— மாதவ. பூவராக மூர்த்தி.

paesum padamஉங்களுக்கு இப்போது வயது ஐம்பது அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த வார்த்தை உங்கள் நினைவுகளில் ஒரு புத்தகத்தைக் கொண்டு நிறுத்தும். “பேசும்படம்” அந்த காலத்தில் வீட்டில் அப்பா அம்மா, குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பார்க்கக்கூடாது என்றாலும், குழந்தைகள் பார்த்து படிக்க ஆசைப் படுவதும் இந்த பேசும் படம்தான்.

சினிமா என்பது தியேட்டரில் மட்டுமே பார்க்க வாய்த்த காலத்தில் இந்த புத்தகம் சினிமா என்னும் மாய உலகின் தோற்றங்களை அதன் தேவதைகளை நமக்கு காட்டிய ஜன்னல். அதில் நடிகர்களின் நடிகைகளின் வண்ணப்படங்கள், சினிமா பற்றிய செய்திகள், பேட்டிகள், ஒரு படத்தின் வசனங்கள், புதிய படங்களைப் பற்றிய செய்திகள், ரிலீஸ் தேதி எல்லாம் வரும். படிப்பதற்கு ஒரு ஆர்வமும், மனதிற்கு ஒரு கிளர்ச்சியும் தரும்.

அம்மாவுடன் தியேட்டரில் போய் சினிமா பார்ப்பது ஒன்றுதான் சாத்தியம். வானொலியில் சிலோன் நிலையம் சினிமா பாடல்களை ஒலிபரப்பும். நம் வானொலி ஞாயிறு தோறும் ஒரு சினிமாவின் ஒலிச்சித்திரம் ஒரு மணி நேரத்திற்கு ஒலி பரப்பும். ரேடியோ இருக்கும் வீடுகளில் கூட்டம் திரளும்.

மாட்னி காட்சியில் தியேட்டரின் வாசல்களை திரைபோட்டு மூடி இருட்டில் படம் போடுவார்கள். கொஞ்சம் வளர்ந்து தனியாக சினிமா போகும் போது முன் உள்ள வெள்ளைத்திரையில் பின் சுவரின் ஓட்டைகளில் இருந்து வரும் ஒளிக்கற்றைதான் சினிமாவைக் கொண்டுவந்தது என்பது புரிந்தது.

கொஞ்சம் தெரிந்த நண்பர்கள் ஆபரேட்டர் ரூம் பற்றியும், பிலிம் பற்றியும் லென்ஸ் பற்றியும் சொல்வார்கள். தியேட்டரில் வெட்டி எறிந்த பிலிம் எங்கள் கைகளில் கிடைக்கும். அதற்கும் எங்கள் வகுப்பு விஞ்ஞான பாடம் சினிமா புரொஜக்டரின் எப்படி சினிமா திரையில் விழும் என்பதை சொல்லிக் கொடுத்த்து.

பயாஸ்கோப்புதிருவிழா சமயங்களில் பாரு பாரு பயாஸ்கோப் பார்த்தோம். ஒரு தாத்தா நம் கண்ணை அதில் பொருத்தச் சொல்லி கையால் வேகமாக சுற்ற திரையில் சின்னதாக சினிமா நகரும். அதன் பிறகு கடையில் விற்கும் சினிமா டப்பா விலைக்கு வாங்கியிருக்கிறோம். அதில் ஒரு கண் மூடி ஒரு கண் பதிய வைத்து மறுமுனையில் ஒரு ஃபிலிம் உயிர்கொண்டு எழும். சிவாஜி அல்லது எம்.ஜியார் நிற்பார். அந்த பிம்பம் அந்த பெட்டியின்  உட்புறச் சுவர்களிலும் தெரியும். ஒரு லென்ஸ் ஒரு விளக்கு பிலிம் இருந்தால் சினிமா காட்டலாம் என்ற ஆசை வந்தது. வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை வந்தது. அந்த கால கட்டத்தில் பின்னால் வரப்போகிற டெலிவிஷன் பற்றியோ அது நம் வீட்டு வரவேற்பறையில் 24 மணி நேரமும் சினிமாவை கொண்டு வந்து நம் மீது திணிக்கப் போகிறது என்றோ நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நேரம்.

இந்த சமயத்தில்தான் பேசும் படம் தன் பங்கை செய்தது. பேசும் படம் படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நடிக நடிகைகளின் படங்கள், பேட்டிகள், வசனம் போக விளம்பர பக்கங்களில் தவறாது மூன்று விளம்பரங்கள் நம் கவனம் ஈர்க்கும். ஒன்று நீங்கள் யூகியுங்கள் பார்க்கலாம். சரி நானே சொல்கிறேன். வசிய மோதிரம். ஒரு கல் வைத்த மோதிரத்தின் படம் போட்டு  இந்த மோதிரம் அணிந்தால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று இருக்கும். இரண்டாவது உங்கள் யூகம் சரிதான் துப்பாக்கி. திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்கு ரிவால்வர் உறையுடன். 50 குண்டுகள் இலவசம். லைசென்ஸ் தேவையில்லை.

மூன்றாவது விளம்பரம் வீட்டில் இருந்த படியே சினிமா பார்க்கலாம். புரொஜக்டர் விற்பனை. நீங்க விபரங்களுக்கு எழுதினால் வி.பி.பி யில் அனுப்புகிறோம் என்று வரும். அந்த நாட்களில் அதை வாங்க நமக்கு காசும் இல்லை, இருந்தாலும் வீட்டில் சினிமா பார்க்கும் ஆசை யாரை விட்டது.

பயாஸ்கோப்பு2அப்பொழுத்தான் எங்கள் குழுவிற்கு புரொஜக்டர் நாமே செய்தால் என்ன என்று ஆசை வந்தது. அதற்கான செயல் திட்டங்களில் இறங்கினோம். ஒரு புரொஜக்டரின் பாகங்கள் சினிமா எப்படி திரையில் விழுகிறது என்பதை அலசினோம்.

அடுத்த ஞாயிறு எங்கள் வீட்டில் சினிமா காட்டுவதாக ஏற்பாடு. புதன் கிழமை மாலை பள்ளி விட்டு வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் துவங்கின. ஒரு அட்டைப் பெட்டியை வாங்கி அதன் எதிர் எதிர் பக்கங்களில் ஓட்டை போட்டு அதில் ஒரு பக்கம் லென்ஸ் மறுபக்கம் பிலிம் வைப்பதாக ஏற்பாடு. இந்த லென்சின் பின்னாலிருந்து டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினால் அது லென்ஸ் வழியாக பிலிமில் பட, படம் திரையில் விழும் என்று நம்பினோம். சேகர் சுந்தரம் டாக்கீஸிலிருந்து யாரையோ பார்த்து கொஞ்சம் பிலிம் வாங்கி வந்தான். நாங்கள் எங்கள் வீட்டு காமிரா ரூமைத் தியேட்டராக்குவதாக முடிவு செய்தோம்.

அந்த நாட்களில் தெருவில் வீடுகள் ஒன்றுக்கொன்று அடுத்து அடுத்து இருக்கும். வாசலில் இருந்து உள்ளே போனால் தாழ்வாரம் கூடம் என்று இரண்டு அமைப்புக்கள். தாழ்வாரத்தின்  ஓரத்தில் முற்றம் பள்ளமாக இருக்கும். தாழ்வாரத்தின் வழியாக கொல்லைக்குப் போகலாம். கூடத்தில் வாசல் முனையில் ஒரு ரூம் இருக்கும். அதை காம்ரா ரூம் என்று சொல்வோம்.

ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது அது இந்தியில் ‘கம்ரா’ என்றால் ‘ரூம்’ என்று. நம்மவர்கள் கேட் – கதவு, லைன் – கரை என்பது போல் கம்ரா – ரூம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. நான் காமிரா ரூம் இருட்டாக இருப்பதால் அந்த ரூமுக்கு காமிரா உள் என்று பெயர் என்று நினைத்தேன். அதன் ஒரு பக்கம் கதவும் இன்னுமொரு பக்கம் சின்ன ஜன்னலும் இருக்கும். கொஞ்சம் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

எங்கள் வீட்டு ஜனத்தொகை அதிகம். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர், அம்மா, அப்பா, அத்தைப் பாட்டி. அப்பாவைப் பற்றியும் இங்கு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்பா வேலைக்குப் போவார். எங்களிடம் அன்பாக இருப்பார். ஆனால் கோபக்காரர். விஷமம் பண்ணினால் கையில் கிடைப்பதை எடுத்து அடித்துவிடுவார். முக்கியமாக அவர் தூங்கும் போது இடையூறு வந்தால் அடி சாத்திவிடுவார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் சாப்பிட்டு கூடத்தில் படுத்து ஒரு நான்கு மணி நேரம் தூங்குவார். எங்களையும் அவர் பக்கத்தில் படுக்கச் சொல்வார் அவர் தூங்கும் வரை நாங்கள் கண்மூடி இருந்து அவர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நாங்கள் மெதுவாக கையை விலக்கிக்கொண்டு கொல்லைப்பக்கமோ வாசல் பக்கமோ வெய்யில் வீணாகாமல் அப்பாவுக்கு எங்கள் சத்தம் கேட்காமல் விளையாடச் சென்று விடுவோம். அப்பாவை எழுப்புவதற்கு முன் அம்மா எங்களைக் கூப்பிடுவாள். நாங்கள் சமத்துப் பிள்ளைகளாக அப்பாவுடன் டிபன் சாப்பிடக் காத்திருப்போம்.

அம்மாவிடம் பர்மிஷன் கேட்டோம். என் பெரிய தங்கையை கூட்டு சேர்த்துக் கொண்டேன். அம்மா சில கண்டிஷன் போட்டாள். திங்ககிழமைப் பாடம் எல்லாம் சனிக்கிழமை செய்து முடிக்க வேண்டும் அதிக கூட்டம் சேர்க்கக் கூடாது. சத்தம் போடக்கூடாது. நாங்கள் எல்லா ஷரத்துக்கும் உடன் பட்டோம்.

அப்பாவுக்கு சனிக்கிழமை அரைநாள் ஆபீஸ் ஆனால் வெயில் தாழ நாலு மணிக்கு வருவார். அதற்குள் முன்னேற்பாடுகள் செய்து விட நினைத்தோம். புரஜக்டர் செய்தோம். அதை காமிரா உள்ளிற்கு எடுத்து சென்று ஜன்னல் மூடி சுவரில் படம் தெரியும் தூரத்தில் வைத்துப் பார்த்தோம். டார்ச் வெளிச்சம் பரவ சுவர் அருகில் இருந்த்தால் படம் தெளிவாக சின்னதாக தெரிந்த்து. மற்றபடி வெளிச்சத்தினால் மங்கலாகத் தெரிந்தது.

அப்பா வருவதற்குள் புரொஜ்க்டரை பத்தாயத்திற்கு இடையில் வைத்தோம். அப்பா வந்தார். நாங்கள் என்றுமில்லாதத் திருநாளாக வீட்டுப் பாடம் பண்ணிக்கொண்டிருந்தோம். அப்பாவுக்கு அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

அவர் மாலை கடைத் தெருவிற்குப் புறப்பட்டதும் எங்கள் குழு அவசர கூட்டம் கூட்டி நாளைய நிகழ்ச்சிகளை உறுதி செய்து திட்டமிட்டோம். மிகவும் வேண்டிய சிலரை மட்டுமே கூப்பிடுவதாக உறுதி செய்தோம். புரொஜக்டர் தயாரித்த மூன்று பேருக்கு மூன்று பேர் அனுமதி. லென்ஸ் கொடுத்த ராமன் ரெண்டு பேர், சேகருக்கு ஒரு ரண்டு டிக்கட். அப்பறம் எங்கள் கிளாஸில் படித்த கமலாவின் தம்பிக்கு, அவன் கிரிக்கெட் குருப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டதாலும் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும் கமலாவின் தம்பி என்பதாலும் அவனுக்கு அனுமதி. வேண்டுமானால் கமலாவை அழைத்து வரலாம்.

இதை கேட்டுக்கொண்டிருந்த என் தங்கை அப்ப என் ஃபிரண்ட் கோமதியும் வருவா என்றாள். அவள் உதவி இந்த திட்டத்தில் அப்பாவை சந்திக்க பெருமளவில் தேவை என்பதால் அவள் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆக்கூடி ஒரு 15 பேர். ரூம் ரொம்ப சின்னது. அப்பா வருவதற்குள் கூட்டம் கலைக்கப்பட்டது. எல்லோரும் இரண்டு மணிக்கு வீட்டு வாசலில் வரவேண்டும், சிக்னல் கிடைத்தவுடன் உள்ளே வரலாம்.லேட்டாக வருபவர்களுக்கு இடம் இல்லை. இது கண்டிப்பான உத்திரவு.

இரவு கனவில் சினிமா நன்றாக தெரிந்தது. காலை எழுந்தவுடன் எங்களுக்கு சுறுசுறுப்பு. அம்மா சொன்ன வேலையெல்லாம் செய்தோம். ஒழுங்காக சண்டை போடாமல் சாப்பிட்டோம். வெய்யில் கொளுத்தியது.

அப்பா வழக்கப்படி படுக்க ஆயத்தம் பண்ணினார். எங்கள் போதாதகாலம் அவர் வழக்கமாக படுக்கும் இடத்தில் படுக்காமல் பத்தாயத்திற்கு அருகில் ரூமுக்கு போகும் வழியில் படுத்தார். வெய்யில் அதிகமாக இருப்பதால் அங்கே படுப்பதாக சொன்னார். நாங்கள் அம்மாவைப் பார்த்தோம். அம்மா பார்க்காதமாதிரி இருந்து விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து குறட்டை விட ஆரம்பித்தார். நாங்கள் சுறுசுறுப்பானோம். ஒரு குழு மெதுவாக வந்து புரொஜ்க்டரை ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே போய் எண்ணெய் போடாத கதவு சத்தம் போட மூடி ரெடிபண்ணினார்கள். நான் இரண்டு பேரை வாசலில் நிறுத்தினேன். அதற்குள் வந்து வெளியே சிக்னலுக்கு காத்திருந்தவர்களை என் தங்கை சைகையால் சத்தம் போடாமல் வரவும் அப்பா தூங்குகிறார் என்றும் அபிநயம் பிடித்தாள்.

நான் அப்பாவின் வெள்ளை வேஷ்டியை ஸ்க்ரீனாக கட்டினேன். கூடத்தில் கோணி கட்டி இருட்டாக்கினேன். அம்மாவை வரச்சொல்லி சைகை காட்டினேன். அவளும் உள்ளே வந்தாள். உள்ளே ஹவுஸ் ஃபுல். கூட்டம் நிரம்பி வழிந்தது. இருட்டில் யாருக்கு பக்கத்தில் யார் என்று தெரியவில்லை. டார்ச் வெளிச்சம் போதவில்லை. பிறகு நாங்கள் பல்பு எடுத்து கனைக்ஷன் கொடுத்து அதை வைக்க வெளிச்சம் ரூம் முழுவதும் பரவியது. அதை மறைக்க ஒரு ஸ்டூல் திருப்பி போட்டு அதில் அம்மாவின் கருப்பு புடவையைப் போர்த்தி நடுவில் பல்பு வைத்து திரையில் முதல் படம் தெரிந்தது. எங்கள் கனவு பலித்த்து. எல்லோரும் சந்தோஷத்தில் கத்த, நான் கிடைத்த தொடையைக்கிள்ளி ‘ஷ்’ என்றேன்.

அந்த சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்த்து. என் தங்கையின் ஃபிரண்டு கோமதியும் அவள் குண்டு தம்பியும் லேட்டாக வர அவர்கள் வரும் சத்தம் கேட்டு என் தங்கை ரூம் வாசலில் வந்து “மெதுவா” என்று சொன்னாள். அவர்கள் லேட்டாக வந்ததால் சினிமா போய்விடுமே என்று பரபரப்பாக வர, வெளியில் வெளிச்சத்தில் வந்தவர்களுக்கு உள்ளே இருட்டில் கண்தெரியாமல் போக, குண்டுதம்பி அப்பாவின் காலை எட்டிவிட, அப்பா தூக்கத்தில் அதை நகர்த்த அந்த இடத்தில் மகாபலி மீது வாமனர் கால் வைத்தமாதிரி வைத்து அழுத்தி விட்டு எதிர்பார்க்காமல் எதையோ மிதித்ததில் பயந்து “ஆ” என்று கத்த, அப்பா தூக்கத்தில் எழுந்தார்.

இவர்களைக் காப்பாற்ற என் தங்கை அவர் முன் நிற்க அவர் எழுந்ததும் ஒன்றும் புரியாமல் என் தங்கையைப் பார்த்து சத்தம் போட்டு விசிறியை எடுத்தார். நிலைமையின் தீவிரம் அறிந்து அவள் தீ பிடித்த வீட்டில் தப்பித்து ஓடுவது போல் கொல்லைப் பக்கம்  ஓடினாள். அப்பா கோபத்தில் அவளைப் பிடிக்க அவள் பின் ஓடினார். இருட்டு, தூக்கக் கலக்கம், இடுப்பில் இருந்த வேஷ்டி நழுவ அதை ஒரு கையால் பிடித்த படி ஒரு கையில் விசிறியுடன் ஓடினார்.

இந்த சமயத்தில் இவ்வளவு கஷ்டத்திற்கு நடுவிலும் எனக்கு அப்பா ஓடுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அம்மா பின்னால் போனாள். என் தங்கை மாரிசன் போல் வேகமாக ஓடி எங்களைக் காப்பாற்ற கிணற்றங்கரை வரை போய்விட்டாள். அப்பா அவளை அடிக்கும் சத்தமும் அவள் அம்மா என்று அலறும் சத்தமும் கேட்டது.

இன்னும் விபரீதம் நடப்பதற்குள் தியேட்டரில் இருப்பவர்களை ஓடச் சொன்னேன். அவர்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடும் கூட்டம் போல் அந்த சின்ன வாசல் வழியாக இருட்டில் ஓட, பத்தாயத்தின் கால் தடுக்கியவர்கள், நிலைப்படியில் இடறி விழுந்தவர்கள், உயரமானவர்கள் நிலைப்படியில் முன் தலை மோத, எவனோ ஒருத்தன் போகிற போக்கில் அப்பா குடிக்க வைத்திருந்த தண்ணீர் சொம்பை உருட்டி விட கூடம் முழுவதும் தண்ணீர்.

பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி, மாயமாய் மறைந்தனர். வீட்டு ஜனத்தொகை விளைவுகளுக்கு பயந்து நின்றது. நான் என் தங்கையை காப்பாற்றத் தீர்மானித்து, ஓடிப் போய் அப்பா முன் சரண்டரானேன். அப்பா என் பக்கம் திரும்பி விளாசினார். அம்மா சமாதானம் பண்ண அப்பா தூக்கம் தெளிய, தடியடி நின்றது. உள்ளே வந்து நிதானமானவுடன் “என்னடா சத்தம் தூங்கறேன்னு தெரியாது” என்று சொல்லி நாங்கள் விசும்புவது பார்த்து இரக்கப்பட்டு தண்ணீர் இல்லாத இடத்தில் வேறு பாய் போட்டு பக்கத்தில் படுக்க வைத்தார். பயத்தில் நாங்கள் தூங்கிப் போனோம்.

ஒரு மணி ஆயிருக்கும். நானும் தங்கையும் எழுந்து ஒருவொருக்கொருவர் பார்த்துவிட்டு அப்பா எங்கே என்று பார்த்தோம். அப்பா தூக்கம் கலைந்து முகம் கழுவி வந்திருந்தார். அம்மா பூரி மசால் பண்ணி, “வாங்கோ சாப்பிடுங்கோ. இப்படியா கண்ணு மண்ணு தெரியாம அடிப்பா. பாவம் பயந்துடுத்துகள்” என்றாள்

அப்பா தன் தவறை உணர்ந்து “தூக்கம் கலக்கம் ஒண்னும் தெரியல. என்ன சினிமா விளையாட்டு விளையாடினானா. பாவம் நான் கூட சின்ன வயசில அப்பா தூங்கிண்டிருந்தபோது இப்படி ஏதோ ஒரு விளையாட்டு விளையாடி அவர் தூக்கம் கெட்டு அடிச்சார். எல்லாம் சகஜம். விடு, எழுப்பு… பாவம் அதுகளுக்கு பூரி பிடிக்கும்” என்றார்.

அம்மா எழுப்புவதற்காகக் காத்திருந்தோம். அப்பா பக்கம் திரும்பவில்லை. “என்னடா இதெல்லாம்” என்று அப்பா பொய்க்கோபம் காட்டினார். நாங்களும் பொய்யாக பயந்து கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு சாப்பிட்டோம்.

அதற்குப் பிறகு அப்பா தூங்கும் போது மட்டுமில்லை எப்போதுமே இந்த சினிமா விளையாட்டை விளையாடவில்லை. அந்த ஞாயிறு மத்தியானம் என்னால் மறக்க முடியாது.

இப்போது என் பிள்ளைகள் வந்து விட்டார்கள். நான் ஞாயிற்றுக் கிழமைகளில்  அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் படுத்து தூங்குகிறேன். அவர்களும் ரூம் கதவை சாத்திவிட்டு, சத்தம் காதைப் பிளக்க மேட்சும் சினிமாவும் பார்க்கிறார்கள். இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வரும். உங்களுக்கு?

 
 
 
 
 
 
 
 

படம் உதவிக்கு நன்றி:
http://pudhiavan.blogspot.com/2012_02_01_archive.html
http://vrnspv.wordpress.com/page/4/
http://www.mayyam.com/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அந்தக்கால விளையாட்டுகள் – பேசும் படம்

  1. அடாடா! அருமையான பதிவு. இப்படிப்பட்ட  சீன வயசுச் சேட்டைகள் மன்சை விட்டு அகலாத நினைவுகள். நடுநடுவே கவித்துவமஅன உவமைகள், வாமனாவதாரத்தையும், மாரீசனையும் துணைக்கழைத்து! சூப்பர் பூவராக மூர்த்தி! கே.ரவி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *