அவன் யசோதையின் நந்தனல்லவா….

சாயா சுந்தரம்

images

வீதிவீதியாகத்
தேடத்தொடங்குகிறாள்
தன் நந்தனை….
யாரேனும் தேவகியின்
பெயர் சொன்னால்
மேனிசிலிர்க்க
தவிர்க்கத் தொடங்குகிறாள்…
கேளாத ஒற்றை
வார்த்தையென
அந்தப் பெயரை….
தாளாதுப் புலம்பும்
தளிர்க்கொடிகள்
மிதிபட….
உற்றுக்கேட்கத்
தொடங்குகிறாள்
சிறுதண்டைக்
கொலுசொலியை….
மாயம் செய்பவனே
மதுசூதனா
விலகிச் செல்வாயோ என
பிதற்ற ஆரம்பிக்கிறாள்
பிச்சியென…
பாதம் பிடித்து
முழங்கால் பற்றி
கரம் பிடித்திழுத்து
மார்பு சாய்ந்து
கழுத்தணைத்துச்
செவிகளில்
இசைக்கத்தொடங்குகிறான்
சிறு கண்ணன்
‘அம்மா’ என…
மெதுவாக உயிர்பெறத்
தொடங்குகிறாள்
அவன் அன்னை
யசோதா….

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *