பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 14
63 நாயன்மார்களின் வரலாறு – 13. ஆனாயர்


மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்
மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்
கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து
குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்
தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்
தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து
பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்
போதுகவென் றருளவுடன் போயி னாரே
நீர் வளமும், நில வளமும் நிறைந்த வயலும், வயல் சார்ந்த இடமும் உள்ள ஒரு பசுமையான சூழலில் அமைந்துள்ள, தமிழகத்தின் ஒரு பகுதியான மழவ நாட்டின் ஒரு ஊர் திருமங்கலம். மங்கலங்கள் எப்போதும் நிகழும் ஊர் என்பதால் இது திருமங்கலம். இந்த மழவ நாட்டின், திருமங்கலத்தில், ஆயர்குலத்தில் அவதரித்த, சிவ பக்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் இருந்தார். வயல் வெளியில் உழைக்கும் உழவர் பெருமக்களும், அது சார்ந்த மாடு மேய்க்கும் தொழிலையும் மேற்கொண்டுள்ள இன மக்களான ஆயர்குல மக்கள் நிறைந்த ஊர் இது. இவர்களில் ஒருவரான ஆனாயர் அன்றாடம் ஆநிரைகளை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அன்போடு அவைகள் வயிறாற பச்சைப் பசும்புற்களை உண்ணும்படி மேய்த்துவிட்டு வருபவர். அந்நேரங்களில் ஆனாயர் துளைக்கருவியான வேய்ங்குழலெனும் புல்லாங்குழலை வாசித்து எம்பெருமானின் பஞ்சாட்சரம் உலக ஆன்மாக்களின் செவியைக் குளிரச் செய்யும் பேராற்றல் படைத்திருந்தார்.
ஆவின் நிரைக் குலம் அப்படி
பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர்
குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி
அன்புறு கானத்தின்
மேவு துளைக் கருவிக் குழல்
வாசனை மேற்கொண்டார்
ஓர்நாள் கார்காலத்தில் மயில்கள் ஆட, வண்டுகள் ரீங்காரமிட, முல்லை சிரிக்க வழமைபோல் வேய்ங்குழலுடன் ஆனாயர் ஆநிரைகளை மேய்த்துச் செல்ல அவை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆனாயர் செழுமையாகப் பூத்துக் குலுங்கியிருந்த கொன்றை மரத்தின் பக்கம் சென்றவர் கண்களுக்கு அக்கொன்றை மலர் சிவபெருமானின் ஐந்தெழுத்தினைப்போலவும், அம்மலரின் மையத்தில் இருக்கும் மலர்க்குழல் ஓங்காரம் போலவும் தோன்றுகிறது. கொத்து கொத்தாகப் பூத்துக் குலுங்கும் அக்கொன்றை மரத்தையே சிவபெருமானாகக் கருதினார் ஆனாயர். கொன்றை மலர் கொத்து சிவபெருமானின் சடைமுடியாகக் காட்சியளித்தது அவருக்கு. கொன்றை மரத்தையே சிவமாகக் கருதியவர், அதனருகில் சென்று முன் நின்று பார்த்தபடி ஒன்றிய மனத்துடன் தம் அன்பையும், இசையையும் ஒன்றிணைத்தபடி மடை திறந்த வெள்ளமாக வேய்ங்குழலால் இசைக்க ஆரம்பித்தார். அப்பகுதி முழுதும் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வலியவரும், எளியவரும், மெலியவரும் நாயனாரின் இன்னிசையொலியால் உணர்வொன்றக் கலந்ததனால் தம்முன் உள்ள பகையை மொத்தமாக மறந்தனர். பாம்பும் பகை மறந்து மயிலின் மீது விழுந்தது. மயிலும் ஆடியவாறு பாம்பின் மீது மோதியது. யானையோ சிங்கத்தின் பிடரியைத் தம் துதிக்கையால் வருடியது. சிங்கமும் யானை மீது உராய்ந்து கொண்டிருந்தது. புலியின் அருகில் சென்ற மாடு அதன்மீது சாய்ந்துகொண்டு புல்லை அசை போட்டது. மாடு மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்கள் அனைவரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டு மயங்கி நின்றனர். விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள். நாயனாரின் இசையின் மகத்துவத்தைப் பறைசாற்றியது அனைத்து சீவராசிகளும்!
நலிவாரும் மெலிவாரும் உணர்வு
ஒன்றாய் நயத்திலினால்
மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில்
மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம்
கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு
அணையும் புல்வாய புல்வாயும்
தம் இன்னிசையால் அனைவரையும் தன்னுணர்வை இழக்கச் செய்த நாயனார் தாமும் தன் உணர்வை இழந்தவாறு மெய்சிலிர்த்திருந்தார். இறுதியாக இசை வெள்ளத்தின் உச்சமாக எம்பெருமானின் செவியினருகிலும் சென்று சேர்ந்தது அந்த இசை. தம் திருச்செவியை எட்டிய இசையைக் கேட்ட எம்பெருமான், எம்பெருமாட்டியாகிய பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் வானவீதி வழியே எழுந்தருளி வந்து ஆனாயர் முன் தோன்றிக் காட்சியளித்து இந்நிலையே நம் உலகை அடைவாய். அங்கும் குழல் ஒலி ஒலிக்கட்டும் என்று திருவாய்மலர்ந்தருளி, ஆனாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு அருகிலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.
ஆனாயநாயனார் புராணம் சொல்லும் கருத்து
இறைவன் இசைவடிவானவன். இசையினால் பெருமானை வழிபாடு செய்வது நாத வழிபாடு. வழிபாட்டில் இசையே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இறைவனை எளிதாக அடையும் வழி இன்னிசையே.
இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
பண்ணார் பாடல் என்று -திருவாய்மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் -ஆகையாலே
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க, இவற்றை இவர் இப்போது எடுத்தது-
சாமவேதம் உள்ள அருளிச் செயல்களை எடுக்காமல் இயல் பாவுக்கு அப்புறம் இசைப்பா -பண்ணும் இசையும் சேர்ந்த சாம வேதம் போல திருவாய் மொழி அருளிச் செய்கிறார்.
நம் பெருமாளுக்கு -முதலில் மணவாள மா முனிவரைப் பற்றியே -இன்றும் சேவிப்பார்கள் – பாவின் இன்னிசைப் பாடித் திரிவனே – நறையூர் நின்ற நம்பி -நான்கு வேதம் ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை எழும் அறிந்த அந்தணர்கள் –
காழிச் சீராம விண்ணகரம் –பதிகத்திலும் இப்படி உண்டே – திரு நெடும் தாண்டகம் – நெடு வீணை முலை மேல் தாங்கி –திரு மங்கை ஆழ்வார் வீணை வித்வான் –
திருநாவுக்கரசர் என்னும் பெரியார் கடுமையான சூலை நோயுற்றுத் துடிக்கும்பொழுது இறைவனை நினைந்து, “ஐயனே!”
“தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”
என்று மனம் உருகிப் பாடினார். எனவே, இறைவன் அருளைப் பெறுவதற்குத் தமிழிசையே சிறந்த சாதனம் என்னும் கொள்கை தமிழ் நாட்டில் பரவிற்று. சிவனடியார்களும் திருமாலடியார்களும் அருளிய அருட்பாடல்கள் நாடெங்கும் பரவிய பான்மையால் பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது.
ஈசனைப் பாடிய தேவாரத் திருப்பாசுரங்கள், இறைவன் திருவருளை இன்னிசையால் எளிதிற் பெறலாம் என்னும் உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்னிசை பாடுவார் பெறும் பயனைத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.
“பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்”
என்பது அவர் திருவாக்கு. ‘இசைத் தமிழால் வழிபடும் அடியார்க்கு ஈசன் மண்ணுலக வாழ்வும் தருவான்; விண்ணுலக வாழ்வும் தருவான்’ என்பது இப்பாட்டின் கருத்து.
“கண்ணாய் ஏழுலகும் கருத்தாய் அருந்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே” – பாடல் 243
ஏழுலக உயிர்களுக்கெல்லாம் கண்ணாய் மணியாய் ஒளியானவன். அதில் கருத்தை வைத்து நினைப்பவர் ஞானத்தவம் செய்பவர் மோட்சம் பெறுவார். நம் வாழ்வில் அர்த்தமே கண்மணி ஒளியை உணர்வதில்தான் உள்ளது. தமிழ் வேதங்கள் இனிமையான பாடல்களால் ஞானிகள் நமக்கு தந்ததும் அதன் சீவனாய் மெய்ப்பொருளாய் துலங்குவதும் பரமாய பரஞ்சுடரே என்கிறது சுந்தரர் தேவாரம்.
“இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி – யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை – மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த – நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே” என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணரலாம்.
சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் ஆனாய நாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குத் துணை நின்ற கருவி நாதத்தின் மிக்கது பிறிதொன்றுமில்லை என்பதை உணரச் செய்கிறார்.
ஆனாய நாயனாரால் பயன்படுத்தப்பட்ட புல்லாங்குழல் உயர்ந்த தரமான மூங்கிலால் ஆனது என்பதோடு வேதங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செய்யப்பட்டது என்பதை பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தின் 13-ம் பாடல் புல்லாங்குழல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. ஆனாயர் ஏழு சுவரங்களின் இசையில் தனது புல்லாங்குழலைப் பயன்படுத்தி இறைவனின் தெய்வீக ஐந்து எழுத்துக்களை வாசித்தார்.
ஆனாய நாயனார் புராணத்தின் பாடல்கள், 24 – 28 ஆகியவை புல்லாங்குழல் வாசிக்கும் நுட்பத்தை அழகாக விவரிக்கின்றன.
ஆனாய நாயனார் இறைவன் ஆனந்தத்தில் நடனமாடும் இடத்தை அடைந்தார். இறைவனுக்குச் செலுத்தப்படும் இசைப் பிரசாதம், ஆனாய நாயனாரை இந்த உலகில் எங்கும் நிறைந்த கடவுளைக் காணச் செய்த தூய அன்பு, அவருடனான ஐக்கியம் ஆகிய அனைத்தும் இசையால் சாத்தியமானது.
திருச்சிற்றம்பலம்
