பட்டினத்தடிகளின் பாடல்கள்
தஞ்சை வெ.கோபாலன்
கோயிற்றிருவகவல்
நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப் பொய் வாழ்க்கையை உடலை யோம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றிய மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும்
பிறந்தன பிறந்த பிறவிகள் தோறும்
கொன்றனை யனைத்தும் அனைத்து நினைக்கொன்றன
தின்றனை யனைத்தும் அனைத்து நினைத் தின்றன
பெற்றனை யனைத்தும் அனைத்து நினைப் பெற்றன
ஓம்பினை யனைத்தும் அனைத்து நினை யோம்பின
செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை
சுவர்க்கத் திருந்தனை நரகிற் கிடந்தனை
இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை
ஒன்றொன் றொழியாது உற்றனை யன்றியும்
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை யிதனுள்
பீளையும் நீரும் புலப்படும் ஒரு பொறி
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீருந் தவழும் ஒரு பொறி
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி
வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி
சலமுஞ் சீழும் சரியும் ஒருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து
கடிமலர் கொன்றை சடைமுடிக் கடவுளை
ஒழிவருஞ் சிவபெரும் போக இன்பத்தை
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலர இகபரம் அறவொரு
முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்
திருச்சிற்றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே.
இந்தப் பாடலில் அடிகளார் சொல்ல வந்த கருத்து நமது வேத வேதாங்கங்கள் சொல்லுகின்ற பழம்பெரும் கருத்துதான். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எனும் சொல் வழக்கு நம்மிடையே உண்டு. இந்த உலகம் எப்போதும் இயங்கிக் கொண்டே யிருக்கிறது. இயக்கம்தான் சக்தி. ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த விநாடி அவ்விடத்தைக் கடந்த நீர் அடுத்த விநாடி எங்கே இருக்கும் தெரியாது நமக்கு. ஆனால் தொடர்ந்து ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த நிலையில் இப்போது பார்த்த நீர் எங்கே செல்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை.
உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, தோன்றியதன் நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ, காலம் வந்ததும் அது மறைந்து விடுகிறது. ஒன்று மறைந்தது உணராமல் மற்றொன்று அங்கு தோன்றுகிறது. எட்ட இருந்த இந்த இயற்கையில் விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு இங்கு ஏற்படுகின்ற இந்த மாற்றங்கள் அத்தனை இலகுவில் தெரிய வாய்ப்பில்லை. அந்த இயற்கையின் மர்மத்தை பாமரர்களும் உணரும்படியாக அடிகளார் இந்தப் பாடலில் கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார்.
ஓ! மனிதர்களே! இந்த இயற்கையின் விளையாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருக்கும் மானுட ஜன்மங்களே, சற்று நினைத்துப் பாருங்கள். உலகில் பிறப்பு எடுத்து பேய் போன்று உடல் படைத்து சோதனைகள் எனும் பேய்க்காற்று சுற்றிச் சுழற்றி ஆட்டுவிக்கும் போதில், சிவனை நினை, அந்த பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சிதம்பரநாதனை, நடராசப் பெருமானை மனத்தில் நினை.
பாரதி சொன்னது போல “உலகெலாம் பெரும் கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்” என்றானே, அந்தக் கருத்துக்கு மூலம் இந்த பட்டினத்தார் வாக்குதான். எப்படி எனக் கேட்கலாம்?
தனது சுயசரிதையை “கனவு” எனும் தலைப்பில் எழுதத் துவங்கிய பாரதி முதலில் பட்டினத்துப் பிள்ளையின் இந்த வரிகளோடுதான் துவக்குகிறான். ஆகவே மேற்சொன்ன கருத்துக்கு ஊக்கமளித்தது கீழ்கண்ட இந்த வரிகள்தான்: அது
“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே”
கனவின் முதலடிகள் “வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்” என்பதுதான். இந்த கனவின் கருத்தும் பட்டினத்தடிகளின் இந்த ‘யாக்கை நிலையாமை’ குறித்ததுதான்.
இந்தக் கோயிற்றிருவகவல் பாடலில் அடிகள் சொல்ல வந்த கருத்து பல்வேறு செயல்கள் எப்படி முன்பு இருந்ததென்பதையும், அது பின்னர் எங்ஙனம் மாறுகிறது, மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறுகிறது என்பதை பலசொல்லி விளக்க முயல்கிறார்.
இவ்வுலகில் பிறந்த அனைத்தும் ஓர் நாள் அழிந்தே தீரும், அப்படி அழிந்த அனைத்தும் மீண்டும் இங்கு வந்து பிறந்தே தீரும். இறைவன் படைப்பின் இரகசியமே இதுதான். இன்று தோன்றியது நாளை மறைகிறது. நாளை மறந்தது மற்றொரு நாள் மீண்டும் தோன்றுகிறது.
இன்று இந்த பூமியைக் கட்டியாளும் பார்போற்றும் சீமானாக விளங்குபவன், காலவோட்டத்தால் கீழ்நிலை அடைந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கலாம். காலத்தின் கோலத்தால் தெருவோரம் கிடந்து வருத்தப்படுபவன் நாளையே தலையெடுத்து பாராளும் வேந்தனாக ஆகலாம். எவன் எப்போது எப்படி ஆவான் என்பதை அவனைத்(பரம்பொருள்) தவிர வேறு யாரறிவார் என்பது அடிகளின் கூற்று. இன்று உறவு நட்பு என்று கூடி மகிழ்ந்து வாழுவோர் நாளை விதியின் வசத்தால், காலவோட்டத்தின் கட்டாயத்தால் பிரிந்து வருந்தி வாழ நேரலாம். மகிழ்ந்து கூடி திருமண பந்தத்தால் கட்டுப்பட்டவர்கள் கூட குறுகிய காலத்தில் பிரிந்து நீ யாரோ, நான் யாரோ என்று வாழ்வதில்லையா?
இன்று தலைவாழை இலைபோட்டு பஞ்ச பரமான்னம் அருந்தினாலும், நாளையும் அவை உண்டவனிடம் அப்படியேவா இருக்கப் போகிறது. மறுநாள் அது கழிவுப் பொருள். அதை யார் சீண்டுவார்கள். புத்தம்புது பட்டாடை விரும்பி இன்று அணிந்தாலும் நாளை அது தூய்மை செய்யப்பட வேண்டிய அழுக்கு அல்லவா? இன்று விரும்பியது நாளை வெறுக்கத்தக்கதாக ஆகும். சேர்ந்தவர் பிரிவர், பிரிந்தவர் சேர்ந்து கொள்வர். ஆசையோடு விரும்பியது வெறுக்கத்தக்கதாகும், வெறுத்து ஒதுக்கியது விரும்பத்தக்கதாகும்.
பிறக்கும் உயிர்கள் யாவும் இறந்து போகும், இறந்தவை அனைத்தும் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்து வரும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆதி சங்கரர் சொல்லவில்லையா? பரம்பொருளில் இருந்து ஜீவாத்மாக்கள் உதிக்கின்றன, வெட்ட வெளியில் அந்த ஜீவ ஒளிகள் சுற்றிச் சுழன்று ஓய்ந்து மீண்டும் அந்த பேரொளியில் சென்று ஐக்கியமாகிவிடுகின்றன. இதை உணர்ந்தவனே ஞானி.
வாழ்க்கை என்பதில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. சுவர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு. வருத்தமும் உண்டு, மகிழ்ச்சியும் உண்டு. எது எப்போது வரும், யாருக்குத் தெரியும்? பிறப்பு எடுத்தோம், பட்டுடைகள் எட்டு வகை அணிந்து கொண்டோம், அவை நிரந்தரம் என்று இறுமாந்திருந்தோம். கல்லினும் இது வலியது என்று ஆணவம் கொண்டிருந்தோம். எனக்கு நிகராக எவர் இங்கு என்று இரும்பூது கொண்டிருந்தோம். அப்படிப்பட்டதா இந்த உடல். கல்லினும் வலியதோ இது? நீர்க்குமிழி போன்ற இவ்வுடல் சிலநாட்கள் ஒதுங்கும் ஒரு குடிசை என்பதை உணர். (புற்பதம்=நீர்க்குமிழி. குரம்பை=குடிசை துச்சில்=தங்குமிடம்)
உடலில் எத்தனை அங்கங்கள். அழுக்குப் பீளையும், நீரும் கசியும் ஓர் அங்கம். அழுக்கும் குறும்பியும் வெளிப்படும் ஓர் அங்கம், சளியும் நீரும் பொழியும் ஓர் அங்கம், உமிழ்நீர் கோழை ஒழுகும் ஓர் அங்கம், வளியும் (வாயு) மலமும் வெளிப்படும் ஓர் அங்கம், நீரும் சளியும் சரியும் ஓர் வழி, இன்று இன்பங்களைத் துய்க்கும் உடல் நாளை வெந்து சாம்பலாகும். இன்பத்தை உடல் துய்க்கிறதா, உள்ளம் துய்க்கிறதா? முடிவில் இரண்டுமே காலத்தோடு கரைந்து போகிறது. கானல் நீர் போன்ற தோன்றி மறையும் இன்பத்தை வேண்டி, நிரந்தர நன்மையைப் புறந்தள்ள முடியுமா?
நினை! சிவபெருமானை நினை. மாய நினைவுகளை நீக்கிவிடு. இன்பமென நினைத்துத் துன்பங்களை தழுவும் எண்ணத்தைக் கைவிடு! இகத்துக்கும் பரத்துக்கும், அறத்துக்கும் முதல்வனான தில்லையில் எழுகின்ற ஜோதியாம் நடராசப் பெருமானை நினை. ஆனந்தக் கூத்தனை நினை. தீயிலிட்ட அரக்கு உருகுவது போல நெஞ்சம் நெக்குருகி திருச்சிற்றம்பலத்தானை, அவன் இருதாளை நினை. ஏ மனமே, அவனை நினை. சிவபெருமானை, பொன்னம்பலமாடும் திருவருட் செல்வனை எப்போதும் நினை. நிரந்தரப் பொருள் அவன், மற்றெல்லாம் தோன்றி அழிவன. நிரந்தப் பொருளை எப்போதும் நினை மனமே!
படத்திற்கு நன்றி: http://www.oocities.org/shivaperuman/pattinathar.html