ஜெயஸ்ரீ ஷங்கர்

ஒவ்வொரு நாளும் நான் வீட்டை பூட்டி விட்டு தெருவைக் கடந்து வேலைக்குப் போவதற்குள் இன்று யாரையெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் என் இதயத்தைப் பிடுங்கித் தின்னும். தெரிந்தவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைப் புதிதாகப் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நாலு கால் பிராணியைப் பார்ப்பது போலவும் ,என்னை ஒரு பாவி போலப் பாவமாகக் கொத்தும் பார்வையை என் மீது வீசும் போது மட்டும் தான் எனக்கு, நாற்பது வயதாகியும் நாலடிக்கு மேலே வளராமல் நின்று விட்ட விஷயம் ஞாபகத்துக்கு வந்து உலுக்கி எடுக்கும்.

இத்தனை பெரிய உலகத்தில் நான் மட்டும் என்னமோ “ஆண்டவா… என்னைக் கட்டையாக் குட்டையா இப்படி படைத்து விடேன்” என்று ஆர்டர் கொடுத்துப் பிறந்தவன் மாதிரி வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்..எனக்குள்ளும் ஒரு மனிதன் இருப்பான் என்பதை மட்டும் யாருமே உணர மாட்டேங்கறாளே ….என்ற மன உளைச்சலும் அதனால் உண்டாகும் வலியும் துயரமும் நாளைக்கு ஒருதரமாவது என்னை வருத்துவது எனக்கு வாடிக்கை தான்.

வீட்டைப் பூட்டும் நிலைக் கதவு கூட என்னை விட இரண்டுமடங்கு உயரம். என்று எனது குட்டைக் கையால் என் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டே…படியிறங்கி தெருவைக் கடக்கிறேன். அங்கிருந்து வந்த ஒரு பசு மாடு…..என்னை ஒரு பார்வை பார்த்த பிரம்மை எனக்குள்..ஒரு நிமிடம் ஒதுங்கி நிற்கிறேன். அதோடு சேர்ந்து நானும் சென்றால்…எங்கே…யாராவது சின்னப் பசங்க…”அம்மா…பசு மாடு மனிதக் கன்னுக்குட்டியோட போகுதுன்னு” வதந்தியை கிளப்பி விட்டுடுவாங்க.

ரோட்டின் ஓரமாகக் கிளம்பி, ஓரமாகவே நடந்து போகும்போது வழக்கம் போலவே மனசுக்குள் “விஷ்ணு சஹஸ்ரநாமம்” சொல்லிக் கொண்டே போகிறேன். கண்கள் மட்டும் அங்கங்கே உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தைப் பார்த்து “ச்சே…இப்படி ஒரு மனுஷப் ஜென்மம் எடுத்ததுக்குப் பதிலா ஒரு வீட்டில் தென்னம்பிள்ளையாய் கூட நின்றிருக்கலாம்..” என்ற எண்ணத்தோடு அலுவலகம் நுழைகிறேன்.

என் உயரத்தை கணக்கு வைத்தே நான் உலகத்தை அளந்து வைத்தேன். உலகம் என்னை சின்னதாக மாற்றிப் பார்க்கிறது நானும் அதை கோலிக் குண்டாக ஆக்கி என் சட்டைப் பையில் போட்டு வைக்கிறேன். என் வீடும் எனக்குச் சோறு போடும் என் அலுவலகமும் தான் என் உலகம், என் கோயில். இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை…நடந்து போகும் தூரம் தான். ஓரமாக நடந்து திரும்பினால் அலுவலகம். என்னைப் பொருத்தவரையில் இவ்வளவு தான் உலகமே இவ்வளவு தான்..! அதனால் எனக்கு உலகில் ஓடும் ரயில், பஸ், கார், ஸ்கூட்டர் ..ஏன் ஒரு சைக்கிள் கூட என்னைப் பாதிக்காது. யோசித்துக் கொண்டே உருளுகிறேன்.

இன்னும் பத்து நிமிஷத்துக்குள் ஆபீசுக்குப் போனால் தான் லிஃப்டில் இரண்டாவது மாடிக்குப் போகலாம்..இல்லையென்றால் பவர்கட் ஆகி லிஃப்டும் வேலை செய்யாது…மேலே போக மாடிப் படியில் தான் ஏறியாக வேண்டும். அதான் நடக்காமல் காலில் சக்கரம் கட்டி உருள வேண்டியாதாச்சு.

டேய்…நம்ப ..நாலடியார் இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு போலிருக்கே..? சீட்டுக்கு அடியில் காணோமே…. என்று டைபிஸ்ட் ஷீலா பியூனிடம் கிண்டலாகக் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அவள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் உள்ளே நுழையவும்…..அவள் முகம் பேயறைந்தது போல வெளுத்தது.

அவளது நெடு நெடுவென்ற உயரம்..எப்போதாவது என் மேஜை அருகே கடிதத்தில் கையெழுத்து வாங்க நிற்கும் அவளை சில நொடிகள் என் முகம் அண்ணாந்து பார்க்கும். அவளுக்குள் பெருமை பொங்கும்…என் சிறு உருவம் பார்த்து. ஒருவேளை அந்தப் பெருமையில் எனக்கு இப்படி “நாலடியர்” என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கலாம். நான் நாலடி கூட உயரமில்லை…வெறும் மூணரை அடி தான்…என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

எனக்கு அவள் அப்படி அழைத்ததில் கவலையில்லை என்பதைத் தெரியப் படுத்துவது போல..” சரியாகத் தான் எனக்கு நீ பெயர் வெச்சிருக்கே” என்று சொல்லிக் கொண்டே எனது டேபிள் அருகில் சென்று நிற்கிறேன். டேபிள் லேசாகத் தலையில் இடித்தது.

தலையைத் லேசாகத் தடவிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, சார்… மன்னிச்சுக்கோங்க. இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்..என்றவள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள் .

எனது டேபிளில் நிறைந்த வேலைகள் என்னை ஆக்ரமித்துக் கொள்ள, வேலையில் கண்களும் கைகளும் கவனமாக இருந்தாலும் மனதுள் கவனச் சிதறல் இருக்கத் தான் செய்தது..

கணினியில் “டேலி “யைத் திறந்து லெட்ஜர் போஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். மனசு உணர்வைப் போஸ்டிங் செய்து கொண்டிருந்தது.நான் கணிணியை எப்படி உபயோகப் படுத்தறேன்னு வேடிக்கை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் எட்டிப் பார்க்கும். அவர்களுக்கு இந்த வேடிக்கை ஒரு வாடிக்கை தான்.எனக்கும் பழகிப் போச்சு.

என் அம்மா எனக்கு எவ்வளவு ஆசையாசையாய் “ராஜ ராஜன் “ன்னு பெயர் வைத்து, பத்து வயசு வரைக்கும் கூட ராஜா…ராஜா ன்னு கூப்பிட்டது இன்னும் என் காதில் விழுந்துண்டு தான் இருக்கு. அந்த ராஜா மெல்ல மெல்ல குட்டிக் கூஜா போல ஆனதும் பெற்றவர்களுக்கே மகன் என்று சொல்ல மனமில்லாத நிலை வந்ததும் தான் எனக்குள் ஓர் ஏமாற்றம்.

திடீரென ஒரு நாள் அம்மா , நான் தூங்கி விட்டதாக நினைச்சுண்டு அப்பாவிடம் அழுதபடி பேசிய வார்த்தைகளும் கூடவே அப்பப்போ காதைத் துளைத்துக் கொண்டு கேட்கும்..

“என்னன்னா…நம்ம ராஜா….கையும் காலும் வளராமல்…இப்படிக் குட்டை குட்டையாய் இருக்கே..பத்து வயசுக்கான வளர்த்தியே தெரியலையே…அக்கம் பக்கத்தில் எல்லாம் கேக்கறா….என்ன மாமி உங்காத்து ராஜாவுக்கு அம்பது வயசானாலும் அஞ்சு வயசு தான்னு சொல்லிண்டு நீங்க பஸ்சுலயும், டிரெயினிலும் டிக்கெட் வாங்காமலே ஊருக்கெல்லாம் அழைச்சிட்டு போயிட்டு வரலாம்..போலிருக்கே ன்னு கேலி பண்றச்ச…மனசுக்குள்ள ஒரு பயம் வந்துடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேனோ..தெரியலையே…..பகவான் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறார்?

நம்ம குடும்பத்திலயே யாருமே இப்படி இதுவரைக்கும் வளராமல் இல்லையே . இவன் மட்டும் எப்படி இந்த மாதிரி வந்து பொறந்தான்.இப்படி குள்ள மனிதனா இருக்கும் இவனை நான் எப்படி வளர்க்கப் போறேன்.யார் செஞ்ச பாவமோ பகவானே.. இப்போ அடுத்தது வேற உண்டாயிருக்கேன். அதுவும் இப்படியே வந்து பொறந்தால் நாம என்னத்துக்காவோம்…? நான் எந்த ரிஸ்க்கும் இனிமேல் எடுக்க மாட்டேன். எனக்கு இனி அம்மிக் குழவிக் குழந்தையே வேண்டாம்.

இந்த ராஜா ஒருத்தனே போதும்..அவனை சாதாரண மனுஷனாப் பண்ண நாம என்ன செய்யணும்…? நாளைக்கு அவனை ஒரு நல்ல டாக்டரிடம் அழைச்சுண்டு போய் காட்டலாம். இதுக்கெல்லாம் மருந்து இருக்கா…?.என்று கேவிக் கேவி அழுதாள்.

பேசாம ‘நை நை’ ன்னு அழாமத் தூங்க விடு….அப்பா எளிதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தது கண்ணுக்குள் நிழலாடியது.

அதன் பிறகு நடந்தது எதுவும் எனக்குள் நினைவில் இல்லை.

மிகவும் ஆசையோடு என்னைத் தூக்கி கொண்ட மாமா, அத்தை . பெரியம்மா, சித்தி , பாட்டி என்று அனைத்து உறவுகளும் தூரம் விலகிப் போனது. அதையும் தாண்டி…” ஏண்டி…பங்கஜம், நம்ம வம்சத்தில் இப்படி ஒரு கொழந்தை கிடையாதுடி..இதெல்லாம் வளரக்கறது நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டம்.. பேசாமல் எங்காவது சர்க்கஸில் கொண்டு போய் விட்டுட்டு. அவாளே ஏதாவது படிக்கவும் வைப்பா. ‘ஜோக்கரா’ நிறைய சர்க்கஸ் கத்துக் கொடுத்து கூடவே வெச்சுப்பா . உங்களுக்கும் பணம் தருவா. புத்திசாலித் தனமா இதை நீங்கள் ரெண்டு பேரும் யோசித்து செய்தால் பிழைச்சுப்பேள். இல்லாட்டா ரொம்ப கஷ்டம்..

நன்னா உசரமா இருக்கறவாளுக்கே சமயத்துல இந்தக் காலத்துல வேலை, கல்யாணம்னு எதுவுமே நடக்க மாட்டேங்கறது. இவன் இனிமேல் தான் பெரிய கிளாஸ் போகப் போக இவனால ஆத்துக்கு பிரச்சனையைத் தான் கொண்டு வருவான். நான் சொல்லறதை சொல்லிட்டேன்…மகளே இனி உன் சமத்து… என்று பாட்டி கொஞ்சம் கூட மனசில் ஈரமில்லாமல் அம்மாவுக்கு ஐடியா கொடுத்து விட்டுப் போனவள்..தான். அதன் பின் நானும் பாட்டியைப் பார்க்கேவே இல்லை.

அதற்குள் அக்கம் பக்கத்திலும் சரி, படிக்கும் பள்ளியிலும் சரி,எனது ராஜ ராஜன் என்கிற பெயர் மறைந்தே போனது. அடேய்…குள்ளா ..! டேய் குட்டையா..! டேய்..வள்ளுவன் வாக்கு..! டேய் திருக்குறளு..! ஒழக்கு, அரைக்கால் படி, அம்மிக் கல்லு, ஆட்டுக் குட்டி, அகத்தியர் அவதாரம்.. ! டேய்…குள்ள வாத்து..! என்று அவரவர்கள் எனக்கு ஒரு புதுப் பெயர் வைத்து அழைத்து சந்தோஷப் படுவார்கள். அட அட அட….இப்படிக் கூப்பிட்டு என்னை அழைக்கும் போது தான் அவர்களுக்கு மனதில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும். எல்லாருக்கும் சிரிப்பை வர வழைக்கும் போதே, என் மனம் அழுமே என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாரா என்ன? அப்பேர்பட்ட பிறவி நானா…? அவாளா?

இன்னும் சிலர் டேய் ஜோக்கர்…வராண்டா..என்று கேலி செய்து அவர்கள் நேற்று சர்க்கஸ் சென்ற விபரத்தை சொல்லும்போது…டேய்…அங்க உன்ன மாதிரி நாலு அஞ்சு பஃபூன்டா….நீ பெரிசானால் அங்க தாண்டா உனக்கு வேலை கிடைக்கும். என்று அனாவசியமாகப் பாட்டியை நினைவு படுத்துவார்கள்.

அதற்குள் இன்னொருத்தன், அதுக்கு ஏண்டா பெரிசாகணும்…இப்பவே போனாலும் வேலை நிச்சயம்..நம்ம கிளாஸ் ‘கமலஹாசன்’ டா இவன்….என்று சிரிப்பான்.

ஓங்கி ஒரு கல்லை எடுத்து அவா மண்டையில் வீசினால் தேவலாம் போலிருக்கும் எனக்கு. அன்பாய் பேசாட்டாலும் வேண்டாம்….பரிகாசம் செய்யாமலாவது இருக்கலாம். ஆனால் அது யாருக்குப் புரிகிறது.?

ஒருவேளை அப்படித் தான் இருக்குமோ? என்னை அம்மா இப்ப வரைக்கும் அன்பாத் தான் பார்த்துக்கறா…ஆனாலும் சமயத்தில் தானும் அழுது என்னையும் அழ வைப்பாள். அதையும் மீறி ஆத்திரத்தில் முதுகில் ‘தபேலா’ வாசிப்பாள். நீ இப்படி வந்து பொறக்கலைன்னு யாரு அழுதா..? யாரு கொடுத்த சாபமோ….ன்னு ஒப்பாரி வைப்பாள். ஒழிஞ்சு போ…ன்னு கடைசியா தனது ஆற்றாமையை என் மீது திராவகமாய் வார்த்தையில் கொட்டி என் சின்ன உடம்பை எரிப்பாள்.

பெத்தவளுக்கே சில நேரங்களில் எரிச்சலைத் தரும் நான் மற்ற யாரிடம் அனுசரணையை எப்படி எதிர்பார்ப்பது? எனக்குள் நானே சமாதானமாகிப் போவேன்.

அடுத்து சில மாதங்களிலேயே அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு அம்மாவையும் என்னையும் விட்டு விட்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டார். அதுக்கு ஒரு விதத்தில் நானும் என் உயரமும் தான் காரணமாக இருக்கும். அதான் அப்பா என்னோடு முகம் தாழ்த்தியே பேச மாட்டாரே.

“இவன் தான் சிகப்பா, மூஞ்சி மொகரை எல்லாம் நன்னாத் தானே பிறந்து தொலைச்சிருக்கான்…சர்க்கஸ் வேண்டாம்னா எங்காவது சினிமாக் கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்…” நீ தான் என் மகன் ராஜான்னு சொல்லி வெச்சுண்டு இருக்கே. இந்த உலகத்துல இது மாதிரி பொறந்தா அவாள்ளாம் அங்க தான் போய் இருக்கா..தெரியுமா? என்னமோ நீ தான் ஓவியக் குழந்தையைப் பெத்துட்டா மாதிரி…ஆர்ப்பாட்டம் பண்ணாதே….அப்பாவின் இந்த வார்த்தைக்கு அம்மா அடிபணியாமல் போனது தான் அவர் எங்களை விட்டுட்டு போய்விட்டார்.

அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன்… அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிஞ்சு போயிட்டாளே….என்னோட துரதிர்ஷ்டத்தை நினைச்சு நினச்சு என் மனசும் உடல்போலக் குறுகிப் போச்சு.

பள்ளியில் ஒரு நாள் இதையே நினைச்சுண்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்திருந்தேன். கூடப் படிக்கும் ரேணுகா தான் அருகில் வந்து ” ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்.?..பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டியா என்ன..?

இல்லை…நான் அதுக்கு அழலை..

பின்ன ஏன் அழறே ராஜா..!

எனக்குச் சிரிக்கத் தெரியலையே… சிரிக்க முடியலையே என்ன செய்வேன் ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லாரும் சிரிக்கறா என்னால் சிரிக்க வைக்க மட்டும் தான் முடிகிறது.

வீட்டில் தான் என் மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா..இங்க கிளாஸ்ல கூட என்னைப் பார்த்தாலே எல்லாரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டுப் வீட்டை விட்டே வெளில எங்கியோ போயிட்டா . இப்போ நான் வாழறதே வீண்.

இன்னைக்கு சையன்ஸ் பீரியடில் பசங்க “இவன் தான் ஹுயூமன் ஹைப்ரீட் ” அல்லது மனித போன்சாய்…ன்னு சொல்லிச் சிரிச்சப்போ… அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாம்னு தோன்றது ரேணுகா…அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமாப் பார்க்கறவா கூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.

என்ன ராஜா நீ..?அசட்டு பிசட்டுன்னு பேசாதே.பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்னு என்
அம்மா சொல்வா..ஆனாலும் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்புதும் இல்லையாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும்… .ன்னு கேள்வி பட்டிருக்கே தானே…? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி , கபடா , கடப்பாறையை பல் குத்த உபயோகிப்பாரா ? நீயே நினைச்சுப் பாரேன். அது மாதிரி தான் நீயும்…உன்னாலயும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்..உயிர் வாழ உயரம் மட்டுமேத் தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ.

நீ பேசும்போது கேட்க நன்னாத் தான் இருக்கு….நீ மட்டும் என் மேலே இருக்கும் அன்பில் என் குறை தெரியாமல் பேசறே ரேணுகா.

உனக்கு என்ன குறை..?.உயரம் மட்டும் தானே..? அதெல்லாம் ஒரு குறையே இல்லை. உன்னையாச்சும் எல்லாரும் குள்ளன்னு மட்டும் தான் சொல்றா. ஆனா இந்த உலகத்தில் எத்தனை பேர் எப்படி எல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடவும் கொடுமை என்னவாயிருக்கும்னு நினைக்கறே…நீ?

போன வாரம் என் அம்மாவோடஎன் மாமாவாத்துக்குப் போயிட்டு ரயில்ல திரும்பி வந்துண்டு இருந்தோம் ….அப்போ எங்க கம்பார்ட்மெண்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க..அவங்க திருநங்கையாம். அப்படி இருக்கறவங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்களாம். அவர்கள் இப்படித் தான் கூட்டம் கூட்டமாக கை தட்டி எல்லார்கிட்டயும் கை ஏந்தி ஜீவனம் நடத்துவார்களாம் எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னை பெண் என்று சொல்ல முடியாத நிலை..ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இதை விட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாயைத் திறந்து சொல்லிடறே… .பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா? யோசிச்சியா?

நம்ம இங்கிலிஷ் டீச்சர் கூட அன்னிக்கு சொன்னாளே..”காலில் செருப்பு இல்லை யேன்னு கவலைப் படுபவன்…ரெண்டு காலே இல்லாதவனைப் பார்க்கும் வரையில் தான் அப்படிக் கவலைப் பட முடியும்னு. நீயும் சொன்னதைக் கேட்டேல்ல.

ம்ம்…கேட்டேன்…நம்ம இங்கிலீஷ் டீச்சர் ரொம்ப நல்லவர்…! என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்.

எனக்குள் எதுவோ புரிந்தது போல இருந்தது. ரேணுகா…நீ சொல்றது ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப் பற்றி இவர்கள் ஏன் இங்கு யாருமே புரிந்து கொள்வதில்லை. எனக்கு நேர்ந்த இந்த ஒரு சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமென்றாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டுமா விதிச்ச விதியா என்ன .?

ராஜா..அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும் தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும். அதுவே நீ படித்து ஒரு நிலைக்கு உன்னை உயர்த்திக் கொண்டால் அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையேத் தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா…நீ வேணாப் பாரேன்..என்னிக்காச்சும் நீ நான் சொன்னதை நினைச்சுப் பார்க்கும் காலம் வரும்..!

அதற்குள் பள்ளிக் கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது நினைவுக்குள் இருக்கு.

ரேணுகா அன்று எனது பதினைந்து வயதில் என் சின்ன மனதில் அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதை தான்…இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்கே ஒரு முகமூடி போட்டுக் கொண்டு கூடாரத்துக்குள் சுத்திலும் எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க நான் ஓரமாக பல்டி அடித்துக் கொண்டு பந்து விளையாடிக் கொண்டு தொப்பியைத் தூக்கி எரிந்து கொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கார்.

ஆனால் ஷீலா மாதிரியானவர் கண்களுக்கு அந்த நாலடியார் உயரம் உருவமாக மட்டும் தான் தெரிவார் போலிருக்கு.

மனசுக்குள் பழைய நினைவுகள் அலைமோத , வேலைகள் முழுவதும் அசுர வேகத்தில் முடித்து விட்டு “அப்பாடா என்று நிமிரும்போது “

தயக்கத்துடன் டைபிஸ்ட் ஷீலா வந்து அருகில் நிற்கிறாள்.

சார். உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.

சொல்லும்மா..என்ன விஷயம்.?…இந்த நாலடியார்ட்ட..! சிரித்தபடியே கேட்கிறேன். அந்த டிபார்ட்மெண்டுக்கு நான் தான் ‘ஹெட்.’. அதுவே அனைவருக்கும் ஜோக்கு மாதிரி இருக்கும்.

இந்த டிபார்ட்மென்ட் ஹெட் இவர் தான்…இருந்தாலும் இவர் தலை டேபிளுக்கு மேலே தெரியாது..என்று கேலி பேசுவார்கள்.

ராஜன் சார்..தப்பா எடுத்துக்காதீங்க..சொலணும்னு நினைக்கறேன்…சொல்ல முடியலை. ரொம்பத் தயக்கமா இருக்கு.எனக்கு செய்யும் உதவியாக நீங்க…! நீங்க…! ஷீலா தடுமாறுகிறாள்.

ம்…சொல்லும்மா..இவ்ளோ தயக்கம் ஏன் உங்களுக்கு..? என்னால் முடிஞ்சதைச் செய்வேன். முடிஞ்சால் செய்வேன்…என்ற என்னைப் பார்த்தவள் , ஏதோ குழப்பத்துடன்….

இல்ல..இல்ல…இப்ப வேண்டாம்…..எனக்கு சொல்லத் தயக்கமா இருக்கு. நான் எழுதி கொண்டு வரேன்..ப்ளீஸ்…சாரி..சொன்னவள் அன்று பர்மிஷன் கேட்டு விட்டு சீக்கிரமே வீட்டுக்கு சென்று விட்டாள் .

ஒரு வேளை என் முகத்தைப் பார்த்து பயந்திருப்பாளோ ?

“அஸ் யு விஷ் ” ன்னு வாய் சொன்னாலும்..மனசு என்னாச்சு இவங்களுக்கு….? என்று என் கேள்வியும் ஷீலாவின் பின்னாலயே போனது. இப்போ தானே இவங்களுக்குக் ரொம்ப விமரிசையா கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகப் போகிறது.

அன்று ஆபீசில் எல்லாரும் ஷீலாவின் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து சாப்பாட்டுப் புராணம் பாடிக் கொண்டிருந்தார்கள் .

ராஜன் சார்….எல்லாரும் வந்தார்கள் நீங்கள் மட்டும் தான் ஆப்சென்ட்…! வந்திருக்கலாம்…என்றான் ஆபீஸ் பியூன்..ஆண்டியப்பன்

நான் எந்த விசேஷத்துக்கும் போறதில்லைப்பா . கூட்டத்தில் நான் என்னையே தொலைத்து விடுவேன்..என்று சிரித்தேன்.

உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சார்….! பியூன் நக்கலாகச் சிரித்தான்.

ஆமாம்…எனக்கு இறைவன் போட்ட பாதுகாப்புக் கவசம் தான் என் உயரம்ன்னு நினைக்கறேன். அதனால் தான் நான் அதுக்குள்ளே மட்டும் இருக்க விரும்பறேன். எனக்கு அதில் வருத்தமோ , வேதனையோ துளியும் கிடையாது. என்ன ஒண்ணு …அப்பப்போ ஏதாவது குழந்தைகளுக்கும் சில சமயம் ஒரு பெரிய விளையாட்டு பொம்மை மாதிரி தெரிகிறேன்….அதிலும் பெருமை தான் எனக்கு. சில குழந்தைகள் பள்ளிக்கு ஆட்டோவில் போகும்போது…என்னைப் பார்த்து ஹேய்…’இதோடா…ரோபோ’ ன்னு கத்தி சொல்லும் போது …எங்கே…? எங்கே…?..என்று மற்ற குழைந்தைகள் ஆர்வத்தோடு பார்க்கும் போது .போனால் போகட்டும்ன்னு …நானும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்து கொண்டு..ரோபோ மாதிரியே கையைக் காலை நீட்டிக் காண்பித்து உற்சாகமூட்டுவேன்.

ஆனால்…!

மல்லிகைப் பூவோட வீட்டுக்குள் நுழையும் என்னை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் நமுட்டுச் சிரிப்புடன் சிரித்தபடி உள்ளே நுழைவதைப் பார்த்ததும் என் முதுகின் கண்களும் பனித்து விட்டது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்…நீ கவலைப் படாதே…ராஜா…மனம் முதுகைத் தட்டிக் கொடுத்தது.

கை கால்களை அலம்பும் போது…தண்ணீர் தட்டுப் பாட்டுக்கு இது தேவலை என்று சொல்லிக் கொண்டேன். மற்றபடி எல்லாரும் செய்யும் வேலைகளைத் தான் நானும் செய்கிறேன்.

சூடாக காப்பி போட்டுக் கொண்டு வந்து அப்படியே டிவி யைப் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்தது தான் தாமதம்.

“பழைய இரும்பு, ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” பழைய இரும்பு , ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” என்று ஒரு ஓட்டை சைக்கிளை உருட்டிக் கொண்டு கவுண்டமணியின் ஓட்டைக் காரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த குள்ளமணியை கவுண்டமணி உதைத்து அனுப்பும் காட்சி….” ஆதித்யா சானலில் கத்திக் கொண்டிருந்தது… எனக்குள் எரிச்சலைத் தந்தது.

ஏதோ…குள்ளமாகப் பிறந்து விட்டால் பிறருக்கு சிரிப்பதற்காகவே இறைவன் கொடுத்த பிறவி போல எங்கள் படைப்பை மாற்றிப் பார்க்கும் இந்த சமூகம். இதற்க்கெல்லாம் எப்போது விடிவு வருமோ? மற்ற உடல் ஊனங்களை உள்ளவர்கள் மீது கருணை காட்டும் இந்த சமூகம், குள்ளமாய் இருக்கும் என்மீது மட்டும் வெறுப்பைக் காட்டி வேதனை தருகிறது !

நல்லவேளையா அன்று ரேணுகா என்ற அந்தப் பெண் தேவதை சமயத்தில் கொடுத்த ஒரு ஊக்கத்தால் நான் என்னையே மனதளவில் உயரமாக ஆக்கிக் கொள்ள படிக்க ஆரம்பித்தேன். குறிக்கோளே வெறியாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பலன் தானே எனக்கென ஒரு அரசாங்க நாற்காலியைக் கொடுத்து சம்பளமும் கொடுத்தது. பின்ன ஊரெல்லாம் கேலி பேசும் ஒரு குள்ளன் அத்தனை அவமானத்தையும் தாங்கி படித்து அரசு உத்தியோகம் கிடைப்பது என்பது சும்மாவா? இல்லாவிட்டால் இந்த உயரமான மனிதர்களின் உதாசீனத்தில் என் மனசு தினமும் பூமிக்குள் புதைக்கப் பட்டு மனசும் குள்ளமாகி இருக்கும்.

பாவம் இந்தக் குள்ளமணி….அந்தக் காலத்திலிருந்து யாராவது ஒருத்தர் உதைப்பது போலவே காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். நினைத்தபடியே டிவி யை அணைத்து விட்டுக் கிளம்பினேன்.

மல்லிகைப் பூவை முருகன் படத்துக்கு போட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்டது.

யாராயிருக்கும்? கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறேன்.

பால்காரப் பையன்…தியாகு . வாசலில் அவனை அண்ணாந்து பார்க்கிறேன்.

என்னப்பா தியாகு வேணும்? சொல்லுப்பா..என்றேன்.

அண்ணா….போன தடவை நீங்கள் தான் எனக்கு டெர்ம் ஃபீஸ் கட்டினேள் . நான் இந்த தடவையும் உங்களைக் கேட்கலாம்னு வந்திருக்கேன். அதான் அம்மா உங்களைப் பார்த்து கேட்கச் சொன்னாள். அவன் குரலில் தயக்கம்.

கண்டிப்பாத் தரேன்…எவ்வளவு வேணும்..?

ஆறாயிரம் ரூபாய்….பணிவோடு சொல்கிறான் தியாகு.

எனக்கென்ன கல்யாணமா…பிள்ளை குட்டியா..? இல்லை உடன் பிறந்தவா தான் இருக்காளா? நான் தனிக்கட்டை பிரமச்சாரி…என் பணம் உன் படிப்புக்கு உதவினால் அதுவே நேக்குப் போறும் . வருஷா வருஷம் வந்து வாங்கிக்கோ.

இந்தா செக் . பணத்தை பாங்கில் வாங்கி ஃபீஸ் கட்டிட்டு சொல்லு..அப்படியே இந்தா என்னோட ஷர்ட் நாலு தரேன்…உன் தம்பிக்கு கொண்டு போய்க் கொடு….எல்லாம் புதுசு தான் என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருகிறேன்.

அண்ணா….இப்போ என் தம்பி கூட நன்னா உயரமா வளர்ந்துட்டான். அவனுக்குப் பத்தாது… அதனால ஷர்டெல்லாம் வேண்டாம்…என்று சொல்லிவிட்டு செக்கை மட்டும் வாங்கிக் கொள்கிறான் அவன்.

முகத்தில் அரை விழாத குறையாக சட்டையைக் கசக்கித் தூர எறிந்தேன். என்னோட சட்டைகள் கூட யாருக்கும் உபயோகப் படாதா? போனால் போகட்டும் போடா….! மனசு தைரியம் சொன்னது.

வழக்கம் போல பவர்கட்டுக்கு முன்பே லிஃப்டைப் பிடித்து என் சீட்டில் போய் அமர்ந்ததும் …ஷீலா கூடவே ஒரு ஏழு வயது பெண்ணோடு உள்ளே நுழைகிறாள் .

குட் மார்னிங் சார்..இது என்னோட நாத்தனாரின் பெண். இன்னைக்கு ஸ்கூல் லீவு..நானும் வரேன்னு சொன்னாள் . அழைச்சுண்டு வந்தேன். என்றவள்..நேற்று கேட்க வேண்டும் என்று நினைத்ததை இதில் எழுதி இருக்கிறேன். என்று ஒரு பேப்பரை என் டேபிள் மீது வைத்து விட்டு நகர்ந்தாள் .

அவள் நகர்ந்ததும்….நான்காக மடித்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்கிறேன். அதில்.

” சாதாரணமாக நாம் யாரை அதிக நேரம் நேருக்கு நேர் பார்க்கிறோமோ, பழகுகிறோமோ அவர்களைப் போலவே நம் மனோபாவம் மாறும் என்றும்…குறிப்பாக ஒரு தாயாகப் போகிறவள் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதற்கு ஏற்றார்போல படங்களைப் பார்த்து வரச் சொல்வார்கள்..இப்போது எனக்கு இது மூன்றாவது மாதம் நடக்கிறது.நான் நாள் பூராவும் என் எதிரில் இருக்கும் உங்களைத் தான் பார்த்து வருகிறேன். அதனால் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை உங்களைப் போன்ற உருவத்துடன் பிறந்து விடக் கூடாது என்று எண்ணுகிறேன்.தயவு செய்து என்னை கீழ் தளத்துக்கு மாற்றி விடுங்கள். தவறாக நினைக்க வேண்டாம். இது என் தனிப்பட்ட வேண்டுகோள்.

இதைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்..” புரிந்து கொண்டு ஆவன செய்வீர்கள்…என்று நம்புகிறேன்.

ஷீலா சந்திரன்.

அவள் எழுதி இருந்ததைப் படித்து முடித்தேன்.

சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தை சொல்லியிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவள் சொல்வது போல என் அம்மாவுக்கும் இப்படி ஏதாவது நிகழ்வுகள் நடந்திருக்கலாமோ..? என்று கூட எண்ணத் தோன்றியது. ஷீலா புத்திசாலிப் பெண்…மனசுக்குல அவளைப் பாராட்டிய படியே…அவளைக் கீழ் தளத்திற்கு மாற்ற உத்தரவு பண்ணி ஆர்டர் அடித்து கையில் கொடுத்தேன்.

அவள் கண்களில் நன்றியும் கண்ணீர்த்துளியும் சேர்ந்து நின்று கண்ணை மறைத்தது. என் கண்களில் பெருமை பொங்கியது. “ரொம்ப சந்தோஷம் ஷீலா….நல்ல வேளை சொன்னீர்கள்….இல்லாவிட்டால் இதெல்லாம் என் சின்ன மண்டைக்குள் எப்படி உரைக்கும்…? என்று சொன்னதும் அவள் ரொம்ப நன்றி சார் என்று தழு தழுத்தாள் . பின்பு தன்னுடைய ஹாண்ட் பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு..சில பைல்களையும் எடுத்துக் கொண்டு கூட வந்த நாத்தனார் மகளையும் அழைத்துக் கொண்டு “அப்போ வரேன் சார்…பார்க்கலாம்..” என்று சொல்லி கீழ் தளத்துக்குக் கிளம்பி விட்டாள்.

இந்தா…கொழந்தே…உன் பேர் என்னம்மா..? இந்தா சாக்லேட்டு….எடுத்துக்கோ என்று கொடுத்ததும் .

சிறிது தயங்கினாலும்…ஓடி வந்து வாங்கிக் கொண்டு சிரித்து விட்டு ஷீலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் .

அடுத்த அரை மணி நேரத்தில்….பவர் கட்டாகி ஆபீசே இருட்டில் சிக்கிக் கொண்டது.இன்னும் இரண்டு வாரத்தில் ஜெனரேட்டர் வைப்பதாக ஹெட் ஆஃபீஸில் இருந்து தகவல் வந்தது. அது வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் கீழிருந்து அழுகை சத்தமும், எதிரொலியும் தொடர்ந்து கேட்டது. யார்? என்ன ? எது? என்று ஆயிரம் கேள்விகள்.எனக்கு முன்னால் ஓட….நானும் விறு விறுவென்று மாடிப் படியைக் கடந்து தாவி குதித்து இறங்கவும்….ஷீலா பயத்தில் உறைந்து போய் லிஃப்ட்டின் அருகே நின்றிருந்தாள் …அருகில் இருந்த அனைவரும் என்னவோ போல பர பரத்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமையை உடனே புரிந்து கொண்டேன் நான். யாரும் கூட்டம் போடாதீங்க…கொஞ்சம் விலகுங்க..என்று சொல்லிக் கொண்டே நான் நுழைந்தேன்…என் உயரத்துக்கு அந்த லிஃப்ட் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது எப்படியாச்சு? என்றேன், உள்ளே யார் இருக்கானாக ஷீலா என்றும் கேட்டேன்.

ஷீலா அழைத்து வந்த பெண் குழந்தை லிப்டில் ஏறி ஏதோ பட்டனைத் தட்டியதும் லிப்ட் தானாக மேலே ஏறத் தொடங்கியது அடுத்த சில நொடியில் ‘பவர் கட் ‘ஆகி….லிஃப்ட் முக்கால்வாசி மேலே சென்று அந்தரத்தில் நின்று விட்டது . லிஃ ப்ட் இருட்டில் மாட்டிக் கொண்ட குழந்தையோ பயத்தில் வீரிட்டு பின்னால் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது. அவள் போட்ட சத்தத்தில் கட்டடமே அதிர்ந்தது.

லிஃப்ட்டின் அடிப்பகுதி மட்டும் மேலே அந்தரத்தில் சிறு இடைவெளியில் தெரிய…ஒரே ஆதரவு அது பழங்கால ஸ்ப்ரிங் அமைப்பை உடையது..இருந்த இடைவெளி சிறிது நம்பிக்கையைத் தந்தது.இருந்தும் குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டுமே.. யாராவது வந்து குழந்தையைக் காப்பாத்துங்கோ என்று ஷீலா கத்தினாள். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் பெருகியது ! யாரும் உள்ளே தவழ்ந்து போக முடியவில்லை. உள்ளே குழந்தையின் அலறல்! வெளியே ஷீலாவின் அலறல்.

சார்…திடீர்னு இப்படியாச்சு சார்…நான் இப்படியாகும்னு நினைக்கவே இல்லை சார்..ப்ளீஸ் யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்…ஷீலா துடித்தாள். குழந்தை பயப்படுவாளே…அவளது தவிப்பு எனக்கும் தொடர்ந்தது.

நான் ஒரு மரச் சேரைப் போட்டு ஏறி அதிலிருந்து மிகவும் எளிதாக லி ஃப்டைப் பிடித்து தொங்கி, மெள்ள, மெள்ள க்ரில்லை இழுத்துத் திறந்து இடைவெளி வழியே உள்ளே நுழைந்து கொண்டு அதனுள் ஏறினேன்.ஓரமாக அழுது கொண்டிருந்தவளை சமாதானப் படுத்தினேன்.

முதலில் அந்தப் பெண் பயந்தாலும் என்னை அந்த பயத்துடனேயே இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . அந்த அணைப்பில்….என்னுள் எழுந்த அன்பில் பெருமிதம் கண்டேன்.கவலைப் படாதே என்ன…..நாம வெளில போயிடலாம்….என்னை கெட்டியாப் பிடிச்சுக்கோ…என்று சொல்லிக் கொண்டே இருந்த சின்ன இடைவெளி வழியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து நானும் மெல்ல வெளியேறி வரவும்…அங்கிருந்த அனைவரின் முகத்தில் சந்தோஷமும் வாய்க் கூச்சல்களும், கைதட்டல்களும் காதைப் பிளந்தன. ஷீலா கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின ! குழந்தை ஷீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “மாமி” என்று அழுது கொண்டே என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

என்னடி ரம்யா இப்படிப் பண்ணிட்டே….என்று அவளை வாரி அணைத்துக் கொண்டு அழுத ஷீலா…அடுத்து மூன்று மணி நேரம் மின்வெட்டு வேறு…நல்லவேளையா நீங்க வந்து தெய்வம் போல இவளைக் காப்பாற்றினீங்க….என்று ஆனந்தக் கண்ணீரோடு இரு கை கூப்பி சொன்ன ஷீலாவின் கண்களில் நன்றி தெரிந்தது.

“எனது உயரம் இதற்கு பயன் பட்டதை நினைத்தால் எனக்குப் பெருமையா இருக்கு ஷீலா..” என்றேன்..

அப்போது ஷீலாவின் மங்கிய விழிகளில் ‘நாலடியார்’ நாற்பதடிக் கோபுர உயரத்தில் எரியும் அணையா விளக்காய் தோன்றினார். உயரம் ஒருவரின் உருவத்தில் இல்லை என்று ரேணுகா சொன்னது இன்றும் காதுக்குள் ஒலித்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.