Blog

  • நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நரம்பிலா நாக்கு நம்பெரு சொத்து
    விரும்பிய சுவையைச் சுவைத்திட உதவும்
    அருந்திடும் உணவை அதுவேற்க மறுத்தால்
    விரும்பிடும் உணவைத் தேர்ந்திட  நேரிடும்

    உணர்வு இருந்தால் சுவைகள் தெரியும்
    உணர்வு இழந்தால் சுவைகள் மறையும்
    உணர்வு இழந்திடும் நாக்கைப் பெற்றால்
    உறைப்பும் தெரியா இனிப்பும் தெரியா

    உறைப்பும் இனிப்பும் சேர்ந்ததே வாழ்க்கை
    கசப்பும் துவர்ப்பும் கலந்தே இருக்கும்
    உப்பும் வேண்டும் சுவையாய் இருக்க
    அளவோ டிருந்தால் அதுதான் வாழ்க்கை

    உள்ளே போகும் உணவை ருசிக்க
    உமிழ்நீர் சுரப்பது முக்கிய மாகும்
    உணர்ச்சி இருந்தால் உமிழ்நீர் சுரக்கும்
    உணர்ச்சி இழந்தால் உமிழ்நீர் சுரக்கா

    அனைத்துக்கு மடிப்படை நாவே ஆகும்
    நாவை நன்றாய் வைத்திடல் அவசியம்
    சுவைக்கும் வேண்டும் அவைக்கும் வேண்டும்
    நாவைக் காத்தால் நன்மையே விளையும்

    நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே
    காவா விட்டால் கலியிடம் சிக்குவோம்
    ஏனைய காப்பது முக்கியம் அல்ல
    நாவைக் காப்பதே வாழ்வுக்கும் முக்கியம்

    காயும் இருக்கு கனியும் இருக்கும்
    கனியினை யாவரும் விரும்பியே ஏற்பர்
    கனியாய் இருக்கும் சொற்களைத் தேர்ந்து
    உரைப்பதே நாவின் உன்னதம் ஆகும்

    கனிவுடைச் சொற்களை வழங்கிட வேண்டும்
    கசப்புடைச் சொற்களை ஒதுக்கிட வேண்டும்
    தீயினாற் சுட்டால் ஆறியே போய்விடும்
    நாவினால் சுட்டால் வாழ்வெலாம் இருந்திடும்

    பொய்யை உரைப்பதும் நாவே யாகும்
    பொங்கிடும் வகையில் உரைப்பதும் நாவே
    ஐயம் இடுவெனச் சொல்லும் நாவால்
    அநியாயம் செய்யெனச் சொல்வது தகுமா

    நமச் சிவாய சொல்வதும் நாவே
    நாராயணா எனச் சொல்வதும் நாவே
    யேசுவே நபியே என்றுமே சொல்லிடும்
    நாவே நஞ்சினை கக்கிடல் முறையா

    நாவைக் காப்போம் நல்லவை உரைப்போம்
    நாவைக் காத்து நல்வழிப் படுத்துவோம்
    நாவே நமக்கு வாய்த்த நல்வரமென
    நாளுமே எண்ணி நாவைக் காப்போம் !

    Share
  • சுமைதாங்கி

    சுமைதாங்கி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சுமை தாங்கியாக இருப்பார்கள் சிலபேர்
    சுகம் பாரதுழைத்து கொடுப்பார்கள் அவரும்
    எதிர் பாராதிருந்து எல்லாமே செய்வார்
    சுகம் பெற்றாரெல்லாம் திரும்பியே பாரார்

    உண்ணாம லிருப்பார் உறங்காம லிருப்பார்
    கண்ணயராது இருப்பார் கையணைத்து மிருப்பார்
    மண்மீது மற்றவர் படுந்துன்பம் தாளார்
    எண்ணியே எண்ணியே எல்லாமும் செய்வார்

    இல்லறத்தி லிருப்பார் நல்லறமே நினைப்பார்
    சொல்லாலும் செயலாலும் துயரகற்றி நிற்பார்
    இல்லறத்தி லிணையாமல் இருந்தாலும் இருப்பார்
    இடர்கண்ட போதவர்கள் இரங்கியே நிற்பார்

    சமயமும் பாரார் சாதிகளும் பாரார்
    சமுத்துவமா யனைவரையும் தாமமரும் நினைப்பார்
    நினைவதனில் உதவுவதை நிலையாக வைப்பார்
    நீள்நிலத்தி லவரென்றும் சுமைதாங்க வருவார்

    குடும்பத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
    குவலயத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
    உயிர்கெல்லாம் சுமைதாங்கி ஆகிறார் ஒருவர்
    உருவமாய் அருவமாய் ஒளிர்கிறார் உயர்வாய்

    நம்பிக்கை நமக்கென்றும் சுமைதாங்கி ஆகும்
    நம்பிக்கை ஊட்டுவார் சுமைதாங்கி ஆகிறார்
    பெற்றவரும் ஊட்டுகிறார் மற்றவரும் ஊட்டுகிறார்
    பேருலகில் இறையுணர்வே பெருமைமிகு நம்பிக்கை

    Share
  • பாதணி (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “மிஸ் எதுக்கு இப்படி அவசரமா ஓடிவர்றீங்க நாங்க நிக்கறோம். இப்பதா டீ குடிச்சோம் மெதுவா வாங்க.” என்றான் கிளீனர் மணி.

    “நீங்கதான மிஸ் மொத ஆளா ஏர்றீங்க லேட்டானா யாருக்குத் தெரியப்போகுது` என்றார் டிரைவர் ஆறுமுகம்.

    அகிலா ‘வணக்கம்’ சொல்லி விட்டு வேகமாக ஏறி உட்கார்ந்தாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 7.25. இளம் சந்தன நிறத்தில் பள்ளி வேன் தனக்காகக் காத்திருப்பது தூரத்திலிருந்து பார்க்கும்போதே தெரியும். அன்றைக்கெல்லாம் இப்போது இருக்கற மாதிரி பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குப்பிறகு வெள்ளை, மஞ்சள், இளநீலம் என மூன்று நிறங்கள் பள்ளி கல்லூரிப் பேருந்த்திற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகுதான் தற்போதுள்ள மஞ்சள் நிறம் அமலுக்கு வந்தது. அகிலாவுக்குத் திருமணமாகி இது மூன்றாவது வருடம். ஒரு பெண் குழந்தை. ஆனால் பார்த்தால் வயது தெரியாது. துடியலூர் வழியிலுள்ள சரோஜா பப்ளிக் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணி புரிகிறாள். புதூருக்கு அடுத்த பெருமாள் கோயிலில் வீடு. பள்ளிப்பேருந்து சரியாக 7.15க்கு பெருமாள் கோயிலுக்கு வந்துவிடும். அகிலா தான் முதலில் ஏறுவாள். சாலையைக்கடந்து வந்து ஏறவேண்டும். எதிரே உள்ளத்தெருவில் கொஞ்சதூரம் உள்ளே நடந்துசெல்ல வேண்டும். அகிலாவிற்குத் தானொரு பள்ளியாசிரியர் என்ற கர்வம் பார்த்தெல்லாம் யாரிடமும் பழகத்தெரியாது. அவள் ஏறி இரண்டு ஸ்டாப்பிற்கு யாரும் ஏறுவதில்லை. மற்ற மாணவர்கள் ஏறும்வரை மணியிடமும், ஆறுமுகத்திடமும் சகஜமாக பேசிக்கொண்டு வருவாள். ஒருமுறை வீட்டில் முறுக்கு செய்தார்கள் என்று இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.
    “இப்படியெல்லாம் யாரும் எங்ககிட்ட பேச மாட்டாங்க மிஸ். எங்கள டிரைவர், கிளினர் அப்படினுதா பழகுவாங்க. சில டீச்சருக பேருந்து ஏறும்போது நான் அவங்க பையெல்லா வாங்கிப் புடிக்கணும். அதிகாரத்தோடயே நடந்துக்குவாங்க. நீங்க வித்தியாசமா இருக்கீங்க மிஸ் ” மணி சொல்லுவான்.

    பள்ளி இருக்கிற எடத்தில சரியான அளவு போக்குவரத்து வசதியில்லை. அதனால ஒன்னு அவரவர் வாகனத்திலதா வரணும். இல்ல, பள்ளி வாகனம் இதுதான் வழி. ஆசிரியர்களுக்குப் பேருந்தில் இலவசம். நல்ல வசதியான பள்ளிதான். கோவையில் உள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் அனைவரும் அங்குதான் படிக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே குதிரைப் பந்தயத்திற்கு செல்வதற்கானப்பயிற்சி, நீச்சல்,ஸ்கேட்டிங் போன்றவைகளையும் கற்றுக்கொடுத்த ஒரே பள்ளி.

    அடுத்த இரண்டு நிறுத்தம் தள்ளி இரண்டு மாணவர்கள் ஏறுவார்கள் அடுத்த நிறுத்தத்தில் இரண்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும். அதில் ஒரு மாணவியின் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர்தான்.

    பேருந்து அமைதியாக இருந்தது. ஆறுமுகமும், மணியும் எதுவும் பேசவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். தமிழில் பேசினால் அசெம்பிளியில் ஃபைன் கட்ட வேண்டுமே.

    மாலை திரும்ப வரும் போதும் அகிலாதான் கடைசியில் இறங்குவாள். அனைவரும் இறங்கிவிட்டபிறகு. அகிலா மட்டும்தான் பேருந்தில் இருந்தாள். மணி கதவைச் சாத்திவிட்டு அப்போதுதான் சீட்டில் வந்து உட்கார்ந்தான்.

    “மிஸ் நீங்க ஒருத்தங்கதா மிஸ் எங்களயெல்லாம் மதிச்சு பேசறீங்க. மத்தவங்கெல்லா எங்கள கேவலமா தா நெனக்கறாங்க. எங்களுக்கும் இன்னக்கி மீட்டிங்கில பசங்ககிட்டயோ, டீச்சர்ஸ்கிட்டயோ நாங்க பேசக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. இந்தாங்க மிஸ் எங்க தோட்டத்தில காய்ச்சது. சாப்பிடுங்க.” என்று அவன் பைக்குள்ளிருந்து ஒருசீப்புப் பழத்தை எடுத்து நீட்டினான். அகிலா அதில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

    “அப்படியா! தோட்டமெல்லா இருக்கா அப்புற ஏ இந்த வேலக்கி வர்றீங்க.”

    “சாகுபடிய நம்பீட்டிருந்தா குடும்பத்த ஓட்ட முடியாது. தோட்டத்தில தென்னமரந்தா வெச்சிருக்கோம். தண்ணி இல்லாமயே கெடக்கு. அம்மா, அண்ணா, அண்ணினு எல்லாருமே அந்த வேலக்குப் பழகினவங்க. அவங்களுக்கே அங்க வேலயக்காணொ நாமளாவது வெளில வந்து நாலு காசு சம்பாரிச்சு கொடுத்தா ஏதோ ஒத்தாசயா இருக்குமேனுதா வர்றோம்.”

    “மிஸ். வேலக்கி சேத்தும்போது பேருந்த மட்டும் கவனிச்சாப் போதும்னு சொன்னாங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமா, தோட்டவேலை, சாப்பாடு பரிமாற்ர வேல. தட்ட எடுக்கறதுனு ஒண்ணு ஒண்ணா சொல்றாங்க மிஸ்.”

    பேச்சு திசைமாறியது. அப்பாடா நாம எறங்கற எடம் வந்திடுச்சு.

    “சரி வர்றேண்ணா, வர்றேன் மணி”. என்று இறங்கி விட்டாள்.

    “நாளைக்கிப் பாக்கலா மிஸ்” என்றான் மணி.

    அகிலாவுக்கும் கோவை புதிதுதான். உடுமலைப்பேட்டைக்கருகில் ஒரு சிறு கிராமம் தான் அவளுடையது. மரங்கள் நிறைந்த வயல்வெளிகள், கிணறு, வீதியெங்கும் மரம் செடிகொடிகள், ஒவ்வொரு வீட்டிற்கும் பெரிய பெரிய வாசல் என செழிப்பான இயற்கை சூழலில் வளர்ந்த அவளுக்கு இங்கு எல்லாத்தெருவும் ஒரே மாதிரியாகத் தெரிந்தது. எதுவழியாகச் சென்றால் எப்படி வெளியில் வருவது என்று தெரியாத அளவிற்கு எங்கும் நெருக்கமாக இருக்கும் கட்டிடங்கள். பெரிய கோலம் போட இடமில்லாத அளவிற்கு சின்ன வாசல். மரங்களற்ற வறட்சியான தெருக்கள், குழாயடியில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குடங்கள். எட்டு அடிக்கு ஒரு ஹோட்டல், அல்லது ஒரு பேக்கரி. வலம் வந்து வழிபடக்கூட இடமில்லாத கோயில்கள் என அனைத்துமே அவளுக்குப் புதிதாகத்தான் இருந்தது. நகரத்தில் சாமிக்குக்கூட இவ்வளவு இடம் இருந்தால் போதுமோ என மனதில் எண்ணிக் கொண்டாள்.

    அவள் பேருந்திலிருந்து இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரும் பெருமாள் கோயில் பஸ்ஸ்டாப் தான். அவ்வளவு பெரிய ஊருக்குப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் பெருமாள்கோயில். ஆனால் கோயிலோ பெட்டிக்கடை அளவிலிருந்தது. கோயிலுக்கு அமைதியைத் தேடிப் போவார்கள். ஆனால் இந்தப்பெருமாளோ பாவம் வண்டிகளின் பேரொலியைக்கேட்டு சாலைநடுவில் இருக்கிறார். எப்படியும் பெருமாள் உறங்க இரவு 12 மணி ஆகிவிடும். அப்போதுதான் சாலையில் வாகனங்கள் குறைந்து அமைதியாகும். இரவு ஏழு மணிக்கெல்லாம் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வராத அமைதியாக இருந்து பழகிய அவளுக்கு, இரவு பதினொரு மணியாகியும் சாலைகளில் வாகனங்களின் ஓயாத இரைச்சல், மனிதர்களின் நடமாட்டம், சாலையோரக்கடைகள், வண்டிக்கடைகளில் உணவிற்காக நிற்கும் கூட்டம் என அனைத்துமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. கிராமத்தில் எட்டு மணிக்குமேல் வெளியே வரவே பயமா இருக்கும். ஒன்பது மணிக்கு வர்ற கடைசி பேருந்தில நாலுபேரு இருந்தாலே பெரிசு.

    திருமணமான புதிதில் இரவு ஒன்பது மணிக்குத்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு ரூபாய் காயின் போட்டு அம்மாகிட்ட பேச மெயின் ரோட்டுக்கு வருவார்கள். வீட்டுத்தெருவிலிருந்து மெயின் சாலை வர பத்துநிமிடம் நடக்கவேண்டும். பதினைந்து வருடங்களுக்குமுன்பு லேன்ட்லைன் ஃபோன் மட்டும்தானே வீடுகளில் இருக்கும். திருமணமாகி வந்த பெண்ணிற்கு பிறந்தவீட்டை தொடர்புகொள்ள தற்போது உள்ளதுமாதிரி அலைபேசி, வீடியோ இதெல்லாம் கிடையாதே. பேருந்திலிருந்து இறங்கி நடந்துகொண்டிருந்த அகிலா தானாகவே சிரித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள். இந்த பெருமாள் கோயில் நிறுத்தத்தை நினைக்கும்போது அவளுக்கு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

    ‘ஏப்ரல் பத்தாம் தேதி எனக்கும் வினோதுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னால உடுமலைப்பேட்டையில வீட்டுக்குப் பக்கத்தில உள்ள ஒரு பள்ளியில வேலைக்குப் போயிட்டிருந்தே. எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பாடம் நடத்தனும். மார்ச்சில கல்வியாண்டு முடிந்து ஏப்ரல் மாசத்திலதான் திருமணமானது. திருமணமாகி அஞ்சாவது நாள் பத்தாம்வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்த நியமனக்கடிதம் வந்துச்சு. சரி அவரும் வேலைக்கு போயிட்டார்னா வீட்டில சும்மாதானே இருக்கோம். அத்தையு நானும் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கறது. சும்மா இருக்கறதுக்கு பேப்பர் திருத்தறதுக்காவது போலாமேனு போனேன். திருத்தற இடம் சிங்காநல்லூரில இருக்கு. வினோத் காலைல ஆபீசுக்குப் போகும்போது சிங்காநல்லூர் அரசு பள்ளில விட்டுவிட்டு அப்படியே வேலைக்குப்போனார். முதல் அனுபவம், முதல்நாள் விடைத்தாள் திருத்தற வேல இரவு எட்டு மணிவர நடந்தது. வினோத் சொன்ன அதேவழியில வந்து 1- சி பேருந்தில ஏறனே. வடவள்ளினு போட்டிருந்துச்சு. இந்த ஊர்ப்பெயர பார்த்தாலே சிரிப்பாக இருந்தது. அதென்ன வட. போண்டா பஜ்ஜியெல்லா இல்லயானு தோன்றியது. பேருந்தில கொஞ்சநேரம் கழிந்துதான் டிக்கெட் கொடுக்க வந்தார். பெருமாள்கோயில் ஒன்னு குடுங்க என்று பணத்தை நீட்டினேன்.

    “எந்த பெருமாள் கோயில் மா”

    அப்போதுதா கொஞ்சம் வயிறு கலங்கியது.

    “அண்ணா! எத்தன பெருமாள் கோயில் இருக்குனு தெரியாதுனா பெருமாள் கோயில்னு டிக்கட் வாங்க சொன்னாரு. நான் ஊருக்குப் புதுசு ண்ணா”

    “ஏம்மா எந்தக்கோயில்னு தெரியாம எப்படி எறங்குவே?”

    அழவேண்டும் போலத்தோன்றியது

    போன் கிடையாது. யாரையும் தெரியாது. எங்க எறங்கறதுனு தெரியாது.மூஞ்சி தொங்கிப்போனது

    “இல்லண்ணா அவரு வந்து நிக்கறேனு சொல்லி யிருக்கார். முன்னாடி நிப்பாருண்ணா

    “ சரி இதோ இவங்க அடுத்த ஸ்டாப்பில எறங்கிருவாங்க. இங்க முன்னாடி டிரைவர்கிட்ட வந்து உட்காரும்மா. எடம் வந்தா சொல்லுமா நிப்பாட்டறே.”

    “ம்ம்ம்……..”

    தேவையா? இது தேவையா கல்யாணம் முடிஞ்சு அஞ்சு நாள்தாஆச்சு. ஊரும் பழகல, தெருவும் பழகல. அதுக்குள்ள இது தேவயானு எனக்கு நானே திட்டிக்கொண்டே. ஒருவழியா ஒவ்வொரு நிறுத்தத்திலும் வெளியே எட்டி எட்டிப் பார்த்து வினோதைத்தேடினே. ஒரு வழியா பெருமாள் கோயில் ஸ்டாப்பில வினோத் கை காட்ட இறங்கிட்டே’ என நடந்த நிகழ்வை நினைத்துக்கொண்டு மனதிற்குள் சிரித்தவளாய் நடந்தாள். அவள் வீட்டிற்கு 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். வடிவக்கா வழியில பார்த்து “என்ன வேல முடிச்சு வர்றியா?”

    “ஆமாக்கா நீங்க எங்க கா கோயிலுக்கா?”

    “ஆமாப்பா இன்னக்கி சங்கடஹர சதுர்த்தி அதுதா விநாயகருக்கு மால கொடுத்திட்டுக் கும்பிட்டு வர்றலானு போயிட்டிருக்கே. இன்னக்கி கொஞ்சம் சீக்கிரமா வந்திட்டியோ”

    “இல்லக்க எப்பவும் வர்ற நேரந்தா சரி வர்றே கா” என்றபடி நடந்தாள். சரி என்று தலையசைத்துவிட்டு அவளும் நடந்தாள். அந்தத் தெருவைச்சுற்றி வினோதோட சொந்தக்காரங்க நெறயபேரு இருக்காங்க. கொஞ்சநேரம் சாப்பிட்டு வெளியில காத்தாட நடக்கலாமுனு பாத்தா எந்தத் தெருவுக்குப்போனாலும் ஏதாவது ஒரு சொந்தக்காரங்க பேச புடிச்சுடுவாங்க. பேசி பேசியே நேரமாகிடும். அப்பறம் நடக்கவே முடியாது. வீட்டுக்குத் திரும்ப வந்துவிட வேண்டியதுதா. அதுவும் ஒருவகையில நல்லாதா இருக்கு நம்மள சுத்தியும் நம்ம சொந்த பந்தங்கல்லா இருக்கறது. ஆனா இந்த தலமுற புள்ளகளுக்கு இதெல்லா எங்க புடிக்குது. அவங்களுக்கு தனியா இருக்கறதுதா புடிச்சிருக்கு. சொந்தபந்தங்க கூட சேர்ந்திருக்கறதையே தொல்லையா நெனக்கறாங்க. அதைவிட காமெடியான மற்றொரு விசயமும் நினைவுக்கு வந்தது. திருமணம் முடிந்து ஐந்தாவது நாள் தொடங்கி மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் திருத்தும் பணி முடிஞ்சது. ஏற்கனவே நேர்முகத்தேர்வு முடிந்து ஒரு பள்ளியில் தேர்வாகியிருந்தே. அடுத்த பத்துநாட்களுக்குள் அந்தப்பள்ளியில் வேலைக்கு வரச் சொல்லியிருந்தாங்க. கோடைக்கால விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மட்டுந்தா வேலைக்கு வந்திருந்தாங்க. வீட்டில கல்யாணத்துக்காக போட்ட பந்தல் கூட இன்னும் கழட்டவில்லை. எனக்கு அந்த பந்தல் தான் வீட்டிற்கு அடையாளம். எனக்குப் பொதுவாகவே இடங்கள், மனிதர்களோட முகம், இவங்கள எங்க சந்திச்சோங்கறதெல்லாம் நெனவில வெச்சிருப்பதில கொஞ்சம் ஞாபகசக்தி குறைபாடுதான். அன்றும் காலை எப்போதும் போலப் பள்ளிக்குக் கெளம்பிட்டே. வரும்போது எப்போதும் போலப் பேருந்து இறங்கி 10 நிமிடம் நடந்தாயிற்று. வீடு வரவேயில்லை. அவளுக்குச் சந்தேகமானது. தெரு மாறி வந்து விட்டோமோ. வீட்டைக்காணோம். அப்போதுதா பின்னால அத்தையோட குரல் கேட்டது.

    “ம்மா அகிலா எங்க போறே? வீடு இங்கே இருக்கு.” அகிலா வீட்டைக்கடந்து செல்வதைப்பார்த்து பக்கத்து வீட்டுக்காரம்மா அத்தைகிட்ட சொல்ல. சமையல்கட்டிலிருந்து அத்தை வெளியில ஓடி வந்து கூப்பிட்டுருக்காங்க.

    “அத்தெப் போகும்போது பந்தல் இங்கெ இருந்துச்சே. அதுக்குள்ள யாரு கழட்டனது? நான் பந்தலத்தா அடையாளமா வெச்சிருந்தே”. அத்தைக்கு சிரிக்கறதா வருத்தப்படறதானு தெரியல. சிரிச்சாங்க.

    “என்னம்மா நீ இப்படி இருக்கே.வா உள்ள வா. இதுதா வீடு.”

    பக்கத்து வீட்டுக்காரம்மா வேற பாத்துகிட்டு இருக்காங்க. அவமானமாப் போச்சு.

    இப்படி இந்த ஊருக்கு வந்து அடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளையும், வேடிக்கையான அவமானங்களையும் எண்ணிச் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

    அடுத்த நாள் பள்ளிவிட்டு வரும்போது எப்போதும் மூன்றாவது சீட்டில் உட்கார்ற அகிலா அன்று படிக்கட்டு ஏறினதும் வலப்புற சீட்டில் உட்கார்ந்தாள். ஒவ்வொரு மாணவர்கள் இறங்கும்போதும் மணியும் படிக்கெட்டிலிருந்து இறங்கி ஏற வேண்டும். சிறு பிள்ளைகள் என்றால் தூக்கி இறக்கி விடவேண்டும். பெரிய பிள்ளைகள் என்றால் அவர்களின் புத்தகப்பையை இறக்கி வைக்க வேண்டும். புத்தகப்பைதான் கிலோ கணக்கில பாரமா இருக்கிறதே. ஆனால் பணக்காரப்பள்ளில படிக்கறதனால என்ன ஒரு நல்ல காரியம்னா. வண்டிலிருந்து எறங்கனதும் வேலக்காரங்க காரவெச்சிட்டு நிப்பாங்க. இதே மிடில்கிளாசு புள்ளகனா கழுத சொமக்கறமாதிரி அத சொமந்துட்டுதா போகுதுக. அதுக சாப்படற சாப்பாடு இந்த மூட்டயத் தூக்கறதுக்கே போதாது.

    ஒரு ஸ்டாப்பில மட்டும் நாலு பிரைமரி மாணவர்களும் மூன்று பெரிய மாணவர்களும் இறங்க வேண்டும். மணி ஒவ்வொருவரையாக இறக்கி விட்டுக்கெண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு வினிதா இறங்கும்போதுதான் அகிலா மணியைக் கவனித்தாள். தயங்காமல் கேட்டுவிடவேண்டும் என்றெண்ணினாள். அனைவரும் இறங்கும்வரை காத்திருந்தாள். இவள்தானே கடைசியில் இறங்குவாள். பேருந்தில் யாரும் இல்லாதபோது கேட்டுவிட்டாள்.

    மணி வெறும் சிரிப்பை மட்டும் விடையாகக்காட்டி நிறுத்திவிட்டான்.

    “அதைத்தா மிஸ் நானும் இவங்கிட்ட பல தடவ சொல்லீட்டே. சொன்னா காதிலயே வாங்கிக்க மாட்டீங்கறா என்றார் ஓட்டுனர் ஆறுமுகம்.

    நாளக்கு இப்படி இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு இறங்கி விட்டாள்.

    அடுத்த நாள் மணியைப பார்த்ததும் கேட்டாள்.

    “இனியும் நீ மாறலியா மணி. இவ்வளவு தடவ ஏறிஎறங்கற கால்ல ஏதாவது ஆணியோ கண்ணாடியோ குத்திச்சுன்னா அதுக்கப்பறம் டாக்டர்கிட்ட போய் செலவு செய்யறதுக்கு இப்பவே ஒரு செருப்ப வாங்கிப்போட வேண்டியதுதானே. ஏ செருப்பு போட மாட்டேங்கறே”

    “ இப்படியே பழகிடுச்சு மிஸ். இந்தமாச சம்பளம் வந்தரட்டு மிஸ் கண்டிப்பா வாங்கிடறேன்.”

    அடுத்தநாள் அகிலா 50 ரூபாய் எடுத்து தனது பேகில் வைத்தாள் 2004-ல் 50 ருபாய்க்கு மதிப்புதான். சம்பளமே 3000/- ரூபாய்தான். செருப்பு வாங்க மணிக்கு பணம் கொடுக்கலாமா? ஏதாவது தப்பாப்போயிடுமோ. அவங்களே தோட்டமெல்லாம் வெச்சிருக்காங்க. காசு கொடுத்தா ‘ஏங்க மிஸ் நாங்கென்ன அவ்வளவு கேவலமானவங்களான்னு’ சொல்லிடுவானோ? ஒருவேள பிராண்டடு செருப்புதா போடுவானோ? அம்பது ரூபாய்க்கு என்ன செருப்பு வாங்கறதுன்னு யோசிப்பானோ?. வினோத்கிட்டயாவது ஐடியா கேட்கலாம்னு பாத்தா.

    “ இப்போதா நீயே பள்ளில போய் சேந்திருக்கே அதுக்குள்ள ஒனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. காசு போகுமேனு சொல்லல. கொடுத்து கேவலப்படாதேனு சொல்றேனு.’ ஒரே பதிலா சொல்லிடுவாரு. எடுத்த பணத்த பேகிலேயே வைத்துவிட்டாள்.

    அன்று பள்ளி அரையாண்டுத்தேர்வின் கடைசி நாள். அடுத்த நாளிலிருந்து கிறிஸ்துமஸிற்காக பத்து நாள் பள்ளி விடுமுறை.

    விடுமுறை முடிந்து முதல் நாளே அகிலா பேருந்த தவறவிட்டு ஆட்டோவில் போனாள். எப்போதுமே அப்படித்தானே வேலக்குபோறவங்களுக்கு சனி ஞாயிறு முடிஞ்சு திங்கட்கிழம வந்தாலே ஒரு சின்ன சோம்பேறித்தனமாயிடும் கிளம்ப, இதில பத்துநாள் லீவுமுடிஞ்சு போறது. அந்த சோம்பேறித்தனம்தா பேருந்து வர்ற நேரத்துக்கு அவளால கிளம்ப முடியவில்லை. பள்ளி முடிந்து திரும்ப வரும்போது பார்த்தா டிரைவரும் கிளினரும் வேறு யாரோ. ஒரு வேள பேருந்து மாத்தி விட்டிருப்பாங்களோ?. அவள் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களும் வேற டிரைவரும் கிளினரும்தான் வந்தாங்க. அவங்களுக்கு என்னாச்சுனு கேட்கலாமா? வேண்டாமா? ரொம்ப நேரம் தயங்கினாள். ஆனால் கேட்கவில்லை.

    பள்ளில டிரைவர், கிளீனர் பத்தியெல்லாம் யாரும். பேசமாட்டாங்க. மூணாவது நாள் காலையில வினோத் பள்ளியில இறக்கிவிட்டாரு. ஆபீஸ் வேலயா அந்தப் பக்கம் யாரையோ பார்க்க வேண்டி இருந்ததால இறக்கிவிட்டாரு. திரும்பப்போகும்போது பேருந்தில வரசொல்லிட்டாரு. வரும்போது பேருந்தில வந்தா. ஆறுமுகம் வந்திருந்தாரு. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கும் வரை காத்திருந்து கேட்டாள்.

    “எங்க ரெண்டு நாளா ரெண்டு பேத்தயும் காணோம். மணி இன்னக்கு வரலியா லீவா? “

    “மிஸ் ஒங்களுக்கு விஷயமே தெரியாதா?

    தெரியலையே. சொல்லுங்க. மணிக்கு வேற வேல கெடச்சிருச்சா? இல்ல கல்யாணமா?”

    “மணி எறந்திட்டா மிஸ்.நம்மளவிட்டு போயிட்டா மிஸ். அவ எறந்து நேத்தயோட எட்டு நாளாச்சு. அதுக்குதா நானும் லீவு போட்டிருந்தே”

    “நெஞ்சடைத்தது ஐயோ என்…..னா……ச்சு”

    “நாங்க டிரைவர் கிளீனர் எல்லாரும் சேர்ந்து லீவில கேரளாவில நெல்லியாம்பதிங்கற ஒரு எடத்தில வாட்டர் ஃபால்சுக்குப் போயிருந்தோம். மணியும் வந்திருந்தா. எல்லாரும் குளிச்சு வெளையாண்டுட்டு திரும்பிட்டோம் மிஸ்.வர்ற வழில குளம் மாதிரி ஒரு எடத்தில வித்தியாசமா ஒரு கலர்ல தாமரப்பூ பூத்திருந்துச்சு.”

    அதுக்குள்ள ஒருத்தர் வெளியில டூவீலர்ல பேருந்துக்கு நேரா வந்தாரு. ‘பாருங்க எப்படி வர்றானு’ என்று பேச்சு எங்கோசென்றது.

    “சொல்லுங்கண்ணா என்னாச்சு.?”

    “அந்த தாமரப்பூ பாக்கறதுக்கு சுத்திலும் நீலநிறத்தலயும் நடுவுல எளஞ்செவப்பாவும் இருந்துச்சு. நாங்க அத பாத்திட்டு பேசாம வந்திட்டோம். கடைசில அவ நம்ம கோகுலண்ணாகூட வந்திட்டிருந்தா. அவனுக்கு அந்த பூவ பறிக்கணும்னு ஆச. எல்லாருமே சொன்னோம் வேண்டா பாற வழுக்கும் வழுக்கும்னு. இருண்ணா வந்தடறேனுட்டு அந்தப்பாறமேல நின்ன பூவ எட்டிப்புடுங்கனா. பாற ஈரமா இருந்திருக்கும்போல செருப்பில்லாம வெறுங்கால்ல போனதால காலு வழுக்கிடுச்சு. பொதக்குழில போய் விழுந்திட்டான் மிஸ். கையப்புடிச்சு இழுக்க இழுக்க உள்ளே இழுத்துட்டுப்போயிடுச்சு. திடீர்னு மழவேற வந்திருச்சு. Fire Service வந்து மூணு மணிநேரம் போராடித்தான் வெளில எடுத்தாங்க. அதுக்குள்ள அவன் போய்ட்டா மிஸ்.” ஆறுமுக அண்ணாவின் குரலும் இடறியது. ஆம்புலன்சில வீட்டுக்குக்கொண்டுபோகும்போது நைட்டுமணி ரெண்டாயிடுச்சு மிஸ். பாவம் அவனோட அம்மாவ நெனச்சாதா கவலயா இருக்கு. அவ அப்பா எறந்தபின்ன இவனுக்காகதா அந்த அம்மா தோட்டவேலைசெஞ்சு கஷ்டப்பட்டிட்டு இருந்தாங்க. அவ அண்ணனும் வீட்டுக்கு அவ்வளவுக்கா எதுவும் கொடுக்க மாட்டாரு. இப்போதா இவ வேலக்குப்போக ஆரம்பிச்சதுக்கப்பறம் கொஞ்சம் நிம்மதியா இருந்தாங்க. அவங்களுக்குத்தா என்ன சொல்லி சமாதானப்படுத்தறதுனே தெரியல.”

    என்ன பேசறதுனு தெரியாம கைக்குட்டையால் கண்களைத் துடைத்தாள் அகிலா

    “மிஸ் நாங்க கேரளா போகும்போதுகூட ஒங்களப்பத்தி பேசிட்டு வந்தா மிஸ்.”

    கேட்க ஆர்வமாகத்தா இருந்தது ஆனா மனது கனத்தது.

    “ அவ சொல்லிகிட்டே இருந்தா மிஸ். ஊருக்குப்போனதும் போய் நல்லொரு செருப்பா வாங்கணுண்ணா. இனியு செருப்புப்போடாம போனா அகிலா மிஸ் கோவிச்சுவாங்க. பாவம் நம்ம மேல இருக்கற அக்கரயிலதான அவங்க இத்தனதடவ சொல்றாங்கனா”

    “நா அப்பவே கேட்டே ஏண்டா டூரு வரும்போதே வாங்கிருக்க வேண்டியதுதானேனு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா மிஸ். பள்ளி தொறந்து போகும்போது புதுசா போட்டா நல்லா இருக்கு. இப்பவே வாங்கிட்டா பழசு மாதிரி இருக்குண்ணா. வாங்கும்போது ஆத்தாவுக்கு ஒரு செருப்புவாங்கித் தரணு. அதுதா அதயு கூட்டிகிட்டு கடைக்குப்போகணு. அண்ணங்கிட்ட கேட்டுகிட்டே இருந்துச்சு. அண்ண கண்டுக்கடறமாதிரி தெரியல. பாவண்ணா சேத்தில செருப்பில்லாம நடந்து நடந்து காலெல்லா அழுகிக்கெடக்குனு வருந்தினா.

    அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

    என்ன சொல்வது. பெருமாள்கோயிலில் வண்டி நின்றது.”

    “மிஸ் உங்க ஸ்டாப்” என்றார்

    சட்டென்று பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள். ஆறுமுகத்திடமும் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.

    பையில் வைத்திருந்த ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்துப்பார்த்தாள்

    “ஒரு வேளை ஐம்பது ரூபாய் கூட ஓர் உயிரைக் காப்பாத்த உதவி இருக்குமோ.?”

    Share
  • பல்லழகன் – பகுதி 9

    திவாகர்

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..”

     

    “கோமதி..”

     

    “ஸார் நான் கோம்டி சார்..”

     

    “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..”

     

    “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    “ஸார்.. இதைக் கொஞ்சம் தீர்க்கமா யோசிச்சா புரியும். பெரியப்பா எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி உதவி பண்ணியிருக்கிறார். அதுல ஒருத்திதான் இந்த சுமதி.. இன்னும் உதவி பண்ணக்கூட இல்லே.. அதுக்குள்ளே அவர் போயிட்டார். சுமதியை இதுக்காக எப்படி சந்தேகப்படமுடியும்.?” ஆனால் கோம்டி குறுக்கிட்டாள்.

     

    “நீங்க எதுக்காக அவளுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி பேசணும்? முரளி சொன்னாருன்னா இதுல ஏதோ விஷயம் இருக்குன்னுதான் அர்த்தம். அவளோட அட்ரஸ் கொடுங்க.. நானே போய் விசாரிக்கிறேன்..”

     

    “கரெக்ட் கோமதி.. சாரி….. கோம்டி..  உங்களுக்கு சுமதி அட்ரெஸ் மெஸ்ஸேஜ் பண்ணிடறேன்.. பார்த்துட்டு வந்து எனக்கும் விவரம் சொல்லுங்க.. இவரோட பார்வை வேற.. உங்க பார்வை வேற இல்லையா..”

     

    அதே சமயத்தில் ஒரு அனாதை ஆசிரமம்.. பாலபாலிகா என்று பெயர்ப் பலகை இருந்தது.  அருகே தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். இவன் அங்கு நுழைந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே தொடர்ந்து வந்த  ரவியும் தன் வண்டியை வெளியேயே நிறுத்தி விட்டு சுந்தர் உள்ளே சென்றதைப் பார்த்து பின் தொடர்ந்தான். சுந்தர் அங்கே உள்ளே சென்றதும் அங்குள்ள ஒரு வயதானவரிடம் பேசிவிட்டு அவர் அழைத்துச் செல்ல உள்ளே சென்றான்.

     

    இங்கே போலிஸ் ஸ்டேஷனிலிருந்து கோம்டியும் கல்யாணும் கிளம்பினார்கள். காரில் போகும்போது முதலில் ரவிக்கு ஃபோன் செய்தாள். ஸ்பீகர் வாய்ஸ் இல் ஃபோனை வைத்துக்கொண்டாள். அதனால் காரை டிரைவ் செய்துகொண்டிருந்த கல்யாணும் கேட்கமுடிந்தது. சாலை ஓரத்தில் இருந்த ரவி ஃபோனை எடுத்தான்.

     

    ‘கோம்டி! நீ சொன்னது சரி, இப்போ இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்குள்ளே சுந்தர் நுழைஞ்சிருக்கான். இனிமேதான் நான் உள்ளே போய் விசாரிக்கணும். அவனுக்கு இங்கே என்ன வேலைன்னு தெரியலை.’

     

    ‘நான் எதிர்பார்த்தேன் ரவி.. சரி, நான் அவனுக்கு ஃபோன் பண்றேன்.. நீ அவன் வெளியே வந்தப்பறம் உள்ளே நுழைஞ்சு எதுக்கு அவன் வந்தான்னு கேட்டுக்கோடா.. அவன் உன்னை பாக்கக்கூடாது..’

     

    ‘சரி.. கல்யாண் என்ன பண்றான்..?’

     

    ‘ம்ம்.. பல்லைக் காட்டிக் காட்டி வெறுப்பேத்திண்டிருக்கார்.. வைடா ஃபோனை..’

     

    ‘நீதானே ஃபோன் பண்ணே.. நீயே ஆஃப் பண்ணு..’

     

    சுந்தருக்கு ஃபோன் போட்டாள்..

     

    “மிஸ்டர் சுந்தர்! சாரி.. ஆஃபீஸ்லதானே.. உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?”

     

    “நிச்சயமா ஆஃபீஸ்லதான்.. ஆஃபீஸ்லதான் இருக்கேன்.. .. எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்குன்னு சொன்னேனே.. இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..?

     

    ‘எனக்குத் தெரியும் சார்.. இப்போதானே உங்களை அங்கே பார்த்தேனே.. மீடிங்க் கீடிங்க் போயிட்டீங்களோன்னுதான் கேட்டேன்.’

     

    ‘ஆமாங்க.. உங்க கால்னவுடனே மீடிங்க்லேர்ந்து நடுவுல வந்திருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.. திரும்பவும் நான் மீடிங்க் போகணும். எல்லோரும் காத்துண்டிருக்காங்க.. என்னோட ப்ரெஸெண்டேஷன் வேற இருக்கு. என்ன விஷயம்?”.

     

    “சார்.. உங்களை கேக்க மறந்துட்டேன்.. உங்க அங்கிள் கொலை செய்யப்பட்ட அன்னிக்கி நீங்க ஊர்ல இல்லே.. முரளி ஃபோன் செய்த உடனே நாலு நாலரை மணி நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்க இல்லையா? சுந்தர் நீங்க எந்த ஊர்லேர்ந்து புறப்பட்டு வந்தீங்க?”

     

    அவன் கோபம் அவன் குரலில் தெரிந்தது. “என்னங்க என் மேல ஏதாவது சந்தேகமா? டைரக்டா சொல்லுங்க.. நான் நேரே கல்யாண்கிட்டயே பேசறேன்.. இல்லே போலீஸ்கிட்ட சொல்லிக்கிறேன்.. இல்லே ஒரு வக்கீல் மூலமா கூட பேசுவேன்.”

     

    “ஐய்யய்யோ.. என்னங்க நீங்க இவ்வளோ கோபப்படறிங்க.. விவரம் சேகரிக்கறச்சே நான் சரியா கலெக்ட் பண்ணணுங்க.. இப்போ நான் முடிவுல கல்யாண்கிட்டே ரிப்போர்ட் தரணும்.. மிஸ்டர் சுந்தர்னு வரச்சே நான் சரியா எழுதணும்.. கொலை நடந்த அன்னிக்கி விவரம் கேட்டவுடனே சுந்தர் இந்த ஊரிலேர்ந்து இத்தனை நேரத்துல புறப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்தார்னு சரியா எழுதணுமா இல்லையா.. இன்ஸ்பெக்டர் மோகன் அதான் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட இப்பல்லாம் எங்கிட்டே சும்மாச் சும்மா விவரம் கேட்கிறார். கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க சுந்தர். “

     

    போலீஸ் இன்ஸ்பெக்டர் எனும் வார்த்தையைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள் கோம்டி. அது வேலையும் செய்தது. சுந்தரின் குரல் சாந்தமாக வந்தது.

     

    “இப்போ நான் அன்னிக்கு எங்கேயிருந்து கிளம்பி வந்தேங்கிறது வேணும் இல்லையா.. எனக்கு முரளி ஃபோன் பண்ணது ராத்திரி எட்டு மணிவாக்குலதான்.. அப்போ சரியா வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு வாசல் வீதிலே ஒரு ஓட்டல்ல டிபன் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்போ கிடைச்ச செய்தி என்னை உடனடியா கிளம்ப வெச்சது.  ராத்திரி அரௌண்ட் பன்னிரண்டரை ஒண்ணுக்கெல்லாம் பெரியப்பா வீட்டுக்கு வந்துட்டேன். இவ்வளவுதான்.. இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. நான் மீடிங்க் போகணும்.. ஆனா உங்களுக்குப் பதில்சொல்லிட்டே போறேன். போதுமா..?”

     

    “வைத்தீஸ்வரன் கோயில்ங்கிறது சிதம்பரம் தாண்டினா வரும் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அன்னிக்கு நான் சிதம்பரம் கூட போயிருந்தேன்.”

     

    “சிதம்பரம் போனீங்களா?” கோம்டி சாதாரணமான குரலில்தான் கேட்டாள்.

     

    “சிதம்பரம்…” என்று சொல்லிவிட்டு அவன் குரல் நிதானித்தது.. “ஆமாங்க..  மத்தியானம் லஞ்ச் டைம்ல அங்க சாமி தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்க வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு கூடவே..”

     

    “நாடி ஜோஸ்யம் பார்த்துட்டு டிபன் சாப்பிடப் போயிட்டீங்க.. அப்போ கால் வந்தது.”

     

    “எப்படிங்க நாடி ஜோஸ்ய விஷயம்லாம் தெரிஞ்சுண்டீங்க.. கரெக்ட்தான்..”

     

    “ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சுந்தர்.. இப்போ நீங்க உங்களோட மீடிங்க் போங்க.. அப்புறமா தேவைப்பட்டா கூப்பிடறேன். வெச்சுடட்டுமா?”

    அவன் திரும்ப பதில் சொல்லாமல் கட் செய்தது அவர்களுக்குத் தெரிந்தது.

     

    “எங்கேயோ அனாதை ஆசிரமத்துலேர்ந்து பேசிண்டு தன்னோட ஆஃபீஸ் மீடிங்க்னு சொல்றான் கல்யாண்.. கேட்டீங்களா.. இந்த சுந்தர் சொல்றது எல்லாமே சுத்தப் பொய்! இவன் சிதம்பரத்துக்குப் போனது மட்டும் உண்மை. சிதம்பரத்துல அந்த ரஞ்சிதாவைப் பார்த்திருக்கிறான் என்பது என் ஊகம்…”

     

    சட்டென காரை பிரேக் போட்டு சாலைப் பக்கத்தில் நிறுத்தினான் கல்யாண். அவன் குரலில் ஆச்சரியம் அதிகமாக இருந்தது.

     

    “எப்படி சொல்லறீங்க கோம்டி?.. சுந்தர் இந்தக் கொலைல இன்வால்வாகி இருப்பாங்கிறிங்களா?”

     

    “அது எனக்கு எப்படித் தெரியும்? அதைக் கண்டுபிடிக்கவேண்டியது போலீஸ். ஆனா அவங்களாலே சிதம்பரத்துல விலாசம் இருந்தும் ரஞ்சிதா’ங்கறது யாருன்னே கண்டுபிடிக்கமுடியலியே..”

     

    “அப்போ நீங்க மட்டும் எப்படி சிதம்பரம் விஷயத்துல அவன் பொய் சொல்லறான்னு சொல்லறீங்க?..

     

    “அவன் எங்கிட்டே பேசின விதம் கேட்டீங்களா? சிதம்பரம்ங்கிற வார்த்தையை ரொம்ப கவனமா நிதானிச்சு யூஸ் பண்ணான். ஒருவேளை அவன் சிதம்பரத்துக்குள்ளே போகலே, பைபாஸ்ல வைத்தீஸ்வரன் கோயில் ரோட்ல போனேன்னு சொன்னான்னு வெச்சுக்குங்க.. நானோ இல்லே போலீஸோ சிதம்பரத்துல ரஞ்சிதாவைப் பிடிச்சுட்டோம்னா இவனுக்கு டேஞ்சர் இல்லையா.. அவ நிச்சயமா இவன் பேரைச் சொல்லுவான்னு அவன் பயந்திருக்கலாம். ஆனா சரியா யோசிக்காம தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டான் உங்க சித்தி பையன்.”

     

    “என்ன தப்பு?”

     

    “லஞ்ச் டைம்ல கோயில்ல போயி தரிசனம் பண்ணிட்டு’ன்னு சொன்னான் பாருங்க.. அது தப்பு. கரெக்டா பன்னெண்டு மணிக்கு சிதம்பரம் கோயில் க்ளோஸ் பண்ணிடுவாங்க. ஆனா இவன் சிதம்பரம் போனதும் அந்த பத்து லட்சம் பணத்தைப் பட்டுவாடா பண்ணியதும் உண்மையா இருக்கலாம்.. நாம நிறைய இன்னும் இதுல கண்டுபிடிக்கணும், இதை நாம் இப்போதைக்கு இன்ஸ்பெக்டருக்கு சொல்லவேணாம்!”

     

    “ஹைய்யோ.. உங்களுக்கு எப்படித் தெரியும் கோயில் சரியா க்ளோஸ் பண்ற டைம்லாம்..”

     

    “நாங்க ஒருவாட்டி பன்னிரெண்டு மணி வாக்குல நடராஜர் தரிசனத்துக்காக போயிருக்கோம். கோயில்ல ‘மூடற  நேரம்..’னு சொல்லிட்டு தரிசனத்துக்கு கடகடவென ஓடச் சொன்னாங்க.. இல்லேன்னா சாயங்காலம் நாலு மணி வரைக் காத்திருக்கணும்.. நல்ல வெய்யில் காலத்துல அந்தக் கோயில் வடக்கு வாசல்லேர்ந்து கனகசபை வரைக்கும் வேகவேகமா ஓடிப்போயி பன்னெண்டு மணி அடிக்கறதுக்குள்ள நடராஜரைப் பார்த்துட்டோம். அப்போதான் பூஜை முடிஞ்சு நல்ல அலங்காரத்துல கற்பூர தீபாராதனைப் பார்த்தது எங்க நெஞ்சுல அப்படியே பதிஞ்சுருக்கு. தரிசனம் பண்ணிட்டு இப்படி வந்தோம். சொன்னபடி கோயில் சபையை மூடிட்டாங்க.”

     

    “நீங்க கச்சிதமா சொல்லறதையெல்லாம் பார்த்தா எனக்கு எல்லார் மேலயும் சந்தேகம் வருது கோம்டி. சரி, நீங்க சொல்றபடியே இன்ஸ்பெக்டர்கிட்டே அப்புறமா சொல்லிக்கலாம். ஆனா எங்க பெரியப்பா இந்த பண மேட்டருக்கெல்லாம் முரளியைத்தான் அதிகம் ஹெல்ப் எடுத்துக்குவாரு, முரளியை நீங்க விசாரிங்க.. நான் விசாரிச்சா அவன் என்கிட்டே அழுதுடுவான், கொஞ்சம் வெகுளி. வெளிப்படையா பேசுவான்,, அவனை நான் போய் ஏதாவது கேட்டா என்னை சந்தேகிக்கிறாயாடா’ ன்னு நேரடியா கேட்பான். அத்தோட போலீஸ் கூட அவன் பேருல ரொம்ப சந்தேகம் காட்டுது. ஏன்னா அவன் மட்டும்தான் பெரியப்பாவுக்கு ரொம்ப க்ளோஸ். அதனாலெல்லாம் அவனை சந்தேகப்படலாமா? ஆனா, சுந்தரை நேரா பார்த்து நானே கேட்கிறேனே.. உண்மை எனக்குப் பாதி தெரியுங்கிறப்போ மீதியையும் அவன் சொல்லியாகணும் இல்லையா.. கொலைக்கு இந்த விஷயம் சம்மந்தமில்லேன்னா நிச்சயமா அவன் நடந்ததைச் சொல்லுவான். இல்லேன்னு முழு பூசணிக்காயை மறைச்சான்னா நாம் போலீஸ் வெச்சே டீல் பண்ணுவோம்.. என்ன சொல்லறீங்க.”

     

    “ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் சிதம்பரம் அட்ரஸ்ல யாரும் அப்படி ஒரு பேருல இல்லேன்னு சொல்றதையும் நாம கணக்குல எடுத்துக்கணும். சுந்தரை நீங்க விசாரிக்கவேணாம்.. உங்கள்ட்ட பேசறச்சே உரிமை எடுத்துக்கலாம். ஆனா நானே பேசறேன். ஒருவேளை இந்த ரஞ்சிதாங்கிற பேரை வெச்சு சுந்தர் ஏதேனும் கோல்மால் பண்ணியிருந்தா?.. ஒரு பேச்சுக்குச் சொல்லறேன். உங்க பெரியப்பாவையே பண விஷயத்துல சுந்தர் மோசம் பண்ணியிருக்கமாட்டாருன்னு என்ன நிச்சயம்? கொலைக்கு இது சம்பந்தப்படாதுதான், ஆனா உங்க பெரியப்பா ஏன் இப்படி இதுதான் கடைசி.. இனிமே கேக்காதேங்கிற மாதிரி எழுதணும்?”.

     

    “அப்போ இது ஒரு தனிக் கேஸா இல்லே மாறும்.  நோ நோ இப்படி நாம திசை மாறக்கூடாது.. இப்போ நம்ம ரூட்டே கொலை ஏன் நடந்தது. யார் கொலைகாரன்.. அவ்வளவுதான். ஒருவேளை ஏதாவது பணமோசடியை சுந்தர் எங்க பெரியப்பாகிட்டே பண்ணான்னா அது அவங்க தலையெழுத்து. எப்படி வேணா போகட்டும் அவங்க..”

     

    எரிச்சலுடன் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

     

    “அப்படியே பணமோசடின்னு தெரிஞ்சாதான் இந்த மாதிரி வேற எங்கயாவது பண்ணியோ அல்லது இவரு ஏமாந்தோ அந்த வஞ்சம் தீர்க்கறதுக்காக இவரை கொலை பண்ணியிருக்கலாம். சுந்தர் ரஞ்சிதா மேட்டர் ஒரு சின்ன லீட் விஷயம். இதை இப்படித்தான் டீல் பண்ணனும் கல்யாண்.”

     

    அவன் ஒப்புக்கொள்வதைப் போல தலையாட்டினான். “சரி,  இப்போ நாம சுந்தரைப் பார்க்கப் போகணுமா? அவன் ஆபீஸ் மீடிங்க்னு அடாவடியா பொய் பேசினானே.. நம்மளைப் பார்க்க வருவானா?”

     

    “சுந்தரை இன்னிக்கு விட்டுப் பிடிக்கலாம். ரவி இப்பவும் அவனோட பின்னாலதான் இருக்கான்? அவனைப் பத்தி ரவி என்ன விஷயம் கொண்டு வர்ரான் என்பதைப் பொறுத்துதான் நாம் டீல் பண்ணியாகணும். நாம ஏதோ சந்தேகப் படறோம்னு அவனுக்குப் புரிஞ்சு போச்சு. அவன் ஃபோன் நம்பரை ட்ராக் பண்ணனும். எங்கிட்டே பேசினதலேர்ந்து அவன் யார்கிட்டயெல்லாம் பேசினான்.. நாளைக்குக் காலை வரைப் பேசப் போறான்னு விவரம் எனக்குத் தெரியணும். இந்த ட்ராக்கிங்க் விஷயத்துல எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்றவர் ஒருத்தர்கிட்ட  மெஸேஜ் அனுப்பிக் கேட்கிறேன்.. அவர் எனக்கு இதுமாதிரியெல்லாம் நிறைய உதவி செய்யறவர்தான். பொதுவா இந்த விவாகரத்துக்காக எங்கிட்டே நிறைய பேரு வரச்சே இவர்தான் குறிப்பிட்ட கல்பிரிட் ஃபோனையெல்லாம்  ட்ராக் பண்ணி கேஸை ரொம்ப சீக்கிரம் முடிச்சுக் கொடுக்க உதவியிருக்கார்.”

     

    “உங்க பிரதாபங்களையெல்லாம் கேட்கக் கேட்க பிரமிப்பாதான் இருக்கு. பேசாம பல் கிலினிக் மூடிட்டு நிரந்தரமா பெரிய அளவுல இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்ஸி வெச்சுடலாம். இந்த கேஸ் முடிச்சுக் கொடுங்க.. நானே பெரிய ஆஃபீஸ் வெச்சுக் கொடுக்கறேன்.”

     

    அவர்கள் வீடு இருக்கும் வீதி முனையிலேயே வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

     

    “எதுக்குங்க? நீங்க எனக்காக வேலை பண்ணறிங்க.. உங்களை உங்க வீட்டுல இறக்கி விடறதுதான் முறை.”

     

    “இந்த முறை கிறை எல்லாம் வேண்டாமே.. எங்க வீட்டுல நான் உங்களுக்காக வேலை பண்றது அவங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலே.. நீங்க என்ன பண்ணுங்க உங்க பெரியம்மா பையன் முரளிக்கு ஃபோன் பண்ணி சாதாரணமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.. நானும் அப்போ வரேன்.  ஓகே.. பை.,”

     

    “பை.”. என்று சொல்லிவிட்டு தன் எத்துப்பல்லு தெரிய சிரிக்கிறான்.

     

    தொடரும்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 16

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 15 முருக நாயனார்

    மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா

        மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்

    சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து

        திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்

    கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத

        காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே

    யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா

        திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

    சோழநாட்டில் திருப்புகலூர் என்ற ஊர் எல்லையில்லாப் புகழ் கொண்ட ஊர். அப்பரடிகள் பன்னெடுநாட்கள் தங்கித் தொண்டு செய்து வந்த ஊர். சித்திரை சதயத் திருநாளில் பூம்புகளூர் புண்ணியன் திருவடி சார்ந்த இடம். நம்பி ஆரூரருக்கு, செங்கல் தங்கக் கட்டியாக மாறிய அற்புதம் நிகழ்ந்த இடம். இங்கிருந்த நாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்க நாயனார் தங்கியிருந்ததாகச் சேக்கிழார் பெருமான் பாடியருளினார். இந்து சமய ஆய்வு மாநாடு நடைபெற்ற இடம் இது. இத்தகைய சீர்மிகு திருப்பதியில் தோன்றியவர் முருக நாயனார் எனும் பெரியார். மறையவர் குலத்தில் தோன்றியவர் இவர். முப்போதும் சிவத்திருமேனி தீண்டும் பேறு பெற்றவர். ஞான நெறியில் நின்ற இவர் சிவபெருமான்பால் உருகும் மனத்தால் வழிபாடு செய்யும் பேராளர். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நான்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, அறுவகையான திருமாலைகள் கட்டி, அத்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் அருள்பாலிக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியும் வழிபடுபவர்.

    ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண்

      புகலூர் அது தன்னில்

    மான மறையோர் குல மரபின்

      வந்தார் முந்தை மறைமுதல்வர்

    ஞான வரம்பின் தலை நின்றார்

      நாகம் புனைவார் சேவடிக் கீழ்

    ஊனம் இன்றி நிறை அன்பால்

      உருகு மனத்தார் முருகனார்.

    புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
    எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
    நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

    என்பது திருமந்திரம்.

    பூவொடு நீர் சமந்தேத்தி என்பார் அப்பரடிகள்.

    பூக்கை கொண்டு அரண் பொன்னடி போற்றிலார்

    காக்கைக்கே இறையாகி கழிவாரே என்பார் அப்பர்

    ஞானசம்பந்தப் பெருமானை தம் நண்பராகப் பெற்றவர் முருக நாயனார். இவர்தம் மலர்த் தொண்டை ஞானசம்பந்தர் தம் தேவரத்தில் போற்றினார். முருக நாயனார் பெருமான் அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்கள் குளிரக் கண்டு களிப்பவராம் இந்நாயனார்.

    இப்படி நாளும் நாளும் மலர் தொண்டு செய்து ஞானசம்பந்தப் பெருமான் திருமண நாளில் அப்பெருமானோடு சிவசோதியில் கலந்தார்.

    முருக நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல் என்பது பெரும் புண்ணியமாம். சிவபெருமானுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், பஞ்சாட்சரம் செபித்தலும், மிகச்சிறந்த புண்ணியமாம்.

    மரப்பூக்கள்  – மந்தாரம், கொன்றை, சண்பகம்

    செடிப்பூக்கள்  – நந்தியாவட்டம், அலரி, மல்லி

    கொடிப்பூ   – சம்பங்கி, சாதிமுல்லை

    அறுவகை மாலைகள்

    கருக்கிக் கட்டுவது இண்டை

    இணைத்துக் கட்டுவது மாலை

    தண்டிற்கட்டுவது கண்ணி

    தொகுத்துக் கட்டுவது தொடை

    பிணைத்துக் கட்டுவது பிணையல்

    கோர்ப்பது கோவை

    என நால்வகைப் பூக்களையும் அறுவகையாகத் தொடுத்து ஆறு காலமும் அலங்கரித்து வழிபாடு செய்வார் முருக நாயனார். மலர் வழிபாட்டிற்கு இன்றியமையாதது.

     நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப்

    புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

    தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று

    மலைபுனல்சேர் செஞ்சடையெம்மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே.

     

    பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

    நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா

    ராக்கைக் கேயிரை தேடி யலமந்து

    காக்கைக் கேயிரையாகிக் கழிவரே.

    என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும்,

    முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்

    பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்

    சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ

    ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே.

    என்னும் திருவாசகத்தானும்,

    நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும்-

    புலத்தி னழுந்தா வன்பினொடும் போதானந்தன் கழற்க ணிந்தோர்-

    மலத்தி னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத்-

    தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்.

    என்னும் சிவபுண்ணியத் தெளிவானும் உணரலாம்.

    இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றவரானார்.

    ஏந்து முலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப்

    பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக்

    காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய்

    வேந்தின் றுயர்தவிர்த் தானையெப் போதும் விரும்பு மினே.

    என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவந்தாதியிற் போற்றுவதைக் காணலாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • திறமையால் உயிர் தப்பிய குரங்கு!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    திறமையால் உயிர் தப்பிய குரங்கு!!

    ஒரு ஆற்றின் கரையோரத்தில் பெரிய நாவற்பழ மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் ஆற்றில் வசிந்து வந்த பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்திற்கு அருகில் வந்தது. குரங்கு முதலையை பார்த்து, முதலையே! அதிக சுவையுடைய நாவற்பழங்களை நீயும் ருசித்துப்பார் எனக்கூறி முதலைக்கு நாவற்பழங்களை கொடுத்தது.

    அன்றுமுதல் முதலையும், குரங்கும் நண்பர்களாகினர். தினமும் முதலை குரங்கைப் பார்க்க ஆற்றின் கரைக்கு வந்துவிடும். இருவரும் மகிழ்ச்சியாக கதைகளை பேசியும், வாழ்க்கை பற்றிய கருத்துகளை பகிர்ந்தும் வந்தன. மேலும், தான் சாப்பிட்டது போக மீதமிருந்த நாவற்பழங்களை முதலை தன் மனைவிக்கும் எடுத்துச் செல்லும்.

    ஒருநாள் முதலையின் மனைவி, அமிர்தம் போல் சுவையுடைய இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது? என்றது. ஆண் முதலை, எனக்கு நெருங்கிய நண்பனான குரங்கு ஒன்று அன்பாக இந்தப் பழங்களை தருவதாக கூறியது. பின் முதலையின் மனைவி அமிர்தம்போல் இருக்கும் இப்பழங்களை எப்போதும் சாப்பிடும் அந்த குரங்கின் இதயமும் இதைப் போலவே சுவையாகத்தானே இருக்கும் அல்லவா? அதனால் அக்குரங்கை கொன்று அதனுடைய இதயத்தை கொண்டு வருமாறு கூறியது.

    உடனே ஆண் முதலை மனைவியிடம், குரங்கு நம்மிடம் நண்பனை போல் பழகுகிறது. மேலும் நம் பசிக்கு பழங்களை கொடுத்து உதவிகளை செய்கிறது. இவ்வளவு உதவிகள் செய்யும் குரங்கிற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அதனால் இந்த எண்ணத்தை இதோடு விட்டு விடு என்று கோபமாக கூறியது.

    அதற்கு முதலையின் மனைவியோ, அந்த குரங்கை எனக்காக கொன்று அதன் இதயத்தை கொடுக்க வேண்டும் என கண்டித்துக் கூறியது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆண் முதலை கண்ணீர் விட்டு வருந்தியது. எனக்கு பழங்கள் கொடுத்த குரங்கை நான் எப்படிக் கொல்வது? என வருத்தத்தில் குரங்கைப் பார்க்கச் சென்றது. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் பார்த்த குரங்கு, நண்பனே! ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டது.

    அதற்கு அந்த முதலை, உன்னிடம் பழங்களை வாங்கிச் சாப்பிடும் நான் இத்தனை நாட்களாகியும் உன்னை வீட்டிற்கு அழைத்து வராததால் என் மனைவி என்னை திட்டிவிட்டாள் என்று கூறியது. அதனால் நீ உறுதியாக என் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தியது. குரங்கும், சரி என ஒத்துக்கொண்டது. குரங்கும் ஆனந்தமாய் முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது.

    முதலை நடு ஆற்றை தாண்டி சென்றதற்கு பின் குரங்கிடம் உண்மையைக் கூறத் தொடங்கியது. நண்பனே! என்னை மன்னித்து விடு. என் மனைவிக்காக உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குரங்கு, நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொன்றுவிடுவதாக கூறுகிறீர்கள் என பயத்துடன் கேட்டது. நீ கொடுத்த நாவற்பழங்கள் அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே, உன் இதயத்தை ருசித்துப் பார்க்க ஆசையாக உள்ளது என தன் மனைவி கூறியதை குரங்கிடம் முதலை கூறியது.

    உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, அதை நீ கரையிலேயே கூறியிருந்தால், நாவல்மரத்தின் அடியில் மறைத்து வைத்திருக்கும் ருசி மிகுந்த நாவற்பழங்களை அண்ணிக்காக எடுத்து வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்! என்றது குரங்கு. அதைக் கேட்டதும் முதலை, நண்பனே! அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு. உன்னை நாவல் மரத்தடிக்கு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இரண்டும் கரைக்கு வந்தது.

    முதலை, நாவற்பழங்களை தருமாறு கூறியது. ஆனால் குரங்கோ முதலையிடம் கோபமாக, உன்னை நல்ல நண்பனாக நினைத்தேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். உன் குணம் என்னவென்று எனக்கு இப்போது புரிந்தது. இனி இந்த நாவல்மரத்தடிக்கு வராதே! என்றது. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றது.

    நீதி : ஆபத்தில் நேரத்தில் புத்தசாலிதனமாக நடந்து கொள்வதே சிறப்பு.

    Share
  • நீதி தவறிய மன்னன்..!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    நீதி தவறிய மன்னன்..!!

    பூஞ்சோலை என்னும் நாட்டை மதியழகன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அரசரின் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் அறிந்தவள். தன்னைத் தவிர வேறு யாரும் இசையில் ஞானமுள்ளவர் இல்லை என அவள் நினைத்திருந்தாள்.

    ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அத்திருவிழாவில் ராமர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்துப்பாடுவாள். சில வருடத்திற்குப் பிறகு அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராமரின் மனைவி தன்னை பாட அனுமதிக்காததால் மிகுந்த வேதனை அடைந்தாள். பின் சில காலம் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றாள்.

    இந்த ஆண்டும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம் எப்படியாவது இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டும் என முடிவு செய்தாள், ராமரின் மனைவி. வழக்கம்போல் திருவிழாவில் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அரசியாரின் இசையை ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென்று மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. அதைப் பார்த்த அரசருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக மக்கள் அனைவரும் எழுந்துச் செல்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் ராமரின் மனைவி இறைவனை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட அரசியார் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

    அரசி தன் கணவன் மதியழகனிடம் எவ்வளவு தைரியமிருந்தால் இவள் எனக்கே எதிராக இசைப்பாடுவாள். இவளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கோபமாகக் கூறினாள். தன் மனைவியை திருப்திபடுத்துவதற்காக ராமரின் மனைவியை பழிவாங்க நினைத்தார், அரசர்.

    அச்சமயத்தில் அரசர் இசைக்கலையில் சிறப்புப்பெற்ற மணிமேகலை என்பவளை அழைத்து இசை நிகழ்ச்சி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், என்னுடன் போட்டியிட யார் தயார்? என்றாள். உடனே மன்னன் ராமரின் மனைவியைப் பார்த்து, அம்மையே! தாங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

    அதற்கு ராமரின் மனைவி, அரசே! நம் நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன் என்றார். உடனே போட்டி பற்றிய விதிமுறைகளை அரசர் அறிவித்தார். இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. மணிமேகலை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராகும் தகுதியும், ராமரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவதாகவும் மன்னர் அறிவித்தார்.

    அரசரின் சதிதிட்டத்தைப் பற்றி புரிந்துகொண்ட ராமரின் மனைவி, இறைவனிடம் சென்று இறைவா! நீ மட்டுமே எனக்குத் துணை என்று கூறி அழுதாள். தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடைபெற்றது. மூன்று நாட்களும் மணிமேகலையே சிறந்தவள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது ஒரு முதியவர் எழுந்து நடுவர்களிடம் எதன் அடிப்படையில் மணிமேகலையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்? மேலும், மணிமேகலையின் இசை, ராமரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் இடையேயான நிறை, குறைகளைத் தெளிவாக விவரித்தார். ராமரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று அறிவித்தீர்கள்? நடுவர்கள் மனசாட்சியோடு தீர்ப்பு வழங்காமல் பொய்யாக தீர்ப்பு வழங்குவது சரியா? என்று கேட்டார்.

    இசைக்கும், இறைவனுக்கும் தொடர்பு உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள் என்றார் முதியவர். இதைக்கேட்டு கடும் கோபத்திற்குள்ளான அரசர் அம்முதியவரை கைது செய்யுமாறு கூறினார். காவலர்கள் அவரை கைது செய்ய சென்றதும் அவர் அங்கிருந்து மறைந்து போனார். பின் கோவிலில் இருந்து பெரும் சத்தம் கேட்டது. முதியவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

    அதிர்ச்சியடைந்த அரசர் தன் தவறை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார். தன் மனைவிக்காக தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு, தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்து அரச வாழ்வைத் துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்வதாக அறிவித்தார்.

    Share
  • அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பட்டமும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
    பண்புடனே வார்த்தை பகர்ந்தாலே போதும்
    உள்ளொன்று வைத்து உரைக்கவும் வேண்டாம்
    உண்மையாய் நடப்பதே உத்தமம் ஆகும்

    ஏற்றுவது போல தூற்றவும் வேண்டாம்
    இரங்குவது போல நடிக்கவும் வேண்டாம்
    கூற்றுவன் போல கொல்லவும் வேண்டாம்
    குறையின்றி வாழ்வில் நடந்தாலே போதும்

    போற்றுவார் போன்று பொய்யராய் நின்று
    தூற்றவும் வேண்டாம் தூக்கவும் வேண்டாம்
    மாற்றுவே னென்று மயக்கவும் வேண்டாம்
    மனமதனைச் செம்மை ஆக்கினால் நன்று

    சேற்றினை வாரி கொட்டவும் வேண்டாம்
    சின்னத் தனமாகச் செயலாற்ற வேண்டாம்
    சோற்றிலே மண்ணை கொட்டவும் வேண்டாம்
    சுகமான எண்ணங்களை சுமந்திடவே எண்ணு

    நட்பென்று கூறி நட்டாற்றில் விடாதே
    அற்பத் தனங்களை அடுக்கியே வையாதே
    துன்புறத்து மெண்ணதை துணையாக கொள்ளாதே
    என்றைக்கும் மனத்தில் நல்லதையே இருத்திவிடு

    வீண்வார்த்தை வீண்தர்க்கம் விலக்கியே விட்டுவிடு
    வில்லங்கம் என்பதை விலக்கவே முயன்றுவிடு
    விளலுக் கிறைத்த நீராக இருக்காதே
    வேதனைகள் போக்கும் வைத்தியனாய் ஆகிவிடு

    ஆண்டவன் இருக்கிறான் என்பதை எண்ணிவிடு
    அடுத்தவர் துயர்துடைக்க ஆயுத்தம் ஆகிவிடு
    அன்பைவிடப் பெரிது இல்லையென எண்ணிவிடு
    அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    Share
  • பல்லழகன் – பகுதி 8

    திவாகர்

     

    “மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.” சாந்தியிடம் திரும்பினாள்.

     

    ‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

     

    “அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள். கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

     

    “ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

     

    கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

     

    “உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

     

    என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

     

    கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

     

    “அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..”

     

    ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள்.

     

    “ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

     

    அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

     

    “நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

     

    சுந்தர் அலுவலகம்.

     

    காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

     

    “எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

     

    “தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

     

    “அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

     

    “அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

     

    ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு..

     

    அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி?

     

    தலயாட்டினான் சுந்தர்.

     

    “நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

     

    ரவி குறுக்கிட்டான்.

     

    “ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

     

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

     

    கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள்.

    “சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

     

    “நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

     

    என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

     

    “நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

     

    “போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

     

    “அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

     

    “அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு.. ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

     

    “கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..”

     

    “நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”

     

    “இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

     

    “இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

     

    ரவி அவளைப் பார்த்தான்.

     

    சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

     

    அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

     

    “என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

     

    ‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

     

    ‘அவன் ஆஃபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’

     

    இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

     

    அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

     

    “இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

     

    அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

     

    “ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

     

    விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா,, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

     

    “சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

     

    “விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

     

    “ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

     

    இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

     

    “அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

     

    “சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..” கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.

     

    “என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

     

    “தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

     

    “என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

     

    “சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 15

    63 நாயன்மார்களின் வரலாறு – 14. மூர்த்தி நாயனார்

    “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்ற, 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்த்தி நாயனார், சிவபெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்வதற்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காது தம்முடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.

    அப் பொற் பதிவாழ் வணிகக்

      குலத்து ஆன்ற தொன்மைச்

    செப்பத் தகு சீர்க் குடி

      செய்தவஞ் செய்ய வந்தார்

    எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து

      ஏறுவார் தாள்

    மெய்ப் பற்று எனப் பற்றி

      விடாத விருப்பின் மிக்கார்

    சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்த நாயன்மார்களின் வரிசையில் மூர்த்தி நாயனார் சொக்கநாதரைத் தவிர மற்றொரு எண்ணமேதும் இல்லாத சற்று வேறுபட்ட சிந்தை கொண்டவர். மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிசேக‌, அலங்கார‌த்திற்கான‌ சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாட கடமையாகக் கொண்டிருந்தவர். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.

    தென்பாண்டி நாட்டின் தலைநகரமாம் மதுரைத் திருநகரில், வைசியர் குலத்தில் அவதரித்தவர் மூர்த்தி நாயனார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்க‌நாத‌ருக்கு சந்தனக் காப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தவர்.

    வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்

        வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்

    தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்

        தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன

    னிழந்தவுயி ரினனாக ஞால நல்க

        வெழில்வேணி முடியாக விலங்கு வேட

    முழங்குபுக ழணியாக விரைநீ றாக

        மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

    துறவு நெறி நின்ற இந்நாயனார் பெருமான் சிவபெருமானுக்குச் செய்யும் பல்வேறு தொண்டுகளில், ஐயனைக் குளிர்விக்கும்பொருட்டு சொக்கலிங்கப் பெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்து வழிபாடு செய்வது அவருடைய முக்கியமானக் கடமையாகக் கொண்டிருந்தார்.

    ஒரு சமயம் வ‌டுகக் கருநாட்டு‌ ம‌ன்ன‌ன் ஒருவ‌ன் மண்ணாசையால் ம‌துரையை நோக்கி நால்வகைப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். சந்தனச் சோலை சூழ்ந்த செந்தமிழ் மதுரையைத் தலைநகராக்கி அரசு புரியலானான். கருநாடக மன்னனான இவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் தடுக்கப் பல வழிகளில் துன்பத்தையும் கொடுத்து வந்தான். அடியார்கள் ஆற்றொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகக் காரணமானான்.

    அவ்வூரில் புகழ் பெற்று விளங்கிய மூர்த்தி நாய‌னாருக்கும் கொடுமைகள் பல செய்தான். எனினும் அவர் சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
    அவ‌ர் செய்து வ‌ந்த‌ இறைத் தொண்டுக்கும் இடர்கள் பல செய்தான். பெருமான் திருப்பூச்சுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு சதி செய்தான். அப்படிச் செய்தால் அவ‌ர் ம‌ன‌ம் மாற‌லாம் என்றும் திட்ட‌மிட்டான்.  மதுரை முழுவதும் எங்கு தேடியலைந்தும் சந்தனக்கட்டை கிடைக்காமல் தம் உயிர் மூச்சான எம்பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்யும் பணிக்கு இடையூறு வந்துவிட்டதை எண்ணி நொந்து போனார். தொண்டுக்கு துணை நிற்க வேண்டிய மன்னனே இத்தகைய துன்பம் தருவது எத்தகைய கொடுமையான செயல்?

    நாள் முழுக்க அலைந்து திரிந்து மிகவும் சோர்வுடன் கோயிலுக்குத் திரும்பினார். மனம் மிகவும் கவலையுற்று கோயிலில் சந்தனம் அரைக்கும் கல்லின் அருகே நின்று கொண்டிருந்தார். கல்லைப் பார்த்தவர் அடுத்து சந்தனம் அரைக்கும் தன் கரங்களைப் பார்த்தார். அப்போது ‘எம்பெருமானே, சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை, ச‌ந்தனம் அரைக்கும் இந்தக் கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. தன் கரங்களையே சந்தனக் கட்டையாகக் கருதிச் சந்தனக் கல்லில் தன் முழங்கையை வைத்துத் தேய்த்தார். தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து உரைக்கத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் உரைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. சந்தனக் கல் முழுவதும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.  இத‌ற்குமேல் சொக்க‌நாத‌ரால் பொறுக்க‌ முடிய‌வில்லை.

    நட்டம் புரிவார் அணி நற்றிரு

      மெய்ப் பூச்சு இன்று

    முட்டும் பரிசு ஆயினும்

      தேய்க்கும் கைமுட்டாது என்று

    வட்டம் திகழ் பாறையின்

      வைத்து முழங்கை தேய்த்தார்

    கட்டும் புறந்தோல் நரம்பு

      என்பு கரைந்து தேய

    என்பார் இந்நிகழ்வை எடுத்துரைக்கும் கவிமொழியில், சேக்கிழார்  பெருமான்.

    கருங்கல்லும் கரையும் வண்ணம்  இரத்தம் கொட்ட, எலும்பு நொறுங்க, சதை கிழிந்து தொங்க மூர்த்தியார் செய்யும் செயல் கருணை வடிவான கண்ணுதல் பெருமானுக்கும் வானொலி வழி ஒலித்தார்.

    “மெய்யன்பனே, என்பால் கொண்ட மாறாத அன்பினால் இத்தகையக் காரியம் செய்யத் துணிந்தாயே. நிறுத்து உன் செயற்பாட்டை. உனக்குத் துன்பம் தந்தவன் வலிய கைப்பற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி புரிந்து, திருத்தொண்டும் புரிந்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக” என்று சிவபெருமான் அச‌ரீரியாக‌க் கூறினார். மூர்த்தி நாயனார் அதைக் கேட்டு கல்லில் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவருடைய கைகள் முன்போல் மாறின.  அவ்வடியார் மேனியும் ஒளிபெற்றது. சந்தனம் சொக்க‌நாத‌ர் கோயில் முழுவதும் மணத்தது. அவ்வடியாருக்குத் தீங்கு செய்த மன்னனோ அன்றிரவே மாண்டான். பொழுது விடிந்தது. மன்னருக்கு உரிய ஈமக்காரியங்கள் அமைச்சர்களால் நிறைவேற்றப்பட்டன. அடுத்து மன்னருக்கு உரிய இடம் அவருக்கு ஏதும் வாரிசுகள் இல்லாததால் வேறு ஒருவரால் நிரப்பப்பட வேண்டியதாகியது.

    அன்றைய நாட்களில் இப்படிப்பட்ட சூழலில் மன்னனைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கண்களைக் கட்டி அதன் துதிக்கையில் ஒரு மாலையை கொடுத்து விடுவர். யானை யார் கழுத்தில் மாலையைப் போட்டு அவனைத் தூக்கி தன்மீது அமர்த்திக்கொண்டு வருகிறதோ அவரே மன்னனாவார். அந்த மரபுப்படி யானை அலங்கரிக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, வலம் வரச் செய்தனர். வலம் வந்த யானையும் கோயிலில் ஒரு பகுதியில் நின்றிருந்த மூர்த்தியார் கழுத்தில் மாலையிட்டு அவரைத் தூக்கி தன் பிடரியில் அமர்த்தியது. மக்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. அமைச்சர்களும் அகமகிழ்ந்து மூர்த்தியாரை வணங்கி ஆட்சித் தலைமை ஏற்க வேண்டினர். அதற்கு மூர்த்தியாரும் திருநீறே திருமுழுக்காகவும், உருத்திராக்கமே அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க வேண்டும். அதற்கு உடன்பாடு என்றால் செய்யலாம் என்றார். அதற்கு அமைச்சர்களும், அறிஞர்களும் சான்றோர்களும் தங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே செயல்படலாம் என்றனர்.

    வையம் முறை செய்குவன்

      ஆகில் வயங்கு நீறே

    செய்யும் அபிடேகமும்

      ஆக செழுங்கலன்கள்

    ஐயன் அடையாளமும் ஆக

      அணிந்து தாங்கும்

    மொய் புன் சடைமாமுடியே

      முடி ஆவது என்றார். 

    அதன்படி மூர்த்தி நாயனாருக்கு மணிசூடப்பெற்றது. அவர்தம் ஆட்சியின் சின்னமாகத் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மூன்றும் திகழ்ந்தது. பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் திருநீறு உருத்திராக்கம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் பன்நெடுங்காலம் ஆட்சிபுரிந்து வையகம் காத்து மக்கள் மகிழ வாழ்ந்து எம்பெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

     

    திருமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மதுரையம்பதி எனும் மூர்த்தி நாயனார் பிறந்த இம்மண்ணின் பெருமையை மாணிக்கவாசகர், திருவாசகத்தில் எடுத்துரைப்பதைக் காணலாம்.

    பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

    பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,

    விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,

    கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை

    மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு

    புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!

    எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். “மதுரை மண் சுமந்த” – என்று மதுரை மண்ணின் பெருமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. வந்தியம்மை என்ற மூதாட்டிக்காகப் பெருமான் பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்ட தலம்.

    “மண் சுமந்த கூலி கொண்டு” – முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார்.

    கடம்பவனக் காட்டில் முளைத்தெழுந்த சொக்கலிங்கப் பெருமானை தேவர்கள் பூசை செய்ததனை ஒருநாள் இரவு வணிகன் ஒருவன் கண்டு அப்போது நாடாண்ட குலசேகரப் பாண்டியன் கேட்டு அக்கடம்பவனக் காட்டைத் திருத்தி கோயிலும், நகரமும் அமைத்தான். அப்பொழுது சிவபெருமான் தம் தலையிலிருந்த அமுதத்தைத் தெளித்து புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயர் உண்டாயிற்றாம். இந்தக் கடம்பவனம், மதுராபுரி, நான்மாடக்கோயில், திருவாலவாய் எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளது. மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற அருட்தலம். பொற்பலகை கொடுத்து இசை பாடவைத்து சொக்கலிங்கப் பெருமான் நீலகண்ட யாழ்ப்பாணருக்கு அருள் செய்த அருட்தலம். மங்கையர்கரசியார், நெடுமாறர், குலச்சிறையார் ஆகிய மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த சிவப்பதி.

    சந்தனக்காடு மலிந்த பொதியமலை தென்றலை கொடுத்து மகிழ்வு செய்யும் அழகிய நகரமும் இதுவே.

    சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்

    தாழ்வு இன்றி என்றும் தனி

      வாழ்வது அத் தையல் ஒப்பார்

    யாழின் மொழியில் குழல்

      இன்னிசையும் சுரும்பும்

    வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்

    சிவபெருமானுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல் மட்டுமே தமது சீரிய கடமை என்று சிவபக்தியில் திளைத்திருந்த மூர்த்திநாயனார் வாழ்ந்திருந்தார்.

    மும்மைப் புவனங்களின் மிக்கது

      அன்றே அம் மூதூர்

    மெய்ம்மைப் பொருளாந் தமிழ்

      நூலின் விளங்கு வாய்மை

    செம்மைப் பொருளுந்

      தருவார் திருஆலவாயில்

    எம்மைப் பவந் தீர்ப்பவர்

      சங்கம் இருந்தது என்றால்.

    சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். எம்பெருமானின் திருமேனி குளிர்வது போன்று அனைத்து உயிர்களும் குளிர்விப்பதற்கு ஒப்பாகும். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரசனம், கத்தூரி பச்சைக் கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கொட்டி இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் சிவலோகத்தில் இன்புற்றிருக்கலாம்.

    சிவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்கிறது சிவாகமம்.

    சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் – சேர்த்தியுளத் தாதரவு செய்து.”

    “கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் – தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து.”

    சோமவார விரத கற்பத்தினும்,

     “சுகந்த கந்தஞ் சுலவிய லேபன

    முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ 

    ரிகந்து பாவ மிமையவர் கோடியாண் 

    டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்.”

    எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காணலாம்.

    இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார். இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டை பெற முடியாத இடர் வந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் நாடாளும் அரசராய் பொறுப்பேற்றபோதும் துளியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு அனைத்துமாவார் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று தொண்டு செய்த மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணரலாம்.

    சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர் என்பதை தெளிவுற மொழியும் இந்நாயனார் புராணம்.

    காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் 

    கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன்

    மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி 

    மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்

    எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணரலாம். சிவனடியாருக்கு இடுக்கண் செய்த அந்த மன்னனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிவாதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையாமல் இருக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறது. இதனை, உருத்திராக்கம்

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்

    காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்

    வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா

     மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே

    என்றார் திருநாவுக்கரசு நாயனார்.

    இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவபெருமானின் ஆணைக்கு அடிபணிந்து, அவரது திருவருள் வழி நின்று, தமது ஆளுமையால் உலகம் உய்யச் செய்யும் எண்ணத்தால் இசைந்தருளினார்.

    கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே 

    லண்டம் பெறினு மதுவேண்டேன் – றுண்டஞ்சேர்

     விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் 

    கண்ணாளா வீதென் கருத்து

    என்றார் காரைக்காலம்மையார்.

    அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் 

    பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ்

    சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா 

    மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே

    என்றார் நம்பியாண்டார் நம்பி.

    மெய்யுணர்வு உடையார்க்கு திருநீறும், சாந்தமும், உருத்திராக்கமும் ஆபரணமாகும் என்பதை விளங்கச் செய்தவர் மூர்த்தி நாயனார். இதன் பெருமையை,

     ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த

    பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை

    சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி

    நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே

    என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணரலாம்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 4

    ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு – 4

    ஷெல்லி கவிதை
    தமிழாக்கம் – சக்தி சக்திதாசன்

    Lament

    O World! O Life! O Time!
    On whose last steps I climb,
    Trembling at that where I had stood before;
    When will return the glory of your prime?
    No more -Oh, never more!

    Out of the day and night
    A joy has taken flight:
    Fresh spring, and summer, and winter hoar
    Move my faint heart with grief, but with delight
    No more -Oh, never more!

    ஒரு துயரம் (Lament)

    ஓ உலகே! ஓ வாழ்வே! ஓ காலமே!
    உன் கடைசிப் படிகளில் நான் ஏறுகிறேன்,
    நான் முன்னர் நின்ற இடத்தில் இப்போது நடுங்குகிறேன்;
    உன் பொற்காலம் திரும்ப வருவது எப்போது?
    திரும்ப வராது – ஓ, ஒருபோதும் வராது!
    பகலிலிருந்தும் இரவிலிருந்தும்
    ஓர் ஆனந்தம் பறந்துசென்றுவிட்டது:
    புதிய வசந்தமும், கோடையும், உறைந்த குளிரும்
    என் சோர்ந்த மனதை துக்கத்தால் அசைக்கின்றன, ஆனால் இன்பத்தால்
    திரும்ப வராது – ஓ, ஒருபோதும் வராது!

    இது கவிஞர் பெர்சி பைஷி ஷெல்லி (Percy Bysshe Shelley) எழுதிய ‘துயரம்’ (A Lament) என்ற மிகச் சிறந்த கவிதை.

    இழப்பின் துயரையும், வாழ்வின் அற்பநிலையையும் ஆழமாகப் பேசும் ஒரு உணர்ச்சிகரமான படைப்பாகும்.

    துயரம்: வாழ்வின் பொற்காலம் தொலைந்த ஒரு கவிஞனின் புலம்பல்

    பெர்சி பைஷி ஷெல்லியின் ‘துயரம்’ (A Lament) என்ற இந்தக் குறுங்கவிதை, ஒரு தனி மனிதனின் ஆழ்ந்த மனவேதனையை, உலகம், வாழ்க்கை, காலம் போன்ற பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்புபடுத்திப் பேசும் ஓர் உன்னதமான படைப்பாகும்.

    இது அவரது பிற்கால கவிதைகளில் வெளிப்படும் விரக்தி மற்றும் தனிமையின் குரலாக ஒலிக்கிறது.

    முதல் பத்திபிரபஞ்சத்திடம் ஒரு கேள்வி

    கவிதையின் தொடக்கமே ஒரு மாபெரும் புலம்பலாக இருக்கிறது.

    “ஓ உலகே! ஓ வாழ்வே! ஓ காலமே!”

    கவிஞர் தன் வேதனையைத் தாங்க முடியாமல், தன்னைச் சுற்றியுள்ள மிகப் பெரிய சக்திகளை நோக்கி நேரடியாக உரையாடுகிறார்.

    “உன் கடைசிப் படிகளில் நான் ஏறுகிறேன், நான் முன்னர் நின்ற இடத்தில் இப்போது நடுங்குகிறேன்”

    என்ற வரிகள், அவர் முதுமையின் விளிம்பில் நிற்கிறார் என்பதையும், வாழ்க்கையின் ஆற்றல் குறைந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

    முன்பு துணிச்சலுடன், உறுதியாக நின்ற இடத்தில் இன்று நடுங்கி நிற்கிறார்.

    இது உடல் பலவீனத்தையோ அல்லது மனதின் நம்பிக்கையின்மையையோ குறிக்கிறது.

    அவரது முக்கிய கேள்வி “உன் பொற்காலம் திரும்ப வருவது எப்போது?” இது உலகின் செழுமையைப் பற்றிக் கேட்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அவர் தன் வாழ்வின் சிறந்த நாட்களின் (prime) இழந்த இன்பத்தையும், மகிழ்ச்சியையும் குறித்தே கேட்கிறார்.

    இதற்குப் பதிலாய் வரும் வரிகள்: “திரும்ப வராது – ஓ, ஒருபோதும் வராது!” (No more – Oh, never more!) — இதுவே கவிதையின் மைய நாதம்.

    இந்த முழுமையற்ற, திரும்ப முடியாத இழப்பின் வலியே கவிதை முழுவதும் வியாபித்துள்ளது.

    இரண்டாம் பத்தி இயற்கையும் இழந்த இன்பமும்

    இரண்டாம் பத்தியில், கவிஞர் இந்த இழப்பை இயற்கையின் மூலம் விளக்குகிறார்.

    “பகலிலிருந்தும் இரவிலிருந்தும் ஓர் ஆனந்தம் பறந்துசென்றுவிட்டது”

    ஒரு பறவை போலவோ, அல்லது தற்காலிகமான ஒளி போலவோ, மகிழ்ச்சி நிரந்தரமாக மறைந்துவிட்டது.

    அவரது இன்பம் இனி நாள் முழுவதும், இரவு முழுவதும் திரும்ப வரப்போவதில்லை.

    “புதிய வசந்தமும், கோடையும், உறைந்த குளிரும்”

    வசந்தம், கோடை, குளிர் (Spring, Summer, and Winter hoar) என இயற்கையின் மூன்று பருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

    இந்தப் பருவங்கள் மாறாமல், சுழற்சி முறையில் வந்தாலும், அவை கவிஞருக்கு அளிக்கும் உணர்வு மட்டுமே மாறிவிட்டது.

    அனைத்துப் பருவங்களின் அழகும், பொலிவும்

    “என் சோர்ந்த மனதை துக்கத்தால் அசைக்கின்றன, ஆனால் இன்பத்தால் திரும்ப வராது – ஓ, ஒருபோதும் வராது!”

    என்ற வரிகள் மூலம், இழந்த மகிழ்ச்சியை நினைவுபடுத்துவதாலேயே அவை இப்போது துயரத்தை மட்டுமே அளிக்கின்றன என்கிறார்.

    இயற்கையின் பேரழகு அவருக்கு அமைதியை அளிக்காமல், துயரத்தை மட்டுமே கிளறுகிறது.

    கவிதையின் முக்கியத்துவம்

    ஷெல்லியின் இந்தக் கவிதை, வெறும் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல.

    இது எல்லாக் கால மனிதர்களும் உணரும் ஒரு உணர்வு.

    இளமையின் இழப்பு உடல் மற்றும் மனதின் உற்சாகம் குறைந்துபோனதின் வேதனை.

    நம்பிக்கையின் சிதைவு வாழ்க்கையில் இனி ஒருபோதும் மகிழ்ச்சி பொங்காது என்ற ஆழமான விரக்தி.

    காலத்தின் சக்தி காலம் அனைத்தையும் அழித்துவிடும் என்ற இயலாமை உணர்வு.

    மிகக் குறுகிய வரிகளுக்குள், ஷெல்லி இழப்பின் மாபெரும் துயரத்தை அழுத்தமான வார்த்தைத் தேர்வுகளாலும், உணர்ச்சிப்பூர்வமான கேள்விகளாலும் நமக்குள் கடத்திவிடுகிறார்.

    அவர் தன் வாழ்க்கையின் ‘பொற்காலம்’ மீண்டு வராது என்பதை இந்த எளிய, சக்தி வாய்ந்த கவிதை மூலம் அழியாப் பதிவாக்கியுள்ளார்.

    Share
  • முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடு விளக்கம்

    முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கூரம் கிராமத்து தர்ம கர்த்தாவிடம் இருந்து Hultzsch என்னும் தலைமை தொல்லெழுத்தாளரால் இந்த மெல்லிய செப்பேட்டு தொகுதி பெறப்பட்டது. கூரம் ஆகிய இந்த கிராமம் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 11.4 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்பூருக்கு முன்னதாக அமைந்துள்ளது. மொத்தம் 95 வரிகள் கொண்ட  7 மெல்லிய செப்பேடுகளின் 14 பக்கங்களில்  57 முதல் 88 ஆம் வரிகள் வரை தமிழில் உள்ள இவை கி.பி. 679 இல் பல்லவ வேந்தன் முதலாம் பரமேஸ்வர வர்மன் எடுப்பித்த கோவில் விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் பற்றி விவரிக்கிறது. இதன் முதல் 4 1/2 பக்கங்கள் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் பல்லவர் முன்னோர்கள் தொடக்கம் கூறப்படுகிறது. பரமேஸ்வர வர்மனின் பாட்டன் முதலாம் நரசிம்ம வர்மன் பெற்ற வெற்றிகளை 12 ஆம் வரி விவரிக்கிறது. 17 ஆம் வரி இவன் தந்தை இரண்டாம் மகேந்திர வர்மன் பற்றி கூறுகிறது. அதே 17 ஆம் வரி தான் சாதிச் சட்டங்கள் அதன்  நடைமுறைகளை பல்லவன் முதலாம் பரமேஸ்வரன் வழக்காற்று படுத்தினான் என்கிறது. தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 7, எண்  865 இல் செக்கில் எண்ணெய் பிழிவோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நடைமுறை என்ன என்பதை காஞ்சி மாநகர் செப்பேட்டின் படி  முடிவு எடுத்த சித்திரமேழி சாசனம் என திருக்கோவிலூர் வட்டம் கீழூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் தென் சுவர் கல்வெட்டு ஒன்று குறிப்பது இந்த செய்தியை  தானோ? ஆனால் பல்லவர் செய்த சட்டத்தை சோழர் மீது ஏற்றி சோழரை தூற்றுகின்றனரே திராவிடத்தார்!! தலித்தியர் இந்து மதம், பிராமணர் தான் சாதி உண்டாகக் காரணம் என்கின்றனரே!! அந்த காஞ்சிநகர் செப்பேடும் கிடைத்தால் பொய் உரைகள் ஒழித்து வரலாறு திருத்தி எழுதப்படும். இதன் 19 ஆம் வரி  முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றி உரைக்கிறது. 23 ஆம் வரி அவன் பாதாமி சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்யனையும் அவன் படைகளையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும் விக்கிரமாதித்தன் கிழிந்த ஆடையோடு நின்றான் என்கிறது. இதன் 47 ஆம் வரியில் இந்த வெற்றியின் நினைவாகவோ என்னவோ  நால் வேதம் கற்ற 108 குடும்பங்களை உடைய  கிராமமாம் கூரத்து இறைவன் பினாகபாணிக்கு (சிவன்) இவன் செய்த நிவந்தம் பற்றி குறிக்கப்படுகிறது. இதன் நிறைவேற்று ஆணையாளர்  உத்தரகாரணிகையை சேர்ந்த மஹாசேன தத்தர்  ஆவர் என்கிறது 49 ஆவது வரி. இனி செப்பேட்டின் தமிழ் பகுதியை மட்டும் காண்போம். 

    “ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரமும் ஞம்மனம் பாக்கமும் – – – (ஞங்கணத)  – – ட  விச்சா விநீதப் பல்லவரசன் விலைக்காணங்  கெயிக் கொடுத்து _ _ சிராவணே செய்து ஆயிரத்திரு நூற்றுக் குழிப்படியால் விற்றுக் கொண்ட நிலம் தளி எடுப்பதற்கு. ஓடு சுடக் கொண்ட நிலம் தலேப்பாடகத்துள் சூளேமேட்டுப் பட்டியும் ஊருள் மண்டகம் எடுத்த நிலத்தோடுங் கூட அயிந்தேகால் பட்டி நிலமும் விற்றுக்கொண்டு விச்சா விநீத பல்லவ பரமேச்சுரகரம் எடுத்து, ஏரி தோண்டி, இத்தளி  வழிபாடு செயிவார்க்கு  இருக்கும் மநேயும் மநேப்படப்பும் வகுத்து இதநுள் மிக்க நிலம் ஒழுக்கவிக்கு விளே நிலமாகவும்  இன் நிலத்துக்கு கீழ்பாலெல்லை மூதுகாட்டு வழியின் மேற்கும். தென் பாலெல்லை ஊர் புகு வழியின் வடக்கும். மேல் பாலெல்லை  ஊர் புகு வழி நின்றும் வடக்கு நோக்கி நாட்டுக்காலுக்கே போன வழியின் கிழக்கும். வட பாலெல்லை நாட்டுக்காலிந் தெற்கும். இன் நான்கெல்லை அகத்தும் தளியும் எரியும் வழிபாடு செயிவார்க்கு மநையும்  மநைப் படப்புன் நீக்கி மிக்க நிலமும் சூளைமேட்டுப்  பட்டியும் ஒழுக்கவிக்கு விளை நிலமாக கொடுத்தது . இத் தளிக்கு வேண்டுந்  தேவகரும நவகருமஞ் செயிவதற்கும்  இருபதின்மர் சதுர்ப்பேதிகளுக்குப் பிரமதேயங் கொடுப்பதற்கும் மணயிற் கோட்டத்துப் பன்மா நாட்டுப் பரமேச்சுர மங்கலத்துள் அகப்பட்ட வளேயில் சுற்று நிலம்  அத்தநையும் இருபத்தெயிந்து பங்காயி இதனுள் மூன்று  பங்கும் கூரத்துத் தளிக்கு தேவகரும நவகருமஞ்  செய்வதாகவும் மண்டகத்துக்கு தண்ணீருக்குந்  தீக்கும் ஒரு பங்காகவும், இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும் நின்ற இருபது பங்கும் இருபதின்மர் சதுர்ப் பேதிகளுக்கு பிரமதேயமாக கொடுத்து. இவ்வூர் மநையும் மநைப் படப்பும்  ஊறாள்ச்சியும் செக்கும் தறியும் கூலமும் தரமும் கத்திக் காணமும் மற்றும் பொதுவிநால்லுள்ள தெல்லாம் இப்பங்கு இருபத்தைன்தின்  வழியாலே பங்கிட்டுண்பார்ராகவும்.  இவ்வூர் பரமேச்சுர தடாகத்துக்கு பாலாற்று நின்றும் தோண்டின பெரும்பிடுகு காலிந் புழுதிபாடும் நீர்ரீந்த வழியாலே தலேவாயும் தலேப்பேழையும்  ஊற்றுக் காலும் தோண்டின நிலமெல்லாம் பரமேசுவர மங்கலத்து நிலமாக. இக்காலுள் குற்றேத்த _ _ _ மையும் நாடாழ்ச்சியுன்  நாட்டுப்பபண்ணிக்கெயும் _ _  தானங் கொடுத்த மூன்று பங்குநுளும்  ஒன்றரை பங்கு _ _ நார்  அனந்த சிவ ஆசாரியர் மக்கள் மக்கள்  மருமக்கள் _ _ _ புறம் கொண்டு வழிபாடு செயிது பலி போசன _ _ ம் கொண்டு புல்ல சருமர் மக்கள் மக்கள் வகருமமும் இவ்விருவர் மக்கள் மக்கள் _ _ _ தேவதமாகா நின்ற ஸப்பபட்டார கருங்கா _ _ க்காத்து கொடுக்க.”     

    வேதனை விசாரம் > விச்சா விநீத – கவலை களையும்; Vi-nita, mfn. led or taken away, removed Sec . ; stretched, extended (Moniter williams dictionary), சிராவண  – பெருமைப்படுத்தியது, காணம் – நாணயம்; குழி – 877; தலைபாடகம் – வேளாண் நிலம்; மூதுகாடு  – பிணக்காடு, சாக்காடு; அகரம் – பிராமண குடியிருப்பு, அக்ரஹாரம்; வழிபாடு – பூசனை; படப்பு – வீட்டுத்தோட்டம், கொல்லைப் புறம்; ஒழுக்கவி – படையல் சோற்று உணவு; நவகரும – புதுப்பித்தல்; வளே – சூழப்பட்ட இடம்; தீ – தீவட்டி;  ஊரால்சி – ஊராட்சி வரி; தரம் – நிலவரி; கத்தி – வெட்டு கத்திகள் வரி ; ஈந்த – பங்கிட்டு; தலைவாய் – வாய்க்கால் தொடங்கும் நிலம்; தலை பேழை – வாய்க்கால் முடியும் கடைமடை; ஊற்றுக்கால் – வயல் முதலியவைகளில் நீர்வடியும் கால்வாய், water channel in fields;          

    விளக்கம்: ஊற்றுக்காட்டுக்  கோட்டத்தில் அடங்கிய நீர்வேளூர் நாட்டின் கூரமும் நம்மனம் பாக்கமும் என்பதோடு சிதைந்துள்ளது. இது அந்நாளைய கூரம் கிராமத்தின் இருப்பிடத்தை குறிக்கிறது. கவலைகளையும் பல்லவ அரசன் விலைப் பணத்தை கையில் கொடுத்து ஆயிரத்து இருநூறு குழி நிலம் வாங்கிக் கொண்டார். இது கோவில் (தளி) எழுப்புவதற்கு. ஓடு, செங்கல் சுடுவதற்கு வாங்கிய வேளாண் நிலம் சூளைமேட்டுப் பட்டிக்காகவும் ஊரில் மண்டபம் கட்டுவிக்க வாங்கிய நிலம் என்று ஐந்தேகால் பட்டி நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. விற்றவர் யார் என்ற குறிப்பு இல்லை. இந்நிலத்தை கொண்டு விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர அக்ரஹாரம் அமைக்க ஏரி தோண்டுவித்து, பூசனை செய் அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லைப்புறமும் வகுத்து ஒதுக்கி பின் இதில் எஞ்சிய நிலத்தை படையல் சோற்றுக்கு வேண்டிய கூலங்களை விளைவிக்கும் நிலமாக விடப்பட்டது. இந்த நிலத்திற்கு கிழக்கு எல்லை சுடுகாட்டிற்கு மேற்காகவும் தென்பகுதி எல்லை ஊருள் நுழையும் வழிக்கு வடக்கிலும் மேற்குபகுதி எல்லை ஊர் புகும் வழியில் இருந்து வடக்காக ஊர் வாய்க்காலுக்கு போகும் வழிக்கு கிழக்கிலும் வடபகுதி எல்லை ஊர் வாய்க்காலுக்கு தெற்கிலும் ஆக இந்த நான்கு எல்லைக்கு உள்ளே அடங்கிய நிலத்தில் கோவில், ஏரி, அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லையும் போக எஞ்சிய நிலமும் தற்காலிகமாக சூளை மேடாக (furnace) உள்ள நிலமும் வேலை முடிந்த பின் படையல் சோற்று கூலத்தை விளைக்கும் நிலமாக்குக என்று கொடுக்கப்பட்டது. 

    இக்கோவிலுக்கு தேவையான தெய்வ காரியம், புதுப்பித்தல் வினைகளுக்கும் நால் வேதம் கற்ற இருபது பிராமணருக்கு பிரமதேய நிலம் கொடுப்பதற்கு கூரம் அருகில் 4 கி.மீ வடகிழக்கில் இற்றை மணவூரான மணவில் கோட்டத்தில் அடங்கிய பன்மா நாட்டின் பரமேஸ்வர மங்கலத்தின் ஊர் வட்டத்தில் சுற்றி இருந்த அத்தனை நிலத்தையும் இருபத்தைந்து பாகமாக பிரித்து அதில் மூன்று பங்கை கூரத்தின் தெய்வ கருமம், புதுப்பித்தல் வினை செய்வதற்கும் மண்டபத்தில் தண்ணீர் இடவும், தீவட்டி கொளுத்தி வைக்கவும் ஒரு பங்காகவும் அதில் மகாபாரத சொற்பொழிவு நடத்த ஒரு பங்கும் என்று ஐந்து பங்கு ஒதுக்கி எஞ்சிய இருபது பங்கை நால்வேதம் கற்ற பிராமணர் இருபது பேருக்கு கொடுக்கப்பட்டது. பரமேஸ்வர மங்கல வீடு, வீட்டுக் கொல்லை வரி, ஊராட்சி வரி, செக்கு வரி, தறி வரி, கூல வரி, செய்யப்படும் கத்திகள் வரி, நிலவரி, மற்றபடி பொதுவில் உள்ள எல்லா வகை வரி வருவாய்களும் இந்த இருபத்தைந்து பங்கு பிரிக்கப்பட்ட விதத்திலேயே பங்கிட்டு (சம்பளமாக) உண்ணக் கடவது. இந்த ஊரின் பரமேசுவர ஏரிக்கு பாலாற்றில் இருந்து தோண்டி கொணரப்பட்ட பெரும்பிடுகு என்னும் கால்வாயின் புழுதி புரளும் நீர் பங்கிட்டு முறையில் வாய்க்கால் தொடக்கம் முதல் வாய்க்கால் பின்னடையும் வரை நீர்வடியும் வயல் கால் தோண்டிய நிலம் எல்லாம் இனி பரமேஸ்வர மங்கலத்து நிலமாக அறியப்படட்டும். தானம் கொடுத்த மூன்று பங்குள் ஒன்றரை பங்கு அனந்த சிவாசாரியார் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இன்னொரு ஒன்றரை பங்கு பூசனை செய்து பலி சோறு உரிமையும் கொண்டு புல்ல சருமர் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இதன்மேல் வரும் எழுத்து வரிகள் அதிகம் சிதைந்து விட்டன பொருள் அறிய முடியவில்லை.      

    பின் குறிப்பு: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் வித்யா வினீத என தவறாக கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கல்வியை களைந்த என்ற தவறான பொருள் விளைந்துவிடும். எனவே இது பல்லவ வேந்தன் பரமேஸ்வர வர்மனை புகழ்ந்துரைக்கும் ஒரு பட்டம் ஆகும். மேலும் இதை பரமேஸ்வர வர்மனுக்கு அடங்கிய சிற்றரசனின் பெயர் என்றும் பிழைபட விளக்கப்பட்டுள்ளது. அப்படி யாரும் இல்லை, அது நேரடியாக பல்லவ வேந்தனைத் தான் குறிக்கிறது என்பது மீண்டும் இதே சொற் பயன்பாட்டில் பரமேஸ்வரனின் பெயர் இடம் பெறுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வூர் ஏற்கனவே இருந்துள்ளது, அதில் 108 பிராமண குடும்பங்கள் இருந்துள்ளன. எனவே சிலர் கருதுவது போல புதிதாக நகரம் ஏதும் இங்கு அமைக்கப்படவில்லை. மேலும் தளி என்று கோவில் கட்டுதலையும் ஓடு சுடும் சூளைமேடும் குறிக்கப்படுவதில் இருந்து இது மங்களூர், கேரள பாணியில் ஓடு வேய்ந்த கோவிலாக இருக்க வேண்டும் போல உணர முடிகிறது. எனவே இது பாறையால் கட்டப்படும் கற்றளி அல்ல. அப்படி குறிக்கப்படவும் இல்லை. சிலர் இதை தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்று தவறாக குறித்துள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இக்கோவிலில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் காலம் முதல் தோன்றுவதால் இக்கோவில் அவன் காலத்தை ஒட்டி கற்றளியாக ஆக்கப் பட்டிருக்கலாம். காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் இக்கோவிலுக்கு பின்பு தான் கட்டப்பட்டுள்ளன எனும் போது கூரம் பரமேஸ்வரன் கோவில் ஒரு செங்கல், சுதைக்  கோவிலாகவே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்வதே சரி.

    பண்டு ஒரு பொருளை விலைக்கு கொடுப்பதற்கும் விலை, விற்று என்ற சொல் தான் பயன்பட்டுள்ளது வாங்குவதற்கும் அதே சொல் தான் பயன்பட்டுள்ளது என்று அறிக. செப்பேட்டில் கெயி, தலெ, வளே ஆகிய பேச்சு வழக்குச் சொற்கள் கருநாடக தாக்கம் பெற்றிருக்குமோ?  தக்கோலம் அருகில் உருவாகும் கூவம் பண்டு பாலாறு எனப்பட்டது. அதில் இருந்து பெரும்பிடுகு கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் நீண்டால் தான் இந்த பரமேஸ்வர மங்கலத்திற்கு நீர் கொண்டு வர முடியும் என்று உணர்க. கூரத்தில் நீர் பாசன வசதி இல்லாததால் இந்த பிராமணருக்கு குறுக்கு வழியாக வடகிழக்கில் 4 கி.மீ தொலைவில் இருந்த பரமேஸ்வர மங்கலத்தில் விளைநிலங்கள் பிரமதேயமாக கொடுக்கப்பட்டனவோ? அல்லது ஏற்கனவே கூரத்தில் 108 பிராமண குடும்பங்கள் இருப்பதால் அங்கே ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த நேரிடும் என்பதாலோ இங்கு கொடுக்கப்பட்டது? இந்த செப்பேடு பல்லவர் வரலாற்று பேழையாக மட்டுமல்லாமல் பரமேஸ்வர வர்மன் வெற்றிச் சிறப்பையும் கூறுவதாக இருப்பதோடு பல்லவ வேந்தர் கோவில் மற்றும் பிராமணரை  போற்றியதற்கும் சான்றாக உள்ளது.

    பார்வை நூல்: SII VOL I, NO 151, pg 144 – 154  

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 39

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 39

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வலங்கைமான் பெற்ற வரம்!

    அனைவருக்கும் வணக்கம்!

    படுக்கையில் கிடக்கும் இந்த முதியவனுக்குப் பாசத் தொடர்பெல்லாம் முகநூல்தான். சில வேளைகளில் நூல்களைத் தடவிப் பார்ப்பதுண்டு, கண்ணொளி மங்கியதால் கருத்தொளி மங்காமல் போவதற்கான சிறு முயற்சி. . ஒரு அற்புதமான தகவல் தொடர்புச் சாதனமான முகநூலை மூளை அழுகியவர்களும் அறிவின் முனைமழுங்கிப் போனவர்களும் ஊழல் பெருச்சாளிகளும் உதவாக்கரை அரசியல்வாதிகளும் உழைக்காத ஒருவனை உயர்த்திவிடும் திரைப்பட ரசிகர்களும் இயல்பு மாறிய இருபால் இளைஞர் சமுதாயத்தினரும் எப்படியெல்லாம் சிதைத்தும் சீரழித்தும் வருகின்றனர் என்பதை நித்தமும் காணுகின்றேன். கவலைப்படுகின்றேன். நெஞ்சம் பொறுக்கவில்லை. “என்னை மனிதனாக அங்கீகாரம் செய்த இந்த மானுடச் சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிச் செயல்படும் உத்தமர்கள் சிலர் இல்லாமல் இல்லை. அவருள் ஒருவர்தான் வலங்கைமான் திரு வேல்முருகன் அவர்கள். மறைந்த கவிஞர் கம்பதாசனுக்கு நெருங்கிய உறவினர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு, தனது பணிக்குச் சற்றும் தொடர்பில்லாத தமிழிலக்கியம், தமிழ்க்கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் முதலியனவற்றைப் படைத்து வருகிறார். விருதளித்துப் பாராட்;டும் விழாக்கள், பரிசு நல்கி ஊக்குவிக்கும் பாங்கு ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்றவர் இவர். இவர் படைப்புத் தொழிலாலும சிறந்தவர். நாளும் படிக்கவும் தெரிந்தவர். அப்படி அவர் படித்துப் பதிவிட்ட சில பாக்களின் சிறப்பை நான் உணர்ந்த வண்ணம் பதிவிட்டிருக்கிறேன். பாடல்களை எழுதியவர் வேறாயினும் அவற்றை இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கும் உண்டு என்பதால் ;இந்தக் கட்டுரை ஒரு திறனாய்வாகவும் ஒரு பாராட்டுப் பத்திரமாகவும் வடிவமைக்கப்படுகிறது.

    முகம் மறைத்த முகநூல்

    வணக்கத்திற்குரிய உ.வே.சா. சொல்லுவார். “நான் கொட்டுகிற நெல் மணிகளைக் கண்டு மகிழ்வதில்லை. ஒரு மூட்டை உமியில் ஒரு நெல் மணி கிடைக்காதா என்ற ஏக்கந்தான் எனக்கு வாழ்வு!” என்று.

    திருவள்ளுவர் சொல்லுவார். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பெபாருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று

    “எண்பது வயது நிரம்பிய இந்த அந்திமக் காலத்தில் படிக்க இயலுk; வண்ணம் என்னை வைததிருக்கிறானே?” என்பதுதான் இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றி!.

    அப்படிப் பார்த்துப் படித்துச் சுவைக்கின்ற சிலவற்றை அன்பர்களின் பார்வைக்கு அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று

    தஞ்சைத் தமிழ்; மன்றத் தலைவராகிய அன்பர் திரு வேல்முருகன் அண்மையில் ஒரு பதிவிட்டிருந்தார். அதனைப் பதிவு என்று சொல்வதைவிட இரண்டு வைரக்கற்களை முகநூல் சந்தையில் கடைவிரித்தார் என்றே சொல்லலாம்.

    காரணம் முகநூல் இன்று சந்தைக்கடை ஆகி வருகிறது என்பதில்லை. சந்தைக் கடையாகவே மாறிப்போனது. இது பற்றிக் கட்டுரையின் முந்தைய பகுதியில் நான் குறிப்பிட்டுள்ளேன்!

    முகநூல்…………..

    சுய அரிப்புக்களைத் தீர்த்துக் கொள்ளவும்,
    வஞ்சப் புகழ்ச்சி வாசகங்களுக்காகவும்,
    அருவெறுப்பான சொல்லாடல்களுக்காகவும்,
    போலிப் புகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதற்காகவும்
    வெற்றுச் சொல் எம்பல்களைக் கவிதை என்னும் மோடிமஸ்தான் வேலை செய்வதற்காகவும் ஒரு வடிகாலாகப் போய்விட்டது.

    சென்ற நூற்றாண்டில் முகநூல் போன்ற அறிவியல் சாதனங்கள் வந்திருக்குமேயானால் ஒவ்வொரு துறையும் எங்கோ போயிருக்கும். தமிழும் எங்கோ போயிருக்கும்.

    இன்று அழுகிப்போன தமிழ்ச் சமுதாயத்தில் போலிகளின் கையில் அது சிக்கிக் கொண்டிருக்கிறது,

    இதுபோக, அன்பர் திரு வேல்முருகனோடு நான் பல தளங்களில் முரண்படுகிறவன். யாப்பே கவிதை என்னும் மயக்க நிலைக்கு ஆளாகாமல் இருந்திருந்தால் அவருடைய

    1. கவிப் பேராற்றலுக்கும்
    2. தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் தன்னலமற்ற உயரிய பண்புக்கும்,
    3. நிர்வாகத் திறனுக்கும்
    4. ஆளுமைக்கும்,
    5. சகிப்புத் தன்மைக்கும்
    6. பொறுமைக்கும்
    7. அனைவரையும் அரவணைக்கும் பண்பிற்கும்
    8. எதனையும் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் அறிவியல் அணுகுமுறைக்கும்

    ஒட்டு மொத்த தமிழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழ்க்கவிதை உலகில் பெற்றிருப்பார்.

    என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! கவியரங்கங்களோடு நம் கவிதைக் கனவு முடிந்து போனது என்னைப் பொருத்தவரையில் ஒரு வருத்தமான சேதியே!

    இந்தப் பதிவுக்காக அவரைப் பற்றிச் சில சொன்னேன்.! அவ்வளவுதான்! அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்வாரோ என்றெல்லாம் நான் கவனிப்பதும் இல்லை! கவலைப்படுவதுமில்லை!

    இதில் மட்டும் நான் கண்ணதாசன்!

    வேல்முருகன் பதிவிட்ட இரண்டு பாடல்கள்

    அந்தப் பதிவில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார். அருமையான ஒப்பீடு! அவருள் மறைந்து கிடக்கும் ஒப்பியல் நோக்கினை வெளிடுத்துவதாய் அது அமைந்துள்ளது

    “நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.”

    என்னும் ஔவையார் பாடலையும்

    தண்டாமரையின் உடன் பிறந்தும்
    தண்தேன் நுகரா மண்டூகம்!
    வண்டோ கானத்து இடைஇருந்து
    வந்தே கமல மதுவுண்ணும்!
    பண்டே பழகி இருந்தாலும்
    அறியார் புல்லோர் நல்லோரைக்
    கண்டே களித்தங்கு உறவாடித்
    தம்மில் கலப்பார் கற்றாரே.!

    என்னும் விவேக சிந்தாமணி பாடலையும் அவர் இணைத்து மீள்பதிவாக இட்டிருக்கிறார். எந்த மனநிலையில் இவற்றைப் பதிப்பித்தார் என்பது எனக்குத் தெரியாது.
    விவேக சிந்தாமணி பாடலில் முரண்கள் அழகூட்டும் திறன் வியக்கத்தக்கது. தாமரைக்கு அடியில் வாழும் தவளைக்குத் தெரியவில்லை அதன் மணமும் தேனும். ஆனால் காட்டின் நடுவே எங்கோ ஏதேதோ மலர்களுக்கிடையே ரீங்காராமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுக்குத் தெரிகிறது குளத்துப் பூ அருமை!. என்ன அருமையான சிந்தனை?
    தாமரையின் மணம் அறியாததால் தண் தேன் நுகரா மண்டூகம் என்று வாளா எழுதிய ஆசிரியர் அரிதான கற்றவர்களைக் காணும் பேறு அரிதாகப் பெற்றமையின் அவர்களின் அந்தச் சந்திப்பைப் படிப்படியாக விளக்குகிறார்.

    கற்றார்கள் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பழகுவார்களாம்? இப்படிப் பழகுவார்களாம்.
    கண்டே களித்தங்கு உறவாடித்
    தம்மில் கலப்பார் கற்றாரே.!

    கவிதையில் தேவையில்லாத ஒரு சொல் கூட இடம் பெறக் கூடாது, பெற்றால் அது கவிதையாகாது.
    1. கற்றவர்கள் முதலில் கண்ணால் காண்பார்களாம்
    2. அடுத்து மனத்தால் களிப்பார்களாம்
    3. நட்பு உறவாகுமாம். உறவுக் கருவியாகக் கல்வி பயன்படுமாம்.
    4. ஒருவர் மற்றவரில் ஒன்று கலந்து விடுவார்களாம்.

    ‘கலந்த அன்பாகி’ என்பார் மணிவாசகப் பெருமான் இவர்களும் கலந்து விடுவார்களாம். இது கற்றாரின் தனிச்சிறப்பாம்.

    பல நாள்களுக்குப் பிறகு இன்று மாலை நான் கணிப்பொறியை இயக்கலாம் என்று நினைத்துத் திறந்தபோது என் கண்ணில் பட்டவை இந்தப் பாடல்களே!
    ஒரு பெரிய இலக்கிய உத்தியை இந்தப் பாடல்கள் எனக்குணர்த்துவதாய் அறிந்தேன். அறிந்ததை இங்கே பதிவு செய்கிறேன்.

    கற்றாரின் பேராளுமையையும் பண்புநலன்களையும் உவம அளவையால் விளக்குகின்ற பாடல்கள் இவை. இந்த இயல்பு பற்றியே திரு வேல்முருகன் ஒத்த இயல்பறிந்து பதிவிட்டிருக்கிறார்.

    என் சிந்தனையைத் தூண்டியது ஔவை பாடலின் சொல்லாட்சியும் சிந்தனையும்!
    புறநானூற்றில் ஒரு பாட்டு. அனைவருக்கும் தெரிந்த பாடல்தான்!

    “உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும், ‘இனிது’ எனத்
    தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
    துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
    புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
    உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
    அன்ன மாட்சி அனைய ராகித்,
    தமக்கென முயலா நோன்தாள்,
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!”

    இந்த உலகம் உண்டு. எப்போதும் இருக்கும். காரணம் பண்புடையவர்கள் சிலரே ஆயினும் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். இப்படித் தொடங்கிய புலவர் அந்தப் பண்பு நலன்களைப் பட்டியலிடுகிறார்.

    1. அமுதமாயினும் தனித்து உண்ணார்.
    2. சினங் கொள்ள மாட்டார்.
    3. புகழுக்காக உயிரையும் கொடுப்பார்
    4. பழியொடு வருவதாயின் உலகத்தையே மறுதலிப்பார்! .
    5. மடியற்றவர்
    6. தமக்கென வாழார்
    7. பிறருக்காகவே வாழ்வார்!

    முதல் ஐந்தும் பிறப்பிலேயே அமைந்த பண்புகள். இறுதியிரண்டும் அவற்றை அடியாகக் கொண்டு இவர் அமைத்துக் கொண்ட வாழ்வியல் முறை. அதனால் அவ்வைந்து பண்புகளைத் தொகுத்து ‘அன்னமாட்சி அனையர்’ என்று சுட்டுகிறார்.

    இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட அத்தனைச் சொற்களையும் அதிகாரத் தலைப்பாக்கியவர் திருவள்ளுவர்.
    இந்தப் பண்புகளைத்தான் வள்ளுவர் தம் நூலில் ஒரே சொல்லால் இப்படி அமைத்திருக்கிறார்!. சுருக்கம் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தியவர் திருவள்ளுவர்!

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்”

    பண்பு என்பது ஒருமையாயினும் அது இனஒருமை. ஒருவர் பண்புடையவர் என்றால் ஒரு பண்பை உடையவர் என்று பொருளாகாது. அவர் பண்புகளோடு கூட்டணி அமைத்திருப்பார். ஆட்டு மந்தை என்பது போல! “குறுகத் தறித்த குறள்” என்பது இதுதான்!

    இந்தக் குறட்பாவில் ஒரு நுண்ணியம் உள்ளது. அதாவது

    “உலகியல் நிலைபெறுவது பண்புடையாரைப் பொருத்தது.! பண்பு இலாதவர் இருப்பின் அது மண்புக்கு மாயும்! “
    “உலகு – ஆகுபெயர்” என்று எழுதுவார் பரிமேலழகர்
    என்ன நுண்ணியம்.? உலகம் என்பது உலகியலைக் குறிக்குமானால்; ‘மண்’ என்பது எதனைக் குறிக்க வேண்டும். அதே உலகியலைத்தானே குறிக்க வேண்டும்! அதுதான் இல்லை.
    பண்புடையவர்கள் இல்லாத இந்த உலகியல் வெறும் மண். அந்த மண் மண்ணுக்குள் போய்விடுமாம்.
    பொருள் தெளிவும் சுருக்கமும் இதுதான்!

    சான்றோர்கள் இருந்தால் மண் உலகமாகும்
    கயவர்கள் இருந்தால் உலகம் மண்ணாகிவிடும்!

    இறைவன் உலகைப் படைத்தான்! நாம் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறோம்!

    உயர்ந்த பொருளைச் சொல்லுகிறபோது உயர்ந்த சொற்கள்!
    தாழ்ந்த பொருளைச் சொல்லுகிறபோது தாழ்ந்த சொற்கள்.
    இது ஒரு இலக்கிய உத்தி!

    இந்த உத்தியை மகாகவி பயன்படுத்தியிருக்கிறார்!

    “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்!”

    புவி உயர்ந்த சொல்! ஞானம் உயர்ந்த சொல்! ஈசன் உயர்ந்த சொல்!
    உயர்ந்தவனாகிய ஈசன் உயர்ந்த பொருளாகிய ஞானத்தைப் பெண்ணுக்குள் வைக்கிறபோது அது புவி!
    மண் தாழ்ந்த சொல்! ஞானத்தை நோக்க அறிவு தாழ்ந்த சொல்! மூடர் தாழ்ந்த சொல்!
    மூடர்கள் பெண்ணுக்கான அறிவைத் தடுக்கிறபோது இந்தப் புவி மண்ணாகிவிடுகிறது,
    இறைவனால் மண் புவியாகும்!
    மூடர்களால் புவி மண்ணாகும்!
    இந்த இலக்கிய நெறியை ஔவையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாரம்!
    “நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -கற்பிலா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம். “

    அறிவாளிகள் அறிவாளிகளை இனம் கண்டு இணைவது எதனைப் போன்றது என்றால் தாமரைக் குளத்தை இனங்கண்டு அன்னப் பறவைகள் சேர்வது போன்றது!.

    முட்டாள்கள் பிற முட்டாள்களை இனம் கண்டு சேர்வது எதனைப் போன்றது என்றால் சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை அடையாளம் கண்டு அவற்றைக் காக்கைகள் சேர்வது போல!

    அறிவாளிகள் உயர்ந்தவர்! தாமரை உயர்ந்தது! குளம் உயர்ந்தது! அன்னம் உயர்ந்தது! காமம் உயர்ந்தது!
    முர்க்கர்கள் தாழ்ந்தவர்கள்! காக்கை தாழ்ந்தது! சுடுகாடு தாழ்ந்தது! பிணம் தாழ்ந்தது! முகத்தல் தாழ்ந்தது! உகத்தல் தாழ்ந்தது!
    காமுறுவர் என்பது உயர்ந்த சொல்!
    முகப்பர், உகப்பர் என்னும் இரண்டு சொற்களும் தாழ்ந்த சொற்கள்!

    புறநானூறு, திருக்குறள், ஔவையார் பாரதி, என்னும் நிரலில் இதனைப் பகுத்துப் படிக்கலாம். விளக்கத்திற்காக மாற்றியுரைத்திருக்கிறேன்.

    “தலைதடுமாற்றம்” என்பதும் ஒரு இலக்கிய உத்திதான்!

    இந்தச் சிந்தனையைத் தோற்றுவித்தது வேல்முருகனின் பதிவுகள். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு”

    யாராயிருந்தால் என்ன? காய்தல் உவத்த்ல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் உவத்தல் கடன்” அல்லவா?

    மரபுக் கவிதை எப்படி இருக்க வேண்டும்? இப்படி இருக்க வேண்டும்!

    “வானம் எனக்கொரு போதிமரம்!” என்பார் வைரமுத்து!

    நாளும் எனக்கொரு சேதி தருவதால்
    முகநூல் எனக்கொரு பல்கலைக்கழகம்!

    இன்றைய சேதியை எனக்குச் சொன்னவர் ஆசான் வேல்முருகன்!

    அன்னார் தொண்டுக்கு வாழ்த்துக்கள்!

    விருப்பத்திற்குரியவர்களைப் பாராட்டுகிறேன்! அல்லாதவரை மறுதலித்து விடுகிறேன்.! மறந்தும் விடுகிறேன்!

    “மானுடரைப் பாடி அவர் மாறியபின் ஏசுவது என் வாடிக்கையான பதிகம்”

    இன்று நான் திரு வேல்முருகனைப் பாராட்டிய நாள்!

    இது என் இயல்பு! “அது உடன் பிறந்தது ஒழியாது!”

    மாறா அன்புடன்
    ச.சுப்பிரமணியன்

    (தொடரும்)

    Share
  • பல்லழகன் – பகுதி 7

    திவாகர்

    “மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.”

    சாந்தியிடம் திரும்பினாள். ‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

     

    “அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள்.

    கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

     

    “ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

     

    கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

     

    “உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

     

    என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

     

    கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

     

    “அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..” ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள். “ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

     

    அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

     

    “நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

     

    சுந்தர் அலுவலகம்.

     

    காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

     

    “எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

     

    “தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

     

    “அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

     

    “அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

     

    ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு.. அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி? தலயாட்டினான் சுந்தர்.

     

    “நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

     

    ரவி குறுக்கிட்டான்.

     

    “ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

     

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

    கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள். “சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

     

    “நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

    என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

     

    “நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

     

    “போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

     

    “அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

     

    “அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு..

     

    ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

     

    “கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..” “நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”  “இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

     

    “இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

     

    ரவி அவளைப் பார்த்தான்.

     

    சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

     

    அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

     

    “என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

     

    ‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

     

    ‘அவன் ஆபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’ இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

     

    அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

     

    “இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

     

    அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

     

    “ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

     

    விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

     

    “சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

     

    “விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

     

    “ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

     

    இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

     

    “அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

     

    “சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..”

     

    கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.   “என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

     

    “தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

     

    “என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

     

    “சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..” “கோமதி..” “ஸார் நான் கோம்டி சார்..” “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

     

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..” “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    தொடரும்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 14

     

    63 நாயன்மார்களின் வரலாறு  – 13. ஆனாயர்

     

    மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

        மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்

    கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

        குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்

     தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்

        தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து

    பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்

        போதுகவென் றருளவுடன் போயி னாரே

     

    நீர் வளமும், நில வளமும் நிறைந்த வயலும், வயல் சார்ந்த இடமும் உள்ள ஒரு பசுமையான சூழலில் அமைந்துள்ள, தமிழகத்தின் ஒரு பகுதியான மழவ நாட்டின் ஒரு ஊர் திருமங்கலம். மங்கலங்கள் எப்போதும் நிகழும் ஊர் என்பதால் இது திருமங்கலம். இந்த மழவ நாட்டின், திருமங்கலத்தில், ஆயர்குலத்தில் அவதரித்த, சிவ பக்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் இருந்தார். வயல் வெளியில் உழைக்கும் உழவர் பெருமக்களும், அது சார்ந்த மாடு மேய்க்கும் தொழிலையும் மேற்கொண்டுள்ள இன மக்களான ஆயர்குல மக்கள் நிறைந்த ஊர் இது. இவர்களில் ஒருவரான ஆனாயர் அன்றாடம் ஆநிரைகளை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அன்போடு அவைகள் வயிறாற பச்சைப் பசும்புற்களை  உண்ணும்படி மேய்த்துவிட்டு வருபவர். அந்நேரங்களில் ஆனாயர் துளைக்கருவியான வேய்ங்குழலெனும் புல்லாங்குழலை வாசித்து எம்பெருமானின் பஞ்சாட்சரம் உலக ஆன்மாக்களின் செவியைக் குளிரச் செய்யும் பேராற்றல் படைத்திருந்தார்.

    ஆவின் நிரைக் குலம் அப்படி

      பல்க அளித்தென்றும்

    கோவலர் ஏவல் புரிந்திட ஆயர்

      குலம் பேணும்

    காவலர் தம் பெருமான் அடி

      அன்புறு கானத்தின்

    மேவு துளைக் கருவிக் குழல்

      வாசனை மேற்கொண்டார்

    ஓர்நாள் கார்காலத்தில் மயில்கள் ஆட, வண்டுகள் ரீங்காரமிட, முல்லை சிரிக்க வழமைபோல் வேய்ங்குழலுடன் ஆனாயர் ஆநிரைகளை மேய்த்துச் செல்ல அவை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆனாயர் செழுமையாகப் பூத்துக் குலுங்கியிருந்த கொன்றை மரத்தின் பக்கம் சென்றவர் கண்களுக்கு அக்கொன்றை மலர் சிவபெருமானின் ஐந்தெழுத்தினைப்போலவும், அம்மலரின் மையத்தில் இருக்கும் மலர்க்குழல் ஓங்காரம் போலவும் தோன்றுகிறது.  கொத்து கொத்தாகப் பூத்துக் குலுங்கும் அக்கொன்றை மரத்தையே சிவபெருமானாகக் கருதினார் ஆனாயர். கொன்றை மலர் கொத்து சிவபெருமானின் சடைமுடியாகக் காட்சியளித்தது அவருக்கு. கொன்றை மரத்தையே சிவமாகக் கருதியவர், அதனருகில் சென்று முன் நின்று பார்த்தபடி ஒன்றிய மனத்துடன் தம் அன்பையும், இசையையும் ஒன்றிணைத்தபடி மடை திறந்த வெள்ளமாக வேய்ங்குழலால் இசைக்க ஆரம்பித்தார். அப்பகுதி முழுதும் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வலியவரும், எளியவரும், மெலியவரும் நாயனாரின் இன்னிசையொலியால் உணர்வொன்றக் கலந்ததனால் தம்முன் உள்ள பகையை மொத்தமாக மறந்தனர். பாம்பும் பகை மறந்து மயிலின் மீது விழுந்தது. மயிலும் ஆடியவாறு பாம்பின் மீது மோதியது. யானையோ சிங்கத்தின் பிடரியைத் தம் துதிக்கையால் வருடியது. சிங்கமும் யானை மீது உராய்ந்து கொண்டிருந்தது. புலியின் அருகில் சென்ற மாடு அதன்மீது சாய்ந்துகொண்டு புல்லை அசை போட்டது. மாடு மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்கள் அனைவரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டு மயங்கி நின்றனர். விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள். நாயனாரின் இசையின் மகத்துவத்தைப் பறைசாற்றியது அனைத்து சீவராசிகளும்!

    நலிவாரும் மெலிவாரும் உணர்வு

      ஒன்றாய் நயத்திலினால்

    மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில்

      மீது மருண்டு விழும்

    சலியாத நிலை அரியும் தடம்

      கரியும் உடன் சாரும்

    புலி வாயின் மருங்கு

      அணையும் புல்வாய புல்வாயும்

    தம் இன்னிசையால் அனைவரையும் தன்னுணர்வை இழக்கச் செய்த நாயனார் தாமும் தன் உணர்வை இழந்தவாறு மெய்சிலிர்த்திருந்தார். இறுதியாக இசை வெள்ளத்தின் உச்சமாக எம்பெருமானின் செவியினருகிலும் சென்று சேர்ந்தது அந்த இசை. தம் திருச்செவியை எட்டிய இசையைக் கேட்ட எம்பெருமான், எம்பெருமாட்டியாகிய பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் வானவீதி வழியே எழுந்தருளி வந்து ஆனாயர் முன் தோன்றிக் காட்சியளித்து இந்நிலையே நம் உலகை அடைவாய். அங்கும் குழல் ஒலி ஒலிக்கட்டும் என்று திருவாய்மலர்ந்தருளி, ஆனாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு அருகிலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

    ஆனாயநாயனார் புராணம் சொல்லும் கருத்து

    இறைவன் இசைவடிவானவன். இசையினால் பெருமானை வழிபாடு செய்வது நாத வழிபாடு. வழிபாட்டில் இசையே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இறைவனை எளிதாக அடையும் வழி இன்னிசையே.

    இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
    பண்ணார் பாடல் என்று -திருவாய்மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் -ஆகையாலே
    சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
    சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க, இவற்றை இவர் இப்போது எடுத்தது-

    சாமவேதம் உள்ள அருளிச் செயல்களை எடுக்காமல் இயல் பாவுக்கு அப்புறம் இசைப்பா -பண்ணும் இசையும் சேர்ந்த சாம வேதம் போல திருவாய் மொழி அருளிச் செய்கிறார்.

    நம் பெருமாளுக்கு -முதலில் மணவாள மா முனிவரைப் பற்றியே -இன்றும் சேவிப்பார்கள் – பாவின் இன்னிசைப் பாடித் திரிவனே – நறையூர் நின்ற நம்பி -நான்கு வேதம் ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை எழும் அறிந்த அந்தணர்கள் –
    காழிச் சீராம விண்ணகரம் –பதிகத்திலும் இப்படி உண்டே – திரு நெடும் தாண்டகம் – நெடு வீணை முலை மேல் தாங்கி –திரு மங்கை ஆழ்வார் வீணை வித்வான் –

    திருநாவுக்கரசர் என்னும் பெரியார் கடுமையான சூலை நோயுற்றுத் துடிக்கும்பொழுது இறைவனை நினைந்து, “ஐயனே!”

    “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”

    என்று மனம் உருகிப் பாடினார். எனவே, இறைவன் அருளைப் பெறுவதற்குத் தமிழிசையே சிறந்த சாதனம் என்னும் கொள்கை தமிழ் நாட்டில் பரவிற்று. சிவனடியார்களும் திருமாலடியார்களும் அருளிய அருட்பாடல்கள் நாடெங்கும் பரவிய பான்மையால் பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது.

    ஈசனைப் பாடிய தேவாரத் திருப்பாசுரங்கள், இறைவன் திருவருளை இன்னிசையால் எளிதிற் பெறலாம் என்னும் உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்னிசை பாடுவார் பெறும் பயனைத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.

    “பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
    மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்”

    என்பது அவர் திருவாக்கு. ‘இசைத் தமிழால் வழிபடும் அடியார்க்கு ஈசன் மண்ணுலக வாழ்வும் தருவான்; விண்ணுலக வாழ்வும் தருவான்’ என்பது இப்பாட்டின் கருத்து.

    “கண்ணாய் ஏழுலகும் கருத்தாய் அருந்தமுமாய்ப்
    பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே” – பாடல் 243

    ஏழுலக உயிர்களுக்கெல்லாம் கண்ணாய் மணியாய் ஒளியானவன். அதில் கருத்தை வைத்து நினைப்பவர் ஞானத்தவம் செய்பவர் மோட்சம் பெறுவார். நம் வாழ்வில் அர்த்தமே கண்மணி ஒளியை உணர்வதில்தான் உள்ளது. தமிழ் வேதங்கள் இனிமையான பாடல்களால் ஞானிகள் நமக்கு தந்ததும் அதன் சீவனாய் மெய்ப்பொருளாய் துலங்குவதும் பரமாய பரஞ்சுடரே என்கிறது சுந்தரர் தேவாரம்.

    “இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி – யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை – மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த – நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே” என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணரலாம்.

    சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் ஆனாய நாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குத் துணை நின்ற கருவி நாதத்தின் மிக்கது பிறிதொன்றுமில்லை என்பதை உணரச் செய்கிறார்.

    ஆனாய நாயனாரால் பயன்படுத்தப்பட்ட புல்லாங்குழல் உயர்ந்த தரமான மூங்கிலால் ஆனது என்பதோடு வேதங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செய்யப்பட்டது  என்பதை பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தின் 13-ம் பாடல் புல்லாங்குழல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. ஆனாயர் ஏழு சுவரங்களின் இசையில் தனது புல்லாங்குழலைப் பயன்படுத்தி இறைவனின் தெய்வீக ஐந்து எழுத்துக்களை வாசித்தார்.

    ஆனாய நாயனார் புராணத்தின் பாடல்கள், 24 – 28 ஆகியவை புல்லாங்குழல் வாசிக்கும் நுட்பத்தை அழகாக விவரிக்கின்றன.

    ஆனாய நாயனார் இறைவன் ஆனந்தத்தில் நடனமாடும் இடத்தை அடைந்தார். இறைவனுக்குச் செலுத்தப்படும் இசைப் பிரசாதம், ஆனாய நாயனாரை இந்த உலகில் எங்கும் நிறைந்த கடவுளைக் காணச் செய்த தூய அன்பு, அவருடனான ஐக்கியம் ஆகிய அனைத்தும் இசையால் சாத்தியமானது.

    திருச்சிற்றம்பலம்

     

    Share