ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினெட்டாவது ஸ்லோகம். இந்தப் பாடலை ஸ்ரீ வசியகரம் என்பர். இந்தப் பாடலைச் சொல்பவர்களுக்கு மூவுலகப் பெண்களும் வசியம் ஆவார்கள் என்பது மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வீறுகவி அருணகிரிநாதர் பாடிய ‘ஏறு மயில் ஏறி’, இதோ கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். தை கிருத்திகையைக் கொண்டாடுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன், கனடா
மண்ணை நம்பி
மரம் இருக்குது செல்லப் பாப்பா.
மழையை நம்பி
மண் இருக்குது நல்ல பாப்பா.
காற்றை நம்பி
மழை பொழியுது கண்ணு பாப்பா.
மரத்தை நம்பி
குருவி வசிக்குது கருத்த பாப்பா.
பயிரை நம்பி
பறவை தேடுது உறவு பாப்பா.
உயிரை நம்பி
உடல் உள்ளது கண்ணு பாப்பா.
உடலை நம்பி
உயிர் இருக்குது சின்ன பாப்பா.
தாயை நம்பி தொட்டிலில்
சேய் தூங்குது செல்லப் பாப்பா.
சேயை நம்பி
தாயும் பால் கொடுப்பாள்
தங்கப் பாப்பா.
பெத்த தாய் ஏன்
பெண் சிசுவை அழிப்பதெனக்
கேளு பாப்பா ?
குப்பைத் தொட்டியை
எட்டிப் பார்த்தால்
“இங்கா, இங்கா” மழலை கேட்குது
தங்கப் பாப்பா.
முதியோரைக் கண்காணிப்பு
இல்லத்திலே
தள்ளுவது ஏனென்றும்
கேளு பாப்பா?
ஊருலகில் வாழ்வதற்கு
யாரை நம்பி யார் இருக்கார்
கூறு பாப்பா ?

தை கிருத்திகையில் முருகனை வணங்கினால், மும்மடங்கு பலன் கிட்டும் என்பர். வழிகாட்டும் தெய்வம் கண்டேன் என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இந்தத் தை கிருத்திகையில், குமரனை வணங்கி அருள் பெறுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
சுந்தர காண்டத்தின் இறுதிப் பகுதியாக அமைந்திருப்பது ’திருவடி தொழுத படலம்.’ இந்தப் பெயரை நோக்கும்போது இலங்கையிலிருந்து புறப்பட்ட அனுமன், கிட்கிந்தை சேர்ந்து இராமனின் திருவடிகளைத் தொழுததைப் பற்றிப் பேசும் படலமிது என்றுதான் எண்ணுவோம். அது சரிதானா? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.
இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன், இலங்கையின் அருகிலிருந்த ’அரிஷ்டம்’ என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.
அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்தி, அவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.
எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்; எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.
இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள், அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.
…பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6009)
அங்கதன், சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன், சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.
வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவே, அங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும், அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன், தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோ, இலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!
ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6015)
தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்; நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.
அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும், இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.
இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர். அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள், அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்; களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர். அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான். அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.
வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும். நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!
சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான். அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான். வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும், தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.
எனினும், குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவே, அவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன், அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.
அதுகேட்ட சுக்கிரீவன், ”தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்” எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கி, ”மகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டா; அத்தோடு, வாலி சேயான அங்கதனின் அரசல்லவா இது? எனவே, அவனைத் தண்டித்தல் முறையாகா! அவனிடம் நீ சரணடைதலே சரியானது!” என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.
திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவே, அவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்து, இணக்கம் பிறந்தது. இனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.
கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன். வந்தவன், இராமனைத் தொழுதானா என்றால் இல்லை! ”தாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பி, நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான்” என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6028)
சீதை, கற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன், இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.
எனவே, ’திருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.
அனுமனின் செய்கையால், ”அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்; அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது” என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.
வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்; அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.
இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில், அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.
”தேவர்களுக்குத் தலைவனே! கற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்; இனி, பிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்!” என்றான் அனுமன்.
கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான். (கம்ப: திருவடி தொழுத படலம்: 6031)
இப்பாடலில் பயின்று வந்துள்ள ’கண்டனென்’ என்ற சொல் ’த்ருஷ்டா ஸீதா’ என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியது. எனினும், அதனை அடுத்துள்ள ’கற்பினுக்கு அணியை’ என்ற கம்பரின் சொல்லாடல், ‘ஸீதா’ எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
”ஐய! தவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதை, கடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள்” என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.
வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6037)
வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும். ஆனால், கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காது, பன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம். அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன், அசோகவனத்தில், சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர், அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.
தொடர்ந்து பேசிய அனுமன், ”கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டு, உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்!” என்று இராமனைப் பாராட்டுகின்றான்.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6043)
மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.
”நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள், அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள்” என்ற அனுமன், “இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்; அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன்” என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான்.
இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமை, சிறையிருந்த சீதையின் கற்புத்திறம், அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன், பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்து, சீதை தந்த அடையாளமாய், இராமனிடம் காட்டினான்.
அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன். அவன் உரோமங்கள் சிலிர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன; மார்பும் தோள்களும் பூரித்தன.
அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.
”சீதையை மீட்கும் பணிக்கு எழுக!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன். வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டது. அனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும், அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ள, வானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினேழாவது ஸ்லோகம். வாக்குத்தேவிகள் சூழ்ந்திருக்க, அம்பாள் எப்படிக் கொலுவிருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் விவரிக்கிறது. இந்த நிலையில் உன்னை யார் தியானிக்கிறார்களோ, அவர்கள் அரும்பெரும் காவியங்களை இயற்றும் வல்லமையைப் பெறுகிறார்கள். சொல்லின் செல்வியான அன்னையின் பெருமையை மதுமிதாவின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
வீட்டு உணவு சலிப்பதற்கும் அயல் உணவு பிடிப்பதற்கும் காரணம் என்ன? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளிக்கிறார். இந்தச் சுவையான கலந்துரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினாறாவது ஸ்லோகம், உதய சூரியனை ஒத்த நிறமுடைய அன்னையை வணங்குவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பாடல் விவரிக்கிறது. அட்சர சொரூபமான அம்பாளை உபாசனை செய்து வந்தால், கேட்போரையெல்லாம் வசீகரித்துவிடக்கூடிய அபாரமான சொல்வன்மையைப் பெற்றுவிடலாம். இதற்கு நல்ல உதாரணம், காளிதாசர் என்கிறார் மதுமிதா. அவரது இனிய குரலில் எளிய தமிழில் அன்னையைத் தியானிப்போம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்
விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டிய தொலைக்காட்சி நாடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை இழிவுபடுத்தி, தங்களது நாடகங்களின் ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு வருவது வேதனையான விஷயம்.
தமிழகத்தின் பெருமை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் குடும்ப வாழ்க்கையும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒவ்வொருவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துகொண்டே வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் இந்தத் தொலைக்காட்சிகள் தாங்கள் ஒளிபரப்பும் நாடகங்கள் மூலம், கொஞ்சமாக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டு உள்ளார்கள்.
எந்த ஒரு நாடகத்தைப் பார்த்தாலும் இரண்டு பொண்டாட்டிகள் அல்லது மணமான ஹீரோவின் மீது மையல் கொள்ளும் பெண்கள் எனப் பெண்களை இழிவுபடுத்தியே தொடர்களை இயக்கிக்கொண்டு உள்ளார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பெண்களை இழிவுபடுத்தி இப்போது சமீபத்தில் ஒரு நாடகத்தில் “பள்ளிக்குப் பிள்ளைகளைக் கொண்டு இறக்கிவிட்டு வரும் பெண்ணை வழிமறித்து, செல்பி எடுத்துக் கொடுமை செய்கிறார்கள். அதை அங்கு வரும் வேறு பெண்கள் குத்திக்காட்டிக் கொடுமை செய்யும் புது விதக் கொடுமையைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்தக் காட்சியை முன்னிறுத்தி மற்ற நாடக இயக்குநர்களுக்கும் இந்த கான்செப்ட் விரிவுபடுத்தி எடுக்க, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இருப்பார்கள்.
இதுபோன்ற கொடுமையான காட்சிகளை அடிக்கடி காண்கிறோம். அவர்கள் எடுக்கும் நாடகங்களின் ரேட்டிங் உயர்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, பெண்களை இழிவு செய்யும் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இவற்றைக் கண்டு எந்தப் பெண் விடுதலை இயக்கமும் குரல் கொடுக்க முன்வருவது இல்லை. இதுதான் கொடுமையான விசயம்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களைத் தணிக்கை செய்ய, சென்சார் போர்டு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும். மாதர் சங்கங்கள் இதுபோன்ற நாடகங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முன்வரவேண்டும். இதற்கு வல்லமை மின்னிதழ் தகுந்த ஆலோசனைகளை மாதர் சங்கங்களுக்கும் அரசுக்கும் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை.
நன்றி
அன்புடன்
சித்திரை சிங்கர்
அம்பத்தூர்

மூலம்: எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
சூரியன் எப்படி எழுமெனச் சொல்வேன்
கதிர் நாடா ஒன்று ஒருதரம் சிதறும்.
ஆலயக் கோபுரம் கதிரொளி மேவும்
செய்தி அணில்கள் போல் விரையும்.
I’ll tell you how the sun rose, —
A ribbon at a time.
The steeples swam in amethyst,
The news like squirrels ran.
குன்றுகள் சிகரம் அவிழ்ந்து விடும்
குயிலின் கூவல்கள் துவங்கி விடும்
எனக்குள் முணு முணுப்பேன் நான்
அது தான் கதிரவன் செயலெனக் கண்டு.
The hills untied their bonnets,
The bobolinks begun.
Then I said softly to myself,
“That must have been the sun!”
சூரியன் மறைவ தெப்படி அறிந்திலேன்
அங்கோர் பழுப்பு மண் மேடு தெரியுது
பன்னிறச் சிறுவர், சிறுமியர் எப்போதும்
ஏறிச் சுவர் தாண்டு வதைக் காண்பேன்.
But how he set, I know not.
There seemed a purple stile
Which little yellow boys and girls
Were climbing all the while
அடுத்த பக்கம் ஏறி அவர் இறங்கவும்
அதிகாரப் போதகர் சாம்பல் உடையில்
மெல்ல மாலை சட்டம் சபை கூடி
சேய்கள் செல்ல வழி வகுப்பார்.
Till when they reached the other side,
A dominie in gray
Put gently up the evening bars,
And led the flock away.
*****************
பெரு வலிக்கு பிறகோர் உணர்வு வந்திடும்.
நரம்புகள் முறிவு சமாதிபோல் தங்கிடும்.
நெஞ்சு கேட்கும் இறுகி, தாங்குவது ஈசனா ?
நேற்று நிகழ்ந்த நேர்வா, நூறாண்டு முன்னதா ?
After great pain, a formal feeling comes –
The Nerves sit ceremonious, like Tombs –
The stiff Heart questions ‘was it He, that bore,’
And ‘Yesterday, or Centuries before’?
பாதங்கள் யந்திர மாய்ச் சுழற்சி
மரக் கால்கள் போல் ஓர் உணர்ச்சி
தரைமேல், அல்லது ஆகா யத்தில்
ஏதோ ஒன்றாய் மேலாய் இருப்பினும்
சாதா கல்போல் இருக்கும் திருப்தி.
The Feet, mechanical, go round –
A Wooden way
Of Ground, or Air, or Ought –
Regardless grown,
A Quartz contentment, like a stone –
இந்த தருணம் ஈய மய மானது
நினைவில் கொள்வது அது நீடித்தால்
குளிரில் உறைவோர் பனிப்பூ காண்பர்
முதலில் குளிர்ச்சி, பின் விந்தை நிகழ்ச்சி
அதற்குப் பிறகு மரண விடுவிப்பு.
This is the Hour of Lead –
Remembered, if outlived,
As Freezing persons, recollect the Snow –
First – Chill – then Stupor – then the letting go –

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்
வரலாறு
வயலில் கயல் உகளும் அவ்வூரில் வாழும் முருகநாயனார் தாம் செய்த தவத்தால், விடை மேல் வரும் சடையார் அணிந்து கொள்ளத்தக்க திருப்பள்ளித்தாமம் எனப்படும் தலை மாலைக்குரிய பூக்களைப் பறித்து பூணூல் அணிந்த வேதியராகிய அடியார், வேதவாக்கியங்கள் நான்கிற்கேற்ற அவற்றைத் தனித்தனிப் பூக்கூடை களில் இட்டார்.
மரங்களிலும், செடிகளிலும் , கொடியிலும், நீரிலும் பூக்கின்ற மலர்களின் தரம், விரியும் நேரம், பறிக்கும் நேரம் ஆகியவற்றை நுட்பமாக உணர்ந்து வேதத்தின் ஆறங்கம் போன்ற கோவை, இண்டை, கண்ணி , மாலை, பிணையல், தொடை ஆகிய ஆறு வகைகளில் அஞ்செழுத்து ஓதித் தொடுத்தார்.
அவர் வேதியர் என்ற முறையில் திருஞான சம்பந்தரின் நண்பர் என்ற பெருமை பெற்றார். அயனும் மாலும் அறியாத சிவன் எழுந்தருளும் வர்த்தமான ஈச்சுரத்தில் நாளும் பொழுதும் வழுவாமல் அஞ்செழுத்தோதி வழிபட்டார். பின்னர் திருஞான சம்பந்தருடன் இணைந்து இறைவன் திருவடி அடைந்தார். இதனைச் சேக்கிழார்,
அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்
என்று பாடினார்,
அப்பாடலின் பொருள்
அவ்விடத்து அமர்கின்றதிருமுருகனார்,அழகிய புகலியில் வந்த ஆளுடைய பிள்ளையாருடைய சிவம் பொங்கும் திருமணத்தில் முன்செய்த பூசையின் பயனாலே புகுந்தருளிச், செங்கண்ணுடைய வலிய இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய இனிய பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.
விளக்கம்
அங்கண் என்ற சொல் அவ்விடத்து என்ற பொருளில் அவ்வூராகிய புகலூரில் என்றும், அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினும் அமையும். அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.
அமரும் என்ற சொல், விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும் ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும் என்ற பொருளைக் காட்டும் அழகார் புகலி என்ற தொடர் , புகலி என்ற சீகாழியைக் குறிக்கும். புகலியின் அழகுச் சிறப்புக்களை ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும், பாட்டுக்களாலும், பிறவிடங்களாலும் கண்டுகொள்ளலாம்
பொங்குமணம் என்ற தொடர், சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம் பெருக்கும் திருமணத்தைக் குறித்தது . பொங்குதல் – மேன்மேல் வளர்தல். திருமணத்தில் வந்த எல்லாரும் சோதிவாயிலினுள்ளே புகும்வரை சோதியோங்கியும் அத்திருவாயில் திறந்தும் சிவத்துவம் வளர்ந்துகொண்டேயிருந்த வரலாற்றைக் காட்டியது..
முன்செய்தபூசை என்ற தொடரில், இப்பிறப்பிற்செய்த பூசையும், அப்பூசைக்குக் காரணமாயிருந்த முன்னைத் தவமும் கூறப்பெற்றது
பூசையதனாற்புக்கருளி என்ற தொடர், ஆளுடைய பிள்ளையாரது திருமணத்திற் புகுவதற்குப் பூசைகாரணமாகிய.து. பூசையாகிய தவம் செய்தோரே அத்திருமணத்திற் புகப்பெற்றார் என்பதுண்மை. என்னை? அதிற்புகுந்தோர் அனைவரும் முத்தியடைந்தமையாலும்,
சிவஞான சித்தியாரில்,
“வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத், திறத்தடைவர்
இதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்”
என்பதும், தவஞ் செய்யாதார் சிவனடி சேரார் என்பதும் உண்மை முடிபாதலாலும் முன்செய்த பூசைகாரணமாகத் திருமணத்திற்புக்கனர் என்றார். அவ்வாறு திருமணத்திற் புகுதலே முத்திபெற்ற தாய் முடிந்ததாலின் புக்கருளி என்று அருமைப்பாடு பெறக்கூறினார்.
சிறந்த அருள் இன்பொருள் சிவனருளையும் இனிய சிவானந்தப் பயனையும் குறித்தது.
அடிநீழல் தலைஆம் நிலைமை என்ற தொடரில், நீழல் தலை – நீழலின் கண்ணே என்பதைக் காட்டியது. ஆம் – ஆகின்ற. நிலைமை – நிலைபெற்ற தன்மை – மீளாநிலையாகிய பேராவியற்கை ஆகும். இது சிவனடி பெறுதலாகிய நிலைத்த வீடுபேறு…
சிவஞான சித்தியாரில் .”செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்” என்றும்,
“ஈனமிலாப்பொருளதனைச் சிந்தித்த லைந்தும்,
இறைவனடி யடைவிக்கும் எழில்ஞான பூசை”
என்றும் கூறியபடி இந்நாயனார் செய்த பூசை இவருக்கு ஞானசம்பந்தரின் திருமணத்தின் வழியே இறைவனடியில் குடியிருக்கும் நிலை தந்தது. ஞானத்தாற் சிவனடி சேர்தல் என்ற உண்மையானது இந்நாயனாரளவில் ஞானசம்பந்தரது துணையால் என்ற குறிப்புத்தர நிகழ்ந்ததும் காண்க. அது குறிக்கவே ஆசிரியர் “மணத்திற் புக்கருளி அடிநீழல் – நிலைமை சார்வுற்றார்” என்றருளினர்.
இந்நாயனார் மலர்பறித்துச் சாத்திமகிழ்தலாகிய சரியையும், சாந்தம் புகை முதலியன கொண்டு சிவலிங்கத்தில் பூசித்தும் அருச்சித்தும் வழிபடுதலாகிய கிரியையும், அஞ்செழுத்துப் பயிலும் அகப்பூசையாகிய யோகமும், செலுத்தியபடியால் அவை காரணமாக ஞானத்தினுட் புகுந்தனர் என்ற குறிப்பும் பெறப் பூசையதனால் புக்கருளி என்ற தொடரின் நயமாயிற்று.
சார்வுற்றார் என்ற தொடரில் சார்பு – சைவசித்தாந்தம் உணர்த்தும் மரபுப்பெயர். முன்னர், இப்பிறவியின் சார்வுற்ற உயிர், தான் சாரவேண்டிய மேலைச்சார்பினையுணர்ந்து, இவ்வுலகச் சார்பு கெட ஒழுகிய சிவஞான ஒழுக்கத்தாலே சிவனடி நீழலாகிய நிலைத்த சார்பினை அடைந்தார்! இவ்வாறு இந்நாயனார் சிவனடி நீழல் சார்வுற்ற சிறப்பை,
“சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்”
என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்திருப்பாட்டாலும் அறிகிறோம்.
இப்பாடலில் முருக நாயனார் ஞானசம்பந்தப் பெருந்தகையின் நட்பைப் பெற்றதையும், தாம் செய்த சரியை முதலிய நான்கின் வழியிலும், அவருடன் சிவலோகம் சென்றதையும் விளக்குகிறது!

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(388)
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
– திருக்குறள் – 400 (கல்வி)
புதுக் கவிதையில்…
ஒருவனுக்கு
அழிவே இல்லாத
அதிகம் சிறப்புடைய
செல்வம் கல்வியே,
அதை விடுத்துப்
பொன் பொருள் போன்றவை
அனைத்துமே சிறப்புடை
செல்வமே யல்ல…!
குறும்பாவில்…
கல்வியே ஒருவனுக்கு
அழிவில்லா சிறப்புடை செல்வம், அதுவன்றிப்
பிறவெல்லாம் செல்வமேயல்ல…!
மரபுக் கவிதையில்…
கல்வி மட்டும் ஒருவற்கு
காசினி தனிலே பெருஞ்செல்வம்
எல்லை யில்லாச் சிறப்புடனே
என்றுமே அழியாத் தன்மையதே,
இல்லை யதற்குக் களவதுவும்
எடுப்பதி லேதும் குறையாதே,
செல்வ மிதனைத் தவிரவெல்லாம்
செல்வமே யில்லை பாரினிலே…!
லிமரைக்கூ…
கல்வியது சிறப்பினில் பெரிதே
செல்வ மதுபோல் வேறில்லை ஒருவற்கு,
இதைப்போல் கிடைத்தல் அரிதே…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்..
ஒலகத்தில ஒருவனுக்கு
ஒசந்த செல்வம் கல்விதான்,
அது அழிவில்லாதது
களவு போவாது
குடுத்தாலும்
கொறஞ்சி போவாத செறப்புள்ளது,
பொன்னு பொருளுங்கிற
மத்த செல்வமெல்லாம்
செல்வமே யில்ல..
தெரிஞ்சிக்கோ,
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்…!

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினைந்தாவது ஸ்லோகம், அம்பிகையின் ரூப வர்ணனையில் தொடங்கி, அருளின் மேன்மைகளில் விரிகிறது. கல்வி, கேள்விகளில் சிறப்புப் பெற்றிருக்க, கவித்துவத்தை விரும்புகிற அனைவரும் இந்தப் பாடலையும் இதற்கு அடுத்து வரும் பாடலையும் தியானித்தால், முழுப் பலன் கிடைக்கும். இந்த அழகிய பாடலை எளிய தமிழில் மதுமிதா வழங்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)