— மாதவ. பூவராக மூர்த்தி.

சமீபத்தில் மைசூரில் தேசிய நாடக விழாவில் எங்கள் குருகுலம் குழுவின் நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். பன்மொழி நாடகங்கள் பங்கு பெற்ற அந்த விழாவில் நாங்கள் அளித்த நாடகம், நான் எழுதி இயக்கிய நாடகம் “அம்மாவின் அரண்மணை.” இது நமது சொந்த ஊரின் பெருமை பேசும் நாடகம்.

பாட்டி வீடு1இந்த நாடகம் நான்கைந்து வருடங்களுக்கு முன் உருவானது. அதில் வரும் செட் என் பாட்டி வீட்டை நினைவு படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். வரைந்து கொடுத்தேன். செட் குமாரும் அவரது மகன் ஷண்முகமும் அதில் அக்கறை கொண்டு உருவாக்கினார்கள்.

இன்று ஏனோ என் பாட்டி வீடு என் நெஞ்சில் நிழலாடுகிறது. என் பாட்டி வீடு என்று அல்ல கிராமத்து வீடுகள் ஒன்று போலத்தான் இருக்கும். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிராமத்திற்கு போகும் பழக்கம் என்று ஒன்று நம்மிடத்தில் ஒரு காலத்தில் இருந்தது.

இன்று அதற்கெல்லாம் நமக்குப் பொருள் தெரியாது. நம் குழந்தைகளுக்கு விடுமுறையும் கிடையாது, உறவுகளும் இல்லை. கிராமங்களில் வாழும் பாட்டியும் இல்லை.கிராமத்தில் வீடும் இல்லை.

ஒவ்வொரு  வருடமும் கோடை விடுமுறைக்கு கிராமத்திற்குப் போவோம். ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு ஒரு முறை அழைத்துப் போவார்கள். இது தவிர வீட்டின் விஷேஷங்களுக்கும் மறைவுக்கும் போயிருக்கிறோம்.

பாட்டி வீடு01அது ஒரு வசந்த காலம். பாட்டியின் சாம்ராஜ்யம் பெரியது. வீடும் பெரியது. பாட்டி வீடு தெருவின் மத்தியில் ஊருக்கு நுழையும் சின்ன ரோடின் வலது புறம் திரும்பும் போது முதல் வீடாக இருக்கும். வாசலில் இரண்டு புறமும் திண்ணை. நடுவில் உள் வழி. முதல் இரண்டு திண்ணை வெட்ட வெளியில் இருக்கும். அதை ஒரு வராண்டா இணைக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கு கோடியில் முன் வாசல். படியேறினால் ஓட்டு சார்வில் இரண்டு பெரிய திண்ணை. இடது பக்கத் திண்ணை சிறியது. வலது பக்கத் திண்ணை மூன்று கம்பங்களின் இடைவெளியில் காம்ரா உள்ளின் வெளிச்சுவர் வரை நீண்டிருக்கும்.  தாராளமாக ஐந்தாறு பேர் படுக்கலாம். வெளித்திண்ணை ஒருவர் படுக்க இருவர் இருக்க மட்டுமே போதும். அதன் ஒரு மூலையில் சிமெண்ட் சரிவு இருக்கும். அதில் சாய்ந்து கொண்டு இரவு வேளைகளில் வானம் பார்க்கும் சுகமே தனிதான்.

பாட்டி வீடு0நினைவுகளில் மூழ்கி உங்களை ரொம்ப நேரம் வாசலில் நிற்க வைத்து விட்டேன். வாருங்கள் உள்ளே போகலாம். திண்ணையை ஒட்டிய பெரிய வாசலில் வேலைப் பாடுகள் கொண்ட வாசல் நிலை. அதில் பெரிய கைப் பிடியுடன் கூடிய மரக்கதவு. தடிமனானது உறுதியானது. சின்ன வயதில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பார்த்து விட்டுப் பாட்டி வீட்டுக் கதவு முன் ஒருவர் நின்று ‘அண்டா காகசம், அபூ காகசும் திறந்திடுக சிசேம்’ என்று சொல்ல கதவுக்குப் பின்னால் நிற்பவன் மெதுவாகத் திறப்பான். அவன் உள்ளே நுழைந்ததும் குகையின் கதவுகள் மூடப்படும்.

நீங்களும் அண்டா காகசம் சொல்லுங்கள் மனக்கதவு திறக்கும். அடுத்த பகுதி ரேழி. அது வெளி வாசலுக்கும் உள் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி. அங்கு ஒரு திண்ணை உண்டு. அந்த பகுதி கொஞ்சம் வெளிச்சக் குறைவாக இருக்கும். அதன் வெளிச்சம் வாசற்கதவின் நிலைக்கேற்ப மாறுபடும். கதவு முழுவதும் திறக்கும் போது வெளிச்சம் நிறைந்திருக்கும்.

வீட்டின் மிக வயதானவர்கள், முதுமக்கள் தாழியில் வைக்க வேண்டியவர்கள், போவதற்கு முன் அங்கு நிலை கொள்வார்கள். இடது புறம் சின்ன வராண்டாவும் வலது புறம் பெரிய வராண்டாவும் இருக்கும். அதன் அருகே முற்றம் இருக்கும். முற்றம் ஒரு திறந்த சதுர அல்லது செவ்வகப் பகுதி.  அதன் நடுவில் வாசலில் இருந்து கொல்லை வரை விரியும் நேர்க்கோட்டின் மையப் பகுதியில் ஒரு அழகான துளசி மாடம் இருக்கும். கூடம் துவங்கி தாழ்வாரம் வரை நீண்ட ஓட்டுச் சரிவு தாழ்வார விளிம்புகளில் நின்று கொண்டிருக்கும் மரத்தூண்களில் வந்து தங்கி முற்றத்தில் கொஞ்சம் முகம் காட்டும். முற்றத்தின் நான்கு விளிம்புகளிலும் கூழாமூலை இருக்கும். மழைக்காலத்தில் ஓடு வரிசைகளுக்கு நடுவில் வரும் பாதை வழியாக வரும் மழை நீர் முற்றத்தில் விழும் அழகும் ஓசையும் இன்னும் என் மனதில் வழிகிறது.

முற்றத்தின் கிழக்குச் சுவர் பக்கம் ஒரு ஜலதாரை கொல்லை நோக்கிப் போகும். கம்பி கட்டி துணி காயும். வத்தல் மிளகாய் , மஞ்சள் உளுந்து பயறு இவை பருவத்திற்கு ஏற்ப காயும். பின் தாழ்வாரத்தில் ஒரு பெரிய பித்தளைப் பாத்திரம் அல்லது  அலுமினியக் கூடையில் தண்ணீர் இருக்கும். பக்கத்தில் ஒரு சொம்பு இருக்கும். வெளியே போய் வந்தால் கால் கழுவவும், சாப்பிட்டு கை அலும்பவும் அது பயன்படும்.

கூடம் மிக அழகாக காற்றோட்டமாக இருக்கும். சுவரையும் கூடத்துக் கம்பங்களையும் இணைக்கும் உத்திரங்கள் வலுவாக இருக்கும். ஓட்டுப் பகுதியில் இடையில் கண்ணாடி பதித்து கூடம் வெளிச்சம் பெறும். முற்றத்தில் வரும் வெளிச்சமும் காற்றும் போதுமானதாக இருக்கும்.

பாட்டி வீடுபட்டா சாலை என்றழைக்கப் படும் கூடத்தில் நடுவில் உத்திரத்தில் ஊஞ்சல் தொங்கும். ஊஞ்சல் கம்பிகளுக்கு மத்தியில் நெற்கதிர் அறுவடையின் போது ஒரு கதிர் குஞ்சம் கட்டி விட்டிருப்பார்கள். குருவிகள் சகஜமாகப் பறந்து வந்து கொத்திக் கொண்டும் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருக்கும்.

அதற்கு அடுத்த உத்திரத்தில் ஒரு கயறு தொங்கும் அதன் முனை ஊஞ்சலில் உட்கார்ந்தால் எட்டும்படியாக வைத்திருப்பார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்து கயிறை இழுத்தால் கிரீச் என்று ஒலியெழுப்பி ஊஞ்சல் அசைந்தாடும். கூடச்சுவரில் ஒரு மாடம் ஒரு அலமாரி சுவர் முழுவதும் காலண்டர்கள், பல்வேறு கருப்பு வெள்ளைப் படங்கள் தொங்கும். நடுவில் ஒரு கடிகாரம் பிரதானமாக இருந்து மணி காட்டும் மணிக்கொருதரம் இனிய ஓசை எழுப்பும்.

கூடத்தில் ஒரு மூலையில் மூங்கில் கட்டி பாய் தலைகாணி இருக்கும்.

ஒரு கம்பத்தில் பஞ்சாங்கம் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு மூலையில் பெரிய மேஜையும் கைவைத்த நாற்காலியும் அலங்கரிக்கும். இன்னொரு பக்கம் ஒரு சாய்வு நாற்காலி இருக்கும். மேஜையில் பெரிய ரேடியோ அதற்கான ஏரியல் முற்றத்தில் உயரக்கட்டி தாழ்வாரம் வழியாக வந்து கொண்டிருக்கும்.

காம்ரா உள் பெரியதாக இருட்டாக இருக்கும். அதன் வடக்கு மூலையில் உள்ள ஜன்னல் திறக்கும் பொழுது வெளிச்சம் எட்டிப் பார்க்கும். கூடத்தில் இந்தப் பக்கம் ஸ்வாமி அறையும் அதை அடுத்து பெரிய சமையல் அறையும் இருக்கும்.

பாட்டி வீடு2பின் தாழ்வாரத்தின் வராண்டா வழியாக கொல்லைக்கதவை தாண்டினால் கொல்லைத்தாழ்வாரம். அதை அடுத்து கிணற்றங்கரை அதை ஒட்டி தண்ணீர் நிரப்பும் தொட்டி துவைக்கும் கல். அதைத்தாண்டி கழிவறை. இடைப்பட்ட இடங்களில் பூச்செடிகள், வாழை தென்னை மரங்கள், நீண்ட கொல்லைப்பகுதியின் முடிவில் கிராமத்து சிறிய வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் என் இளமைக்காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு நினைவு உண்டு. வாசல் திண்ணையில் கழித்த இரவுகள், பாண்டி விளையாடிய வாசல். விளக்கெண்ணெய் குடித்து குதித்து குதித்து களைத்துப் போன முற்றம்.

மழைக்காலத்தில் ஜலதாரையில் கல் வைத்து அடைத்து  தெப்பக்குளமாக  தண்ணீர் தேங்க வைத்த முற்றம் அதில் கால் நனைத்து கப்பல் விட்ட காலம். வேகமாக ஊஞ்சல் ஆடிய கூடம். உத்திரத்தில் கட்டிய தூளியில் தங்கையை அம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்தது. பாட்டி கையால் உருண்டை வாங்கி கட்டை விரலால் குழி பண்ணி குழம்பு ஊற்றி சாப்பிட்ட தாவாரம், மருதாணி இட்டுக் கொண்டு படுத்த கூடம், அவல் இடிக்கிற கொல்லைத்தாவரம்.

கிணற்றடியில் வாளியில் தண்ணீர் இழுத்து ஜில்லென்று தலையில் விட்டுக் குளித்த காலம். இறைந்து கிடக்கும் பவழமல்லியை பொறுக்கிய காலை. கவணையில் கட்டிய பசுமாட்டின் கழுத்தைத் தடவிய பொழுதுகள்.

துள்ளிக்குதிக்கும் கன்றுகுட்டியைப் பின் தொடர்ந்து பொழுதுகள். இளநீர் குடித்த வெயிற்காலம், ஏறிக்குதித்த வைக்கல் போர், எட்டிப் பறித்து பூவரசம் இலையைச் சுருட்டி ஊதிய நாதஸ்வரம். சின்ன வாய்க்காலில் குதித்த காலை நேரம்.

அந்த அரண்மணை எனக்கு கொடுத்த இனிய சுகங்கள் இன்னும் என் நெஞ்சில் சுரந்து கொண்டிருக்கிறது. உங்களுடன் அதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷமே.

 

 

 

 

 

 

படம் உதவி:
மாதவ. பூவராக மூர்த்தி
&
http://www.tamilnaduhotel.net/nagapattanam/mangala_heritage_home/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *