— மாதவ. பூவராக மூர்த்தி.

அரிவாள்மனை மனம் நிறைந்து போயிருக்கிற தருணம்.  இந்தப் பதிவை நானாகத் துவக்க வில்லை. அதுவாகத் துவங்கிக் கொண்டது. போனவாரம் என் தங்கைகளும் ஒரு தங்கையின் மகளும் வந்திருந்தனர். அப்போது என் தங்கை மகள் கத்திரிக்காய் காரக்குழம்பையும், மெல்லிதாக நறுக்கிச் செய்த முட்டைகோஸ் கறியையும் விரும்பிச் சாப்பிட்டாள்.

இரவு வீட்டுக்குப் போய் தன் அம்மாவிடம் (என் தங்கையிடம்) “மாமா வீட்டில் கோஸ் கறி அம்மா சான்ஸே இல்லை அப்படி ஒரு ஃபைன் கட்டிங்” என்றாளாம். அவள் எனக்கு ஃபோன் பண்ணி இதைத் தெரிவித்தாள்.

நான் தொலைபேசியில் அவளுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். “உன் அம்மா மூலம் நீ அனுப்பிய பாராட்டை என் விளியேமனைக்கு சேர்ப்பித்துவிட்டேன்” என்று.

அதற்கு அவள் பதில் செய்தியாக “your viliyeymane has created more expectations” என்று செய்தி அனுப்பினாள். விளியேமனை என்றால் அரிவாள் மனை. அப்பாவின் நினைவு மேலோங்கியது. அப்பாவின் ஒவ்வொரு செயலும் எனக்குப் பாடமாக இருப்பவை. அப்பா ஒரு பிரம்மா, விஷ்ணு, சிவன்(ருத்ரன்). படைக்கும் போது அவர் பிரம்மா, எங்களை வளர்த்து காப்பாற்றிய விஷ்ணு. எங்களிடம் மட்டும் அவர் காட்டும் அநியாயக் கோபத்தில் ருத்ரன்.

கத்தி, சாப்பர் எல்லாம் வந்துவிட்டாலும் எனக்கு இன்றும் என் அரிவாள் மனைதான். அது அப்பா எனக்கு விட்டுச் சென்ற வித்தை. கோவையில் என் மகன் வீட்டிற்கு சென்றபோது காய்கறி நறுக்க உட்கார்ந்தேன். உருளைக் கிழங்கு நறுக்க வேணும். நான் நறுக்கத்துவங்கிய போது அவன் கட்டரைக் கொண்டு வந்து அப்பா இதுல வைச்சு ஒரு ப்ர்ஸ் பண்ணு என்று பண்ணிக் காட்டினான். எல்லாம் ஒன்று போல கீழே இறங்கியது. எளிதில் முடிந்து விடும் என்றான்.

எனக்கு அதில் விருப்ப மில்லை. எல்லாம் ஒன்றாக இருப்பதில் ஸ்வாரஸ்யம் இல்லை. உருளையின் வடிவம்  பொருத்து விரல்கள் செய்யும் வித்தையில் அரிவாள் மனையில் கீழ் விழும் துண்டுகள் காட்டும் ஜாலம் தனிதான்.

அப்பா சமையல் கலையில் வல்லவர். வங்கிப்பணியில் இருந்தாலும் அவர் விரும்பிச் செய்வது சமையல். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் அம்மா அரிவாள் மனையைத் தொட்ட நாட்கள் மிகச் சொற்பம். அப்பா தன் கடைமைகளைத் தவறாமல் செய்வார். அதில் ஒரு நிதானம் அழகு மிளிரும்.

காய்கறி மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வருவார். அம்மா குளிக்கப் போகுமுன் அன்றைய சமையலை அறிவித்து விடுவார். அதில் ஒரு நல்ல சுழற்சி இருக்கும். எங்கள் கன்னட குடும்பங்களில் சாம்பார், பிட்லை மோர்க்குழம்பு, ஹூலிபல்ய என்ற பருப்பு வகை தவிர்த்து கொச்சு, கொட்டு கூட்டு, ரஸவாங்கி, காயரஸா, மெந்துலி, பர்த்தா, அரத ஹூலி என்ற புளிக்குழம்புகளின் அணிவரிசை உண்டு.

சாம்பாரில் மூன்றுவகை, பிட்லை ஒன்று, மோர்க்குழம்பு இரண்டு வகை. பருப்பு போட்டு சாம்பார் என்றால் கொட்டு ரஸம். சாம்பாருக்கு காரக்கறி, குழம்புக்கு தேங்காய் கறி…இப்படி.

மார்க்கெட் போகும்போது என்னையும் அழைத்துப் போவார். அலுக்காத வகையில் காய்கறி வாங்குவார். விருந்தினர் வருகையின் அளவையும் தேவையையும் மனதில் கொண்டு வாங்குவார். சில சமயம் வீட்டுத் தோட்டத்து காய்களை கலந்து கொள்வார்.

வந்தவுடன் தாழ்வாரத்தில் வந்து அமர்வார் அம்மா அரிவாள் மனையும் பாத்திரங்கள் தட்டுக்களை முன் வைப்பார். அப்பா நறுக்கத் துவங்குவார். அவர் செய் நேர்த்தி காண கொடுத்து வைக்க வேண்டும். தோல் உரிக்கும்போது அவர் கைக்கும் அரிவாள் மனைக்கும் ஒரு சங்கேத மொழி உருவாகும். பழுதில்லாமல் தோல் மட்டும் உரிந்து விழும்.

அதன் பிறகு சாம்பாருக்கு வடிவம் பெறும். பூசனிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் போல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹிலிபல்யம் என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்கு கட்டம் கட்டமாக நீரில் மிதக்கும். பிட்லைக்கு காய்கள் தட்டில் சீர் போல் வைத்திருப்பார். கொத்தவரங்காய் மூன்றாய் கிள்ளி ஒரு மூலையில் இடம்பிடிக்கும். சௌசௌ செவ்வகமாய் இருக்கும். கருணைக் கிழங்கு வட்டமாக நறுக்கப்படும். கத்திரிக்காய் நடுவில் நறுக்காமல் இருக்கும். பாகற்காய் விதை நீங்கி வளையங்களாய் ஒரு ஓரம் அலங்கரிக்கும். பிட்லைக்கு காம்பினேஷன் கோஸ் கறி. அந்த கோஸ் பெரிய கோளமாக வருவது அப்பாவின் கை பட்டு கத்தரித்து விழும்போது தேங்காய் பூ போல இருக்கும்.

சேனைக்கிழங்கு கறி மோர்க்குழம்பிற்கு, அது ஒரு பேசினில் பரத்தப்பட்டிருக்கும். பாகற்காய் குழம்பிற்கு என்றால் நீட்டு வாக்கில் முதலையை கூறு போட்டாற் போல் இருக்கும். அதன் நடுவே இரண்டோ மூன்றோ பச்சை மிளகாய் மூக்கு கீறி இணைந்திருக்கும். பரங்கியின் குடல் பிரித்து விதை நீக்கி துகையலுக்கு நறுக்கி வைப்பார்.

வெண்டைக்காய் குழம்புக்கு நீட்டமாகவும், கறிக்கு திட்டமாகவும், பச்சடிக்கு ஸ்லைசாகவும் உரு மாறும். பேசிக்கொண்டே நறுக்குவார். குப்பைகளை அவ்வப்போது அகற்றி வைப்பார்.

வாழைக்காயை நறுக்கும்போது தோல் எடுத்து நீரில் மிதக்க விடுவார். வறுவலுக் கென்றால் இரண்டாக நறுக்கி குறுக்கு வெட்டில் ஒரு அளவு வரை போய் நிறுத்தி விடுவார். வறுவல் கட்டையில் தேய்த்தால் அளவு கச்சிதமாக இருக்கும்.

காரக்கறிக்கு மறுபடியும் சதுரமாகும். சேப்பங்கிழங்கை கோணியின் மீது தேய்த்து அதன் தோல் உரிப்பார். வறுவலுக்கு அது உருமாறும். முருங்கை காயின் நீளம் அவர் கைகளில் அளவெடுக்கும். முனை போக முழுவதும் ஒரே அளவாக தட்டில் விழும். முள்ளங்கி தோல் சீவி வட்டமாக ஒரு சீராக தட்டில் விழும். வெங்காயம் தோல் உரித்து தட்டில் ஒரு பகுதியில் இருக்கும்.

அவர் நறுக்கி வைத்ததைப் பார்க்கும் போதே அன்று என்ன சமையல் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். கீரை நறுக்கும் போது அவர் கையில் அகப்படும் கீரைக் கத்தை அரிவாள்மனையில் ஒரு பக்கம் பொருத்தி இன்னொரு கையால் அதை நறுக்குவார். கீரை அப்படியே பொடிசாக விழும். அதை தண்ணீரில் மிதக்க விட்டு பச்சைமிளகாய் நடுவில் போடுவார்.

வீட்டில் விழுந்த வாழை மரத்தை வெட்டி அதன் பட்டையைப் பிரித்து அதை பக்குவமாக சீவி அதற்கு மட்டும் கத்தி. ஒரு பட்டையை இரண்டாக ப் பிரித்து இரண்டையும் தேங்காய் விளக்குமாற்று குச்சியால் தைத்து இலையாக போடுவார். அதில் தயிர் சாதம் சாப்பிட்டால் அவ்வளவு ருசி போங்கள்.

வாழைத்தண்டை தோல் சீவி அதனை வட்டவடிவாக நறுக்கி அதனை நெடுக்கில் சீவி தண்ணீரில் போடுவார் . அது குழம்பிலும் மோர்க்கூட்டிலும் குழைந்து போகும்.

ஏகாதசி அன்று மறுநாள் துவாதசிக்காக அகத்திக்கீரை கட்டு வாங்கி இலை உதிர்த்து பழுப்பு நீக்கி நறுக்கி வைப்பார். வாழைத்தண்டின் வெட்டப்பட்ட சக்கரங்களில் நாங்கள் விளக்கமாற்று குச்சியைச் சொருகி தேர் பண்ணுவோம். வெண்டைக்காய் தலையைச் சுவரில் ஒட்டுவோம். அகத்திக்கீரை களைந்த குச்சிகளை ஒன்றாக்கி வாழை நாரில் கட்டி விளக்குமாறாக்குவோம்.

பரங்கி விதைகளைப் பொறுக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி தோல் பிரித்துத் தின்போம். வாழைப்பூவின் தலைப்பகுதியை அதன் துவர்ப்பினை அனுபவிக்க பச்சையாக தின்பது ஒரு தனி சுகம்.

குப்பையையா வாரி முறத்தில் வைத்து கொல்லையில் மாட்டுதொட்டியில் கழுநீருக்கு நடுவில் போட்டால் வாணவில்லின் வர்ணஜாலமாய் பச்சை மஞ்சள் எல்லாம் இருக்கும்.

அப்பா அந்த அரிவாள் மனையை நேசத்தோடு பாது காப்பார். ஆறு மாதம் ஒரு முறை அதற்கு வாசலில் வருபவனிடம் சானை பிடிப்பார்.  சாணை பிடிக்கும் போது காலால் அவன் சக்கரத்தைச் சுழற்றி சுழலும் சாணக்கல்லில் இந்த அரிவாள் மனையின் முனைகளை பக்க வாட்டில் தொடும்போது தீப்பொறி பறக்கும். பூசணிக்காய் அரிந்தால் கூர் அதிகமாகும் என்று அப்பா சொல்வார்.

எனக்குத் தெரிந்து இரண்டு முறை அரிவாள் மனை தலை கழண்டு விட்டது. விழுவதற்கு முன் கொஞ்சநாள் அந்த பகுதி சூரன் தலை போல் ஆடும். அப்பறம் ஒரு நாள் வீழும்.

புது அரிவாள் மனை புழக்கத்திற்கு வரும். முதலில் கொஞ்சம் விரலைப் பதம் பார்க்கும். அப்பா விரலை தலைமேல் பிடித்துக் கொண்டு வலியில் அவர் முகம் கோணலாகும். பார்க்கப் பாவமாக இருக்கும். ஒருநாள் அம்மாவே காய் நறுக்குவாள். அப்பாவின் நேர்த்தி அதில் இருக்காது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பா தன் அரியாசனத்தில் அமர்ந்து விடுவார். புது அரிவாள் மனையுடன் தோழமை கொண்டு விடுவார். இன்று நான் அரிவாள் மனையுடன் தோழமை கொண்டுள்ளேன். என் வாரிசு கத்திக்கும் கட்டருக்கும் மாறிவிட்டது. எனக்குப் பிறகு “விளியேமனை” எங்கள் வீட்டிலிருந்து மெல்ல விடைபெறும். அது வரை அதனை போற்றிப் பாதுகாப்பேன்.

சமையல்காரர்கள் உபயோகிக்கும் அரிவாள் மனை, கத்தி, கரண்டி எல்லாம் அளவில் பெரியதாக இருக்கும். வீட்டு அரிவாள்மனை திட்டமாக இருக்கும்.

அரிவாள் மனைமுன் அமரும்போது அப்பா என் மனம் முழுக்க வியாபித்திருப்பார். பெற்றவரை எப்படி வணங்கினால் என்ன. நான் தொழிலால் வணங்குகிறேன்.

உங்கள் வீட்டில் அரிவாள்மனை இருந்தால் ஒரு முறை அதன் முன் அமர்ந்து அந்த ஆனந்த்தை அனுபவியுங்களேன்.

படம் உதவி: Aruvamanai (Photo credit: Technofreak)
http://thesoulbistro.wordpress.com/2013/07/11/ruminations-of-an-octogenarian/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *