எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான்.
ஓரிருமுறை தனது வரியை உச்சி மோர்ந்துவிட்டு, தனது சர்வீஸ் டீமுக்கு அதை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, அப்போது அலுவலகம் விடுத்து இல்லம் ஏகுவான்.
வீட்டில் வளர்ந்து திளைத்து கிடக்கும் சூயஸ்(நாய் பெயர்) தான் அன்றைக்கு அவனின் துணை. அதற்கு தீனி போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு படுத்து தூங்க முயற்சிப்பான்.
ஆனால் அவனுக்கு தெரியும், இன்றைக்கு கிடைத்தது பெரிய வெற்றி. அதற்காக மூளை உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைக்கு தூக்கத்திற்கு சூயஸ் மட்டும் போதாது.
யாருக்கு போன் செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருக்கும் போதே, தர்த்தி போன் செய்தாள். தர்த்தி – சர்வீஸ் டீம் ஹெட். ரவியின் விளம்பர வரிகளை வாடிக்கையாளர் தலையில் தேய்த்து, சரியென்று சம்மதிக்க வைக்க வேண்டும். [Client Approval]
போனை கிளிக்க,
“ என்ன பாஸ்.. வரவா.. ? “ தர்த்தி. குரல் குழைந்தது.
“ஹீம். யா.. “ வயிற்றுக் கீழே பட்டாம்பூச்சி.
சின்ன மெளனத்திற்கு பிறகு சொன்னான் “ யா.. தேங்க்யூ.. செல்லம்.. “
*
குளித்து முடிந்து, குடித்த விஸ்கி சூடாக்கிய மெல்லிய சூடு – ஏசியின் காற்று காமக்கனலை ஊதிப் பெருக்க முனைந்தது. பட்டணத்தாரின் கோமணம் போல ஜாக்கி அணிந்திருந்தான் ரவி.
தர்த்தி பேசிக்கொண்டேயிருந்தாள். பேச்சு. பேச்சு. அவள் அப்படித்தான். அலை அலையாய் வார்த்தைகள். அதன் ருசி கூட்டும் வியாஞ்ஞானமாய் உடல் மொழிகள்.
பேசியபடியே ரவியின் கையை தனது இடது மார்பில் வைத்துக்கொள்ள செய்தாள். அவளுக்கு அது பிடிக்கும்.
” யூ நோ ரவி.. நான் அந்த லாஸ்டு ஸ்லைடை பிரசண்டு பண்ணினப்போ .. போர்டு ரூமில் எல்லோரும் க்ளீன் போல்டு.. சேர்மேன். எழுந்து நின்றுவிட்டார்… வெரி எக்சைட்டிங்..”
ரவிக்கு தர்த்தியின் சந்தோசம் பிடித்திருந்தது. தனது தொழிலின் பிடித்த கணங்கள். வெற்றியை சக அலைவரிசை தோழியோடு பகிர்ந்து கொள்ளுதல்.
“ கிரிக்கெட் பற்றி இப்படி ஒரு லைன், நியூ அவுட்லுக் வந்ததேயில்லைன்னு.. கஸ்டமர் ஷாக் ஆயிட்டாங்க.. அவங்களோடு புராடாக்டுக்கும் அது அப்படியே ஜிங்க் ஆயிருத்து.. எல்லா மீடியா கவரேஜிம் நமக்குத்தான். ”
மார்பைச் சுற்றி மெல்லிய வளையமிட்டான். அவனித்து எழுந்த தடமுலைகள் இல்லைதான். ஆயினும் எந்த சிந்தனையுமின்றி சந்தோசமாய் அவன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். ரவிக்கு அந்தக் கணம் நிறைவாய் இருந்தது.
” எப்படி ரவி.. உனக்குன்னு ஐடியா எப்படி இவ்வளவு சூப்பரா வருது.. “ தலைக்குள் கைவிட்டு அழுத்தி முடி இழுத்தாள். கொஞ்ச முன் குடித்திருந்த விஸ்கியால் பறந்து கொண்டிருந்த ரவியின் தலைக்கு வலி சுகம் கொடுத்தது.
“ It is not game, it is one more religion “ – தான் எழுதிய அந்த விளம்பர வரியை இன்னொரு முறை உதட்டிற்குள் சொல்லிக்கொண்டான்.
மிகப்பெரிய சந்தோசங்கள் பொங்கும் போது, நுரை பொங்க கிடைக்கும் மைசூர் கபேயின் அடியில் கசக்கும் டிகாசன் போல கல்யாணமாகாத குறை. அப்போது தான் அந்த கவலைக் குமிழ் உடைந்து ரொம்ப நாளாய் உள்ளிருந்து அரிக்கும் கல்யாணக் கவலை.
அம்மா சொல்லி சொல்லி பார்த்து, அலுத்து தன் கல்யாணம் பார்க்காமல் செத்தும் போய்விட்டாள். தன் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு இல்லாவிட்டாலும், தனது தமையன்கள் சென்னையில் ஒண்டிக் குடுத்தினத்தில் இரண்டு குழந்தைகளோடு.
தான் மட்டும் தனிமரமாய்.
ஏன் கல்யாணம் ஆகவில்லை, செய்து கொள்ளவில்லை என்று யோசிப்பதை தவிர்த்தான். அந்த எண்ணப்பயணம் எங்கேயும் நிற்பதில்லை. தனது படைப்புகள் கொடுக்கிற ஒருசில மணித்துளிகளின் இன்பத்தை தவிர வேறு எதுவுமே தன்னை பெரிதாய் பாதிப்பதில்லை என்பதை நினைவில் முட்டியது.
தர்த்தியை இன்று பார்க்க, வித்தியாசமாய் ஒளிர்ந்தாள்.
தர்த்தி.. எத்தனை உதவியாய் இருக்கிறாள். தான் செய்த எல்லா புராஸக்டுகளிலும் இவள் துணையில்லாமல் செய்திருக்க முடியாது. உடுக்கை இழந்த போதும், இழக்காத போதும் இவள் பலமுறை இடுக்கண் களைந்திருக்கிறாள். இவளின் உதவி திருப்பி கொடுத்து ஈடு செய்ய முடியாதது. அவளின் துணை மகிழ்ச்சி தருவது. அந்த மகிழ்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரியும்.
இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.. அவளை இன்னும் புரிந்து கொண்டு, அவள் என்ன கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். ஹீம்.. ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ?
*
அறையிலிருந்து வெளியே வந்து சோம்பல் முறித்தாள். முறிந்தது.
பாந்திராவின் டிசம்பர் மாதக் கடல் குளிர் காற்று. சில்லிட்ட பால்கனி. இருட்டான பால்கனி. அலைச் சத்தம். கண்ணாடிக் கதவின் வழியே பார்க்க ரவியின் ஆழ் தூக்கம்.
ரவி ரிஸி போல நிச்சலமாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். இந்த உறவில் ஏதோ ஒரு தேவதை தன்மை கூடுவதுபோல உணர்ந்தாள்.
சில்லிட்ட பால்கனி சேரில் உட்கார்ந்து காலை கம்பியின் மேல் அகட்டி வைத்துக் கொண்டாள்.
இளகிய இருட்டு. மணி மூணு, மூணரை இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளுக்கும் வானம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காலைச் சூரியனின் ஆரம்ப கணங்கள். சிறிய வயதிலிருந்தே பிடித்திருக்கும் சூரியப் பயித்தியம். எழும், எரிக்கும், விழும் சூரியனோடான காதல் யுக யுகமாய்.
ஏதோ கொஞ்ச நாளாய் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப .. மகிழ்ச்சியாய். உள்ளுக்குள், வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஏதோ புள்ளியில் ஏராளமாய் பொங்கும் ஆற்றல். அலை அலையாய் சந்தோசம். எதனால் ?.
அலுவலக வெற்றியா ?, ரவியினால் உடல் மலர்தலா ? நோ வே. (No way) . அது மட்டுமேயிருக்க முடியாது.
அலுவலக வெற்றி ஒன்றும் புதிதல்ல.
ஆறுமாதத்திற்கு முன்பும் இதே போல இன்ஸீரன்ஸ் நிறுவனத்திற்கான விளம்பரத்தில் பெரிய வியாபார வெற்றி. பெருத்த போராட்டங்களுக்கு இடையே கிடைத்த வெற்றி. அன்றைக்கும் இதே போல தானே அழைத்து, தானே கொடுத்து. இடைவிடாத பேச்சு. உடல், அன்பு பரிமாற்றம்.
உடல் மலர்தலும் புதிதல்ல. ரவிக்கும் முன்னும் உடல் மலர்ந்திருக்கிறது.
ஆனால், இப்போது சில காலங்களாய் உடலிலிருந்து எழும் பெரு மகிழ்ச்சி அலை அசாதரணமானது. பொங்கி வழிகிற கருணை. தொடர்ந்து ஊறி பல்கி பெருகி நீரூற்றாய் உடைகிற ஆற்றலை, அந்த புள்ளியை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த ஆற்றலின் புள்ளி அவளை உடலின் ஆதி மலரலுக்கு கொண்டு சென்றது.
