ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !-2

0


சு.கோதண்டராமன்

 

இனி, கதையில் வெளிப்படையாகத் தெரியும் முக்கியக் கருத்துகளைக் கவனிப்போம்.

பெண்மையின் தெய்விகம்

       பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார்.  இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!  என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.

காதலின் உயர்வு

       சின்னக் குயிலியைக் கேட்காமல் அவளுடைய தந்தை அவளை நெட்டைக் குரங்கனுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கிறான். அவளுடைய இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மாமன் மகன் மாடன் தன்னை மணக்குமாறு வற்புறுத்துகிறான். மனம் அவனிடம் ஈடுபடாவிட்டாலும் அவள் கருணையினால் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். (நம் சமுதாயத்தில் பெண்ணின் இயல்பான நாட்டம் பற்றிக் கவலைப்படாமல் வேறு பல காரணங்களுக்காக அவளது மண வாழ்வைப் பலி ஆக்குவது இங்குக் காட்டப்படுகிறது.) சேர இளவரசனிடம் மட்டுமே அவளுக்கு உண்மையான காதல் ஏற்படுகிறது. அது அந்தப் பிறவியில் நிறைவேறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது நிறைவேறுவது குறித்து நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காதல் செய்வீர் உலகத்தீரே; அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்று அவர் காதலை உயர்த்துவது இங்கும் எதிரொலிக்கிறது.

கற்பின் மாட்சி

       கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.

”ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;

கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?

வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?

பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்

நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,

பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்

பெண் குலப் பீழை

       மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,

பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப்

பீழை இருக்குதடி தங்கமே தங்கம்

என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

நகைச் சுவை

       சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

       ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,

ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்

பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்

பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.

வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்

என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.

       அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.

பேடைக் குயிலிதனைப் பேசியது: – ”வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?

மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,

எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?

ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்

ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே

வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?

பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

ஒளியைப் போற்றல்

       இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில்  என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.

பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்

பாரில் எம்மை உரிமைகொண்டு  பற்றி நிற்கவே

…….

வேண்டுமடி எப்போதும் விடுதலை

என்ற  வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

       முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார்.  எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.

‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.

‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
**
அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத்திடுவோம், ”பல்லாண்டு வாழ்க!” என்றே.

‘பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்,
எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

       இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது.

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,

       நடுவில் ஓரிடத்தில்

சோலையிடை, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.

       கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,

…….

மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.

தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி

விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ?

மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.