பல்லழகன் – பகுதி 8

0

திவாகர்

 

“மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.” சாந்தியிடம் திரும்பினாள்.

 

‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

 

“அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள். கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

 

“ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

 

கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

 

“உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

 

என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

 

கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

 

“அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..”

 

ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள்.

 

“ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

 

அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

 

“நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

 

சுந்தர் அலுவலகம்.

 

காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

 

“எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

 

“தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

 

“அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

 

“அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

 

ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு..

 

அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி?

 

தலயாட்டினான் சுந்தர்.

 

“நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

 

ரவி குறுக்கிட்டான்.

 

“ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

 

“அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

 

கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள்.

“சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

 

“நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

 

என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

 

“நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

 

“போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

 

“அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

 

“அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு.. ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

 

“கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..”

 

“நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”

 

“இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

 

“இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

 

ரவி அவளைப் பார்த்தான்.

 

சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

 

அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

 

“என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

 

‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

 

‘அவன் ஆஃபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’

 

இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

 

அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

 

போலீஸ் ஸ்டேஷன்.

 

உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

 

“இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

 

அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

 

“ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

 

விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா,, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

 

“சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

 

“விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

 

“ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

 

இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

 

“அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

 

“சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..” கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.

 

“என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

 

“தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

 

“என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

 

“சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.