சு. கோதண்டராமன்.

Captureஉவமை என்பது அணிகளுக்குள்ளே முதன்மையானது; பிற அணிகளுக்கு அடிப்படையானதும் கூட. உவமை அணியைப் பயன்படுத்தாத புலவர் இல்லை. திருநாவுக்கரசு நாயனாரும் இதனை விரிவாகப் பயன்படுத்துகிறார்.

இறைவனின் புகழ் உரைக்கும் அதே வேளையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுவது அப்பரடிகளின் தனிச்சிறப்பு. அவரைத் தொடர்ந்து மணிவாசகரும், அருணகிரியாரும், பின்னர் ராமலிங்க வள்ளலாரும் இதே பாணியைப் பின்பற்றினர்.

நாயனாரின் உவமைகளை பொருள் உவமை, நிகழ்வு உவமை என இருவகையாகப் பிரிக்கலாம். முத்து, பவளம், தேன், குன்று போன்ற உயர்ந்த பொருட்களை உவமையாக்குவது பொருள் உவமையாகும். இந்த உவமைகள் பெரும்பாலும் ஒரு சொல் அல்லது இரு சொல்லாக இருக்கும். பொதுவாக, இறைவனை வர்ணிக்கும்போது பொருள் உவமைகளைப் பயன்படுத்துகிறார்.

வெள்ளிக் குன்றன்ன விடையான்
கருமணிபோற் கண்டத்தழகன்
முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினைச் சுடர் போலொளிப் பித்தனை
சுடரைப் போலொளிர் சுண்ண வெண்ணீற்றனை
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

தன் கீழ்மையைக் குறிப்பிடும்போது நிகழ்வு உவமைகளைப் பயன்படுத்துகிறார். சொல் தொடர்களாக உள்ள இவை ஒரு நிகழ்வாகவோ, ஒரு கதையின் சுருங்கிய வடிவமாகவோ அல்லது பழமொழியாகவோ இருக்கக் காண்கிறோம். அத்தகைய உவமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஊருக்குப் புதியவன் ஒருவன் ஒரு குளத்துக்கு வருகிறான். அக்குளத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். குளத்துக்கு ஒரு காவல்காரர் உண்டு. ஆனால் அவர் தன் கடமையைப் புறக்கணித்து எங்கோ போய்விட்டார். அந்நிலையில் குளக்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை அவன் வினவுகிறான். அவர்களோ வம்பர்கள். ‘குளத்தின் ஆழத்தை நீயே தெரிந்து கொள்’ என்று சொல்லி அவனைக் குளத்துக்குள் தள்ளிவிட்டார்கள். ஆழம் நிலை கொள்ளவில்லை. எந்தத் துறைப் பக்கம் சென்றால் கரையேற முடியும் என்பதை அறியாமல் அவன் தவிக்கிறான்.

இந்த நிலையில் தான் இருப்பதாக அப்பர் தெரிவிக்கிறார். உய்யும் வழியை முறையாக அறிவிப்பாரின் நட்பு எனக்கு முன்னதாகக் கிடைக்கவில்லை. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன். சிவபெருமானின் பெருமையை அறிந்தோரின் வார்த்தைகளை முன்னமே நான் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்துகிறார்.

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொளென்று சொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைகொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 4.1.5

காம வயப்பட்டு இறைவனை மறந்து திரிவர் பலர். ஏதோ நல்வினைப் பயனால் அவர்களுக்கு இறையருள் நெறிக்குத் திரும்பும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஆனால் அவர்கள் மனமோ பழைய பொய்ந் நெறியிலேயே செல்ல விழைகிறது. உழுத வயலையே மறுபடியும் யாராவது உழுவார்களா? இந்தப் பேதை நெஞ்சம் மட்டும் ஏன் இப்படிப் பழைய பாதையிலேயே நாட்டம் கொள்கிறது என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.

எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. 5.90.8

நரி ஒன்று வாயில் கவ்விய நல்ல ஊனுடன் நீர் நிலையைக் கடந்து செல்லும் போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டு அதனை அடைய விரும்பி தன் வாயில் இருந்ததையும இழந்த கதை போல மக்கள் கிட்டாத பொருட் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிட்டியதாகிய சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். அத்தகையோருக்கும் சிவபெருமான் அருள் புரிவார்.

நரிவரால் கவ்வச் சென்று
நற்றசை இழந்தது ஒத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை
தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 4-27-5

ஒரு நல்ல இல்லத்தரசி என்றால் நண்பகலில் பசிக்கும் என்பதை உணர்ந்து முற்பகலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வாள். பேதையாக இருந்தால் முற்பகலை வீணே கழித்துவிட்டு, பசி வந்த பின் உணவு தயாரிக்க முற்படுவாள். அது போலப் பேதையாகிய நான் வாழ்வின் முற்பகுதியை வீணே கழித்து விட்டு, முதுமையில் உடல் நலிவுற்றபின் இறை வழியைத் தேடுகின்றேன் என்று தன்னை இகழ்ந்து கொள்கிறார் வாகீசப் பெருமான்.

பின்பகல் உணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் 4.28.1

நீர்க் கரையில் நிற்கும் கொக்கு தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெறுகிறது. மரத்தின் மீது அமர்ந்துள்ள கொக்கோ வயிற்றை நிரப்ப முயற்சி செய்யாமல் பசியால் வாடி வாய் விட்டு அலறுகிறது. அது போல மக்கள் துன்பத்தில் உழன்று அலறுகிறார்களே அன்றி உய்யும் வழியைக் கடைப்பிடிக்காமல் தீய குணங்கள் ஆகிய சரக்கைச் சுமந்து திரிகிறார்கள் என்கிறார் அடிகள்.

மரக்கொக் காமென வாய்விட்டலறி
சரக்குக் காவித் திரிந்து 5-75-1

முன்னாள் சமணராகிய அவர் நகைப்புக்குரிய தன் பழைய நிலையை விவரித்து விட்டு, அதிலிருந்து தான் தப்பியதையும் கூறுகிறார்.

சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர். கைகளிலிருந்து நெய் கீழே சொட்டும்போது, அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாமல், கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்காகக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்பர். அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன்.

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன் 6.11.9

இறைவனை வழிபடுவதற்குரிய தலங்கள் உள்ளன. அங்கு சென்று உய்யும் நெறியிற் கலவாமல் மக்கள் இன்பத்தை எங்கெங்கோ தேடுகின்றனர். ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தில் தேடும் அறிவிலிகள் உண்டோ என்று வியக்கிறார் நாவுக்கரசர்.

துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் தேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்து உலகெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. 4.97.6

இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார்.

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்தென்னைக் கோகுசெய்தாய் 4-100-2

பயன் அற்ற பாழ் நிலத்தில், நல்ல நீரை வீணாகப் பாய்ச்சியது போன்ற தன் மடமையை வெளிப்படுத்துகிறார்.

பாழுக்கே நீரிறைத்து
வழியிடை வாழ மாட்டேன் 4-31-6)

ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போலவும் தான் இருந்ததாக அப்பர் பெருமான் கூறுகிறார்.

கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6

செஞ்சுடர் விளக்கத்தில் (சூரிய உதயத்தில்) கூவுங் கோழியை விலக்குவார் உளரோ? கோழி தானே கூவித் தானே அடங்கும். அவ்வாறே தாம் தகாதன செய்யும் காலத்தில், விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே ஓய்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

விலக்குவார் இலாமையாலே
விளக்கத்திற் கோழி போன்றேன் 4.31.5

துன்பத்தை அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாகத் தான் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

உற்றலாற் கயவர் தேறார்
என்னும் கட்டுரையோடு ஒத்தேன் 4.31.8

அப்பரடிகளின் தேவாரத்தில் பழமொழிப் பதிகம் என்றே ஒன்று உண்டு. பரம்பரைச் சைவராகிய அவர் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது, பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது, சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது, பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார். அந்தப் பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பினேன்.

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1

கைப்பற்றுதற்கு எளிதாகவும், உண்பார்க்குச் சுவையை உடையதுமான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய், கைக்கொண்டாலும் உண்ணத் தகுதியற்றதாய் உள்ள காக்கையின் பின் சென்ற அறிவிலியைப் போன்றவன் நான்.

முயல்விட்டுக்
காக்கைப் பின் போனவாறே. 4.5.2

அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவன்.

அறமிருக்க
மறம் விலைக்குக் கொண்டவாறே. 4.5.3

திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போன்றவன்.

பனிநீராற்
பாவை செயப் பாவித்தேனே. 4.5.4

ஒருவன் ஏற்படுத்திய சண்டையில் அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலத் துன்புற்றேன்.

ஏதன் போர்க்கு
ஆதனாய் அகப்பட்டேனே. 4.5.5

இருட்டறையில் மலட்டுப் பசுவைப் பால் வேண்டிக் கறக்க முனைந்து உதைபடும் அறிவிலி நான்.

இருட்டறையின்
மலடு கறந்து எய்த்தவாறே. 4.5.6

விளக்கு இருக்கும்போது, மின்மினியினுடைய தீயைக் குளிர் காயக் கொள்வாரைப் போன்றவன்.

விளக்கிருக்க
மின்மினித்தீக் காய்ந்தவாறே. 4.5.7

மக்கள் குடியில்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்த அறிவில் வறிஞன்.

பாழூரிற்
பயிக்கம் புக்கு எய்த்தவாறே. 4.5.8

செய்தற்குரிய செயலாகத் தவம் இருக்கும்போது, அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டேன்.

தவமிருக்க
அவஞ்செய்து தருக்கினேனே. 4.5.9

மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்தேன்.

கரும்பிருக்க
இரும்பு கடித்தெய்த்தவாறே. 4.5.10

அப்பரடிகள் மக்களின் பொதுவான இயல்பினைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறார். அவர் தம்மிடம் இருப்பதாகக் கூறும் தீக்குணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளன. இந்த உவமைகளைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக நம் உள்ளத்தில் பதிய வைப்பதன் மூலம் நம் குறைகளை நாம் உணர வைத்து முன்னேற வழி காட்டுகிறார் அவர்.

படம் உதவி: http://www.artic.edu/aic/collections/artwork/34501

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *