— மாதவ. பூவராக மூர்த்தி.

என்னை அறியாமல் என் தலைப்புகள் அதனுள்ளே ஒரு நினைவைப் பதித்துக் கொண்டு விடுகின்றன. இதுவும் அப்படித்தான். தொலைக்காட்சி வந்த புதிதில் வெள்ளிக்கிழமைகளை மகிழ்ச்சியாக்கின தொலைக்காட்சி நிகழ்ச்சி. பார்க்க ஒரு திருவிழாக் கூட்டம். இன்று எல்லாரிடமும் டி.வி. செட் ஆஃப் பாக்ஸ். அலுத்துப் போகும் அளவுக்கு ஒளியும் ஒலியும்.

Photo0144முன்கதையைச் சுருக்கிவிட்டு சொல்லவந்த செய்திக்குப் போகலாம். முதலில் ஒளி வேகத்தில் முந்தி இருப்பதால் அதை பார்ப்போம். இறைவன் நமக்கு நாளைத் தந்திருக்கிறான். அதில் ஒரு பாதி பகல் இன்னொரு பாதி இரவு. இரவு ஒளியற்றது. இருட்டு. நாம் அந்த இரவை பகலாக்குகிறோம். இந்த பகலை இருளாக்குகிறோம். இயற்கைக்கு மாறாக இருப்பதால் நம் உடலும் மனமும் இயற்கைக்கு மாறாக இருந்து விடுகிறது.

பகல் உழைப்பதற்கு, உண்பதற்கு, உணர்வதற்கு, உவப்பதற்கு. இதில் எதையாவது நாம் செய்து கொண்டிருக்கிறோமா? வாழ்க்கை என்பதன் வேர்ச்சொல் வாழ்வு. வாழ் என்றால் அதை மகிழ்வாக வாழ்வது. இப்போது கூட ஒரு சொல்வழக்கு உண்டு.”வாழ்வுதான்”. எல்லாம் இருந்தும் வகைப்படுத்தமாட்டாமல் ஒன்றில் முயங்கி பிறவற்றை இழந்து அந்த இழப்பைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இருந்து கொண்டிருக்கிறோம்).

நம் முன்னோர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்ந்து காட்டியவர்கள். வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்தவர்கள். பகலில் வரும் சூரியன் என்னும் மாபெரும் சக்தியை உணர்ந்தவர்கள். உபயோகப்படுத்தியவர்கள். அந்தக்  கால வீடுகள் அதற்குச் சான்றாக இருந்தவை. நிழல் தரும் மரங்களை நம் வாழ்விடங்களின் முன்னும் பின்னும் அமைத்து இல்லத்தில் ஒளி வருமாறு அமைத்தார்கள். ஒளியும் காற்றும் அந்த இல்லங்களில் எப்போதும் வந்து போகும். அங்கு வளமையும் ஆரோக்யமும் எப்போதும் தங்கும்.

இன்று அடுக்கங்களில் நம்மைப் பொருத்திக்கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் பகலை இரவாக்குபவை. ஒளி குறைவாக வரும் அமைப்பு. கதவுகளும் சாளரங்களும் இருந்தாலும் அடுத்தவர் வாழ்விடம் மிக அருகில் இருப்பதால் நம் வீட்டுக் கதவும் ஜன்னலும் நம்மை பிறர் கவனத்திலிருந்து தவிர்க்க எப்போதும் மூடப்பட்டிருகின்றன. அதன் விளைவு நாம் பகலிலும் விளக்கைப் பயன்படுத்துகிறோம்.

வெப்பம் தவிர்க்க குளிர்பதனம் செய்த அறைகளில் சூரியப் பிரவேசம் தடை செய்யப்படுகிறது. அலுவலங்களிலும் இதே நிலைதான். பயணம் செய்யும் வாகனங்களிலும் ஒளியின் வெப்பத்தை தடுக்க ஒளியின் நன்மையை தடை செய்து விடுகிறோம்.

Photo0383இரவு தூங்குவதற்காக இறைவன் மனிதனுக்கு கொடுத்த கொடை. சூரியனின் ஆதிக்கம் குறைந்து வானம் இருண்டு நம்மை இளைப்பாற வைக்கிறது. ஆனால் நாம் இரவைப் பகலாக்குகிறோம். விளக்குகளால் இருளைப் போக்குகிறோம். கேளிக்கைகளில், சந்திப்புக்களில் தொலைக்காட்சியில் பணியில் நம் இரவுகளை அடகு வைத்து நம் தூக்கதை இழக்கிறோம்.

தூக்கமுன் கண்களைத்  தழுவட்டுமே அமைதியுன்  நெஞ்சில் நிலைக்கட்டுமே.என்ன அற்புதமான வரிகள். தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் தரும் சுகங்களையும் நன்மைகளையும் உணராமல் நாம் முரணான வாழ்க்கை வாழுகிறோம்.

விளைவு தானாக வரவேண்டிய தூக்கம் வராததால் மதுவையும் மருந்தையும் நாட வேண்டிய கட்டாயம். இரவு தரும் இருட்டை இன்று நாம் உணர வில்லை ரசிக்க வில்லை. யோசித்துப் பாருங்கள்.

மண்ணையும் வானத்தையும் பார்க்க மறந்த தலைமுறை நாம். நமக்கான கூரைகளை வேய்ந்து கொண்டு வானம் நமக்குப் புலப்படும் வகை அழித்து விட்டோம். பயணங்களிலும் நிலமும் வானமும் நாம் பார்க்க மறந்தவை.

கும்மிருட்டு என்ற வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனுபவித்திருக்கிறீர்களா. இன்று இருபது வயது இருக்கும் இளைஞர்கள்மனதில் இருட்டைப் பற்றிய எண்ணமே இருக்க வாய்ப்பு இல்லாமல் அவர்களை வளர்த்து விட்டோம். விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வெளிச்சத்தை பரவ விட்டு இருளை புறக்கணிக்கிறோம். இரவு படுக்கை அறைகளிலும் முழு இருட்டு சாத்யமில்லாததாகிவிட்டது. குளிர் பதனக் கருவியின் ஒளிக்கசிவு அல்லது கணினியின் ஒளி, செல்போன் திரைவெளிச்சம் இப்படி ஏதாவது ஒன்று நம்மையும் காரிருளையும் இணைய விடாமல் செய்கிறது. நேற்று என் அடுக்ககத்தில் நாள் முழுவதும் மின்சாரம் இல்லை. இரவு மெல்ல வந்து இருள் என் வாழுமிடத்தை அணைத்துக் கொண்டது. நான் அதனை அன்போடு வரவேற்றேன். நடமாட ஒரு சிறிது வெளிச்சத்தை மட்டும் உபயோகப்படுத்தினேன். ஒரு மூன்று மணிநேரம் அந்த காரிரிருளுடன் கழித்தேன்.

இன்றைய தலைமுறையை அப்படி ஒரு இருள் சூழ்ந்த அமைப்பில் விட்டால் தவித்து விடுவார்கள். அமைதியை கொடுக்க வேண்டிய இருள் அவர்களுக்கு அமைதியின்மையைக் கொடுத்துவிடும். நல்ல வேளை என் மகள் வீட்டில் இல்லை.

நீங்கள் யாருமற்ற தனிமையில் வெட்ட வெளியில், கடற்கரையில், மலையடிவாரத்தில், அருவியின் அருகில் இரவை ஒரு பூரண சந்திரன் ஒளிவீசும் நாட்களிலோ பிறை நிலவும் விண்ணில் கோடி விண்மீன்கள் ஜொலிக்கும் வானத்திரையை கண்டு களித்திருக்கிறீர்களா? ஒரு முறையாவது வெளிச்ச வெள்ளத்திலிருந்து விலகி சிறிது வெளிச்சத்தின் உன்னதத்தில் திளையுங்கள்.

Photo0330இறை வழிபாட்டில் கூட ஒளியைப் புகுத்தி விட்டோம். நம் புராதனக் கோவில்களில் பகலில் போதுமான வெளிச்சம்தான் இருக்கும்படி கட்டமைப்பு இருக்கும். கருவறை இருளில் மிளிரும். அகல் விளக்கின் பிரகாசம் விக்ரகத்தின் பள பளப்பை காட்டி நிற்கும். இரவு நேரங்களில் லிங்கத்தின் பின்னாலும் அம்மன் சந்நிதியிலும் பட்டை ஆடியில் முன் வைக்கப்படும் ஒரு அகல் விளக்கின் ஒளியில் ஏற்படும் பிரகாசமும் பரவசமும் இன்று இல்லை.

வீதி உலாக்களில் வரும் தீவட்டிகளிலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் இரவின் அழகை குலைக்காமல் நமக்கு தந்த அருங்காட்சி இப்போது இல்லாமல் போய் விட்ட்து.

எங்களூர் திரு இந்தளூர் கோவில் சப்பரத்தன்று இரவு நான்கு தெருக்களிலும் சாலை குறுக்கே வரும் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு தெரு இருளில் மூழ்கும். பனைமரத்தின் தென்னை மரத்தின் ஓலைகளில் பின்னப்பட்ட மிக உயரமான சப்பரம் இருளில் குறைந்த வெளிச்சத்தில் நகர்ந்து நம்மை நோக்கி வரும்போது கற்பூர ஒளியும் மெருகேற்றும் அந்த பேரழகை இனியும் நான் காணப்போகிறேனா என்று என்னுள் ஒரு ஏக்கம்.

இருளில் இருக்கும் பழக்கம் நமக்கு இல்லாமல் போய்விட்டது எப்போதும் ஒரு ஒளியை நமக்குத் துணையாக வைத்துக் கொள்கிறோம்.

அதேபோல் ஒலியும் நம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. நாம் கேட்க வேண்டிய பார்க்க வேண்டிய ஒலியையும் ஒளியையும் மறந்து விட்டோம். தேவையற்ற ஒலியை நம் காதுகளில்வாங்கி நம் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

வீட்டில் இருக்கும் போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ தொலைக்காட்சியின் ஒலி நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது செல்போனில் ஒலி. அல்லது வெளியே செல்லும்போது காரில் இசை குறுந்தகடுகளின் சுழற்சி இறைக்கும் சத்தம். அல்லது நாமே நம் காதுகளில் செருகி கேட்கும் சத்தங்கள். வெளிச் சத்தம் கேட்கவிடாமல் அதையும் மீறி செல்போனிலும் கணினியிலும் செய்தி வரும்போது வரும் சத்தங்கள். சாலையில் அலறும் வண்டிகளின் பேரிரைச்சல். சாகக்கிடப்பவர்களின் தங்க நேரங்களில் அவர்களை காப்பாற்ற நினைக்கும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் வழிகேட்டு கெஞ்சும் அலறல்கள். இப்படி ஏதாவது ஒரு ஓசை நம் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

நம் காதுகள் இயற்கை ஒலிகளை மறந்து ஆண்டுகளாகிறது. வீட்டில் கூட யாரும் யாரிடமும் பேசும் நேரம் மிக குறைந்து விட்டது. குழந்தை அழும் சத்தம். இவையெல்லாம் மறந்து விட்டது.

உங்களுக்கு கொஞ்சம் ஞாபகபடுத்த விரும்பும் நான் கேட்ட ஒலிகளை இப்போது பட்டியலிடுகிறேன். இதையெல்லாம் கடைசியில் எப்போது கேட்டீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

Photo0328வெளியிலும் வீட்டிலும் கேட்ட எத்தனை ஒலிகள். இயற்கையானவை இன்று நாம் கேட்பதில்லை. வீட்டின் பின்புறம் கட்டியிருக்கும் பசுவின் ஓசை. சுவரில் பல்லியின் சத்தம். பூனையின் மியாவ், குயிலின் இசை, கூரையின் மீது ஏறி நின்று கொண்டை நிமிர்த்தி சேவலின் கொக்கரிப்பு,  யானையின் பிளிறல், சுவர்க்கோழியின் இடைவிடாத சத்தம், மழைக்காலத்தில் தவளைகளின் வார்த்தைப் பறிமாற்றங்கள். காவிரியின் மதகடியில் சுழற்சியில் செல்லும் நீரின் சலசலப்பு. காற்றில் அசையும் மரங்களின் பெரிய சத்தம், மூங்கில் மரங்களின் உரசல்கள், கோவில் மணியின் ரீங்காரம், ஒலி பெருக்கியில்லாமல் கோவிலில் வாசித்து காற்றில் பரவும் நாதஸ்வரம். விழாக்காலங்களில் ஸ்வாமி புறப்பாட்டுக்கு முன்னால் வெடிக்கும் அதிர்வேட்டு. வீட்டில் தயிர் கடையும் சத்தம். ஆசாரியின் இழைப்புலி வெளிப்படுத்தும் இசை, இரவின் அமைதியில் நடப்பவர்களின் செருப்புத் தேய்வுகள், மரங்கொத்தியின் கொத்து, மீன் கொத்தியின் நீர் மூழ்கும் தொபுக், உலைநீர் கொதிக்கும் சத்தம், கடிகார பெண்டுலத்தின் அசைவின் இசை, ஊஞ்சல் கம்பியின் உரசல்கள், கன்றுக் குட்டியின் கழுத்து மணி, பெண்ணின் கால் கொலுசு தரும் இசை. கதவுகள் மூடித்திறக்கும் போது வரும் கிறீச், ஹால் கடிகாரத்தின் மணிக்கொருதரம் வரும் மீட்டல்கள் மழை நீர் பந்தலில் விழும் சத்தம், இடியோசை இவையெல்லாம் இன்னும் பட்டியல் நீளும். உங்கள் கற்பனைக்கும் கொஞ்சம் விட்டு வைக்கிறேன்.

அவை அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்த நினைவுகளினால் இந்த யுகத்து சத்தங்களில் கூட அதன் சாயல்களை என்னால் உணர முடிகிறது. இன்றைய என் புது செல்பேசியில் செய்திகள் அறிவிப்பு வரும் ஓசை அன்று நான் கேட்ட குளத்தில் உயரத்திலிருந்து சிறகொடுக்கி நீருக்குள் சட்டென்று மூழ்கும் மீன்கொத்தி எழுப்பும் ஓசையை ஒத்திருக்கிறது.

தேங்காயோ, கறிவேப்பிலையோ அம்மியில் அரைக்கப்படும் போது மெதுவாக கனிவோடு அவை மென்மைப்படுத்தப்படும். இன்றைய மிக்ஸிகள் ஈவு இரக்கமின்றி ஒரு பெருத்த ஓசையுடன் அவைகளை கசக்கிப் பிழிவதில் எனக்கு வருத்தமே.

என் மனதுக்கு இனியவர்களே என் வேண்டுகோளெல்லாம் அவசர யுகத்தில் உங்கள் ஓய்வு நாட்களில் கொஞ்சம் இயற்கைக்கு அருகில் இருக்க முயலுங்கள். ஒளியும் ஒலியும் நமக்கு அளிக்க நினைக்கின்ற கொடைகளை அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். புற ஒளி தவிர்த்து உள்ளொளி பெருக்கி உங்கள் உள்ளத்தின் குரலின் ஒலியை கேளுங்கள். வாழ்வை ஒளிமயமாக்குங்கள் . எழுதியபின் நான் அனுபவிக்கும் மௌனம் உங்களுக்கும் கிடைக்கட்டும். இன்னொரு நாள் சந்திப்போம் சிந்திப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒளியும் ஒலியும்

  1. அருமையான ஒரு சொற்சித்திரம் வரைந்த பூவராக மூர்த்தியை மனமாரப் பாராட்டுகிறேன். “கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்….” என்று இயற்கையில் எழும் ஓசைதரும் இன்பத்தை எட்டையபுரக் கவிஞன் பாடியதை எதிரொலிக்கும் கட்டுரை. உள்ளத்தின் குரலொலியைக் கேட்கச் சொல்கிறார் கட்டுரையாசிரியர். நண்பன் சு.ரவியின் பாடல் வரி நினைவுக்கு வருகிறது:
    “ஓசைக ளாய்க்கவியும் ஆசை அலைக்கடலில்  
    உள்மறையின் ஒலி கேட்கிலேன்” 
    பூவராக மூர்த்தி மேலும் பல படைப்புகளை வழங்க வேண்டும்.
    கே.ரவி

  2. மிக்க நன்றி ரவி ஸார். விஜய.திருவேங்கடம் அவர்கள் என்னை வல்லமை இணைய தளத்தில் என் பதிவுகளை இடுங்கள் என்றால். பிரம்மாண்ட மான இந்த சங்கப் பலகையில் என் பதிவுகளா என்று நினைத்தேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு பின்னூட்டம் இல்லை. ஒன்று வல்லமைக்கு முன்பே தொடர்பில் இருக்கும் எஸ்.வி. வேணுகோபால் அவர்கள் தன் கருத்தைத் தெரிவித்து இருந்தார். நீங்கள் தான் வல்லமையில் எனக்கு கருத்து தெரிவித்த முதல் வல்லமையாளர். எல்லாவற்றிலும் முதலுக்கு ஒரு முக்யம் உண்டு நன்றி. பாராட்டுக்கள் என்னை எழுதத் தூண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *