பாலும் இரத்தம்தானே?
பவள சங்கரி
தலையங்கம்
சென்னையில் மட்டும் தினமும் 28 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் ஆவின்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனையாகின்றன. டோட்லா, ஹெரிட்டேஜ் , திருமலா, ஜெர்சி, போன்ற தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த முடிவு செய்து, ஆகஸ்ட் 15 , 2013 நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 2 விலை உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலையுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என்று தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையே தொடரும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆவின் பால் விற்பனையில் , அட்டை தாரர்களுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு, அதிகபட்ச விற்பனை விலையை விட, பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி , “டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர். ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று அறிவித்திருந்த சூழ்நிலையில்,
நேற்று, சேலத்தில் விவசாயிகள் பாலை தெருவில் கொட்டி மண் பானையை உடைத்திருக்கிறார்கள். பாலுக்கு அதிக விலையும், கூடுதல் மானியமும் கேட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலத்தில் நடத்தியிருகிறார்கள். போராடுவது அவர்கள் உரிமை. அதைப்பற்றி கூறவில்லை. ஆனால் போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. பல நூறு லிட்டர் பாலை தெருவில் கொட்டித்தான் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்பதில்லையே? பால் என்பது மாட்டின் இரத்தம் அல்லவா. தான் பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயை தெய்வமாகப் போற்றுகிறோம். ஆனால் ஊர் பெற்ற குழந்தைகளுக்குத் தன் பாலைக் கொடுத்து உயிர் வளர்க்கும் உன்னதமான ஒன்றை இப்படித் தெருவில் கொட்டலாமா? இதை அனாதை குழந்தைகளுக்கோ அல்லது ஆதரவற்ற நோயாளிகளுக்கோ இலவசமாகக் கொடுத்திருக்கலாமே.. ஜப்பான் மக்கள் போராடும் முறையை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. சம்பள உயர்வு கேட்டு போராடும்போது, தங்கள் எதிர்ப்பைக்காட்ட பல மணி நேரங்கள் அதிகமாக சம்பளம் வாங்காமல் உழைப்பார்கள். எத்தனை ஆக்கப்பூர்வமான சிந்தனை இது! வாயில்லா அந்த சீவன்களின் இரத்தத்தை எடுத்து இப்படித் தெருவில் வீச நமக்கு யார் உரிமை கொடுத்தது. அந்த சீவன்கள் பேச முடிந்தால் இந்நேரம் கதறி அழுதிருக்கும் அல்லவா.. அவைகள் எதிர்த்து நின்று போரிட ஆரம்பித்தால் நம் கதி என்னாகும்? இந்த போராட்டத்தின் விளைவுகள் எப்படியிருந்தாலும், இதுபோன்று தெருவில் பாலைக் கொட்டி போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேதனை!
///ஊர் பெற்ற குழந்தைகளுக்குத் தன் பாலைக் கொடுத்து உயிர் வளர்க்கும் உன்னதமான ஒன்றை இப்படித் தெருவில் கொட்டலாமா? இதை அனாதை குழந்தைகளுக்கோ அல்லது ஆதரவற்ற நோயாளிகளுக்கோ இலவசமாகக் கொடுத்திருக்கலாமே..///
மிக நல்ல கருத்து, இது போன்ற மதியற்ற நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். போராட மாற்றுவழியையும் காட்டிய பாங்கு பாராட்டத்தக்கது.
….. தேமொழி