சட்டங்களும், அவசரச் சட்டங்களும்!
பவள சங்கரி
தலையங்கம்
இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக ஆன பின்பு நம் நாட்டின் அரசியலமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற சில வரையறைக்குட்பட்டு சட்ட அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த சட்ட அமைப்பை ஏற்படுத்தி 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றைய சூழலுக்கேற்ப சில திருத்தங்கள், அல்லது புதிய சட்டங்கள் அசாதாரண சூழ்நிலையில் ஏற்படுத்தப்படவேண்டிய அவசரச் சட்டங்கள் அவசரமாக ஏற்படுத்தப்படுகின்றன. பின்பு அவை பாராளுமன்ற அங்கீகாரத்தோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டங்களாகின்றன. சென்ற வாரம் மத்திய மந்திரிசபை கூடி அதை அங்கீகாரம் செய்து ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த அவசரச் சட்டம் இல்லையென்றால் பெரும் பிரச்சனை ஏதும் வந்திருக்கப்போவதில்லை. உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கைகள் இருக்க வேண்டியதுதானே நியாயம்? இதற்கு எதற்கு அவசரச் சட்டம்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அவர்களைக் காப்பாற்ற எதற்கு அவசரச் சட்டம்? குடியரசுத் தலைவர் திருப்பியனுப்பிய பிறகாவது அந்த அவசர சட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.
காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பொறுமையாக வந்து, எனது கட்சியில், எனது அரசாங்கத்திலும் இப்படி நடக்கலாமா என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கேட்கிறார். ‘முட்டாள்தனமான அவசரச் சட்டம்’ என்கிறார். உடனடியாக வெளிநாட்டிலிருந்து, நான் திரும்பியவுடன் இதுபற்றி விவாதிக்கலாம் என்கிறார் பிரதமர். இன்று, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்கள் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் , 7 அரசியல் தலைவர்கள் மற்றும் 4 உயர் அதிகாரிகள் உட்பட 45 பேரை குற்றவாளிகள் என்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்குரிய தண்டனை 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். நாளை இவர்களுடைய தண்டனை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். மேலும் 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதிலிருந்து அவரை தப்புவிப்பதற்காகத்தான் இந்த அவசரச் சட்டம் என்று அறியும்போது கேலிக்கூத்தாகிப்போன சட்ட ஜனநாயகத்தை எண்ணி மக்கள் வெட்கப்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இது போன்று எட்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதுதான் வேதனையின் உச்சம். மக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வையல்லவா இது தோற்றுவிக்கிறது. நம்முடைய உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதியரசர்கள் மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள். அவர்கள் எடுக்கும் மிகச்சரியான முடிவுகளை ஏற்காமல், அவசரச் சட்டங்கள் மூலமாக குற்றவாளிகளை ஏன் தப்புவிக்க வேண்டும். மேலும் இந்த அவசரச் சட்டத்தின் மூலமாக ஏனைய அரசியல் குற்றவாளிகளும், தப்புவிப்பதற்கு ஏதுவாகிவிடுகிறது என்பதுதானே உண்மை நிலை. இப்படிப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு எப்படி ஊழலற்ற நாணயமான ஆட்சியை வழங்க முடியும் என்று மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையே இது ஏற்படுத்தியுள்ளது! எல்லாம் காலக்கொடுமை!
அவசரச் சட்டம் என்பது இரு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களுக்கிடையில் ஏதாவதொரு அவசர நிலைமையைச் சமாளிக்க வேண்டுமெனில் அதனை சட்டபூர்வமாக ஆக்க வேண்டுமெனும் கட்டாய சூழ்நிலையில் ‘அவசரச் சட்டம்’ பிரகடனப் படுத்துவார் குடியரசுத் தலைவர். அது அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் மசோதாவாகக் கொண்டுவரப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும். இப்போது ஆள்வோர் தங்களுக்கு எதெல்லாம் தேவையோ, எப்படியெல்லாம் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாமோ அப்படியெல்லாம் அவசரச் சட்டம் கொண்டுவந்து ‘இந்திய அரசியல் சாசனம்’ கொடுத்துள்ள சலுகைகளை துஷ்பிரயோகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். திருமதி இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையாகட்டும், அதற்கு முன்பும் பின்பும் காங்கிரசார் கொண்டு வந்த அவசரச் சட்டங்கள் இதுபோன்றவை தான். அதிலும் இப்போது குற்றப்பின்னணி கொண்ட தலைவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் லாலுவை, முலாயங் சிங்கை, மாயாவதியை, ராஜாவை, கனிமொழியை குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப வைக்க குறுக்கு வழி இது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதைச் சற்று நடுநிலைமையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்சி வெறி, காழ்ப்புணர்ச்சியோடு பார்த்தால் நியாயம் நம் கண்களுக்குத் தெரியாது. இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகசீலர்களின் நோக்கம், பின்னர் நாட்டை நேர்மையாகவும், கண்ணியத்தோடும் ஆளவிரும்பிய உண்மையான தலைவர்கள் இவர்கள் அல்லாமல், இந்திய சுதந்திரப் போர் எப்படி நடந்தது, எந்தமாதிரியான உணர்வு அப்போது இந்தியர்களுக்கு இருந்தது, சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்று அந்தத் தியாகசீலர்கள் விரும்பினார்கள், இந்த புனிதமான பாரத பூமியின் வரலாற்றுப் பின்னணி என்ன, உலகமே காட்டுமிராண்டிகளாகத் திரிந்த காலத்திலேயே பண்பாட்டின் உச்சியில் திகழ்ந்த பாரத தேசம் இது என்பதை உணராத எங்கிருந்தோ வந்த சந்தர்ப்ப வாதிகள் கையில் இந்த நாடு இன்று சிக்கிக்கொண்டு, பதவிக்காகவும், பவிஷுக்காகவும் அப்படிப்பட்டவர்களின் பின்னால் ‘தாதாஸ்து’ சொல்லிக்கொண்டு அலையும் இந்த மண்ணின் மைந்தர்களின் கையில் நாடு சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் அத்தனைக்கும் காரணம்.
இது போன்று எட்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதுதான் வேதனையின் உச்சம். மக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வையல்லவா இது தோற்றுவிக்கிறது.
~ தோற்றுவிக்கிறதா! ஜனநாயகத்தை அதை அபேஸ் செய்கிறது. அவை யாவும் சுயநலசட்டங்கள். மக்களின் சத் ரு. மக்கள் கொதித்தெழுவார்கள்.