Blog

  • அவன் யசோதையின் நந்தனல்லவா….

    சாயா சுந்தரம்

    images

    வீதிவீதியாகத்
    தேடத்தொடங்குகிறாள்
    தன் நந்தனை….
    யாரேனும் தேவகியின்
    பெயர் சொன்னால்
    மேனிசிலிர்க்க
    தவிர்க்கத் தொடங்குகிறாள்…
    கேளாத ஒற்றை
    வார்த்தையென
    அந்தப் பெயரை….
    தாளாதுப் புலம்பும்
    தளிர்க்கொடிகள்
    மிதிபட….
    உற்றுக்கேட்கத்
    தொடங்குகிறாள்
    சிறுதண்டைக்
    கொலுசொலியை….
    மாயம் செய்பவனே
    மதுசூதனா
    விலகிச் செல்வாயோ என
    பிதற்ற ஆரம்பிக்கிறாள்
    பிச்சியென…
    பாதம் பிடித்து
    முழங்கால் பற்றி
    கரம் பிடித்திழுத்து
    மார்பு சாய்ந்து
    கழுத்தணைத்துச்
    செவிகளில்
    இசைக்கத்தொடங்குகிறான்
    சிறு கண்ணன்
    ‘அம்மா’ என…
    மெதுவாக உயிர்பெறத்
    தொடங்குகிறாள்
    அவன் அன்னை
    யசோதா….

     

    Share
  • அன்னையர் தின வாழ்த்துகள்…

    கவிஞர் காவிரி மைந்தன்

    amma

    அன்னைக்கு நிகரான சொல்கூட அகிலத்தில் இல்லை…

    அவள் அன்புக்கு ஈடாக பூமிதனில் பொருளொன்றுமில்லை

    கண்ணுக்கு நிகராக நம்மைக் காப்பதற்கு – கடவுள்

    அன்னையை நமக்களித்தான் உண்மைதானே!

    என்றைக்கும் அவளிருப்பாள் தாயாக… நாம்

    அவள் மடிதனிலே கண்ணுறங்கும் சேயாக..

    உண்ணவும் உறங்கவும் வைத்து நிதம்.. தன்

    ஒருகோடி கனவுகளை தான் சுமப்பாள்!

    சிறுதுன்பம் நமக்கென்றால் பொறுக்கமாட்டாள்

    வரும்துயரம் யாவையும் தான் ஏற்பாள்

    பசியென்று நாம் உணரா வைத்திருப்பாள்…

    பகலிரவு அறியாமல் உழைத்திருப்பாள்

    உயிருக்குள் உயிர் சுமந்த கோவிலவள்

    ஒளியூட்டும் தீபம் நம் வாழ்வில் அவள்…annai

    அன்னையைப் போற்றி நிதம் வழிபடுங்கள்…

    அவள் பொற்பாதம் தொட்டு வணங்கிடுங்கள்..

    உன்னை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேன்

    என்று அவள் உள்ளம் தினம் பூரிக்கட்டும்!

    அம்மா.. அம்மா.. அழைக்கின்றேன்… உன்

    ஆசை முகம் பார்க்கத் துடிக்கின்றேன்…

    கண்ணெதிரே இருந்தவரை காத்திருந்தேன்…

    விண்ணுலகம் சென்று விட்டாய் என் செய்ய?

    தாயென்னும் தெய்வத்தைத் தரணியிலே..

    தந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்!!

    அன்னையர் தின வாழ்த்துகள்…
    (மு. இரவிச்சந்திரன்)
    — என்னும்
    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல், சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052
    kaviri2015@gmail.com
    www.thamizhnadhi.com

    Share
  • பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி

     

    Solid Evidence of DNA Existance

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

    http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c

    சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
    சுட்டுத் தின்ன
    அண்டக்கோள் ஒன்றை முதலில்
    உண்டாக்க வேண்டும் !
    அண்டக்கோள் தோன்றப்
    பிரபஞ்சத்தில் ஒரு
    பெருவெடிப்பு நேர வேண்டும் !
    உயிரினம் உருவாக
    சக்தி விசையூட்ட வேண்டும் !
    கோடான கோடி யுகங்களில்
    உருவான பூமியும் ஓர்
    நுணுக்க அமைப்பு !
    தனித்துவப் படைப்பு !
    அகிலாண் டத்தில்
    நிகரில்லை அதன் படைப்பிற்கு !
    நாமறிந்த பிரபஞ்சத்தில்
    பூமியைப் போல்
    நீர்ப் பாறைக் கோள் ஒன்றை
    வேறெங்கும் இதுவரைக் கண்டிலோம் !
    நீர் ஆவியாய் நீங்காமல்
    வைத்திருப்பது
    வாயுக் குடை ! அக்கோள மின்றேல்
    மாயும் உயிரினங்கள் !
    மகத்துவமாய்
    அகிலப் பிரம்மாண்டத்தை
    நுணுகி நோக்க
    மனிதரினம் தோன்றிய நமது
    புனித கோளம்,
    இனிய பூமி ஒன்றே !

    ****************************

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qoERVSWKmGk

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=W4mYwsr9gGE

    Origins of life 1

    இந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன்  [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன.  குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும்.  அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA]. 

    ரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்  

    இதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது.  நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை.  இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கிறது.  அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம்.  அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.

    முகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி 

    உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ 
    பல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது.  அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases] எப்படித்
    தோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.
    முதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளி

    ​ ​

    யிட்டுள்ளார்கள்.

    fig-1b-genome-of-the-species

    “உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்

    ​ ​

    கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    Earth Spectrum

    உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

    பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

    Comets Gifts for Earth

    [384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

    Growth of Organisms

    லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

    சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].

    ajay

    “கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

    ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

    1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

    Miller Urey Experiment

    அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

    பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

    பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

    fig-1a-the-earths-biosphere1

    கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

    fig-1-the-beginning-of-life

    பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

    Fig 3 Comet Falls on Earth

    பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

    நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

    fig-1f-amphiphilic-molecules

    சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

    1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

    2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

    3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

    4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

    5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

    Establishment of life on Earth

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    fig-2-signs-of-extra-terrestrial-life1

    உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

    பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

    பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

    1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

    2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

    Origins of life

    3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

    4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

    5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

    6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

    7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

    8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

    9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

    Fossil Records of life

    கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

    2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Building Blocks of life

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
    25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
    26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
    27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
    28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
    29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
    30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
    31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

    32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

    34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

    35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

    36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

    37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html [May 14, 2009]

    37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

    38. http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/secrets-of-extreme-continent-building-discovered-a-key-to-life-on-earth-and-beyond.html [March 31, 2015]

    39. http://www.dailygalaxy.com/my_weblog/2015/05/cosmic-hotspots-near-stars-yield-buiding-blocks-of-dna.html  [May 6, 2015]

    40  http://www.sciencedaily.com/releases/2015/05/150506095248.htm  [May 6, 2015]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [May 9, 2015]

    Attachments area
    Share
  • அன்னையர் தின வாழ்த்துகள்

    crazy

    எனது தோழனும் எங்கள் கிரேசி கிரியேஷன்ஸ் இயக்குநருமான திரு.S.B.KHANTHAN அவர்களின் தந்தையார் பிரும்மஸ்ரீ பாலகிருஷ்ண சாஸ்திரிகளும், தாயாரும்…. காந்தனின் தகப்பனாரும் தாயாரும் எனது தாய், தந்தைக்கு சமமானவர்கள்….என்னைப் பெற்ற தாயாரின் ஓவியம் – அடியேன் வெகு நாட்களுக்கு முன்பு வரைந்தது. அவர் 42வயதிலேயே காலமாகிவிட்டார். இதோ நான் வரைந்த என் அன்னையின் ஓவியம்!

    crazy

    லலிதாம் பிகையின் லயிப்புக்(கு) உதவும்
    எலிதாங்கி சேயாய்(பிள்ளையாராய்) இருப்பாய்: -வலிதாங்கி
    ஈரைந்து மாதங்கள் ஈன்றவளை தெய்வமாய்
    பாரந்த சங்கரனே பார்ப்பு’’…..(அத்வைதம் சொன்ன சங்கரரே அன்னையைக் காண வந்தார்)….

    ”ஓமாய் உனக்குள்ளே,ஆமாம் அஜபாவாய்,
    MOMமாய் ஒலித்திடும் மந்திரத்தை, -CALMமாக,
    உச்சரிக்க ஓயா(து), உறக்கம்போய் மெய்யுணர்வு,
    நச்சரிக்க, ஆன்ம நிலைப்பு’’….கிரேசி மோகன்…

    crazy1

    OUR Mother – Smt Nagalakshmi Balakrishna Sastrigal, a vivid administrator of the family affairs leaving my illustrious father free in his mind to concentrate on His discourses and SBI office. Not a day passed in her life without rendering Vishnu and Lalitha Sahasranamam for 80+ Years in the morning and evening. She is 91 today…listening to Vishnu & Lalitha Sahasranamam from her bed even this day, courtesy my daughter Dvijavanthi’s idea of putting the headphone in her ears.

    Happy Mothers day.

    Appa/Amma photo courtesy: My dear friend A V Bhaskar – The Legendary photographer.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy1

    MUSICAL-CHAIR ஆடுது மாடுகள் , கண்ணனின்
    DEW-துகள் கால்வருடி தொத்திக்க, -கோஸகன்,
    கோபாலன் கால்தூஸாய், கஷ்டத்தை ஊதிடுவான்,
    பூபாளம் போல்பிறக்கும் போது ….கிரேசி மோகன்….

    Share
  • பிரித்தானியாவில் டேவிட் கேமரூன் கட்சி வெற்றிவாகை சூடி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது!

    பவள சங்கரி

    David-Cameron (1)

    Exit-Poll

    பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் பார்ட்டி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை வாழ்த்தி வரவேற்போம். முக்கியமான எதிர்க்கட்சியான டேவிட் மிலிபான்ட்டின் லேபர் கட்சி 232 இடங்களை மட்டுமே வென்றுள்ளதால் தோல்வியைத் தழுவியுள்ளது. திருமிகு டேவிட் கேமரோன் தலைமையில் பிரித்தானிய பொருளாதாரம் மேலும் உயரும் என்று நம்புவோம். இந்திய வம்சாவளியைச் சார்ந்த பத்து பேர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்திய பிரித்தானிய நட்பு மேலும் பலம் பெறும் என்று எதிர்பார்ப்போம்.

    Share
  • வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்த ஆண்டு (2015) +2 தேர்வில் வழக்கம்போல் பெண் குழந்தைகள் அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இரண்டு பெண்கள் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த ஈரோடு கல்வி மாவட்டம் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. விருதுநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது. தேர்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வல்லமையின் வாழ்த்துகள்.

    போட்டிகள் நிறைந்த உலகத்தில் திறமையாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற இந்த காலகட்டத்தில் நம்முடைய கல்வித் திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாய தருணம் இது. உலகளாவிய நாடுகளின் கல்வித் திட்டங்களைக் காணும்போது நம் நாட்டின் கல்வித்திட்டங்களில் நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணர முடியும். இன்றைய நம் கல்வித் திட்டத்தின்படி பாடங்களை மனனம் செய்து திருப்பி எழுதக் கூடிய மாணவர்களையே சாதனையாளர்களாக உருவாக்க முடிகிறது. மனனம் செய்தவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் திருப்பி எழுதுபவர் மட்டும் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்கள். மதிப்பெண்களில் பின் தங்கியவர்கள் அறிவற்றவர்கள் என்பதைவிட மனப்பாடம் செய்ய முடியாதவர்கள் என்று சொல்வதே தகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட கல்வி முறையால் மதிப்பெண் குறைவாகப் பெற்று உயிரிழக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றதால் உயிரை மாயத்துக்கொண்ட அந்த இளம் தளிர்கள் செய்த பாவமென்ன .. அப்படியென்றால் மதிப்பெண் முறையே தவறா? இன்றைய கல்வித் திட்டத்தின்படி +2 தேர்வு என்பது மனப்பாடம் செய்து அவற்றை பதிவு செய்வதற்குரிய போட்டியாகத்தான் இருக்கிறது. கல்வித் துறையில் உள்ளவர்கள் இது குறித்த ஆக்கப்பூர்வமான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 1970 – 80 ஆண்டுகளில் 100/100 மதிப்பெண்கள் பெறுவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இன்று தமிழ் மொழிப்பாடத்தில் கூட 100/99 மதிப்பெண்கள் வாங்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். இன்றைய கல்வித் திட்டத்தின்படி வெற்றி பெற்று பட்டங்களைப் பெற்ற மாணவர்கள்கூட முழுமையாகச் சிந்திக்கும் திறனின்றி இருக்கின்றனர். முக்கியமான ஒரு கடிதம் எழுத வேண்டிய நேரத்தில்கூட அவர்களுக்கு ஒரு மாதிரிப் படிவம் தேவையாக இருக்கிறது. இதுதான் நம் கல்வித்திட்டம் உருவாக்கிய இன்றைய இளைய பாரதத்தின் நிலை. அதாவது மாணவர்களின் சுய சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இல்லாததே நம்முடைய கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடு.

    இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படுவதுடன் ஊக்குவிக்கப்படவும் வேண்டும். குறைந்த அளவு நீர் உபயோகித்து அதிகப்படியான மகசூலைப் பெறக்கூடிய முறைமையைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தி விளைச்சலைக்காட்டியுள்ள இளைஞரை நாம் அறிவோம். ஆனால் அவருக்கோ, அவருடைய கண்டுபிடிப்பிற்கோ பெரிய அங்கீகாரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதைப்போல பலரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். நம்முடைய கல்வித் திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து, இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதாக அமைய வழிவகுக்க வேண்டும் என்பதே சமூகவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

    இயல்பாகவே ஆற்றல் மிகுந்த மாணவியர்களை சுய சிந்தனையாளராக மாற்றுவதை விட்டு, ஒரு கணினியாகவோ, நகல் எடுப்பானாகவோ மாற்ற முயல்வது தவிர்க்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் என்பதால் அவர்களுடைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பை குறுகிய எல்லைக்குள் அடைக்க முயல்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

    அடிப்படைக் கல்வியில் வேண்டுமானால் இந்தத் திட்டம் சரியாக இருக்கலாம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் கற்பிக்கும் முறையில் முற்றிலும் மாற்றம் வேண்டும். ஆசிரியர்களுக்கும் கற்பிக்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் . இருபது வயதிற்குட்பட்ட பெண்கள், அவர்களுடைய சம்மதமின்றியே 74 சதவிகிதம் திருமணம் செய்துவிடுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அரசு 18 வயதில் திருமணம் செய்யலாம் என்று கூறினாலும் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் திருமணம் செய்து வைக்கும் வழமை பரவ வேண்டும். ‘ரேகிங்’ என்ற கொடிய அரக்கனால் நேற்று கேரளா மாநிலத்தில் நான்கு பெண் விளையாட்டு வீராங்கனைகள் உயிர் மாய்த்துக்கொள்ள முயன்று ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ரேகிங் அறவே ஒழிக்கக்கூடிய வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு மாணவிகள் அச்சமின்றி கல்விச்சாலைகளுக்கு வர ஆவண செய்ய வேண்டியதும் அவசியம்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும்

     

    ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புர(வு)
    ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் – ஆற்றவும்
    போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
    ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஈட்டிய ஒண் பொருள் இன்று எனினும் ஒப்புரவு
    ஆற்றும் மனை பிறந்த சான்றவன் ஆற்றவும்
    போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
    ஏற்று கன்று ஏறு ஆய்விடும்

    பொருள் விளக்கம்:
    தான் உழைத்துச் சேகரித்த மிகுந்த செல்வம் இல்லாது போன வறுமையிலும், உலக நடைமுறையை மதித்து வாழும் குடியில் பிறந்த சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவிடார். (அவர் கொண்ட இப்பண்பானது) மிகவும் கருத்துடன் போற்றி வளர்க்கப்படாது, பசும்புல்லும் உண்ண வழியின்றி எதையோ மேய்ந்து வளர்ந்தாலும் நல்ல எருதிற்குப் பிறந்த கன்று நல்லதொரு காளையாக வளர்ந்துவிடுவது போன்ற பண்பிற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்தோர், வாழ்வில் வறுமை சூழ்ந்தாலும் உலக நடைமுறைகளை மதித்து அதற்கேற்ப வாழும் சான்றாண்மை உடையவராகவே இருப்பார்கள்.

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். (குறள்: 218)

    என்ற குறளும்; தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராத கடமையுணர்ந்தவர் சான்றோர் எனக் கூறுவதை இங்கு நாம் ஒப்பிடலாம்.

    Share
  • அப்பரடிகளின் உவமைகள்

    சு. கோதண்டராமன்.

    Captureஉவமை என்பது அணிகளுக்குள்ளே முதன்மையானது; பிற அணிகளுக்கு அடிப்படையானதும் கூட. உவமை அணியைப் பயன்படுத்தாத புலவர் இல்லை. திருநாவுக்கரசு நாயனாரும் இதனை விரிவாகப் பயன்படுத்துகிறார்.

    இறைவனின் புகழ் உரைக்கும் அதே வேளையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுவது அப்பரடிகளின் தனிச்சிறப்பு. அவரைத் தொடர்ந்து மணிவாசகரும், அருணகிரியாரும், பின்னர் ராமலிங்க வள்ளலாரும் இதே பாணியைப் பின்பற்றினர்.

    நாயனாரின் உவமைகளை பொருள் உவமை, நிகழ்வு உவமை என இருவகையாகப் பிரிக்கலாம். முத்து, பவளம், தேன், குன்று போன்ற உயர்ந்த பொருட்களை உவமையாக்குவது பொருள் உவமையாகும். இந்த உவமைகள் பெரும்பாலும் ஒரு சொல் அல்லது இரு சொல்லாக இருக்கும். பொதுவாக, இறைவனை வர்ணிக்கும்போது பொருள் உவமைகளைப் பயன்படுத்துகிறார்.

    வெள்ளிக் குன்றன்ன விடையான்
    கருமணிபோற் கண்டத்தழகன்
    முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினைச் சுடர் போலொளிப் பித்தனை
    சுடரைப் போலொளிர் சுண்ண வெண்ணீற்றனை
    கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

    ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

    தன் கீழ்மையைக் குறிப்பிடும்போது நிகழ்வு உவமைகளைப் பயன்படுத்துகிறார். சொல் தொடர்களாக உள்ள இவை ஒரு நிகழ்வாகவோ, ஒரு கதையின் சுருங்கிய வடிவமாகவோ அல்லது பழமொழியாகவோ இருக்கக் காண்கிறோம். அத்தகைய உவமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

    ஊருக்குப் புதியவன் ஒருவன் ஒரு குளத்துக்கு வருகிறான். அக்குளத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். குளத்துக்கு ஒரு காவல்காரர் உண்டு. ஆனால் அவர் தன் கடமையைப் புறக்கணித்து எங்கோ போய்விட்டார். அந்நிலையில் குளக்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை அவன் வினவுகிறான். அவர்களோ வம்பர்கள். ‘குளத்தின் ஆழத்தை நீயே தெரிந்து கொள்’ என்று சொல்லி அவனைக் குளத்துக்குள் தள்ளிவிட்டார்கள். ஆழம் நிலை கொள்ளவில்லை. எந்தத் துறைப் பக்கம் சென்றால் கரையேற முடியும் என்பதை அறியாமல் அவன் தவிக்கிறான்.

    இந்த நிலையில் தான் இருப்பதாக அப்பர் தெரிவிக்கிறார். உய்யும் வழியை முறையாக அறிவிப்பாரின் நட்பு எனக்கு முன்னதாகக் கிடைக்கவில்லை. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன். சிவபெருமானின் பெருமையை அறிந்தோரின் வார்த்தைகளை முன்னமே நான் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்துகிறார்.

    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொளென்று சொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைகொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
    வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 4.1.5

    காம வயப்பட்டு இறைவனை மறந்து திரிவர் பலர். ஏதோ நல்வினைப் பயனால் அவர்களுக்கு இறையருள் நெறிக்குத் திரும்பும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஆனால் அவர்கள் மனமோ பழைய பொய்ந் நெறியிலேயே செல்ல விழைகிறது. உழுத வயலையே மறுபடியும் யாராவது உழுவார்களா? இந்தப் பேதை நெஞ்சம் மட்டும் ஏன் இப்படிப் பழைய பாதையிலேயே நாட்டம் கொள்கிறது என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.

    எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
    தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்துகொண்டு
    உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
    இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. 5.90.8

    நரி ஒன்று வாயில் கவ்விய நல்ல ஊனுடன் நீர் நிலையைக் கடந்து செல்லும் போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டு அதனை அடைய விரும்பி தன் வாயில் இருந்ததையும இழந்த கதை போல மக்கள் கிட்டாத பொருட் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிட்டியதாகிய சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். அத்தகையோருக்கும் சிவபெருமான் அருள் புரிவார்.

    நரிவரால் கவ்வச் சென்று
    நற்றசை இழந்தது ஒத்த
    தெரிவரால் மால்கொள் சிந்தை
    தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 4-27-5

    ஒரு நல்ல இல்லத்தரசி என்றால் நண்பகலில் பசிக்கும் என்பதை உணர்ந்து முற்பகலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வாள். பேதையாக இருந்தால் முற்பகலை வீணே கழித்துவிட்டு, பசி வந்த பின் உணவு தயாரிக்க முற்படுவாள். அது போலப் பேதையாகிய நான் வாழ்வின் முற்பகுதியை வீணே கழித்து விட்டு, முதுமையில் உடல் நலிவுற்றபின் இறை வழியைத் தேடுகின்றேன் என்று தன்னை இகழ்ந்து கொள்கிறார் வாகீசப் பெருமான்.

    பின்பகல் உணங்கல் அட்டும்
    பேதைமார் போன்றேன் 4.28.1

    நீர்க் கரையில் நிற்கும் கொக்கு தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெறுகிறது. மரத்தின் மீது அமர்ந்துள்ள கொக்கோ வயிற்றை நிரப்ப முயற்சி செய்யாமல் பசியால் வாடி வாய் விட்டு அலறுகிறது. அது போல மக்கள் துன்பத்தில் உழன்று அலறுகிறார்களே அன்றி உய்யும் வழியைக் கடைப்பிடிக்காமல் தீய குணங்கள் ஆகிய சரக்கைச் சுமந்து திரிகிறார்கள் என்கிறார் அடிகள்.

    மரக்கொக் காமென வாய்விட்டலறி
    சரக்குக் காவித் திரிந்து 5-75-1

    முன்னாள் சமணராகிய அவர் நகைப்புக்குரிய தன் பழைய நிலையை விவரித்து விட்டு, அதிலிருந்து தான் தப்பியதையும் கூறுகிறார்.

    சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர். கைகளிலிருந்து நெய் கீழே சொட்டும்போது, அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாமல், கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்காகக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்பர். அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன்.

    கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
    கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
    பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
    புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன் 6.11.9

    இறைவனை வழிபடுவதற்குரிய தலங்கள் உள்ளன. அங்கு சென்று உய்யும் நெறியிற் கலவாமல் மக்கள் இன்பத்தை எங்கெங்கோ தேடுகின்றனர். ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தில் தேடும் அறிவிலிகள் உண்டோ என்று வியக்கிறார் நாவுக்கரசர்.

    துன்மதியால்
    ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் தேடிய ஆதரைப்போற்
    காற்றிற் கெடுத்து உலகெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. 4.97.6

    இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார்.

    கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
    வித்தென்னைக் கோகுசெய்தாய் 4-100-2

    பயன் அற்ற பாழ் நிலத்தில், நல்ல நீரை வீணாகப் பாய்ச்சியது போன்ற தன் மடமையை வெளிப்படுத்துகிறார்.

    பாழுக்கே நீரிறைத்து
    வழியிடை வாழ மாட்டேன் 4-31-6)

    ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போலவும் தான் இருந்ததாக அப்பர் பெருமான் கூறுகிறார்.

    கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6

    செஞ்சுடர் விளக்கத்தில் (சூரிய உதயத்தில்) கூவுங் கோழியை விலக்குவார் உளரோ? கோழி தானே கூவித் தானே அடங்கும். அவ்வாறே தாம் தகாதன செய்யும் காலத்தில், விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே ஓய்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

    விலக்குவார் இலாமையாலே
    விளக்கத்திற் கோழி போன்றேன் 4.31.5

    துன்பத்தை அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாகத் தான் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

    உற்றலாற் கயவர் தேறார்
    என்னும் கட்டுரையோடு ஒத்தேன் 4.31.8

    அப்பரடிகளின் தேவாரத்தில் பழமொழிப் பதிகம் என்றே ஒன்று உண்டு. பரம்பரைச் சைவராகிய அவர் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது, பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது, சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது, பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார். அந்தப் பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

    சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பினேன்.

    கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1

    கைப்பற்றுதற்கு எளிதாகவும், உண்பார்க்குச் சுவையை உடையதுமான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய், கைக்கொண்டாலும் உண்ணத் தகுதியற்றதாய் உள்ள காக்கையின் பின் சென்ற அறிவிலியைப் போன்றவன் நான்.

    முயல்விட்டுக்
    காக்கைப் பின் போனவாறே. 4.5.2

    அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவன்.

    அறமிருக்க
    மறம் விலைக்குக் கொண்டவாறே. 4.5.3

    திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போன்றவன்.

    பனிநீராற்
    பாவை செயப் பாவித்தேனே. 4.5.4

    ஒருவன் ஏற்படுத்திய சண்டையில் அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலத் துன்புற்றேன்.

    ஏதன் போர்க்கு
    ஆதனாய் அகப்பட்டேனே. 4.5.5

    இருட்டறையில் மலட்டுப் பசுவைப் பால் வேண்டிக் கறக்க முனைந்து உதைபடும் அறிவிலி நான்.

    இருட்டறையின்
    மலடு கறந்து எய்த்தவாறே. 4.5.6

    விளக்கு இருக்கும்போது, மின்மினியினுடைய தீயைக் குளிர் காயக் கொள்வாரைப் போன்றவன்.

    விளக்கிருக்க
    மின்மினித்தீக் காய்ந்தவாறே. 4.5.7

    மக்கள் குடியில்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்த அறிவில் வறிஞன்.

    பாழூரிற்
    பயிக்கம் புக்கு எய்த்தவாறே. 4.5.8

    செய்தற்குரிய செயலாகத் தவம் இருக்கும்போது, அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டேன்.

    தவமிருக்க
    அவஞ்செய்து தருக்கினேனே. 4.5.9

    மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்தேன்.

    கரும்பிருக்க
    இரும்பு கடித்தெய்த்தவாறே. 4.5.10

    அப்பரடிகள் மக்களின் பொதுவான இயல்பினைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறார். அவர் தம்மிடம் இருப்பதாகக் கூறும் தீக்குணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளன. இந்த உவமைகளைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக நம் உள்ளத்தில் பதிய வைப்பதன் மூலம் நம் குறைகளை நாம் உணர வைத்து முன்னேற வழி காட்டுகிறார் அவர்.

    படம் உதவி: http://www.artic.edu/aic/collections/artwork/34501

    Share
  • காதலின் பொன்வீதியில் – 3

    மீனாட்சி பாலகணேஷ்.

     இனிய காதலின் நிறைவான வடிவம்!

     

    ஆணழகனான வில்வீரன் அர்ஜுனன் வைத்த குறி தப்பாது அந்த அம்பு அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்டு வெகு தூரத்திலிருந்த அந்தக் கொடிய காட்டு மிருகத்தை வீழ்த்தியது. இதை அந்த அழகிய இளைஞன் பார்த்தான். பரவசம் கொண்டான்.

    ‘ஆகா! இத்தனை அற்புதமாக வேட்டையாடும் இவர் யார்? ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் இந்தத் திருவுருவுக்கு சொந்தமான இவர் யார்?’

    வினாக்கள் இளைஞனைக் குடைகின்றன. பார்த்த கண்கள் பார்த்தபடியே தான். உள்ளம் தன் வயமிழந்து அவர்பால் ஈடுபட்டு விட்டது. ஒரு வீரனுக்கல்லவோ இன்னொரு வீரனின் வீரத்தின் உயர்வு பற்றித் தெரியும்? ஆனால் … ஆனால்… அர்ஜுனனின் முன்பு நின்ற போதில் இந்த இளைஞனின் உள்ளம் குழைந்து தத்தளிக்கின்றதே! ஏன்?

    மதனன் எனும் காமதேவனிடம் இதனை விவரிக்கிறான் பால்வடியும் முகத்தினனான அந்த இளைஞன். “என் மெல்லிய உருவத்தைக் கண்டு அவருடைய இதழ்க்கடையில் ஒரு விசித்திரமான இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது. என் வாழ்வில் முதல்முறையாக நான் ஒரு பெண் எனவும், கம்பீரமான ஒரு வீரனின், ஆடவனின் முன் நிற்பதையும் உணர்ந்தேன்,” உள்ளத்தை இழந்து தவிக்கும் காதற்பெருக்கில் கண்ணீர் வழிந்தோடுகின்றது.

    என்ன குழப்பம் இது?யார் இந்த இளைஞன்?

    மணிபுரத்தின் அரசன் சித்ரவாகனனின் மகளான இளவரசி சித்ராங்கதா தான் ஆண்வேடம் பூண்ட அந்த இளைஞன்.

    சித்ராங்கதா மகாபாரதக் கதையில் வரும் ஒரு துணைப் பாத்திரம். அர்ஜுனன் தலைமறைவாக ஒரு நாடோடி போல் சுற்றித் திரிந்த காலங்களில் மணிபுரத்தை வந்தடைகிறான். இந்தக் கதையைக் கவியரசர் தாகூர் சிறிதே மாற்றியமைத்து சித்ராங்கதா- அர்ஜுனன் காதலை ஒரு புதிய கோணத்தில் நமக்குக் காண்பிக்கிறார்.

    காதற்கடவுளான மதனன் தனது உதவியாளன் வசந்தனுடன் இளவரசி சித்ராங்கதாவைச் சந்திக்கிறான். சித்ரா மதனனிடம் சொல்கிறாள்: “சிவபெருமான் என் தந்தையின் வம்சத்தினருக்கு ஆண்வாரிசுகளையே தருவதாக அருளியிருந்தார். ஆனாலும் என் விஷயத்தில் அது பொய்த்துப் போயிற்று. நான் என் தந்தைக்கு மகள் தான் பிறந்தேன். ஆகவே தான் பெண்ணான என்னை ஆண்மகனைப் போலவே வளர்த்து, வில் வாள் வித்தை பயிற்றுவித்தார். ஆண்மக்களின் உடைகளையே நானும் அணிந்து வந்தேன். அந்தப்புரத்தில் தங்குவதை விட்டொழித்தேன். பெண்மையின் நளினங்களும், குழைவுகளும், கண்களால் கணை தொடுப்பதும் எப்படியென நான் அறிந்திலேன்.”

    மதனன் ,”சரியான சமயத்தில் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களை உணரும் பாடத்தினைக் கற்பிப்பேன்,” என்றான்.

    “மதனா, அவர் அர்ஜுனன் என அறிந்ததும் என் மனம் என்ன பாடு பட்டது தெரியுமா? அவரை வணங்கவும் மறந்து சிலையாக நின்றேன். எனது கனவுகளின் நாயகன் அல்லவோ அவர்? அவரை வாள் வித்தையில் எதிர்கொண்டு எனது வாள் முறிவதை எதிர்பார்த்தேன்; நான் கற்ற போர்க்கலையை அவர் முன்பு காட்டி பெருமைப்பட எண்ணினேன். நான் இக்கனவுகளில் ஆழந்து சிலையென நின்றிருக்க, அவர் என் கண் முன்பே சென்று வனத்துள் மறைந்து விட்டார்.

    “அடுத்த தினம் நான் எனது ஆண் உடைகளை விடுத்து, கைவளைகள், பாதசரங்கள், இடையில் மேகலை, சிவந்த வர்ணப் பட்டாடை இவற்றைப் புனைந்து கொண்டு அவரைத் தேடிச் சென்றேன். சிவன் கோவிலில் அவரைக் கண்டேன்.

    ulupi

    “நான் பேசியதும் அவர் பதில் கூறியதும் என் நினைவில் இல்லை மதனா! ஆனால் என் மீது இடியிறங்கியது போன்ற சொற்கள்….. அவர் கூறியவை….. காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற மொழிகள்…. அர்ஜுனன் கூறினார்: ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். என்னால் உனக்குக் கணவனாக இருக்க இயலாது!’ ஆ! மதனா, இவை எத்தனை கொடூரமான சொற்கள்! எத்தனை எத்தனை ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் தவவலிமையை, ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் இழந்துள்ளார்கள்! நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன்? அர்ஜுனனின் காதலை வெல்லும் பெண்மையின் சுந்தர வடிவு எனக்கு இல்லாததால் தானே!

    “மதனா, காதலின் கடவுளே! எனது ஆண்மை போலும் வலிமையையும், பெருமையையும் நீ புழுதியில் கிடத்தி விட்டாயே!”

    காதலில், மையலில் ஆழ்ந்து விட்ட சித்ராங்கதா புழுவாகத் துடித்துப் புலம்புகிறாள்.

    இந்த நிலையின் உட்பொருளைத் தாகூர் உணர்த்தும் விதத்தினை நாம் உற்று நோக்க வேண்டும்.

    தான் பல காலங்களாகக் கனவு கண்டு மனதில் உருவகப் படுத்தி வைத்திருந்த பேராண்மை மிக்க ஆண்மகன், அர்ஜுனன்; அவனை நேரில் கண்டதும், சித்ராவின் பெண்மை உணர்வுகள் விழித்துக் கொண்டு அவன்மீது மீளாக் காதலில் ஆழந்து விடுகிறாள் பாவம்! ஆண்மகனை வெற்றி கொள்ளும் பெண்மையின் நளினங்களும், மென்மைச் செய்கைகளும் குணங்களும் அவற்றைப் பயின்றேயிராத அவளுக்கு இயற்கையாக அமையவில்லை; அவள் வளர்ந்த விதம் அவ்வாறு!

    மதனனும் வசந்தனும் அவள் துயரம் கண்டு அவளுக்கு ஒராண்டுக் காலத்திற்குப் பெண்மையின் மென்மை, இனிமை, ஒப்பற்ற அழகு இவற்றை வழங்குகின்றனர்.

    அடுத்த வந்த நாட்களில் சித்ராவின் இத்தகைய எழிலுருவைக் கண்ட அர்ஜுனன் அவள்பால் காதல் வயப்படுகிறான். காதலர்கள் இணைந்து இன்புறுகின்றனர்.

    *****************************************************

    கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம் இப்போது! மணிப்புர நாட்டைப் பகைவர்கள் தாக்குகின்றனர். நாட்டு மக்கள் தங்கள் நாட்டை இதுகாறும் காத்து வந்த தங்களது வீர இளவரசி சித்ராவைக் காணாததால் குழப்பத்திற்குள்ளாகுகின்றனர். அவள் எங்கோ எதற்கோ தவம் இயற்றச் சென்று விட்டதாக மக்கள் பேசிக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்கிறான் அர்ஜுனன்.

    “அவள், சித்ரா, வீரத்தில் தனக்கு நிகரில்லாத ஆண்மகன் ஆனவள்; மென்மையில் தனக்கு நிகரற்ற பெண்மணியானவள் என மக்கள் கூறுகின்றனர், அவள் எங்கே தான் சென்று விட்டாள்? அவளுக்கு வாழ்வில் என்ன குறை இருக்க முடியும்?” எனத் தான் யாரென்று இன்னும் அறிந்து கொண்டிராத சித்ராவினிடம் கூறுகிறான். தான் போய் மக்களுக்கு உதவ வேண்டும் எனப் பரபரக்கிறான். இளவரசி சித்ராங்கதாவைப் பற்றிய எண்ணங்களே அவன் மனதை ஆக்கிரமிக்கின்றன.

    அவளைப் பற்றியே பேசிவரும் அர்ஜுனனிடம் உண்மையான சித்ரா பொய்க்கோபம் கொள்கிறாள்.”என்ன குறை என்றோ கேட்டீர்கள்? அந்த துரதிருஷ்டசாலியிடம் என்ன இருந்தது? அவளுடைய பெருமைக்குரிய வீர தீரப் பிரதாபங்களும் குணங்களும் அவள் தனது பெண்மை உள்ளத்தை வெளிப்படுத்த ஒரு தடையாக நின்றனவே. நிறைவேறாத கனவுகள் கொண்டது அல்லவோ அவள் வாழ்க்கை,” எனத் துயரத்துடன் மொழிகிறாள் சித்ராங்கதா.

    அர்ஜுனன்: “பெண்ணே! இன்னும் அவளைப் பற்றி நீ அறிந்ததை எல்லாம் எனக்குக் கூறுவாய்.

    “என் மனக்கண்ணில் ஒரு வெண்புரவி மீதமர்ந்து, கடிவாளத்தை இடது கையிலும், வில்லினை வலது கையிலும் ஏந்தி வரும் அவளை நம்பிக்கையைத் தன்னைச் சுற்றிப் பரப்பி நிற்கும் ஒரு வெற்றி தேவதையாக நான் காண்கிறேன். ஒரு மூர்க்காவேசமான அன்புடன் தனது குட்டிகளைக் காக்கும் பெண்சிங்கமென அவளை நான் உருவகிக்கிறேன்; தடுக்க முடியாத உறுதியுடன் காணப்படும் பெண்மையின் கரங்கள், அழகுபடுத்தப்படாததும் மென்மையற்றதும் ஆயினும் மிகுந்த அழகு வாய்ந்தவை தெரியுமா?” எனவெல்லாம் இளவரசி சித்ராவைப் பற்றி உணர்ச்சிகரமாக அர்ஜுனன் வருணித்துக் கூறக் கேட்கிறாள் அவள்.

    அர்ஜுனனின் காதலின் பரிபூரணத்துவத்தை உணர்ந்து சிலிர்க்கிறாள் சித்ரா. பெண்மையின் அழகாலும், மென்மையாலும், நளினத்தாலும் மட்டும் தான் வெல்ல முடியும் எனத் தான் எண்ணியிருந்த அவனுடைய உள்ளத்தை, ஆண்மை முகிழ்க்கும் தனது முரட்டுப் பெண்மையாலும், அதில் உதித்த தன் கடமை உணர்வினாலும், அதன் தொடர்பான வீரத் திறத்தினாலுமே வெல்ல இயலும் என அறிந்து பேரானந்தம் அடைகிறாள். தனக்கு உவக்காத அந்தப் பொய்ம்மையான வேடத்தைக் கலைத்து விடுகிறாள்.

    “என் கனவுகளின் நாயகனே, உம்மைக் காதலில் வழிபட ஒப்பற்ற உருவ அழகினை நான் வேண்டிக் கேட்டு வாங்கி வந்தேன். என் வழிபாடு முடிந்து விட்டது. என் தெய்வத்தை நான் அறிந்து கொண்டேன். பூசனை செய்த காய்ந்த மலர்களை வெளியே வீசி விடுகிறேன்,” என்றபடி, அந்தக் கணத்தில் தான் அணிந்திருந்த போர்வை போன்ற மேல் அங்கியை விலக்கி விட்டு ஆண் உடையில் அவன் முன் நின்றாள் இளவரசி சித்ராங்கதா.

    “நான் தான் மணிபுரத்து இளவரசி சித்ரா. பெருமையுடன் எனது பெண்ணுள்ளத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். உருவில், வடிவில் நான் பெண்ணழகி அல்ல. என்னை என் உருவக் குறைபாடுகளுடன் ஏற்றுக் கொள்வீராக! உமது வீரம் மிகுந்த, கடினமான வாழ்வில் என்னை இணைத்துக் கொள்வீராக! உமது கடமைகளில் நான் பங்கெடுக்க அனுமதிப்பீராக! அப்போது உண்மையான என்னை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நமக்குப் பிறக்கும் மகனை இன்னொரு அர்ஜுனனாக வளர்ப்பேன். எனது தந்தைக்கும் இந்த நாட்டுக்கும் அவன் அடுத்த வாரிசாவான். இதுவே மணிபுரத்து அரசமகளான சித்ராங்கதா தங்களுக்கு அளிக்கும் உறுதிமொழி,” என்கிறாள்.

    “அன்பே! என் வாழ்வு உன் அன்பினால் முழுமை பெற்றது,” என்று மகிழ்வோடு உரைக்கிறான் காண்டீபன்.

    *****************************************************

    காதல் மனதில் அரும்பியதும், அதனால் எழும் பயங்களும் சந்தேகங்களும் நிவர்த்தியாகி, அக்காதலின் சக்தியினாலேயே அதன் முழுமையை உணர்ந்த மனமொத்த காதலர் இருவரைத் தம் ஈடிணையற்ற கற்பனைத் திறத்தினால் ஒப்பற்ற இலட்சியக் காதலர்களாக உருவாக்கிக் காட்டியுள்ளார் கவியரசர் தாகூர்.

    ஒரு உயரிய ஆண்மகனின் காதலில் தன் பெண்மையின் முழுமையையும் பெருமையையும் உணர்ந்தவளாகச் சித்ராங்கதாவையும், அவளுடைய தன்னலமற்ற, தன்னை அறிந்து கொண்ட அன்பில் அர்ஜுனன் கண்டெடுத்த அவளுடைய உறுதி வாய்ந்த உள்ளப் பண்பையும் அவ்வுள்ளத்துக் காதலையும் நமக்குக் காண்பித்த தாகூரின் படைப்பின் சிறப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா?

    ______________________________________________________

    பி.கு. அர்ஜுனன்- சித்ராங்கதாவின் மகன் தான் மகாபாரதத்தில் நாம் காணும் ஒரு வீரனான பப்ருவாகனன்.

    படம் உதவி: http://ritsin.com/mahabharata-curses-of-arjuna-indian-mythology.html/

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)

    பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2

    சுபாஷிணி

    -போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
    -கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.
    -ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    -உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து -ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

    இனிவரும் உலகம்  – தந்தை பெரியார்

    ‘ஆகா.. இன்றைய சூழலின் நிலையை அன்றே சொல்லிய தீர்க்கதரிசி’ என யாரேகினும் அதிசயத்தையும் மாய உணர்வுகளையும் இவர் மேல் வலியத்திணித்தால் நிச்சயம் கோபம் கொள்வார் தந்தை பெரியார். நிகழ்கால நிலையை உலகக்கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையையும் உருவாக்கக் கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்து பார்த்து சுய அறிவைக் கொண்டு செயல்படும் போது மனித சிந்தனை வருங்கால நிகழ்வுகளையும் ஓரளவு திட்டமிடக்கூடிய வல்லமையைப் பெறும். ஆயினும் மூட நம்பிக்கையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாது அல்லலுறும் பல மனிதர்களுக்கு அதிசயங்களும் மாயஜாலங்களும் மாய மந்திரங்களுமே உலகை நடத்துவதானதாக ஒரு எண்ணம் உறுதியாக இருக்கின்றது.

    asu1

    மக்கள் பெரும்பாலும் பழமை வாதத்தைப் பிடித்துக் கொண்டு, மாறி வரும் புதிய உலகிற்கு ஏற்றவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள ஒப்பற்ற பரிசாக இருக்கும் கல்வியினைப் பெற்று ஆண் பெண் பேதமின்று இருபாலரும் சிந்தனை வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவிக்கும் திறன் கொண்டோரோக இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்காக மக்களை சந்தித்து தமது சொற்பொழிவுகளின் வழியாகவும் பத்திரிக்கைகளின் வழியாகவும் தமது கருத்துக்களை பரப்பியவர் திரு.ஈ.வெ.ரா அவர்கள்.

    இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் பெரியார் எழுதிய சில கடிதங்களும், பெரியாருக்கு ஏனைய சிலர் எழுதிய கடிதங்களும் இருக்கின்றன. திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை 6.6.1928ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்று இங்கு காட்சிக்கு உள்ளது. அது போல பேரறிஞர் அண்ணா எழுதிய ஒரு கடிதமும், மூதறிஞர் திரு.இராஜாஜி 8.1.1925ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்றும் இங்கே உள்ளது.

    பெரியார் பயன்படுத்திய சில பொருட்கள், நாற்காலி, உடைகள் என்பனவும் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    asu2

    பெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின் படி கீழ்க்காணும் தினசரி, வார மாத இதழ்கள் தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்டவையாக அறிய முடிகின்றது.

    குடியரசு வார ஏடு – துவக்கிய நாள் 2.5.1925
    திராவிடன் தினசரி ஏடு – துவக்கிய நாள் செப்டம்பர் 1927
    ரிவோல்ட் வார ஏடு (ஆங்கிலம்) – துவக்கிய நாள் 6.11.1928
    புரட்சி வார ஏடு – துவக்கிய நாள் 20.11.1933
    பகுத்தறிவு வார ஏடு – துவக்கிய நாள் 15.3.1934
    விடுதலை நாளேடு – துவக்கிய நாள்1.6.1935
    திராவிட நாடு வார ஏடு – துவக்கிய நாள் 7.3.1942
    லிபரேட்டர் (ஆங்கிலம்) நாளேடு – துவக்கிய நாள்7.12.1942
    உண்மை (மாதம் இரு முறை) இதழ் – துவக்கிய நாள் 14.1.1970
    தி மாடர்ட் ரேசனாலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) – துவக்கிய நாள் செப்டம்பர் 1971

    asu3
    எழுத்துக்களின் வழி சமூகப்புரட்சியைச் செய்வது என்பது சாதாரண மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு யுக்தி. பொதுமக்களின் சிந்தனையில் படிப்படியாக தெளிவினை கொடுத்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது மக்களை பலதரப்பட்ட நாட்டு நிலவரங்கள் அடங்கிய, விழிப்புணர்வினைத் தரக்கூடிய பத்திரிக்கை செய்திகள் தாம்.

    asu4

    இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை என்பது மிக விரிவாக வளர்ந்துவிட்டது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு புறம் இருக்க தேவையற்ற மலிவான தரமற்ற விசயங்களையும் வழங்கி பொது மக்களின் வாசிப்பு நோக்கத்தினை திசை திருப்பும் பணியையும் மேற்கொள்வது ஒரு விதமான சமூக சீர்கேடு என்றே கருதத் தூண்டுகின்றது. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பத்திரிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உருவாக்கவும், சமூக சீர்கேட்டினைச் சரி செய்யவும், தொழிலாளர் நலனுக்காகவும் என்ற வகையில் சமூகப் பார்வையை முன் வைத்து தொடங்கப்பட்டன. அதன் நோக்கம் மிக உயரியதாக இருந்ததால் அதன் விளைவாக பொது மக்கள் மத்தியிலே கல்விச் சிந்தனை, புதுமை சிந்தனை, பொது நலச்சிந்தனை, விரிவான மாற்றம் புரட்சிகரமான சிந்தனை ஆகியற்றிற்கு வித்திட்ட பங்கினையும் பத்திரிக்கைகள் ஆற்றின.

    தொடரும்…

    Share
  • தேகமும் யோகமும் – பகுதி 7

    கவியோகி வேதம்

    yoga

    என்னுடைய தேகமும் யோகமும் தொடரைப் படித்து வருகிற சில அன்பர்கள் ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்’என்று போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது.  மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “இனிஷியேஷன்”, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும் (நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (தொடு அதிர்வுகள்) மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!

    1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசினிடம் ’ (பெரியப்பா பையன்) இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். புத்தகத்தில் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் ஏதோ ஒரு பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான். சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ்குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு (சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில் (என்மேல் பொறாமை?) மூச்சைப்பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக்கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.இது தப்பன்றோ?

    பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் என்  பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ  இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே” என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்தது! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப் பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே, அதோ அந்தத் ‘தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?

    அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன். ஆனால், தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப்படிக்கவும்.

    ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது. இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை. ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும். இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும். உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால் சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டுபண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான். அவர் அவனிடம் “டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய். இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கரஇழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?

    துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும், மனம் காயப்படும்போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும், தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன் (positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை. ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம் சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால் மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.

    ஆம்! பழக்கமாகும் வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனையவேண்டும். அதில் தடைவந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகிவிடுவான் உடனே. தெய்வீகப் பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக் காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்- பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த இதழில் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்)-

     தொடரும்

    பி.கு.

    எமது ஆஸ்ரமத்தின்..அற்புத- ‘இலக்கியவேல்’
    (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
    வாங்கிப்பின்பு உங்கள் நல்ல, மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும்
    அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
    சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
    pl. remit to ‘Ilakkiyavel’ C/a no-6177358926. at INDIAN BAnk- Neelankarai br,
    bank’s iFSC code–IDIB 000N089.. or send yur cheq favg Ilakkiyavel..
    to my address below only.200 ம் அனுப்பலாமே.
    கவியோகி வேதம்(kaviyogi vedham)-
    —தற்போது சென்னைக்கு வந்துவிட்டேன்(நீலாங்கரை)
    PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
    kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
    Founder, Sree Laharibabaji yogasram,
    2/682, 10th cross St,…Renga reddy garden,
    Neelankarai, Chennai-600115–
    cel no=095000-88528

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(148)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இங்கிலாந்தில் தேர்தல் நடக்கும் இவ்வாரத்திலே இம்மடல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒவ்வொருநாடும் அந்நாட்டிலுள்ள மக்களை உள்ளடக்கிய சமூகங்களினாலும், சமுதாயங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.

    அந்நாட்டின் கலாச்சார வழமைகள் அந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பின்னனியில் காலமாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

    இந்தச் சமூகங்களும், சமுதாயங்களும் எவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? சமுதாய அங்கத்தினர்கள் ஏதோ தனியாக, விசேடமாக படைக்கப்பட்டவர்களா ?

    அன்றி நாட்டினை ஆளும் அரசியல்வாதிகளும் மற்றைய அரசியல் அங்கத்தினர்களும் ஏதோ அதற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டவர்களா?

    இல்லை. சமுதாயம் என்பது சாதரண மக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பே ! அதேபோல அரசியல்வாதிகள் என்போரும் அச்சமுதாயத்திலிருந்து நாட்டினில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்வை முன்னேற்றும் பொதுநலநோக்கம் கொண்ட சாதாரண மக்களே !

    சமீபத்தில் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்வு என் மனதில் பல சிந்தனைத்துளிகளுக்கு வித்திட்டது.

    சில நாட்களுக்கு முன்னால் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அங்காடி ஒன்றில் சில பொருட்களை வாங்கச் சென்ற என் மனைவியை அவ்வங்காடியின் முன்னால் இறக்கி விட்டு விட்டு நான் காரினுள் உட்கார்ந்திருந்தேன்.

    அந்த அங்காடியின் முன்னே ஒரு நாலு அல்லது ஐந்து கார்களை நிறுத்துவதற்கான வசதியே இருந்தது. என்னுடைய காரை நிறுத்தியதும் வேறு கார்களை நிறுத்த இடமிருக்கவில்லை.

    அப்போது ஒரு புத்தம் புதிய பென்ஸ் காரொன்று அக்கார்கள் நிறுத்தியிருந்த இடத்தின் முன்னே வந்து நின்றது.

    அக்காரை நிறுத்த அங்கே இடமில்லாததினால் அக்கார் எமது கார்களுக்கு முன்னால் நின்றிருந்தது. அதன் முன் இருக்கைகளில் இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கார்ச்சாரதி.

    அக்காரின் பின்கதவு திறந்து அதிலிருந்து ஒரு வயதான ஆங்கிலேய மனிதர் இறங்கி அந்த அங்காடியினுள் நுழைந்தார்.

    அவ்விரு பெண்களும் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பார்கள் என்பது என் அனுமானம்.

    throwing rubbish 2கார்ச்சாரதியான பெண்மணியின் ஜன்னல் திறந்தது … அக்காரினுள் அப்பெண் வைத்திருந்த குப்பைகளைச் சேகரித்து அந்த ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்.

    அவரின் செய்கையை ரசித்த அவர் அருகே இருந்த பெண்மணி பலமாகச் சிரித்தார்.

    அவர்கள் அக்குப்பைகளை எறிந்த இடம் ஒரு ஒதுக்குப்புறமான இடமோ அன்றி ஒரு குப்பை கொட்டும் இடமோ அல்ல.

    அது அந்த அங்காடிக்குச் சொந்தமான மிகவும் சுத்தமாக பொதுமக்கள் பாவனை செய்யும் ஒரு இடம்.

    அதைச் செய்தவர்களோ வாழ்க்கையின் நடுத்தர வர்க்கமல்ல சமுதாயத்தில் மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் வந்திருந்த காரிலிருந்து அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களில் இருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

    இச்செயலை எனது காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் பலவகையான எண்ணங்கள் ஓடின.

    நாம் நட்புடன் சம்பாஷிக்கும் பல ஆங்கிலேய நண்பர்களிடம் தற்போதைய இங்கிலாந்து மிகவும் மோசமடைந்து விட்டது எனும் ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.

    இந்நிலைக்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறும் வெளிநாட்டவரே காரணம் எனும் கருத்தும் அநேகரிடம் உண்டு.

    ஆனால் அன்று என் கண்முன்னே ஒரு அநாகரிகமான செயலைச் செய்தவர்கள் ஆங்கிலேயப் பெண்மணிகளே !

    அதுவும் சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள்.

    இதற்குக் காரணம் தான் என்ன ? நாம் அனைவரும் இச்சமுதாயத்தின் ஒரு அங்கம். இங்கு நடக்கும் அனைத்திலும் எமக்கும் பாரிய பங்குண்டு எனும் அடிப்படைக் கருத்து அவர்கள் மனதை விட்டு அகன்றததினாலா .

    throwing rubbish 1இல்லை, அட … எல்லோரும்தான் குப்பை போடுகிறார்களே நாம் போட்டு விட்டால் மட்டும் என்ன குறைந்து போய்விடும் எனும் எண்ணமா ?

    ஒரு நாட்டின் கலாச்சாரச் சீரழிவிற்கு அந்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டும் காரணமில்லை. சுயநலப் போக்குக் கொண்ட அனைத்து மக்களுமே காரணமாகிறார்கள்.

    நாம் மேற்கோள் காட்டிய நிகழ்வு ஒரு சிறிய நிகழ்வே ! அட இதைப்போய் பெரிதாய் சொல்ல வந்து விட்டாயே என்று கூட நீங்கள் எண்ணலாம்.

    ஒரு சோற்றுக்கு ஒரு பதம் என்பார்கள். இச்சிறிய நிகழ்வின் அடிப்படை இந்நாட்டில் நடக்கும் பல பெரிய நிகழ்வுகளை விளக்கும் வல்லமை கொண்டது.

    நான் 40 வருடங்களுக்கு முன்னால் கண்ட இங்கிலாந்திற்கும் இன்றைய இங்கிலாந்திற்கும் என்ன வேறுபாடு என்று எண்ணும் போது வாழ்க்கையில் அடிப்படிப் பண்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மையில் காணப்படும் வேறுபாடே காரணம் எனும் உண்மை புரிகிறது.

    எமது நடவடிக்கைகளுக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் அரசியல்வாதிகளை குறைகூறுவதில் என்ன பலன் ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • தேரோடும் எங்க சீரான மதுரையிலே …

    — கவிஞர் காவிரிமைந்தன். 

    பாகப்பிரிவினை

    தமிழக பாரம்பரியக் கலைகளுள் ஒயிலாட்டமும் ஒன்று. எத்தனையோ கலைகள் அழிந்து வருகின்றன… அவற்றைக் காப்பதும் பராமரிப்பதும் நமது கடமை… இதற்கென உரிய நடவடிக்கைகள் எடுப்பது தமிழக அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. நமக்கான அடையாளம்… நம் மண்ணுக்குரிய பெருமை… நம் முன்னோர்களின் தனித்திறம்… நமது கலாச்சார பிம்பங்கள்… இவைகளை விடுத்து தமிழனின் வாழ்வியலை நாளைய தலைமுறைக்கு சொல்லிவிட முடியாது. கலை என்பது மக்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று. இன்று அதன் வடிவங்கள் மாறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய நவீனங்களுக்கு மூலம் … வித்து… வேர் எல்லாம் நமது பாரம்பரியக் கலைகளே என்பதை மறுக்க முடியாது.

    தமிழ் வளர்த்த மதுரையை மையமாக வைத்து இன்று மட்டுமல்ல … அன்று முதல் படங்களும்… பாடல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வைகை ஆறும் அதன் வளமும்… மனித வாழ்வின் தொடக்கம் நதிக்கரை நாகரீகங்களே என்கிற அடையாளங்களாய் … ஒரு சமூகப் பின்னணியோடு… சமுதாயப் பிரதிபலிப்புகளை கலை என்கிற ஊடகம்தான் காலங்களைத் தாண்டி இட்டுச் செல்கிறது.

    கவிஞர் மருதகாசி எழுதியிருக்கும் இந்தத் திரைப்பாடலில் மண்ணின் மனம் மணக்கும். மாற்றுக்குறையாத தங்கம்போன்ற தமிழர்தம் பெருமைகள் இருக்கும். அவர்தம் வாழ்வியல் எப்படி இருந்தது … அகத்துறை ஆட்சி எப்படி நடந்தது போன்ற சங்கதிகளும் தெரியும். கலை என்பது மக்களிடம் இசையையும் மொழியையும் இணைத்து… நடனமும் கூட்டித் தரும்போது அதை விரும்பாத உள்ளங்கள் ஏது?

    பாடலின் தொடக்கத்தைக் கேளுங்கள்… வளம் எப்படி இருந்தது என்று கவிஞர் விளக்கம் தருகிறார்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பாத்திரப்படி ஒரு கையில் ஊனமாக நடிப்பில்… உச்சம் தொட்டிருக்கிறார். அப்படியே ஆடலில் அவர் காட்டியிருக்கும் உற்சாகம் … வியக்க வைக்கும். குழுவினர் கூடி ஆடிப் பாடும் இது போன்ற அனைத்து அம்சங்களும் அமைந்த பாடல் நம் மனதை மறக்க முடியாமல் செய்கிறது.

    ஓ..ஓஓஓ..
    பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
    ஆ…ஆ..ஆ.. ஓஓஓ
    பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ..
    ஆ..ஆ… ஓ..ஓ
    மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
    தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
    ஓ..ஓ….

    தேரோடும் எங்க சீரான மதுரையிலே
    ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
    தேரோடும் எங்க சீரான மதுரையிலே
    ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

    நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
    நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

    தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
    தங்க வளையல்கள் ஐய வந்தோமென
    தங்க வளையல்கள் ஐய வந்தோமென
    கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
    வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
    தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
    ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

    சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
    சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
    சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
    அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
    ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

    நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

    சித்திரை மாதம் முத்துகள் வித்து
    திரும்பி இங்கே வருவதென்றே
    சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
    தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
    ஓ ராமாயம்மா

    வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
    விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
    உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
    உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
    ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

    சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
    சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
    சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
    அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
    ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

    நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

    மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
    மாலை சூடி மணப்பதென்று
    சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
    தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
    ஓ ராமாயம்மா

    கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
    கொள்ளை ஆசை பிறந்திருக்கு
    வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
    ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

    தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
    தங்க வளையல்கள் ஐய வந்தோமென
    தங்க வளையல்கள் ஐய வந்தோமென
    கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
    வண்டுவிழியெனும் செண்டைகள் துள்ளிட

    தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
    ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
    நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

    ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
    ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
    ஓ…

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    பாடல்: தேரோடும் எங்க சீரான மதுரையிலே
    திரைப்படம்: பாகப்பிரிவினை (1959)
    இயற்றியவர்: மருதகாசி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
    காணொளி: https://youtu.be/AGtutIb5JWQ

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

     

    Share
  • விவசாயி

    -மீனா கண்ணதாசன்

    அவன் ஏர் பிடிக்க
    அவன் புகழ் படிக்க
    ஏழை விவசாயின்
    பெருமை பாடப்
    பட்டமும், படிப்பும்
    எழுத்துக்களும்
    மண் வாசம் பெற்று
    உழவனின் நேசத்தில்
    பெருமையடைகின்றன!

    விண்ணும், மண்ணும்
    உறவென வாழ்ந்தாயோ…
    மண்ணின் வாசம்
    இவனுக்கு உயிர் சுவாசம்
    மண்ணையும் சுவாசித்துப் பார்
    விவசாயின் வியர்வை வாசம் வரும்
    வட்டிக்குப் பணம் வாங்கி
    விதைநெல் வாங்கி
    முத்துப் போல் விதைத்துக்
    கர்ப்பம் போல் காத்துப்
    பெற்றெடுத்த பிள்ளை
    போல் வளர்த்து…

    நோய், நொடியின்றிக் காத்துப்
    பக்குவமாய் அரும்பாடுபட்டு
    அல்லும் பகலும் உழைத்து
    முத்து மணிகளைப் போல்
    நெல்மணிகளைச் சேர்ப்பான்
    பேரம் பேசும்
    பணக்கார மனிதர்களிடம்!

    அழுக்கு உடையில் இருந்தாலும்
    அழுக்கில்லா உள்ளம் படைத்தவனே…
    உழைப்பால் மற்றவர்களுக்குப் பசி, ருசி
    கொடுத்தவனே விவசாயி…
    விவசாயின் நிலையோ
    பசியால் வாடி,
    வறுமையில் நொந்து
    உனது அன்றாட வாழ்வும்
    துயரப்படும்
    நிலை தானோ இவ்வுலகில்…?

    உழவன் நிலை மாற வேண்டும்
    விவசாயமும், விவசாயியின்
    வாழ்வும் செழிக்க வேண்டும்!

     

    Share