இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(148)
—சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
இங்கிலாந்தில் தேர்தல் நடக்கும் இவ்வாரத்திலே இம்மடல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.
ஒவ்வொருநாடும் அந்நாட்டிலுள்ள மக்களை உள்ளடக்கிய சமூகங்களினாலும், சமுதாயங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் கலாச்சார வழமைகள் அந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பின்னனியில் காலமாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.
இந்தச் சமூகங்களும், சமுதாயங்களும் எவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? சமுதாய அங்கத்தினர்கள் ஏதோ தனியாக, விசேடமாக படைக்கப்பட்டவர்களா ?
அன்றி நாட்டினை ஆளும் அரசியல்வாதிகளும் மற்றைய அரசியல் அங்கத்தினர்களும் ஏதோ அதற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டவர்களா?
இல்லை. சமுதாயம் என்பது சாதரண மக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பே ! அதேபோல அரசியல்வாதிகள் என்போரும் அச்சமுதாயத்திலிருந்து நாட்டினில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்வை முன்னேற்றும் பொதுநலநோக்கம் கொண்ட சாதாரண மக்களே !
சமீபத்தில் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்வு என் மனதில் பல சிந்தனைத்துளிகளுக்கு வித்திட்டது.
சில நாட்களுக்கு முன்னால் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அங்காடி ஒன்றில் சில பொருட்களை வாங்கச் சென்ற என் மனைவியை அவ்வங்காடியின் முன்னால் இறக்கி விட்டு விட்டு நான் காரினுள் உட்கார்ந்திருந்தேன்.
அந்த அங்காடியின் முன்னே ஒரு நாலு அல்லது ஐந்து கார்களை நிறுத்துவதற்கான வசதியே இருந்தது. என்னுடைய காரை நிறுத்தியதும் வேறு கார்களை நிறுத்த இடமிருக்கவில்லை.
அப்போது ஒரு புத்தம் புதிய பென்ஸ் காரொன்று அக்கார்கள் நிறுத்தியிருந்த இடத்தின் முன்னே வந்து நின்றது.
அக்காரை நிறுத்த அங்கே இடமில்லாததினால் அக்கார் எமது கார்களுக்கு முன்னால் நின்றிருந்தது. அதன் முன் இருக்கைகளில் இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கார்ச்சாரதி.
அக்காரின் பின்கதவு திறந்து அதிலிருந்து ஒரு வயதான ஆங்கிலேய மனிதர் இறங்கி அந்த அங்காடியினுள் நுழைந்தார்.
அவ்விரு பெண்களும் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பார்கள் என்பது என் அனுமானம்.
கார்ச்சாரதியான பெண்மணியின் ஜன்னல் திறந்தது … அக்காரினுள் அப்பெண் வைத்திருந்த குப்பைகளைச் சேகரித்து அந்த ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்.
அவரின் செய்கையை ரசித்த அவர் அருகே இருந்த பெண்மணி பலமாகச் சிரித்தார்.
அவர்கள் அக்குப்பைகளை எறிந்த இடம் ஒரு ஒதுக்குப்புறமான இடமோ அன்றி ஒரு குப்பை கொட்டும் இடமோ அல்ல.
அது அந்த அங்காடிக்குச் சொந்தமான மிகவும் சுத்தமாக பொதுமக்கள் பாவனை செய்யும் ஒரு இடம்.
அதைச் செய்தவர்களோ வாழ்க்கையின் நடுத்தர வர்க்கமல்ல சமுதாயத்தில் மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் வந்திருந்த காரிலிருந்து அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களில் இருந்தும் தெளிவாகத் தெரிந்தது.
இச்செயலை எனது காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் பலவகையான எண்ணங்கள் ஓடின.
நாம் நட்புடன் சம்பாஷிக்கும் பல ஆங்கிலேய நண்பர்களிடம் தற்போதைய இங்கிலாந்து மிகவும் மோசமடைந்து விட்டது எனும் ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.
இந்நிலைக்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறும் வெளிநாட்டவரே காரணம் எனும் கருத்தும் அநேகரிடம் உண்டு.
ஆனால் அன்று என் கண்முன்னே ஒரு அநாகரிகமான செயலைச் செய்தவர்கள் ஆங்கிலேயப் பெண்மணிகளே !
அதுவும் சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள்.
இதற்குக் காரணம் தான் என்ன ? நாம் அனைவரும் இச்சமுதாயத்தின் ஒரு அங்கம். இங்கு நடக்கும் அனைத்திலும் எமக்கும் பாரிய பங்குண்டு எனும் அடிப்படைக் கருத்து அவர்கள் மனதை விட்டு அகன்றததினாலா .
இல்லை, அட … எல்லோரும்தான் குப்பை போடுகிறார்களே நாம் போட்டு விட்டால் மட்டும் என்ன குறைந்து போய்விடும் எனும் எண்ணமா ?
ஒரு நாட்டின் கலாச்சாரச் சீரழிவிற்கு அந்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டும் காரணமில்லை. சுயநலப் போக்குக் கொண்ட அனைத்து மக்களுமே காரணமாகிறார்கள்.
நாம் மேற்கோள் காட்டிய நிகழ்வு ஒரு சிறிய நிகழ்வே ! அட இதைப்போய் பெரிதாய் சொல்ல வந்து விட்டாயே என்று கூட நீங்கள் எண்ணலாம்.
ஒரு சோற்றுக்கு ஒரு பதம் என்பார்கள். இச்சிறிய நிகழ்வின் அடிப்படை இந்நாட்டில் நடக்கும் பல பெரிய நிகழ்வுகளை விளக்கும் வல்லமை கொண்டது.
நான் 40 வருடங்களுக்கு முன்னால் கண்ட இங்கிலாந்திற்கும் இன்றைய இங்கிலாந்திற்கும் என்ன வேறுபாடு என்று எண்ணும் போது வாழ்க்கையில் அடிப்படிப் பண்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மையில் காணப்படும் வேறுபாடே காரணம் எனும் உண்மை புரிகிறது.
எமது நடவடிக்கைகளுக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் அரசியல்வாதிகளை குறைகூறுவதில் என்ன பலன் ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan