இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (11)

 

சிட்டுக்குருவிக் கூட்டமே!

(பாடல்)

south-indian-women-paintings-wallpaper

சிட்டுக்குருவிக் கூட்டமே!

சில்லுவண்டுச் சீட்டியே!

சொட்டுச் சொட்டா எறங்கிவந்து தோளெத்தொட்டு மூச்சுப்பட்டு

மொகவாயெ ஏந்தி என்ன

முழுக்க முழுக்க மூழ்கடிக்கும் பரவசமே!

 

பரவசமே! ஈசல்

பரபரப்பே!

படபடக்குற கண்ணுக்குள்ளெ பளபளக்குற மின்னலிலே

கெறங்கிப்போன மனசக்கிள்ளிக்

கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டுச்

சிரிப்பவளே சிரிப்பவளே சிரிப்பவளே

 

மனசெப் பந்தாக்கி மதில்மேலே எறியாதே! அது

மருதாணிக் கைக்குள்ளெ மறுபடியும் சேரும்வரெ

மாருத்துடிக்க வெக்காதே!

கனவெயும் நெனவெயும் கலக்கிப்போட்டுக் கொழப்பாதே!

காலத்தெ நிறுத்திவச்சுக் காவடிச் சிந்து பாடாதே!

 

உள்ளங்கையி ரேகையே! என்

உசுரெக் குலுக்கும் ராகமே!

மெள்ளவுள்ளெ வந்திடாமெ மினுக்கிக்கிட்டு மேடையேறி

நீட்டிப் படுத்துகிட்டு

கொலுசுக் காலு கிணுகிணுங்கும் ஒய்யாரியே!

 

ஒய்யாரியே! அட என்

உல்லாசமே!

ஒண்ணும் மிஞ்சாமெ ஊரெவாரிச் சுருட்டிக்கிட்டு

ஒண்ணுமே தெரியாமெ

கண்ணக்கொட்டி எதிரெ நிக்குற கைவிலங்கே!

 

வெள்ளத்துக்கே திடுதிப்புன்னு தாகம்வந்து சேருமா?

விறுவிறுன்னு வீதியேறி வீட்டுக்கதவத் தட்டித்தட்டி

ஏக்கத்தோடு நிக்குமா!

கொள்ளைக் கூட்டம்நம்மெக் கும்பிடுபோட்டுப் பாக்குமா?

கொடுக்க வந்ததெய்வம் பழெயகடனக் கேக்குமா?

 

ஆலவூஞ்சல் ஆட்டமே! அட என்

அந்தரங்கத் தோட்டமே!

காலு தாளம் போடும்போது ககனம் கரகம் ஆடுதடி

காத்துக்குள்ளே மூச்சாகி மூச்சுக்குள்ளே உசுராகி

 

உசுருக்குள்ளே சிரிப்பவளே! என்னெ

உருக்கி உருக்கி வளர்ப்பவளே!

வருசம்மாசம் வாரமெல்லாம்

வாசலோடு கோலமாச்சு

வந்துசேர்ந்த ஒருகணந்தான்

பூசணிப்பூ சிரிப்பாச்சு!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *