கே.ரவி

1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை…. நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

36

என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லி விட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

1

நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

2

முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

5

“சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

சரி, மின்னலுக்கு வருகிறேன்.

அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

(தொடரும்)

புகைப்படங்கள் குறித்த விவரம்:

1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள் 2.

2. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

3. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *