நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

நரம்பிலா நாக்கு நம்பெரு சொத்து
விரும்பிய சுவையைச் சுவைத்திட உதவும்
அருந்திடும் உணவை அதுவேற்க மறுத்தால்
விரும்பிடும் உணவைத் தேர்ந்திட  நேரிடும்

உணர்வு இருந்தால் சுவைகள் தெரியும்
உணர்வு இழந்தால் சுவைகள் மறையும்
உணர்வு இழந்திடும் நாக்கைப் பெற்றால்
உறைப்பும் தெரியா இனிப்பும் தெரியா

உறைப்பும் இனிப்பும் சேர்ந்ததே வாழ்க்கை
கசப்பும் துவர்ப்பும் கலந்தே இருக்கும்
உப்பும் வேண்டும் சுவையாய் இருக்க
அளவோ டிருந்தால் அதுதான் வாழ்க்கை

உள்ளே போகும் உணவை ருசிக்க
உமிழ்நீர் சுரப்பது முக்கிய மாகும்
உணர்ச்சி இருந்தால் உமிழ்நீர் சுரக்கும்
உணர்ச்சி இழந்தால் உமிழ்நீர் சுரக்கா

அனைத்துக்கு மடிப்படை நாவே ஆகும்
நாவை நன்றாய் வைத்திடல் அவசியம்
சுவைக்கும் வேண்டும் அவைக்கும் வேண்டும்
நாவைக் காத்தால் நன்மையே விளையும்

நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே
காவா விட்டால் கலியிடம் சிக்குவோம்
ஏனைய காப்பது முக்கியம் அல்ல
நாவைக் காப்பதே வாழ்வுக்கும் முக்கியம்

காயும் இருக்கு கனியும் இருக்கும்
கனியினை யாவரும் விரும்பியே ஏற்பர்
கனியாய் இருக்கும் சொற்களைத் தேர்ந்து
உரைப்பதே நாவின் உன்னதம் ஆகும்

கனிவுடைச் சொற்களை வழங்கிட வேண்டும்
கசப்புடைச் சொற்களை ஒதுக்கிட வேண்டும்
தீயினாற் சுட்டால் ஆறியே போய்விடும்
நாவினால் சுட்டால் வாழ்வெலாம் இருந்திடும்

பொய்யை உரைப்பதும் நாவே யாகும்
பொங்கிடும் வகையில் உரைப்பதும் நாவே
ஐயம் இடுவெனச் சொல்லும் நாவால்
அநியாயம் செய்யெனச் சொல்வது தகுமா

நமச் சிவாய சொல்வதும் நாவே
நாராயணா எனச் சொல்வதும் நாவே
யேசுவே நபியே என்றுமே சொல்லிடும்
நாவே நஞ்சினை கக்கிடல் முறையா

நாவைக் காப்போம் நல்லவை உரைப்போம்
நாவைக் காத்து நல்வழிப் படுத்துவோம்
நாவே நமக்கு வாய்த்த நல்வரமென
நாளுமே எண்ணி நாவைக் காப்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.