வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!

0

பவள சங்கரி

தலையங்கம்

இந்த ஆண்டு (2015) +2 தேர்வில் வழக்கம்போல் பெண் குழந்தைகள் அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இரண்டு பெண்கள் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த ஈரோடு கல்வி மாவட்டம் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. விருதுநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது. தேர்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வல்லமையின் வாழ்த்துகள்.

போட்டிகள் நிறைந்த உலகத்தில் திறமையாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற இந்த காலகட்டத்தில் நம்முடைய கல்வித் திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாய தருணம் இது. உலகளாவிய நாடுகளின் கல்வித் திட்டங்களைக் காணும்போது நம் நாட்டின் கல்வித்திட்டங்களில் நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணர முடியும். இன்றைய நம் கல்வித் திட்டத்தின்படி பாடங்களை மனனம் செய்து திருப்பி எழுதக் கூடிய மாணவர்களையே சாதனையாளர்களாக உருவாக்க முடிகிறது. மனனம் செய்தவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் திருப்பி எழுதுபவர் மட்டும் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்கள். மதிப்பெண்களில் பின் தங்கியவர்கள் அறிவற்றவர்கள் என்பதைவிட மனப்பாடம் செய்ய முடியாதவர்கள் என்று சொல்வதே தகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட கல்வி முறையால் மதிப்பெண் குறைவாகப் பெற்று உயிரிழக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றதால் உயிரை மாயத்துக்கொண்ட அந்த இளம் தளிர்கள் செய்த பாவமென்ன .. அப்படியென்றால் மதிப்பெண் முறையே தவறா? இன்றைய கல்வித் திட்டத்தின்படி +2 தேர்வு என்பது மனப்பாடம் செய்து அவற்றை பதிவு செய்வதற்குரிய போட்டியாகத்தான் இருக்கிறது. கல்வித் துறையில் உள்ளவர்கள் இது குறித்த ஆக்கப்பூர்வமான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 1970 – 80 ஆண்டுகளில் 100/100 மதிப்பெண்கள் பெறுவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இன்று தமிழ் மொழிப்பாடத்தில் கூட 100/99 மதிப்பெண்கள் வாங்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். இன்றைய கல்வித் திட்டத்தின்படி வெற்றி பெற்று பட்டங்களைப் பெற்ற மாணவர்கள்கூட முழுமையாகச் சிந்திக்கும் திறனின்றி இருக்கின்றனர். முக்கியமான ஒரு கடிதம் எழுத வேண்டிய நேரத்தில்கூட அவர்களுக்கு ஒரு மாதிரிப் படிவம் தேவையாக இருக்கிறது. இதுதான் நம் கல்வித்திட்டம் உருவாக்கிய இன்றைய இளைய பாரதத்தின் நிலை. அதாவது மாணவர்களின் சுய சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இல்லாததே நம்முடைய கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடு.

இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படுவதுடன் ஊக்குவிக்கப்படவும் வேண்டும். குறைந்த அளவு நீர் உபயோகித்து அதிகப்படியான மகசூலைப் பெறக்கூடிய முறைமையைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தி விளைச்சலைக்காட்டியுள்ள இளைஞரை நாம் அறிவோம். ஆனால் அவருக்கோ, அவருடைய கண்டுபிடிப்பிற்கோ பெரிய அங்கீகாரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதைப்போல பலரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். நம்முடைய கல்வித் திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து, இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதாக அமைய வழிவகுக்க வேண்டும் என்பதே சமூகவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

இயல்பாகவே ஆற்றல் மிகுந்த மாணவியர்களை சுய சிந்தனையாளராக மாற்றுவதை விட்டு, ஒரு கணினியாகவோ, நகல் எடுப்பானாகவோ மாற்ற முயல்வது தவிர்க்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் என்பதால் அவர்களுடைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பை குறுகிய எல்லைக்குள் அடைக்க முயல்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

அடிப்படைக் கல்வியில் வேண்டுமானால் இந்தத் திட்டம் சரியாக இருக்கலாம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் கற்பிக்கும் முறையில் முற்றிலும் மாற்றம் வேண்டும். ஆசிரியர்களுக்கும் கற்பிக்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் . இருபது வயதிற்குட்பட்ட பெண்கள், அவர்களுடைய சம்மதமின்றியே 74 சதவிகிதம் திருமணம் செய்துவிடுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அரசு 18 வயதில் திருமணம் செய்யலாம் என்று கூறினாலும் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் திருமணம் செய்து வைக்கும் வழமை பரவ வேண்டும். ‘ரேகிங்’ என்ற கொடிய அரக்கனால் நேற்று கேரளா மாநிலத்தில் நான்கு பெண் விளையாட்டு வீராங்கனைகள் உயிர் மாய்த்துக்கொள்ள முயன்று ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ரேகிங் அறவே ஒழிக்கக்கூடிய வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு மாணவிகள் அச்சமின்றி கல்விச்சாலைகளுக்கு வர ஆவண செய்ய வேண்டியதும் அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *