பி.தமிழ்முகில் நீலமேகம்

 

அடுக்களையும் அரிகரண்டியும்

மாதருக்கே பாத்யதை என்று

பட்டயம் ஏதும்

எழுதப் பட்டிருக்கிறதோ ??

 

கல்வி கேள்வி தனில்

தனித் திறமை இருந்தாலும்

கறி சமைக்கத் தெரியாதவள்

ஏளனப் படுவதும் ஏனோ ??

 

புது வாழ்க்கைக்கும் சூழலுக்கும்

தன்னைப் பக்குவப்படுத்திக்

கொள்ள வேண்டியது பெண்ணெனில்

பக்குவமென்பது ஆண்கட்கு தேவையில்லையா ??

 

தட்சணை கொடுத்து மரு”மகளாய்”

சென்றவள் – பசிக்குப் புசிப்பது கூட

அனுமதி பெற்று தான் எனில்

இது என்ன நியாயம் ??

 

எக்காலத்திலும் பெண்ணின் திறமை

குப்பையில் கிடக்கும் குன்றிமணி !!

ஆணின் அதிகாரம் மட்டும் என்னவோ

கம்பீரமான கோட்டை மணி !!!

 

அடக்கி ஆள்தலும் அடிபணியச் செய்தலும்

நீங்களடைந்த வெற்றி என்ற எண்ணம்

மனதிலிருந்தால் – மன்னிக்கவும் !

நீங்கள் தோல்விப் பாதையில்

வெகுதூரம் பயணப்பட்டு விட்டீர்கள் ! – நாளை

துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!

 

பொன்னும் பொருளும் உங்களுக்கு

காணிக்கை தராதவளை ஏளனமாய்ப்

பார்ப்போரே ! – அவளது

சேவைக்கும் தியாகத்துக்கும் உங்களால்

கைமாறு செய்திடல் இயலுமோ ??

அது அவளது கடமையென

சூளுரைப்போரே !

நீங்கள் என்றுமே

கடமை தவறிய

கனவான்கள் தாம் !

மறந்திடாதீர்கள் !!

மறுக்க எத்தனிக்காதீர்கள் !

 

பெண்ணுக்கெதிராய்

பலாத்காரத்தை ஆயுதமாய்

கையிலெடுப்போரே !

நீங்களென்ன மனிதர்களா ?

அன்றி மாக்களா ?

நீங்கள் மனித உருவில்

உலவும் மாக்களெனில்

உங்களை வழிநெறிப் படுத்த

தார்க் குச்சியும் சாட்டை வாரும்

தயாராய் உள்ளது –

மறவாதீர்கள் !!

 

பெண்ணைப் போற்றி

வணங்கச் சொல்லவில்லை !!!

அவளை உயர்த்தித்

தாங்கவும் கேட்கவில்லை !!!

உங்கள் சகமனுஷியாய்

உயிருள்ள ஓர்

ஜீவனாய் பாருங்கள் !!!

 

பெண்ணை நிம்மதியாய்

வாழ விடுங்கள் !!!

அவளது மகிழ்வில்

உங்களது வாழ்வு என்றென்றும்

வளமாகவும் !!! நலமாகவும் !!!

 

படத்திற்கு நன்றி:

http://www.free-photos.biz/photographs/society/photos_of_social_groups/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பெண்ணை வாழ விடுங்கள் !!!!

  1. கவிதை அருமை சக்தி, ஆனால் பெண்ணுக்கு எதிரி பெண்தான் (மாமியார் – மருமகள்)

  2. கவிதை வரிகள் பாரதி சாட்டை  சொடுக்குவது போல் தெரிக்கின்றன.  பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் சொன்னால் இப்படித்தான் சொல்வார்கள் என்ற கற்பனையில், என் கருத்தும் அது தான்.  “நாளை துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!”, நாளை என்னய்யா நாளை, நாங்க தான் எப்பவோ துவண்டு விழுந்துட்டோமையா.   இனி ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்”  என்று வராமலிருந்தால் சரி.   சரியா?

  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி அய்யா…. தங்களது வாழ்த்துகள் எனக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாய் உள்ளன.மதிப்பிற்குரிய அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் நடையில் தங்களது வாழ்த்து, அவரிடமே வாழ்த்து பெற்றதைப் போன்றதொரு மன உணர்வையும், மட்டற்ற மனமகிழ்வையும் ஏற்படுத்துகிறது.தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.