அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை
சாகர் பொன்னியின்செல்வன்
11. எகிப்திய கடவுள்கள்.
லக்ஸரில் ஆரம்பிக்கும் எங்கள் பண்டை எகிப்திய கோயில் விஜயங்களை பற்றி சொல்லுவதற்கு முன்னர் எகிப்திய கடவுள்களை அறிமுகம் செய்வது என்பது அவசியமாகும். நைல் நதி தீரத்தில் பிறந்து தழைத்த பண்டை எகிப்திய கலாச்சாரமானது இந்திய இந்து மதம், கிரேக்க கலாச்சாரம் போலவே பல கடவுள்களை கொண்டது. மேலும் அரசர்கள் எல்லாம் கடவுளின் அம்சமாகவும் போற்றப்பட்ட ஒரு கலாச்சாரம்.
எகிப்திய கடவுள்கள் ஒன்றுக்கு ஒன்று உறவு கொண்டவர்கள். பல கடவுள்களுக்கு பல்வேறு மிருகங்களின் தலை அமைந்திருப்பது விசேஷம். கடவுள்கள் சில நேரம் ஆள் வடிவதிலும் சிலநேரம் மிருகவடிவமாகவும் சிற்பங்களில் செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் வானத்திற்கும் தனி கடவுள்கள் இருந்தன, நுட்(Nut) எனப்படுவது பெண் கடவுள், இந்த கடவுள் வளைந்து குனியும் பெண்ணாக வடிவமைக்கப்படும். அந்த பெண்ணின் உடலில் நட்சத்திரங்களை இரவை குறிக்க அமைத்தனர்.
பூமியை குறிக்கும் கடவுளானது கெப் (Geb) எனப்படும், இந்த ஜெப் நுட்டின் கணவன் இந்த கடவுள் தரையில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுவது வழக்கம். இவர்களை பிரித்து நிற்கும் மனிதனாக தோற்றம் அளிப்பது காற்று கடவுளான ஷு(Shu). மேலே எழுபவன் என்ற அர்த்தம் கொண்ட காற்று வானத்தையும் பூமியையும் பிரிகின்றது. ஷு ஜெப் மற்றும் நுட்டின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது(படம் 1).
நுட் ஜெப் தம்பதியின் பிள்ளைகள் ஒசிரிஸ் (Osiris),ஐசிஸ் (Isis), சேத் (Seth) மற்றும் நேப்திஸ் (Nephthys) என்கிற கடவுள்கள். பண்டை எகிப்திய கலாச்சாரத்தில் சகோதரியை மனம் செய்து கொள்வது வழக்கம் எனவே ஒரிரிஸ் ஐசிசையும், சேத் நேப்திசையும் திருமணம் செய்து கொண்டதாக வழக்கு.
ஒசிரிஸ் மம்மிமையை போல வடிவம் கொண்ட கடவுள். பதவி ஆசையில் செத் தான் சகோதரன் ஒசிரிசை கொன்றதாக சொல்கின்றனர்.ஒசிரிஸ் இறந்தவர்களை காக்கும் பாதாள கடவுள்.
ஐசிஸ் எனபடும் அன்னை கடவுள், தலையில் கொம்புகளோடு காணப்படும், இவர் தான் எகிப்தியர் மிகவும் போற்றும் ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் தாய். பரோக்கள் அனைவரும் ஐசிசின் குழந்தைகள் என்று சொல்லிகொண்டனர்.(படம் 2)
செத் எனும் கடவுகள் ஒநாய் போன்ற மிருகத்தின் தலை கொண்டதாக சிலைகளில் காணலாம், இந்த கடவுள் அமைதியின்மையின் கடவுள், எல்லா பெருந்துயர்களையும் இவர் தான் கொடுப்பதாக நம்பினார்கள்.
ஹோரஸ் பருந்தின் தலை கொண்ட மனிதனாகவும் வெறும் பருந்தாகவும் வடிவமைக்க பட்ட கடவுள். இவர் தான் தந்தையை கொன்ற செத்தை வெற்றி கொண்டு எகிப்தின் முழுமுதல் அதிபர் ஆனார் என்றும், அந்த யுத்தத்தில் ஹோரஸின் ஒரு கண் பறிக்கப்பட்டது , அதனை மீண்டும் பெற்று வெற்றி கொண்டார் ஹோர்ஸ், எனவே ஹோரசின் கண் தனியாக வழிபடப்படுவதும் உண்டு.
இன்னொரு முக்கிய கடவுள் ரா (Ra) பருந்தின் தலையும் அதன்மேலே சூரியனின் சக்கரம் கொண்ட மனிதனாக தோன்றும் ரா சூரிய கடவுள், தினமும் நுட் இவரை விழுங்கி காலையில் துப்புவதாக மக்கள் நம்பினார். ரா அமுன் (Amun) எனப்படும் இன்னொரு முக்கிய கடவுளோடோடு சேர்ந்து தோன்றுவதை அமுன்ரா (AmunRa) என்று அழைத்தனர்.
ஹதோர் (Hathor) எனப்படும் பெண் தெய்வம், ஹோரசின் மனைவி, இவர் நன்மைகளை தரும் காக்கும் தெய்வம் இவர் தலையில் மாட்டின் கொம்புகளோடு சூரிய சக்கரமும் கொண்ட பெண்ணாக காட்சி தருவார்.
ஆடின தலை கொண்ட தெய்வம் க்ணும் (Khnum), இவர் தான் படைக்கும் கடவுள்,மனிதர்களை இவர் நைல் நதி மன்னைக்கொண்டு செய்தார் என்று கூறினார்கள்.
முதலையின் தலையை கொண்ட கடவுள் சொபேக்(Sobek) இவர், நைல் நதியையும் அதன் வளங்களையும் அளிக்கும் கடவுள்.
தோத் (Toth) எனப்படும் கடவுள் எழுத்தையும் , அறிவையும் தரும் கடவுள், இந்த தெய்வம் ஒரு கொக்கின் தலை கொண்டு வடிவமைக்கப்பட்ட மனிதன்.
அனுபிஸ்(Anubis) எனப்படும் கடவுள் குள்ள நரியின் தலையுடன் தோன்றும் கடவுள், இவர் எகிப்திய வழக்கமான மம்மிபடுத்தும் கடவுள், இவர் இறந்தவர்களின் கடவுள் என்றும் சொல்லலாம்.
இப்போதைக்கு கடைசியாக செக்மெட் (Sekhmet) எனப்படும் சிங்கமுக பெண்ணோடு முடித்துக்கொள்வோம் இவர் போர்தெய்வம்.
எல்லா கடவுள்களும் சில நேரத்தில் கையில் ஒரு திறவுகோல் போன்ற ஒரு வைத்திருக்கும், இது அடுத்த வாழ்கையை அடைவதற்கு உள்ள பாதையில் உள்ள கதவினை திறக்கும் சாவி.
எகிப்தியர்கள் இறந்த பின் அடுத்த வாழக்கை தொடர்வதாகவும் அதனால் தான் உடலை பதப்படுத்தி மம்மிகள் உருவாகினார்கள். மேலும் அந்த பயனத்திற்கு துணை புரியவே கூடவே, உணவு, மது, மிருகங்கள் மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தனர். இந்த சாவியானது அப்படி பட்ட புனர் ஜென்மம் அடைய உதவும் திறவுகோல்.
இப்படியாக எல்லா கடவுள்களை பற்றி கூறியவாறு எங்களை வேனில் கர்நாக் (Karnak) கோவிலை நோக்கி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி. இந்த கோவிலானது உலகத்திலேயே இரண்டாவது பெரிய கோவில் என்றார். பல தூரம் பரந்திருக்கும் இதனை விட பெரிய கோவில் வலகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் (Ankorwat) கோவில் மட்டுமே என்றும் உரைத்தார்.
அப்பேற்பட்ட மகத்தான கோவிலை காணும் ஆவல் தாங்காமல் மேல்ல எங்கள் வண்டியை விட்டு கீழிறங்கினோம். கண் முன்னே தெரிந்ததோ செங்கல சூலை போன்றதொரு கட்டடம். இது என்னடா இதனை பார்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று தோன்றியது (படம் 3).
(தொடரும்)