கே.ரவி

காலபைரவன் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துகிறேனா? காலத்தில் முன்னும், பின்னும் நாம் சென்றுவர வேண்டுமென்றால் அவன் துணை வேண்டும். காலக் குதிரையின் கடிவாளம் அவன் கையில்.

ஆங்கிலத்தில் டைம், ஸ்பேஸ் என்று சொல்லப்படும் காலமும், வெளியும் எப்போதுமே புதிரானவை. இந்த இரண்டில் எது முன்னது, எது பின்னது என்று கேட்டால், முன்-பின் என்ற தொடர் மூலம் காலம் தலைக்காட்டித் தானே முன்னிற்கும். இந்த இரண்டில் எதிலிருந்து எது வந்தது என்று கேட்டால், எதற்கு எது இடமளித்தது என்ற கேள்வியாக அதை மாற்றி வெளியாகிய இடமே வியாபித்து நிற்கும். தலைசுற்ற வைக்கும் இரட்டைக் குதிரைகள் அப்பா!

dravidமுன்பொருமுறை, 1988-ஆம் ஆண்டு என்று ஞாபகம், சென்னை, பெஸண்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில், ஆதிசங்கரர் விழாவையொட்டி, நண்பர் சுப்பு, இப்பொழுது மிகப் பிரபல எழுத்தாளராயிருக்கும் ‘திராவிட மாயை’ சுப்பு, ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கவிமாமணி மதிவண்ணன் தலைமையில் நான் பாடிய பாடலின் பல்லவி இப்பொழுது நினைவுக்கு வருகிறது:

வெளிச்சம் வந்தா இருட்டு எங்கே போகும் – அட

இருட்டு தானே வெளிச்சமுனு மாறும்

 

இப்படி இரட்டைப் புதிர்கள் இயற்கையில் ஏராளம். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கவியரங்கத்தை நான் இப்போது நினைத்துக் கொண்டதற்குக் காரணம், நான் புதுக்கவிதையோ அல்லது அது மாதிரி ஏதாவதோ எழுதியிருக்கிறேனா என்ற கேள்விதான். அந்தக் கவியரங்கத்தில், மேலே குறிப்பிட்ட பாடலைப் பாடிவிட்டு நான் படித்த ஒரு கவிதை, அல்லது வசனம், என் நினைவில் நிழலாடுகிறது. அதையும்தான் சொல்லி வைக்கிறேனே:

 

 

ஓம்!

 

பஞ்ச பூதங்களை வணங்குகிறேன்

 

ஆதாரம் ஆகி என்னைத் தாங்கும் நிலத்தை

 

ஆகாரம் ஆகி என்னைக் காக்கும் ஜலத்தை

 

தேகாபி மானம் கொன்று புசிக்கும் நெருப்பை

 

ஓசைகள் பறக்கச் சிறகு கொடுக்கும் காற்றை

 

ஓங்காரம் என்ற லயம் ஜனிக்கும் வெளியை

 

வணங்குகிறேன்

 

லம் வம் ரம் யம் ஹம்

 

ஐந்தும் கடந்து சென்று

 

ஆறாவ தான புருவ மத்தியில்

 

மாறாத ஜோதி வடிவில்

 

பாராள வந்த பஞ்ச பூதங்களை

 

ஒருமைப் படுத்தி வணங்குகிறேன்

 

நீங்களிட்ட பிச்சை – நான்

 

அணிந்திருக்கும் சட்டை – என்

 

ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

 

பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

 

த்யானம் பலிக்கட்டும் – என்

 

சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

 

எத்தனை மேடு பள்ளங்கள் ஏறி இறங்கிய பாதங்கள்

 

எத்தனைக் கோடி உயிர்களின் மீது நடந்தன கேளுங்கள்

 

தட்டுப்பட்ட பொருள்களைத் தட்டி விட்ட புறங்கால்கள்

 

தண்டைபொற் சதங்கை கட்டி நடனமிட்ட கணுக்கால்கள்

 

தண்டனிட்டு மண்டியிட்டுத் தேய்ந்து போன முழங்கால்கள்

 

ஆணவத்துடன் ஆயிரம் முறைத் தட்டப்பட்ட தொடைகள்

 

ரத்தஓட்டப் பித்தலாட்டத்(து) அகப்பட்டு முறுக்கேறிச்

 

சத்தழிந்து போவதற்கே சதிசெய்த குறியீடு

 

உண்டுயிர்த்து வாழ்வதையே மாபெரும் லட்சியமாய்க்

 

கொண்டிருக்க வைத்த வயிறு

 

தேகத் தினவு தீரச் சத்தமிட்டுப் பிறர்

 

நோகச் சிரித்து நொந்தவிலா

 

உணர்வலை ஓட்டத்தில் சிக்குண்டு

 

துடித்துத் துடித்துத் துவண்ட மார்பு

 

பந்தபாச நுகத்தடிக்கே தந்த இரு தோள்கள்

 

தன்னைவிடச் சிறியவர்கள் தன்னிச்சைக் கடிபணிய மடங்கித்

 

தன்னைவிட வலியவரின் தண்டனையில் இருந்து தப்ப வணங்கித்

 

தன்னுடையதாய் எண்ணித் தர்மத்தின் பேர்சொல்லி வழங்கி

 

மடங்கிக் குவிந்து வளைந்து மெலிந்த கைகள்

 

ஆகாத ஓசைகள் ஏராளம் எழுப்பி ஆகாசம் கெடுத்த தொண்டை

 

காவல் மறந்து பேசிப்பேசிக் கலிவளர்த்த நாக்கு

 

கர்மவாசம் அற்றுப் போகாமல் நுகர வைத்த மூக்கு

 

வண்ணமே வடிவமென்றும் வடிவமே உண்மையென்றும்

 

கண்டு மயங்கிச் சுழன்ற கண்கள்

 

வியப்பூஞ்சல் ஆடியாடி வில்லாய் வளைந்த புருவங்கள்

 

கவலைக் கதிர்கள் தாக்கித் தாக்கிச் சுருங்கிப் போன நெற்றி

 

மெளனம் என்ற மகோன்னதத்தை மறக்க வைத்துச்

 

சத்தச் சில்வண்டின் ரீங்காரத்தில் மரத்துப் போன காதுகள்

 

நாடி நரம்பில் ஓடியடைந்த சேதிகளை

 

வகைப்படுத்துவதிலேயே அறிவு முழுக்கச் செலவழித்த மண்டை

 

அத்தனையும் உங்களிடம் அர்ப்பணிக்கிறேன்

 

அக்குவே றாணிவே றாகக் கழற்றி

 

ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

 

பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

 

த்யானம் பலிக்கட்டும் – என்

 

சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

 

ஓம்!

 

 

 

 

நிலம், நீர், காற்று, நெருப்பு, வெட்டவெளி ஆகியவற்றைப் பஞ்ச பூதங்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இந்தியாவில் உண்டு. இந்தக் கட்டத்தில் 1996-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வானவில் பண்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு பாரதி விழாவில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

வானவில் பண்பாட்டு மையம், பாரதி விழா என்று நான் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனால் எப்படி? விளக்க வேண்டாமா?

1994-ஆம் ஆண்டில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி என்னுடைய சில பாடல்களை சங்கீதா ஸ்டூடியோவில் பதிவு செய்தேன். என் மேல் மிகவும் அன்பு கொண்ட அந்த ஸ்டூடியோவின் நிறுவனர் மஹேஷ், அந்தப் பாடல்கள் கொண்ட ஒலிப்பேழையைத் தாமே வெளியிட முன்வந்து உதவினார். அதில் பதிவு செய்யப் பட்டதெல்லாம் தெய்வப் பாடல்கள். அது கூட ஒரு கேள்விக்கு இடம் தந்துவிட்டது.

ஏற்கனவே வல்லமையில் அந்தப் பேழையில் இருந்து கலைமகள் மேல் உள்ள பாடலின் வரிகளை மட்டும் பதிவேற்றியிருந்தார்கள். அதைப் படித்துவிட்டுத் தேமொழி என்ற சகோதரி அது பக்திப் பாடல்தானா என்று கேட்டிருந்தார். அந்தப் பாடலின் ஒலிப்பதிவைக் கேட்டால் இன்னும் என்ன சொல்வாரோ? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் அடிக்கடிச் சொல்வதுபோல், ஜேசுதாஸ் காதல் பாட்டுப் பாடினாலும் அது பக்திப் பாடல் போல் இருக்கும், எஸ்.பி.பி. பக்திப் பாடல் பாடினாலும் அது காதல் பாடல் போல இருக்கும். அடுத்த காரணம், எனக்கே பக்திக்கும், காதலுக்கும் வேறுபாடு புரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடும் போது இந்த வேற்றுமை எப்படிக் குறுக்கே வரும்? நான் காதலியைப் பாடினாலும் பக்திதான்; மதுரை மீனாட்சியைப் பாடினாலும் காதல்தான். அந்தப் பேழையில் இருந்து வல்லமையில் வரிவடிவில் மட்டும் பதிவான கலைமகள் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள், அது காதலா, பக்தியா என்று நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள்:

பாடலைக் கேட்கச் சொடுக்கவும் —.

அந்த இசைப்பேழைக்குத் ‘தெய்வகானாம்ருதம்’ என்று பெயர் தந்து அதை வெளியிட ஒரு விழா நடத்த வேண்டுமென்று மஹேஷ் என்னைக் கேட்டுக் கொண்டார். சங்கீதா நிறுவனம் வெளியீட்டு விழாக்கள் நடத்தும் வழக்கம் இல்லையென்பதால் வேறு ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் அந்த விழாவை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒரு கணம் சிந்தித்தேன். சிந்தனைக் கோட்டம் செயலற்றவுடன் திரு.ஒளவை நடராஜனின் நல்யோசனையின்படி ‘வானவில்’ என்று ஒரு கட்டமைப்பில்லாத, அதாவது, ஆங்கிலத்தில் இன்ஃபார்மல் என்பார்களே அப்படியோர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் ஒவ்வொரு மாதமும் ஓர் இலக்கிய ஜாம்பவானை அழைத்துப் பேசச் சொல்லிக் கேட்பது என்று முடிவு செய்தோம். அது 1970 – ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஆழ்வார்பேட்டையில் இருந்த என் மூத்த சகோதரி நந்தினி சத்தியமூர்த்தி வீட்டில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்தோம். ஒரு மாதம் பெரியவர் பி.ஶ்ரீ. அவர்கள் தள்ளாத வயதிலும் வந்து சாய்ந்து படுத்தவாறே, கம்பராமாயணக் காட்சிகள் சிலவற்றை விவரித்ததை மறக்க முடியுமா?

.. .. .. .. … … … … … … அவர்

சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்

அசோக வனத்தில் சீதை இருந்த நிலை பற்றிய கம்பனின் வரியை அந்தக் கிழவர் அப்போது அனுபவித்துச் சொன்னவிதம் கேட்டவர் செவிகளில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும்.

அதே போல் இன்னொரு மாதம், பேராசிரியர் அ.சீ.ரா. என்ற ஆ.சீனிவாஸ ராகவன் வந்து “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” என்ற பாரதி பாடலின் நாலே நாலு வரிகளை வியந்து, விளக்கி ஒன்றரை மணி நேரம் பேசி எங்களையெல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தியதைத்தான் மறக்கமுடியுமா? இல்லை, ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் நந்தினி படைத்த நல்விருந்தை, அதுவும் நா.பாவும், ஒளவையும் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு வாங்கிக் குடித்த ஆப்பிள் மில்க்கைத்தான் மறக்க முடியுமா? அந்த நிகழ்ச்சிகள் ஏனோ நாலைந்து மாதங்களுக்குமேல் தொடரவில்லை. அதே வானவில் பெயரில் நண்பர் சுப்புவால் நாமகரணம் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல் பிறந்ததுதான் வானவில் பண்பாட்டு மையம்.

krs

இசைப் பேழை வெளியீட்டு விழா முடிந்ததும் வானவில் பண்பாட்டு மையத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆலோசனை செய்த போது சுப்பு கொடுத்த யோசனைதான், ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, அதுவும் திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடுவது. அப்படித்தான் ஆரம்பித்தோம் ஆண்டுதோறும் பாரதி விழா கொண்டாடும் வழக்கத்தை. அந்த விழாவில், முதலாண்டில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தள்ளாத வயதிலும் வந்து கலந்து கொண்டு ஆற்றிய பேருரையும் சரித்திர நிகழ்ச்சிகள்.

arr

ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்குவது என்றும் முடிவு செய்தோம்.

ravi

kss

மூன்றாவது ஆண்டு பாரதி விழா, 1986-ஆம் ஆண்டு, டிசம்பர் 8-ஆம் தேதி, சென்னை ம்யூஸிக் அகாடமி பிரதான கூடத்தில் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அதில் பாரதி விருது வழங்க இரண்டு பேரைத் தேர்வு செய்து விட்டோம். ஒருவர், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி. ‘பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாரதி கண்ட கனவு மெய்ப்பட அவர் ஆற்றிவந்த கல்விப் பணிக்காக அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நான் கேட்டவுடன் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னொருவர் அப்போது புதுதில்லியில் மிக முக்கியமான மத்திய அரசு அலுவலராக இருந்தார். “சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் கனவு மெய்ப்படப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். தொலைபேசியில் அவரை அழைத்ததும், “நான் பாரதி பக்தன். மேலும் உங்கள் விழாக்குழுத் தலைவர் செம்மங்குடி சீனிவாசய்யரின் அபிமானி. உங்கள் அழைப்பை எப்படி மறுக்க முடியும்?’ என்று அவர் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். விழா நாள் வந்தது. அதற்கு இரண்டு சோதனைகள் ஏற்பட்டன. ஒன்று அந்த விழா நடைபெற வேண்டிய நாளுக்கு நலைந்து நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டி காலமாகி விட்டார். அதனால் அரசாங்கம் பத்துநாள் துக்கம் என்று அறிவித்து விட்டது. அதனால் விழாவில் நான் எழுதிய முதல் தமிழ் நூலை வெளியிட ஒப்புக் கொண்டிருந்த கல்வியமைச்சர், பேராசிரியர் அன்பழகன் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. விழாவுக்கு முந்தைய நாளில் இருந்தே சென்னையில் பலத்த புயல், மழை. விழாவன்று காலையில் விருது பெற்றுக் கொள்ள தில்லியில் இருந்து வந்துவிட்ட அந்த அறிவியற் பெருமகனாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விழாவை ஒத்தி வைக்கலாமா என்று கேட்டேன். அவர், ” வேண்டாம், குறித்த படியே நடத்தி விடலாம்” என்றார். விழா நடந்தது. நீதியரசர் பக்தவத்சலம் விருது வழங்கினார். திருமதி ஒய்.ஜி.பி. அவர்களும், அந்த அறிவியற் பெருமகனாரும், அவர்தாம் பிறகு நம் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் விருது பெற்றுக் கொண்டு நல்லுரையாற்றினார்கள். “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலை டாக்டர் ஒளவை நடராஜன் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ravi

பொறுமை! பொறுமை! பஞ்ச பூதத்துக்கு வந்து விடுகிறேன்!

ஒளவை அவர்கள் அந்த விழா நிறைவின்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் கவிதை என்பதை அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ மாயப் பொருளாகச் சித்தரித்திருக்கிறாய்? நம் நாட்டில்தான் அறிவு புறக்கணிக்கப் படுகிறது. நிலம், நீர், காற்று என்று நாம் அன்றாடம் காணும் பொருள்களைக் கூடப் பஞ்ச பூதங்கள் என்று சொல்லிக் கதையளக்கிறோம். நீயும் ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய்?”

அந்தக் கேள்விக்கு நான் அப்போது எதுவும் விடை சொல்லவில்லை. சிந்தித்துப் பிறகு சொல்கிறேன் என்று நழுவி விட்டேன், ஏனென்றால், அதற்குள் திரு.கலாம் அவர்கள் என்னை அருகில் வரச் சொல்லி அழைத்துவிட்டார். சென்றேன். ஷோபனாவையும் அழைத்தார். அவளுடைய செய்தி வாசிப்பைப் பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, என்னிடமே தாள் கேட்டுப் பெற்று அதில் ஒரு கவிதையும் எழுதித் தந்தார், ‘எழுச்சி உள்ளம்’ என்ற தலைப்பிட்டு. அது இதோ:

எழுச்சி உள்ளம்

செல்வத்திற் கெல்லாம் தலையான செல்வம்kalam

என்ன என்ன என்று எண்ணுக!

உயர் லட்சியத் தீக்கொழுந்தால்

எழுச்சி செய்யப்பட்ட உள்ளத்தின் சக்தி

எல்லாச் சக்திக்கும் பெரிய சக்தி;

சக்திக் கெல்லாம் சக்தி!

பூமியிலும் விண்ணிலும் பூமிக்கடியிலும்

நிகரில்லாத சக்தி!

மாந்தரின் உள்ளச் சக்தி!!

கலாம் விடை பெற்றுச் சென்ற பிறகு, ஒளவையிடம் உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் சொல்லவில்லை. ஆனால், அதற்கான விடை, மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக படைத்தபோது அதில் வெளிப்பட்டது. அந்த விடையை அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் (30)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *