சங்கர் சுப்ரமணியன்

அப்பாவின் கைப்பிடித்துக்                                    Pandavas
காலார நடக்கையிலே
சொல்லி வந்திடுவார்
அர்ச்சுனனின் உண்மையும்
தர்மனின் நேர்மையும்
அவர்களடைந்த மேன்மையும்
எனக்கும் பசுமரத்தில் அடித்த
ஆணிபோல் நெஞ்சத்தில் பதிந்து போனது!

சிவப்பு விளக்கு எரிகையிலே
முன்னம் செல்ல, அலுவலகங்கள்
வேலைமுடிக்க பணம் கொடுக்க,
வரிசையில் நில்லாமல் இடை சொருக,
முன் நிற்பவனின் இடம் பெற,
மனம் பொருந்தா வேலை செய்ய…
பின்னமிருந்து சமூகம் என்னை
முன்னம் தள்ளப்பார்க்கும்!

இப்படியாகச் செய்யாவிடின்
இல்லாத காரணம் சொல்லி
என்னைப் பின்னம் தள்ளும்!
இவன் கனவுகளில் நிஜம்
இழக்கும் பைத்தியக்காரன் என்ற
முத்திரையுடன் எள்ளி நகைக்கும்!

எதுவரினும், என் முகம் சிதைந்திடினும்
நேர்மையின் வலி என்
இதயமெல்லாம்  ஆறாத ரணங்களாய்
நிறைந்திடினும், நான் நிறம்
இழந்திடேன்! ஏனெனில் கழட்டி
மாட்டும் சட்டையல்ல என் நேர்மை!
உறையும்வரை உடன்வரும் என் உதிரம்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க