படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 39
முனைவர் ச. சுப்பிரமணியன்
வலங்கைமான் பெற்ற வரம்!
அனைவருக்கும் வணக்கம்!
படுக்கையில் கிடக்கும் இந்த முதியவனுக்குப் பாசத் தொடர்பெல்லாம் முகநூல்தான். சில வேளைகளில் நூல்களைத் தடவிப் பார்ப்பதுண்டு, கண்ணொளி மங்கியதால் கருத்தொளி மங்காமல் போவதற்கான சிறு முயற்சி. . ஒரு அற்புதமான தகவல் தொடர்புச் சாதனமான முகநூலை மூளை அழுகியவர்களும் அறிவின் முனைமழுங்கிப் போனவர்களும் ஊழல் பெருச்சாளிகளும் உதவாக்கரை அரசியல்வாதிகளும் உழைக்காத ஒருவனை உயர்த்திவிடும் திரைப்பட ரசிகர்களும் இயல்பு மாறிய இருபால் இளைஞர் சமுதாயத்தினரும் எப்படியெல்லாம் சிதைத்தும் சீரழித்தும் வருகின்றனர் என்பதை நித்தமும் காணுகின்றேன். கவலைப்படுகின்றேன். நெஞ்சம் பொறுக்கவில்லை. “என்னை மனிதனாக அங்கீகாரம் செய்த இந்த மானுடச் சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிச் செயல்படும் உத்தமர்கள் சிலர் இல்லாமல் இல்லை. அவருள் ஒருவர்தான் வலங்கைமான் திரு வேல்முருகன் அவர்கள். மறைந்த கவிஞர் கம்பதாசனுக்கு நெருங்கிய உறவினர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு, தனது பணிக்குச் சற்றும் தொடர்பில்லாத தமிழிலக்கியம், தமிழ்க்கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் முதலியனவற்றைப் படைத்து வருகிறார். விருதளித்துப் பாராட்;டும் விழாக்கள், பரிசு நல்கி ஊக்குவிக்கும் பாங்கு ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்றவர் இவர். இவர் படைப்புத் தொழிலாலும சிறந்தவர். நாளும் படிக்கவும் தெரிந்தவர். அப்படி அவர் படித்துப் பதிவிட்ட சில பாக்களின் சிறப்பை நான் உணர்ந்த வண்ணம் பதிவிட்டிருக்கிறேன். பாடல்களை எழுதியவர் வேறாயினும் அவற்றை இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கும் உண்டு என்பதால் ;இந்தக் கட்டுரை ஒரு திறனாய்வாகவும் ஒரு பாராட்டுப் பத்திரமாகவும் வடிவமைக்கப்படுகிறது.
முகம் மறைத்த முகநூல்
வணக்கத்திற்குரிய உ.வே.சா. சொல்லுவார். “நான் கொட்டுகிற நெல் மணிகளைக் கண்டு மகிழ்வதில்லை. ஒரு மூட்டை உமியில் ஒரு நெல் மணி கிடைக்காதா என்ற ஏக்கந்தான் எனக்கு வாழ்வு!” என்று.
திருவள்ளுவர் சொல்லுவார். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பெபாருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று
“எண்பது வயது நிரம்பிய இந்த அந்திமக் காலத்தில் படிக்க இயலுk; வண்ணம் என்னை வைததிருக்கிறானே?” என்பதுதான் இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றி!.
அப்படிப் பார்த்துப் படித்துச் சுவைக்கின்ற சிலவற்றை அன்பர்களின் பார்வைக்கு அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று
தஞ்சைத் தமிழ்; மன்றத் தலைவராகிய அன்பர் திரு வேல்முருகன் அண்மையில் ஒரு பதிவிட்டிருந்தார். அதனைப் பதிவு என்று சொல்வதைவிட இரண்டு வைரக்கற்களை முகநூல் சந்தையில் கடைவிரித்தார் என்றே சொல்லலாம்.
காரணம் முகநூல் இன்று சந்தைக்கடை ஆகி வருகிறது என்பதில்லை. சந்தைக் கடையாகவே மாறிப்போனது. இது பற்றிக் கட்டுரையின் முந்தைய பகுதியில் நான் குறிப்பிட்டுள்ளேன்!
முகநூல்…………..
சுய அரிப்புக்களைத் தீர்த்துக் கொள்ளவும்,
வஞ்சப் புகழ்ச்சி வாசகங்களுக்காகவும்,
அருவெறுப்பான சொல்லாடல்களுக்காகவும்,
போலிப் புகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதற்காகவும்
வெற்றுச் சொல் எம்பல்களைக் கவிதை என்னும் மோடிமஸ்தான் வேலை செய்வதற்காகவும் ஒரு வடிகாலாகப் போய்விட்டது.
சென்ற நூற்றாண்டில் முகநூல் போன்ற அறிவியல் சாதனங்கள் வந்திருக்குமேயானால் ஒவ்வொரு துறையும் எங்கோ போயிருக்கும். தமிழும் எங்கோ போயிருக்கும்.
இன்று அழுகிப்போன தமிழ்ச் சமுதாயத்தில் போலிகளின் கையில் அது சிக்கிக் கொண்டிருக்கிறது,
இதுபோக, அன்பர் திரு வேல்முருகனோடு நான் பல தளங்களில் முரண்படுகிறவன். யாப்பே கவிதை என்னும் மயக்க நிலைக்கு ஆளாகாமல் இருந்திருந்தால் அவருடைய
1. கவிப் பேராற்றலுக்கும்
2. தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் தன்னலமற்ற உயரிய பண்புக்கும்,
3. நிர்வாகத் திறனுக்கும்
4. ஆளுமைக்கும்,
5. சகிப்புத் தன்மைக்கும்
6. பொறுமைக்கும்
7. அனைவரையும் அரவணைக்கும் பண்பிற்கும்
8. எதனையும் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் அறிவியல் அணுகுமுறைக்கும்
ஒட்டு மொத்த தமிழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழ்க்கவிதை உலகில் பெற்றிருப்பார்.
என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! கவியரங்கங்களோடு நம் கவிதைக் கனவு முடிந்து போனது என்னைப் பொருத்தவரையில் ஒரு வருத்தமான சேதியே!
இந்தப் பதிவுக்காக அவரைப் பற்றிச் சில சொன்னேன்.! அவ்வளவுதான்! அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்வாரோ என்றெல்லாம் நான் கவனிப்பதும் இல்லை! கவலைப்படுவதுமில்லை!
இதில் மட்டும் நான் கண்ணதாசன்!
வேல்முருகன் பதிவிட்ட இரண்டு பாடல்கள்
அந்தப் பதிவில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார். அருமையான ஒப்பீடு! அவருள் மறைந்து கிடக்கும் ஒப்பியல் நோக்கினை வெளிடுத்துவதாய் அது அமைந்துள்ளது
“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.”
என்னும் ஔவையார் பாடலையும்
தண்டாமரையின் உடன் பிறந்தும்
தண்தேன் நுகரா மண்டூகம்!
வண்டோ கானத்து இடைஇருந்து
வந்தே கமல மதுவுண்ணும்!
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றாரே.!
என்னும் விவேக சிந்தாமணி பாடலையும் அவர் இணைத்து மீள்பதிவாக இட்டிருக்கிறார். எந்த மனநிலையில் இவற்றைப் பதிப்பித்தார் என்பது எனக்குத் தெரியாது.
விவேக சிந்தாமணி பாடலில் முரண்கள் அழகூட்டும் திறன் வியக்கத்தக்கது. தாமரைக்கு அடியில் வாழும் தவளைக்குத் தெரியவில்லை அதன் மணமும் தேனும். ஆனால் காட்டின் நடுவே எங்கோ ஏதேதோ மலர்களுக்கிடையே ரீங்காராமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுக்குத் தெரிகிறது குளத்துப் பூ அருமை!. என்ன அருமையான சிந்தனை?
தாமரையின் மணம் அறியாததால் தண் தேன் நுகரா மண்டூகம் என்று வாளா எழுதிய ஆசிரியர் அரிதான கற்றவர்களைக் காணும் பேறு அரிதாகப் பெற்றமையின் அவர்களின் அந்தச் சந்திப்பைப் படிப்படியாக விளக்குகிறார்.
கற்றார்கள் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பழகுவார்களாம்? இப்படிப் பழகுவார்களாம்.
கண்டே களித்தங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றாரே.!
கவிதையில் தேவையில்லாத ஒரு சொல் கூட இடம் பெறக் கூடாது, பெற்றால் அது கவிதையாகாது.
1. கற்றவர்கள் முதலில் கண்ணால் காண்பார்களாம்
2. அடுத்து மனத்தால் களிப்பார்களாம்
3. நட்பு உறவாகுமாம். உறவுக் கருவியாகக் கல்வி பயன்படுமாம்.
4. ஒருவர் மற்றவரில் ஒன்று கலந்து விடுவார்களாம்.
‘கலந்த அன்பாகி’ என்பார் மணிவாசகப் பெருமான் இவர்களும் கலந்து விடுவார்களாம். இது கற்றாரின் தனிச்சிறப்பாம்.
பல நாள்களுக்குப் பிறகு இன்று மாலை நான் கணிப்பொறியை இயக்கலாம் என்று நினைத்துத் திறந்தபோது என் கண்ணில் பட்டவை இந்தப் பாடல்களே!
ஒரு பெரிய இலக்கிய உத்தியை இந்தப் பாடல்கள் எனக்குணர்த்துவதாய் அறிந்தேன். அறிந்ததை இங்கே பதிவு செய்கிறேன்.
கற்றாரின் பேராளுமையையும் பண்புநலன்களையும் உவம அளவையால் விளக்குகின்ற பாடல்கள் இவை. இந்த இயல்பு பற்றியே திரு வேல்முருகன் ஒத்த இயல்பறிந்து பதிவிட்டிருக்கிறார்.
என் சிந்தனையைத் தூண்டியது ஔவை பாடலின் சொல்லாட்சியும் சிந்தனையும்!
புறநானூற்றில் ஒரு பாட்டு. அனைவருக்கும் தெரிந்த பாடல்தான்!
“உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!”
இந்த உலகம் உண்டு. எப்போதும் இருக்கும். காரணம் பண்புடையவர்கள் சிலரே ஆயினும் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். இப்படித் தொடங்கிய புலவர் அந்தப் பண்பு நலன்களைப் பட்டியலிடுகிறார்.
1. அமுதமாயினும் தனித்து உண்ணார்.
2. சினங் கொள்ள மாட்டார்.
3. புகழுக்காக உயிரையும் கொடுப்பார்
4. பழியொடு வருவதாயின் உலகத்தையே மறுதலிப்பார்! .
5. மடியற்றவர்
6. தமக்கென வாழார்
7. பிறருக்காகவே வாழ்வார்!
முதல் ஐந்தும் பிறப்பிலேயே அமைந்த பண்புகள். இறுதியிரண்டும் அவற்றை அடியாகக் கொண்டு இவர் அமைத்துக் கொண்ட வாழ்வியல் முறை. அதனால் அவ்வைந்து பண்புகளைத் தொகுத்து ‘அன்னமாட்சி அனையர்’ என்று சுட்டுகிறார்.
இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட அத்தனைச் சொற்களையும் அதிகாரத் தலைப்பாக்கியவர் திருவள்ளுவர்.
இந்தப் பண்புகளைத்தான் வள்ளுவர் தம் நூலில் ஒரே சொல்லால் இப்படி அமைத்திருக்கிறார்!. சுருக்கம் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தியவர் திருவள்ளுவர்!
“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
பண்பு என்பது ஒருமையாயினும் அது இனஒருமை. ஒருவர் பண்புடையவர் என்றால் ஒரு பண்பை உடையவர் என்று பொருளாகாது. அவர் பண்புகளோடு கூட்டணி அமைத்திருப்பார். ஆட்டு மந்தை என்பது போல! “குறுகத் தறித்த குறள்” என்பது இதுதான்!
இந்தக் குறட்பாவில் ஒரு நுண்ணியம் உள்ளது. அதாவது
“உலகியல் நிலைபெறுவது பண்புடையாரைப் பொருத்தது.! பண்பு இலாதவர் இருப்பின் அது மண்புக்கு மாயும்! “
“உலகு – ஆகுபெயர்” என்று எழுதுவார் பரிமேலழகர்
என்ன நுண்ணியம்.? உலகம் என்பது உலகியலைக் குறிக்குமானால்; ‘மண்’ என்பது எதனைக் குறிக்க வேண்டும். அதே உலகியலைத்தானே குறிக்க வேண்டும்! அதுதான் இல்லை.
பண்புடையவர்கள் இல்லாத இந்த உலகியல் வெறும் மண். அந்த மண் மண்ணுக்குள் போய்விடுமாம்.
பொருள் தெளிவும் சுருக்கமும் இதுதான்!
சான்றோர்கள் இருந்தால் மண் உலகமாகும்
கயவர்கள் இருந்தால் உலகம் மண்ணாகிவிடும்!
இறைவன் உலகைப் படைத்தான்! நாம் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறோம்!
உயர்ந்த பொருளைச் சொல்லுகிறபோது உயர்ந்த சொற்கள்!
தாழ்ந்த பொருளைச் சொல்லுகிறபோது தாழ்ந்த சொற்கள்.
இது ஒரு இலக்கிய உத்தி!
இந்த உத்தியை மகாகவி பயன்படுத்தியிருக்கிறார்!
“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்!”
புவி உயர்ந்த சொல்! ஞானம் உயர்ந்த சொல்! ஈசன் உயர்ந்த சொல்!
உயர்ந்தவனாகிய ஈசன் உயர்ந்த பொருளாகிய ஞானத்தைப் பெண்ணுக்குள் வைக்கிறபோது அது புவி!
மண் தாழ்ந்த சொல்! ஞானத்தை நோக்க அறிவு தாழ்ந்த சொல்! மூடர் தாழ்ந்த சொல்!
மூடர்கள் பெண்ணுக்கான அறிவைத் தடுக்கிறபோது இந்தப் புவி மண்ணாகிவிடுகிறது,
இறைவனால் மண் புவியாகும்!
மூடர்களால் புவி மண்ணாகும்!
இந்த இலக்கிய நெறியை ஔவையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாரம்!
“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம். “
அறிவாளிகள் அறிவாளிகளை இனம் கண்டு இணைவது எதனைப் போன்றது என்றால் தாமரைக் குளத்தை இனங்கண்டு அன்னப் பறவைகள் சேர்வது போன்றது!.
முட்டாள்கள் பிற முட்டாள்களை இனம் கண்டு சேர்வது எதனைப் போன்றது என்றால் சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை அடையாளம் கண்டு அவற்றைக் காக்கைகள் சேர்வது போல!
அறிவாளிகள் உயர்ந்தவர்! தாமரை உயர்ந்தது! குளம் உயர்ந்தது! அன்னம் உயர்ந்தது! காமம் உயர்ந்தது!
முர்க்கர்கள் தாழ்ந்தவர்கள்! காக்கை தாழ்ந்தது! சுடுகாடு தாழ்ந்தது! பிணம் தாழ்ந்தது! முகத்தல் தாழ்ந்தது! உகத்தல் தாழ்ந்தது!
காமுறுவர் என்பது உயர்ந்த சொல்!
முகப்பர், உகப்பர் என்னும் இரண்டு சொற்களும் தாழ்ந்த சொற்கள்!
புறநானூறு, திருக்குறள், ஔவையார் பாரதி, என்னும் நிரலில் இதனைப் பகுத்துப் படிக்கலாம். விளக்கத்திற்காக மாற்றியுரைத்திருக்கிறேன்.
“தலைதடுமாற்றம்” என்பதும் ஒரு இலக்கிய உத்திதான்!
இந்தச் சிந்தனையைத் தோற்றுவித்தது வேல்முருகனின் பதிவுகள். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
யாராயிருந்தால் என்ன? காய்தல் உவத்த்ல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் உவத்தல் கடன்” அல்லவா?
மரபுக் கவிதை எப்படி இருக்க வேண்டும்? இப்படி இருக்க வேண்டும்!
“வானம் எனக்கொரு போதிமரம்!” என்பார் வைரமுத்து!
நாளும் எனக்கொரு சேதி தருவதால்
முகநூல் எனக்கொரு பல்கலைக்கழகம்!
இன்றைய சேதியை எனக்குச் சொன்னவர் ஆசான் வேல்முருகன்!
அன்னார் தொண்டுக்கு வாழ்த்துக்கள்!
விருப்பத்திற்குரியவர்களைப் பாராட்டுகிறேன்! அல்லாதவரை மறுதலித்து விடுகிறேன்.! மறந்தும் விடுகிறேன்!
“மானுடரைப் பாடி அவர் மாறியபின் ஏசுவது என் வாடிக்கையான பதிகம்”
இன்று நான் திரு வேல்முருகனைப் பாராட்டிய நாள்!
இது என் இயல்பு! “அது உடன் பிறந்தது ஒழியாது!”
மாறா அன்புடன்
ச.சுப்பிரமணியன்
(தொடரும்)
