இலக்கியம்

பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி:  புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும்

 

ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புர(வு)
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் – ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
ஈட்டிய ஒண் பொருள் இன்று எனினும் ஒப்புரவு
ஆற்றும் மனை பிறந்த சான்றவன் ஆற்றவும்
போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
ஏற்று கன்று ஏறு ஆய்விடும்

பொருள் விளக்கம்:
தான் உழைத்துச் சேகரித்த மிகுந்த செல்வம் இல்லாது போன வறுமையிலும், உலக நடைமுறையை மதித்து வாழும் குடியில் பிறந்த சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவிடார். (அவர் கொண்ட இப்பண்பானது) மிகவும் கருத்துடன் போற்றி வளர்க்கப்படாது, பசும்புல்லும் உண்ண வழியின்றி எதையோ மேய்ந்து வளர்ந்தாலும் நல்ல எருதிற்குப் பிறந்த கன்று நல்லதொரு காளையாக வளர்ந்துவிடுவது போன்ற பண்பிற்கு ஒப்பானது.

பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்தோர், வாழ்வில் வறுமை சூழ்ந்தாலும் உலக நடைமுறைகளை மதித்து அதற்கேற்ப வாழும் சான்றாண்மை உடையவராகவே இருப்பார்கள்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (குறள்: 218)

என்ற குறளும்; தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராத கடமையுணர்ந்தவர் சான்றோர் எனக் கூறுவதை இங்கு நாம் ஒப்பிடலாம்.

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    பதம்பிரித்து பொருள் எழுதி விளக்கம் தரும்போது சங்கத்தமிழ்  இலக்கிய வார்த்தைகள் ஈசியாகவே புரிகிறது. இதில் நேரடியாக பொருள் எழுதாமல் , பதம் பிரித்து காட்டும் முறைக்கு பாராட்டுக்கள் தேன்மொழி. தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க