*
” நான் போகட்டுமா.. ” கை கூப்பியபடி தனக்கு பிடித்தமான அவன் நின்று கொண்டிருக்கிறான். சரியான உயரம், மெல்லியதான வெப்பம், கொஞ்சமான காவிக் கலர் உடை. காற்றில்லாத போதும் பறக்கும் மயிர் கற்றைகள்.
மந்திரம் உண்மையில் பலித்து விட்டதா.. விளையாட்டு வினையாகி விட்டதா. ரிஸி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.
அவனைப் பார்க்க, பார்க்க பொங்கி வழிகிற ஆர்வம். வழுக்கி விழுகிற இதயம். இவனா ஒளி கொடுப்பவன். உலகமே தூயில் எழுந்தவுடன் துதிக்கப்படுபவன். இவனா என் உள்ளம் கவர்ந்தவன்.
பிடுங்கித் தின்கிற வெட்கம் மறைந்து அவனை பார்க்க, உடம்பு மலர பிரயத்தனப்பட்டது. முட்டிக்கொண்டு நின்றன மொட்டுக்களின் முனைகள். மண்ணாலான உடலின் உறுப்புகள் , சுரப்பிகள் வேகமாய் இயங்க தயாராகின.
மந்திரப்படி அவ்னோடு சேரவேண்டும். சேர்ந்தால், என்னை உதறும் – கட்டுகள் நிறைந்த உலகம். என் கர்ப்ப பையை கட்டுப்படுத்தும் ராஜாங்கம், நீதி பரிபாலனம். மண்ணாங்கட்டி.
தடுத்தது – மனத்திலிருந்து பயக்குமிழி. அதற்குள்ளே சமூகம், ராஜ குலம், கட்டுமானம், திருமணம், நற்பெயர், பெண், கொஞ்சம் உயரத்தில் ஆண், கர்ப்பம், தகப்பன், தாய் எல்லாம் கலந்து கட்டி. காற்றில் மெல்ல பறந்து, கலைந்து வெடிக்க, பயம் தன் மீது ஈரமாய் ஒட்டியது.
அவன் விழி நோக்கின் பயம் தாண்டத் தூண்டும் மனம். உதவியாய் ம்லரும் உடல். இவன் என் தேர்வல்லவா.. என் தேவனல்லவா. நான் விரும்பிய பிரம்ம புருஸனல்லவா..
மந்திரம் சொல்லியபின் கூடாமல் போனால், அவன் உடம்பில் பாதி எரிந்துவிடுமாம். நீங்கள் தவறாக அழைத்துவீட்டீர்கள் போல, பரவாயில்லை. மந்திர சாபத்தை உங்களுக்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். விரும்பிய போது மறுபடி வருகிறேன் என்று கை கூப்பியப்டி சொல்கிறான்.
அந்த பணிவை ரசித்து உடம்பில் சுரப்பிகளின் தாளம். மொட்டுகளின் முனை முறிந்து பெண்மை ததும்பல்.
“ வேண்டாம்.. இரும்.. “ என்றாள் கம்பீரமாய்.
அவன் புரிந்து கொண்டான். மெல்லிய நிலவொளியில் அவனின் கையைப்பிடித்து தோட்டத்திற்கு இட்டுச் சென்றாள்.
அவளுள் சுருண்டிருந்த பாம்புகள் சடக்கென உள்ளே தீ விழித்து தலை நோக்கி பாய்ந்தன. பெரு மகிழ்ச்சி அலை. வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஒரு புள்ளியிலிருந்து நீரூற்றாய் எழுகிற ஆனந்தம். ஆதி மலரல்.
அவன் அவளை மானசீகமாய் நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.
*
சுற்று முற்றும் வானம், இருட்டு. தூரத்தில் அலைச்சத்தம். அவள் பிரஞ்ஞை முழுவதும் வெற்று வெளி. தனது கால்களை திறந்து வானம் நோக்கி வைத்துக் கொண்டாள்.
இருட்டு கரைந்து, மெல்லிய நீலமாகி பின் அவன் ரதத்தோடு வரும் பாதையை யாரும் பார்க்குமுன் தான் பார்த்து நிற்பது. இந்த வானம் அவளுக்கு பழக்கமான பிடித்த ஓன்று.
அறைக்குள் பார்க்க, ரவி இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். நிசப்தம்.
தர்த்தி கண்களை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சில நாட்களாய் சிதைந்த கனவுகள், சில பிம்பங்கள். வேலை அசதியால் இருக்கும் என்று விட்டு விட்டாள். வயிற்றிலிருந்து வருகிற துடிப்பு அல்சரா, இல்லை பிரியட் பிரச்சனையா என்று சந்தேகம். இரண்டும் இல்லை என்று முடிவான பின்பு அதை உற்று நோக்க ஆரம்பித்தாள்.
உடலும், மனதும் எதற்கோ தான் தயாராகப் போவதை சமிஞ்ஞையிடுவதாக ஒரு எண்ணம் எழுந்தது.
இப்படியெல்லாம் தான் யோசிப்பதே அவளுக்கு ஆச்சரியம் கலந்த பயம் கொடுத்த்து. வேலை, ஊர் சுற்றல், அடுத்த பதவி, அடுத்த வாடிக்கையாளர், புலன்களால் புது புதிதாய் புலரும் மகிழ்ச்சி என ஓடிக்கொண்டிருக்கும் தான் இப்படி தான் இப்படி யோசிப்பது கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கனவுகள், வேறு சில சமிஞ்ஞைகள் என்று தான் எங்கோ இழுத்துப் போகப்படுவதாய் நினைத்தாள். நினைவுகளை கலைத்தாள்.
முயக்கம் முடிந்து இலேசான உடம்பு. அகட்டி வைத்துக்கொண்டிருந்த காலின் வழியே நுழைந்து எல்லாயிடமும் குளிர்படுத்தும் காற்று. வயிற்றிலிருந்து மறுபடி பொங்கிச் சீறிடும் ஆற்றல். கண் மூடி அதையே நோக்கிக் கொண்டிருந்தாள்.
மெல்லியதான கூச்சம் தொடையில். சின்னதாய் நடுக்கம். ஆதிகால கன்னிமையை யாரோ வருட வரப்போவது போல.. நன்றாகவும், கிளர்ச்சியாகவும் இருந்தது. நிறைய யுகங்களுக்கு முன்னான உணர்ச்சியின் எச்சமாய் அது இருந்தது. தோட்டத்தில் படுத்திருந்தது போல உணர்வு.
வயிற்றை தானே தடவிக் கொண்டாள். மேடிட்டு மெல்லிய குற்றவுணர்வை அளிக்கு வயிறு இன்று அப்படியில்லாததை உணர்ந்தாள். சூட்டினால் உடல் ஈரம் துப்பியது. அது இன்னும் சூட்டை கொடுத்தது. தயாராகும் உடல்.
கிளர்ச்சியா.. இது. ஆனால், இன்னொரு புலனால் எழுகிற கிளர்ச்சி அல்ல. இன்று மலர்கிற கிளர்ச்சி, இதுவரை அறியாத புனிதமான உடல் கிளர்ச்சி.
சேரில் சாய்ந்து மார்பை, உடையை தளர்த்திக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். இளம் வெயில் தனது உடம்பில் சகல பாகங்களிலும் பரவுவதாய் உணர்ந்தாள்.
திடீரென்று, பிரஞ்ஞையின் அடியாழத்திலிருந்து தான் அறியாத மொழியிலிருந்து சில வார்த்தைகள். சூர்யம்.. ப்ரமண்யம் பகு புத்தார.. தனக்கே புரியாத வார்த்தைகள். அதுவாக உள்ளிருந்து எழுந்து, ஆகுதியாய் வளர்ந்து, ஆகுதியில் விழுந்து. அதை மூன்றாமவள் போல தர்த்தி பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
இறுக்கமான உடலில் ஏதோ விசை அழுத்த சுருண்ட தூங்கிக் கொண்டிருந்த பாம்பு மறுபடி எழுந்தது. வாயை திறந்து உணவுக்காக உள்ளே காத்திருக்கத் தொடங்கியது.
அப்போது தான் அவன் பறந்து வந்து பால்கனிக்குள் ரதத்தில் இறங்கினான். காற்றில்லாத போதும் அலையும் முடிக்கற்றைகள். நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.
இளஞ் சூடு. இத்தனை காலம், தேங்கியிருந்த யோனியின் யுகக் கசடுகளை நொடியில் சுத்தம் செய்தான்.
யுக யுகமாய் சூரியனுக்காக காத்திருந்த அந்த யோனியின் இதழ் விரித்து அவளின் கருப்பைக்குள் தன்னிலிருந்து வழித்து எடுத்த சூரிய ஓளி கோப்பையை முழுமையாய், இளம் சூடாய் கவிழ்த்தினான். அது அவளின் அகத்தை ஆகர்சித்தது.
இதற்குத்தானா இவ்வளவும் ?
*
உறுதியாய் சொல்லிக் கொண்டாள்.
அப்போதும் நீயே நான் தேர்ந்தெடுத்த மகன். மண் தேர்ந்தெடுத்த விதை. நான் விரும்பி, நானே முடிவெடுத்து, என் ஆதி மலரலில் மலர்ந்தவன் நீ. என் முதல் மரம் நீ.
மற்றவைகளெல்லாம் என் மீது வீசப்பட்டவை தானே. நாட்டுக்காக, போருக்காக என்ற ஏதோ பெயரில் நான் கட்டாயமாக சுமக்க வைக்கப்பட்டவை.
இந்த பிறப்பில் நீயும், நானும் நமக்காக மட்டும்.
எனக்கு – நானாகவே, நான் விரும்பியபடி தாய்மை அடைந்து, முழுவதுமாய் தாய்மையின் வளர்ச்சியின் ருசி அறிந்து, புழுங்காமல், யாருக்காவுமின்றி எனக்கான கட்டற்ற வாழ்க்கை வேண்டும். பழைய கணக்கின் பள்ளங்களை நிரப்பும் ஆசைகள். கர்மாக்கள்.
உனக்கு – பிறப்பின் மூலம் தெரிந்து ஒரு முழுமையான வாழ்க்கை வேண்டும். ஒளிவட்டமின்றி, புகழ் புழுக்கமின்றி மெல்லியதாய் தாய் நதியின் பக்கத்திலே ஒடும் ஒரு கிளை நதிபோல.
வாழ்நாள் முழுவதும் நீ தேடுக்க்கொண்டிருந்தது உன் முழுமையடையா பெண்மையின் இடப்பாகத்தை தானே. ஆணின் பெண்மை தேடலின் முதலும், முடிவும் தாயில் தானே புதைந்திருக்கிறது. ஆகவே உனக்கான வாழ்க்கை, தாயோடு மட்டும் தனியாய், தனியனாய். எல்லாமே தாயாய்.
அள்ளி அள்ளி கொடுத்த நீ அழுது அழுது கேட்ட போதும் கிடைத்தது கொஞ்ச நேர மடிதானே. அம்பின் வலியோடும், அவமானமாய் பார்க்கிற கண்களை தவிர்த்தும் என் மார்போடிருந்த ஒரு சில மணித்துகள்களில் எப்படி முழு வாழ்நாளின் வலியை கரைப்பது.
இந்த தடவை இவற்றை கழித்து விடுவோம். இதிகாசத்தின் கோடிட்டு காலியான இடத்தை நிரப்புவதுதான் இந்த வாழ்க்கையின் குறிக்கோளோ என்னமோ ?
ரத்த சீழ் வடிந்த அந்த போர்களத்தில் என் மார்பில் நீ மடிந்த போது உடம்பின் ஆசைகள் உதிர்ந்த ஆன்மாவின் அலறலில் நாம் வார்த்தைகளின்றி நாம் பேசிக்கொண்டதல்லவா இது.
கேட்ட்து நீ, நான் மற்றும் கீழ் வானத்தில் மறைந்து கொண்டிருந்த உன் அப்பா.
*
நன்றாக வெளுத்த விட்ட வானம். எல்லாம் உணர்ந்து கொண்ட தெளிவான மனம். வயிற்றின் கனம். தானே உணர்ந்து கொண்ட காலச்சக்கரம்.
What is next, how to execute – யோசித்தாள் தர்த்தி.
அப்பா பெயரில்லாமல் அவதிப்படாதிருக்க ஒரு பெயர். ரவி. நல்ல பெயர் தான். ஒரு தொந்திரவு செய்யாத பெயர் வேண்டும். பொருத்தமாகவும் இருப்பதால் ஒரு சிரிப்பும் வந்தது.
தூங்கி எழுந்த ரவியைப் பார்த்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க நினைத்த தர்த்தி,
“ என் குழந்தைக்கு அப்பாவாகயிருப்பாயா.. “ என்று கேட்டாள்.
மிஸ்டர் ரமேஷ் இந்தப் ப்ராஜக்டை இந்தவாரம் எப்பிடியும் முடிச்சிருவ்விங்கன்னு நம்பறேன். இதுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணுமோ நீங்க தயங்காம கேளுங்க. ஆனால் முடிக்கணும் சரியா என்று கேட்டுவிட்டு அதில் தனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் சென்ற மேனேஜரைப் பார்த்து சரிசார் முடிச்சிடறேன் என்று கூறிவிட்டு சலிப்புடன் நாற்காலியில் வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தான் ரமேஷ்
செல்போன் அழைத்தது எடுத்து ரமேஷ் ஹியர் என்றான். உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எண்ணைப் பார்த்தான், தெரிந்த எண்ணாகத் தோன்றவில்லை , யாராவது தவறாக எண் போட்டு அவரை அழைத்திருப்பார்கள். செல்போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது தேவையானால் உபயோகியுங்கள் ,அல்லது நிராகரியுங்கள் என்று ஒரு சிணுங்கலுடன் இனிய குரலில் அறிவித்தது செல்போன் . எடுத்து செய்தியைப் படித்தான், அதில் மன்னிக்கவும் தவறுதலாக உங்கள் எண்ணைப் போட்டு உங்களை தொல்லைப் படுத்திவிட்டேன். மன்னிக்கவும் என்றிருந்தது.
அடேடே தவறுக்கு வருந்தும் மனிதர்களும் இருக்கிறார்களே என்று அதே செய்தியில் அதனால் பரவாயில்லை வருந்தவேண்டாம் என்று எழுதி செய்தியை திருப்பி அனுப்பினார். செய்தி அனுப்பப்பட்டது என்று அறிவித்தது .மீண்டும் ஒரு செய்தி மிக்க மகிழ்ச்சி ,உங்கள் இணைப்பு எண் மிகவும் மாடர்னாக இருக்கிறதே நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா? என்றிருந்தது.
மீண்டும் நான் யாரென்று தாராளமாக அறிந்து கொள்ளலாமே ,நான் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீயர் என் பெயர் ரமேஷ். காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சில் வேலை செய்கிறேன் என்று எழுதி அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்..
மீண்டும் ஒரு செய்தி ! அதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் நன்றி , நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?என்று செய்தி கேட்டது.
நான் அண்ணா நகரில் இருக்கிறேன், ,இவ்வளவு அக்கரையாக கேட்கிறீர்களே நீங்கள் யார் ,உங்கள் பெயரென்ன?
என் பெயர் ப்ரவீணா நானும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்தான். நான் அடையாறில் இருக்கிறேன்.நான் மேக்னம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன். வேலைக்கு நடுவே சற்றே ஊக்கப்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் . அடுத்தடுத்து செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன
அதனால் பரவாயில்லை, உண்மையிலேயே தலைபிய்ச்சிக்கற வேலைக்கு நடுவுலே இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் ,மகிழ்ச்சி.
அடுத்து செல்லில் அழைப்பு வந்தது . எண்ணைப் பார்த்தான் ரமேஷ், அவள்தான். மனம் சுறுசுறுப்பாயிற்று. ஹலோ என்றான் ரமேஷ்
நான்தான் ப்ரவீணா ,இப்போது தெரிந்தே சரியாகத்தான் அழைத்திருக்கிறேன் என்றாள் அவள். . ஓ மகிழ்ச்சி! உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு என்றான் ரமேஷ்
நன்றி, நீங்களும் நன்றாகத்தான் பேசுகிறீர்கள், உங்கள் குரல்லேயும் ஒரு கவர்ச்சி இருக்கு என்றாள் அவள்.
நன்றி சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறு மௌனம். மீண்டும் ப்ரவீணா கலகலவென்று சிரிப்பது கேட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லையா, எனக்கும் அதே நிலைதான். நாம் நேரில் சந்திக்கலாமா என்றாள் அவள்.
காத்திருந்ததைப் போல ஓ சந்திப்போமே இன்று சந்திக்கலாம் மாலை ஐந்து மணிக்கு, நானும் உங்களைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன் என்றான் ரமேஷ். ஹும் எங்கே சந்திக்கலாம், நான் உங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கறது ?
நான் இன்று பச்சைக் கலர் டாப்ஸும் ஜீன்ஸும் போட்டிருக்கேன்.. நீங்கள் என்ன உடை போட்டுக்கொண்டு வருவீர்கள் என்றாள் ப்ரவீணா
நான் இன்று ஆபீஸுக்கு வந்திருக்கும் உடையிலேயே வரேன். கையில் மஞ்சள் நிற வானிடி பேக் வைத்திருப்பேன். காந்தி சிலையருகே நிக்கறேன் என்றாள் ப்ரவீணா..
மாலை ஐந்து மணி காந்தி சிலை அருகே ரமேஷ் சென்ற போது ப்ரவீணா தூரத்தில் தெரிந்தாள் அவன் மனம் உற்சாகமானது.
இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக்கொண்டே பார்வையால் விழுங்கியபடி அருகருகே அமர்ந்தனர். ரமேஷ் கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுத்தான்.
ப்ரவீணா அவள் கொண்டு வந்திருந்த புத்தம் புது கீ செயினை அவனிடம் கொடுத்தாள் . இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். யுகம் யுகமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்களைப் போன்ற உணர்வு இருவருக்குமே, சூழ்நிலையே மறந்து போய் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தனர். .
திடீரென்று ஒரு கூக்குரல், முன்னபின்ன தெரியாத எவனையாவது விவரமே தெரியாம காதலிக்க வேண்டியது, அப்புறம் அவன் கைவிட்டுட்டான்னு இப்பிடிக் கடல்லே விழுந்து தற்கொலை செஞ்சிக்க வேண்டியது,
வரவர விவஸ்தையே இல்லாம போச்சு நாடு. ஒரு நாளாவது நம்மை நிம்மதியா இருக்க விடறானுங்களா இந்தக் காலத்துப் பசங்க. அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டு தாலிகட்டிக்கிட்டு அந்த்த் தாலியை மதிக்கறாங்களோ இல்லையோ நம்ம தாலியறுக்கறானுங்க.
பெத்தவங்க இப்பிடியே கவனிக்காம விட்டுட்டு அப்புறம் அய்யோ போச்சேன்னு கதர்றாங்க. கவனிக்க வேண்டிய காலத்திலே கவனிக்காம அப்புறம் வாயிலே வயித்திலே அடிச்சுகிட்டு என்னா ப்ரயோசனம் என்று முனகியபடி , 507 பொதுமக்களை தள்ளிப் போகச்சொல்லுயா கூட்டம் போடவேணாம் . அப்புறம் ஏதாவது முக்கியமான தடையம் காணாமப் போயிடும் என்றார் காவல்துரை அதிகாரி கேசவன்.
அந்த போட்டோ கிராபரை நிறைய கோணத்திலே படம் எடுக்க சொல்லுய்யா, வேன் வந்திருச்சா, போட்டோ எடுத்தப்புறம் ஏதாவது தடையம் கிடைக்குதான்னு பாரு, யாரு ,எந்து ஊருன்னு கண்டுபிடிக்கலாம் , சே என்னா பொழைப்புய்யா இந்தப் போலீஸ்காரன் உத்யோகம் ,ஒரு நாளாவது ஒழுங்கா வீட்டுக்கு சரியான நேரத்திலே போக முடியுதா?.பொண்டாட்டி புள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியுதா? என்று சலித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார் அவர்.
ப்ரவீணா ரமேஷிடம் குனிந்து ரகசியக் குரலில் இங்கே இருந்து போயிடலாம் ,அதோ அந்தப் போலீஸ்காரர் என் அப்பா என்றாள் .
மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.
அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.
என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.
“London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.
இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.
18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.
லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.
இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.
இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.
மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington) எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.
இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.
இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.
முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
வருணன்
ஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?
ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.
இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.
கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.
விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!
நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…
கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !
விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.
உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !
தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…
பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!
படத்துக்கு நன்றி
http://www.novadesk.com/go-green-with-nova/
’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.
உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!
நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..
முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம் எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.
தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.
தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக் கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.
தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ, அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?
காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.
இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!
காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
“புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”
உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!
இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.
ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.
“மக்கள்மெய்தீண்டல்உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,
என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள் சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான் நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள். அவன் கழுத்தில் துளசி மாலை
இருந்தது அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று தெரிந்து, கொண்டார்
“நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார் தியாகராசர் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
,
அவர் பாடிய பாடல்
நாஜீவாதா ர நாநோமு ப லமா
ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி
நா சூபு ப்ரகாசமா
நா நாஸிகா பரிமளமா
நா ஜபவர்ண ரூபமா
நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத
இதன் பொருள்
என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே
நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே நான் என்னுடைய சுவாசத்தினால் உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன் நான் ஜபிக்கும் அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே , என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..
பாகவதத்தில் துருவசரித்திரத்தில் துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன் ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்
” எவர் என்னுள் பிரவேசித்து தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால் காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்
இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே“என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம் சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
பத்தாவது அத்தியாயம் 20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்
அவருடைய பாடலிலும் “நா ஜீவோ தாரா” என்பது இதைக்குறிக்கிறது என நினைக்கிறேன்
அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்ற பொருள் பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை …… “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே !
காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.
சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.
சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.
அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.
*****************************
அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
[bws_captcha]
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
[bws_captcha]
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
[bws_captcha]
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
[bws_captcha]
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
[bws_captcha]
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
Picture from Gandhi Movie with Ben Kingsley as Gandhi
+++++++++++++++++
Mohandas Gandhi
Timeline
October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi
1883: Gandhi and Kasturbai are married.
1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father
September 4, 1888: Gandhi leaves for England to study law.
June 10, 1891: Gandhi passes the bar exam in England.
1891-1893: Gandhi fails as a lawyer in India.
April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.
Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.
Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.
December 1896: Gandhi returns to South Africa with his family.
October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.
1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.
1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.
1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”
July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”
January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.
October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.
1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.
November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.
June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.
July 18, 1914: Gandhi sails to England.
August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).
January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.
May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.
April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.
April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.
August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.
March 10, 1922: Gandhi is arrested for sedition.
March 1922-January 1924: Gandhi remains in prison.
1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.
1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.
February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.
January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.
March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.
March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.
May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.
January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).
Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.
December 28, 1931: Gandhi returns to India.
January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.
September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.
1934-38: Gandhi avoids politics, travels in rural India.
1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.
September 1939: World War II begins, lasting until 1945.
March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.
August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.
August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.
February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.
February 22, 1944: Death of Kasturbai
May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.
Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.
May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.
March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.
August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.
August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.
January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.
அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.
மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.
எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை. வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!
சார்! இனி மேல் எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.
இன்னம்பூரான்
29 01 2013
பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.
அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார். நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு, பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
துர்கை:
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது. துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன், இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
திரிபுரசுந்தரி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த குணத்தை உடைய தெய்வமாகச் சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
காளி/சாமுண்டி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப் பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும் இருந்திருக்கக் கூடும். இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம் மையைப் போன்ற கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும், எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**
** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம். இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
(தொடரும்)
[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
ஒவ்வொரு நாளும் நான் வீட்டை பூட்டி விட்டு தெருவைக் கடந்து வேலைக்குப் போவதற்குள் இன்று யாரையெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் என் இதயத்தைப் பிடுங்கித் தின்னும். தெரிந்தவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைப் புதிதாகப் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நாலு கால் பிராணியைப் பார்ப்பது போலவும் ,என்னை ஒரு பாவி போலப் பாவமாகக் கொத்தும் பார்வையை என் மீது வீசும் போது மட்டும் தான் எனக்கு, நாற்பது வயதாகியும் நாலடிக்கு மேலே வளராமல் நின்று விட்ட விஷயம் ஞாபகத்துக்கு வந்து உலுக்கி எடுக்கும்.
இத்தனை பெரிய உலகத்தில் நான் மட்டும் என்னமோ “ஆண்டவா… என்னைக் கட்டையாக் குட்டையா இப்படி படைத்து விடேன்” என்று ஆர்டர் கொடுத்துப் பிறந்தவன் மாதிரி வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்..எனக்குள்ளும் ஒரு மனிதன் இருப்பான் என்பதை மட்டும் யாருமே உணர மாட்டேங்கறாளே ….என்ற மன உளைச்சலும் அதனால் உண்டாகும் வலியும் துயரமும் நாளைக்கு ஒருதரமாவது என்னை வருத்துவது எனக்கு வாடிக்கை தான்.
வீட்டைப் பூட்டும் நிலைக் கதவு கூட என்னை விட இரண்டுமடங்கு உயரம். என்று எனது குட்டைக் கையால் என் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டே…படியிறங்கி தெருவைக் கடக்கிறேன். அங்கிருந்து வந்த ஒரு பசு மாடு…..என்னை ஒரு பார்வை பார்த்த பிரம்மை எனக்குள்..ஒரு நிமிடம் ஒதுங்கி நிற்கிறேன். அதோடு சேர்ந்து நானும் சென்றால்…எங்கே…யாராவது சின்னப் பசங்க…”அம்மா…பசு மாடு மனிதக் கன்னுக்குட்டியோட போகுதுன்னு” வதந்தியை கிளப்பி விட்டுடுவாங்க.
ரோட்டின் ஓரமாகக் கிளம்பி, ஓரமாகவே நடந்து போகும்போது வழக்கம் போலவே மனசுக்குள் “விஷ்ணு சஹஸ்ரநாமம்” சொல்லிக் கொண்டே போகிறேன். கண்கள் மட்டும் அங்கங்கே உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தைப் பார்த்து “ச்சே…இப்படி ஒரு மனுஷப் ஜென்மம் எடுத்ததுக்குப் பதிலா ஒரு வீட்டில் தென்னம்பிள்ளையாய் கூட நின்றிருக்கலாம்..” என்ற எண்ணத்தோடு அலுவலகம் நுழைகிறேன்.
என் உயரத்தை கணக்கு வைத்தே நான் உலகத்தை அளந்து வைத்தேன். உலகம் என்னை சின்னதாக மாற்றிப் பார்க்கிறது நானும் அதை கோலிக் குண்டாக ஆக்கி என் சட்டைப் பையில் போட்டு வைக்கிறேன். என் வீடும் எனக்குச் சோறு போடும் என் அலுவலகமும் தான் என் உலகம், என் கோயில். இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை…நடந்து போகும் தூரம் தான். ஓரமாக நடந்து திரும்பினால் அலுவலகம். என்னைப் பொருத்தவரையில் இவ்வளவு தான் உலகமே இவ்வளவு தான்..! அதனால் எனக்கு உலகில் ஓடும் ரயில், பஸ், கார், ஸ்கூட்டர் ..ஏன் ஒரு சைக்கிள் கூட என்னைப் பாதிக்காது. யோசித்துக் கொண்டே உருளுகிறேன்.
இன்னும் பத்து நிமிஷத்துக்குள் ஆபீசுக்குப் போனால் தான் லிஃப்டில் இரண்டாவது மாடிக்குப் போகலாம்..இல்லையென்றால் பவர்கட் ஆகி லிஃப்டும் வேலை செய்யாது…மேலே போக மாடிப் படியில் தான் ஏறியாக வேண்டும். அதான் நடக்காமல் காலில் சக்கரம் கட்டி உருள வேண்டியாதாச்சு.
டேய்…நம்ப ..நாலடியார் இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு போலிருக்கே..? சீட்டுக்கு அடியில் காணோமே…. என்று டைபிஸ்ட் ஷீலா பியூனிடம் கிண்டலாகக் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அவள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் உள்ளே நுழையவும்…..அவள் முகம் பேயறைந்தது போல வெளுத்தது.
அவளது நெடு நெடுவென்ற உயரம்..எப்போதாவது என் மேஜை அருகே கடிதத்தில் கையெழுத்து வாங்க நிற்கும் அவளை சில நொடிகள் என் முகம் அண்ணாந்து பார்க்கும். அவளுக்குள் பெருமை பொங்கும்…என் சிறு உருவம் பார்த்து. ஒருவேளை அந்தப் பெருமையில் எனக்கு இப்படி “நாலடியர்” என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கலாம். நான் நாலடி கூட உயரமில்லை…வெறும் மூணரை அடி தான்…என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
எனக்கு அவள் அப்படி அழைத்ததில் கவலையில்லை என்பதைத் தெரியப் படுத்துவது போல..” சரியாகத் தான் எனக்கு நீ பெயர் வெச்சிருக்கே” என்று சொல்லிக் கொண்டே எனது டேபிள் அருகில் சென்று நிற்கிறேன். டேபிள் லேசாகத் தலையில் இடித்தது.
தலையைத் லேசாகத் தடவிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, சார்… மன்னிச்சுக்கோங்க. இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்..என்றவள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள் .
எனது டேபிளில் நிறைந்த வேலைகள் என்னை ஆக்ரமித்துக் கொள்ள, வேலையில் கண்களும் கைகளும் கவனமாக இருந்தாலும் மனதுள் கவனச் சிதறல் இருக்கத் தான் செய்தது..
கணினியில் “டேலி “யைத் திறந்து லெட்ஜர் போஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். மனசு உணர்வைப் போஸ்டிங் செய்து கொண்டிருந்தது.நான் கணிணியை எப்படி உபயோகப் படுத்தறேன்னு வேடிக்கை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் எட்டிப் பார்க்கும். அவர்களுக்கு இந்த வேடிக்கை ஒரு வாடிக்கை தான்.எனக்கும் பழகிப் போச்சு.
என் அம்மா எனக்கு எவ்வளவு ஆசையாசையாய் “ராஜ ராஜன் “ன்னு பெயர் வைத்து, பத்து வயசு வரைக்கும் கூட ராஜா…ராஜா ன்னு கூப்பிட்டது இன்னும் என் காதில் விழுந்துண்டு தான் இருக்கு. அந்த ராஜா மெல்ல மெல்ல குட்டிக் கூஜா போல ஆனதும் பெற்றவர்களுக்கே மகன் என்று சொல்ல மனமில்லாத நிலை வந்ததும் தான் எனக்குள் ஓர் ஏமாற்றம்.
திடீரென ஒரு நாள் அம்மா , நான் தூங்கி விட்டதாக நினைச்சுண்டு அப்பாவிடம் அழுதபடி பேசிய வார்த்தைகளும் கூடவே அப்பப்போ காதைத் துளைத்துக் கொண்டு கேட்கும்..
“என்னன்னா…நம்ம ராஜா….கையும் காலும் வளராமல்…இப்படிக் குட்டை குட்டையாய் இருக்கே..பத்து வயசுக்கான வளர்த்தியே தெரியலையே…அக்கம் பக்கத்தில் எல்லாம் கேக்கறா….என்ன மாமி உங்காத்து ராஜாவுக்கு அம்பது வயசானாலும் அஞ்சு வயசு தான்னு சொல்லிண்டு நீங்க பஸ்சுலயும், டிரெயினிலும் டிக்கெட் வாங்காமலே ஊருக்கெல்லாம் அழைச்சிட்டு போயிட்டு வரலாம்..போலிருக்கே ன்னு கேலி பண்றச்ச…மனசுக்குள்ள ஒரு பயம் வந்துடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேனோ..தெரியலையே…..பகவான் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறார்?
நம்ம குடும்பத்திலயே யாருமே இப்படி இதுவரைக்கும் வளராமல் இல்லையே . இவன் மட்டும் எப்படி இந்த மாதிரி வந்து பொறந்தான்.இப்படி குள்ள மனிதனா இருக்கும் இவனை நான் எப்படி வளர்க்கப் போறேன்.யார் செஞ்ச பாவமோ பகவானே.. இப்போ அடுத்தது வேற உண்டாயிருக்கேன். அதுவும் இப்படியே வந்து பொறந்தால் நாம என்னத்துக்காவோம்…? நான் எந்த ரிஸ்க்கும் இனிமேல் எடுக்க மாட்டேன். எனக்கு இனி அம்மிக் குழவிக் குழந்தையே வேண்டாம்.
இந்த ராஜா ஒருத்தனே போதும்..அவனை சாதாரண மனுஷனாப் பண்ண நாம என்ன செய்யணும்…? நாளைக்கு அவனை ஒரு நல்ல டாக்டரிடம் அழைச்சுண்டு போய் காட்டலாம். இதுக்கெல்லாம் மருந்து இருக்கா…?.என்று கேவிக் கேவி அழுதாள்.
அதன் பிறகு நடந்தது எதுவும் எனக்குள் நினைவில் இல்லை.
மிகவும் ஆசையோடு என்னைத் தூக்கி கொண்ட மாமா, அத்தை . பெரியம்மா, சித்தி , பாட்டி என்று அனைத்து உறவுகளும் தூரம் விலகிப் போனது. அதையும் தாண்டி…” ஏண்டி…பங்கஜம், நம்ம வம்சத்தில் இப்படி ஒரு கொழந்தை கிடையாதுடி..இதெல்லாம் வளரக்கறது நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டம்.. பேசாமல் எங்காவது சர்க்கஸில் கொண்டு போய் விட்டுட்டு. அவாளே ஏதாவது படிக்கவும் வைப்பா. ‘ஜோக்கரா’ நிறைய சர்க்கஸ் கத்துக் கொடுத்து கூடவே வெச்சுப்பா . உங்களுக்கும் பணம் தருவா. புத்திசாலித் தனமா இதை நீங்கள் ரெண்டு பேரும் யோசித்து செய்தால் பிழைச்சுப்பேள். இல்லாட்டா ரொம்ப கஷ்டம்..
நன்னா உசரமா இருக்கறவாளுக்கே சமயத்துல இந்தக் காலத்துல வேலை, கல்யாணம்னு எதுவுமே நடக்க மாட்டேங்கறது. இவன் இனிமேல் தான் பெரிய கிளாஸ் போகப் போக இவனால ஆத்துக்கு பிரச்சனையைத் தான் கொண்டு வருவான். நான் சொல்லறதை சொல்லிட்டேன்…மகளே இனி உன் சமத்து… என்று பாட்டி கொஞ்சம் கூட மனசில் ஈரமில்லாமல் அம்மாவுக்கு ஐடியா கொடுத்து விட்டுப் போனவள்..தான். அதன் பின் நானும் பாட்டியைப் பார்க்கேவே இல்லை.
அதற்குள் அக்கம் பக்கத்திலும் சரி, படிக்கும் பள்ளியிலும் சரி,எனது ராஜ ராஜன் என்கிற பெயர் மறைந்தே போனது. அடேய்…குள்ளா ..! டேய் குட்டையா..! டேய்..வள்ளுவன் வாக்கு..! டேய் திருக்குறளு..! ஒழக்கு, அரைக்கால் படி, அம்மிக் கல்லு, ஆட்டுக் குட்டி, அகத்தியர் அவதாரம்.. ! டேய்…குள்ள வாத்து..! என்று அவரவர்கள் எனக்கு ஒரு புதுப் பெயர் வைத்து அழைத்து சந்தோஷப் படுவார்கள். அட அட அட….இப்படிக் கூப்பிட்டு என்னை அழைக்கும் போது தான் அவர்களுக்கு மனதில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும். எல்லாருக்கும் சிரிப்பை வர வழைக்கும் போதே, என் மனம் அழுமே என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாரா என்ன? அப்பேர்பட்ட பிறவி நானா…? அவாளா?
இன்னும் சிலர் டேய் ஜோக்கர்…வராண்டா..என்று கேலி செய்து அவர்கள் நேற்று சர்க்கஸ் சென்ற விபரத்தை சொல்லும்போது…டேய்…அங்க உன்ன மாதிரி நாலு அஞ்சு பஃபூன்டா….நீ பெரிசானால் அங்க தாண்டா உனக்கு வேலை கிடைக்கும். என்று அனாவசியமாகப் பாட்டியை நினைவு படுத்துவார்கள்.
அதற்குள் இன்னொருத்தன், அதுக்கு ஏண்டா பெரிசாகணும்…இப்பவே போனாலும் வேலை நிச்சயம்..நம்ம கிளாஸ் ‘கமலஹாசன்’ டா இவன்….என்று சிரிப்பான்.
ஓங்கி ஒரு கல்லை எடுத்து அவா மண்டையில் வீசினால் தேவலாம் போலிருக்கும் எனக்கு. அன்பாய் பேசாட்டாலும் வேண்டாம்….பரிகாசம் செய்யாமலாவது இருக்கலாம். ஆனால் அது யாருக்குப் புரிகிறது.?
ஒருவேளை அப்படித் தான் இருக்குமோ? என்னை அம்மா இப்ப வரைக்கும் அன்பாத் தான் பார்த்துக்கறா…ஆனாலும் சமயத்தில் தானும் அழுது என்னையும் அழ வைப்பாள். அதையும் மீறி ஆத்திரத்தில் முதுகில் ‘தபேலா’ வாசிப்பாள். நீ இப்படி வந்து பொறக்கலைன்னு யாரு அழுதா..? யாரு கொடுத்த சாபமோ….ன்னு ஒப்பாரி வைப்பாள். ஒழிஞ்சு போ…ன்னு கடைசியா தனது ஆற்றாமையை என் மீது திராவகமாய் வார்த்தையில் கொட்டி என் சின்ன உடம்பை எரிப்பாள்.
பெத்தவளுக்கே சில நேரங்களில் எரிச்சலைத் தரும் நான் மற்ற யாரிடம் அனுசரணையை எப்படி எதிர்பார்ப்பது? எனக்குள் நானே சமாதானமாகிப் போவேன்.
அடுத்து சில மாதங்களிலேயே அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு அம்மாவையும் என்னையும் விட்டு விட்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டார். அதுக்கு ஒரு விதத்தில் நானும் என் உயரமும் தான் காரணமாக இருக்கும். அதான் அப்பா என்னோடு முகம் தாழ்த்தியே பேச மாட்டாரே.
“இவன் தான் சிகப்பா, மூஞ்சி மொகரை எல்லாம் நன்னாத் தானே பிறந்து தொலைச்சிருக்கான்…சர்க்கஸ் வேண்டாம்னா எங்காவது சினிமாக் கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்…” நீ தான் என் மகன் ராஜான்னு சொல்லி வெச்சுண்டு இருக்கே. இந்த உலகத்துல இது மாதிரி பொறந்தா அவாள்ளாம் அங்க தான் போய் இருக்கா..தெரியுமா? என்னமோ நீ தான் ஓவியக் குழந்தையைப் பெத்துட்டா மாதிரி…ஆர்ப்பாட்டம் பண்ணாதே….அப்பாவின் இந்த வார்த்தைக்கு அம்மா அடிபணியாமல் போனது தான் அவர் எங்களை விட்டுட்டு போய்விட்டார்.
அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன்… அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிஞ்சு போயிட்டாளே….என்னோட துரதிர்ஷ்டத்தை நினைச்சு நினச்சு என் மனசும் உடல்போலக் குறுகிப் போச்சு.
பள்ளியில் ஒரு நாள் இதையே நினைச்சுண்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்திருந்தேன். கூடப் படிக்கும் ரேணுகா தான் அருகில் வந்து ” ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்.?..பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டியா என்ன..?
இல்லை…நான் அதுக்கு அழலை..
பின்ன ஏன் அழறே ராஜா..!
எனக்குச் சிரிக்கத் தெரியலையே… சிரிக்க முடியலையே என்ன செய்வேன் ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லாரும் சிரிக்கறா என்னால் சிரிக்க வைக்க மட்டும் தான் முடிகிறது.
வீட்டில் தான் என் மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா..இங்க கிளாஸ்ல கூட என்னைப் பார்த்தாலே எல்லாரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டுப் வீட்டை விட்டே வெளில எங்கியோ போயிட்டா . இப்போ நான் வாழறதே வீண்.
இன்னைக்கு சையன்ஸ் பீரியடில் பசங்க “இவன் தான் ஹுயூமன் ஹைப்ரீட் ” அல்லது மனித போன்சாய்…ன்னு சொல்லிச் சிரிச்சப்போ… அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாம்னு தோன்றது ரேணுகா…அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமாப் பார்க்கறவா கூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.
என்ன ராஜா நீ..?அசட்டு பிசட்டுன்னு பேசாதே.பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்னு என்
அம்மா சொல்வா..ஆனாலும் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்புதும் இல்லையாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும்… .ன்னு கேள்வி பட்டிருக்கே தானே…? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி , கபடா , கடப்பாறையை பல் குத்த உபயோகிப்பாரா ? நீயே நினைச்சுப் பாரேன். அது மாதிரி தான் நீயும்…உன்னாலயும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்..உயிர் வாழ உயரம் மட்டுமேத் தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ.
நீ பேசும்போது கேட்க நன்னாத் தான் இருக்கு….நீ மட்டும் என் மேலே இருக்கும் அன்பில் என் குறை தெரியாமல் பேசறே ரேணுகா.
உனக்கு என்ன குறை..?.உயரம் மட்டும் தானே..? அதெல்லாம் ஒரு குறையே இல்லை. உன்னையாச்சும் எல்லாரும் குள்ளன்னு மட்டும் தான் சொல்றா. ஆனா இந்த உலகத்தில் எத்தனை பேர் எப்படி எல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடவும் கொடுமை என்னவாயிருக்கும்னு நினைக்கறே…நீ?
போன வாரம் என் அம்மாவோடஎன் மாமாவாத்துக்குப் போயிட்டு ரயில்ல திரும்பி வந்துண்டு இருந்தோம் ….அப்போ எங்க கம்பார்ட்மெண்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க..அவங்க திருநங்கையாம். அப்படி இருக்கறவங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்களாம். அவர்கள் இப்படித் தான் கூட்டம் கூட்டமாக கை தட்டி எல்லார்கிட்டயும் கை ஏந்தி ஜீவனம் நடத்துவார்களாம் எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னை பெண் என்று சொல்ல முடியாத நிலை..ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இதை விட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாயைத் திறந்து சொல்லிடறே… .பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா? யோசிச்சியா?
நம்ம இங்கிலிஷ் டீச்சர் கூட அன்னிக்கு சொன்னாளே..”காலில் செருப்பு இல்லை யேன்னு கவலைப் படுபவன்…ரெண்டு காலே இல்லாதவனைப் பார்க்கும் வரையில் தான் அப்படிக் கவலைப் பட முடியும்னு. நீயும் சொன்னதைக் கேட்டேல்ல.
எனக்குள் எதுவோ புரிந்தது போல இருந்தது. ரேணுகா…நீ சொல்றது ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப் பற்றி இவர்கள் ஏன் இங்கு யாருமே புரிந்து கொள்வதில்லை. எனக்கு நேர்ந்த இந்த ஒரு சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமென்றாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டுமா விதிச்ச விதியா என்ன .?
ராஜா..அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும் தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும். அதுவே நீ படித்து ஒரு நிலைக்கு உன்னை உயர்த்திக் கொண்டால் அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையேத் தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா…நீ வேணாப் பாரேன்..என்னிக்காச்சும் நீ நான் சொன்னதை நினைச்சுப் பார்க்கும் காலம் வரும்..!
அதற்குள் பள்ளிக் கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது நினைவுக்குள் இருக்கு.
ரேணுகா அன்று எனது பதினைந்து வயதில் என் சின்ன மனதில் அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதை தான்…இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்கே ஒரு முகமூடி போட்டுக் கொண்டு கூடாரத்துக்குள் சுத்திலும் எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க நான் ஓரமாக பல்டி அடித்துக் கொண்டு பந்து விளையாடிக் கொண்டு தொப்பியைத் தூக்கி எரிந்து கொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கார்.
ஆனால் ஷீலா மாதிரியானவர் கண்களுக்கு அந்த நாலடியார் உயரம் உருவமாக மட்டும் தான் தெரிவார் போலிருக்கு.
மனசுக்குள் பழைய நினைவுகள் அலைமோத , வேலைகள் முழுவதும் அசுர வேகத்தில் முடித்து விட்டு “அப்பாடா என்று நிமிரும்போது “
தயக்கத்துடன் டைபிஸ்ட் ஷீலா வந்து அருகில் நிற்கிறாள்.
சார். உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.
சொல்லும்மா..என்ன விஷயம்.?…இந்த நாலடியார்ட்ட..! சிரித்தபடியே கேட்கிறேன். அந்த டிபார்ட்மெண்டுக்கு நான் தான் ‘ஹெட்.’. அதுவே அனைவருக்கும் ஜோக்கு மாதிரி இருக்கும்.
இந்த டிபார்ட்மென்ட் ஹெட் இவர் தான்…இருந்தாலும் இவர் தலை டேபிளுக்கு மேலே தெரியாது..என்று கேலி பேசுவார்கள்.
ராஜன் சார்..தப்பா எடுத்துக்காதீங்க..சொலணும்னு நினைக்கறேன்…சொல்ல முடியலை. ரொம்பத் தயக்கமா இருக்கு.எனக்கு செய்யும் உதவியாக நீங்க…! நீங்க…! ஷீலா தடுமாறுகிறாள்.
ம்…சொல்லும்மா..இவ்ளோ தயக்கம் ஏன் உங்களுக்கு..? என்னால் முடிஞ்சதைச் செய்வேன். முடிஞ்சால் செய்வேன்…என்ற என்னைப் பார்த்தவள் , ஏதோ குழப்பத்துடன்….
இல்ல..இல்ல…இப்ப வேண்டாம்…..எனக்கு சொல்லத் தயக்கமா இருக்கு. நான் எழுதி கொண்டு வரேன்..ப்ளீஸ்…சாரி..சொன்னவள் அன்று பர்மிஷன் கேட்டு விட்டு சீக்கிரமே வீட்டுக்கு சென்று விட்டாள் .
ஒரு வேளை என் முகத்தைப் பார்த்து பயந்திருப்பாளோ ?
“அஸ் யு விஷ் ” ன்னு வாய் சொன்னாலும்..மனசு என்னாச்சு இவங்களுக்கு….? என்று என் கேள்வியும் ஷீலாவின் பின்னாலயே போனது. இப்போ தானே இவங்களுக்குக் ரொம்ப விமரிசையா கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகப் போகிறது.
அன்று ஆபீசில் எல்லாரும் ஷீலாவின் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து சாப்பாட்டுப் புராணம் பாடிக் கொண்டிருந்தார்கள் .
ராஜன் சார்….எல்லாரும் வந்தார்கள் நீங்கள் மட்டும் தான் ஆப்சென்ட்…! வந்திருக்கலாம்…என்றான் ஆபீஸ் பியூன்..ஆண்டியப்பன்
நான் எந்த விசேஷத்துக்கும் போறதில்லைப்பா . கூட்டத்தில் நான் என்னையே தொலைத்து விடுவேன்..என்று சிரித்தேன்.
ஆமாம்…எனக்கு இறைவன் போட்ட பாதுகாப்புக் கவசம் தான் என் உயரம்ன்னு நினைக்கறேன். அதனால் தான் நான் அதுக்குள்ளே மட்டும் இருக்க விரும்பறேன். எனக்கு அதில் வருத்தமோ , வேதனையோ துளியும் கிடையாது. என்ன ஒண்ணு …அப்பப்போ ஏதாவது குழந்தைகளுக்கும் சில சமயம் ஒரு பெரிய விளையாட்டு பொம்மை மாதிரி தெரிகிறேன்….அதிலும் பெருமை தான் எனக்கு. சில குழந்தைகள் பள்ளிக்கு ஆட்டோவில் போகும்போது…என்னைப் பார்த்து ஹேய்…’இதோடா…ரோபோ’ ன்னு கத்தி சொல்லும் போது …எங்கே…? எங்கே…?..என்று மற்ற குழைந்தைகள் ஆர்வத்தோடு பார்க்கும் போது .போனால் போகட்டும்ன்னு …நானும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்து கொண்டு..ரோபோ மாதிரியே கையைக் காலை நீட்டிக் காண்பித்து உற்சாகமூட்டுவேன்.
ஆனால்…!
மல்லிகைப் பூவோட வீட்டுக்குள் நுழையும் என்னை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் நமுட்டுச் சிரிப்புடன் சிரித்தபடி உள்ளே நுழைவதைப் பார்த்ததும் என் முதுகின் கண்களும் பனித்து விட்டது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்…நீ கவலைப் படாதே…ராஜா…மனம் முதுகைத் தட்டிக் கொடுத்தது.
கை கால்களை அலம்பும் போது…தண்ணீர் தட்டுப் பாட்டுக்கு இது தேவலை என்று சொல்லிக் கொண்டேன். மற்றபடி எல்லாரும் செய்யும் வேலைகளைத் தான் நானும் செய்கிறேன்.
சூடாக காப்பி போட்டுக் கொண்டு வந்து அப்படியே டிவி யைப் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்தது தான் தாமதம்.
“பழைய இரும்பு, ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” பழைய இரும்பு , ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” என்று ஒரு ஓட்டை சைக்கிளை உருட்டிக் கொண்டு கவுண்டமணியின் ஓட்டைக் காரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த குள்ளமணியை கவுண்டமணி உதைத்து அனுப்பும் காட்சி….” ஆதித்யா சானலில் கத்திக் கொண்டிருந்தது… எனக்குள் எரிச்சலைத் தந்தது.
ஏதோ…குள்ளமாகப் பிறந்து விட்டால் பிறருக்கு சிரிப்பதற்காகவே இறைவன் கொடுத்த பிறவி போல எங்கள் படைப்பை மாற்றிப் பார்க்கும் இந்த சமூகம். இதற்க்கெல்லாம் எப்போது விடிவு வருமோ? மற்ற உடல் ஊனங்களை உள்ளவர்கள் மீது கருணை காட்டும் இந்த சமூகம், குள்ளமாய் இருக்கும் என்மீது மட்டும் வெறுப்பைக் காட்டி வேதனை தருகிறது !
நல்லவேளையா அன்று ரேணுகா என்ற அந்தப் பெண் தேவதை சமயத்தில் கொடுத்த ஒரு ஊக்கத்தால் நான் என்னையே மனதளவில் உயரமாக ஆக்கிக் கொள்ள படிக்க ஆரம்பித்தேன். குறிக்கோளே வெறியாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பலன் தானே எனக்கென ஒரு அரசாங்க நாற்காலியைக் கொடுத்து சம்பளமும் கொடுத்தது. பின்ன ஊரெல்லாம் கேலி பேசும் ஒரு குள்ளன் அத்தனை அவமானத்தையும் தாங்கி படித்து அரசு உத்தியோகம் கிடைப்பது என்பது சும்மாவா? இல்லாவிட்டால் இந்த உயரமான மனிதர்களின் உதாசீனத்தில் என் மனசு தினமும் பூமிக்குள் புதைக்கப் பட்டு மனசும் குள்ளமாகி இருக்கும்.
பாவம் இந்தக் குள்ளமணி….அந்தக் காலத்திலிருந்து யாராவது ஒருத்தர் உதைப்பது போலவே காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். நினைத்தபடியே டிவி யை அணைத்து விட்டுக் கிளம்பினேன்.
மல்லிகைப் பூவை முருகன் படத்துக்கு போட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்டது.
யாராயிருக்கும்? கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறேன்.
பால்காரப் பையன்…தியாகு . வாசலில் அவனை அண்ணாந்து பார்க்கிறேன்.
என்னப்பா தியாகு வேணும்? சொல்லுப்பா..என்றேன்.
அண்ணா….போன தடவை நீங்கள் தான் எனக்கு டெர்ம் ஃபீஸ் கட்டினேள் . நான் இந்த தடவையும் உங்களைக் கேட்கலாம்னு வந்திருக்கேன். அதான் அம்மா உங்களைப் பார்த்து கேட்கச் சொன்னாள். அவன் குரலில் தயக்கம்.
கண்டிப்பாத் தரேன்…எவ்வளவு வேணும்..?
ஆறாயிரம் ரூபாய்….பணிவோடு சொல்கிறான் தியாகு.
எனக்கென்ன கல்யாணமா…பிள்ளை குட்டியா..? இல்லை உடன் பிறந்தவா தான் இருக்காளா? நான் தனிக்கட்டை பிரமச்சாரி…என் பணம் உன் படிப்புக்கு உதவினால் அதுவே நேக்குப் போறும் . வருஷா வருஷம் வந்து வாங்கிக்கோ.
இந்தா செக் . பணத்தை பாங்கில் வாங்கி ஃபீஸ் கட்டிட்டு சொல்லு..அப்படியே இந்தா என்னோட ஷர்ட் நாலு தரேன்…உன் தம்பிக்கு கொண்டு போய்க் கொடு….எல்லாம் புதுசு தான் என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருகிறேன்.
அண்ணா….இப்போ என் தம்பி கூட நன்னா உயரமா வளர்ந்துட்டான். அவனுக்குப் பத்தாது… அதனால ஷர்டெல்லாம் வேண்டாம்…என்று சொல்லிவிட்டு செக்கை மட்டும் வாங்கிக் கொள்கிறான் அவன்.
முகத்தில் அரை விழாத குறையாக சட்டையைக் கசக்கித் தூர எறிந்தேன். என்னோட சட்டைகள் கூட யாருக்கும் உபயோகப் படாதா? போனால் போகட்டும் போடா….! மனசு தைரியம் சொன்னது.
வழக்கம் போல பவர்கட்டுக்கு முன்பே லிஃப்டைப் பிடித்து என் சீட்டில் போய் அமர்ந்ததும் …ஷீலா கூடவே ஒரு ஏழு வயது பெண்ணோடு உள்ளே நுழைகிறாள் .
குட் மார்னிங் சார்..இது என்னோட நாத்தனாரின் பெண். இன்னைக்கு ஸ்கூல் லீவு..நானும் வரேன்னு சொன்னாள் . அழைச்சுண்டு வந்தேன். என்றவள்..நேற்று கேட்க வேண்டும் என்று நினைத்ததை இதில் எழுதி இருக்கிறேன். என்று ஒரு பேப்பரை என் டேபிள் மீது வைத்து விட்டு நகர்ந்தாள் .
அவள் நகர்ந்ததும்….நான்காக மடித்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்கிறேன். அதில்.
” சாதாரணமாக நாம் யாரை அதிக நேரம் நேருக்கு நேர் பார்க்கிறோமோ, பழகுகிறோமோ அவர்களைப் போலவே நம் மனோபாவம் மாறும் என்றும்…குறிப்பாக ஒரு தாயாகப் போகிறவள் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதற்கு ஏற்றார்போல படங்களைப் பார்த்து வரச் சொல்வார்கள்..இப்போது எனக்கு இது மூன்றாவது மாதம் நடக்கிறது.நான் நாள் பூராவும் என் எதிரில் இருக்கும் உங்களைத் தான் பார்த்து வருகிறேன். அதனால் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை உங்களைப் போன்ற உருவத்துடன் பிறந்து விடக் கூடாது என்று எண்ணுகிறேன்.தயவு செய்து என்னை கீழ் தளத்துக்கு மாற்றி விடுங்கள். தவறாக நினைக்க வேண்டாம். இது என் தனிப்பட்ட வேண்டுகோள்.
இதைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்..” புரிந்து கொண்டு ஆவன செய்வீர்கள்…என்று நம்புகிறேன்.
ஷீலா சந்திரன்.
அவள் எழுதி இருந்ததைப் படித்து முடித்தேன்.
சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தை சொல்லியிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவள் சொல்வது போல என் அம்மாவுக்கும் இப்படி ஏதாவது நிகழ்வுகள் நடந்திருக்கலாமோ..? என்று கூட எண்ணத் தோன்றியது. ஷீலா புத்திசாலிப் பெண்…மனசுக்குல அவளைப் பாராட்டிய படியே…அவளைக் கீழ் தளத்திற்கு மாற்ற உத்தரவு பண்ணி ஆர்டர் அடித்து கையில் கொடுத்தேன்.
அவள் கண்களில் நன்றியும் கண்ணீர்த்துளியும் சேர்ந்து நின்று கண்ணை மறைத்தது. என் கண்களில் பெருமை பொங்கியது. “ரொம்ப சந்தோஷம் ஷீலா….நல்ல வேளை சொன்னீர்கள்….இல்லாவிட்டால் இதெல்லாம் என் சின்ன மண்டைக்குள் எப்படி உரைக்கும்…? என்று சொன்னதும் அவள் ரொம்ப நன்றி சார் என்று தழு தழுத்தாள் . பின்பு தன்னுடைய ஹாண்ட் பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு..சில பைல்களையும் எடுத்துக் கொண்டு கூட வந்த நாத்தனார் மகளையும் அழைத்துக் கொண்டு “அப்போ வரேன் சார்…பார்க்கலாம்..” என்று சொல்லி கீழ் தளத்துக்குக் கிளம்பி விட்டாள்.
இந்தா…கொழந்தே…உன் பேர் என்னம்மா..? இந்தா சாக்லேட்டு….எடுத்துக்கோ என்று கொடுத்ததும் .
சிறிது தயங்கினாலும்…ஓடி வந்து வாங்கிக் கொண்டு சிரித்து விட்டு ஷீலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் .
அடுத்த அரை மணி நேரத்தில்….பவர் கட்டாகி ஆபீசே இருட்டில் சிக்கிக் கொண்டது.இன்னும் இரண்டு வாரத்தில் ஜெனரேட்டர் வைப்பதாக ஹெட் ஆஃபீஸில் இருந்து தகவல் வந்தது. அது வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் கீழிருந்து அழுகை சத்தமும், எதிரொலியும் தொடர்ந்து கேட்டது. யார்? என்ன ? எது? என்று ஆயிரம் கேள்விகள்.எனக்கு முன்னால் ஓட….நானும் விறு விறுவென்று மாடிப் படியைக் கடந்து தாவி குதித்து இறங்கவும்….ஷீலா பயத்தில் உறைந்து போய் லிஃப்ட்டின் அருகே நின்றிருந்தாள் …அருகில் இருந்த அனைவரும் என்னவோ போல பர பரத்துக் கொண்டிருந்தார்கள்.
நிலைமையை உடனே புரிந்து கொண்டேன் நான். யாரும் கூட்டம் போடாதீங்க…கொஞ்சம் விலகுங்க..என்று சொல்லிக் கொண்டே நான் நுழைந்தேன்…என் உயரத்துக்கு அந்த லிஃப்ட் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது எப்படியாச்சு? என்றேன், உள்ளே யார் இருக்கானாக ஷீலா என்றும் கேட்டேன்.
ஷீலா அழைத்து வந்த பெண் குழந்தை லிப்டில் ஏறி ஏதோ பட்டனைத் தட்டியதும் லிப்ட் தானாக மேலே ஏறத் தொடங்கியது அடுத்த சில நொடியில் ‘பவர் கட் ‘ஆகி….லிஃப்ட் முக்கால்வாசி மேலே சென்று அந்தரத்தில் நின்று விட்டது . லிஃ ப்ட் இருட்டில் மாட்டிக் கொண்ட குழந்தையோ பயத்தில் வீரிட்டு பின்னால் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது. அவள் போட்ட சத்தத்தில் கட்டடமே அதிர்ந்தது.
லிஃப்ட்டின் அடிப்பகுதி மட்டும் மேலே அந்தரத்தில் சிறு இடைவெளியில் தெரிய…ஒரே ஆதரவு அது பழங்கால ஸ்ப்ரிங் அமைப்பை உடையது..இருந்த இடைவெளி சிறிது நம்பிக்கையைத் தந்தது.இருந்தும் குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டுமே.. யாராவது வந்து குழந்தையைக் காப்பாத்துங்கோ என்று ஷீலா கத்தினாள். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் பெருகியது ! யாரும் உள்ளே தவழ்ந்து போக முடியவில்லை. உள்ளே குழந்தையின் அலறல்! வெளியே ஷீலாவின் அலறல்.
சார்…திடீர்னு இப்படியாச்சு சார்…நான் இப்படியாகும்னு நினைக்கவே இல்லை சார்..ப்ளீஸ் யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்…ஷீலா துடித்தாள். குழந்தை பயப்படுவாளே…அவளது தவிப்பு எனக்கும் தொடர்ந்தது.
நான் ஒரு மரச் சேரைப் போட்டு ஏறி அதிலிருந்து மிகவும் எளிதாக லி ஃப்டைப் பிடித்து தொங்கி, மெள்ள, மெள்ள க்ரில்லை இழுத்துத் திறந்து இடைவெளி வழியே உள்ளே நுழைந்து கொண்டு அதனுள் ஏறினேன்.ஓரமாக அழுது கொண்டிருந்தவளை சமாதானப் படுத்தினேன்.
முதலில் அந்தப் பெண் பயந்தாலும் என்னை அந்த பயத்துடனேயே இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . அந்த அணைப்பில்….என்னுள் எழுந்த அன்பில் பெருமிதம் கண்டேன்.கவலைப் படாதே என்ன…..நாம வெளில போயிடலாம்….என்னை கெட்டியாப் பிடிச்சுக்கோ…என்று சொல்லிக் கொண்டே இருந்த சின்ன இடைவெளி வழியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து நானும் மெல்ல வெளியேறி வரவும்…அங்கிருந்த அனைவரின் முகத்தில் சந்தோஷமும் வாய்க் கூச்சல்களும், கைதட்டல்களும் காதைப் பிளந்தன. ஷீலா கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின ! குழந்தை ஷீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “மாமி” என்று அழுது கொண்டே என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.
என்னடி ரம்யா இப்படிப் பண்ணிட்டே….என்று அவளை வாரி அணைத்துக் கொண்டு அழுத ஷீலா…அடுத்து மூன்று மணி நேரம் மின்வெட்டு வேறு…நல்லவேளையா நீங்க வந்து தெய்வம் போல இவளைக் காப்பாற்றினீங்க….என்று ஆனந்தக் கண்ணீரோடு இரு கை கூப்பி சொன்ன ஷீலாவின் கண்களில் நன்றி தெரிந்தது.
“எனது உயரம் இதற்கு பயன் பட்டதை நினைத்தால் எனக்குப் பெருமையா இருக்கு ஷீலா..” என்றேன்..
அப்போது ஷீலாவின் மங்கிய விழிகளில் ‘நாலடியார்’ நாற்பதடிக் கோபுர உயரத்தில் எரியும் அணையா விளக்காய் தோன்றினார். உயரம் ஒருவரின் உருவத்தில் இல்லை என்று ரேணுகா சொன்னது இன்றும் காதுக்குள் ஒலித்தது.
“கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”
காலிலியோ
“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”
காலிலியோ
விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!
1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!
‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!
விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!
‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!
ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!
காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு
காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!
அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.
1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.
பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!
1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.
‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!
1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!
காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்
விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது
பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது!
அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!
1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!
விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!
1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!
திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!
அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!
மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!
சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!
340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!
‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக்களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!
1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது!