கே.ரவி

ரயிலில் என்னைத் தாக்கிய மின்னற் கவிதை என்று போன அதிகாரத்தில் குறிப்பிட்டேன் இல்லையா? அதுதான் ‘ஸ்பரிசம்’ படத்தின் அடுத்த பாடலாகியது. அதுவும் இரண்டே வரிகள். அதையே வேறு வேறு ஸ்தாயியில், ஆனால் ஒரே ராகத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த பாடல். எனக்குத் தெரிந்த வரையில் அதைவிட அளவில் சிறிய பாடல் எதுவும் எந்தத் திரைப்படத்திலும் வந்ததில்லை.

baluஅந்தப் பாடலைப் பாட எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒப்புக் கொண்டிருந்தார். அதற்கு முன் நான் அவருக்கு அறிமுகம் இல்லை. பாடல் பதிவுக்கு நாள் குறித்தாகி விட்டது. அன்று பகல் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் ஆர்.ஆர்.ஒலிப்பதிவுக் கூடத்தை வாடகைக்கு எடுத்து விட்டோம். வாத்தியக்காரர்களை எல்லாம் வரவழைத்து, ஹார்மோனியம் ராமமூர்த்தி உதவியுடன் ஸ்வரங்கள் எழுதித் தந்து, ஒத்திகை எல்லாம் பார்த்து முடித்து, இரவு 6 மணிக்குத் தயாரக, எஸ்.பி.பி. அவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். 7 மணியாயிற்று வரவில்லை. தொலைபேசியிலும் அவர் அகப்படவில்லை. 8 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். “சாரி ரவி, நான் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். வரப் பத்து மணிக்கு மேலாகிவிடும். ரொம்பக் களைப்பாகவும் இருக்கிறது. நீங்கள் ம்யூஸிக் டிராக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னொரு நாள் பாடிக் கொடுக்கிறேனே” என்று மிகப்பணிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார். டிராக் பதிவு செய்த அனுபவம் எனக்கு அப்போது இல்லாததாலும், எஸ்.பி.பி. பாட வேண்டிய என் முதல் பாட்டிலேயே இப்படித் தடை வருகிறதே என்ற ஆதங்கத்தாலும் அவர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் அன்றிரவே அவர் வந்து பாடிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். என் நிலையைப் புரிந்து கொண்டு அவர் வீட்டுக்குக் கூடப் போகாமல் இரவு பத்து மணிக்கு நேராக ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்தார். பாடல் சொல்லுங்கள் என்றார். நான் இரண்டு வரிகளைச் சொன்னேன். ஓகே, சரணம்? என்றார். அவ்வளவுதான் என்றேன். நிமிர்ந்து பார்த்தார். பாடலே அவ்வளவுதானா? ஆம். அரை மணி நேரத்துக்குள் மலஹரி ராகத்தின் சாயையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அமர்க்களமாகப் பாடிக் கொடுத்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாடல் மிகவும் நன்றாக அமைந்தது. அந்தப் பாடல் இதுதான்:

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

அவ்வளவுதான் பாடல். இதே வரிகளை வெவ்வேறு விதமாக மூன்று முறை கதாநாயகன் நாயகியிடம் பாடுவதாகக் காட்சி அமைந்தது. நீங்களும் பாடலைக் கேட்கலாம், பின்வரும் சுட்டியைச் சொடுக்கினால்.

http://www.inbaminge.com/t/s/Sparisam/Oodal%20Siru%20Minnal.eng.html

ராக்கெட் ராமனாதன், சுப்புணி (என்னுடன் விவேகானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நண்பன் டி.எம்.சுப்பிரமணி) இவர்களுடைய நகைச்சுவையும், இந்தப் படத்தின் பாடல்களுமே, வினியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வாங்க, முக்கியமான காரணங்களாக அமைந்தன.

மேலே உள்ள பாடல், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் இல்லை. பல்லவியே ஒரு முழுப்பாடலாக உருக்கொண்டு விஸ்வரூபம் எடுத்த பாடல். அதற்குமேல் வளர அதில் இடமில்லை. ஆனால், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல்களும் உண்டு.

ஒருநாள் இளங்காலைப் பொழுது, சின்ன சின்ன இழைகளாக வானம் மெல்ல மழைதூவிக் கொண்டிருந்தது. அந்த ரம்மியமான சூழ்நிலையில் ஒரு பல்லவி, தர்பாரி கானடா ராகத்தில், மனத்தில் மெல்லப் படர்ந்தது. அதையே மனம் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அதுவே அப்படியே மெல்லத் தேய்ந்து போனது, ஆங்கிலத்தில் ஃபேட் அவுட் ‘fade out’ என்பார்களே, அது போல்.

மழைத்

தூறலிடும் ஒரு காலைப் பொழுது – உனைத்

தூண்டிவிடும் ஒரு பாடல் எழுது

பிறகு நேர்ந்த எந்தத் தூண்டுதலும் அனுபல்லவி, சரணங்களைத் தரவில்லை. அந்தப் பல்லவியைத் தொடர்ந்து எழுதப் பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. வார்த்தைகள் வந்தன. ஆனால் அந்தப் பல்லவியோடு அவை இணைய முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

ஷோபனாவும் பாடல்கள் எழுதியுள்ளாள். அதுவும் அவள் இஷ்ட தெய்வமாகிய கண்ணன் மேல் அவள் வடித்த பாடல்களில் மீராவின் தாபமும், ஆதங்கமும் எதிரொலிக்கக் கேட்கலாம். அப்படி அவள் 1980-களில் எழுதிய ஒரு பாடலில் வரும் இரண்டு வரிகளை இந்தச் சூழ்நிலையில் எண்ணிப் பார்க்கலாம்:

குழலில் இருந்து பிறந்த இசை நான் – அவன்

குழலில் இருந்து பிறந்த இசை நான்

கண்ணனின் கற்பனை நான்

இந்தப் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் வரும் அந்த இரண்டு வரிகள்:

தென்ற லின்வழி சென்றத னாலே கண்ணனை மறந்திருந்தேன்

பல்லவி யோடு நின்றத னாலே கண்ணனைச் சரணடைந்தேன்

செதுக்கச் சிற்பி வந்தால்தான் கல் சிலையாகும். அவிழ்க்கக் கவிஞன் வந்தால்தான் சொல் கவியாகும். நம் உயிரே ஒரு கல்; ஒரு சொல்; அதைச் செதுக்க வரும் சிற்பிக்காக, அல்லது அதை விரித்துப் பாடவரும் கவிஞனுக்காக அது எத்தனை யுகமானாலும் காத்திருக்கும், ராமனுக்காகக் காத்திருந்த அகலிகை போல!

பல ஆண்டுகள் கழித்து நான் எழுதிய ஒரு பாடலின் தொகையறா (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ!):

உளிதாக்கி உடைகின்ற கல் – நான்

உமிவிலகக் காத்திருக்கும் நெல்

ஒருதேவ முனிவன்வந் துச்சரிக் கும்வரை

ஓசையின்றி ஒளிந்திருக்கும் மந்திரச்சொல்

என் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மின்னல் அடித்திருக்கிறது! 5 வயதில் ‘மின்னல் வீரன்’ என்ற பெயரில் என் வளர்ப்புத் தந்தை தயாரித்த படத்தில் குட்டிக் கதாநாயகனாக நடித்தேன். 11 வயதில் என் ஆசிரியர் என் தமிழ் விடைத்தாளைச் சுருட்டி என் முகத்தில் வீசியெறிந்த ஒரு மின்னல் அதிர்ச்சியில் உந்தப் பட்டு மூன்று மாதங்களில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை நானே நூலகம் சென்று பயின்று கவிதை எழுதத் தொடங்கிப், “மின்னற் சுவையே கன்னற் கனியே” என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை எழுதி ஆசியரின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றேன். 28 வயதில் எஸ்.பி.பி பாட “ஊடல் சிறு மின்னல்” என்ற என் பாடலை நானே இசையமைத்துப் பதிவு செய்தேன். பிறகு, 1998-ஆம் ஆண்டில் பாரதியியல் பற்றி “மின்னற் சுவை” என்றொரு நூல் எழுதி அதற்குக் கவியரசி செளந்தரா கைலாசத்திடம் அருமையான முன்னுரை வாங்கி வெளியிட்டேன்.

balu1என் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடலும் மின்னல்தான். ஆனால் அது ‘ஸ்பரிசம்’ படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் வளர்ப்புத் தந்தை எடுத்த ‘ராஜா நீ வாழ்க’ படத்துக்காகப் பதிவானது. பிரபு, சத்யராஜ், அம்பிகா நடித்து, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் தயாரான அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி. பாடிய பாடலைப் பதிவு செய்ய என் உதவியாளராகப் பணியாற்றிய எல்.வைத்தியநாதனை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே, ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்துக்கு இசையமைத்து வெற்றியும் பெற்ற இசையமைப்பாளர் அமரர் எல்.வைத்தியநாதன் தம்மை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த எனக்கு உதவிசெய்ய முன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினத்துக் கொள்கிறேன். அந்தப் பாடலை எஸ்.பி.பி எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால் இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன:

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

 

நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒளியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

பார்வையே மலர் சூடுமே – ஒளிப்

புன்னகை வளை போடுமே – என்

கண்களின் மழைத்துளிகளே – உன்

கால்களில் ஜதி போடுமே

 

தென்றலே மலர் சூடவா

 

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலரக் கண் இமைகள் நெகிழப் – புதுக்

கனவு மலரக் கண் இமைகள் நெகிழ – ஒரு

மழலை வடிவமுன் மடியில் தவழவரும்
வெண்புறா விளையாட வா – குயில்

பேடையே குழ லூதி வா – அலைக்

கரங்களில் நுரைக் குடங்களில் – நதி

அன்னை யேசீர் கொண்டு வா

 

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா

 

லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா

[பாடலை நீங்களும் கேட்கச் சொடுக்கவும்]

https://www.youtube.com/watch?v=d0HckTVpYFw

இந்தப் பாட்டுக்கும் ஒரு பின்னணி உண்டு. அதுவும் இலக்கியப் பின்னணி. என் கல்லூரி நாட்களில் என் நண்பன் ஓவியக்balu2 கவிஞர் சு.ரவி எனக்கு அவ்வப்போது சம்ஸ்க்ருத இலக்கியத்திலிருந்து நல்ல கவிதைகளைச் சொல்லி விளக்கியிருந்தான். அதிலும் மஹாகவி காளிதாசனின் ‘ரகுவம்சம்’ என்ற காவியத்தில் இருந்து அவன் சொன்ன ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ரகுவம்சத்தில் ஒரு பகுதிதான் ராமனின் கதை. அதில், ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் வழியில், சீதை தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக் கீழே வீசி எறிந்ததாகவும், அவள் கைவளையல்களை அப்படிக் கழற்றி எறிந்ததும், அவளுடைய வெறுங்கையைப் பார்க்கப் பொறுக்காமல் வானமே இடியிடித்து, மின்னலால் அவள் கைக்கு வளையிட்டது என்ற அருமையான பாடல் என் மனத்தில் உறைந்து, தக்க நேரத்தில் தமிழில் வெளிப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.

இன்னும் என் வாழ்வில் என்னென்ன மின்னல்கள் காத்திருக்கின்றனவோ!

அட, இந்த வரி எழுதும் போதே உள்ளத்தில் பளிச்சென்று மின்னலிடுகிறதே ஒரு புதுக்கவிதை; அதாவது, இப்பொழுதுதான் உதித்த புதிய கவிதை. சுடச்சுட, அப்படியே பரிமாறுகிறேன். இந்தக் கவிதைக்கு இதுவே சூழல்; நீங்களே இதன் செவிலித் தாய்மார்கள்:

காற்றும் மின்னலுமாய்க் கதைசொல்ல வந்தேனே

நேற்று நினைவுகளை நெஞ்சுருகத் தந்தேனே

போற்றிப் புகழ்வதற்கா புலனழிந்து போவதற்கா

ஏற்றம் எனக்கில்லை எல்லாம் திருவருளே

 

சாட்டை சொடுக்கியவன் சங்கல்பத் தால்நானும்

ஆட்டம் போடுகிறேன் ஆலோலம் பாடுகிறேன்

வேட்டைக் காரனுக்கு வேறென்ன குறிக்கோளோ

வேடிக்கை காட்டுகிறான் வேஷங்கள் போடுகிறேன்

 

கூத்து நடக்கையிலே கூட நடிப்பார்கள்

கூத்து முடிந்ததுமே கூட்டம் கலைந்துவிடும்

கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை

கூத்து நடக்கட்டும் கொண்டுவா கவிதைகளை

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காற்று வாங்கப் போனேன் (28)

  1. 1979 இல் வந்த, 2 வார்த்தைகள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய பாடல் “நினைத்தாலே இனிக்கும்” – தான்னனா தனனா தன்னே தனனா தன்னே தனனா … நினைத்தாலே இனிக்கும். 🙂

  2. நன்றி தேமொழி. ஒப்புக் கொள்கிறேன். ஆனால், “நினைத்தாலே இனிக்கும்” என்ற இரண்டு சொற்களும், அதற்குப் பிறகு வந்த “நிவேதா” என்ற ஒரு சொல்லும் இசையால் பாடலானவை. அவற்றை மட்டுமே படித்தால் பாடலாக இருக்குமா? Sorry, I am not arguing or trying to prove a point, just thinking aloud. I see some difference. Well it depends on one’s perspective. Anyhow its nice conversing with you. K Ravi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *