Blog

  • ஒளியும் ஒலியும்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    என்னை அறியாமல் என் தலைப்புகள் அதனுள்ளே ஒரு நினைவைப் பதித்துக் கொண்டு விடுகின்றன. இதுவும் அப்படித்தான். தொலைக்காட்சி வந்த புதிதில் வெள்ளிக்கிழமைகளை மகிழ்ச்சியாக்கின தொலைக்காட்சி நிகழ்ச்சி. பார்க்க ஒரு திருவிழாக் கூட்டம். இன்று எல்லாரிடமும் டி.வி. செட் ஆஃப் பாக்ஸ். அலுத்துப் போகும் அளவுக்கு ஒளியும் ஒலியும்.

    Photo0144முன்கதையைச் சுருக்கிவிட்டு சொல்லவந்த செய்திக்குப் போகலாம். முதலில் ஒளி வேகத்தில் முந்தி இருப்பதால் அதை பார்ப்போம். இறைவன் நமக்கு நாளைத் தந்திருக்கிறான். அதில் ஒரு பாதி பகல் இன்னொரு பாதி இரவு. இரவு ஒளியற்றது. இருட்டு. நாம் அந்த இரவை பகலாக்குகிறோம். இந்த பகலை இருளாக்குகிறோம். இயற்கைக்கு மாறாக இருப்பதால் நம் உடலும் மனமும் இயற்கைக்கு மாறாக இருந்து விடுகிறது.

    பகல் உழைப்பதற்கு, உண்பதற்கு, உணர்வதற்கு, உவப்பதற்கு. இதில் எதையாவது நாம் செய்து கொண்டிருக்கிறோமா? வாழ்க்கை என்பதன் வேர்ச்சொல் வாழ்வு. வாழ் என்றால் அதை மகிழ்வாக வாழ்வது. இப்போது கூட ஒரு சொல்வழக்கு உண்டு.”வாழ்வுதான்”. எல்லாம் இருந்தும் வகைப்படுத்தமாட்டாமல் ஒன்றில் முயங்கி பிறவற்றை இழந்து அந்த இழப்பைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இருந்து கொண்டிருக்கிறோம்).

    நம் முன்னோர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்ந்து காட்டியவர்கள். வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்தவர்கள். பகலில் வரும் சூரியன் என்னும் மாபெரும் சக்தியை உணர்ந்தவர்கள். உபயோகப்படுத்தியவர்கள். அந்தக்  கால வீடுகள் அதற்குச் சான்றாக இருந்தவை. நிழல் தரும் மரங்களை நம் வாழ்விடங்களின் முன்னும் பின்னும் அமைத்து இல்லத்தில் ஒளி வருமாறு அமைத்தார்கள். ஒளியும் காற்றும் அந்த இல்லங்களில் எப்போதும் வந்து போகும். அங்கு வளமையும் ஆரோக்யமும் எப்போதும் தங்கும்.

    இன்று அடுக்கங்களில் நம்மைப் பொருத்திக்கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் பகலை இரவாக்குபவை. ஒளி குறைவாக வரும் அமைப்பு. கதவுகளும் சாளரங்களும் இருந்தாலும் அடுத்தவர் வாழ்விடம் மிக அருகில் இருப்பதால் நம் வீட்டுக் கதவும் ஜன்னலும் நம்மை பிறர் கவனத்திலிருந்து தவிர்க்க எப்போதும் மூடப்பட்டிருகின்றன. அதன் விளைவு நாம் பகலிலும் விளக்கைப் பயன்படுத்துகிறோம்.

    வெப்பம் தவிர்க்க குளிர்பதனம் செய்த அறைகளில் சூரியப் பிரவேசம் தடை செய்யப்படுகிறது. அலுவலங்களிலும் இதே நிலைதான். பயணம் செய்யும் வாகனங்களிலும் ஒளியின் வெப்பத்தை தடுக்க ஒளியின் நன்மையை தடை செய்து விடுகிறோம்.

    Photo0383இரவு தூங்குவதற்காக இறைவன் மனிதனுக்கு கொடுத்த கொடை. சூரியனின் ஆதிக்கம் குறைந்து வானம் இருண்டு நம்மை இளைப்பாற வைக்கிறது. ஆனால் நாம் இரவைப் பகலாக்குகிறோம். விளக்குகளால் இருளைப் போக்குகிறோம். கேளிக்கைகளில், சந்திப்புக்களில் தொலைக்காட்சியில் பணியில் நம் இரவுகளை அடகு வைத்து நம் தூக்கதை இழக்கிறோம்.

    தூக்கமுன் கண்களைத்  தழுவட்டுமே அமைதியுன்  நெஞ்சில் நிலைக்கட்டுமே.என்ன அற்புதமான வரிகள். தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் தரும் சுகங்களையும் நன்மைகளையும் உணராமல் நாம் முரணான வாழ்க்கை வாழுகிறோம்.

    விளைவு தானாக வரவேண்டிய தூக்கம் வராததால் மதுவையும் மருந்தையும் நாட வேண்டிய கட்டாயம். இரவு தரும் இருட்டை இன்று நாம் உணர வில்லை ரசிக்க வில்லை. யோசித்துப் பாருங்கள்.

    மண்ணையும் வானத்தையும் பார்க்க மறந்த தலைமுறை நாம். நமக்கான கூரைகளை வேய்ந்து கொண்டு வானம் நமக்குப் புலப்படும் வகை அழித்து விட்டோம். பயணங்களிலும் நிலமும் வானமும் நாம் பார்க்க மறந்தவை.

    கும்மிருட்டு என்ற வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனுபவித்திருக்கிறீர்களா. இன்று இருபது வயது இருக்கும் இளைஞர்கள்மனதில் இருட்டைப் பற்றிய எண்ணமே இருக்க வாய்ப்பு இல்லாமல் அவர்களை வளர்த்து விட்டோம். விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வெளிச்சத்தை பரவ விட்டு இருளை புறக்கணிக்கிறோம். இரவு படுக்கை அறைகளிலும் முழு இருட்டு சாத்யமில்லாததாகிவிட்டது. குளிர் பதனக் கருவியின் ஒளிக்கசிவு அல்லது கணினியின் ஒளி, செல்போன் திரைவெளிச்சம் இப்படி ஏதாவது ஒன்று நம்மையும் காரிருளையும் இணைய விடாமல் செய்கிறது. நேற்று என் அடுக்ககத்தில் நாள் முழுவதும் மின்சாரம் இல்லை. இரவு மெல்ல வந்து இருள் என் வாழுமிடத்தை அணைத்துக் கொண்டது. நான் அதனை அன்போடு வரவேற்றேன். நடமாட ஒரு சிறிது வெளிச்சத்தை மட்டும் உபயோகப்படுத்தினேன். ஒரு மூன்று மணிநேரம் அந்த காரிரிருளுடன் கழித்தேன்.

    இன்றைய தலைமுறையை அப்படி ஒரு இருள் சூழ்ந்த அமைப்பில் விட்டால் தவித்து விடுவார்கள். அமைதியை கொடுக்க வேண்டிய இருள் அவர்களுக்கு அமைதியின்மையைக் கொடுத்துவிடும். நல்ல வேளை என் மகள் வீட்டில் இல்லை.

    நீங்கள் யாருமற்ற தனிமையில் வெட்ட வெளியில், கடற்கரையில், மலையடிவாரத்தில், அருவியின் அருகில் இரவை ஒரு பூரண சந்திரன் ஒளிவீசும் நாட்களிலோ பிறை நிலவும் விண்ணில் கோடி விண்மீன்கள் ஜொலிக்கும் வானத்திரையை கண்டு களித்திருக்கிறீர்களா? ஒரு முறையாவது வெளிச்ச வெள்ளத்திலிருந்து விலகி சிறிது வெளிச்சத்தின் உன்னதத்தில் திளையுங்கள்.

    Photo0330இறை வழிபாட்டில் கூட ஒளியைப் புகுத்தி விட்டோம். நம் புராதனக் கோவில்களில் பகலில் போதுமான வெளிச்சம்தான் இருக்கும்படி கட்டமைப்பு இருக்கும். கருவறை இருளில் மிளிரும். அகல் விளக்கின் பிரகாசம் விக்ரகத்தின் பள பளப்பை காட்டி நிற்கும். இரவு நேரங்களில் லிங்கத்தின் பின்னாலும் அம்மன் சந்நிதியிலும் பட்டை ஆடியில் முன் வைக்கப்படும் ஒரு அகல் விளக்கின் ஒளியில் ஏற்படும் பிரகாசமும் பரவசமும் இன்று இல்லை.

    வீதி உலாக்களில் வரும் தீவட்டிகளிலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் இரவின் அழகை குலைக்காமல் நமக்கு தந்த அருங்காட்சி இப்போது இல்லாமல் போய் விட்ட்து.

    எங்களூர் திரு இந்தளூர் கோவில் சப்பரத்தன்று இரவு நான்கு தெருக்களிலும் சாலை குறுக்கே வரும் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு தெரு இருளில் மூழ்கும். பனைமரத்தின் தென்னை மரத்தின் ஓலைகளில் பின்னப்பட்ட மிக உயரமான சப்பரம் இருளில் குறைந்த வெளிச்சத்தில் நகர்ந்து நம்மை நோக்கி வரும்போது கற்பூர ஒளியும் மெருகேற்றும் அந்த பேரழகை இனியும் நான் காணப்போகிறேனா என்று என்னுள் ஒரு ஏக்கம்.

    இருளில் இருக்கும் பழக்கம் நமக்கு இல்லாமல் போய்விட்டது எப்போதும் ஒரு ஒளியை நமக்குத் துணையாக வைத்துக் கொள்கிறோம்.

    அதேபோல் ஒலியும் நம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. நாம் கேட்க வேண்டிய பார்க்க வேண்டிய ஒலியையும் ஒளியையும் மறந்து விட்டோம். தேவையற்ற ஒலியை நம் காதுகளில்வாங்கி நம் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

    வீட்டில் இருக்கும் போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ தொலைக்காட்சியின் ஒலி நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது செல்போனில் ஒலி. அல்லது வெளியே செல்லும்போது காரில் இசை குறுந்தகடுகளின் சுழற்சி இறைக்கும் சத்தம். அல்லது நாமே நம் காதுகளில் செருகி கேட்கும் சத்தங்கள். வெளிச் சத்தம் கேட்கவிடாமல் அதையும் மீறி செல்போனிலும் கணினியிலும் செய்தி வரும்போது வரும் சத்தங்கள். சாலையில் அலறும் வண்டிகளின் பேரிரைச்சல். சாகக்கிடப்பவர்களின் தங்க நேரங்களில் அவர்களை காப்பாற்ற நினைக்கும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் வழிகேட்டு கெஞ்சும் அலறல்கள். இப்படி ஏதாவது ஒரு ஓசை நம் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    நம் காதுகள் இயற்கை ஒலிகளை மறந்து ஆண்டுகளாகிறது. வீட்டில் கூட யாரும் யாரிடமும் பேசும் நேரம் மிக குறைந்து விட்டது. குழந்தை அழும் சத்தம். இவையெல்லாம் மறந்து விட்டது.

    உங்களுக்கு கொஞ்சம் ஞாபகபடுத்த விரும்பும் நான் கேட்ட ஒலிகளை இப்போது பட்டியலிடுகிறேன். இதையெல்லாம் கடைசியில் எப்போது கேட்டீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    Photo0328வெளியிலும் வீட்டிலும் கேட்ட எத்தனை ஒலிகள். இயற்கையானவை இன்று நாம் கேட்பதில்லை. வீட்டின் பின்புறம் கட்டியிருக்கும் பசுவின் ஓசை. சுவரில் பல்லியின் சத்தம். பூனையின் மியாவ், குயிலின் இசை, கூரையின் மீது ஏறி நின்று கொண்டை நிமிர்த்தி சேவலின் கொக்கரிப்பு,  யானையின் பிளிறல், சுவர்க்கோழியின் இடைவிடாத சத்தம், மழைக்காலத்தில் தவளைகளின் வார்த்தைப் பறிமாற்றங்கள். காவிரியின் மதகடியில் சுழற்சியில் செல்லும் நீரின் சலசலப்பு. காற்றில் அசையும் மரங்களின் பெரிய சத்தம், மூங்கில் மரங்களின் உரசல்கள், கோவில் மணியின் ரீங்காரம், ஒலி பெருக்கியில்லாமல் கோவிலில் வாசித்து காற்றில் பரவும் நாதஸ்வரம். விழாக்காலங்களில் ஸ்வாமி புறப்பாட்டுக்கு முன்னால் வெடிக்கும் அதிர்வேட்டு. வீட்டில் தயிர் கடையும் சத்தம். ஆசாரியின் இழைப்புலி வெளிப்படுத்தும் இசை, இரவின் அமைதியில் நடப்பவர்களின் செருப்புத் தேய்வுகள், மரங்கொத்தியின் கொத்து, மீன் கொத்தியின் நீர் மூழ்கும் தொபுக், உலைநீர் கொதிக்கும் சத்தம், கடிகார பெண்டுலத்தின் அசைவின் இசை, ஊஞ்சல் கம்பியின் உரசல்கள், கன்றுக் குட்டியின் கழுத்து மணி, பெண்ணின் கால் கொலுசு தரும் இசை. கதவுகள் மூடித்திறக்கும் போது வரும் கிறீச், ஹால் கடிகாரத்தின் மணிக்கொருதரம் வரும் மீட்டல்கள் மழை நீர் பந்தலில் விழும் சத்தம், இடியோசை இவையெல்லாம் இன்னும் பட்டியல் நீளும். உங்கள் கற்பனைக்கும் கொஞ்சம் விட்டு வைக்கிறேன்.

    அவை அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்த நினைவுகளினால் இந்த யுகத்து சத்தங்களில் கூட அதன் சாயல்களை என்னால் உணர முடிகிறது. இன்றைய என் புது செல்பேசியில் செய்திகள் அறிவிப்பு வரும் ஓசை அன்று நான் கேட்ட குளத்தில் உயரத்திலிருந்து சிறகொடுக்கி நீருக்குள் சட்டென்று மூழ்கும் மீன்கொத்தி எழுப்பும் ஓசையை ஒத்திருக்கிறது.

    தேங்காயோ, கறிவேப்பிலையோ அம்மியில் அரைக்கப்படும் போது மெதுவாக கனிவோடு அவை மென்மைப்படுத்தப்படும். இன்றைய மிக்ஸிகள் ஈவு இரக்கமின்றி ஒரு பெருத்த ஓசையுடன் அவைகளை கசக்கிப் பிழிவதில் எனக்கு வருத்தமே.

    என் மனதுக்கு இனியவர்களே என் வேண்டுகோளெல்லாம் அவசர யுகத்தில் உங்கள் ஓய்வு நாட்களில் கொஞ்சம் இயற்கைக்கு அருகில் இருக்க முயலுங்கள். ஒளியும் ஒலியும் நமக்கு அளிக்க நினைக்கின்ற கொடைகளை அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். புற ஒளி தவிர்த்து உள்ளொளி பெருக்கி உங்கள் உள்ளத்தின் குரலின் ஒலியை கேளுங்கள். வாழ்வை ஒளிமயமாக்குங்கள் . எழுதியபின் நான் அனுபவிக்கும் மௌனம் உங்களுக்கும் கிடைக்கட்டும். இன்னொரு நாள் சந்திப்போம் சிந்திப்போம்.

    Share
  • பாபாவை நினைப்பாய் மனமே!

    -பி.எஸ்.டி. பிரசாத்

    Sai Baba Shirdi (9)

    மனமே! மனமே! மனமே!
    பாபாவை நினைப்பாய்!
    தினமே! தினமே! தினமே!
    நினைத்தாலே சுகமே!
    சாயினாதன் சன்னதி!
    வேண்டி நின்றால் நிம்மதி!  (ம‌னமே!)

    ஆண்டி என்று சொன்னவர்க்கே அரசனானவன்! – தனை
    அண்டி வந்த அடியார்க்குத் தெய்வமானவன்!
    கன்றைக் காக்கும் தாய்ப்பசு
    போலக் காக்கும் ஈசனாம்!
    கோடி கோடி பக்தரின்
    அன்பைக் கொண்ட நேசனாம்!   (சாயினாதன் சன்னதி!)

    சீரடியில் அடிவைத்தால் கோடி புண்ணியம்! – பாபா
    ஈரடியைப் பணிந்தோர்க்கு ஏது சஞ்சலம்?
    பாபா பாதம் சரணமே!
    சேர்ந்தால் இல்லை துன்பமே!
    வெற்றி மேலும் மேலுமே!
    சேரும் நாளும் நாளுமே!  (சாயினாதன் சன்னதி!)

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)

    படக்கதை – 15

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 57Mukkonakkilikal - 58Mukkonakkilikal - 59Mukkonakkilikal - 60

    தொடரும்…

    Share
  • முஸ்லீம்கள் கவனிப்பார்களா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம தேதி பின் லாடன் அமெரிக்க வர்த்தகக் கட்டடங்களை விமானங்கள் மூலம் தகர்த்தெறிந்த சம்பவத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பற்றி ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு முன்னும் முஸ்லீம்கள் பற்றி தவறான எண்ணம் பலரிடையே இருந்தாலும் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அது வெகுவாக வலுப்பெற்றிருக்கிறது.  சௌதி அரேபியாவில் அமெரிக்கப் படை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது பின் லாடனுக்கு அமெரிக்காவின் மேல் ஏற்பட்ட கோபத்திற்கு முதல் காரணம்.  பின் லாடனின் கோபம் நியாயமானதுதான் என்று நினைத்து வேறு சிலரும் அவன் செய்த செயல்களில் அவனுக்குத் துணைபுரிந்தனர்.

    ஒரு சிலர் செய்த சில கொடிய செயல்களுக்காக உலகம் முழுவதும், குறிப்பாக மேலைநாடுகள், முஸ்லீம்கள் மீது வெறுப்பைக் கொட்டி அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டின.  உலகில் மோதல்கள் எங்கு நடந்தாலும் அவற்றில் முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தால் தவறு அவர்கள் மீதுதான் என்பது போன்ற படிமத்தை மீடியாக்கள் ஏற்படுத்தின.

    இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய இந்து-முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்டன.  இந்துக்கள் பெரும்பான்மையராக இருந்ததினால் கலவரங்களுக்குக் காரணம் முஸ்லீம்கள்தான் என்பது போல் பேசப்பட்டது.  இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிட்டனால் உருவாக்கப்பட்டபோது முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர வேண்டும் என்று கூட சில இந்தியர்கள் விரும்பினர்.  இந்தியாவின்மீது முஸ்லீம்களுக்குள்ள நாட்டுப்பற்றையும்  சிலர் சந்தேகித்தனர்.

    காந்திஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் எங்கள் அபிமானத்திற்குரிய பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு கன்னட எழுத்தாளரே ஒரு முறை அவரிடம் நான் ஆட்டோவில் சாதாரணமாகப் போவதில்லை என்று கூறியபோது, ‘முஸ்லீம் அல்லாத ஒரு ஓட்டுநரின் ஆட்டோவில் போவதில் அவ்வளவு பயம் இல்லை’ என்றார்.  அதுவரை நான் அவர் மீது வைத்திருந்த என் மதிப்புக் கொஞ்சம் குறைந்தது என்று கூறலாம்.

    மெத்தப் படித்த சட்ட வல்லுனரான ஒரு வழக்கறிஞர் வீடு கட்ட நிலம் வாங்கும்போது பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒரு முஸ்லீம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.

    சில நாட்களுக்கு முன் இன்னொரு நண்பரோடு (இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்) பேசிக்கொண்டிருந்தபோது காஸாவில் இஸ்ரேல் இப்படிப்பட்ட கொடுமைகள் புரிந்துவருகிறதே என்று ஆதங்கப்பட்டேன்.  எனக்கு ஆறுதலாக அவர் ஏதாவது கூறுவார் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘இஸ்ரேல் அரேபியர்களை அப்படி அடக்கிவைக்கத்தான் வேண்டும்’ என்றார்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி முழுவதும் புரியாமல் இவர் பேசுகிறார் என்பதோடு முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், அவர்கள் மற்றவர்கள் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்பது போல் பேசுகிறாரே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

    இப்போது இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவோடு காஸாவைத் தரைமட்டமாக்கிக்- கொண்டிருக்கிறது.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு என்ற ஈவு, இரக்கமற்ற பயங்கரவாதி வெஸ்ட் பேங்கையும் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாலஸ்தீனத்திலிருந்த பாதிப் பேரை யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்திருக்கின்றனர்.  இப்போது எல்லாப் பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதோடு மிஞ்சியிருப்பவர்களைக் கொன்றுகுவிக்கவும் நேத்தன்யாஹு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.  இந்த மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. என்னவோ செய்துகொண்டிருக்கிறது.  அதை எல்லாம் இஸ்ரேல் சட்டைசெய்வதாகத் தெரியவில்லை.  அமெரிக்கா இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவதின் மூலம்தான் இஸ்ரேலின் வன்கொலையை நிறுத்த முடியும்.  ஈரானின் மீதோ சிரியாவின் மீதோ தடைகள் கொண்டுவர வேகமாக முன்வரும் அமெரிக்கா இஸ்ரேலின் மீது ஏன் அப்படிப்பட்ட தடைகளைக் கொண்டுவரவில்லை?  ஏனென்றால் ஈரானும் சிரியாவும் இஸ்லாம் நாடுகள்.

    வல்லமையில் நான் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தது பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது வாசகர் ஒருவர் ‘நீங்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள்’ என்று என் மேல் குற்றம் சுமத்தினார்.  நான் பதிலுக்கு, ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  நான சரித்திர நிகழவுகள் எதையாவது திரித்துக் கூறியிருக்கிறேனா என்று கூறுங்கள்’ என்றேன்.  அவரிடமிருந்து பதிலே இல்லை.

    உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் முஸ்லீம்கள் ஏன் இன்னும் குரானில் கூறியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பழமைவாதத்தை விட மறுக்கிறார்கள்?  சமீபத்தில் சிரியாவில் தவறாக நடந்துகொண்டதற்காக  ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சொல்லி ஒரு திருமணமான பெண்ணை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய மிருகத்தனம்!  அவள் செய்தது தவறே என்றாலும் இப்படித் தண்டனை கொடுக்க வேண்டுமா? இறக்கும் வரை அவளைக் கல்லால் அடித்தபோது அவள் எத்தனை வேதனை அனுபவித்திருக்க வேண்டும்?

    அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள்.  அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எவ்வளவு வேதனை குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார்கள்.  அவர்களால் இம்சிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள் எத்தனை துன்பத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருந்தாலும் தண்டனை பெற்றவர்கள் அதே வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதி நினைப்பதில்லை.  அவர்கள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்தான், ஆனால் அதற்காக அவர்கள் வேதனை அனுபவித்து இறக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது அமெரிக்க நீதி.  இதுவல்லவா மனித இனம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்.

    ஒரு முறை அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது குற்றவாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டபோது அது சரியாக வேலைசெய்யாமல் அவன் ஐம்பது நிமிடங்கள் வலியால் துடித்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய விவாதங்களை எழுப்பியது.  இனி ஒரு போதும் இப்படி நடக்கவிடக் கூடாது என்று பலர் குரல் எழுப்பினார்கள்.  இப்படி மனித இனம் ‘வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கும்போது உயிர் போகும் வரை கல்லால் அடிப்பதையே ஒரு பெண்ணுக்குத் தணடனையாக வழங்கவேண்டுமா?

    ரம்ஜான் நோன்பின்போது ஒருவன் தாகம் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்ததற்காக அவனுக்குச் சவுக்கடி வழங்கப்பட்டிருக்கிறது ஈரானில்.  இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கைகளில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சமூகங்கள் ஈடுபடலாமா?  அவன் நோன்பைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன்தானே நரகத்திற்குப் போவான்?  அதைப் பற்றி ஏன் சமூகம் கவலைப்பட வேண்டும்?  மேலும் இப்படி நோன்பு மூலம்தான் இறைவனை அடையலாம் என்ற மூட நம்பிக்கையை இன்னுமா வைத்திருக்க வேண்டும்?  பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவர்களை இறைவன் எப்போதும் தன் பக்கம் சேர்த்துக்கொள்வான் என்பதை இந்தக் காலத்தில் கூட ஒரு சமூகம் உணரவில்லையா?

    உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களே, உலகத்தில் உங்கள் படிமத்தை உயர்த்திக்கொள்வதற்கு இது போன்ற  செயல்களை விட்டு நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து உணருங்கள்.

    Share
  • மல்லிகை என் மன்னன் மயங்கும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    malligai en mannan mayangum

    எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை,  ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு!  வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை!  எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..

    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ….

    கவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு!  ஏழிசை ஸ்வரங்கள் என்றால் அந்த ஸ்வரங்களாகவே வாழும் திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல்!  மயக்கும்  பாடல்!  மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே!  கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று!  ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்!

    vaalimsvvanikrv

    காணொளி: http://www.youtube.com/watch?v=OXb-MnTstR0

    பாடல்: கவிஞர் வாலி
    திரைப்படம்: தீர்க்க சுமங்கலி (1974)
    இசை: M S விஸ்வனாதன்
    குரல்: வாணி ஜெயராம்
    இயக்கம்:A C திருலோகசந்தர்
    நடிப்பு: முத்துராமன், K R விஜயா

     
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
    கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம் தான்
    கையோடு நான் அல்லவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ் வேளையில் உன் தேவை என்னவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
    ஓராயிரம் இன்ப காவியம்
    உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
    நம் இல்லம் சொர்க்கம் தான்
    நம் உள்ளம் வெல்லம் தான்
    ஒன்றோடு ஒன்றானது
    என் சொந்தமும் இந்த பந்தமும்
    உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    Share
  • காணவில்லை

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (12)

    காணவில்லை

    (கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே)

     

    images (2)
    சிட்டுக் குருவிகளைக் காணவில்லை என்று
    விசனத்தோடிருந்தார்கள்
    நான்மட்டும்
    கைகளை மடக்கிக் கழுத்தைப் பொருத்தி
    அண்ணாந்தபடி என்னுள்
    மல்லாந்திருந்ததைக் கண்டு
    நேயமற்றவன் என்று
    நெருங்கி விலகினார்கள்

    எப்படிச் சொல்வது…?

    ஒருநாள்
    எதையோ திறக்கப்போய்
    இதயம் திறந்துகொண்டபோது
    கூடமெங்கும் சிட்டுக் குருவிகளின்
    குதூகலம்.

    ஒரேபாட்டு, தன்னைத் தானே
    ஓயாமல் பாடிக்கொள்வதைப் போல
    எல்லாக் குருவிகளும்
    ஒரேமாதிரியாய்த்தான் இருக்கின்றன.

    எத்தனை இருக்கும்?
    எப்படித் தெரியும்??
    எழுத்துக் கூட்டியா பார்ப்பார்கள் மழலையை?

    ஒருவேளை
    மூச்சுவிடாமல் இங்குமங்கும் பறந்தபடி
    என்னவோ சொல்லிக்கொண்டே இருப்பதால்
    ஒன்றுதான் நூற்றுக்கணக்காய்த் தெரிகிறதா?

    இருக்கட்டும்
    இவைகளின்….இல்லை…இதன் தயவில்தான்
    இதயம் தட்டுப்பட்டது.
    இரவுபகலை அறவே காணோம்
    சிட்டுக் குருவிகளின் கீச்சுக்கீச்சே
    இதயத் துடிப்பாகிவிட்டது

    கணநேரம் அந்தக் கீச்சுக்கீச்சு நின்றால்
    அதே கூடத்தில் துளி இறகாய்
    நானே
    விழுந்திருக்கும் வினோதம் கண்டு
    மீண்டும் துவங்கும் கீச்சுக்கீச்சால்
    மீளவா போகிறது உயிர்?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    “கனக்கின்ற மாரியில், கோகுலத்தைக் காக்க,
    குணக்குன்றாம் கண்ணனவன் கோவர்த், -தனக்குன்றை,
    பேர்த்தெடுத்த பாவத்தைப், போட்டோ பிடித்ததுபோல்,
    வார்த்தெடுத்த கேசவர்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன் ….

     

    Share
  • சிட்டுக்குருவிக் கூட்டமே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (11)

     

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    (பாடல்)

    south-indian-women-paintings-wallpaper

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    சில்லுவண்டுச் சீட்டியே!

    சொட்டுச் சொட்டா எறங்கிவந்து தோளெத்தொட்டு மூச்சுப்பட்டு

    மொகவாயெ ஏந்தி என்ன

    முழுக்க முழுக்க மூழ்கடிக்கும் பரவசமே!

     

    பரவசமே! ஈசல்

    பரபரப்பே!

    படபடக்குற கண்ணுக்குள்ளெ பளபளக்குற மின்னலிலே

    கெறங்கிப்போன மனசக்கிள்ளிக்

    கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டுச்

    சிரிப்பவளே சிரிப்பவளே சிரிப்பவளே

     

    மனசெப் பந்தாக்கி மதில்மேலே எறியாதே! அது

    மருதாணிக் கைக்குள்ளெ மறுபடியும் சேரும்வரெ

    மாருத்துடிக்க வெக்காதே!

    கனவெயும் நெனவெயும் கலக்கிப்போட்டுக் கொழப்பாதே!

    காலத்தெ நிறுத்திவச்சுக் காவடிச் சிந்து பாடாதே!

     

    உள்ளங்கையி ரேகையே! என்

    உசுரெக் குலுக்கும் ராகமே!

    மெள்ளவுள்ளெ வந்திடாமெ மினுக்கிக்கிட்டு மேடையேறி

    நீட்டிப் படுத்துகிட்டு

    கொலுசுக் காலு கிணுகிணுங்கும் ஒய்யாரியே!

     

    ஒய்யாரியே! அட என்

    உல்லாசமே!

    ஒண்ணும் மிஞ்சாமெ ஊரெவாரிச் சுருட்டிக்கிட்டு

    ஒண்ணுமே தெரியாமெ

    கண்ணக்கொட்டி எதிரெ நிக்குற கைவிலங்கே!

     

    வெள்ளத்துக்கே திடுதிப்புன்னு தாகம்வந்து சேருமா?

    விறுவிறுன்னு வீதியேறி வீட்டுக்கதவத் தட்டித்தட்டி

    ஏக்கத்தோடு நிக்குமா!

    கொள்ளைக் கூட்டம்நம்மெக் கும்பிடுபோட்டுப் பாக்குமா?

    கொடுக்க வந்ததெய்வம் பழெயகடனக் கேக்குமா?

     

    ஆலவூஞ்சல் ஆட்டமே! அட என்

    அந்தரங்கத் தோட்டமே!

    காலு தாளம் போடும்போது ககனம் கரகம் ஆடுதடி

    காத்துக்குள்ளே மூச்சாகி மூச்சுக்குள்ளே உசுராகி

     

    உசுருக்குள்ளே சிரிப்பவளே! என்னெ

    உருக்கி உருக்கி வளர்ப்பவளே!

    வருசம்மாசம் வாரமெல்லாம்

    வாசலோடு கோலமாச்சு

    வந்துசேர்ந்த ஒருகணந்தான்

    பூசணிப்பூ சிரிப்பாச்சு!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம்-கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     

    crazy

    “நீலவுடல் மஞ்சளாச்சு, பீலிமயில் பின்னலாச்சு,
    கோலமிதன் காரணம் கூறுகண்ணா!, -ஆலமுண்ட,
    நாரிபாகன் போலநீயும், மாறினாயோ ,கேசவனின்,
    தூரிகை வண்ணத்தில் தோய்ந்து”….!கிரேசி மோகன் ….

    Share
  • கற்றல் ஆற்றுப்படை – கற்றல் வழிகாட்டி – பயிலரங்கம்

    சொ. வினைதீர்த்தான்
    1

    காரைக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்துப்பட்டணத்தில் அமைந்துள்ளது. எண்ணூறு மாணவிகள் பயில்கிறார்கள். பிளஸ் 2 படிக்கும் 124 மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் 24.07.2014 அன்று நடத்தும் வாய்ப்புப் பயிற்சியாளர் திரு வினைதீர்த்தான் அவர்களுக்கு அமைந்தது. தலைமை ஆசிரியை திருமதி சந்தானம், கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ணன், ஆசிரியர் திரு சார்லசு ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

    2aபோதுமான இடமில்லாததால் பெரிய பரிசோதனைச் சாலை கூடத்தில் நடுவில் மேடை போன்ற அமைப்பிருந்தாலும் இரண்டு பக்கங்களிலும் மாணவியர் அமர்ந்திருந்து மிகுந்த கவனத்துடன் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    பயிலரங்கின் நோக்கங்களான 1.மனித உறவுகள் மேம்படுத்தல் 2.நினைவாற்றல் பெருக்கல், தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ளல் பற்றிய சிந்தனைகள் விதைக்கப்பட்டன.

    கற்றலில் ஆறு நிலைகள் 6 ‘R’s Read, Record, Reproduce, Refer, Rectify, Revise (படி,பதி,நினை,பார்,செவ்வையாக்கு,மீளவும்செய் என்பன கற்றல் வழிகாட்டியாக
    (கற்றல் ஆற்றுப்படை) கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டது.

    கற்றல் ஆற்றுப்படை.

    READ – படி2
    RECORD – பதி
    REPRODUCE – நினை
    REFER – (அசலை,பதிந்ததை) பார்
    RECTIFY – செவ்வையாக்கு
    REVISE – (மேற்கண்டவற்றை) மீளவும் செய்.

    1.முதலில் ஒரு கேள்விக்கான பதிலை படிக்கவேண்டும்.
    2.அடுத்து அந்தப் பதிலுள்ள முக்கியமான சொற்கள் 4,5 ஐ குறிப்புப் புத்தகத்தில் பதிந்துகொள்ள வேண்டும்.
    3.மூன்றாவதாக அப்பதிந்த சொற்களை வைத்துப் பதிலை (படித்தை) நினைவு கூரவேண்டும்.
    4.நினைவுகூர்ந்தது சரியா என்று அசலை ஒருமுறை பார்க்க வேண்டும்.
    5.தேவையென்றால் பதிந்த முக்கியச் சொற்களோடு ஒன்றிரண்டு சேர்த்துச் செவ்வையாக்கிக் கொள்ள வேண்டும்.
    6.மேற்கூறியவற்றை மீளவும் செய்து கற்றலைச் செழுமை செய்துகொள்ள வேண்டும்.

    4கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கெடுத்துக்கொண்ட மாணவியர் பயிற்சியில் தாங்கள் கற்றவற்றைப் பதிவாக எழுதிக்கொடுத்தனர். கற்றலில் இவ்வாறு எழுதிப் பார்ப்பதும் ஒரு பகுதி என உணர்த்தப்பட்டது.
    ஒரு பெண்ணுக்குக் கல்வி தந்தால் ஒரு குடும்பத்திற்கே கல்வி தந்ததாகக் கூறுவார்கள். கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கப் போகும் வாழ்வின் வசந்தத்தில் இருக்கும் 124 மாணவியரிடையே நல்லநெறிகளைப் பகிர்ந்துகொண்டது மிக மனநிறைவைத் தந்ததாகப் பயிற்சியாளர் திரு சொ.வினைதீர்த்தான் குறிப்பிட்டார்.

    1,2.அரசினர் மேல்நிலைப் பள்ளி படங்கள். 3.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு சிவராமகிருஷ்ணன் பயிற்றுனரைக் கௌரவித்தல் 4,5.மாணவியர் குறிப்பெடுத்தல் 5.திரு சிவராமகிருஷ்ணன், திரு வினைதீர்த்தான், ஆசிரியர் திரு சார்லஸ். 6.மாணவியர். 7.நன்றி உரைக்கும் மாணவி. 8. Feed back papers. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    Share
  • சிம்ம சொப்பனம்

    பவள சங்கரி

    தீரன் சின்னமலை

    images (1)

    நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற  சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு.  தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.

     18-ஆம் நூற்றாண்டு இறுதியில்  கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத்  தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.

     images

    போர்வீரர்கட்குப் பயிற்சி கொடுக்கவும், போர் ஆயுதங்கள் செய்யவும் சிவன்மலை காட்டுப் பகுதியில் போர்ப் பாசறை அமைத்தார். சிவன்மலையின் வடமேற்குப்புறம் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் சின்னமலை அமைத்த அனுமந்தராயன் கோயிலின் வடபுறம் போர்ப்பாசறை அமைத்திருந்த இடம் இன்றும் அடையாளச் சின்னங்களுடன் காணமுடிகிறது.

     சின்னமலையின் இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலிய கலைகளைக் கற்று, வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலி. தம் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றலால், மைசூர் உடையார் மரபு அரசரிடம் ஆளும் உரிமையைப் பெற்றான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டணம் ஐதர் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டு, ’மைசூரார் நம்மை ஏன் ஆள வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பணத்தைப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது. சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்து கொண்டுவருவதற்காக 100 குதிரை வீரர்களை அனுப்பினான். ஊர் பொது மக்கள் மற்றும் சிலம்பக்கூட வீரர்கள் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.

    தீரன்07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரை  தீவிரப்படுத்தினார். கொங்குநாடு அப்போது  மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்ட திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மற்றும் வீரம் மைசூர் முழுதும் பரவியிருந்தது. திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து சின்னமலைக்கு உதவி வேண்டி ஓலை வந்தது அதனால் சின்னமலையின்  ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.  1799 இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது,  சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் 40000 வீரர்களுடன் போரிட்டு, ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்த கொங்குப்படை.

    ’கன்னட நாட்டின் போர்வாள்’ திப்பு, 04.05.1799ல் போர் முனையில் வீரமரணமடைந்ததால்,  அந்த பேரிழப்பினால் வேதனை கொண்ட சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது. திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.   அதற்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டி அதில் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கிவிட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்ததாக சீரங்கப்பட்டணம் உடன்படிக்கை அறிவித்தது. அதன்படி  கொங்கு நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி அவர்கள்  வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலுமே  இருந்தது. ஆனால்  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.

    திப்பு சுல்தானின் வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் ஆங்கிலேயரின்  எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல்  மிக்கவராக விளங்கினார். காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டாஜி வாக் பணித்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க உதவி பெற விரும்பியது. திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர். மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார். இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது.

    கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்ததால்,  கோவைக் கோட்டையை மீட்டாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. கோவைப் புரட்சி,  ஜூன் 3.1800 அன்று நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். அதே நாளில் மொகரம்  நோன்பும் வந்ததால், முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக கோட்டையை மீட்டு விடலாம்  என்று கருதினர்.  விடுதலை  வீரர்கள் பலர் சில நாட்களுக்கு முன்னரே கோவை  சென்று மக்களின் ஆதரவுடன், மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடமிருந்து எல்லாவகையான உதவிகளையும் பெற முடிந்தது.

    ஆனால் சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால், நடைபெறாமலே தோல்வி அடைந்தது. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். ஒரு வேளை இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின்  ஒரு  திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோவைப்புரட்சிக்குப் பின்னரும் அந்த மாவீரன் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினான். இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மூன்று பெரும் போர்கள் நடைபெற்றுள்ளன. பலம் வாய்ந்த கிழக்கிந்தியப் படையை சின்னமலை சிறுபடை கொண்டும், தன்னந்தனியனாகவும் போரிட்டு வெற்றி பெற்றது வரலாறு. காவிரிப் போர் – 1801, ஓடாநிலைப் போர் – 1802, அறச்சலூர்ப் போர் – 1804, ஆகியன. இப்படி மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியுற்ற அவமானம் தாங்கமுடியாமல், அவனை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று உறுதிபூண்டு, படைபலத்தை மேலும் அதிகரித்தனர். ஐதர், திப்புவை வெற்றி பெற்று, நிஜாமைப் பணியவைத்ததைக் காட்டிலும், ஆர்க்காடு, தஞ்சை அரசர்களை அடிமைகளாக்கியும், தீரன் சின்னமலை மட்டும் சவாலாகவே இருந்து வந்தான். தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவனாகவேக் கருதப்பட்டான்.

    1805ம் ஆண்டில் ஒரு நாள் சின்னமலையில் ரகசிய உளவாளியான, ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த வேலப்பனிடமிருந்து வந்த இரகசியத் தகவல் மூலமாக, 2 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாகவும், அதை எதிர்ப்பது சாத்தியமற்றது என்று கிடைத்த தகவலால், ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில், சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துக்கொண்டு மறைந்து வாழ முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து காத்திருந்தபோது,  சின்னமலை தப்பிய செய்தி அறிந்து கோட்டைக்குள் தேடல் நடத்தியபோது, ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டதோடு,  பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையை மண் மேடாகும் அளவிற்குத் தகர்த்தெரிந்தன.  செய்தி அறிந்த , கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். வேலப்பனின் இழப்பு பெரும் வேதனையானாலும், அங்கேயே தங்கி , கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் உதவியுடன் பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார்.

    தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த சின்னமலையின் வீர வரலாற்றில் விதி விளையாடியது. ஆம், பணத்தாசையால் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக்கொடுத்துவிட்டான்.  கொங்கு நாடே கதறியழ, முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் புடைசூழ,  சின்னமலையும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் கூறிய ஆசை வார்த்தையை துச்சமென மதித்து , காரித்துப்பி கடுமையாக மறுத்தான்.

    ஆடிப் பதினெட்டுப் பண்டிகை நாளான ஜூலை மாதம் 31ம் நாள் 1805ம் ஆண்டு கொங்கு நாட்டு வரலாற்றின் மோசமான நாள் என்பது போல, சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  சங்ககிரி மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்காகக் காத்திருந்தது. அங்கு மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள்.  வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.

     நன்றி : புதிய தலைமுறை

    Share
  • காதல் தலைநகரம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (10)

    காதல் தலைநகரம்

     {கேட்டு மகிழ}

    10492257_262440010611850_2207399982510381694_n

    திருவரங்கம்

    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்

    காதல் தலைநகரம்

     

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள

    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்

    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்

    அது

    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்

    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

     

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு

    மகாராணியின் பல்லக்கைப்போல

     

    நடைமேடையெங்கும்

    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்

    அவர்கள் கைகளில்

    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்

    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்

    மல்லிகைச் சரங்களாய்….

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     
    எனது ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவுக்கு கேசவ்
    எனக்களித்த பரிசு இந்த ஓவியம்….
    ————————————————————————

     

    சாக்லேட் கிருஷ்ணாவுக்கு நன்றி வெண்பா ….

    crazy

    “பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்து நவநீதன -பாலனை
    சாக்லேட் கிருஷ்ணாவாய் செய்தனை கேசவா
    வாக்கிலெட்டா வண்ணம் வடித்து”….

    நன்றி கிரேசி மோகன் ….

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை…. நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    36

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லி விட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படங்கள் குறித்த விவரம்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள் 2.

    2. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    3. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • ஆடி பதினெட்டு பெரு விழா

    –விசாலம்.

    தலைக்காவேரியில்  ஒரு வெள்ளிக்கம்பிப்போல் ஆரம்பிக்கும் காவேரி ஒரு சிறு குளம்போல் தோற்றம் கொடுத்த வண்ணம் பூமிக்கடியில் இறங்கி  பின் சிறிது தூரம் பயணித்தப்பின் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. ஆரம்பநிலையில் உள்ள காவிரி எல்லோருக்கும் காவேரி அம்மனாக விளங்குவதால் இந்த இடத்திற்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடி பதினெட்டாம்பெருக்கு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    காவேரிஅம்மனின் கோயில்  பூம்புகார், காவிரிப்பாக்கம், சேலம், கும்பகோணத்தில் மேலக்காவேரி, திருச்சேரை  போன்ற இடங்களில் காணமுடிகிறது. திருச்சேரையில் காவேரி அம்மனும் ஸ்ரீ மார்க்கண்டேயரும் விஷ்ணுவைப்பூஜித்தாக புராணம் சொல்கிறது.  இங்கு விஷ்ணு  சாரநாதன் என்ற பெயரிலும் தாயார்  சாரநாயகி என்ற பெயரில் அருள் புரிகின்றனர். சேலம் ஏற்காடு பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 342 உயரத்தில் சர்வராயன் மலையில் காவேரிஅம்மனின் கோயில் இருக்கிறது. அந்த அம்மன் பல மலைஜாதி மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.

    சமீபத்தில் நான் பார்த்து மகிழ்ந்த காவேரி அம்மன் கோயில் திருச்சியில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் போன காரணம் என்னவென்றால் எங்கள் வீட்டில் சமீபத்தில் தோண்டிய ஆழ்குழாயில் தண்ணீர் வற்றாமல் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யத்தான். எங்கள் அன்பர் ஒருவர் இந்தக்கோயிலைப்பற்றி இந்த அருமையான தகவலைத்தெரிவித்தார். அதாவது வீட்டில் கிணறு, குழாய் போன்றவை என்றும் நீர் வளத்துடன் இருக்க இந்தக்காவேரி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு காவேரி நதி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்து பின் அந்த நீரை வீட்டிற்கும் எடுத்துப்போய் கிணற்றில் ஊற்ற வேண்டும். இது போல் செய்ய தண்ணீர்ப்பஞ்சமே இருக்காது என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆடிபதினெட்டாம் பெருக்கு திருவிழா இங்கு மிக விமரிசையாக நடக்கிறது. நீர் வளம் அதிகம் பெருக இந்த அம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டு கிணறு வெட்ட, கிணறு என்றும் நிரம்ப்பி இருக்குமாம். காவேரி அம்மனுக்கு எதிரில் அதிகார நந்தி இருப்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது. முன் காலத்தில் இந்தக்கோயில் சோலைகள் சூழ்ந்து மிகப்பசுமையாக இருந்ததாம். முன்பு மிகவும் ஆக்ரோஷத்துடன்  அங்கும் இங்குமாக பாய்ந்து
    ஓடிய காவேரிக்கு சோழமன்னனான  கரிகால சோழன் வாய்க்கால் அமைத்து அதை ஒழுங்கு செய்தானாம். இதிலிருந்தே தெரிகிறது இது எத்தனை பழமையான கோயில் என்பது. ஆனால் நாகரீகம் வளர அந்தச்சோலைகள் அழிந்து தற்போது பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் வந்து அதன் அழகை குறைந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    aadi perukkuஐம்பது வருடங்கள் பின்னோக்கி என் நினைவு செல்கிறது. கும்பகோணத்தில் மேலக்காவேரி அருகே சில மாதங்கள் என் பாட்டி வீட்டில் இருக்க நேர்ந்தது.

    அப்போது ஆடி மாதம் பிறந்து எல்லா கோயில்களிலும் சரியான கூட்டம். என் அம்மா என்னிடம்  ” இதப் பாரு, பதினெட்டாம் பெருக்கு வரது,  அதுக்கு முறம் வேணும். அடுத்த தெருவுக்குப் போய் ஒரு முறம் வாங்கிண்டு வா.”

    “முறமா ? அது எதுக்கு அம்மா?ஆத்தில் தான் ஒரு முறம் இருக்கே “

    “அதில்லேடி இந்த முறம் காவேரி ஆத்தில விடணும். அதப் பத்தி அப்பறம் சொல்றேன்,  நீ கடைக்கு இப்பவே போ. ஒரு முறமாக வாங்காதே. இரண்டு முறமாகத்தான் வாங்கணும், சரியா?” என்றபடி  சில  நயா  பைசாக்கள்  கொடுத்தாள்.   அப்போதெல்லாம் ஒரு நாலணாவுக்குக்கூட  சாமான்கள்   வாங்கமுடியும். நான் அப்போது  பாலும் பழமும் என்று சொல்லும் டிசைனில் பாவாடையும்  பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தேன். பாலும் பழமும் டிசைன்  என்பது  மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களுடன் பல கட்டங்கள் நிறைந்து   இருக்கும். என்  தலையையும் படியப்படிய வாரி பின்னி  தலையில்  பூச்சரமும்  வைத்துவிடுவார் என் பாட்டி. பதினெட்டாம் பெருக்கு  திருவிழாவும் வந்தது. நாங்கள்  காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றோம். என் தாய் முறத்தில் வெற்றிலை,  பாக்கு, வாழைப்பழம், காதோலை, கருகமணி, மஞ்சள் சரடு வைத்து பின் தேங்காயையும் உடைத்து அதில் வைத்தாள். பின்னர் ஒரு வாழைமட்டையில் தீபங்களை ஏற்றி வைத்து அதையும் முறத்தில் வைத்து  காவேரி அம்மனின் பல ஸ்லோகங்களைச்சொல்லியபடியே ஆற்றில் விட்டாள். அது கொஞ்ச நேரம் மிதந்து பின் கவிழ்ந்து எல்லா பொருட்களும் ஆற்றில் கலந்து சிதறியபடியே போகும் அழகு இருக்கிறதே அதைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பின் பல சுங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.  பின் குடும்பத்தில் பல அங்கத்தினர்களுடன் புளியஞ்சாதம், தேங்காய் சாதம், அவியல், தயிர் சாதம், வடாம், வற்றல் என்று காவிரி அம்மனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பின்  எல்லோரும் ஒரு வெட்டு வெட்டியதும் ஞாபகம் வருகிறது. அன்று ரசம் தள்ளுபடி. ஏன் என்று தெரியவில்லை. வடக்கில் கங்கை கரையோரத்தில் இதேபோல் மாலையில் கங்கா ஆர்த்தி நடைப்பெறும். அங்கேயும் இதேபோல் அகல் விளக்குகளை ஏற்றி மட்டைகளில் வைத்து மிதக்கவிடுகிறார்கள். எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் கங்கையில் மிதக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

    விவசாயிகளுக்கு இன்று மிக சிறப்பான நாள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை ஒப்ப  இவர்கள் புது விதைகள் வாங்கி பிரார்த்தனை செய்து அதைத்தூவி வரப்போகும் பொங்கல் திருநாளில் அமோகமான விளைச்சல் காண வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள்.  அவர்கள் அன்று காலை எழுந்ததும் காவிரித்தாயிடம் நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.  நீர்வளம், நில வளம் இருந்தால் தான் பயிர் விளைச்சல். பயிர் விளைச்சல் இருந்தால்தான் நாடு சுபீட்சம் , இதை அவர்கள் நன்கு உணர்ந்துக்கொண்டு இந்த நன்னாளில் பிராத்தனையுடன் நிலம் உழுதலல், விதை விதைத்தல் போன்றவைகளை செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. “நம் எல்லோருக்கும் ஓர் இறைவன் ” நாமும் அவர்களுடன் சேர்ந்து காவேரி அம்மனை நாமும்  பிரார்த்திப்போம் …

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.kamakoti.org/kamakoti/details/aadi1.jpg
    http://media.webdunia.com/_media/ta/img/article/2014-07/21/full/1405954896-2474.jpg

    Share