா? இன்று விரும்பியது நாளை வெறுக்கத்தக்கதாக ஆகும். சேர்ந்தவர் பிரிவர், பிரிந்தவர் சேர்ந்து கொள்வர். ஆசையோடு விரும்பியது வெறுக்கத்தக்கதாகும், வெறுத்து ஒதுக்கியது விரும்பத்தக்கதாகும்.
பிறக்கும் உயிர்கள் யாவும் இறந்து போகும், இறந்தவை அனைத்தும் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்து வரும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆதி சங்கரர் சொல்லவில்லையா? பரம்பொருளில் இருந்து ஜீவாத்மாக்கள் உதிக்கின்றன, வெட்ட வெளியில் அந்த ஜீவ ஒளிகள் சுற்றிச் சுழன்று ஓய்ந்து மீண்டும் அந்த பேரொளியில் சென்று ஐக்கியமாகிவிடுகின்றன. இதை உணர்ந்தவனே ஞானி.
வாழ்க்கை என்பதில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. சுவர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு. வருத்தமும் உண்டு, மகிழ்ச்சியும் உண்டு. எது எப்போது வரும், யாருக்குத் தெரியும்? பிறப்பு எடுத்தோம், பட்டுடைகள் எட்டு வகை அணிந்து கொண்டோம், அவை நிரந்தரம் என்று இறுமாந்திருந்தோம். கல்லினும் இது வலியது என்று ஆணவம் கொண்டிருந்தோம். எனக்கு நிகராக எவர் இங்கு என்று இரும்பூது கொண்டிருந்தோம். அப்படிப்பட்டதா இந்த உடல். கல்லினும் வலியதோ இது? நீர்க்குமிழி போன்ற இவ்வுடல் சிலநாட்கள் ஒதுங்கும் ஒரு குடிசை என்பதை உணர். (புற்பதம்=நீர்க்குமிழி. குரம்பை=குடிசை துச்சில்=தங்குமிடம்)
உடலில் எத்தனை அங்கங்கள். அழுக்குப் பீளையும், நீரும் கசியும் ஓர் அங்கம். அழுக்கும் குறும்பியும் வெளிப்படும் ஓர் அங்கம், சளியும் நீரும் பொழியும் ஓர் அங்கம், உமிழ்நீர் கோழை ஒழுகும் ஓர் அங்கம், வளியும் (வாயு) மலமும் வெளிப்படும் ஓர் அங்கம், நீரும் சளியும் சரியும் ஓர் வழி, இன்று இன்பங்களைத் துய்க்கும் உடல் நாளை வெந்து சாம்பலாகும். இன்பத்தை உடல் துய்க்கிறதா, உள்ளம் துய்க்கிறதா? முடிவில் இரண்டுமே காலத்தோடு கரைந்து போகிறது. கானல் நீர் போன்ற தோன்றி மறையும் இன்பத்தை வேண்டி, நிரந்தர நன்மையைப் புறந்தள்ள முடியுமா?
நினை! சிவபெருமானை நினை. மாய நினைவுகளை நீக்கிவிடு. இன்பமென நினைத்துத் துன்பங்களை தழுவும் எண்ணத்தைக் கைவிடு! இகத்துக்கும் பரத்துக்கும், அறத்துக்கும் முதல்வனான தில்லையில் எழுகின்ற ஜோதியாம் நடராசப் பெருமானை நினை. ஆனந்தக் கூத்தனை நினை. தீயிலிட்ட அரக்கு உருகுவது போல நெஞ்சம் நெக்குருகி திருச்சிற்றம்பலத்தானை, அவன் இருதாளை நினை. ஏ மனமே, அவனை நினை. சிவபெருமானை, பொன்னம்பலமாடும் திருவருட் செல்வனை எப்போதும் நினை. நிரந்தரப் பொருள் அவன், மற்றெல்லாம் தோன்றி அழிவன. நிரந்தப் பொருளை எப்போதும் நினை மனமே!
படத்திற்கு நன்றி: http://www.oocities.org/shivaperuman/pattinathar.html