பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 15
63 நாயன்மார்களின் வரலாறு – 14. மூர்த்தி நாயனார்


“மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்ற, 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்த்தி நாயனார், சிவபெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்வதற்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காது தம்முடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.
அப் பொற் பதிவாழ் வணிகக்
குலத்து ஆன்ற தொன்மைச்
செப்பத் தகு சீர்க் குடி
செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து
ஏறுவார் தாள்
மெய்ப் பற்று எனப் பற்றி
விடாத விருப்பின் மிக்கார்
சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்த நாயன்மார்களின் வரிசையில் மூர்த்தி நாயனார் சொக்கநாதரைத் தவிர மற்றொரு எண்ணமேதும் இல்லாத சற்று வேறுபட்ட சிந்தை கொண்டவர். மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிசேக, அலங்காரத்திற்கான சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாட கடமையாகக் கொண்டிருந்தவர். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.
தென்பாண்டி நாட்டின் தலைநகரமாம் மதுரைத் திருநகரில், வைசியர் குலத்தில் அவதரித்தவர் மூர்த்தி நாயனார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்கநாதருக்கு சந்தனக் காப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தவர்.
வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்
வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்
தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்
தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன
னிழந்தவுயி ரினனாக ஞால நல்க
வெழில்வேணி முடியாக விலங்கு வேட
முழங்குபுக ழணியாக விரைநீ றாக
மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.
துறவு நெறி நின்ற இந்நாயனார் பெருமான் சிவபெருமானுக்குச் செய்யும் பல்வேறு தொண்டுகளில், ஐயனைக் குளிர்விக்கும்பொருட்டு சொக்கலிங்கப் பெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்து வழிபாடு செய்வது அவருடைய முக்கியமானக் கடமையாகக் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் வடுகக் கருநாட்டு மன்னன் ஒருவன் மண்ணாசையால் மதுரையை நோக்கி நால்வகைப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். சந்தனச் சோலை சூழ்ந்த செந்தமிழ் மதுரையைத் தலைநகராக்கி அரசு புரியலானான். கருநாடக மன்னனான இவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் தடுக்கப் பல வழிகளில் துன்பத்தையும் கொடுத்து வந்தான். அடியார்கள் ஆற்றொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகக் காரணமானான்.
அவ்வூரில் புகழ் பெற்று விளங்கிய மூர்த்தி நாயனாருக்கும் கொடுமைகள் பல செய்தான். எனினும் அவர் சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
அவர் செய்து வந்த இறைத் தொண்டுக்கும் இடர்கள் பல செய்தான். பெருமான் திருப்பூச்சுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு சதி செய்தான். அப்படிச் செய்தால் அவர் மனம் மாறலாம் என்றும் திட்டமிட்டான். மதுரை முழுவதும் எங்கு தேடியலைந்தும் சந்தனக்கட்டை கிடைக்காமல் தம் உயிர் மூச்சான எம்பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்யும் பணிக்கு இடையூறு வந்துவிட்டதை எண்ணி நொந்து போனார். தொண்டுக்கு துணை நிற்க வேண்டிய மன்னனே இத்தகைய துன்பம் தருவது எத்தகைய கொடுமையான செயல்?
நாள் முழுக்க அலைந்து திரிந்து மிகவும் சோர்வுடன் கோயிலுக்குத் திரும்பினார். மனம் மிகவும் கவலையுற்று கோயிலில் சந்தனம் அரைக்கும் கல்லின் அருகே நின்று கொண்டிருந்தார். கல்லைப் பார்த்தவர் அடுத்து சந்தனம் அரைக்கும் தன் கரங்களைப் பார்த்தார். அப்போது ‘எம்பெருமானே, சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை, சந்தனம் அரைக்கும் இந்தக் கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. தன் கரங்களையே சந்தனக் கட்டையாகக் கருதிச் சந்தனக் கல்லில் தன் முழங்கையை வைத்துத் தேய்த்தார். தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து உரைக்கத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் உரைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. சந்தனக் கல் முழுவதும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. இதற்குமேல் சொக்கநாதரால் பொறுக்க முடியவில்லை.
நட்டம் புரிவார் அணி நற்றிரு
மெய்ப் பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும்
தேய்க்கும் கைமுட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின்
வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும் புறந்தோல் நரம்பு
என்பு கரைந்து தேய
என்பார் இந்நிகழ்வை எடுத்துரைக்கும் கவிமொழியில், சேக்கிழார் பெருமான்.
கருங்கல்லும் கரையும் வண்ணம் இரத்தம் கொட்ட, எலும்பு நொறுங்க, சதை கிழிந்து தொங்க மூர்த்தியார் செய்யும் செயல் கருணை வடிவான கண்ணுதல் பெருமானுக்கும் வானொலி வழி ஒலித்தார்.
“மெய்யன்பனே, என்பால் கொண்ட மாறாத அன்பினால் இத்தகையக் காரியம் செய்யத் துணிந்தாயே. நிறுத்து உன் செயற்பாட்டை. உனக்குத் துன்பம் தந்தவன் வலிய கைப்பற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி புரிந்து, திருத்தொண்டும் புரிந்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக” என்று சிவபெருமான் அசரீரியாகக் கூறினார். மூர்த்தி நாயனார் அதைக் கேட்டு கல்லில் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவருடைய கைகள் முன்போல் மாறின. அவ்வடியார் மேனியும் ஒளிபெற்றது. சந்தனம் சொக்கநாதர் கோயில் முழுவதும் மணத்தது. அவ்வடியாருக்குத் தீங்கு செய்த மன்னனோ அன்றிரவே மாண்டான். பொழுது விடிந்தது. மன்னருக்கு உரிய ஈமக்காரியங்கள் அமைச்சர்களால் நிறைவேற்றப்பட்டன. அடுத்து மன்னருக்கு உரிய இடம் அவருக்கு ஏதும் வாரிசுகள் இல்லாததால் வேறு ஒருவரால் நிரப்பப்பட வேண்டியதாகியது.
அன்றைய நாட்களில் இப்படிப்பட்ட சூழலில் மன்னனைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கண்களைக் கட்டி அதன் துதிக்கையில் ஒரு மாலையை கொடுத்து விடுவர். யானை யார் கழுத்தில் மாலையைப் போட்டு அவனைத் தூக்கி தன்மீது அமர்த்திக்கொண்டு வருகிறதோ அவரே மன்னனாவார். அந்த மரபுப்படி யானை அலங்கரிக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, வலம் வரச் செய்தனர். வலம் வந்த யானையும் கோயிலில் ஒரு பகுதியில் நின்றிருந்த மூர்த்தியார் கழுத்தில் மாலையிட்டு அவரைத் தூக்கி தன் பிடரியில் அமர்த்தியது. மக்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. அமைச்சர்களும் அகமகிழ்ந்து மூர்த்தியாரை வணங்கி ஆட்சித் தலைமை ஏற்க வேண்டினர். அதற்கு மூர்த்தியாரும் திருநீறே திருமுழுக்காகவும், உருத்திராக்கமே அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க வேண்டும். அதற்கு உடன்பாடு என்றால் செய்யலாம் என்றார். அதற்கு அமைச்சர்களும், அறிஞர்களும் சான்றோர்களும் தங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே செயல்படலாம் என்றனர்.
வையம் முறை செய்குவன்
ஆகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும்
ஆக செழுங்கலன்கள்
ஐயன் அடையாளமும் ஆக
அணிந்து தாங்கும்
மொய் புன் சடைமாமுடியே
முடி ஆவது என்றார்.
அதன்படி மூர்த்தி நாயனாருக்கு மணிசூடப்பெற்றது. அவர்தம் ஆட்சியின் சின்னமாகத் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மூன்றும் திகழ்ந்தது. பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் திருநீறு உருத்திராக்கம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் பன்நெடுங்காலம் ஆட்சிபுரிந்து வையகம் காத்து மக்கள் மகிழ வாழ்ந்து எம்பெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.
திருமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து
மதுரையம்பதி எனும் மூர்த்தி நாயனார் பிறந்த இம்மண்ணின் பெருமையை மாணிக்கவாசகர், திருவாசகத்தில் எடுத்துரைப்பதைக் காணலாம்.
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். “மதுரை மண் சுமந்த” – என்று மதுரை மண்ணின் பெருமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. வந்தியம்மை என்ற மூதாட்டிக்காகப் பெருமான் பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்ட தலம்.
“மண் சுமந்த கூலி கொண்டு” – முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார்.
கடம்பவனக் காட்டில் முளைத்தெழுந்த சொக்கலிங்கப் பெருமானை தேவர்கள் பூசை செய்ததனை ஒருநாள் இரவு வணிகன் ஒருவன் கண்டு அப்போது நாடாண்ட குலசேகரப் பாண்டியன் கேட்டு அக்கடம்பவனக் காட்டைத் திருத்தி கோயிலும், நகரமும் அமைத்தான். அப்பொழுது சிவபெருமான் தம் தலையிலிருந்த அமுதத்தைத் தெளித்து புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயர் உண்டாயிற்றாம். இந்தக் கடம்பவனம், மதுராபுரி, நான்மாடக்கோயில், திருவாலவாய் எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளது. மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற அருட்தலம். பொற்பலகை கொடுத்து இசை பாடவைத்து சொக்கலிங்கப் பெருமான் நீலகண்ட யாழ்ப்பாணருக்கு அருள் செய்த அருட்தலம். மங்கையர்கரசியார், நெடுமாறர், குலச்சிறையார் ஆகிய மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த சிவப்பதி.
சந்தனக்காடு மலிந்த பொதியமலை தென்றலை கொடுத்து மகிழ்வு செய்யும் அழகிய நகரமும் இதுவே.
சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி
வாழ்வது அத் தையல் ஒப்பார்
யாழின் மொழியில் குழல்
இன்னிசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்
சிவபெருமானுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல் மட்டுமே தமது சீரிய கடமை என்று சிவபக்தியில் திளைத்திருந்த மூர்த்திநாயனார் வாழ்ந்திருந்தார்.
மும்மைப் புவனங்களின் மிக்கது
அன்றே அம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்
நூலின் விளங்கு வாய்மை
செம்மைப் பொருளுந்
தருவார் திருஆலவாயில்
எம்மைப் பவந் தீர்ப்பவர்
சங்கம் இருந்தது என்றால்.
சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். எம்பெருமானின் திருமேனி குளிர்வது போன்று அனைத்து உயிர்களும் குளிர்விப்பதற்கு ஒப்பாகும். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரசனம், கத்தூரி பச்சைக் கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கொட்டி இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் சிவலோகத்தில் இன்புற்றிருக்கலாம்.
சிவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்கிறது சிவாகமம்.
“சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் – சேர்த்தியுளத் தாதரவு செய்து.”
“கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் – தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து.”
சோமவார விரத கற்பத்தினும்,
“சுகந்த கந்தஞ் சுலவிய லேபன
முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ
ரிகந்து பாவ மிமையவர் கோடியாண்
டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்.”
எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காணலாம்.
இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார். இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டை பெற முடியாத இடர் வந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் நாடாளும் அரசராய் பொறுப்பேற்றபோதும் துளியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு அனைத்துமாவார் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று தொண்டு செய்த மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணரலாம்.
சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர் என்பதை தெளிவுற மொழியும் இந்நாயனார் புராணம்.
காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக்
கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன்
மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி
மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்
எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணரலாம். சிவனடியாருக்கு இடுக்கண் செய்த அந்த மன்னனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிவாதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையாமல் இருக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறது. இதனை, உருத்திராக்கம்
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே
என்றார் திருநாவுக்கரசு நாயனார்.
இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவபெருமானின் ஆணைக்கு அடிபணிந்து, அவரது திருவருள் வழி நின்று, தமது ஆளுமையால் உலகம் உய்யச் செய்யும் எண்ணத்தால் இசைந்தருளினார்.
கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே
லண்டம் பெறினு மதுவேண்டேன் – றுண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங்
கண்ணாளா வீதென் கருத்து
என்றார் காரைக்காலம்மையார்.
அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப்
பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ்
சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா
மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே
என்றார் நம்பியாண்டார் நம்பி.
மெய்யுணர்வு உடையார்க்கு திருநீறும், சாந்தமும், உருத்திராக்கமும் ஆபரணமாகும் என்பதை விளங்கச் செய்தவர் மூர்த்தி நாயனார். இதன் பெருமையை,
ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த
பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை
சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி
நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே
என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணரலாம்.
திருச்சிற்றம்பலம்
