Author: மாதவ. பூவராக மூர்த்தி

  • சந்திர கிரஹணம்

    -மாதவ. பூவராகமூர்த்தி

    Lunar-Eclipseஅப்பா புது வருட பஞ்சாங்கம் வந்தவுடன் அட்டை போட்டு ஊசியால் தைத்துக் கூடத்து தூணில் இருக்கும் ஆனியில் மாட்டி வைப்பதற்குமுன் தாத்தா அதைப்பிரித்து அவர் அப்பா அம்மா திதி என்று என்பதைக் குறித்து விடுவார். அத்தைப்பாட்டி இந்த வருஷம் கிரஹணம் எப்பெல்லாம் வரது என்பாள்.

    தாத்தா ஒரு காது போன கண்ணாடியைப் போட்டுக் கொண்டு புரட்டாசியில் ஒரு சந்திர கிரஹணம் இருக்கு. மாசியில் ஒரு சூரிய கிரகணம் வரது என்பார். என் சின்ன வயதில் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும் எப்படி இந்தப் பாம்பு பஞ்சாங்கக்காரர்கள் இதைக் குறிக்கிறார்கள்.

    எழுத நிறைய இருப்பதால் மேலே போகிறேன். அந்தக் காலத்தில் இந்தக் கிரகண நேரம் வீட்டைப் பாடாய்ப்படுத்தும். ஒரு நாள் அத்தைப் பாட்டி சாதம் பிசைந்து போடும்போது “பாட்டி கிரகணம்னா என்ன?” என்றேன். பாட்டி, ”அது வந்து சந்திர சூர்யா இருக்காளோல்யோ அவளா வருஷத்துக்கு ஒரு தடவை பாம்பு வந்து முழுங்கிடும்” அப்படின்னா; ”எந்தப் பாம்பு நாகப்பாம்பா?” என்றேன். சிரித்துக் கொண்டே ”நவக்கிரகத்துல இருக்கே ராகு கேது பாம்பு அதுதான்.”

    ”அப்பறம் விட்டுடுமா?” என்றேன். ”ஒரு கால கட்டம் பிடிச்சிண்டு அப்பறம் விட்டுடும்” என்றாள்.

    அன்று இரவு சொப்பனத்தில் பாம்பு என்னையும் முழுங்கியது. ஒரே இருட்டு; பயத்தில் வேர்க்கத் தொடங்கிவிட்டது. எழுந்து பார்த்தேன் நல்ல வேளை பாம்பு இல்லை!

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் கிரகணம் எங்கள் சாப்பாட்டுத் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரும். தாத்தா, ”மங்களம் நாளைக்குக் கிரகணம்…சூரிய கிரகணம்; மத்தியானம் பன்னண்டு மணியோடு சாப்பாடு நிறுத்திடணும்; போஜனாதிகள் மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னாலதான்” அப்படின்னு ஒரு குண்டைப் போடுவார்.

    அத்தைப்பாட்டி வேம்பு மாமாகிட்ட போய் எந்த எந்த நட்சத்திரத்து தோஷ நிவர்த்தி பண்ணனும்னு கேட்டுண்டு வா என்று அப்பாவை அனுப்புவார். அப்பா வேம்பு சாஸ்திரியிடம் கேட்டு நம் வீட்டில் யார் யாருக்குப் பட்டம் கட்டணும் என்று சொல்லி பனை ஓலை கொண்டுவருவார். சில சமயம் என் நட்சத்திரத்துக்கு வரும் என்று நினைக்கும் போது நாலாம் பாதம் உனக்கு இல்லை என்பார். கிரகணத்தின் போது அதை நெற்றியில் கட்டிக் கொண்டிருப்போம். கோவிலில் அர்ச்சனைப் பண்ணுவாள் அம்மா.

    சூரிய கிரகணம் அதிகாலையிலேயே பிடித்து விட்டால் சாயங்காலம் சகல துணிகளை நனைத்து எங்களை குளிக்கச் சொல்வார்கள். முதலில் அம்மா குளித்துவிட்டு தலைக்கு ஒரு ஈரிழைத் துண்டை கட்டிக் கொண்டு அவசரமாக உலர்த்திய புடவை கட்டி வெங்கலப் பானையில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு ஒரு அரிசி நொய் உப்புமா சுடச்சுடப் பண்ணிக் கூடத்தில் வைப்பாள். அதற்குப் பக்க வாத்தியம் வத்தல் மிளகாய் போட்டு அரைத்த தேங்காய் சிவப்பு சட்னி. அப்பறம் புளியைப் பிசைந்து ஒரு பச்சைக்குழம்பு பண்ணுவாள். அதில் கறிவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் இருக்கும். தட்டில் போட்டவுடன் அந்த புளி தண்ணீரில் பச்சைமிளகாய் பிசைஞ்சு சாப்பிட நன்றாக இருக்கும்.

    வீட்டில் இருக்கும் பால் தயிர் தோசைமாவு எல்லாவற்றிலும் தர்ப்பை போட்டு வைப்பார்கள். அப்படிப் போடவில்லை என்றால் அவைகளை மறுநாள் உபயோகப்படுத்தக் கூடாது.

    சந்திர கிரகணம் சில சமயம் மிகத் தாமதாக வந்து அதிகாலை வரை நீடித்தால் மறுநாள் இரவு சந்திர தரிசனம் முடிந்து சாப்பிட வேண்டும் என்று கட்டளை.

    பட்டினி என்று நினைத்தவுடன் முகம் வாடும். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து வேளை சாப்பாடோ, டிபனோ சாப்பிடும் எங்களை ஒரு நாள் முழுக்க பட்டினி என்றால் வேறு எந்த வேலையும் செய்யத் தோன்றாது.

    மறுநாள் இரவு சந்திரன் வந்தவுடன் பார்த்துவிட்டுச் சாப்பிடுவோம். சந்திர சூர்ய கிரகணங்களின் போது கிரகண மத்ய வேளையில் தண்ணீரில் நின்று காயத்திரி ஜெபம் ஜெபிப்பார்கள். மஞ்சள் காமலை, தேள்கடி, சுளுக்கு, மந்திரங்கள் உருப்போட பலன் கிடைக்கும் என்பார் அப்பா. மஞ்சள் காமாலைக்கு ஊசி வைத்து மந்திரிப்பார். தேள்கடிக்குத் தென்னம் விளக்கு மாறைக் கட்டித் தேள்கடித்த இடத்தில் தடவி மந்திரம் சொல்வார். “இறங்கியிருக்கா?” என்பார். தேள் கடித்தவர்கள் வலியால் துடித்தபடி தலை ஆட்டுவார்கள். கொஞ்சநேரம் கழித்து எல்லாம் நீங்கி சரியாய் நடந்து போவார்கள். சுளுக்கு மந்திரம் மட்டும் அஸ்தமனத்தில்தான் மந்திரிப்பார்.

    இலுப்பைக் கரண்டியில் விளக்கெண்ணெய் தடவிச் சுளுக்கிய இடத்திலும் தடவி மேலிருந்து கீழாக நீவி விடுவார் மந்திரம் ஜெபித்தபடி. முடிந்த வுடன் இடம்விட்டு எழுந்திருந்து காலை சுழற்றி உதறச் சொல்வார். இரண்டு நாள் மந்திரத்திற்குப் பிறகு சுளுக்கு சரியாகிவிடும்.

    எலும்பு முறிவு என்றால் மூன்றாம் நாள் சொல்லி விடுவார். நீ மாவுக்கட்டு போட வேண்டியதுதான் என்று. அப்பா இருந்த வரை எனக்கு அந்த மந்திரங்களை எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கேட்கத் தோணவில்லை. அந்த மந்திரங்கள் எல்லாம் அப்பாவோடு போய்விட்டது.

    அதே போல் வீட்டில் யாராவது பிள்ளையாண்டிருந்தால் (இன்றைய வாசகர்களுக்காக ஃபேமிலி வேயில் இருந்தால்) இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தெருவே அவர்களுக்கு அட்வைஸ் வழங்க ஆரம்பித்துவிடும். ராஜி கமலத்தை ரூமை விட்டு வெளியே வரச்சொல்லாதே! ஜன்னல் கதவை ரூம் கதவை எல்லாம் மூடி வைச்சுடு. அவ எதுவும் பின்னப்படுத்தக் கூடாது; நகம் பிச்சிப் போடக்கூடாது. ஸர்வ ஜாக்ரதையா பாத்துக்கணும். பட்டாமணியார் ஆத்தில இரண்டாவது பொண்ணுக்கு பிரசவத்துல பார்த்தா ஒரு காது அடிப்பக்கம் சேரவே இல்லை என்று பயமுறுத்துவார்கள்.

    என் மாட்டுப்பெண் ’ஃபேமிலி வே’ நாங்கள் எல்லாரும் அவளுக்கு வேண்டிய அறிவுரை சொல்லி விட்டோம். இந்த கிரகண வேளையில் பாத்திரம் அலம்ப வந்த ஈஸ்வரி (கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்) அம்மா சொல்ல மறந்துட்டுது; உங்க மருமகளை பத்திரமா இருக்கச் சொல்லுங்க என்றாள். நம்பிக்கைகள் மிக ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.

    என் பள்ளி நாட்களில் எனக்குச் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் என் நம்பிக்கைத் தகர்த்தெறியும் விதத்தில் சூரியன் பூமி சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது நிழல்படுவது தான் கிரகணம் என்றார். அத்தைப் பாட்டிக்கு முதலில் இதைப் போய்ச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    ஒரு ஞாயிற்று கிழமை பாட்டி கிரகண்ம்னா பாம்பு பிடிக்கறது எல்லாம் இல்லை சந்திரன் சூரியன் பூமி எல்லாம் ஒரு நேர்கோட்டுல வர்றது. ‘உளறாதடா“ என்றாள். நான் ஒரு சிம்னியை ஏற்றிக்கொண்டு வந்து என் தங்கைகளை இரண்டு பந்துகளை அந்த விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக் காண்பித்தேன் நிழல் வந்தது.

    பாட்டி நம்ப மறுத்தாள் “பெரியவா சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும் அதெல்லாம் மார்க்குக்கு மட்டும் படி” என்றாள். நான் சொன்னதைப் பாட்டி புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தமாக இருந்தது. இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் மனிதர்கள்!

    என் பாட்டி சொன்னது எனக்கு இத்தனை வருடத்திற்குப் பிறகு அனுபவங்களில் தெரிந்தது மறைபொருளாய் நம் முன்னோர்கள் காந்த சக்தியின் கதிர் வீச்சுக்கள் பற்றிப் புரிந்து சொல்லியிருக்கிறார்கள் என்று.

    கிரகணத்தின்போது ஒரு படி அரிசிக்குள் ஒரு இலுப்பைக் கரண்டியைச் சொருகி விட்டால் காந்த சக்தியில் படி கரண்டியில் நிற்கும் என்றும் கிரகணம் முடியும் வரை அது இருக்கும் என்றும் சொல்வார் அப்பா. நானும் அப்படி பண்ணி எல்லோருக்கும் காட்டுவேன். பிறகுதான் தெரிந்தது சாதாரண நாட்களிலும் நிற்கும் என்று.

    நான் காலேஜ் படிக்கும்போது கிரகணம் வந்தால் அம்மா எனக்குச் சில சலுகைகளைத் தந்தாள். அந்த நேரத்தில எதுவும் சாப்பிடாதே என்று சொல்வாள். நண்பர்களுடன் டீயும் மசால் வடையும் சாப்பிடுவதில் ஒரு பெருமிதம்.

    இன்று சந்திர கிரகணம் என் பெண்ணிடம் நான் சொன்னேன். அவள் நான் பார்த்துக்கிறேன் அப்பா என்றாள். பர்கர் பிட்ஸா எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

    கிரகணத்தின் போதே இந்த பதிவைச் செய்ய வேண்டும் என்று ஆசை. உடல் ஜுரத்தால் அவதிப்பட்டாலும் ஆர்வீஎஸ் முந்தி இதைப் போட வேண்டும் என்று ஒரு கங்கணம்.

    நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? ஆமாம் கிரகணத்தின்போது ஃபேஸ் புக் போகலாமா என்று பாம்புப் பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறதா?

    Share
  • நவராத்திரியில் ஒரு ராத்திரி

    -மாதவ. பூவராக மூர்த்தி

    navratri-dollsசொன்னால் நம்ப மாட்டீர்கள். நீங்கள் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னால் நான் கூட நம்ப மாட்டேன்.

    என் பெண், அம்மாவுக்கு முடியவில்லையென்றால் என்ன? நான் கொலு வைக்கிறேன் என்று அமாவாசை அன்று ஆபீஸிலிருந்து லேட்டாக வந்து நான் தூங்கப் போனவுடன் என் புது வேஷ்டியைக் குட்டி மர பீரோ ஸ்டூல் எல்லாம் வைத்து என்னைத் தொந்தரவு செய்யாமல் பரணிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து ஐந்து படி கொலு வைத்தாள்.

    காலை எழுந்த நான் பிரமித்து என் மோட்டோ ஜீயில் போட்டோ எடுத்து வாட் சாப்பில் போட்டு எல்லாரையும் கொலுவுக்கு அழைத்து விட்டேன். என் மகள் வேலைக்குப் போவதால் காலை ஆபீஸ் போவதற்கு முன் விளக்கேத்தி வாழைப்பழமோ ஆப்பிளோ சாத்துக்குடியோ நைவேத்தியம் பண்ணிவிட்டு அவசரமாக ஓடி விடுவாள்.

    என் மனைவி வருகிறவர்களுக்கு மூன்று நாளாக மில்க் பிஸ்கட், மேரி பிஸ்கட் அல்லது குட் டே பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன் கடைக்குப் போகும்போது கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் என்று மாவுகட்டுப் போட்டு சுழலும் நாற்காலியில் வீட்டைச் சுற்றி வருவதால் கொலுவும் வந்தவர்களும் அவளின் பிரசாதங்களை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் மட்டும் குழந்தைகளின் தயவால் வகை வகையாகச் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்

    நவராத்திரியில் தினமும் சாயங்காலம் என் மச்சினன் குழந்தைகள் புடவை கட்டிக்கொண்டு பிளாட்டில் எல்லா வீடுகளுக்கும் குங்குமச் சிமிழும் ஒரு பையும் எடுத்துக் கொண்டு “குறையொன்றும் இல்லை” பாட்டும் “கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் கண்ணனையும்” பாடி வகை வகையாய்ச் சுண்டல் எடுத்து வர நான் அளவு தெரியாமல் சாப்பிட்டுத் தொலைத்தேன்.

    நேற்று இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க எனக்கு வயிறு கொஞ்சம் கடமுட என்றது. எழுந்து பாத்ரூம் போகலாம் என்று பெட்ரூம் கதவைத் திறக்க முயன்ற போது ஹாலில் பேச்சுச் சப்தம் கேட்டது.

    நான் முதலின் என் பெண் பூர்வஜாதான் டி.வி ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாள் என்று நினைத்தேன். பாட்டு, வடிவேலு விவேக் குரல் போல இல்லை. உற்றுக் கவனித்தேன்; லேசாக கதவைத் திறந்து பார்த்தேன். திகைத்துப் போனேன். மறுபடியும் சொல்கிறேன். நான் கேட்டதையும் பார்த்ததையும் சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஏதாவது ஒன்று நடக்கும்போது நான் சொன்னதும் நடந்திருக்கக் கூடும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    படியில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த பொம்மைகள் மிஸ் இல்லாத பள்ளிக் குழந்தைகள் போல இடம் மாறி திரும்பி ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டிருந்தது. என் வயிறு உபாதை மாயமாய் மறைந்தது.

    இடுக்கு வழியாகப் பார்த்தேன். என்ன ஸ்வாரஸ்யமான வம்பு. அவைகளுக்குத்தான் எத்தனை மனக் கிலேசங்கள், பொறாமைகள், குறைகள். எப்போது பேச ஆரம்பித்ததோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கும்போது அது ஒரு சுவாரஸ்யமான பகுதியில் இருந்தது.

    மேல் படியில் இருந்த மரப்பாச்சி பொம்மைகள் குரல் கரகரப்போடு அதற்கு முன்னால் இருந்த மஹாலஷ்மியிடம் தம் குறையைச் சொல்லிக்கொண்டிருந்தன. ”உங்களுக்கு என்ன? பொம்மை செய்யும் போதே வர்ணம் அடித்துப் புடவை…அதில் ஜரிகை. உங்க வீட்டுக் காரருக்குப் பட்டு பீதாம்பரம் எல்லாம் இருக்கிறது. என்னையும் என் வீட்டுக்காரரையும் பாருங்கள். ஒரே பச்சை நிறத்துணி நாலு வருஷமாய்.

    அம்மாவும் பொண்ணும் கடைக்குப் போகும் போதெல்லாம் துணி வாங்க முடிகிறது. எங்களுக்கு ஏன் ஒரு சூடிதார் ஜீன்ஸ் வாங்கி போடக்கூடாது?”

    அவைகளின் ஆதங்கம் நியாயமானதுதான் எனக்கே அந்த மாதிரி ஒரு எண்ணம் உண்டு இவர்கள் மேல்.

    “இதையெல்லாம் பெரிது படுத்தாதே! அவர்கள் நம்மைப் பொம்மைகளாக நினைக்கிறார்கள்.” என்று விஷ்ணு சமாதானம் சொன்னார். “என்னை மேல் படியில் வைத்திருக்கிறார்கள். இருந்து என்ன? ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கிறார்களா? இல்லை ஒரு எம்.எஸ் பாடியதையாவது போடுகிறார்களா? அதுவும் இல்லை. பக்கத்தில் டி.வியைப் பெரியதாக வைத்து விடுகிறார்கள். அடுத்த படியில் இருந்த தசாவதார பொம்மைகள் மெதுவாக ஆரம்பித்தன. தசாவதாரம் வரிசையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன் புதிதாக செட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண் பூர்வஜா பொம்மை அடுக்கும்போது வாமனாவதாரத்தைக் கீழே போட்டு உடைத்து விட்டாள். பழைய பொம்மை; இந்த அம்மாள் கல்யாணம் பண்ணின புதிதில் வாங்கின தசாவதார செட்டில் சேதாரம் போக மீந்திருந்த எங்களை விடச் சின்ன வாமனரை எங்கள் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். எங்கள் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குறுகி நிற்கிறார் என்றது ராமர் பொம்மை.

    மூன்றாம் படியில் இருந்த அஷ்ட லக்ஷ்மிகள் போன வருடம் வந்தவர்கள். ஜொலித்தார்கள். மேல் படியில் இருந்த லக்ஷ்மி ஸரஸ்வதி இந்த அஷ்ட லக்ஷ்மிகள் ரொம்பத் திமிராக நம்மிடம் பேசாமல் அவர்களுக்குள் மட்டும் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு வருஷம் போனால் நம் கதிதான் இவர்களுக்கு என்று தங்கள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாலாவது படியில் இருந்த சிவன் பார்வதி பேச வேண்டாம் என்று இருந்தேன். என் வாயைக் கிளப்பி விட்டீர்கள். அடி முடி காண முடியாத விஷ்ணுவை மேல் படியில் வைத்துவிட்டு இவர்கள் ஹரி தாசர்களாம் (விஷ்ணுவை ஸ்மரிக்கிறவர்கள்) அதனால் என்னை ஒரு படி இறக்கி என்னை நாலாவது படியில் வைத்து என் குடும்பத்தையும் வைத்து என்னை அவமதிக்கிறார்கள்.

    “என்ன செட்டியாரே உங்க வியாபாரம் எப்படி? என்று மேற்படியில் இருந்த மரப்பாச்சி உரக்கக் கேட்டது. செட்டியார் மெதுவாகத் திரும்பி இந்தக் கிண்டல் தானே வேண்டாம். என்னை இங்கு உட்கார வைத்து ஒரு பண்டம் கூட விற்பதற்கு இல்லை. இவர்கள் ஃப்லிப்கார்டில் எல்லாம் வாங்குவதால் ஆன் லைன் டிரேடிங்க் காலமாகப் போகிவிட்டது.

    ராகவேந்திர சுவாமிகள் மௌனமாகவே இருந்தார். இதற்குள் இந்த மரப்பாச்சி வந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேத்திக்கு வந்த 43 பிளாட் நம்பர் மாமி ஸ்ருதி சேராம ஶ்ரீமன் நாராயண பாடினாள். விஷ்ணு கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

    இன்னும் ரெண்டு மாமிகள் வந்து உட்கார்ந்து பாட்டுப் பாடாமல் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கொலு வைப்பதைவிட நம்மைக் கொலுப் பெட்டியிலே வைத்து இருக்கலாம். டி வி யில் சிந்துஜா நவராத்திரி பற்றிப் பேசுவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அவள் கழுத்தை நெரித்து இவர்கள் சிரிப்பொலி வைக்கும்போது அப்படிப் பற்றிக் கொண்டு வருகிறது. என்ன பண்ணுவது நாம் பொம்மைகளாகப் போய்விட்டோம்.

    சரி சரி யாராவது வந்துவிடப் போகிறார்கள் பேசாமல் பொம்மையாக மாறி விடுங்கள் என்று மஹாவிஷ்ணு சொன்னவுடன் மாயமாய் எல்லாம் பூர்வஜா (என் மகள்) வைத்த மாதிரியே இருக்கிறார்கள்.

    நான் வெளியே வந்து பாத்ரூம் போய்விட்டுக் கொலு அருகில் போய் நின்றேன். எல்லாம் பொம்மைகளாகத்தான் இருந்தன. எனக்குத்தான் பிரமையா?

    உள்ளே போய்ப் படுத்தேன். நாளை முதல் பக்தியுடன் மாலை சுண்டல் செய்யச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ் அம்மா பாட்டுப் போட வேண்டும். சாயங்காலம் கொஞ்ச நேரமாவது டி வியில் சினிமா சம்பந்தமாகப் போடக்கூடாது என்று முடிவு செய்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

    “என்ன எழுந்திருக்கிறேளா…? பால் வாங்கிண்டு வரணும்…காலங்காத்தால அப்படி என்ன குறட்டை விட்டுண்டு தூக்கம்?” என்றாள். எழுந்தேன் வந்து ஹாலில் பார்த்தால் எல்லா பொம்மைகளும் ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.

    நான் நேற்று இரவு கேட்டதும் பார்த்ததும் உண்மையா பொய்யா சொல்லுங்களேன்?

    Share
  • அப்பாவின் அரிவாள்மனை

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    அரிவாள்மனை மனம் நிறைந்து போயிருக்கிற தருணம்.  இந்தப் பதிவை நானாகத் துவக்க வில்லை. அதுவாகத் துவங்கிக் கொண்டது. போனவாரம் என் தங்கைகளும் ஒரு தங்கையின் மகளும் வந்திருந்தனர். அப்போது என் தங்கை மகள் கத்திரிக்காய் காரக்குழம்பையும், மெல்லிதாக நறுக்கிச் செய்த முட்டைகோஸ் கறியையும் விரும்பிச் சாப்பிட்டாள்.

    இரவு வீட்டுக்குப் போய் தன் அம்மாவிடம் (என் தங்கையிடம்) “மாமா வீட்டில் கோஸ் கறி அம்மா சான்ஸே இல்லை அப்படி ஒரு ஃபைன் கட்டிங்” என்றாளாம். அவள் எனக்கு ஃபோன் பண்ணி இதைத் தெரிவித்தாள்.

    நான் தொலைபேசியில் அவளுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். “உன் அம்மா மூலம் நீ அனுப்பிய பாராட்டை என் விளியேமனைக்கு சேர்ப்பித்துவிட்டேன்” என்று.

    அதற்கு அவள் பதில் செய்தியாக “your viliyeymane has created more expectations” என்று செய்தி அனுப்பினாள். விளியேமனை என்றால் அரிவாள் மனை. அப்பாவின் நினைவு மேலோங்கியது. அப்பாவின் ஒவ்வொரு செயலும் எனக்குப் பாடமாக இருப்பவை. அப்பா ஒரு பிரம்மா, விஷ்ணு, சிவன்(ருத்ரன்). படைக்கும் போது அவர் பிரம்மா, எங்களை வளர்த்து காப்பாற்றிய விஷ்ணு. எங்களிடம் மட்டும் அவர் காட்டும் அநியாயக் கோபத்தில் ருத்ரன்.

    கத்தி, சாப்பர் எல்லாம் வந்துவிட்டாலும் எனக்கு இன்றும் என் அரிவாள் மனைதான். அது அப்பா எனக்கு விட்டுச் சென்ற வித்தை. கோவையில் என் மகன் வீட்டிற்கு சென்றபோது காய்கறி நறுக்க உட்கார்ந்தேன். உருளைக் கிழங்கு நறுக்க வேணும். நான் நறுக்கத்துவங்கிய போது அவன் கட்டரைக் கொண்டு வந்து அப்பா இதுல வைச்சு ஒரு ப்ர்ஸ் பண்ணு என்று பண்ணிக் காட்டினான். எல்லாம் ஒன்று போல கீழே இறங்கியது. எளிதில் முடிந்து விடும் என்றான்.

    எனக்கு அதில் விருப்ப மில்லை. எல்லாம் ஒன்றாக இருப்பதில் ஸ்வாரஸ்யம் இல்லை. உருளையின் வடிவம்  பொருத்து விரல்கள் செய்யும் வித்தையில் அரிவாள் மனையில் கீழ் விழும் துண்டுகள் காட்டும் ஜாலம் தனிதான்.

    அப்பா சமையல் கலையில் வல்லவர். வங்கிப்பணியில் இருந்தாலும் அவர் விரும்பிச் செய்வது சமையல். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் அம்மா அரிவாள் மனையைத் தொட்ட நாட்கள் மிகச் சொற்பம். அப்பா தன் கடைமைகளைத் தவறாமல் செய்வார். அதில் ஒரு நிதானம் அழகு மிளிரும்.

    காய்கறி மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வருவார். அம்மா குளிக்கப் போகுமுன் அன்றைய சமையலை அறிவித்து விடுவார். அதில் ஒரு நல்ல சுழற்சி இருக்கும். எங்கள் கன்னட குடும்பங்களில் சாம்பார், பிட்லை மோர்க்குழம்பு, ஹூலிபல்ய என்ற பருப்பு வகை தவிர்த்து கொச்சு, கொட்டு கூட்டு, ரஸவாங்கி, காயரஸா, மெந்துலி, பர்த்தா, அரத ஹூலி என்ற புளிக்குழம்புகளின் அணிவரிசை உண்டு.

    சாம்பாரில் மூன்றுவகை, பிட்லை ஒன்று, மோர்க்குழம்பு இரண்டு வகை. பருப்பு போட்டு சாம்பார் என்றால் கொட்டு ரஸம். சாம்பாருக்கு காரக்கறி, குழம்புக்கு தேங்காய் கறி…இப்படி.

    மார்க்கெட் போகும்போது என்னையும் அழைத்துப் போவார். அலுக்காத வகையில் காய்கறி வாங்குவார். விருந்தினர் வருகையின் அளவையும் தேவையையும் மனதில் கொண்டு வாங்குவார். சில சமயம் வீட்டுத் தோட்டத்து காய்களை கலந்து கொள்வார்.

    வந்தவுடன் தாழ்வாரத்தில் வந்து அமர்வார் அம்மா அரிவாள் மனையும் பாத்திரங்கள் தட்டுக்களை முன் வைப்பார். அப்பா நறுக்கத் துவங்குவார். அவர் செய் நேர்த்தி காண கொடுத்து வைக்க வேண்டும். தோல் உரிக்கும்போது அவர் கைக்கும் அரிவாள் மனைக்கும் ஒரு சங்கேத மொழி உருவாகும். பழுதில்லாமல் தோல் மட்டும் உரிந்து விழும்.

    அதன் பிறகு சாம்பாருக்கு வடிவம் பெறும். பூசனிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் போல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹிலிபல்யம் என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்கு கட்டம் கட்டமாக நீரில் மிதக்கும். பிட்லைக்கு காய்கள் தட்டில் சீர் போல் வைத்திருப்பார். கொத்தவரங்காய் மூன்றாய் கிள்ளி ஒரு மூலையில் இடம்பிடிக்கும். சௌசௌ செவ்வகமாய் இருக்கும். கருணைக் கிழங்கு வட்டமாக நறுக்கப்படும். கத்திரிக்காய் நடுவில் நறுக்காமல் இருக்கும். பாகற்காய் விதை நீங்கி வளையங்களாய் ஒரு ஓரம் அலங்கரிக்கும். பிட்லைக்கு காம்பினேஷன் கோஸ் கறி. அந்த கோஸ் பெரிய கோளமாக வருவது அப்பாவின் கை பட்டு கத்தரித்து விழும்போது தேங்காய் பூ போல இருக்கும்.

    சேனைக்கிழங்கு கறி மோர்க்குழம்பிற்கு, அது ஒரு பேசினில் பரத்தப்பட்டிருக்கும். பாகற்காய் குழம்பிற்கு என்றால் நீட்டு வாக்கில் முதலையை கூறு போட்டாற் போல் இருக்கும். அதன் நடுவே இரண்டோ மூன்றோ பச்சை மிளகாய் மூக்கு கீறி இணைந்திருக்கும். பரங்கியின் குடல் பிரித்து விதை நீக்கி துகையலுக்கு நறுக்கி வைப்பார்.

    வெண்டைக்காய் குழம்புக்கு நீட்டமாகவும், கறிக்கு திட்டமாகவும், பச்சடிக்கு ஸ்லைசாகவும் உரு மாறும். பேசிக்கொண்டே நறுக்குவார். குப்பைகளை அவ்வப்போது அகற்றி வைப்பார்.

    வாழைக்காயை நறுக்கும்போது தோல் எடுத்து நீரில் மிதக்க விடுவார். வறுவலுக் கென்றால் இரண்டாக நறுக்கி குறுக்கு வெட்டில் ஒரு அளவு வரை போய் நிறுத்தி விடுவார். வறுவல் கட்டையில் தேய்த்தால் அளவு கச்சிதமாக இருக்கும்.

    காரக்கறிக்கு மறுபடியும் சதுரமாகும். சேப்பங்கிழங்கை கோணியின் மீது தேய்த்து அதன் தோல் உரிப்பார். வறுவலுக்கு அது உருமாறும். முருங்கை காயின் நீளம் அவர் கைகளில் அளவெடுக்கும். முனை போக முழுவதும் ஒரே அளவாக தட்டில் விழும். முள்ளங்கி தோல் சீவி வட்டமாக ஒரு சீராக தட்டில் விழும். வெங்காயம் தோல் உரித்து தட்டில் ஒரு பகுதியில் இருக்கும்.

    அவர் நறுக்கி வைத்ததைப் பார்க்கும் போதே அன்று என்ன சமையல் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். கீரை நறுக்கும் போது அவர் கையில் அகப்படும் கீரைக் கத்தை அரிவாள்மனையில் ஒரு பக்கம் பொருத்தி இன்னொரு கையால் அதை நறுக்குவார். கீரை அப்படியே பொடிசாக விழும். அதை தண்ணீரில் மிதக்க விட்டு பச்சைமிளகாய் நடுவில் போடுவார்.

    வீட்டில் விழுந்த வாழை மரத்தை வெட்டி அதன் பட்டையைப் பிரித்து அதை பக்குவமாக சீவி அதற்கு மட்டும் கத்தி. ஒரு பட்டையை இரண்டாக ப் பிரித்து இரண்டையும் தேங்காய் விளக்குமாற்று குச்சியால் தைத்து இலையாக போடுவார். அதில் தயிர் சாதம் சாப்பிட்டால் அவ்வளவு ருசி போங்கள்.

    வாழைத்தண்டை தோல் சீவி அதனை வட்டவடிவாக நறுக்கி அதனை நெடுக்கில் சீவி தண்ணீரில் போடுவார் . அது குழம்பிலும் மோர்க்கூட்டிலும் குழைந்து போகும்.

    ஏகாதசி அன்று மறுநாள் துவாதசிக்காக அகத்திக்கீரை கட்டு வாங்கி இலை உதிர்த்து பழுப்பு நீக்கி நறுக்கி வைப்பார். வாழைத்தண்டின் வெட்டப்பட்ட சக்கரங்களில் நாங்கள் விளக்கமாற்று குச்சியைச் சொருகி தேர் பண்ணுவோம். வெண்டைக்காய் தலையைச் சுவரில் ஒட்டுவோம். அகத்திக்கீரை களைந்த குச்சிகளை ஒன்றாக்கி வாழை நாரில் கட்டி விளக்குமாறாக்குவோம்.

    பரங்கி விதைகளைப் பொறுக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி தோல் பிரித்துத் தின்போம். வாழைப்பூவின் தலைப்பகுதியை அதன் துவர்ப்பினை அனுபவிக்க பச்சையாக தின்பது ஒரு தனி சுகம்.

    குப்பையையா வாரி முறத்தில் வைத்து கொல்லையில் மாட்டுதொட்டியில் கழுநீருக்கு நடுவில் போட்டால் வாணவில்லின் வர்ணஜாலமாய் பச்சை மஞ்சள் எல்லாம் இருக்கும்.

    அப்பா அந்த அரிவாள் மனையை நேசத்தோடு பாது காப்பார். ஆறு மாதம் ஒரு முறை அதற்கு வாசலில் வருபவனிடம் சானை பிடிப்பார்.  சாணை பிடிக்கும் போது காலால் அவன் சக்கரத்தைச் சுழற்றி சுழலும் சாணக்கல்லில் இந்த அரிவாள் மனையின் முனைகளை பக்க வாட்டில் தொடும்போது தீப்பொறி பறக்கும். பூசணிக்காய் அரிந்தால் கூர் அதிகமாகும் என்று அப்பா சொல்வார்.

    எனக்குத் தெரிந்து இரண்டு முறை அரிவாள் மனை தலை கழண்டு விட்டது. விழுவதற்கு முன் கொஞ்சநாள் அந்த பகுதி சூரன் தலை போல் ஆடும். அப்பறம் ஒரு நாள் வீழும்.

    புது அரிவாள் மனை புழக்கத்திற்கு வரும். முதலில் கொஞ்சம் விரலைப் பதம் பார்க்கும். அப்பா விரலை தலைமேல் பிடித்துக் கொண்டு வலியில் அவர் முகம் கோணலாகும். பார்க்கப் பாவமாக இருக்கும். ஒருநாள் அம்மாவே காய் நறுக்குவாள். அப்பாவின் நேர்த்தி அதில் இருக்காது.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பா தன் அரியாசனத்தில் அமர்ந்து விடுவார். புது அரிவாள் மனையுடன் தோழமை கொண்டு விடுவார். இன்று நான் அரிவாள் மனையுடன் தோழமை கொண்டுள்ளேன். என் வாரிசு கத்திக்கும் கட்டருக்கும் மாறிவிட்டது. எனக்குப் பிறகு “விளியேமனை” எங்கள் வீட்டிலிருந்து மெல்ல விடைபெறும். அது வரை அதனை போற்றிப் பாதுகாப்பேன்.

    சமையல்காரர்கள் உபயோகிக்கும் அரிவாள் மனை, கத்தி, கரண்டி எல்லாம் அளவில் பெரியதாக இருக்கும். வீட்டு அரிவாள்மனை திட்டமாக இருக்கும்.

    அரிவாள் மனைமுன் அமரும்போது அப்பா என் மனம் முழுக்க வியாபித்திருப்பார். பெற்றவரை எப்படி வணங்கினால் என்ன. நான் தொழிலால் வணங்குகிறேன்.

    உங்கள் வீட்டில் அரிவாள்மனை இருந்தால் ஒரு முறை அதன் முன் அமர்ந்து அந்த ஆனந்த்தை அனுபவியுங்களேன்.

    படம் உதவி: Aruvamanai (Photo credit: Technofreak)
    http://thesoulbistro.wordpress.com/2013/07/11/ruminations-of-an-octogenarian/

    Share
  • சமையலறையில் புரட்சி

    மாதவ. பூவராக மூர்த்தி.

     

    “அங்கிள் காபி” என்று என் மருமகள் அழைத்து என்னிடம் சூடான காபியை நீட்டினாள். உள்ளே இண்டக்க்ஷன் ஸ்டவில் காய்ச்சிய பால். மேடை தன் உருவத்தை மாற்றிக் கொண்டது. இந்த அறுபது வயதில் நான் நான்கு தலைமுறை சமையலையும், சமையல் செய்யும் வழிகளையும் சுவைகளையும் கண்டு விட்டேன். என் நினைவுகள் வழக்கம் போல் பின்னோக்கி நகர்ந்தன.

    stoveதாத்தா வீட்டில் பாட்டி விறகு அடுப்பில் வெங்கலப் பானை வைத்து சமைத்த சமையலை சுவைத்திருக்கிறேன். பாட்டி வீட்டில் மண் அடுப்பும் இரும்பு அடுப்பும் உண்டு. மண் அடுப்பு பாட்டியே பண்ணி வைப்பாள். ஓன்டி அடுப்பு என்றும் ஒரு வாய் துவாரத்தில் இரண்டு அடுப்பு எரியும் அடுப்பும் உண்டு. விறகு எரியும் வேகம் பாட்டியால் கொதிநிலைக்கு ஏற்பத்  தீர்மானிக்கப் படும்.

    எரியும் அடுப்பில் விறகை கூட்டியும், சில சமயங்களில் வெளியே எடுத்தும் பக்குவமாக சமைப்பாள். அதோடு வீட்டில் குமட்டி அடுப்பு உண்டு. இந்த அடுப்பு நம் சிங்கிள் பர்னர் கேஸ் அடுப்பு போன்றது. குமட்டி அடுப்பு அநேகமாக பால் காய்ச்சவும், வெந்நீர் வைக்கவும், பயன்படுத்தப் படும்.

    குமட்டி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு கலைதான். எரிந்த விறகுகளின் மிச்சமான கரியும், விறகுக் கரியும், லீக்கோ கரியும் முக்கிய எரி பொருளாகும். தேங்காய் உரி நாரும் பேப்பரும் இந்த குமட்டி அடுப்பைப் பற்ற வைக்க உதவும். கொஞ்சம் தேங்காய் நாரை மடித்து சுருட்டி குமட்டியின் பில்லை மேல் வைத்து அதன் மேல் காற்று போகும் இடைவெளியில் கரியை அடுக்கி. கீழே பேப்பரை கொளுத்தி விசிறியால் வேகமாக விசிறி விடுவார்கள்.

    பேப்பரின் தீநாக்கு தேங்காய் நாரைத் தழுவி, அதில் பரவி,அதன் சூட்டை கரிக்குள் பரவ விடும். விசிறியின் வேகம் வெளிக்காற்று எல்லாம் கரியை பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாக மாற்றும். அது மொத்த குமட்டியிலும் விரிந்து கன கன என்று மிளிரும். அதன் மீது பால் அல்லது நீர் வைக்க நிமிஷமாய் கொதிக்கும். இதில் ஒரு அசௌகர்யம் உடனே அதன் சூட்டைக்  குறைக்க முடியாது.

    சமையலறையில் புகை மண்டுவதாலும் நிதான சமையல் சரிப்படாததாலும் விறகுத் தட்டுப்பாடு வந்தபோது மனிதன் வேறு வழிகளை சிந்திக்கத் துவங்கினான். அப்போது மரத்தூள் அடுப்பு வந்தது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் வீட்டில் உபயோகத்தில் இருந்தது.

    மரம் அறுக்கும் சாமில் போய் மரத்தூள் வாங்கி வருவோம். அது பக்கெட் கணக்கில் கிடைக்கும். ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சைக்கிளில் அல்லது தலையில் தூக்கி வருவோம்.

    அதை நான் வேடிக்கையாக நாச்சியார் கோவில் கல் கருடன் என்பேன். நாச்சியார் கோவிலில் இருக்கும் கல் கருட வாகனத்தை மண்டபத்திலிருந்து நாலு பேர் மட்டும் தூக்கி வருவார்கள். பிறகு எட்டு பதினாறு முப்பத்திரண்டு என தூக்குவோர் எண்ணிக்கை கூடும். அதுபோலஅருணா சாமில் வாசலில் தலையில் வைக்கும் போது லேசாக இருக்கும் மரத்தூள் மூட்டை வர வர தலையை நெருக்கும். வீடு வந்து இறக்கி வைத்த பிறகு தலை மரத்துப் போயிருக்கும்.

    மரத்தூள் அடுப்பில் நடுவில் ஒரு கட்டை வைத்து உட்புறம் முழுவதும் மரத்தூளை கொட்டி ஜாக்கிரதையாக அமுக்கி கொஞ்சம் நீர் தெளித்து கெட்டியாக்கி வைப்பார்கள். பிறகு லாகவமாக அந்த கட்டையை எடுப்பார்கள். முன் பக்கம் இருக்கும் ஓட்டையை அரித்து எடுப்பார்கள். நம் குழந்தைகள் கடல் மணலில் கட்டும் மணல் கோபுர வாசல் போல் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரே ஒரு சவுக்கு விறகை வைப்பார்கள். விறகு பற்றிக் கொண்டதும் அடுப்பு மஞ்சள் நிறத்தில் நின்று எரியும்.

    காலை ஒரு முறை பற்ற வைத்தால் நடுவில் அணைக்க முடியாது. தொடர்ந்து அடுப்பில் ஏதாவது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பாதி சமையலில் கூட மரத்தூள் சரிந்து அடுப்பு நின்று விடும்.

    அதிலும் அம்மா சமைத்து நான் சாப்பிட்டிருக்கிறேன். அதன் பிறகு மண்ணெணை ஸ்டவ், பம்ப் அடிக்கும் ஸ்டவ்… அதற்கு  பர்னர் பின் (pin) வாங்கி வைக்க வேண்டும்.  சில இடங்களில் ஸ்டவ் வெடித்து மருமகள் தீக்கிரையான செய்திகள் உண்டு.

    அதன் பிறகு நூடன், உம்ராவ் திரி ஸ்டவ் நடைமுறைக்கு வந்தது. இதில் வட்ட வடிவமாக 10 அல்லது 12 திரிகள் இருக்கும்.வட்டத்தின் உட்புறம் திரியின் வெளிப்புறமும் இரண்டு சிலிண்டர்கள் நுண்ணிய துவரங்களுடன் இருக்கும். திரியைக் கொளுத்தி சிலிண்டரைக் கவிழ்த்தவுடன் நீல நிற ஜ்வாலை வந்து மிகச் சிறப்பாக எரியத் துவங்கும். இந்த ஸ்டவ் காபிக்கும் வெந்நீர் வைக்கவும் மாலை நேரங்களில் டிபன் செய்யவும் பயன்படும்.

    வாரம் ஒரு முறை அந்த திரியை முனை தடவி திரியை ஏற்றி இறக்கும் திருகை சரி செய்ய வேண்டும். கிரஸின் தட்டுப் பாட்டில் இந்த சாதனம் இயங்க முடியாமல் போனது.

    அதன் பிறகு கேஸ் இணைப்பு வரத்தொடங்கியது. அம்மாவுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதில் ஒரு பயம் இருந்தது. மேலும் மடி சமையலுக்கு அந்த கேஸ் உதவாது என்று ஒரு நம்பிக்கை. அது காபி அடுப்பாக மட்டும் இருந்தது.

    காஸ் அடுப்பில் சமைக்க என் மனைவி தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அடுப்பில் மேல் வைக்கும் பாத்திரங்களும் மாறிவிட்டன. பாட்டி அம்மா வைத்த வெண்கலப் பானை சாதம் இல்லாமல் போயிற்று. பிரஷர் குக்கர் வந்தது. மூடி வைத்து கஞ்சி வடிக்காமல் சாதம் வெந்து வந்தது.

    இரும்பு வாணலிக்குப் பதில் இண்டோலியம் மற்றும் காப்பர் பாட்டம் கடாய் வந்தது. அம்மாவுக்கு பழக நாளாயிற்று. என் மனைவி அதில் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டாள். பொரிக்க வதக்க துவட்ட எல்லாவற்றிற்கும் இந்த கடாய்தான்.

    காஸ் தட்டுப் பாடு வரும் நாட்களில் ஸ்டவும், திவச நாட்களில் குமட்டியும் கை கொடுத்தன ஒரு பத்து வருடம் வரை. இப்போது எல்லாம் கேஸ் அதற்கு மாற்று எலக்டிரிக் ரைஸ் குக்கர். இண்டக்க்ஷன் ஸ்ட்வ்.

    இப்படி எல்லா வகையில் சமைத்தாலும் நாங்கள் சாப்பிடும் சில அயிட்டங்கள் மாறி விட்டன. குமட்டியில் சுட்டு அம்மா செய்த கத்திரிக்காய் கொஸ்து, இட்லி பானையில்  அவித்தெடுத்த இட்லி, இரும்பு கல்லில் வார்க்கும் தோசை, ஊத்தப்பம், உருளியில் செய்யும் அரிசி உப்புமா அதன் சுரண்டி…எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனது.

    வெங்கலப் பானையில் செய்த சாதம், கற்சட்டியின் வத்தல் குழம்பு, ஈயச் சொம்பில் ரஸம் இவையும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவை.

    என் பாட்டியின் கைப் பக்குவம் அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அம்மாவின் சமையல் எனக்குப் பிடித்திருந்தது. என் மனைவின் சமையல் என் மகனுக்குப் பிடித்திருக்கிறது.

    பதமும் வகைகளும் தலைமுறைகளுக்குத் தலைமுறை மாறித்தான் வருகிறது. சத்து மாவு, மோர்க்களி, பச்சை மா உப்புமா இவையெல்லாம் எங்கள் அப்பாவின் சிறு வயது பலகாரங்கள்.

    சேமியா, கோதுமை மாவு, அரிசி நொய் உப்புமா,சப்பாத்தி எல்லாம் எங்கள் சிறு  வயதுப் பலகாரங்கள்.

    மாகி, நூடுல்ஸ், பிட்சா, பாஸ்தா என் வாரிசுகளின் விருப்பங்கள்.

    நீண்ட நேரம் சமையல் அறையில் நிற்க யாருக்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

    இதற்கு இடையில் ஓவன் வந்து பொரிக்காமல் வறுக்காமல் சாப்பிட வைக்கிறது. நான்-ஸ்டிக் தவாக்கள் தோசையும் சப்பாத்தியும் எண்ணெய் இல்லாமல் செய்து தருகிறது.

    கேழ்வரகு, அரிசி, கோதுமை பார்லி கஞ்சிகளின் இடத்தை ஓட்ஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    மொத்ததில் பசியும் சாப்பாடும் எல்லா தலைமுறைக்கும் இருந்து வருகிறது. சுவையும் சாப்பிடும் முறையும் நேரமும் மாறி வரும் அவலத்தைப் பார்க்கும் நிலையில் நான் இருக்கிறேன்.

    அடுப்பும் குமட்டியும் எனக்கு கொடுத்த சுவை இந்த நவீன சமையல் முறைகள் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை.

    என் மருமகள் வைத்த காபி ஆறுவதற்கு முன் சாப்பிடுகிறேன். நீங்களும் கொஞ்சம் யோசனை செய்யுங்கள். அடுப்புக்கும் குமுட்டிக்கும் அஞ்சலி செய்வோம். பாட்டிக்கும் அம்மாவுக்கும் வந்தனை செய்வோம். மனைவிக்கும் மருமகளுக்கும் வாழ்த்துச் சொல்வோம்.

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://sinnutasty.blogspot.com/2011_04_01_archive.html
    http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_4.html
    http://hussainamma.blogspot.com/2012/04/blog-post_26.html
    http://consumergoods.indiabizclub.com/products/kerosene_stove
    http://himalisherpa.com/villa/index.php
    http://gokulmanathil.blogspot.com/2012/02/blog-post_13.html

    Share
  • நாற்காலியில் இடமில்லை

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    இந்தக்  காலக் கட்டத்தில் விதவிதமான நாற்காலிகள் வந்து சின்னக் குழந்தைகள் கூட நாற்காலியில் உட்காரும் போது இப்படி ஒரு தலைப்பு கொஞ்சம் புதுமையாகவும் முரணாகவும் இருக்கும். ஆனால் நாற்காலி ஆசை மனிதனின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஒரு எண்ணம் என்று கருதுகிறேன்.

    ஸ்டூல், பெஞ்சு, திண்ணை, ஊஞ்சல், பலகை, தாழ்வாரத்துக்கும் முற்றத்துக்குமான மேடான பகுதி, பாய், ஜமுக்காளம் என்பதே அந்த காலத்தில் உட்கார உபயோகமாகும் வஸ்துக்களாக இருந்தது. நாற்காலிகள் கை வைத்த மர நாற்காலிகள் மிகப் பெரிய மனிதர்கள் வீட்டில் மட்டுமே காணக்கிடைக்கும். அதன் பிறகு சோபா வந்தது. சாய்வு நாற்காலி வயதானவர்களுக்காக வந்தது. இன்று நாம் கம்புயூட்டர் முன் உட்காரப் பயன்படுத்தும் சுழல் நாற்காலிகள், அலுவலகத்தில் மேனஜர் அமர மட்டுமே பயன் படுத்திய காலம்.

    அந்த வயதில் நான் பார்த்த சுழல் நாற்காலிகள் மாணிக்கம் ஸலூனில்தான் உண்டு. சின்ன வயதில் கிராப்பு வெட்டும் அனுபவம் இன்னும் பசுமையாக இருக்கிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.

    பிறந்ததிலிருந்து கோவில் வேண்டுதல்கள் என மூன்று வருடங்கள் முடி காணிக்கை கொடுத்தே காலம் கடந்து விட்டது. நான்கு வயதில் ஒரு நாள் அப்பா தான் முடி வெட்டிக்கொள்ளப் போகும் போது கூட என்னையும் அழைத்துக் கொண்டுப் போனார்.

    மாணிக்கம் சலூன் கடைத்தெருவில் ஒரு சந்துக்குப் பக்கத்தில் இருக்கும். மாணிக்கத்தை நான் முதல் முறை பார்க்கும் போது அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். உள்ளே இருப்பவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியாத மாதிரி வாசல் கண்ணாடித் தட்டியில் பச்சை வர்ணம் பூசியிருக்கும். ஸ்பிரிங் கதவு மட்டும் நிலையில் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். கதவு திறக்கும்போது மட்டும் உட்புறம் ஒரு கணம் தெரிந்து மறையும்.

    மாணிக்கம் வெற்றிலை போடுபவர். அடிக்கடி கதவை லேசாகத் திறந்து துப்ப வருவார். அப்போது வாசலில் நின்று யோசனையுடன் இருப்பவர்களைப் பார்த்து “வாங்க சாமி, அடுத்தது நீங்க தான் என்பார்”.

    அவர் வார்த்தையை நம்பி உள்ளே போனால் இருக்கும் மூன்று நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மூவரும், கண்ணாடிக்கு கீழே போடப்பட்ட பெஞ்சில் ஒரு நாலு பேரும் இருப்பார்கள். நாம் யோசனையுடன் போனால் தம்பிக்கு ஷேவிங் மட்டும் தான் என்பார்.

    barber shopசலூனின் உட்புறம் நான் பார்த்த முதல் சொர்க்கம். காரணம் முகம் பார்க்க எங்கள் வீட்டில் ஒரு பெரிய கண்ணாடி கூடத்தில் இருக்கும். அது வீட்டுப் பெரியவர்களின் உயரத்துக்குத் தகுந்தபடி ஒரு ஐந்து அடியில் ஒரு ஆணியில் கம்பிகட்டி சற்றுச்  சாய்வாக ஒரு கட்டையில் நிற்க வைத்து இருப்பார்கள். கண்ணாடிக்கும் சுவருக்கும் இடையில் கிராப்பு சீப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    என்போன்ற உயரக்குறைவான குழந்தைகள் கையில் வைத்துக் கொள்ளும் முகம் பார்க்கும் கண்ணாடியில்தான் பௌடர், பொட்டு அல்லது விபூதி வைத்துக் கொள்வோம். என்னை முழுவதுமாக பார்த்துக் கொள்ள நான் கூடத்துக் கண்ணாடியின் முன் தாழ்வாரத்தில் நின்றால் தான் என் உயரத்துக்கு என்னைப் பார்க்க முடியும். அந்த தொலைக்காட்சியில் நான் பார்த்த உருவம் இந்த சலூனில் மிக அருகில் பார்க்கும்போது நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று என்னை பெருமிதம் அடையச்செய்யும்.

    நான்கடையின் வாசலில் நுழைந்து கடையின் உள்ளே போனபிறகு அந்தத் தெருமுழுவதும் அந்தக் கடை விரிந்திருப்பதாகத் தோற்றம் தரும். காரணம் இரண்டு பக்கச் சுவர்களிலும் பொருத்தப் பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளில் மாறி மாறித் தோற்றம் விழுந்து வெகு தொலைவை வரை நாம் தெரிந்துகொண்டிருப்போம்.

    பெரும்பாலும் சலூன்களில் கடிகாரம் இருக்காது. நேரம் ஆவது தெரியாமல் இருக்க இது ஒரு உத்தி. தினத்தந்தி, ராணி, மற்றும் அழகிய பெண்களின் உருவம் போட்ட ஆங்கில பத்திரிக்கைகள் பெஞ்சில் நிறைந்து நம் கவனம் ஈர்க்கும். எங்கள் வீடுகளில் வராத அந்த தினத்தந்தியில் நான் வருடக் கணக்காக சலூன் போகும்போது மட்டும் கன்னித்தீவு படித்திருக்கிறேன்.

    சுவரில் சிங்கப்பூர் காலண்டரில் சீன ஜப்பான் அழகிகள் குறைவான உடைகளில் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது என் பதின்ம வயதுகளில் தான் என் கண்ணில் பட்டு மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

    barber shop1கண்ணாடி முன் மேஜையில் நிறைய சின்ன பாட்டில்களும் டப்பாக்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலின் வாயில் வளைவான ஒரு குழாய் பொருத்தப் பட்டிருக்கும். மாணிக்கம் அதை எடுத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மேல் பீச்சுவார். சிதறல்கள் முகத்தில் தலையில் பட்டவுடன் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

    வைத்தியர் சங்கம் என்று ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் ஷேவிங், கட்டிங் கட்டணம் எழுதியிருக்கும் ஒரு தேதி குறிப்பிட்டு இன்று முதல் என்று எழுதியிருக்கும். பிரதி அமாவாசை, செவ்வாய் கிழமை கடை விடுமுறை என்று போடப்பட்டிருக்கும்.

    பெரும்பாலான ஊர் வம்புகளும், நடப்புகளும் அரசியலும் நான் சலூனில் இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். கத்தியை  முகத்துக்கு மிக அருகில் வைத்து இருக்கும் போது மாணிக்கம் தன் கருத்தைச் சொல்லி நம் ஆமோதிப்பை வேண்டுவார். காயப்படவேண்டாமே என்று நாம் தலையசைக்க வேண்டியிருக்கும்.

    மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முழுவதுமாக மூடிவைத்திருப்பதால் அவர்கள் யாரென்று கட்டிங் முடிந்து துணியைப் பிரித்தவுடன் அவர் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்திருக்கும் போதுதான் தெரியும். மாணிக்கம் அவர் கையில் சீப்பு கொடுப்பார். அவர் நாற்காலிக்கு அருகில் கண்ணாடிக்கு மிக அருகில் போய் தலை சீவுவதைப் போல சீவிக்கொண்டே தன் முக அழகில் மயங்கிப் போவார். மாணிக்கம் அவரை நகர்த்த சுழல் நாற்காலியை லேசாக அசைப்பார். அவர் நகர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம்கொடுத்து மீதி வாங்கிக்கொண்டு கண்ணாடியில் இன்னொமொரு முறை ரசித்துக் கொண்டே இறங்குவார்.

    அப்பா அடுத்தது உட்காருவார். தெருமுழுக்க அப்பா முகம் தெரியும். தலைமீது தண்ணீரை அந்த பாட்டிலால் போட்டு மாணிக்கம் கட்டிங் ஆரம்ப்பிப்பார். நனைந்த முடிகள் அப்பாவில் நாற்காலியைச் சுற்றிலும் சிதறும். புல் வெட்டுவது போல் ஒரு மிஷினை உபயோகப் படுத்துவார். அதன் பின் மாணிக்கம் கடையின் மூலையில் தொங்கவிட்டிருக்கும் பெல்டில் கத்தியைத் தீட்டுவார். அவர் முகத்தைப் பார்க்கவே மதுரை வீரனைப் போல இருக்கும். பயமாக இருக்கும். அவர் கத்தியை அப்பா முகத்தில் பூசிய நுரையில் மீது படரவிடுவார். முடிந்தவுடன் படிக்காரத்தால் முகத்தில் தேய்த்து விடுவார். அப்பாவின் முகம் ஜொலிக்கும்.

    அப்பா அவரது அரியணையிலிருந்த்து இறங்கியவுடன் அவரது வாரிசான என்னை அதில் அமரச்செய்வார். நாற்காலியில் சுழலும் அனுபவம் பெற முயலும் என் ஆர்வத்துக்குத் தடை போடுவார் மாணிக்கம். “வாங்க தம்பி உட்காருங்க” என்று சொல்லிய வாறே கீழிருந்து ஒரு மரப்பலகை எடுத்து நாற்காலியின் கைப்பிடிகளுக்கு இடையில் வைத்து அதில் என்னைத் தூக்கி உட்காரவைப்பார். என் கைகளை வளைத்து மெதுவாக என் தொடைகளின் மேல் வைத்து விட்டு வெள்ளைத்துணியால் என்னை முகம் மட்டும் தெரியுமாறு மூடிவிடுவார்.

    மண்ணில் புதையுண்டு போனமாதிரி முகம் மட்டும் தெரியும். நாற்காலியில் உட்காரமுடியவில்லை என்கிற வருத்தத்தைக் கண்ணாடி தெளிவாக எனக்குக் காட்டும். அப்பா பக்கத்தில் நிற்பார். மாணிக்கம் தண்ணீர் பீச்சும்போது முகத்திலும் தெறித்துச் சில்லிடும். அந்த மிஷினை  அசைத்துக் கொண்டே ஒரு கையால் தலையை முன்பக்கம் அழுத்துவார். பின் மண்டையில் மிஷின் ஓட்டப்படும். குறுகுறு என்கும். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆசையில் தலையை மெதுவாகத் தூக்குவேன். தெரிவதற்கு முன் மாணிக்கத்தின் கை அதை அழுத்தி விடும். என் பல முயற்சிகள் பல தடவை முறியடிக்கப்படும். சில சமயம் மாணிக்கம் “ஸ்” என்று சப்தமெழுப்புவார், “அசைக்கக்கூடாது” என்பார். சில உதிர்ந்த முடிகள் கண்ணுக்கு அருகிலும், கன்னத்திலும் விழுந்து உறுத்தும். கை வெளியே எடுக்க முயற்சிப்பேன். முடியாது… ஒரு வழியாக முடித்து என் தலைக்கனம் குறைத்து அழகாகச் சீவி விடுவார்.

    கொஞ்சம் கொஞ்சமாகக் காம்ப்ளான் குடிக்காமலேயே வளர்ந்தேன். அந்த நாள் நான் சற்றும் மறக்க முடியாத நாள். அந்த முறை முடிவெட்டத் தனியாக போயிருந்தேன். “தம்பி வாங்க” என்று அழைத்து எனக்கு அரியணை தரலாம் என்று முடிவு செய்து நாற்காலியின் குஷனை ஒரு தட்டு தட்டி உட்காரலாம் என்பது போல் செய்கை செய்ய நான் ராஜராஜ சோழன் போல் அரியணையில்  ஏறி அமர்ந்து ஒரு பெருமிதத்துடன் என் எதிரில் தெரிந்த கண்ணாடியில் என் உருவத்தை, அதன்  கம்பீரமானப் பொலிவைப் பார்த்துக் கொண்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

    அதன் பிறகு எத்தனையோ சுழல் நாற்காலிகள், பல் டாக்டரிடம், கண்டாக்டரிடம், அலுவலகத்தில் …. அவைகள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்க வில்லை. எனக்கு முதல் சந்தோஷத்தைக் கொடுத்த மாணிக்கம் சலூனின் சுழல் நாற்காலி அனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது மறுபடியும் அதை உணர்கிறேன்.

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.rangaprabhu.com/buzz/
    http://swipelife.com/2011/03/shop-review-chief-barber-shop/

    Share
  • பாட்டியின் அரண்மனை

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    சமீபத்தில் மைசூரில் தேசிய நாடக விழாவில் எங்கள் குருகுலம் குழுவின் நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். பன்மொழி நாடகங்கள் பங்கு பெற்ற அந்த விழாவில் நாங்கள் அளித்த நாடகம், நான் எழுதி இயக்கிய நாடகம் “அம்மாவின் அரண்மணை.” இது நமது சொந்த ஊரின் பெருமை பேசும் நாடகம்.

    பாட்டி வீடு1இந்த நாடகம் நான்கைந்து வருடங்களுக்கு முன் உருவானது. அதில் வரும் செட் என் பாட்டி வீட்டை நினைவு படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். வரைந்து கொடுத்தேன். செட் குமாரும் அவரது மகன் ஷண்முகமும் அதில் அக்கறை கொண்டு உருவாக்கினார்கள்.

    இன்று ஏனோ என் பாட்டி வீடு என் நெஞ்சில் நிழலாடுகிறது. என் பாட்டி வீடு என்று அல்ல கிராமத்து வீடுகள் ஒன்று போலத்தான் இருக்கும். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிராமத்திற்கு போகும் பழக்கம் என்று ஒன்று நம்மிடத்தில் ஒரு காலத்தில் இருந்தது.

    இன்று அதற்கெல்லாம் நமக்குப் பொருள் தெரியாது. நம் குழந்தைகளுக்கு விடுமுறையும் கிடையாது, உறவுகளும் இல்லை. கிராமங்களில் வாழும் பாட்டியும் இல்லை.கிராமத்தில் வீடும் இல்லை.

    ஒவ்வொரு  வருடமும் கோடை விடுமுறைக்கு கிராமத்திற்குப் போவோம். ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு ஒரு முறை அழைத்துப் போவார்கள். இது தவிர வீட்டின் விஷேஷங்களுக்கும் மறைவுக்கும் போயிருக்கிறோம்.

    பாட்டி வீடு01அது ஒரு வசந்த காலம். பாட்டியின் சாம்ராஜ்யம் பெரியது. வீடும் பெரியது. பாட்டி வீடு தெருவின் மத்தியில் ஊருக்கு நுழையும் சின்ன ரோடின் வலது புறம் திரும்பும் போது முதல் வீடாக இருக்கும். வாசலில் இரண்டு புறமும் திண்ணை. நடுவில் உள் வழி. முதல் இரண்டு திண்ணை வெட்ட வெளியில் இருக்கும். அதை ஒரு வராண்டா இணைக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கு கோடியில் முன் வாசல். படியேறினால் ஓட்டு சார்வில் இரண்டு பெரிய திண்ணை. இடது பக்கத் திண்ணை சிறியது. வலது பக்கத் திண்ணை மூன்று கம்பங்களின் இடைவெளியில் காம்ரா உள்ளின் வெளிச்சுவர் வரை நீண்டிருக்கும்.  தாராளமாக ஐந்தாறு பேர் படுக்கலாம். வெளித்திண்ணை ஒருவர் படுக்க இருவர் இருக்க மட்டுமே போதும். அதன் ஒரு மூலையில் சிமெண்ட் சரிவு இருக்கும். அதில் சாய்ந்து கொண்டு இரவு வேளைகளில் வானம் பார்க்கும் சுகமே தனிதான்.

    பாட்டி வீடு0நினைவுகளில் மூழ்கி உங்களை ரொம்ப நேரம் வாசலில் நிற்க வைத்து விட்டேன். வாருங்கள் உள்ளே போகலாம். திண்ணையை ஒட்டிய பெரிய வாசலில் வேலைப் பாடுகள் கொண்ட வாசல் நிலை. அதில் பெரிய கைப் பிடியுடன் கூடிய மரக்கதவு. தடிமனானது உறுதியானது. சின்ன வயதில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பார்த்து விட்டுப் பாட்டி வீட்டுக் கதவு முன் ஒருவர் நின்று ‘அண்டா காகசம், அபூ காகசும் திறந்திடுக சிசேம்’ என்று சொல்ல கதவுக்குப் பின்னால் நிற்பவன் மெதுவாகத் திறப்பான். அவன் உள்ளே நுழைந்ததும் குகையின் கதவுகள் மூடப்படும்.

    நீங்களும் அண்டா காகசம் சொல்லுங்கள் மனக்கதவு திறக்கும். அடுத்த பகுதி ரேழி. அது வெளி வாசலுக்கும் உள் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி. அங்கு ஒரு திண்ணை உண்டு. அந்த பகுதி கொஞ்சம் வெளிச்சக் குறைவாக இருக்கும். அதன் வெளிச்சம் வாசற்கதவின் நிலைக்கேற்ப மாறுபடும். கதவு முழுவதும் திறக்கும் போது வெளிச்சம் நிறைந்திருக்கும்.

    வீட்டின் மிக வயதானவர்கள், முதுமக்கள் தாழியில் வைக்க வேண்டியவர்கள், போவதற்கு முன் அங்கு நிலை கொள்வார்கள். இடது புறம் சின்ன வராண்டாவும் வலது புறம் பெரிய வராண்டாவும் இருக்கும். அதன் அருகே முற்றம் இருக்கும். முற்றம் ஒரு திறந்த சதுர அல்லது செவ்வகப் பகுதி.  அதன் நடுவில் வாசலில் இருந்து கொல்லை வரை விரியும் நேர்க்கோட்டின் மையப் பகுதியில் ஒரு அழகான துளசி மாடம் இருக்கும். கூடம் துவங்கி தாழ்வாரம் வரை நீண்ட ஓட்டுச் சரிவு தாழ்வார விளிம்புகளில் நின்று கொண்டிருக்கும் மரத்தூண்களில் வந்து தங்கி முற்றத்தில் கொஞ்சம் முகம் காட்டும். முற்றத்தின் நான்கு விளிம்புகளிலும் கூழாமூலை இருக்கும். மழைக்காலத்தில் ஓடு வரிசைகளுக்கு நடுவில் வரும் பாதை வழியாக வரும் மழை நீர் முற்றத்தில் விழும் அழகும் ஓசையும் இன்னும் என் மனதில் வழிகிறது.

    முற்றத்தின் கிழக்குச் சுவர் பக்கம் ஒரு ஜலதாரை கொல்லை நோக்கிப் போகும். கம்பி கட்டி துணி காயும். வத்தல் மிளகாய் , மஞ்சள் உளுந்து பயறு இவை பருவத்திற்கு ஏற்ப காயும். பின் தாழ்வாரத்தில் ஒரு பெரிய பித்தளைப் பாத்திரம் அல்லது  அலுமினியக் கூடையில் தண்ணீர் இருக்கும். பக்கத்தில் ஒரு சொம்பு இருக்கும். வெளியே போய் வந்தால் கால் கழுவவும், சாப்பிட்டு கை அலும்பவும் அது பயன்படும்.

    கூடம் மிக அழகாக காற்றோட்டமாக இருக்கும். சுவரையும் கூடத்துக் கம்பங்களையும் இணைக்கும் உத்திரங்கள் வலுவாக இருக்கும். ஓட்டுப் பகுதியில் இடையில் கண்ணாடி பதித்து கூடம் வெளிச்சம் பெறும். முற்றத்தில் வரும் வெளிச்சமும் காற்றும் போதுமானதாக இருக்கும்.

    பாட்டி வீடுபட்டா சாலை என்றழைக்கப் படும் கூடத்தில் நடுவில் உத்திரத்தில் ஊஞ்சல் தொங்கும். ஊஞ்சல் கம்பிகளுக்கு மத்தியில் நெற்கதிர் அறுவடையின் போது ஒரு கதிர் குஞ்சம் கட்டி விட்டிருப்பார்கள். குருவிகள் சகஜமாகப் பறந்து வந்து கொத்திக் கொண்டும் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருக்கும்.

    அதற்கு அடுத்த உத்திரத்தில் ஒரு கயறு தொங்கும் அதன் முனை ஊஞ்சலில் உட்கார்ந்தால் எட்டும்படியாக வைத்திருப்பார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்து கயிறை இழுத்தால் கிரீச் என்று ஒலியெழுப்பி ஊஞ்சல் அசைந்தாடும். கூடச்சுவரில் ஒரு மாடம் ஒரு அலமாரி சுவர் முழுவதும் காலண்டர்கள், பல்வேறு கருப்பு வெள்ளைப் படங்கள் தொங்கும். நடுவில் ஒரு கடிகாரம் பிரதானமாக இருந்து மணி காட்டும் மணிக்கொருதரம் இனிய ஓசை எழுப்பும்.

    கூடத்தில் ஒரு மூலையில் மூங்கில் கட்டி பாய் தலைகாணி இருக்கும்.

    ஒரு கம்பத்தில் பஞ்சாங்கம் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு மூலையில் பெரிய மேஜையும் கைவைத்த நாற்காலியும் அலங்கரிக்கும். இன்னொரு பக்கம் ஒரு சாய்வு நாற்காலி இருக்கும். மேஜையில் பெரிய ரேடியோ அதற்கான ஏரியல் முற்றத்தில் உயரக்கட்டி தாழ்வாரம் வழியாக வந்து கொண்டிருக்கும்.

    காம்ரா உள் பெரியதாக இருட்டாக இருக்கும். அதன் வடக்கு மூலையில் உள்ள ஜன்னல் திறக்கும் பொழுது வெளிச்சம் எட்டிப் பார்க்கும். கூடத்தில் இந்தப் பக்கம் ஸ்வாமி அறையும் அதை அடுத்து பெரிய சமையல் அறையும் இருக்கும்.

    பாட்டி வீடு2பின் தாழ்வாரத்தின் வராண்டா வழியாக கொல்லைக்கதவை தாண்டினால் கொல்லைத்தாழ்வாரம். அதை அடுத்து கிணற்றங்கரை அதை ஒட்டி தண்ணீர் நிரப்பும் தொட்டி துவைக்கும் கல். அதைத்தாண்டி கழிவறை. இடைப்பட்ட இடங்களில் பூச்செடிகள், வாழை தென்னை மரங்கள், நீண்ட கொல்லைப்பகுதியின் முடிவில் கிராமத்து சிறிய வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும்.

    அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் என் இளமைக்காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு நினைவு உண்டு. வாசல் திண்ணையில் கழித்த இரவுகள், பாண்டி விளையாடிய வாசல். விளக்கெண்ணெய் குடித்து குதித்து குதித்து களைத்துப் போன முற்றம்.

    மழைக்காலத்தில் ஜலதாரையில் கல் வைத்து அடைத்து  தெப்பக்குளமாக  தண்ணீர் தேங்க வைத்த முற்றம் அதில் கால் நனைத்து கப்பல் விட்ட காலம். வேகமாக ஊஞ்சல் ஆடிய கூடம். உத்திரத்தில் கட்டிய தூளியில் தங்கையை அம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்தது. பாட்டி கையால் உருண்டை வாங்கி கட்டை விரலால் குழி பண்ணி குழம்பு ஊற்றி சாப்பிட்ட தாவாரம், மருதாணி இட்டுக் கொண்டு படுத்த கூடம், அவல் இடிக்கிற கொல்லைத்தாவரம்.

    கிணற்றடியில் வாளியில் தண்ணீர் இழுத்து ஜில்லென்று தலையில் விட்டுக் குளித்த காலம். இறைந்து கிடக்கும் பவழமல்லியை பொறுக்கிய காலை. கவணையில் கட்டிய பசுமாட்டின் கழுத்தைத் தடவிய பொழுதுகள்.

    துள்ளிக்குதிக்கும் கன்றுகுட்டியைப் பின் தொடர்ந்து பொழுதுகள். இளநீர் குடித்த வெயிற்காலம், ஏறிக்குதித்த வைக்கல் போர், எட்டிப் பறித்து பூவரசம் இலையைச் சுருட்டி ஊதிய நாதஸ்வரம். சின்ன வாய்க்காலில் குதித்த காலை நேரம்.

    அந்த அரண்மணை எனக்கு கொடுத்த இனிய சுகங்கள் இன்னும் என் நெஞ்சில் சுரந்து கொண்டிருக்கிறது. உங்களுடன் அதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷமே.

     

     

     

     

     

     

    படம் உதவி:
    மாதவ. பூவராக மூர்த்தி
    &
    http://www.tamilnaduhotel.net/nagapattanam/mangala_heritage_home/

    Share
  • காணாமல் போன சைக்கிள்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    ரொம்ப நாளாக எனக்கு சைக்கிள் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. சைக்கிள் ஒரு உன்னதமான வாகனம். லைஃப் சைக்கிளில் சைக்கிள் பயணம் ஏதேனும் ஒரு முறையாவது நம் எல்லோருக்கும் வாய்த்திருக்கும்.   நீங்கள் முதலில் சைக்கிளில் சென்றது நினைவிருக்கிறதா?

    எனக்கு இருக்கிறது. அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். என்னை முன்பகுதியில் பார் மீது உட்காரவைத்து கால்களை எடுத்து முன் பக்கம் மட்கார்ட் மீது வைத்துக்கொள்ளச் செய்து கையை ஹேண்டில் பார்மீது வைத்து விட்டார். நான் கெட்டியாகப் பிடித்து கொண்டேன். அப்பா ஸ்டாண்டு எடுக்க சைக்கிள் குலுங்கி நின்றது. பெடல் மீது அப்பா கால் வைத்து அழுத்த வேகம் பிடித்தது. என் முகத்தில் காற்று படர்ந்தது. வேகம் எனக்குப் பிடித்தது.

    எதிரிலும் பக்கத்திலும் நிறைய சைக்கிள்களும் வண்டிகளும் பறந்தன. காவிரிக்கரையில் சின்ன மார்க்கெட்டில் வண்டி நின்றது. என்னை இறக்கி விட்டார். காய்கறி வாங்கினோம். தள்ளிக்கொண்டு போனார். நானும் கூடவே நடந்து போனேன். ஹோட்டலில் போய் இட்லி சாப்பிட்டு ஒரு கடையில் சைக்கிளை நிறுத்தினார். வாடகை சைக்கிள் நிலையம் என்று போர்டு போட்டிருந்தது. ஒரு பையன் வந்து ஒரு பம்பு கொண்டு வந்து முன் பின் சக்கரங்களில் காற்று அடித்தான். மறுபடியும் வீடு வரை ஒரு ஜாலியான பயணம். உட்காரும் இடம்தான் வசதி யாக இல்லை. அதன் பிறகு பலமுறை எனக்கு இது கிடைத்தது. ஒரு சில முறை மறதியாக காலை நீட்டி சக்கரத்தில் மாட்டியதும் உண்டு.

    கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பின்னால் ஸ்டாண்டில் உட்கார ஆரம்பித்தேன். இது வசதியாக இருந்தது. இப்போது என் தங்கை சந்திரா பாரில் உட்கார்ந்திருந்தாள். ஆனால் பள்ளிக் கூடத்திற்கு நடந்து தான் போக வேண்டும். எப்போதாவது திரும்பும்போது மாமாவோ அப்பாவோ வழியில் வந்தால் ஏற்றிக் கொண்டு வருவார்கள்.

    ஹைஸ்கூல் படிக்க ஆரம்பித்தபோது வகுப்பு நண்பர்கள் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டார்கள். வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும்  தெருக்களில் மிக வேகமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வார்கள். எனக்கும் சைக்கிள் விட ஆசை. அப்பாவிடம் கேட்க பயம். அம்மாவிடம் காசு கேட்டு நண்பன் சேகருடன் வாடகை சைக்கிள் தரும் ராமன் கடைக்குப் போனோம். அவன் எங்களை நம்பித்தரத தயாராயில்லை. சின்னப் பாட்டியை சிபாரிசுக்கு அழைத்துப் போனேன். அவர் வார்த்தைக்கு நல்ல மதிப்பு. சின்ன சைக்கிள் கைக்கு வந்தது.

    சேகர் ராஜாந்தோட்டத்துக்கு போகலாம் என்று சைக்கிளில் ஏறி மிதித்தான். நான் அவன் பின்னால் ஒடினேன். அதில் ஒரு பத்து நிமிடம் போய்விட்டது. அங்கு போனபின் எப்படி ஓட்ட வேண்டும் தெரியுமா என்று எனக்குக் காட்டுவதற்காக ஓர் ஐந்து நிமிடம் அவன் ஓட்டினான். அப்பறம் என்னை சீட்டில் உட்கார வைத்து ஹேண்டில் பாரை கெட்டியாகப் பிடித்துக் கொள் என்றான். காலால் பெடலை அழுத்து என்றான். ஒரு காலால் அதை வேகமாக மிதித்தேன். அது கீழே போய்விட்டது. காலுக்கு எதுவும் தட்டுப் படவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் இப்ப இந்தக் காலால் மிதி என்றான். மிதித்தேன். அதுவும் கீழே போனது. நல்ல வேளை இந்த பக்கம் பெடல் காலுக்குச் சிக்கியது. மிதித்தேன். இந்த மிதிகளுக்குகாக என் முதுகு ஏகத்துக்கு வளைந்தது. சேகர் நடுமுதுகில் ஒரு குத்து விட்டான். நேரா உட்கார்ந்து வளைக்காம நேர பாத்திண்டு மிதி என்றான். வளைந்து வளைந்து சைக்கிள் நகர்ந்தது. அவனும் கூட ஓடி வந்தான். “இந்த கால்”, “அந்த கால்” , “ஹாண்டில் பாரை வளைக்காதே” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் பேச்சு நின்றுவிட்டது. சைக்கிள் கட்டுப்பாடில்லாமல் மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.

    “அப்படியே திருப்பு”, என்று அவன் குரல் தொலைவில் கேட்டது. அப்போதுதான் நான் தனித்து விடப்பட்டது அறிந்தேன். சந்தோஷமும் பயமும் என்னை ஆட்கொண்டது. நான் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் மகிழ்ந்தது. எல்லாம் ஒரு கணம்தான் அவனைத்திரும்பிப் பார்த்தேன். அடுத்த நொடி நான் தரையைத்தொட்டேன். சைக்கிள் என் மேல் விழுந்தது. பயம் சூழ்ந்து கொண்டது அம்மா என்று அலறினேன். சேகர் சிரித்து கொண்டே ஓடி வந்து என்னை தூக்கி நிறுத்தினான். விழுந்து எழுந்து நான்கு ஞாயிற்றுக் கிழமைக்குள் நன்றாக சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு விட்டேன்.

    என் உயரம் எனக்கு ஒரு சவால் விட்டது. 22 இன்ச் சைக்கிள்கள் தான் பெரும்பாலும் எல்லோரும் வைத்திருப்பார்கள். அதில் என்னால் ஏற முடியாது. குரங்கு பெடல் போட்டுக் கொண்டுதான் போகவேண்டும். சைக்கிள் நன்றாக விட வந்த போதும் ஏறுவதும் இறங்குவதும் சீராக வரவில்லை. ஒரு கல் அல்லது மேடையின் அருகில் சைக்கிளை வைத்து சைக்கிளில் ஏறி  ஒரு உதை விட்டு புறப்படுவேன். அதே போல இறங்குவதும் மேடைக்கருகில் அல்லது மின்சார அல்லது தந்திக்கம்பங்களைக் கட்டிக்கொண்டுதான்.

    வீட்டுக்கு யாரவது சைக்கிளில் வந்தால் அவர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் மாமா கொஞ்சம் சாவி கொடுங்களேன் என்று வாங்கி ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவதில் ஒரு தனி சுகம் உண்டு.

    எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது கீழையூர் தியாகராஜனுக்கு அவன் அப்பா ஒரு குட்டி சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். அவனை நண்பனாக்கிக் கொண்டு அவனிடம் தினமும் ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவேன். எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கவேண்டும் என்று ஒரு கனவு உண்டு.

    என் சித்தப்பா கிராமத்தில் ஒரு சைக்கிள் வைத்திருப்பார். அதை தினமும் துடைத்து வைப்பார். ஆயில் கேனில் தேங்காய் எண்ணையும் மண்ணெண்யும் கலந்து போட்டு பெடல் மற்றும் சக்கரங்களில் எண்ணெய் விடுவார். ஸ்டாண்டு போட்டு கையால் வேகமாக பெடலைச் சுற்றுவார் டைனமோ ‘விர்’ என்று சத்தம் போட்டபடி சுழலும். முன் பக்கம் லைட்டின் முன் கை வைத்துப் பார்ப்பார். வீல் நடுவில் குஞ்சலம் கட்டிவைப்பார். மட்கார்டின் அடியில் சைக்கிள் கம்பெனியின் பெயர்போட்ட ரப்பர் ஷீட்டை அடிக்கடி மாற்றுவார். ஹேண்டில் பாருக்கு உறை போட்டி வைப்பார். டைனமோ விளக்கின் மேல் மஞ்சள் துணி கட்டி வைப்பார். கேரியரில் இடது புறம் ஒரு பெட்டியை இணைத்திருப்பார். அவர் சைக்கிள் ஓட்டி வருவதே அழகுதான்.
    IMG_0650
    பி.யூ.சி சேர்ந்தவுடன் கொஞ்ச நாளைக்கு காலேஜூக்குப் பஸ்ஸில் போய்வந்தேன். ஒவ்வொருவராக சைக்கிள் வாங்கி அதில் போக ஆரம்ப்பித்தார்கள். சேகர், ரமேஷ், ஹரி, எல்லாரும் வாங்கி விட்டார்கள். ஹெர்குலஸ், அட்லஸ், எல்லாம் இருக்கும். எனக்கு ராலே சைக்கிள் மீது ஒரு காதல். அதிலும் பச்சை ராலே. அப்பாவிடம் அடி போட்டேன். பாவம் அவர் நிலைமை எனக்கும் தெரிந்ததே. சாதாரண சைக்கிள் வாங்கவே அவர் முக்க வேண்டும். அதுவும் பச்சை ராலே. என் அதிருஷ்டம் அப்பாவுக்கு ஏதோ போனஸ் வந்தது போல. கொடுக்க வேண்டிய கடனை அப்பறம் கொடுக்கலாம் என தீர்மானித்து ஜெகந்நாதன் கடையில் நின்றோம். என்னோடு ரகோத்தமன், ஸ்வாமி.  ரகோத்தமன் கருப்பு ராலே, ஸ்வாமி ஹெர்குலஸ் நான் எனக்குப் பிடித்த பச்சை ராலே. வாங்கி வந்து அனுமார் கோவிலில் பூஜை போட்டோம். கடைக்காரர் “ஒரு மாசம் ரொம்ப ஸ்பீடு வேண்டாம், ரீ பிட்டிங் பண்ணிண பிறகு வேகமாக போகலாம்” என்றார். சரி சரி என்று தலையாட்டினோம்.

    முதல் நாள் காலேஜிக்கு சைக்கிளில் ஒவ்வொருவராக மார்கழி நோண்புக்கு ஆண்டாள் கூப்பிடுகிறமாதிரி வீட்டின் வாசலில் முன் நின்று பெல் அடித்த போது எங்கள் முகத்தில் பெருமிதம் சொல்லி முடியாது. பஸ்ஸில் போன தூரம் சைக்கிளில் போனபோது அதிகமாக உணர்ந்தோம்.

    IMG_0651ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் வீடு திரும்பும் போது யார் சைக்கிள் வேகமாகப் போகும் என்று போட்டி. போட்டியின் முடிவு என் சைக்கிளில் பெடல் மட்டும் சுற்றுகிறது. சக்கரம் சுற்றவில்லை. மெதுவாக தள்ளிக் கொண்டு அப்பா ஆபீஸில் நிறுத்தி மெதுவாக விபரம் சொன்னேன்.

    திட்டிவிட்டு ஜெகந்நாதன் கடைக்கு அழைத்து வந்தார். அவர் ஒரு மிதி மிதித்து விட்டு ரேஸ் விட்டிருக்கு என்றார். அப்பா என்னைப் பார்த்தார். நான் வெளியே பார்த்தேன். அவர் எதையோ பிரித்து மாட்டி சரி பண்ணிக் கொடுத்தார். சைக்கிள் ஒரு அங்கமாகிவிட்டது.  காலேஜ் போக, கடைத்தெருவுக்கு சாமான் வாங்க, குளிக்க காவேரிக்குப் போக. கடைகுட்டித் தங்கை ஹேமலதாவை சைக்கிளில் உட்காரவைத்து காவிரிக்கு அழைத்துப் போவதில் அவளுக்குத் தனி மகிழ்ச்சி.

    சைக்கிளின் பயனை நாம் முற்றிலுமாக மறந்து விட்டோம். அது தூரத்தைக் கடக்கும் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல் ஒரு  உடற்பயிற்சியாகவும் இருந்து வந்தது. பராமரிப்பு செலவும் குறைவு. சுற்றுப் புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும். இன்று அவ்வளவாக சாலையில் சைக்கிள்கள் உருளுவதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் வாகனமாக அது நம்மிடையே ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது.

    cycleரொம்ப வருஷம் என்னோடு இருந்த அந்த  பச்சை ராலே சைக்கிளை ஒரு நாள் அப்பா அரிசி வாங்கி வர ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே போய் வர யாரோ திருடிவிட்டார்கள். அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். நான் சமாதானம் சொன்னேன். எனக்கு சைக்கிள் தொலைந்த போன வருத்தத்தைவிட அதை நான் தொலைக்க வில்லை என்ற சந்தோஷம்தான் அந்த நாட்களில் மிகுந்திருந்தது.

    எனக்கு என் சைக்கிள் கொடுத்த சந்தோஷம் என் மகனுக்கு நான் வாங்கிக் கொடுத்த ஹோண்டா ஷைன் கொடுத்ததாக அவன் சொல்ல வில்லை. ஒரு வேளை அவன் மகனுக்கு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்கி கொடுக்கும் போது நினைத்துக் கொள்வானோ என்னவோ.

    வாரத்துக்கு ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுங்கள்.  நல்ல சாலைகளும் சைக்கிளும் மகிழ்வடையும்.

    Raleigh, with drum brakes, hub dynamo and 3 speed gear
    படம் உதவிக்கு நன்றி: http://www.team-bhp.com/forum/pre-war/75559-vintage-classic-bicycles-india.html

    Share
  • ஷண்முக விலாஸ் – ராமனாதன்

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    ஹோட்டல் பற்றி அடிக்கடி எழுதுவதால் இந்தத் தலைப்பு உங்களுக்கு இன்னொரு ஹோட்டல் மனிதரைப் பற்றி என்று நினைக்க வைக்கக் கூடும். இல்லை,  ஆனால் இவரும் நிறையப் பேருக்குச் சாப்பாடு போட்டவர். இன்று நான் உங்களோடு முகநூலில் சரளமாகக் கட்டுரைகளை அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு “சின்ன ஸார்” என்று எங்களால் அன்போடு அழைக்கப் படும் திரு ராமநாதனும் அவரின் ஷண்முக விலாஸ் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டும் தான் காரணம்.

    12th-typewriter_12_1752701eஅது ஒரு காலம் அப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி முடிந்தவுடன், பாஸ் ஆனவர்கள் கல்லூரி படிக்க இயலாதவர்கள், பெயிலானவர்களின் சரணாலயம்தான் இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்கள்.  எங்களூரின் மத்தியில் அமைந்திருந்த அந்த இன்ஸ்டியூட்தான் பலரை டைப்பிஸ்ட்களாகவும், ஸ்டெனோவாகவும் பெரிய கம்பெனிகளில் சேர்த்துவிட்டது. சென்னை, கல்கத்தா, பாம்பே, ஜெம்ஷெட்பூர் போன்ற பெருநகரங்களில், பெரியநிறுவனங்களில் ஓய்வு பெறும் போது அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் படித்தவராக இருப்பார்கள்.

    கல்லூரி படிக்கிறவர்களும் படிப்பு உதவுகிறதோ இல்லையோ டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்ட் உதவும் என்று உபரியாக இன்ஸ்டிடியூட்டில் சேருவார்கள், சேர்க்கப்படுவார்கள். நானும் அப்படித்தான் சேர்ந்தேன். ஆனால் எதையும் முழுதாக முடிக்காத என் வரலாறு இதிலும் தொடர்ந்து.  லோயர் பாஸ் ஆனபிறகு ஹையருக்குப் போய் கோட் அடித்து முடித்துக் கொண்டேன். இருந்ததாலும் அந்த அனுபவம்தான் என்னை வங்கியில் கிளார்க் கம் டைப்பிஸ்ட் ஆக்கியது.

    அது ஒரு காலம் மிகவும் இனிமையான காலம் என்று தான் சொல்ல வேண்டும்.  எதிர்காலம் பற்றிய கனவுகள் எதுவும் இல்லாமல் நிகழ்காலச் சின்னச்சின்னச் சந்தோஷங்களில் லயித்த காலம். கனவுகள் மனதில் வழிந்து கொண்டிருந்தது. வாலிபம் வந்த வயது பள்ளிக் கட்டுப்பாடுகள்.

    தொலைந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு கிடைத்த மாணவ சுதந்திரம், டிராயர் போக வேஷ்டி,முழுக்கைச் சட்டை, கைகளில் புதிய வாட்ச், புதிய சைக்கிள். அவ்வப்போது பார்த்த புதுப்படங்களில் வந்த பாடல்களைச் சந்தோஷமாக உதடுகள் முணு முணுத்த காலம். காலேஜ் நண்பர்கள் சேர்ந்தார்களே என்றுநானும் ஷண்முக விலாஸில் சேர முடிவெடுத்தேன்.

    ஒரு நாள் மாலை நாலு மணிக்குப் போய் சின்ன ஸார் என்று எங்களால் அழைக்கப் படும் ராமநாதன் அவர்களிடம் பேசி பணம் கட்டிவிட்டு வந்தேன்.“எத்தனை       மணி ஷிப்ட் வருவே?” என்றார். ஆறு மணிக்கு என்று சொன்னேன்.

    காலை ஆறுமணிக்குச் சைக்கிளில் போய் இறங்கினேன். உள்ளே எனக்கு முன் வந்து சிலர் பலவிதமான வேகத்தில் பல விதமான நிலைகளில் டைப்ரைட்டர் முன் அடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பால பாடம், சிலர் லோயர், சிலர் ஹையர், நிறைய மிஷின்கள் காலியாக இருந்தன. புதுப் புதுமெஷின்கள். நான் வந்து நின்றதும் மூலையில் ஒரு மிஷினை பிரஷ்ஷால் துடைத்துக் கொண்டிருந்தவர் எழுந்து வந்தார். ஹாலில் புது மிஷின்களைக் கடந்து அழைத்துப் போய் ஒரு பழைய மிஷின் முன் நிற்க வைத்தார். எல்லா மிஷின்களும் ஒரே அளவான டேபிளில் வைக்கப் பட்டிருக்கின்றன.எல்லாவற்றிற்கும் முன் உயரமான ஸ்டூல்கள் இருந்தன.

    அந்த நேரத்திலேயே சின்ன ஸார் ஃப்ரெஷ்ஷாக இருந்தார். அன்று மட்டுமல்ல அதன் பிறகு ஷண்முக விலாஸில் நான் கழிந்த பல மாதங்களிலும் அவரைஅப்படியே காணக்கிடைத்தது. நிர்மா வேஷ்டி, அதைவிட வெண்மையான கட் பனியன், கோவைப் பழம் போன்ற சிவந்த அழகான உதடுகள். சுருட்டைமுடியுடன் கூடிய தலை. நெற்றியில் ஒரு விபூதிக் கீற்று.

    அவர் ஸ்டூலில் உட்கார்ந்து “பேப்பர் கொண்டு வந்திருக்கியா?” என்றார்.”இல்லை” என்று தலையாட்டினேன். பக்கத்து டிரேயிலிருந்து ஒரு பேப்பர் எடுத்து நிமிஷமாய் மிஷினுக்குள் சொருகினார். அது விருட்டென்று போய் இருத்திக் கொண்டது. எதையோ அசைக்க மேல் மார்ஜின் போக இடது ஓரத்தில்தயாராக நின்றது.  அதில் கட கட என்று நான்கு வரி இடம் விட்டு அடித்து ஐந்தாவது வரியில் நிறுத்தினார்.

    230313  halda typewriterஅவர் எழுந்து என்னை உட்கார வைத்தார். என் கையைப் பிடித்து அந்தப் பழைய மிஷினின் கீ போர்டில் வைத்தார். இடது கை சுண்டு விரலை A என்றபட்டனில் பொருத்தினார். அதன் அடுத்த இடங்களில் மீதி மூன்று விரல்களைப் பொருத்தினார். இரண்டு பட்டன் தள்ளி வலது கையின் ஆட்காட்டி விரலை‘J” வில் வைத்து அடுத்த மூன்று விரல்களுக்கும் இடம் தந்தார். “நான் அடிச்ச மாதிரி Asdfgf ;lkjhj வரிசையா அடி” என்றார்.

    நான் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தால் புது மெஷினில் எடுத்த வுடனே வார்த்தைகள் அடிக்கச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று ஆசையோடு வந்த எனக்கு சட்டை போடாத இந்த வயசான மிஷினுக்கு முன்னால் உட்காரவைத்தது ஏமாற்றமாக இருந்தது. எனக்கு முன்னால் சேர்ந்த நண்பர்கள் இதைப் பற்றிஎன்னிடம் சொல்லவே இல்லை. இன்ஸ்டிடியூட்டில் நிறையப் பாவாடை தாவணி போட்ட பெண்கள் வருகிறார்கள் என்றும் அதில் நிறையப் பேர் பார்க்கஅழகாக இருக்கிறார்கள் என்றும் சொல்லத்தெரிந்த அந்த மடையர்களுக்கு இதைச் சொல்ல நேரமில்லை போலிருக்கிறது.

    நான் மனசுக்குள் வேண்டிக்கொண்டு அடிக்க முயற்சித்தேன். சுண்டு விரல் தனியாக அழுந்த மறுத்தது. மோதிர விரலை துணைக்கு அழைத்தது.அதன்விளைவாக இரண்டு டைப் கம்பிகள் நான் எதிர்பாராத விதமாக எழுந்துகொண்டிருந்தது.அழுத்தியபடியே சின்ன ஸாரைப் பார்த்தேன். அவர் “ஒவ்வொருவிரலா அழுத்தணும்.” என்றார். அடுத்த முயற்சியில் ஒரு கம்பி எழும்பியது போதிய அழுத்தமில்லாததால் பேப்பர் வரை சென்றுவிட்டு வந்தது. எழுத்து விழவில்லை.

    கொஞ்சம் வேகமாகப் பிரஸ் பண்ணு” என்றார். பண்ணினேன். நச் என்று எழுத்து விழுந்தது. சந்தோஷமாக இருந்தது. நான் முதல் எழுத்தை அடித்து விட்டபெருமையில் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ. “அடுத்த லெட்டர் அடி “என்றார். மோதிர விரலை மட்டும் அழுத்த நான் எடுத்த முயற்சியில் வெற்றிபெற்றபோது எழுத்துப் பேப்பரில் தெரிந்தது. ஆனால் நான் ஸ்டூலில் இருந்து எழும்பி கோணலாக நின்று கொண்டிருந்தது இன்றைக்கு நினைத்தாலும்சிரிப்பு வருகிறது.

    சின்ன ஸார் புறப்பட்டார். நான் அடுத்தக் கையையை பயன்படுத்தி முதல் எழுத்தை அடித்தேன். பக்கத்தில் இடம் இல்லாமல் விழுந்து தொலைத்தது.சின்ன ஸாரைக் கூப்பிட்டேன். இடம் வேணும் என்றேன். பின்னால தள்ளி உட்காரு என்றார். இல்ல சார் ஒரு எழுத்துக்கும் அடுத்ததுக்கும் நீங்க விட்டமாதிரி இடம் என்றேன். “ஸ்பேஸ் பாரை பிரஸ் பண்ணு” என்று பண்ணிக் காட்டினார்.

    அந்த வரிசை முழுவதும் மெதுவாகப் பார்த்து பார்த்து அடித்து முடித்தேன். அடுத்த வரிக்கு வரத்தெரியவில்லை. அந்தப் பக்கம் வந்த சின்ன ஸார் என்னஅடுத்த லைன் அடி என்றார். எப்படி? என்றேன். அவர் லீவரை ஒரு தட்டு தட்டினார். அடுத்த லைனில் ஆரம்பத்திற்கு வந்து சமர்த்தாக நின்றது. அவர் என்முதுகில் சின்னதாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் போனார்.

    ரொம்ப நேரம் அடித்தேன். ஒரு பத்து வரி அடித்திருப்பேன். திரும்பிப் பார்த்தால் பதினைந்து நிமிடம் தான் ஆகியிருந்தது. ஸ்டூலில் உட்கார்ந்தது அசெளகர்யமாக இருந்தது. எழுந்து போய்த் தண்ணீர் குடித்து வந்தேன். வெளிச்சம் போறாத மாதிரி இருந்தது. ஒரு வழியாக முதல் கிளாஸ் முடிந்தது. வெளியே வந்தால் வெயில் வந்திருந்தது. கையை ஒரு மாதிரி வைத்திருந்ததால் லேசாக வலித்தது.

    இரண்டாவது நாள் ஆர்வமாக ஒரு பக்கம் முழுவதும் அடித்தேன். தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தேன் வேகமாக. சின்ன ஸார் அருகில் வந்து“பூவராகா பேப்பர்ல அடிக்கணும், ரோலர்ல அடிக்கக் கூடாது” என்றார். நிமிர்ந்து பார்த்தால் மிஷினில் பேப்பர் காணும். சத்தத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டார்.

    நான் எழுந்து குனிந்து பேப்பர் எடுத்து மிஷினில் செருகி ஸ்டைலாகத் திருப்பி மேல் மார்ஜின் விட்டு அடிக்க ஆரம்பித்தால் நான் அடிக்க ஆரம்பிப்பதற்குமுன்னாலேயே பக்கம் முழுவதும் அடித்திருந்தது. இது எப்படி என்று யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன். திரும்பினேன். அவர் பேப்பரைப்பார்த்துவிட்டு லேசாகச் சிரித்தார். “பேப்பரைத் திருப்பி வை” என்றார். தவறு செய்து கற்றுக் கொண்டேன்.

    அந்த மாதம் முழுவதும் இதே பாடங்கள் தான். பக்கத்தில் இருந்த பெண் மிக வேகமாக அடிப்பதைப் பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தேன்.கொஞ்ச நாளில் அந்த மிஷின் என் பழக்கத்துக்கு வந்து விட்டது. சைக்கிள் கடையில் வாடகை சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது பழைய சைக்கிள் தானேகொடுப்பார்கள் என்ற ஞானம் வந்தது.

    சின்ன வார்த்தைகள் pack, jug, mug, cup, jar என்பது மாதிரி அடிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதம் கழித்து நான் ஆரம்பித்தபோது ஸார் வந்து இன்னிக்கு இந்த சென்டன்ஸ் அடி என்று ஒரு வாக்கியத்தை அடித்துக் காட்டினார். Pack my box with five dozen liquor jugs.

    இந்த வாக்கியத்தில் abcd என்ற ஆங்கில எழுத்துக்கள் 26 வரும். அதை மிக வேகமாகப் பயிற்சி செய்தேன்.அதன் பிறகு எப்போது பார்த்தாலும் எதிலும் விரல்கள் அந்த வாக்கியத்தில் லயித்துப் போய் அன்னிச்சையாக அடித்துக் கொண்டிருக்கும்.

    ஞாயிற்றுக் கிழமைகளில் தியரி மெக்கானிசம் வகுப்பு எடுப்பார். எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அவர் மெஷினை பார்த்துக்கொள்வதே ஒரு கலையாக இருக்கும். பிரஷ் வைத்து துடைப்பார். ரோலரை இரண்டு மூன்று முறை அசைத்து பிரித்து எடுத்து நன்றாகச் சுத்தம் செய்து மீண்டும் மாட்டி விடுவார். மறுநாள் பார்த்தால் அது ஸ்மூத்தாக நகரும்.

    டெஸ்ட் வைப்பார்கள். வேகம் அடிக்கும் போது ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் நாலு வரி இடைவெளியில் வரும். வேகமாக அடிக்கும்போது முதல்வார்த்தை அடித்துத் தொடர்ந்து நாலு வரிக்குக் கீழ் அடித்து வைப்பேன்.

    அடுத்த நாள் திருத்திய பேப்பரில் தவறுகள் சிவப்பு மையினால் குறித்து என் மேஜையில் காத்திருக்கும். லோயர் எக்ஸாம் வந்தது பணம் கட்டினேன்.பரிட்சை வந்தது. எழுதி விட்டு கையோடு ஹையருக்குச் சேர்ந்தேன். ரிசல்ட் வந்தது பாஸாகிவிட்டேன்.

    இடையில் இரண்டு முறை என் டயமிங் மாற்றிக் கொண்டேன். எல்லா நேரமும் ஏதாவது அசெளகர்யமாக இருந்தது. இன்ஸ்டிடியூட் வாழ்க்கை நன்றாகஇருந்தது. மறக்க முடியாததாக இருந்தது.

    நாங்கள் எல்லாரும் சைட் அடித்த வைதேகிக்கு கல்யாணம் நிச்சயமானது. ஒரு வாரம் எல்லா மிஷின்களும் சோக கீதம் வாசித்தது. கீதா தன்னைப்பார்த்த சிரித்த சந்தோஷத்திற்காக ஶ்ரீராம் எனக்குக் காளியாகுடியில் ஸ்வீட் வாங்கிக் கொடுத்தான். பானுவின் காதல் அவர்கள் வீட்டில் தெரிந்து அவள் தொடர முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள்.

    அந்த இன்ஸ்டிடியூட்டில் எத்தனையோ காதல் துவங்கி, வளர்ந்து, மறைந்த கதைகள் உண்டு. ஷார்ட் ஹேண்ட் பெண்கள் வீட்டில் அம்மாவுக்குத்தெரியாமல் ஷார்ட் ஹேண்ட் பாஷையில் பேசிக்கொள்வார்கள். Any circlst kstroking or gdarking என்பார்கள்.

    நான் டைப்ரைட்டிங் கனவுகள் நிறையக் கண்டிருக்கிறேன். ஒரு முறை நான் பரிட்சைக்குப் போனபோது மிஷினின் எல்லாக் கீ கம்பிகளும் ஒரு கூடையில்நிரப்பி என்மேல் கொட்டப்பட்டது போல். ஸ்டார்ட் என்றதும் என் விரல் கீ போர்டில் மாட்டிக் கொண்டதாகவும் கனவுகள் என்னைப் பயமுறுத்தின. சிலஅதிகாலைக் கனவுகள் பலித்து என்னை ஹையர் பரிட்சையில் பெயிலாக்கியது.

    சின்ன ஸார் என்னைச் சமாதானப் படுத்தி மறுபடியும் பணம் கட்டி எழுதச்சொன்னார். தோல்வியைச் சந்திக்க முடியாமல் டைப்பிங்கை விட்டு விட்டேன்.என் வாழ்க்கையின் ஒரு வசந்த காலம் முடிவு பெற்றது.

    இருந்தும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஊருக்குப் போகும்போது அந்தத் தெரு வழியாகப் போனால் ஷண்முகவிலாஸின் இனிய நினைவுகள் என் நெஞ்சை நிறைக்கும். சின்ன ஸார் வந்து போவார்..ஹால் முழுவதும் நிறைந்து கிடந்த டைப்ரைட்டர் ஒலி என் சுகமான நினைவுகள் பகிர்ந்து கொள்ளும்போது வரும் பரவசமே தனித் தான். என்ன சொல்கிறீர்கள்?

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.sampspeak.in/2013/08/ode-to-typewriter-of-typing-institutes.html
    http://www.thehindu.com/opinion/blogs/blog-by-the-way/article5709646.ece

    Share
  • சுப்புலஷ்மி டீச்சர்

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    ஒண்ணாம் வகுப்பு குருமூர்த்தி வித்யாலயத்தில் சேர்ந்து என் அத்தை ரேணுகா (என்னை விட மூன்று வயது மூத்தவர்) என்னை பத்திரமாகக் கை பிடித்து அழைத்துப் போவாள். நல்ல பள்ளிக்கூடம். உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதன் இரண்டு திண்ணைகளில் ஒன்றில் தான் நான் மூணாம் வகுப்பு படித்தேன். விளையாட்டு மைதானத்துக்குப் பக்கத்தில் ஐயனார் கோவில், பக்கத்தில் பெரிய புளிய மரம். கப்பி ரோடு காவேரிபட்டினம் போகும். கோவிலுக்கு எதிரில் ஐயங்குட்டை. பள்ளிகூடத்துக்கு எதிரில் ஒரு சாலை சேந்தகுடிக்குப்போகும். பள்ளிக்கூடத்தின் மேற்கு எல்லையில் போகும் தெரு ஒத்தை தெரு.

    ஒரு பக்கம்தான் வீடுகள் இருக்கும். எதிர்பக்கம் அதற்கு மேற்கே இருக்கும்இரட்டைத் தெருவின் கிழக்கு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கம் கதவுகளுடன் இருக்கும். காலை வேளைகளில் அது லேசாக திறந்து வைத்து தோட்டி முறத்துடன் அவன் பணி முடிப்பான்.

    சாலையில் ஒரு ஓரமாக சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். அதைத் தாண்டி இருக்கும் கடைதான் எங்கள் வாயில் நீர் ஊறவைகும் கமர்கட், தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், எலந்த வடை, பர்பி,  பலபம் எல்லாம் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்.

    எத்திராஜுலு நாயுடு கடையில் வாங்கிய பையில் என் புஸ்தகம் இருக்கும்

    அப்போதெல்லாம் பரிட்சை மார்க்குகள் சிலேட்டிலேயே மார்க் போட்டு அனுப்புவார்கள். அதை அழிக்காமல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் காட்டிக்கொண்டே போவோம்.

    school-3காலையில் இறைவணக்கம் பாடி, வகுப்புக்கு வரிசையாக செல்ல வேண்டும்.. மதிய உணவுக்கு வானாகி மண்ணாகி பாடி மகிழ்வோம்.

    பட்டம்மா  டீச்சர் கிளாஸில் படித்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணிவிட்டேன். அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் திறக்கும் போது நான் இரண்டாம் வகுப்பு.

    பட்டம்மா டீச்சர் என்னை அன்போடு அழைத்து எனக்கு முத்தமிட்டு மூர்த்தி நீ இந்த வருஷம் இரண்டாம் வகுப்பு படிக்கப் போறே.இனிமே நீ இரண்டாம் வகுப்புல போய் உட்காரணும் என்றார். எனக்கு அழுகையாக வந்தது. கண்ணில் நீர் வழிந்தோடியது. பட்டம்மா டீச்சர் இல்லாமல் என்ன வகுப்பு. நினைக்க நினைக்க விசும்பல் அதிகமானது. பட்டம்மா டீச்சர் அடிக்கமாட்டாங்க. என்னை கண்ணான்னு கூப்பிடுவாங்க. நல்லா சொல்லி கொடுப்பாங்க. நான் மறுபடியும் வேணா ஒண்ணாவதே படிக்கிறேனேனு சொல்லணும்னு தோணிச்சு.

    டீச்சர் என்னை சமாதானப்படுத்தி கொண்டுபோய் இரண்டாம் வகுப்பில் உட்காரவைத்து விட்டார். யார் வருவாங்க? எப்படி இருப்பாங்க அடிப்பாங்களா இல்ல பட்டம்மா டீச்சர் மாதிரி ஆசையா இருப்பாங்களான்னு நிறைய தோணிச்சு. என்னோட படிச்ச நிறைய பையங்களையும் பொண்ணுங்களையும் என் கிளாஸ்ல பார்த்தேன். கொஞ்ச நேரத்தில டீச்சர் வந்தாங்க. பார்த்தா சிவப்பா அழகா சிரிச்சு கிட்டே வந்தாங்க. உள்ள வந்தவுடனே எங்க எல்லாரையும் பார்த்து அழகா சிரிச்சிகிட்டே காலை வணக்கம் அப்படின்னு சுப்பலஷ்மி டீச்சர் சொன்னாங்க. அப்பவே அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

    ஒரு வாரத்துல எல்லார் பேரையும் தெரிஞ்சுகிட்டு அவங்க என் பேரை மூர்த்தின்னு கூப்பிடும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்.

    அடிக்கடி ரீஸஸ் விடும்போது பட்டம்மா டீச்சரைப்பார்த்து காலை வணக்கம் சொல்வேன். கால் பரிட்சையில் எல்லா பாடத்திலயும் நான் தான் பர்ஸ்ட். சுப்பலஷ்மி டீச்சர் என்னை கூப்பிட்டு கன்னத்தைத் தட்டி நல்ல பையன் மூர்த்தின்னு சொன்னப்ப எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு.

    இரண்டு நாள் டீச்சர் பள்ளிக்கூடத்துக்கு வரல்லை. அதுக்கு அப்பறம் வந்தாங்க. எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க.

    ஆனா அன்னிக்கு நடந்ததை என்னால மறக்க முடியல. கடைசி பீரியடு. டீச்சர் கண்கலங்கி எங்க எல்லாரையும் பார்த்து எல்லா நல்லா படிக்ககணும் நான் நாளையிலேர்ந்து வரமாட்டேன் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு அழுகையா வந்தது. அப்ப அவங்க என்னை கூப்பிட்டு மடியில உட்காரவைச்சு கிட்டு எனக்கு முத்தம் கொடுத்து மூர்த்தி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். நீ டீச்சரை மறக்காம இருப்பியா? அப்படின்னு கேட்டாங்க. நான் அழுதுகிட்டே தலையாட்டினேன்.

    அப்பறம் பட்டம்மா டீச்சர் சொன்னாங்க அவங்களுக்கு கல்யாணமாம். வேற ஊருக்குப் போயிடுவாங்களாம்.

    மறுநாள் அவங்க வரலை. பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை. அம்மாகிட்ட சொன்னேன். அவங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது டீச்சர் நீ பெரிய ஆளா வரணும்னு சொன்னாங்க இல்ல. அதுக்கு நீ இப்ப பள்ளிக்கூடம் போகணும். போனேன். புதுசா வந்த சம்பந்தம் வாத்யார் குண்டா ஒசரமா இருந்தார். பாக்கவே பிடிக்கலே.. ஆனா கொஞ்சநாள்ல அவரும் நல்லா நடத்தினார். நான் படிச்சு ஐந்தாம் வகுப்பு வரை படிச்சு நேஷனல் ஹைஸ்கூல்ல சேர்ந்தேன். படிச்சேன் காலேஜ் படிச்சு வேலைக்கு சேர்ந்து நாடகம் நடிச்சு நல்ல பேர் வாங்கிகிட்டிருக்கேன்.

    இதை படிக்கறவங்க யாருக்காவது மூர்த்தி உங்களை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கான்னு சுப்பலஷ்மி டீச்சரைப் பார்த்தா சொல்றீங்களா?

    பின்னுரை:  இந்த நிகழ்ச்சி நடந்த 52 வருடங்கள் கழித்து, என் முகநூல் நண்பர் மாயவரம் ஶ்ரீனிவாசன், தற்போது அமெரிக்காவில் இருப்பவர் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது நான் அவரிடம் குருமூர்த்தி வித்யாலயம் பற்றியும் சொன்னேன். அவர் மிகுந்த சிரமம் மேற்கொண்டு எங்கள் ஊர் மாணவர்களைத் தேடிப்பிடித்து இந்த செய்தியை சொல்லி விபரம் கேட்டார்.  கணேஷ். ஶ்ரீனிவாசன் என்பவர் தற்போது மும்பையில் இருப்பவர், எனக்கும்  சீனியர், அவரும்  அந்த சுப்பலஷ்மி டீச்சரிடம் படித்தவர்,  அவர் இப்போது டீச்சர் மும்பையில் இருப்பதாகவும் அவருடன் இன்னும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அவர் புகைப்படத்தையும் தொலைப்பேசி எண்ணையும் எனக்கு அளித்தார். நான் அவரிடம் பேசினேன். அவர் மகன் என்னோடு அன்போடு பேசி மும்பைக்கு அழைத்தார். விரைவில் சென்று நேரில் சந்திப்பேன்.

    படம் உதவிக்கு நன்றி: http://en.vikatan.com/article.php?aid=25549&sid=739&mid=33

    Share
  • ஆடிப்பெருக்கு!

    -மாதவ. பூவராக மூர்த்தி

    இன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் பதினெட்டாம்நாள். சென்னையில் இருக்கும் நான் மயிலாடுதுறையில் இருந்தேன். வாழ்வில் பின்னோக்கிச் சென்று பிள்ளைப் பருவத்தில் இருக்கும் காலப்பயணத்தைச் சாத்தியமாக்கிய என்மனதிற்கும் நினைவுகளுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    aadiperukku1என் நினைவுகளைத் தூண்டிய சாதனம் என்வீட்டு வாசலில் வந்துவீழ்ந்த இந்து நாளிதழின் தமிழ் இணைப்பு ஆடிப்பெருக்குஸ்பெஷல். என்கைகளில் பிரித்து ஆடிப்பெருக்கு கட்டுரையைக் கண்கள் காணும்போது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஆர்ப்பாட்டங்களுடன் பின்னோக்கிப் பறந்து மாயவரத்திற்குப் போய் என்னை இறக்கிவிட்டது.

    என் சொந்தஊரான சீர்காழிக்கு அருகில் உள்ள மாதானம் முத்துமாரியம்மன் தீமிதித் திருவிழா (ஆடி கடைவெள்ளி அன்றுநடைபெறும்) பற்றிய குறிப்பு என் சிறுவயது நினைவுகளைத் தூண்டும் மற்றொரு சாதனமானது.

    மேட்டூர் திறந்துவிட்டு இரண்டு மூன்று முறை புதுவெள்ளம் வந்தாலும் ஆடியில் பதினெட்டாம் பெருக்கிற்காகத் திறந்த நீர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாலே வந்து கரைததும்பி ஓடிக்கொண்டிருக்கும்; பள்ளிகளுக்குவிடுமுறை. அதற்கு முன்வரும் சனி,ஞாயிறு நாங்கள் எங்கள் சப்பரங்களைப் பரணிலிருந்து எடுத்துப்போனது வந்தது பார்த்துத் தயார்பண்ண ஆரம்பித்து விடுவோம்.

    ரவி பேப்பர் மார்ட்டிலிருந்து கலர்தாள்வாங்கி,வீட்டில் வரும் ஹிண்டு அல்லது தினமணி பேப்பரைப் பக்கங்களில் ஒட்டி முன்கோபுரத்திலும் அதைஒட்டி அதன்மேல் பச்சை,மஞ்சள், நீலம்,சிவப்புத் தாள்களை வெட்டிப் பூக்களின் வடிவம், கோபுரவளைவுகள், தூண்கள் என எங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்து ஆர்வத்தோடு செய்த கலைப்படைப்புகளை ஒட்டித் தூரப்போய் நின்று அதன் அழகுபார்த்து வியந்துபோவோம்.

    சின்னவயதில் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்அளவில் நம் அன்றாட விளையாட்டுகளில் கலந்துபோகும் மாயம்தான் இந்தச் சப்பரம். நம் ஊரில் நமக்கு அருகில் இருக்கும் கோவில்களில் நடக்கும் விழாக்கள் நம்மனதில் பதிந்து நம்மையும் அதுபோலச் செய்யத் தூண்டும். கோவில் திருவிழாவில் தேர் ஒருநாள் காலை வலம்வரும். வடம் பிடித்து நிலையிலிருந்து புறப்பட்டு வீதிவலம் வரும்போதும் பார்த்தும் இழுத்தும் உடன்சென்றும் உள்ளிருக்கும் இறைஉருவை வணங்கியும் கழித்தநாட்கள். சப்பரம் என்பது தேரைப்போல மரத்தால் செய்யாமல் கம்பினால் வடிவமைத்துக் கோவில்கோபுரம் போல் தென்னங்கீற்றினால் அலங்கரித்து இரவுநேரம் வீதியுலாவரும். எங்கள் சப்பரம் அந்த வடிவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

    ஆடிப்பெருக்கு காலை காவிரியில் புனிதநீராடல் ஒரு பெரிய திருவிழா. அம்மாவும் பக்கத்துவீட்டு மாமி மகளும், ஆச்சியும் குளித்துவிட்டுக் காவிரி அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டு வருவார்கள்.

    மனதை மயக்கும் அந்த மாலைநேரம்தான் நான் உங்களுடன் பதிவு செய்யவிரும்புவது. ஃபேர்அன்லவ்லி, டவ் போன்ற அழகு சாதனங்களில் தங்கள் முகத்தைக் கெடுத்துக்கொள்ளாத பெண்கள். கஸ்தூரி மஞ்சளும் கடலைமாவும் அவர்களின் முகத்தை மலரச்செய்யப் போதுமானவையாக இருந்தகாலம். முத்துப் பல்வரிசை முகிழ்க்கும் சிரிப்பும், கள்ளம் கபடமில்லாத மனமும் பருவத்துக்கனவுகள் நிறைந்திருக்கும் கண்களும், அவர்களுக்குக் கொடுக்கும் வனப்பை அதன் நிரந்தரத்தை இந்த முப்பது ரூபாய் கிரீம்களும், முன்னூறு ரூபாய் பேஸ்டுகளும் கொடுத்துவிடுமா என்ன?

    மாலை நேரத்தில் காவேரிக்குப்போகும் ஏற்பாடுகளில் அவரவர்கள் மும்முரமாக இருக்கும் மதியம் ரொம்ப எனக்குப் பிடித்தது. நாங்கள் எங்கள் சப்பரத்துக்கு ஃபைனல் டச் கொடுத்துவிடுவோம். ஒருமுறை வாசலில் இறக்கி இழுத்துப் பார்ப்போம்.

    முதல்நாள் இரவே பெண்கள் அரைத்த மருதாணி இட்டுக் கொள்வார்கள். எங்களுக்கும் அம்மா இட்டுவிடுவாள். விரல்களில் கொப்பிமாட்டி, உள்ளங்கையில் வட்டம் இட்டு எங்கள்கைகள் கட்டிப் போடப்படும். அக்காவுக்கும், தங்கைக்கும், சின்னஅத்தைக்கும், சித்திக்கும், பக்கத்துவீட்டு மாலாவுக்கும் கால்களில் பட்டைபோட்டுக் கால்விரல்களும் மருதாணிப் பச்சையால் மெருகேறும். காலைக் கண்விழித்தஉடன் காய்ந்துபோன மருதாணி பிய்த்து எடுத்துக் கிணற்றுநீரில் கழுவியவுடன் பச்சை சிவப்பாகும். தோலின் நிறத்தில் இந்தச்சிவப்பு ஒரு அழகை உண்டாக்கும்.

    அம்மா காலைச்சாப்பாடு முடிந்தகையோடு காவேரிக்கு எடுத்துச்செல்லும் சித்ரான்னங்களைத் தயார்செய்யத் துவங்கிவிடுவாள். மற்றவர்கள் அதற்கு உதவிசெய்வார்கள். தெருவே பரபரப்பாகும். பாவாடைத் தாவணிகள் சரசரக்கக் கொலுசின் சிலுங்களுடன் எலுமிச்சம்பழமோ,தேங்காயோ கறிவேப்பிலையோ கேட்கவரும் பெண்களின்குரலில் ஒருஆர்வம் வெளிப்படும்.

    மூன்று மணிக்குப் பின்னல்போடும் வேளைகளில் பாட்டியும் அத்தையும் மும்முரமாகி விடுவார்கள். பட்டுக்குஞ்சலம், ராக்கோடி, நெத்திச்சுட்டி எனத் தங்களை இன்னும் அழகாக்கிக் கொள்ளும் அவர்கள் மாயவித்தைக்கு எல்லையுண்டா?

    தோடும் ஜிமிக்கியும், கைவளையல்குலுங்கும்ஓசை. பாவாடைத் தாவணியில்முந்தானையை ஒருமுறை வலதுகையால்இழுத்துப் பிடித்துகூடத்துக் கண்ணாடியில் கே.ஆர்விஜயாவும், பத்மினியும், தேவிகாவும் வந்துபோவார்கள்.

    டிபன்கேரியரிலும் எவர்சில்வர் தூக்கிலும் பார்சல் செய்துவிட்டு அம்மா முகம் கழுவப்போவாள். வாழை இலையைக் கொல்லையிலிருந்து பறித்து அப்பா சின்னஏடுகளாக வெட்டி அதை அழகாகச் சுருட்டி வாழைநாரால் கட்டிவைப்பார்.

    ஒரு நாலரைமணிக்குக் கொஞ்சம் வெயில் தாழ்ந்தவுடன் காவிரிநோக்கி எங்கள்பயணம் தொடங்கும். தெருவும் ஊரும் காவிரியில் பலதுறைகளில் வந்துபடரும். வாழைப் பட்டையில் விளக்கேற்றிக் காவிரியின் போக்கில் விடும்போது அவை மிதந்துபோகும் அழகும், சின்னச் சுழலில் சுற்றும் வசீகரமும் இன்னும் என்மனதில்!

    படித்துறையில் காலை நனைக்கும் பெண்களின் அழகு அந்தப் பொன்னந்தி மாலையில் மனதிற்குகந்த காட்சி. மருதாணி அலங்கரிக்கும் அந்தச் சிவப்பு, கொலுசின்வெள்ளை, பாவாடையின் நனைந்த பட்டுச்சரிகை மஞ்சள்,சிவப்பு, பச்சைஎனக் கண்ணைப்பறிக்கும் பாவாடை, பஃப் வைத்தரவிக்கை, உச்சி வகிடெடுத்துக் குனியும் தலையில் சரியும் நெத்திச்சூடி, நீரில் நனைத்த கையில் இன்னும் சிவக்கும் மருதாணிக் கோலம் . அழகேஅழகுதேவதை!

    தேவதையின் அழகை எப்படிவர்ணிப்பேன்..? அரைத்த மஞ்சள் மிளிரும் முகம், பிடித்த மை அப்பிய கண்கள்; அது இமை தாண்டி ஈசிய அழகு. அம்மாவின் தலைமயிரைப் பற்றியும், டீச்சரின் தலைமுடியைப் பற்றியும் கவலைப்படாத பையன்கள் நாங்கள். இந்து லேகா ப்ருங்கா இல்லாமல் செம்பருத்தி, சீகைக்காய் போட்டு வளர்ந்த கூந்தல். வீட்டில் பறித்து அரைத்த மருதாணி, பனகல் பார்க்கில் ஸ்டூலில் உட்கார்ந்துபோடும் கோன் அல்ல. பருவத்துக்குக்கேற்பப் பூக்கும் தோட்டத்துப் பூக்களில் தொடுத்தசரம் தலையில். பார்த்தால் பளிச்சிடும் குங்குமம் நெற்றியில். கடைவாயில் புன்சிரிப்பு, கருவிழியில் ஒரு நெருக்கம் உணர்த்தும் “ஏதிலார் போலப் பொதுநோக்கு”ப் பார்வை!

    எங்கள் சப்பரம் இழுக்கப்பட்டுக் கூட்டம் குரலெழுப்பிக் காவிரிக்கரை kalantha sadamவந்தவுடன் அம்மா எல்லாரையும் அழைத்துக் கையில் வாழை இலை தருவாள். பச்சை இலையில் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சைசாதம், வெள்ளை நிறத்தில் கறிவேப்பிலையும் சிவப்பு மிளகாயும் முந்திரியும் கடலையும் விரவிக் கிடக்கும் தேங்காய்ச்சாதம், பொன்னிறத்தில் புளிசாதம், சிவப்பு வட்டமாய் வாழைக்காய் வறுவல்,வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இல்லாமல் போட்ட நெளிக்கோலமாய்க் காட்சியளிக்கும் கருவடாம். கல்கண்டுசாதம், வெண்ணை உருண்டையாய்க் கடைசியில் இலையில் விழும் தயிர்சாதம். அதற்கு உறுதுணையாய் மோர்மிளகாய், மாங்காய் ஊறுகாய் எனச் சத்தமும் சந்தோஷமுமாய் தரையெல்லாம், படியெல்லாம் இறைத்த பருக்கைகள். தரையில் காக்கைகளும் மணலில் எறும்பும் கொத்தியும் பற்றியும் இருக்கும் நேர்த்தி! நீரில் மீன்கள் துள்ளித் திரிந்து கொத்திச்செல்லும் அழகும், அவைகளின் மினுமினுப்பும் இன்னும் என்மனதில் மின்னலடிக்கிறது!

    எல்லோரும் சின்னப்பெண்களும் உண்டவாய்க்கு வெற்றிலை தரிப்பார்கள். இதழ்சிவக்கும் சிரிப்பழகு எங்கும் நிறைந்திருக்கும். ஆடிப்பெருக்கெடுத்து எங்களை வாழவைக்கும் எங்கள் பொன்னிக்கு நாங்கள் செய்யும் நன்றி, தொழுதல்தான் இந்தப் பதினெட்டாம் பெருக்கு. கல்கி பதினெட்டாம் பெருக்கைப் பொன்னியின் செல்வனில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். நான் என் கண்முன் ஹிண்டு பேப்பர் கொண்டுவந்த கட்டுரைக் காட்சிகள் மனதில் விரிந்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; இல்லை நானும் ஒருமுறை அங்கேவாழ்கிறேன். கையலம்பியபின் காவிரி நீரின் குளிர்ச்சியும், எண்ணெய்ப் பிசுக்கும் இன்னும் என் உள்ளங்கையில். நடந்தாய் வாழி காவேரி!

    Share
  • பாக்கு வெட்டியும் – பாதாள கரண்டியும்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    மனிதர்களைப் பற்றியும் மனங்களைப் பற்றியும் நிறைய எழுதியாயிற்று. இன்று நம்முடன் இருந்து நமக்கு மிகவும் உதவி செய்து இன்று நம்மால் புறக்கணிக்கப்பட்ட இரண்டு வஸ்துக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த ஆசை. இளையதலைமுறைக்கு இதெல்லாம் படிக்க நேரம் இருக்குமா என்று தெரியாது. இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் அவர்கள் இந்தப் பக்கங்களைப் புரட்டக் கூடும். அந்த நாளுக்குகாக இப்போது எழுதி வைக்கிறேன். முதலில்  ‘வஸ்து’ என்றால் பொருள், சாமன், object என்ற பதவுரையையும் கொடுத்து விடுகிறேன்.

    ‘பதவுரை’ என்றால் சொல்லின் பொருள் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. வழக்கொழிந்த சொற்கள்  போலவே நம்மோடிருந்த பொருட்களும் மறைந்து போயின. அதில் என் மனதில் முதலாவதாக வந்தது இந்த பாக்கு வெட்டி.

    நவீன உலகம் நமக்கு பல வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. மனிதனின் கண்டுபிடிப்புக்கள் நம் உடல் உழைப்பை நேரத்தை மிச்சப்படுத்தும் கருவிகளை நமக்குத் தந்திருக்கிறது. இதனால் நம் முன்னோர்கள் வீட்டில் ஆண்டு முழுவதும் பட்டியலிட்டு செய்து கொண்டிருந்த பல வேலைகள் இன்று இல்லை. இருந்தாலும் செய்ய நம்மிடையே மனிதர்கள் இல்லை.

    எல்லாம் ஆயத்தமாக கடைகளில் கிடைக்கிறது. காசு விட்டெறிந்தால் நாம் கடைக்குக்குக் கூடப் போகத் தேவையில்லை. அவர்களே ‘டோர் டெலிவரி’ செய்து விடுவார்கள்.

    வெற்றிலைப் பாக்குஇரண்டாவது நம் வழக்கங்களும் பழக்கங்களும் மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘தாம்பூலம் தரிப்பது’ என்ற ஒரு வழக்கம் உண்டு. உண்ட பின் ஒவ்வொரு வீட்டிலும் தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கொண்டு வந்து கொடுப்பார்கள். கும்பகோணம் கொழுந்து வெற்றிலையை தளிராக எடுத்து, அதைத் தடவிக்கொடுத்து, காம்பு கிள்ளி, பின் பக்கம் சுண்ணாம்பு… அதை சுண்ணாம்பு என்று பெயர் சொல்லும் வழக்கம் இல்லை. ‘மூன்றாவது’ என்றுதான் கேட்பார்கள். அதன் பின் முனையும், முதுகு நரம்பும் கிள்ளி, களிப்பாக்காக இருந்தால் அப்படியே போட்டுக் கடித்து, கொட்டைப் பாக்காக இருந்தால் இந்த பாக்கு வெட்டியால் நறுக்கி அந்த சீவலை வாயில் அடக்கி, வெற்றிலையும் சேர்த்துக் குழப்ப வாய் சிவக்கும். அந்த காரம் உள்ளே போனவுடன் புத்துணர்ச்சி பெருகும். உண்ட உணவு செரிக்கும். பொதுவாக அந்தக் காலத்தில் ஆண் பெண் இருவரும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

    எல்லா நல்ல பழக்கங்களோடு ஒரு சில தீய பழக்கங்களும் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி வந்ததுதான் இந்தப் புகையிலைப் பழக்கம். புகையிலைக் கட்டையை கொஞ்சமாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் மூன்றாவதையும்  சேர்த்து, வெற்றிலைப் பாக்கோடு வாயில் அடக்கி அந்த சாறு தரும் லாகிரியை அனுபவித்து அந்த சாற்றைத் துப்புவார்கள். அப்போதும் பாக்குவெட்டிக்கு இந்த புகையிலைக் கட்டையை வெட்டும் வேலை இருந்தது. அதன் பிறகு சீவலும், தூள் பாக்கும் கிடைக்க ஆரம்பித்தது. கடைகளில் பீடா வர ஆரம்பித்தது.

    என் சின்ன வயதில் இந்த வெற்றிலை போடும் மனிதர்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கணக்கெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சாப்பிட்ட பின், சாப்பிடுவதற்கு முன், சாப்பாடு இல்லாத போதும், இரவு படுப்பதற்கு முன், வேலைக்கு நடுவில், சீட்டாட்டத்தின் இடையில் என்று. அவர்கள் இருப்பிடமே திண்ணை அல்லது முற்றத்திற்குப் பக்கத்தில் என்று ஆகிவிடும்.

    என் மாமா ஒருவர் அந்த வெற்றிலைச் செல்லத்தை தன் தலை மாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பார். காலை கண்விழித்தவுடன் அதன் முகத்தில்தான் விழிப்பார். ஓர் அரை வெற்றிலை போட்டு குதப்பி பின் வாய் கொப்பளித்தவுடன் தான் அவருக்கு பொழுது விடியும்.

    வெற்றிலைச் செல்லம்2வெற்றிலைச் செல்லம்“வெற்றிலைச் செல்லம்” என்பது வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு இவை எல்லாம் இருக்கும் பெட்டி. இதில் செவ்வகமாக இருக்கும் பெட்டிகள் சகஜமாக இருக்கும். அவை பித்தளை, அலுமினியம், எவர்சிலவர் … பின்னாளில் பிளாஸ்டிக்கிலும் இருந்த்து.

    பாக்குவெட்டிஆலவேலி சேமங்கலம் ரமணி அய்யர் மாயவரம் துபாஷ் அக்ரஹாரத்தில் இருந்த போது, அவரிடம் இருந்த ஒரு எவர் சில்வர் வெற்றிலைச் செல்வம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அது ஒரு வாத்து வடிவத்தில் இருக்கும். அதன் வயிற்றுப்பகுதியில் ஒரு பக்க அறையைத் திருப்பினால் அதில் வெற்றிலை…. இன்னுமொரு சிறகைத் திருப்பினால் பாக்கு, பாக்குவெட்டி… கழுத்துப்பகுதியைத் திருப்பினால் சுண்ணாம்பு …அதற்கும் கீழ் புகையிலை. ஊஞ்சலில் உட்கார்ந்தோ, வாசலில் மர சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தோ வாயில் வெற்றிலை போடும் ரமணி அய்யரின் கழுத்தில் தொங்கும் தங்க காப்பு போட்ட ருத்ராட்ஷத்தையும், தோளில் இருந்த சிவப்புக் காசித்துண்டையும் என்னால் மறக்க முடியாது.

    வெற்றிலை போட்டு அவர்கள் பேசும் பேச்சு ஒரு தனி ஸ்டைல்.  அடிக்கடி தொண்டையைக் கனைத்துக் கொண்டு முகத்தை எப்போதும் மேலே தூக்கியபடியே (வாயின் வெற்றிலைச்சாறு சிந்தாமல் இருக்க) பேசும் அழகே அழகு.

    பாக்குவெட்டி2பாக்கு வெட்டி தன் வேலையை இழந்தது. சில ஆபீஸ்களில் பழைய மிஷின்களின் உபயோகம் தீர்ந்த பிறகு புது மாதிரி மிஷின் கொண்டு புதிய பொறியாளர்களை உபயோகப்படுத்துவார்கள். அந்தப் பழையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் வேறு டிபார்ட்மெண்டில் போட்டு சம்பளம் கொடுப்பார்கள். அது போல, பாவம் போனால் போகிறதென்று பாக்கு வெட்டிக்கு வெற்றிலைப் பெட்டியிலிருந்து மாற்றல் ஆகி, அம்மாவின் அடுக்களையில் அவள் அன்றாடம் பயன்படுத்தும் அஞ்சறைப் பெட்டியில் ஒரு இடம் கொடுக்கப் பட்டது.

    பாக்கு வெட்டிக்குச் சந்தோஷம். முன்னளவுக்கு வேலை இல்லை. எப்போதாவது அம்மா கெட்டிப் பெருங்காயம் நறுக்க பாக்கு வெட்டியின் உதவியை நாடுவாள். மற்றபடி அஞ்சறைப் பெட்டியின் மேல் தளத்தில் மிளகாயோடு கெட்டிப் பெருங்காய வாசனையோடு வாசம்.

    அதுவும் சில வருடம்தான் அதன் பிறகு வந்தது தூள் பெருங்காயம். டப்பாக்களில் தனி இடம். பாக்கு வெட்டியால்  இனி பயனில்லை என்று ஆகிவிட்டது. அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. அது வரை இருந்தவை உபயோகமில்லாமல் துருப்பிடித்து குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகி நம் அன்றாட வாழ்விலும், நினைவிலும் இருந்தே அகன்று போனது.

    பாக்கு வெட்டியின் கால் கெட்டிச்சுண்ணாம்பைப் பெயர்க்க உதவி செய்யும்.  அந்த நாள் பௌதீகப் பாடத்தில் சிம்பிள் மெஷின் என்பதில் நெம்பு கோல், இடுக்கி, கத்திரி மற்றும் பாக்குவெட்டி இருக்கும். தமிழில் பளு திறன் என்று படம் போட்டு விளக்குவோம். இப்போது அதற்கு அஞ்சலி செலுத்துவோம்.

    ***

    பாதாளக்கரண்டி2அடுத்தது பாதாளக்கரண்டி. கிராமத்தில் டவுனில் எல்லார் வீட்டிலும் பாதாளக்கரண்டி ஆபத்துக்குதவும். இது ஒரு சிலர் வீட்டில் மட்டுமே இருக்கும். கம்பி வளைவுகளால் ஆன இது தன்னகத்தே பல விதங்களில் கொக்கிகளைக் கொண்டு ஒரு கொத்துக் கிண்ணம் போல் இருந்து அதன் மேல் எல்லா வளைவுகளும் ஒன்று சேர்ந்து ஒரு ஓட்டை இருக்கும். அதில் ஒரு இரும்பு வளையம் இருக்கும்.

    இதன் உபயோகம் தினம் நமக்கு இருக்காது. அதனால் இதை எல்லாரும் வாங்கி வைக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் எல்லார் வீட்டிலும் கிணறு இருக்கும். அதில் ஜகடை போட்டு, அதில் தாம்புக்கயிறு கட்டி அதன் ஒரு முனையில் ஒரு பக்கெட் கட்டப்பட்டிருக்கும். இன்னொரு முனையில் ஒரு சுருக்கு போடப்பட்டிருக்கும்.

    imagesதாம்புக்கயிறு என்பது தேங்காய் நாரை ஊறவைத்து கயிறு திரித்து அதை பல கயிறுகளுடன் ஒன்று சேர்த்து முறுக்கிய கயிறு. அந்த காலத்தில் கழுத்தில் போடும் தங்க சங்கிலியில் கூட தாம்புக்கயிறு டிசைன் என்று ஒன்று உண்டு என்பது  என்னைப் போன்ற தாத்தா பாட்டிகள் நினைவில் இருக்கும். கோபால்தாஸ், ஏ.ஆர்.சி, ரேவதி ஜுவல்லரியில் கண்ணாடி பீரோவிலும், மேளக்காரர்கள், நாதஸ்வர வித்வான்கள், பெரிய பணக்காரர்கள் கழுத்திலும் அலங்கரிக்கும்.

    கிணற்றடிக்கு வருவோம். அந்த தாம்புக்கயிற்றின் முனையில் கட்டிய பக்கெட் சில சமயம் கயிற்றிற்கும் தனக்கும் உறவு வேண்டாம் என்று தண்ணீரில்  இருந்து விடும். இழுக்கும் போது வெறும் கயிறு மட்டும் வந்து சேரும். வீட்டில் பரபரப்பு ஏற்படும்.

    கிணறுஅதேபோல் இன்னொரு பக்கம் உள்ள முடிச்சை குடத்தின் கழுத்தில் இறுக்கி சமையலுக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் எடுத்து சமையலறைக்கு இடுப்பில் பெண்கள் சுமந்து போவார்கள். சமையலறை தொட்டியில் பைப் வைத்திருக்கும், pure it R.O ஹேமமாலினி விளம்பரப்படுத்தும் வசதிகளை குடி தண்ணீருக்காக கொண்டவர்களுக்கு இடுப்பும் தெரியாது குடமும் தெரியாது. அதனால் தான் அவர்கள் இடுப்பு பெரிதாக தெரிகிறது.

    அந்தக் குடமும் சில சமயம் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்து விடும். சொம்பு விழும், தூக்கு வாளி கிணற்று மேடையில் வைத்தது சில சமயம் தவறிக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விடும்.  இந்தச் சமயங்களில் நமக்குப் பேருதவி செய்வதுதான் இந்தப் பாதாளக்கரண்டி. தெருவில் யாராவது ஒருவர் வீட்டில்தான் இருக்கும். எங்கள் தெருவில் காப்பிஸ்ட் ராகவேந்திர தாத்தா வீட்டில் இருக்கும்.

    அம்மா ஒரு செம்பை கொடுத்து அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு பாதாள கரண்டியை வாங்கி வரச்சொல்வார்கள். ஈடு வைத்து பாதாள கரண்டி வாங்குவது வழக்கம். எப்போதாவது உபயோகப்படும் அதை வாங்கிப் போனவர்கள் கொடுக்க மறந்தால் யார் வீட்டில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இந்த சொம்பு ஈடு வைக்கும் பழக்கம்.

    அந்த நாளில் மனிதர்கள், குறிப்பாக பெண்கள் தற்கொலை செய்து கொள்ள இந்தக் கிணறுகள் ரொம்ப உபயோகமாக இருந்தன. இவரை கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு இவளை பாழுங்கிணற்றில் தள்ளியிருக்கலாம் என்று புக்கத்தில் கஷ்டப்படும் பெண்ணின் அம்மா புலம்புவதும் வழக்கம். ஆனால் கிணற்றில் விழுந்தவர்களை எடுக்க பாதாளக்கரண்டி பயன்படாது.

    பாதாளக்கரண்டிபாதாளக்கரண்டியை உபயோகப்படுத்த சாமர்த்தியமும் பொறுமையும் வேண்டும். வெயில் இருக்கும்போதுதான் அது சாத்தியம். இரண்டாவது இந்த பாதாளக்கரண்டியை கயிற்றில் கட்டி மெதுவாக இறக்க வேண்டும். கிணற்றில் விழுந்த பொருள் இந்த கொக்கியில் மாட்ட வேண்டும். சில சமயம் வாளியோ சொம்போ அதன் கொக்கியில் மாட்டி தண்ணீர் மட்டம் வரை வந்து விடும், அதற்கு மேல் இழுக்கும்போது பிடி கிடைக்காமல் மறுபடியும் விழுந்து விடும். குனிந்து பார்த்துப் பார்த்து கழுத்து வலிக்கும்.

    குழந்தைகள் விளையாடி வீசும் ஸ்பூன், டபரா, டம்ளர், சோப்பு டப்பாவுடன் விழும். உடம்புக்கு போடும் சோப் விழுந்தால் பாதாள கரண்டி உபயோகமாகாது. சோப்பு கரைந்து தண்ணீரில் வாசனை வந்து விடும். அந்த சமயம் மத்தியான வெயில் வேளையில் தெருவில் வரும் மரமேறியைத்தான் கூப்பிட வேண்டும். மரமேறி ஒரு பிரம்மா விஷ்ணு. மேலே மரமும் ஏறுவார். நிலத்துக்குக் கீழே தண்ணீரிலும் குதிப்பார். நாம் சொம்பு விழுந்ததாகச் சொல்வோம். அவர் இறங்கி எடுக்கும்போது நமக்குத் தெரியாமல் விழுந்த பல பொருட்கள் வரும் சாத்தியமும் உண்டு.

    கிணற்றின் உரையில் கால் வைத்து இறங்கி நானும், சில சமயம் மனதில் பயம் இருந்தாலும், அம்மா கொடுத்த தைரியத்தில் இறங்கி வாளி குடம் போன்றவற்றை மூச்சடக்கி எடுத்திருக்கிறேன்.

    வாங்கிவந்த அவசரம் பாதாளக்கரண்டியைத்  திருப்பிக் கொடுப்பதில் இருக்காது. அம்மா ஒவ்வொரு நாளும் ஞாபகப்படுத்துவாள். சில சமயம் கொடுத்தவர்கள்  பார்க்கும்போது பாதாளக்கரண்டி பற்றி கேட்பார்கள். சில சமயங்களில் வேறொருவர் வீட்டில் கிணற்றில் ஏதாவது விழ, அவர்கள் அங்கு போக, அவர்கள் நம் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப் படுவார்கள். நான் அவர்களோடு காப்பிஸ்ட் தாத்தாவீட்டுக்குச் சென்று அதை அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுச் சொம்பை எடுத்து வருவேன்.

    கிணறே இல்லாத நம் வாழ்க்கையில் பாதாளக்கரண்டிக்கும் இடம் இல்லாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் என் மனக்கேணியில் மூழ்கிக்கிடந்த இந்த செய்திகளை என் நினைவு என்னும் பாதாளக்கரண்டியால் வெளிக்கொண்டுவந்து உங்களுக்கு அளிப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. உங்களுக்கும் மகிழ்வைத் தரும் என்று நினைக்கிறேன்.

    படங்கள் உதவி:  இணையத்தின் பல தளங்கள்

    Share
  • அந்தக்கால விளையாட்டுகள் – பேசும் படம்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    paesum padamஉங்களுக்கு இப்போது வயது ஐம்பது அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த வார்த்தை உங்கள் நினைவுகளில் ஒரு புத்தகத்தைக் கொண்டு நிறுத்தும். “பேசும்படம்” அந்த காலத்தில் வீட்டில் அப்பா அம்மா, குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பார்க்கக்கூடாது என்றாலும், குழந்தைகள் பார்த்து படிக்க ஆசைப் படுவதும் இந்த பேசும் படம்தான்.

    சினிமா என்பது தியேட்டரில் மட்டுமே பார்க்க வாய்த்த காலத்தில் இந்த புத்தகம் சினிமா என்னும் மாய உலகின் தோற்றங்களை அதன் தேவதைகளை நமக்கு காட்டிய ஜன்னல். அதில் நடிகர்களின் நடிகைகளின் வண்ணப்படங்கள், சினிமா பற்றிய செய்திகள், பேட்டிகள், ஒரு படத்தின் வசனங்கள், புதிய படங்களைப் பற்றிய செய்திகள், ரிலீஸ் தேதி எல்லாம் வரும். படிப்பதற்கு ஒரு ஆர்வமும், மனதிற்கு ஒரு கிளர்ச்சியும் தரும்.

    அம்மாவுடன் தியேட்டரில் போய் சினிமா பார்ப்பது ஒன்றுதான் சாத்தியம். வானொலியில் சிலோன் நிலையம் சினிமா பாடல்களை ஒலிபரப்பும். நம் வானொலி ஞாயிறு தோறும் ஒரு சினிமாவின் ஒலிச்சித்திரம் ஒரு மணி நேரத்திற்கு ஒலி பரப்பும். ரேடியோ இருக்கும் வீடுகளில் கூட்டம் திரளும்.

    மாட்னி காட்சியில் தியேட்டரின் வாசல்களை திரைபோட்டு மூடி இருட்டில் படம் போடுவார்கள். கொஞ்சம் வளர்ந்து தனியாக சினிமா போகும் போது முன் உள்ள வெள்ளைத்திரையில் பின் சுவரின் ஓட்டைகளில் இருந்து வரும் ஒளிக்கற்றைதான் சினிமாவைக் கொண்டுவந்தது என்பது புரிந்தது.

    கொஞ்சம் தெரிந்த நண்பர்கள் ஆபரேட்டர் ரூம் பற்றியும், பிலிம் பற்றியும் லென்ஸ் பற்றியும் சொல்வார்கள். தியேட்டரில் வெட்டி எறிந்த பிலிம் எங்கள் கைகளில் கிடைக்கும். அதற்கும் எங்கள் வகுப்பு விஞ்ஞான பாடம் சினிமா புரொஜக்டரின் எப்படி சினிமா திரையில் விழும் என்பதை சொல்லிக் கொடுத்த்து.

    பயாஸ்கோப்புதிருவிழா சமயங்களில் பாரு பாரு பயாஸ்கோப் பார்த்தோம். ஒரு தாத்தா நம் கண்ணை அதில் பொருத்தச் சொல்லி கையால் வேகமாக சுற்ற திரையில் சின்னதாக சினிமா நகரும். அதன் பிறகு கடையில் விற்கும் சினிமா டப்பா விலைக்கு வாங்கியிருக்கிறோம். அதில் ஒரு கண் மூடி ஒரு கண் பதிய வைத்து மறுமுனையில் ஒரு ஃபிலிம் உயிர்கொண்டு எழும். சிவாஜி அல்லது எம்.ஜியார் நிற்பார். அந்த பிம்பம் அந்த பெட்டியின்  உட்புறச் சுவர்களிலும் தெரியும். ஒரு லென்ஸ் ஒரு விளக்கு பிலிம் இருந்தால் சினிமா காட்டலாம் என்ற ஆசை வந்தது. வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை வந்தது. அந்த கால கட்டத்தில் பின்னால் வரப்போகிற டெலிவிஷன் பற்றியோ அது நம் வீட்டு வரவேற்பறையில் 24 மணி நேரமும் சினிமாவை கொண்டு வந்து நம் மீது திணிக்கப் போகிறது என்றோ நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நேரம்.

    இந்த சமயத்தில்தான் பேசும் படம் தன் பங்கை செய்தது. பேசும் படம் படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நடிக நடிகைகளின் படங்கள், பேட்டிகள், வசனம் போக விளம்பர பக்கங்களில் தவறாது மூன்று விளம்பரங்கள் நம் கவனம் ஈர்க்கும். ஒன்று நீங்கள் யூகியுங்கள் பார்க்கலாம். சரி நானே சொல்கிறேன். வசிய மோதிரம். ஒரு கல் வைத்த மோதிரத்தின் படம் போட்டு  இந்த மோதிரம் அணிந்தால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று இருக்கும். இரண்டாவது உங்கள் யூகம் சரிதான் துப்பாக்கி. திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்கு ரிவால்வர் உறையுடன். 50 குண்டுகள் இலவசம். லைசென்ஸ் தேவையில்லை.

    மூன்றாவது விளம்பரம் வீட்டில் இருந்த படியே சினிமா பார்க்கலாம். புரொஜக்டர் விற்பனை. நீங்க விபரங்களுக்கு எழுதினால் வி.பி.பி யில் அனுப்புகிறோம் என்று வரும். அந்த நாட்களில் அதை வாங்க நமக்கு காசும் இல்லை, இருந்தாலும் வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை யாரை விட்டது.

    பயாஸ்கோப்பு2அப்பொழுத்தான் எங்கள் குழுவிற்கு புரொஜக்டர் நாமே செய்தால் என்ன என்று ஆசை வந்தது. அதற்கான செயல் திட்டங்களில் இறங்கினோம். ஒரு புரொஜக்டரின் பாகங்கள் சினிமா எப்படி திரையில் விழுகிறது என்பதை அலசினோம்.

    அடுத்த ஞாயிறு எங்கள் வீட்டில் சினிமா காட்டுவதாக ஏற்பாடு. புதன் கிழமை மாலை பள்ளி விட்டு வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் துவங்கின. ஒரு அட்டைப் பெட்டியை வாங்கி அதன் எதிர் எதிர் பக்கங்களில் ஓட்டை போட்டு அதில் ஒரு பக்கம் லென்ஸ் மறுபக்கம் பிலிம் வைப்பதாக ஏற்பாடு. இந்த லென்சின் பின்னாலிருந்து டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினால் அது லென்ஸ் வழியாக பிலிமில் பட, படம் திரையில் விழும் என்று நம்பினோம். சேகர் சுந்தரம் டாக்கீஸிலிருந்து யாரையோ பார்த்து கொஞ்சம் பிலிம் வாங்கி வந்தான். நாங்கள் எங்கள் வீட்டு காமிரா ரூமைத் தியேட்டராக்குவதாக முடிவு செய்தோம்.

    அந்த நாட்களில் தெருவில் வீடுகள் ஒன்றுக்கொன்று அடுத்து அடுத்து இருக்கும். வாசலில் இருந்து உள்ளே போனால் தாழ்வாரம் கூடம் என்று இரண்டு அமைப்புக்கள். தாழ்வாரத்தின்  ஓரத்தில் முற்றம் பள்ளமாக இருக்கும். தாழ்வாரத்தின் வழியாக கொல்லைக்குப் போகலாம். கூடத்தில் வாசல் முனையில் ஒரு ரூம் இருக்கும். அதை காம்ரா ரூம் என்று சொல்வோம்.

    ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது அது இந்தியில் ‘கம்ரா’ என்றால் ‘ரூம்’ என்று. நம்மவர்கள் கேட் – கதவு, லைன் – கரை என்பது போல் கம்ரா – ரூம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. நான் காமிரா ரூம் இருட்டாக இருப்பதால் அந்த ரூமுக்கு காமிரா உள் என்று பெயர் என்று நினைத்தேன். அதன் ஒரு பக்கம் கதவும் இன்னுமொரு பக்கம் சின்ன ஜன்னலும் இருக்கும். கொஞ்சம் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

    எங்கள் வீட்டு ஜனத்தொகை அதிகம். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர், அம்மா, அப்பா, அத்தைப் பாட்டி. அப்பாவைப் பற்றியும் இங்கு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்பா வேலைக்குப் போவார். எங்களிடம் அன்பாக இருப்பார். ஆனால் கோபக்காரர். விஷமம் பண்ணினால் கையில் கிடைப்பதை எடுத்து அடித்துவிடுவார். முக்கியமாக அவர் தூங்கும் போது இடையூறு வந்தால் அடி சாத்திவிடுவார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் சாப்பிட்டு கூடத்தில் படுத்து ஒரு நான்கு மணி நேரம் தூங்குவார். எங்களையும் அவர் பக்கத்தில் படுக்கச் சொல்வார் அவர் தூங்கும் வரை நாங்கள் கண்மூடி இருந்து அவர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நாங்கள் மெதுவாக கையை விலக்கிக்கொண்டு கொல்லைப்பக்கமோ வாசல் பக்கமோ வெய்யில் வீணாகாமல் அப்பாவுக்கு எங்கள் சத்தம் கேட்காமல் விளையாடச் சென்று விடுவோம். அப்பாவை எழுப்புவதற்கு முன் அம்மா எங்களைக் கூப்பிடுவாள். நாங்கள் சமத்துப் பிள்ளைகளாக அப்பாவுடன் டிபன் சாப்பிடக் காத்திருப்போம்.

    அம்மாவிடம் பர்மிஷன் கேட்டோம். என் பெரிய தங்கையை கூட்டு சேர்த்துக் கொண்டேன். அம்மா சில கண்டிஷன் போட்டாள். திங்ககிழமைப் பாடம் எல்லாம் சனிக்கிழமை செய்து முடிக்க வேண்டும் அதிக கூட்டம் சேர்க்கக் கூடாது. சத்தம் போடக்கூடாது. நாங்கள் எல்லா ஷரத்துக்கும் உடன் பட்டோம்.

    அப்பாவுக்கு சனிக்கிழமை அரைநாள் ஆபீஸ் ஆனால் வெயில் தாழ நாலு மணிக்கு வருவார். அதற்குள் முன்னேற்பாடுகள் செய்து விட நினைத்தோம். புரஜக்டர் செய்தோம். அதை காமிரா உள்ளிற்கு எடுத்து சென்று ஜன்னல் மூடி சுவரில் படம் தெரியும் தூரத்தில் வைத்துப் பார்த்தோம். டார்ச் வெளிச்சம் பரவ சுவர் அருகில் இருந்த்தால் படம் தெளிவாக சின்னதாக தெரிந்த்து. மற்றபடி வெளிச்சத்தினால் மங்கலாகத் தெரிந்தது.

    அப்பா வருவதற்குள் புரொஜ்க்டரை பத்தாயத்திற்கு இடையில் வைத்தோம். அப்பா வந்தார். நாங்கள் என்றுமில்லாதத் திருநாளாக வீட்டுப் பாடம் பண்ணிக்கொண்டிருந்தோம். அப்பாவுக்கு அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

    அவர் மாலை கடைத் தெருவிற்குப் புறப்பட்டதும் எங்கள் குழு அவசர கூட்டம் கூட்டி நாளைய நிகழ்ச்சிகளை உறுதி செய்து திட்டமிட்டோம். மிகவும் வேண்டிய சிலரை மட்டுமே கூப்பிடுவதாக உறுதி செய்தோம். புரொஜக்டர் தயாரித்த மூன்று பேருக்கு மூன்று பேர் அனுமதி. லென்ஸ் கொடுத்த ராமன் ரெண்டு பேர், சேகருக்கு ஒரு ரண்டு டிக்கட். அப்பறம் எங்கள் கிளாஸில் படித்த கமலாவின் தம்பிக்கு, அவன் கிரிக்கெட் குருப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டதாலும் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும் கமலாவின் தம்பி என்பதாலும் அவனுக்கு அனுமதி. வேண்டுமானால் கமலாவை அழைத்து வரலாம்.

    இதை கேட்டுக்கொண்டிருந்த என் தங்கை அப்ப என் ஃபிரண்ட் கோமதியும் வருவா என்றாள். அவள் உதவி இந்த திட்டத்தில் அப்பாவை சந்திக்க பெருமளவில் தேவை என்பதால் அவள் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    ஆக்கூடி ஒரு 15 பேர். ரூம் ரொம்ப சின்னது. அப்பா வருவதற்குள் கூட்டம் கலைக்கப்பட்டது. எல்லோரும் இரண்டு மணிக்கு வீட்டு வாசலில் வரவேண்டும், சிக்னல் கிடைத்தவுடன் உள்ளே வரலாம்.லேட்டாக வருபவர்களுக்கு இடம் இல்லை. இது கண்டிப்பான உத்திரவு.

    இரவு கனவில் சினிமா நன்றாக தெரிந்தது. காலை எழுந்தவுடன் எங்களுக்கு சுறுசுறுப்பு. அம்மா சொன்ன வேலையெல்லாம் செய்தோம். ஒழுங்காக சண்டை போடாமல் சாப்பிட்டோம். வெய்யில் கொளுத்தியது.

    அப்பா வழக்கப்படி படுக்க ஆயத்தம் பண்ணினார். எங்கள் போதாதகாலம் அவர் வழக்கமாக படுக்கும் இடத்தில் படுக்காமல் பத்தாயத்திற்கு அருகில் ரூமுக்கு போகும் வழியில் படுத்தார். வெய்யில் அதிகமாக இருப்பதால் அங்கே படுப்பதாக சொன்னார். நாங்கள் அம்மாவைப் பார்த்தோம். அம்மா பார்க்காதமாதிரி இருந்து விட்டாள்.

    கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து குறட்டை விட ஆரம்பித்தார். நாங்கள் சுறுசுறுப்பானோம். ஒரு குழு மெதுவாக வந்து புரொஜ்க்டரை ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே போய் எண்ணெய் போடாத கதவு சத்தம் போட மூடி ரெடிபண்ணினார்கள். நான் இரண்டு பேரை வாசலில் நிறுத்தினேன். அதற்குள் வந்து வெளியே சிக்னலுக்கு காத்திருந்தவர்களை என் தங்கை சைகையால் சத்தம் போடாமல் வரவும் அப்பா தூங்குகிறார் என்றும் அபிநயம் பிடித்தாள்.

    நான் அப்பாவின் வெள்ளை வேஷ்டியை ஸ்க்ரீனாக கட்டினேன். கூடத்தில் கோணி கட்டி இருட்டாக்கினேன். அம்மாவை வரச்சொல்லி சைகை காட்டினேன். அவளும் உள்ளே வந்தாள். உள்ளே ஹவுஸ் ஃபுல். கூட்டம் நிரம்பி வழிந்தது. இருட்டில் யாருக்கு பக்கத்தில் யார் என்று தெரியவில்லை. டார்ச் வெளிச்சம் போதவில்லை. பிறகு நாங்கள் பல்பு எடுத்து கனைக்ஷன் கொடுத்து அதை வைக்க வெளிச்சம் ரூம் முழுவதும் பரவியது. அதை மறைக்க ஒரு ஸ்டூல் திருப்பி போட்டு அதில் அம்மாவின் கருப்பு புடவையைப் போர்த்தி நடுவில் பல்பு வைத்து திரையில் முதல் படம் தெரிந்தது. எங்கள் கனவு பலித்த்து. எல்லோரும் சந்தோஷத்தில் கத்த, நான் கிடைத்த தொடையைக்கிள்ளி ‘ஷ்’ என்றேன்.

    அந்த சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்த்து. என் தங்கையின் ஃபிரண்டு கோமதியும் அவள் குண்டு தம்பியும் லேட்டாக வர அவர்கள் வரும் சத்தம் கேட்டு என் தங்கை ரூம் வாசலில் வந்து “மெதுவா” என்று சொன்னாள். அவர்கள் லேட்டாக வந்ததால் சினிமா போய்விடுமே என்று பரபரப்பாக வர, வெளியில் வெளிச்சத்தில் வந்தவர்களுக்கு உள்ளே இருட்டில் கண்தெரியாமல் போக, குண்டுதம்பி அப்பாவின் காலை எட்டிவிட, அப்பா தூக்கத்தில் அதை நகர்த்த அந்த இடத்தில் மகாபலி மீது வாமனர் கால் வைத்தமாதிரி வைத்து அழுத்தி விட்டு எதிர்பார்க்காமல் எதையோ மிதித்ததில் பயந்து “ஆ” என்று கத்த, அப்பா தூக்கத்தில் எழுந்தார்.

    இவர்களைக் காப்பாற்ற என் தங்கை அவர் முன் நிற்க அவர் எழுந்ததும் ஒன்றும் புரியாமல் என் தங்கையைப் பார்த்து சத்தம் போட்டு விசிறியை எடுத்தார். நிலைமையின் தீவிரம் அறிந்து அவள் தீ பிடித்த வீட்டில் தப்பித்து ஓடுவது போல் கொல்லைப் பக்கம்  ஓடினாள். அப்பா கோபத்தில் அவளைப் பிடிக்க அவள் பின் ஓடினார். இருட்டு, தூக்கக் கலக்கம், இடுப்பில் இருந்த வேஷ்டி நழுவ அதை ஒரு கையால் பிடித்த படி ஒரு கையில் விசிறியுடன் ஓடினார்.

    இந்த சமயத்தில் இவ்வளவு கஷ்டத்திற்கு நடுவிலும் எனக்கு அப்பா ஓடுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அம்மா பின்னால் போனாள். என் தங்கை மாரிசன் போல் வேகமாக ஓடி எங்களைக் காப்பாற்ற கிணற்றங்கரை வரை போய்விட்டாள். அப்பா அவளை அடிக்கும் சத்தமும் அவள் அம்மா என்று அலறும் சத்தமும் கேட்டது.

    இன்னும் விபரீதம் நடப்பதற்குள் தியேட்டரில் இருப்பவர்களை ஓடச் சொன்னேன். அவர்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடும் கூட்டம் போல் அந்த சின்ன வாசல் வழியாக இருட்டில் ஓட, பத்தாயத்தின் கால் தடுக்கியவர்கள், நிலைப்படியில் இடறி விழுந்தவர்கள், உயரமானவர்கள் நிலைப்படியில் முன் தலை மோத, எவனோ ஒருத்தன் போகிற போக்கில் அப்பா குடிக்க வைத்திருந்த தண்ணீர் சொம்பை உருட்டி விட கூடம் முழுவதும் தண்ணீர்.

    பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி, மாயமாய் மறைந்தனர். வீட்டு ஜனத்தொகை விளைவுகளுக்கு பயந்து நின்றது. நான் என் தங்கையை காப்பாற்றத் தீர்மானித்து, ஓடிப் போய் அப்பா முன் சரண்டரானேன். அப்பா என் பக்கம் திரும்பி விளாசினார். அம்மா சமாதானம் பண்ண அப்பா தூக்கம் தெளிய, தடியடி நின்றது. உள்ளே வந்து நிதானமானவுடன் “என்னடா சத்தம் தூங்கறேன்னு தெரியாது” என்று சொல்லி நாங்கள் விசும்புவது பார்த்து இரக்கப்பட்டு தண்ணீர் இல்லாத இடத்தில் வேறு பாய் போட்டு பக்கத்தில் படுக்க வைத்தார். பயத்தில் நாங்கள் தூங்கிப் போனோம்.

    ஒரு மணி ஆயிருக்கும். நானும் தங்கையும் எழுந்து ஒருவொருக்கொருவர் பார்த்துவிட்டு அப்பா எங்கே என்று பார்த்தோம். அப்பா தூக்கம் கலைந்து முகம் கழுவி வந்திருந்தார். அம்மா பூரி மசால் பண்ணி, “வாங்கோ சாப்பிடுங்கோ. இப்படியா கண்ணு மண்ணு தெரியாம அடிப்பா. பாவம் பயந்துடுத்துகள்” என்றாள்

    அப்பா தன் தவறை உணர்ந்து “தூக்கம் கலக்கம் ஒண்னும் தெரியல. என்ன சினிமா விளையாட்டு விளையாடினானா. பாவம் நான் கூட சின்ன வயசில அப்பா தூங்கிண்டிருந்தபோது இப்படி ஏதோ ஒரு விளையாட்டு விளையாடி அவர் தூக்கம் கெட்டு அடிச்சார். எல்லாம் சகஜம். விடு, எழுப்பு… பாவம் அதுகளுக்கு பூரி பிடிக்கும்” என்றார்.

    அம்மா எழுப்புவதற்காகக் காத்திருந்தோம். அப்பா பக்கம் திரும்பவில்லை. “என்னடா இதெல்லாம்” என்று அப்பா பொய்க்கோபம் காட்டினார். நாங்களும் பொய்யாக பயந்து கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு சாப்பிட்டோம்.

    அதற்குப் பிறகு அப்பா தூங்கும் போது மட்டுமில்லை எப்போதுமே இந்த சினிமா விளையாட்டை விளையாடவில்லை. அந்த ஞாயிறு மத்தியானம் என்னால் மறக்க முடியாது.

    இப்போது என் பிள்ளைகள் வந்து விட்டார்கள். நான் ஞாயிற்றுக் கிழமைகளில்  அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் படுத்து தூங்குகிறேன். அவர்களும் ரூம் கதவை சாத்திவிட்டு, சத்தம் காதைப் பிளக்க மேட்சும் சினிமாவும் பார்க்கிறார்கள். இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வரும். உங்களுக்கு?

     
     
     
     
     
     
     
     

    படம் உதவிக்கு நன்றி:
    http://pudhiavan.blogspot.com/2012_02_01_archive.html
    http://vrnspv.wordpress.com/page/4/
    http://www.mayyam.com/

    Share
  • ஒளியும் ஒலியும்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    என்னை அறியாமல் என் தலைப்புகள் அதனுள்ளே ஒரு நினைவைப் பதித்துக் கொண்டு விடுகின்றன. இதுவும் அப்படித்தான். தொலைக்காட்சி வந்த புதிதில் வெள்ளிக்கிழமைகளை மகிழ்ச்சியாக்கின தொலைக்காட்சி நிகழ்ச்சி. பார்க்க ஒரு திருவிழாக் கூட்டம். இன்று எல்லாரிடமும் டி.வி. செட் ஆஃப் பாக்ஸ். அலுத்துப் போகும் அளவுக்கு ஒளியும் ஒலியும்.

    Photo0144முன்கதையைச் சுருக்கிவிட்டு சொல்லவந்த செய்திக்குப் போகலாம். முதலில் ஒளி வேகத்தில் முந்தி இருப்பதால் அதை பார்ப்போம். இறைவன் நமக்கு நாளைத் தந்திருக்கிறான். அதில் ஒரு பாதி பகல் இன்னொரு பாதி இரவு. இரவு ஒளியற்றது. இருட்டு. நாம் அந்த இரவை பகலாக்குகிறோம். இந்த பகலை இருளாக்குகிறோம். இயற்கைக்கு மாறாக இருப்பதால் நம் உடலும் மனமும் இயற்கைக்கு மாறாக இருந்து விடுகிறது.

    பகல் உழைப்பதற்கு, உண்பதற்கு, உணர்வதற்கு, உவப்பதற்கு. இதில் எதையாவது நாம் செய்து கொண்டிருக்கிறோமா? வாழ்க்கை என்பதன் வேர்ச்சொல் வாழ்வு. வாழ் என்றால் அதை மகிழ்வாக வாழ்வது. இப்போது கூட ஒரு சொல்வழக்கு உண்டு.”வாழ்வுதான்”. எல்லாம் இருந்தும் வகைப்படுத்தமாட்டாமல் ஒன்றில் முயங்கி பிறவற்றை இழந்து அந்த இழப்பைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இருந்து கொண்டிருக்கிறோம்).

    நம் முன்னோர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்ந்து காட்டியவர்கள். வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்தவர்கள். பகலில் வரும் சூரியன் என்னும் மாபெரும் சக்தியை உணர்ந்தவர்கள். உபயோகப்படுத்தியவர்கள். அந்தக்  கால வீடுகள் அதற்குச் சான்றாக இருந்தவை. நிழல் தரும் மரங்களை நம் வாழ்விடங்களின் முன்னும் பின்னும் அமைத்து இல்லத்தில் ஒளி வருமாறு அமைத்தார்கள். ஒளியும் காற்றும் அந்த இல்லங்களில் எப்போதும் வந்து போகும். அங்கு வளமையும் ஆரோக்யமும் எப்போதும் தங்கும்.

    இன்று அடுக்கங்களில் நம்மைப் பொருத்திக்கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் பகலை இரவாக்குபவை. ஒளி குறைவாக வரும் அமைப்பு. கதவுகளும் சாளரங்களும் இருந்தாலும் அடுத்தவர் வாழ்விடம் மிக அருகில் இருப்பதால் நம் வீட்டுக் கதவும் ஜன்னலும் நம்மை பிறர் கவனத்திலிருந்து தவிர்க்க எப்போதும் மூடப்பட்டிருகின்றன. அதன் விளைவு நாம் பகலிலும் விளக்கைப் பயன்படுத்துகிறோம்.

    வெப்பம் தவிர்க்க குளிர்பதனம் செய்த அறைகளில் சூரியப் பிரவேசம் தடை செய்யப்படுகிறது. அலுவலங்களிலும் இதே நிலைதான். பயணம் செய்யும் வாகனங்களிலும் ஒளியின் வெப்பத்தை தடுக்க ஒளியின் நன்மையை தடை செய்து விடுகிறோம்.

    Photo0383இரவு தூங்குவதற்காக இறைவன் மனிதனுக்கு கொடுத்த கொடை. சூரியனின் ஆதிக்கம் குறைந்து வானம் இருண்டு நம்மை இளைப்பாற வைக்கிறது. ஆனால் நாம் இரவைப் பகலாக்குகிறோம். விளக்குகளால் இருளைப் போக்குகிறோம். கேளிக்கைகளில், சந்திப்புக்களில் தொலைக்காட்சியில் பணியில் நம் இரவுகளை அடகு வைத்து நம் தூக்கதை இழக்கிறோம்.

    தூக்கமுன் கண்களைத்  தழுவட்டுமே அமைதியுன்  நெஞ்சில் நிலைக்கட்டுமே.என்ன அற்புதமான வரிகள். தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் தரும் சுகங்களையும் நன்மைகளையும் உணராமல் நாம் முரணான வாழ்க்கை வாழுகிறோம்.

    விளைவு தானாக வரவேண்டிய தூக்கம் வராததால் மதுவையும் மருந்தையும் நாட வேண்டிய கட்டாயம். இரவு தரும் இருட்டை இன்று நாம் உணர வில்லை ரசிக்க வில்லை. யோசித்துப் பாருங்கள்.

    மண்ணையும் வானத்தையும் பார்க்க மறந்த தலைமுறை நாம். நமக்கான கூரைகளை வேய்ந்து கொண்டு வானம் நமக்குப் புலப்படும் வகை அழித்து விட்டோம். பயணங்களிலும் நிலமும் வானமும் நாம் பார்க்க மறந்தவை.

    கும்மிருட்டு என்ற வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனுபவித்திருக்கிறீர்களா. இன்று இருபது வயது இருக்கும் இளைஞர்கள்மனதில் இருட்டைப் பற்றிய எண்ணமே இருக்க வாய்ப்பு இல்லாமல் அவர்களை வளர்த்து விட்டோம். விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வெளிச்சத்தை பரவ விட்டு இருளை புறக்கணிக்கிறோம். இரவு படுக்கை அறைகளிலும் முழு இருட்டு சாத்யமில்லாததாகிவிட்டது. குளிர் பதனக் கருவியின் ஒளிக்கசிவு அல்லது கணினியின் ஒளி, செல்போன் திரைவெளிச்சம் இப்படி ஏதாவது ஒன்று நம்மையும் காரிருளையும் இணைய விடாமல் செய்கிறது. நேற்று என் அடுக்ககத்தில் நாள் முழுவதும் மின்சாரம் இல்லை. இரவு மெல்ல வந்து இருள் என் வாழுமிடத்தை அணைத்துக் கொண்டது. நான் அதனை அன்போடு வரவேற்றேன். நடமாட ஒரு சிறிது வெளிச்சத்தை மட்டும் உபயோகப்படுத்தினேன். ஒரு மூன்று மணிநேரம் அந்த காரிரிருளுடன் கழித்தேன்.

    இன்றைய தலைமுறையை அப்படி ஒரு இருள் சூழ்ந்த அமைப்பில் விட்டால் தவித்து விடுவார்கள். அமைதியை கொடுக்க வேண்டிய இருள் அவர்களுக்கு அமைதியின்மையைக் கொடுத்துவிடும். நல்ல வேளை என் மகள் வீட்டில் இல்லை.

    நீங்கள் யாருமற்ற தனிமையில் வெட்ட வெளியில், கடற்கரையில், மலையடிவாரத்தில், அருவியின் அருகில் இரவை ஒரு பூரண சந்திரன் ஒளிவீசும் நாட்களிலோ பிறை நிலவும் விண்ணில் கோடி விண்மீன்கள் ஜொலிக்கும் வானத்திரையை கண்டு களித்திருக்கிறீர்களா? ஒரு முறையாவது வெளிச்ச வெள்ளத்திலிருந்து விலகி சிறிது வெளிச்சத்தின் உன்னதத்தில் திளையுங்கள்.

    Photo0330இறை வழிபாட்டில் கூட ஒளியைப் புகுத்தி விட்டோம். நம் புராதனக் கோவில்களில் பகலில் போதுமான வெளிச்சம்தான் இருக்கும்படி கட்டமைப்பு இருக்கும். கருவறை இருளில் மிளிரும். அகல் விளக்கின் பிரகாசம் விக்ரகத்தின் பள பளப்பை காட்டி நிற்கும். இரவு நேரங்களில் லிங்கத்தின் பின்னாலும் அம்மன் சந்நிதியிலும் பட்டை ஆடியில் முன் வைக்கப்படும் ஒரு அகல் விளக்கின் ஒளியில் ஏற்படும் பிரகாசமும் பரவசமும் இன்று இல்லை.

    வீதி உலாக்களில் வரும் தீவட்டிகளிலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் இரவின் அழகை குலைக்காமல் நமக்கு தந்த அருங்காட்சி இப்போது இல்லாமல் போய் விட்ட்து.

    எங்களூர் திரு இந்தளூர் கோவில் சப்பரத்தன்று இரவு நான்கு தெருக்களிலும் சாலை குறுக்கே வரும் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு தெரு இருளில் மூழ்கும். பனைமரத்தின் தென்னை மரத்தின் ஓலைகளில் பின்னப்பட்ட மிக உயரமான சப்பரம் இருளில் குறைந்த வெளிச்சத்தில் நகர்ந்து நம்மை நோக்கி வரும்போது கற்பூர ஒளியும் மெருகேற்றும் அந்த பேரழகை இனியும் நான் காணப்போகிறேனா என்று என்னுள் ஒரு ஏக்கம்.

    இருளில் இருக்கும் பழக்கம் நமக்கு இல்லாமல் போய்விட்டது எப்போதும் ஒரு ஒளியை நமக்குத் துணையாக வைத்துக் கொள்கிறோம்.

    அதேபோல் ஒலியும் நம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. நாம் கேட்க வேண்டிய பார்க்க வேண்டிய ஒலியையும் ஒளியையும் மறந்து விட்டோம். தேவையற்ற ஒலியை நம் காதுகளில்வாங்கி நம் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

    வீட்டில் இருக்கும் போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ தொலைக்காட்சியின் ஒலி நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது செல்போனில் ஒலி. அல்லது வெளியே செல்லும்போது காரில் இசை குறுந்தகடுகளின் சுழற்சி இறைக்கும் சத்தம். அல்லது நாமே நம் காதுகளில் செருகி கேட்கும் சத்தங்கள். வெளிச் சத்தம் கேட்கவிடாமல் அதையும் மீறி செல்போனிலும் கணினியிலும் செய்தி வரும்போது வரும் சத்தங்கள். சாலையில் அலறும் வண்டிகளின் பேரிரைச்சல். சாகக்கிடப்பவர்களின் தங்க நேரங்களில் அவர்களை காப்பாற்ற நினைக்கும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் வழிகேட்டு கெஞ்சும் அலறல்கள். இப்படி ஏதாவது ஒரு ஓசை நம் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    நம் காதுகள் இயற்கை ஒலிகளை மறந்து ஆண்டுகளாகிறது. வீட்டில் கூட யாரும் யாரிடமும் பேசும் நேரம் மிக குறைந்து விட்டது. குழந்தை அழும் சத்தம். இவையெல்லாம் மறந்து விட்டது.

    உங்களுக்கு கொஞ்சம் ஞாபகபடுத்த விரும்பும் நான் கேட்ட ஒலிகளை இப்போது பட்டியலிடுகிறேன். இதையெல்லாம் கடைசியில் எப்போது கேட்டீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    Photo0328வெளியிலும் வீட்டிலும் கேட்ட எத்தனை ஒலிகள். இயற்கையானவை இன்று நாம் கேட்பதில்லை. வீட்டின் பின்புறம் கட்டியிருக்கும் பசுவின் ஓசை. சுவரில் பல்லியின் சத்தம். பூனையின் மியாவ், குயிலின் இசை, கூரையின் மீது ஏறி நின்று கொண்டை நிமிர்த்தி சேவலின் கொக்கரிப்பு,  யானையின் பிளிறல், சுவர்க்கோழியின் இடைவிடாத சத்தம், மழைக்காலத்தில் தவளைகளின் வார்த்தைப் பறிமாற்றங்கள். காவிரியின் மதகடியில் சுழற்சியில் செல்லும் நீரின் சலசலப்பு. காற்றில் அசையும் மரங்களின் பெரிய சத்தம், மூங்கில் மரங்களின் உரசல்கள், கோவில் மணியின் ரீங்காரம், ஒலி பெருக்கியில்லாமல் கோவிலில் வாசித்து காற்றில் பரவும் நாதஸ்வரம். விழாக்காலங்களில் ஸ்வாமி புறப்பாட்டுக்கு முன்னால் வெடிக்கும் அதிர்வேட்டு. வீட்டில் தயிர் கடையும் சத்தம். ஆசாரியின் இழைப்புலி வெளிப்படுத்தும் இசை, இரவின் அமைதியில் நடப்பவர்களின் செருப்புத் தேய்வுகள், மரங்கொத்தியின் கொத்து, மீன் கொத்தியின் நீர் மூழ்கும் தொபுக், உலைநீர் கொதிக்கும் சத்தம், கடிகார பெண்டுலத்தின் அசைவின் இசை, ஊஞ்சல் கம்பியின் உரசல்கள், கன்றுக் குட்டியின் கழுத்து மணி, பெண்ணின் கால் கொலுசு தரும் இசை. கதவுகள் மூடித்திறக்கும் போது வரும் கிறீச், ஹால் கடிகாரத்தின் மணிக்கொருதரம் வரும் மீட்டல்கள் மழை நீர் பந்தலில் விழும் சத்தம், இடியோசை இவையெல்லாம் இன்னும் பட்டியல் நீளும். உங்கள் கற்பனைக்கும் கொஞ்சம் விட்டு வைக்கிறேன்.

    அவை அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்த நினைவுகளினால் இந்த யுகத்து சத்தங்களில் கூட அதன் சாயல்களை என்னால் உணர முடிகிறது. இன்றைய என் புது செல்பேசியில் செய்திகள் அறிவிப்பு வரும் ஓசை அன்று நான் கேட்ட குளத்தில் உயரத்திலிருந்து சிறகொடுக்கி நீருக்குள் சட்டென்று மூழ்கும் மீன்கொத்தி எழுப்பும் ஓசையை ஒத்திருக்கிறது.

    தேங்காயோ, கறிவேப்பிலையோ அம்மியில் அரைக்கப்படும் போது மெதுவாக கனிவோடு அவை மென்மைப்படுத்தப்படும். இன்றைய மிக்ஸிகள் ஈவு இரக்கமின்றி ஒரு பெருத்த ஓசையுடன் அவைகளை கசக்கிப் பிழிவதில் எனக்கு வருத்தமே.

    என் மனதுக்கு இனியவர்களே என் வேண்டுகோளெல்லாம் அவசர யுகத்தில் உங்கள் ஓய்வு நாட்களில் கொஞ்சம் இயற்கைக்கு அருகில் இருக்க முயலுங்கள். ஒளியும் ஒலியும் நமக்கு அளிக்க நினைக்கின்ற கொடைகளை அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். புற ஒளி தவிர்த்து உள்ளொளி பெருக்கி உங்கள் உள்ளத்தின் குரலின் ஒலியை கேளுங்கள். வாழ்வை ஒளிமயமாக்குங்கள் . எழுதியபின் நான் அனுபவிக்கும் மௌனம் உங்களுக்கும் கிடைக்கட்டும். இன்னொரு நாள் சந்திப்போம் சிந்திப்போம்.

    Share
  • ஒரு பஸ் பயணம்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    bus

    “அப்பா டிரெயின்ல தட்கால் கூட கிடைக்கல உனக்கு ஸ்லீப்பர் பஸ்ல டிக்கட் ஆன் லைன்ல புக் பண்ணிடறேன்” என்றான் என் மகன். வேறு வழியில்லை மறுநாள் சென்னையில் ஒரு படப்பிடிப்பிற்கு வந்தாக வேண்டிய கட்டாயம். அப்பர் பெர்த் ரெயிலைவிட ஏ/சி பஸ் மேல் என்று சரியென்றேன். எனக்கு பொதுவாக பயணம் என்றால் பயம் அதிலும் பஸ் என்றால் இன்னும் பயம். நல்ல சாலைகள், நல்ல பஸ் நல்ல இருக்கைகள் எல்லாம் சரி எங்கேயும் எப்போதும் படமெல்லாம் பார்த்து மனதில் இன்னும் நடுக்கம்.

    பஸ்ஸூக்கும் டிரெயினுக்கும் இன்னொரு வித்யாசம் டிரெயினில் டிரைவர் நம் கண்ணுக்கு விழுவதில்லை. பஸ்ஸில் நாம் காணக் கிடைக்கிறார். டிரெயினில் எப்போதாவதுதான் நம் லைனிலே  டிரெயின் வரும அபாயம் உண்டு.  பஸ்ஸில் எந்த பக்கத்திலிருந்தும் பஸ், லாரி, கார் எதுவும் வரும். சில சமயங்களில் நம் டிரைவர் பயணிகள் தூங்கும்போது நாம் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று கண் அசரும் அபாயம் நான் சில முறை பார்த்திருக்கிறேன். இரவு பகல் மழை வெயில் பாராமல் எப்படி பட்ட வண்டியை கொடுத்தாலும் அந்த மனித தெய்வங்களை குறை கூற இந்த பதிவு இல்லை. கொஞ்சம் வார்ம் அப் பண்ண ஒரு இரண்டு பாரா எழுதினேன்.

    ஆனால் இந்த சிட்டி பஸ் களிலும் வெளியூர்களிலும் சமீப காலங்களில் நான் காணும் மிகப் பெரிய வேற்றுமைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

    பிராட்வே, மயிலாப்பூர் டேங், தி. நகர், வடபழனி ஐயப்பந்தாங்கல் இப்படி பஸ் புறப்படும் இடங்களில் நீங்கள் பயணத்தைத் துவக்கியிருந்து கவனித்திருந்தால் அந்த மாறுதல் தெரியும். ஒரு 5B 12B 17M 18K 12 13 45B 5E இப்படி எதாவது பஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரே நம்பரில் இரண்டு பஸ்கள் நிற்கும். நாம் பூவா தலையா போட்டு ஒன்று முதலில் புறப்படும் என்று நம்பி அதில் ஏறி அமர்வோம். நம்மைப் போல் பலர் அந்த வண்டியில் இருப்பார்கள். நம் கண் எதிரில் டிரைவர் கண்டக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

    வரும்போது வரட்டும் என்று நாம் உட்கார்ந்திருக்கும் போது எங்கிருந்தோ ஒரு டிரைவர் வந்து நாம் உட்காராத பஸ்ஸில் ஏறி உடன் அதனை இயக்கி வேகமாக புறப்பட்டுவிடுவார். நாம் பிடித்த ஜன்னல் சீட்டை தியாகம் பண்ணிவிட்டு தலை தெறிக்க ஓடி கையிலிருந்த பொருட்களை ஞாபகமாக எடுத்தோமோ என்று பார்த்து ஏறி இடத்தில் உட்காருவோம். கண்டக்டர் வந்தாரா பஸ்ஸில் இருக்காரா ரைட் என்று விசில் கொடுக்கிறாரா என்பதெல்லாம் இப்போது டிரைவர் கவலைப்படுவதில்லை. ஒரு உலுக்கு உலுக்கி பஸ் எடுத்து விடுவார். ஏறினவரை லாபம்தான்.

    கண்டக்டரும் நான் கவலைப்படுகிற அளவு கவலைப்படுவதாக தெரியவில்லை. கண்டக்டர் டிக்கட் , சில்லறை இருக்கா, பத்துரூபா, அம்பது ரூபா நூறு ரூபாயா எடுத்துகிட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்திடுங்க, போவாது, இறங்கு, இடம் இருக்குல்ல முன்ன போ. இதை தவிர யாரிடமும் எதுவும் பேசுவதுமில்லை பயணிகளும் அவரிடம் எதுவும் கேட்பதுவுமில்லை. அவரவர்களுக்கு காதில் சொருகியிருக்கும் ஹியர் போனில் பாட்டு கேட்பதற்கும், கடலைப் போடுவதற்கும், போனில் பொய் சொல்வதற்கும்தான்  நேரம் சரியாக இருக்கிறதே.

    சென்னையில் அரசு பஸ்தான் ஒரே ஒரு தனியார் பஸ் 54 பூந்தமல்லி –பிராட்வே. நான் தனியார் பஸ் கோலோச்சிய காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். என்னோடு வாருங்கள். இடம் மாயவரம். அந்த காலத்தில்  ஶ்ரீராமவிலாஸ் (S.R.V.S) கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட்டது. அடுத்தது சத்தி விலாஸ் பொரையார், ராமன் & ராமன் (கும்பகோணம்) . இந்த ராமன் ராமன் கம்பெனி பஸ்களில் 54 இருந்தது. ஒவ்வொரு பஸ்ஸூக்கும் ஒரு ராமன் பெயர் கல்யாண ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன். கடைசி பஸ் மட்டும். ராமனில்லை தாசரதி.

    அது ஒரு கட்டுக்கோப்பான காலம். மாயவரத்திலிருந்து கும்பகோணம், சிதம்பரம் புதுப்பட்டினம் இப்படி நிறைய ஊர்களுக்கு அந்த பஸ் செல்லும். என்னால் மறக்க முடியாதவர் டிரைவர் சம்பந்தம் பிள்ளை. நான் சிறுவனாக அவரை சந்தித்த போது அவர் நாற்பதுகளில் இருப்பார். அப்போது காக்கி அரை டிராயர் தான் காக்கி சட்டைதான் டிரைவர் யூனிபார்ம். கம்பீரமாக இருப்பார். திறமையாக ஓட்டுவார்.

    கண்டக்டரும் ரொம்ப திறமையாக இருப்பார். டிக்கட் போடுவதே ஒரு அழகு. அடியில் அலுமினியப் பலகையில் சீட்டு புக் இருக்கும். கார்பன் பேப்பரை இரண்டு பக்கமும் வைத்து பென்சிலால் அல்லது பால் பென்னால் எழுதி டிக்கட் போட்டு கிழித்துக் கொடுப்பார். பஸ் புறப்படுவத்ற்கு முன் டிக்கட் போடுவார். சின்னப் பையன் என்றால் அரைடிக்கட் தீர்மானம் பண்ண படியில் ஒரு உயரம் இருக்கும் அதன் அருகில் நிற்க வைப்பார். அப்போதெல்லாம் ½ டிக்கட் பத்து வயது வரைக்கும். உயரம் முதலில் தீர்மானிக்கும். நான் என் உயரத்தினால் 14 வயது வரை ½ டிக்கட் வாங்கி பயணித்திருக்கிறேன். பல சமயம் தம்பி அந்த அம்மா பக்கத்தில உட்காருங்க என்பார். நான் வெட்கத்தோடு போய் உட்காருவேன்.

    புறப்படும் நேரம் வரும்போது சம்பந்தம் வருவார். வண்டியில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு  டவலால் முகத்தைத் துடைத்துக் கொள்வார். பொறுமையாக உட்காருவார். போலாமா தம்பி என்று கண்டக்டரைக் கேட்பார். போலாண்ணே என்பார். பிறகு தான் வண்டி எடுப்பார். விசிலுக்கு கட்டுப்பட்டு பஸ் ஓட்டுவார்.

    கண்டக்டர் பயணிகளோடு உரையாடி வருவார். நிறைய வேடிக்கைகள் நடக்கும். யாராவது டிக்கட் இன்னும் வாங்கணுமா என்பார். எல்லாரும் பேசாமல் இருப்பார்கள். தலையை எண்ணுவார். இன்வாய்ஸ் சரி பார்ப்பார். வண்டியை ஓரங்கட்டுங்கண்ணே என்பார். வண்டி ஓரமாக நிறுத்தப் படும். கண்டக்டர் எல்லாரிடமும் சீட்டைக் குடுங்க என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டுவருவார். இருபது பேருக்கு மேல் செக் பண்ணினபிறகு ஜன்னல் ஓரம் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஐயா டிக்கட் என்றவுடன் அவர் தூங்கி எழுந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒண்ணு குடுங்க என்று இப்போதுதான் கண்டக்டர் கேட்பது போல் டிக்கட்டுக்குப் பணம் கொடுப்பார்.

    கண்டக்டர் கோபம் வந்தாலும் ஏன்யா டிக்கட் வாங்கிட்டு  தூங்க கூடாதா என்பார். போலாண்ணே என்று விசில் கொடுத்துவிட்டு டிக்கட் கொடுப்பார். பஸ் மறுபடியும் பயணம் தொடரும். மாயவரம் சீர்காழி பஸ் சாலை வேடிக்கையாக இருக்கும். அந்த காலத்தில் சோழ நாட்டில் எதிரிகள் படை எடுக்க வந்தால் நேர் பாதையாக இருந்தால் வேகமாக முன்னேறுவார்கள் என்பதால் வளைந்து வளைந்து சாலைகள் இருக்கும். இன்னும் இன்றும் அப்படியே இருக்கிறது. அதனால் வண்டி ஓட்டுவது கஷ்டம். பஸ் ஸ்டாப் ஊர் பெயரும் இருக்கும். சில இடங்களில் ஒத்தகடை, பஞ்சாயத்து போர்டு, மதகடி, புளியந்தோப்பு, அய்யனார் கோவில், சாவடி, ஆத்துப் பாலம் இப்படி.

    அதுவுமில்லாமல் புதுசாக வந்தவர்கள் ஊரில் பெரிய புள்ளிகளைச் சொன்னால் தலைவர் ஐயா வீட்டிற்கு போகணும் என்றால் ஓத்த கடையில இறங்கி வடக்கே போங்க தோப்புக்கு அடுத்த தெரு என்பார். சில சமயம் பயணிகளை பாத்து நாளாயிட்டு ஊர்ல இல்லையா என்பார்.

    அவர்களும் அவர்கள் வீட்டு வைபவங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பார்கள். சில பேர் தீபாவளிக்கு பொங்கலுக்கும் வேஷ்டி சட்டை வாங்கி கொடுப்பார்கள். கண்டக்டர் வெற்றிலைப் பாக்கு புகையிலை போடுவார்.

    இன்னொரு காட்சி டிரைவர் கண்டக்டர் வீடுகள் அவர்கள் பாதையில் இருக்கும். மதிய சாப்பாடு அவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வீட்டிலிருந்து மனைவியோ மகனோ மகளோ கொண்டுவந்து கொடுப்பார்கள்.

    திருமண வீடுகளுக்கு வரும்போது வேஷ்டி சட்டையில் வருவார்கள். இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். பிறகுதான் அவருக்கு காக்கி டிராயர் சட்டைப் போட்ட பிறகுதான் டிரைவர் கண்டக்டர் என்று மனதிற்குள் பளிச்சிடும்.

    பஸ்களும் முடிந்த வரை சரியான அளவுதான் டிக்கட் கொடுப்பார். ½ டிக்கட் கூட அதிகம் கொடுக்க மாட்டார்கள். அடுத்த வண்டியில வாங்க போலாம் ரைட்டு என்று விசில் அடிப்பார். பஸ்கள் பொதுவாக அசோக் லைலெண்ட், ஃபார்கோ, டாஜ் இருக்கும் டாடா பின்னாளில் வந்த்து. மாயவரத்தில் 1 நம்பர் டாட  பஸ் முன் பக்கம் கொஞ்சம் புடைத்துக் கொண்டிருக்க்கும். நாங்கள் அதை தொப்பை பஸ் என்போம். டிரைவர் நாகராஜன் ரொம்ப நாள் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

    கண்டக்டர்கள் ஓயாமல் பேசிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் வேடிக்கையாக பேசி பயணக் களைப்பில்லாமல் செய்வார்கள். ஒரு கண்டக்டர் எவ்வளவு கூட்டமிருந்தாலும் டிக்கட் கொடுப்பார். டிக்கட் வாங்கிக்கிங்க. அம்மா வாங்கராங்கனு ஐயா சும்மா இருந்துடுவார், ஐயா வாங்கிடுவாருன்னு அம்மா சும்மா இருந்துடுவாங்க. கேளுங்க கேட்டு வாங்கிடுங்க. செக்கர் வந்தா மாட்டிகிடுவீங்க என்பார். அம்மா ஏற பக்கம் ஐயா ஏறாதீங்க ஐயா ஏற பக்கம் அம்மா ஏறாதீங்க என்பார். கடலங்குடி வரை செல்லும் 1 நெம்பர் பஸ்ஸில் ஒரு இளைஞர் கண்டக்டர். அவர் மிக வேடிக்கையாக பேசுவார். நல்ல தமிழ் தெரிந்தாலும் கிராமத்து மக்கள் பயணம் செய்யும் வழித்தடம் என்பதால் அவர்கள் பாஷையில் பேசுவார். நிறுத்தங்கள் பெயரை சொல்வதில் வேடிக்கையாக இருக்கும். ஆ தேரடி இருக்கா இறங்கு கைவிடு முன்பக்கம் பாத்து குதி, மதுவு கொண்டல் மதுவு, இந்தா ஏறு என்னா வேடிக்கை. போவாது கையை விடு. யாருய்யா புகையிலை துப்பறது வண்டி நிப்பாட்டினப் பிறகு துப்பு. இப்படி வழி முழுக்க கமெண்ட் அறிவுப்பும், அன்பும் கிண்டலும் கேலியும் கலந்து தருவார். திடீரென்று விசில் இல்லாமல் வாயாலே குருவி மாதிரி விசில் அடிப்பார். பணியில் இல்லாத நேரம் அவர் சாதாரணமாக பேசுவார். விநோதமான மனிதர். இன்னும் என் நினைவில் இருப்பவர். இப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.

    கல்லூரி பகுதிக்கு செல்லும் டவுன் பஸ் பயணிகளும் டிரைவர் கண்டக்டர்களுக்கும் தினம் சண்டைதான். இருந்தாலும் மாணவர்கள் அவர்களுக்கு கட்டுப் பட்டு நடப்பார்கள். டிரைவர்கள் முடிந்த வரை இடமிருந்தால் ஸ்டாபிங்க் இல்லாத இடத்தில் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். வழக்கமாக வருபவர்களிடம் ஒரு நட்பும் நெருக்கமும் இருக்கும்.

    இப்போது அதையெல்லாம் நாம் இழந்து விட்டோம். இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் அதையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் ஏறும் 5E வரும். பல வருடங்களாக அந்த பகுதியில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்வதால் ஒரு நல்ல டிரைவர் நண்பரை கொடுத்திருக்கிறது. அவர் திரு ஆறுமுகம். அவர் மத்யான நேரத்தில் வீட்டில் இருக்கும்போது என் தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்திருப்பார் போல நான் பஸ் ஏறிய உடன் வாங்க ஸார் எங்க இந்த நேரத்துல? என்பார். நல்லா நடிக்கிறீங்க. உட்காருங்க என்று இடம் கொடுத்து பேசிக்கொண்டிருப்பார். நான் வேறு பஸ்ஸூக்கு நின்றால் அவர் டூட்டியில் வந்தால் வணக்கம் சொல்வார்.

    இப்போது ஆயிரம் ரூபாய் டிக்கட் மாதாந்திர சலுகை கட்டணம் வாங்கியிருக்கிறேன். அதனால் கண்டக்டரிடம் பேசும் அவசியம் இல்லை. சில்லறை பிரச்னைகள் இல்லை. சில சமயம் பாஸ் என்று கை காட்டினால் என்ன பாஸ் காட்டுங்க என்பார்கள். காட்டிவிட்டு பயணம் தொடரலாம். நிறைய பஸ்கள், நிறைய வசதி. ஆனால் நெருக்கம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது. இது மட்டும் மாறாமல் இருக்குமா?

    அடுத்த முறை பஸ் பயணத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நினைவும் நேரமும் இருந்தால்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.skyscrapercity.com/showthread.php?t=907864&page=1668

    Share
  • அப்பரும் நானும்.

    மாதவ. பூவராக மூர்த்தி

    நான் பகுத்தறிவாளனும் இல்லை நாத்திக வாதியும் இல்லை. கடவுள் நம்பிக்கை கொண்டவன். சைவ வைணவ சமயங்களின் பால் ஈடுபாடு கொண்டவன். அப்பர் ஸ்வாமிகளின் பாடல் களைப் பாடியும் படித்தும் பரவசமானவன் தான். ஆனால் இந்த தலைப்பில் என்னுடன் இருக்கும் அப்பர் அவரல்லர். அஃறிணைப் பொருள். ரயில் பயணத்தின் போது நம்மை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தும் படுக்கை வசதி.அப்பர் பெர்த் .

    29train13

    இரவுப் பயணத்தில் இரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் குளிர் பதனப் பெட்டிகளில் படுக்கை வசதியும் முன் பதிவும் வந்துவிட்டது. அதிலும் “தட்கல்” என்ற இரண்டு நாட்களுக்கு முன் கூட பயணப்பதிவு செய்யக் கூடிய வசதியும் வந்து விட்டது.

    ஆனால் படுக்கை வசதி என்று பெயரே தவிர அதில் வசதி என்பது மிகக் குறைவுதான். மூன்று அடுக்கு வசதி உள்ள பெட்டிகளில் நம் கஷ்டங்கள் மிக அதிகம். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும். நான் இப்போது சீனியர் சிட்டிசன். ரயில் பயணங்களில் எனக்கு அரசாங்கம்

    சலுகை கட்டணத்திலும் கொடுக்கிறது. படுக்கை வசதியிலும் தனியாக லோயர் பெர்த் கோட்டா என்று கொடுக்கப் படுகிறது.

    இதையும் மீறி இந்த இணைய தள கணினிப் பதிவில் என் பயணம் தீர்மானிக்கும் போது தட்கலில், ஊருக்குப் போக டிக்கட் கிடைத்தால் போதுமென்ற நிலையில் வேகமாக முயன்று இருக்கை வாங்கி விடுவான் என் மகன். அது கடைசியில் அப்பர் பெர்த்தாக இருக்கும். பயண நாளில் நம் உடன் வரும் பயணிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் புறப்பட்டு விடுவேன்.

    பொதுவாக ரயில் நிலையங்களில் நடைமேடையில் வண்டி வந்ததும் நம் பதிவு செய்த இருக்கை இருக்கும் பெட்டியில் பயணிகள் பட்டியல் ஒட்டிய பிறகு அதைப் பார்த்து நம் பெயர் இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் , இந்த மாதிரி அப்பர் நாட்களில் என்னுடன் பயணிப்போர் முழு விபரமும் தெரிந்து கொள்ள எனக்கு ஆசை வந்து விடும். காரணம் நம்முடன் பயணிப்பவர்களில் யாரிடம் வேண்டுகோள் விடுத்து அவரை அந்த உயர்ந்த பதவிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்ய வேண்டுமல்லவா. அந்த பட்டியலிலேயே நம் தலைவிதி சில சமயம் நமக்கு அப்பர் பெர்த் தான் என்று நிர்ணயிக்கப்பட்டுவிடும். நம்மோடு பயணம் செய்வோர் நம்மை சேர்த்து ஆறு பேர் என்றால் அதில் இன்னொரு அப்பர் பெர்த் இளங்கோவன் ஆண் வயது 25 என்று இருக்கும்

    மற்ற நாலு பேரில் ஒரு பெண்மணி 45 வயதிலும் ஒரு குழந்தை 8 வயதிலும் இன்னொரு தம்பதி ரங்கன் 72 அலமேலு 65 லோயர் பெர்த் என்றும் இருக்கும் . இதில் யாரையும் மேலே அனுப்ப முடியாது. அந்த ஆண்டவன் மனசு வைத்தால் தான் முடியும்.

    மனதை கல்லாக்கிக் கொண்டு அப்பர் பெர்த்துடனான நம் உறவை இந்த இரவு சுமுகமாக கழிக்க தேவாரம் ஒன்று பாட வேண்டியது தான். காலச் சக்கரத்தின் பின்னோக்கிப் போனால் என் வாலிப வயதில் எனக்கு பயணங்களில் எனக்கு வாய்த்த லோயர் மிடில் பெர்த்துகளை நான் அவர்கள் கேட்டும் பல சமயங்களில் அவர் கேட்காமலும் மனமுவந்து அவர்களுக்கு ஈந்திருக்கிறேன்.

    ரயில் விதிகளில் இரவு ஓன்பது மணி முதல் காலை 6 மணி வரை படுக்கை வசதி உபயோகப் படுத்த வழி வகை இருக்கிறது. முதல் நாள் காலை புறப்பட்டு மறுநாள் காலை அல்லது மதியம் சென்றடையும் வண்டிகளில் இது பொருந்தும்.

    இப்போதெல்லாம் வண்டிகளின் வேகம் அதிகரித்து பயணநேரம் வெகுவாக குறைந்து விட்டது..முன்பு பாம்பே மெயிலில் சென்னையில் முதல் நாள் இரவு பத்து மணிக்கு புறப்பட்டாள் அன்றிரவும் அடுத்த நாள் இரவும் ரயிலில் தான் ஒரு நாள் விட்டு மறு நாள் காலை தான் தாதர் போகும்.

    இப்போது பெங்களூர் மெயில் இங்கு இரவு. 11.15 புறப்பட்டு காலை 5.20க்கு பெங்களூர் சிட்டி நிலையத்திற்குள் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. இம்மாதிரி பயணங்களில் படுக்கை வசதி எங்கிருந்து வரும். முன்னால் வந்தவர்கள்  லக்கேஜ் செட்டில் பண்ணி விடுவார்கள் நாம் தாமதமாக வந்தால் நம் பெட்டிக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

    அதன்பிறகு நாம் உட்கார்ந்து கொள்ள பிரயத்தனப் படுவோம். உங்களுக்கு என்ன சீட் என்று கேட்டு சொன்னவுடன் கொஞ்சம் நகர்ந்து இடம் விடுவதுபோல் ஒரு பாவனை செய்வார்கள். நாம் கஷ்டப்பட்டு இருக்கும் இடத்தில் உட்கார்ந்தவுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பேச்சு வார்த்தை தொடரும். இடையில் கீழே இருக்கும் பெட்டியில் முக்கியமான சாமான் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருவர் கேட்க அதைப் பார்ப்பதற்காக நம் காலைபிடிப்பார் பிறகுதான் தெரியும் அவர் நம் காலுக்குப் பின்னால் இருக்கும் பெட்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என்று. நாம் அவசரமாக காலை நகர்த்திக் கொள்ளவேண்டும் பெட்டியை நகர்த்தியவர் பெரிய பெட்டியை நம் காலுக்கு முன் வைத்து திறந்து தேட ஆரம்பிப்பார். நாம் நம் கால் பத்திரமாக இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்போம்.

        அவர் தேடிய பொருள் நம் துரதிருஷ்டம் அந்த பெட்டியில் இருக்காது. அதற்குள் ஒருவர் நினைவு வந்தவராக அம்மா பெட்டியில இருக்கும்னு நினைக்கிறேன். என்பார். தேடும் நபர் இந்த பெட்டியை அப்படியே விட்டு விட்டு அவர் காலுக்கு கீழ் இருக்கும் அம்மா பெட்டியையும் வெளியே எடுத்து அந்த குறுகிய இடைவெளியில் பரப்பி திறந்து ஒரு வழியாக அவர் தேடிய பொருள் கிடைத்தவுடன் அந்த பெட்டியை முதலில் உள்ளே தள்ளி தான் வசதியாக கால் வைத்துக் கொள்வதில் அவரை அறியாமலேயே முனைப்பாக இருப்பார்.

    ஆனால் இந்த ரயில்வே விதியே இதுதான். நம் வண்டி முதலில் வந்து ஒரு நிலையத்தில் எதிரில் வரும் வண்டிக்கு கிராஸிங்கிற்காக நிற்கும். அதன் பிறகு எதிர் திசையில் நாம் வந்து சில நிமிடங்களுக்கு பிறகு வண்டி வரும். ஆனால் புறப்படும்போது முதலில் அந்த வண்டிதான் புறப்படும். நம் வண்டி பின்னால் தான் புறப்படும். அதே போல் பின்னால் எடுத்த பெட்டியை வைத்த பிறகே நம் கால் முன்னால் இருக்கும் பெட்டி உள்ளே தள்ளப்படும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலோ படித்துக் கொண்டிருந்தாலோ நம் காலுக்கு சேதாரம் ஆகிவிடும். பேசிக்கொண்டே தள்ளுவார்கள் நாம் வலிதாங்காமல் கத்தும்போதுதான் நினைவுக்கு வந்து ஞாபகமாக ஸாரி சொல்வார்கள்.

    பல சமயம் அவர்கள் தள்ளும் வேகத்தில் நாம் கழற்றிவிட்ட செருப்பு உள்ளே போய்விடும். பிறகு தான் நம் செருப்பு இல்லை என்பதை உணருவோம். அப்பர் பெர்த்தில் ஒரு சௌகர்யம் நாம் பாட்டுக்குப் போய் படுத்து விடலாம். இந்த மிடில் லோயர் பெர்த் காரர்கள் ஒருவரை ஒருவர் அனுமதி கேட்டுத்தான் போட முடியும். மிடில் பெர்த் போடும்போது ஒரு கலவரம் ஏற்படும் பாருங்கள். லோயர் பெர்த் காரர்கள் கையோடு வைத்திருக்கும் சாமான்களை நகர்த்தி முதுகுப் பக்கத்தில் இருக்கும் பலகைப் பிடுங்குவார்கள். மேலே உள்ள கொக்கியை யார் எடுப்பது என்பது ஒரு மௌன யுத்தம் நடக்கும். பிறகு எடுத்து அதில் இந்த பலகையை மாட்டி அந்த திரிசங்கு சொர்க்க படுக்கை வசதியை தயார் செய்வார்கள்.

    தூக்கம் வராத மிடில் பெர்த் கார்ர் அடிமைப் பெண் எம்.ஜி.யார் மாதிரி முதுகை வளைத்து கழுத்து மிடில் பெர்த்தில் இடிக்க அபத்திரமாக உட்கார்ந்திருப்பார். லோயர் பெர்த்  கார்ர் சீக்கிரம் தூங்குபவராக இருந்தால் அவர் படுக்க அவர் காலடியில் பாரதப் போருக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கிருஷணர்  காலடியில் உட்கார்ந்த அர்ஜுனன் மாதிரி உட்கார வேண்டியதுதான்.

    நான் டென்சிங் நார்கே உதவியில்லாமல் அப்பர் பர்த் பிடிக்க புறப்பட்டேன். ரயில் நிலையங்களில் நிற்கும் போது கழிவறையை உபயோகப் படுத்தாதீர்கள் என்ற ரயில்வேயின் வேண்டுகோளை மதித்து நான் ரயில் புறப்படும் வரை காத்திருப்பேன். புறப்பட்டவுடன் என்னைப் போலவே காத்திருந்தவர்கள் முன்னால் சென்றுவிட அவர்கள் வரும் வரை காத்திருப்பேன்.

    அதன் பிறகு டிக்கெட் பரிசோதகர் வரும் வரை அப்பர் பெரித்தில் ஏற முடியாது. முதல் காரணம் அவர் வந்து அவரிடம் ஆவணங்களைக் காட்ட வேண்டும். இரண்டாவது கடைசி முயற்சியாக அந்த பெட்டியில் வேறு எங்காவது மிடில் லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று வேண்டுகோள் விடுக்கவும். என் பரிதாபமான முகத்தையும் நெஞ்சை உருக்கும் குரலும் சிலரின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி எனக்கு கீழ்தள வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

    சில சமயம் இல்லை ஸார் சான்ஸ் இல்லை எல்லாம் வந்துட்டாங்க என்பார். நான் என் முடிவை மாற்றிக் கொண்டு கம்பியைப் பிடித்து ஏற ஆரம்பிப்பேன். இதில் ஏறி நம் உடலை வளைத்து அதில் நம்மை பொருத்திக் கொள்வது ஒரு கலை. சென்றடையும் முன் நம் தேவைகளெல்லாம் எடுத்துக் கொண்டுவிட்டோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் கேட்க முடியாது. அதிலும் குளிர் பதன பெட்டியில் வரும் பயணிகள் குளிரால் விறைத்துப் போனவர்கள் போல மனதாலும் விறைத்துவிடுவார்கள். சக பயணிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர்களுக்கு பெரிய இடர்பாடாக இருப்பதை உணர்த்துவதாக அவர்கள் முகபாவம் இருக்கும்.

    அண்மையில் தொலைக்காட்சியில்  ஒரு துணி சோப் விளம்பரத்தில் காட்டுவதுபோல் “முத தடவை ஓட்டலுக்கு வந்துஇருக்காங்க போலிருக்கு” என்று அம்மாவுடன் போர்வை போர்த்திக் கொண்டு வரும் பெண்ணைப் பார்த்து சொல்வது போல நம்மை பார்ப்பார்கள், நம்மிடம் நடந்து கொள்வார்கள்.

    போன வாரம் நான் பெங்களூரில் இருந்து சென்னை காவேரி துரித வண்டியில் குளிர்பதன வகுப்பில் ஒரு அப்பர் பெர்த். நடுங்கிக் கொண்டே(பெங்களூர் குளிர் மட்டுமல்ல வண்டியில் அப்பர் பெர்த் மாற்ற முடியுமா என்றா கவலையில்) பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன்.. ரயில் வரும் நேரம் காட்டும் ஒளித்திரையில் 11.30 என்று வண்டி வரும் நேரம் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்த்து. அறிவிப்பு 12.45 வருவதாக தெரிவித்தது. வண்டி இரண்டுமில்லாமல் 1.35 வந்தது. உள்ளே போனால். லோயர் பெர்த்தில் ஒரு வயதான மூதாட்டி, எதிரில் மாற்றுத்திறனாளியான மகன். இந்த மிடில் பெர்த்துக்கான இளைஞன் உடல் மிகப் பருத்து என்னிடம் லோயர் பெர்த் இருந்தால் நானே அவனுக்கு கொடுத்துவிடும் வகையில் இருந்தான். எதிர் மிடில் மற்றும் அப்பரில் இரண்டு இளைஞர்கள் யாரிடமும் பேச்சு கொடுக்காமல் படுத்து விட்டார்கள்.

    கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிக்கு பரிசோதகர் வந்தார். எல்லோரிடமும் டிக்கட் கேட்டார். நான் என் அடையாளக் கார்டை நீட்டினேன். உங்க பெர்த் நம்பர் என்றார். 3 என்றேன். டிக்கட் என்றார் . என் புது மோட்டோ ஜியை தடவி பதிவு விபரங்களை காட்டினேன். என் துரதிருஷடம் அவர் பட்டியலில் என் பெயர் இல்லை. பயணம் செய்யும் நாள், வண்டி, பெட்டி  எல்லாம் சரியாக இருக்கிறது. சரி படுங்க பாக்கலாம் என்றார். எனக்கு குழப்பம் இருந்தாலும் படுக்க பிரயத்தனப்பட்டு ஏறி ஒருமாதிரி படுத்தேன் மணி 2.20 . வண்டி போய்க்கொண்டிருந்த்து. சரியாக 2.45 நான் எழுப்ப்ப் பட்டேன். ஒரு இளைஞர் அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி ஸார் இறங்குங்க இது என் பெர்த் என்றார். நான் விளக்கினேன். அவர் ஒத்து கொள்வதாக இல்லை வாங்க டி.டி. ஆரைப் பார்க்கலாம் என்றார்.

    ஒரு மூன்று பெட்டி கடந்து அவரை கண்டுபிடித்தோம் நல்ல வேளை அவர் தூங்க வில்லை. நிலைமையை சொன்னோம். பிறகு அவர் என்ன சார் பண்ணலாம். எங்க லிஸ்ட் படி அவர் பேர் இருக்கு நீங்க போங்க வரேன் என்று வந்தார். பிறகு லிஸ்டை இன்னொருதரம் பார்த்து உங்க பேர் எம்.பி. மூர்த்தி வயது 60 உங்களுக்கு அப் கிரடேஷன்ல டூ டயர் 36 அதுவும் அப்பர் பெர்த்தான் போறீங்களா என்றார். நான் இங்க செட்டில் ஆயிட்டேன். அவரை போகச்சொல்லுங்கள் என்று சொல்லி என் அபிமான அப்பர் பெர்த்தில் நான் இரண்டாவது முறையாக ஏறும்போது மணி 2.45.

    எத்தனை நேரம் தாமதமாக படுத்தாலும் 5.30 மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் என்னை எழுப்பி விட்ட்து. இறங்கி வந்து கழிவறைக்குப் போய் உட்கார இடமில்லாமல் ஏ.சிக்கு வெளியே நின்று போனைத்திறந்தால் இரவு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. படித்தேன்.

    Your ticket upgrated your seat A2/36 chart prepared.

    யாரும் பார்ப்பதற்கு முன் செல்போனை மூடினேன்.  ஜன்னல் வழியாகப் பார்த்தால் வண்டி திருவள்ளூர் வந்திருக்கிறது. பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து என் வீட்டு கட்டிலில் படுத்து தூங்கினேன். அடுத்த முறையாவது எனக்கு லோயர் பெர்த் கிடைக்க வேண்டும்.

    Share