செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(388)

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

– திருக்குறள் – 400 (கல்வி)

புதுக் கவிதையில்

ஒருவனுக்கு
அழிவே இல்லாத
அதிகம் சிறப்புடைய
செல்வம் கல்வியே,
அதை விடுத்துப்
பொன் பொருள் போன்றவை
அனைத்துமே சிறப்புடை
செல்வமே யல்ல…!

குறும்பாவில்

கல்வியே ஒருவனுக்கு
அழிவில்லா சிறப்புடை செல்வம், அதுவன்றிப்
பிறவெல்லாம் செல்வமேயல்ல…!

மரபுக் கவிதையில்

கல்வி மட்டும் ஒருவற்கு
காசினி தனிலே பெருஞ்செல்வம்
எல்லை யில்லாச் சிறப்புடனே
என்றுமே அழியாத் தன்மையதே,
இல்லை யதற்குக் களவதுவும்
எடுப்பதி லேதும் குறையாதே,
செல்வ மிதனைத் தவிரவெல்லாம்
செல்வமே யில்லை பாரினிலே…!

லிமரைக்கூ

கல்வியது சிறப்பினில் பெரிதே
செல்வ மதுபோல் வேறில்லை ஒருவற்கு,
இதைப்போல் கிடைத்தல் அரிதே…!

கிராமிய பாணியில்

செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்..

ஒலகத்தில ஒருவனுக்கு
ஒசந்த செல்வம் கல்விதான்,
அது அழிவில்லாதது
களவு போவாது
குடுத்தாலும்
கொறஞ்சி போவாத செறப்புள்ளது,
பொன்னு பொருளுங்கிற
மத்த செல்வமெல்லாம்
செல்வமே யில்ல..

தெரிஞ்சிக்கோ,
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *