Blog

  • நான் அறிந்த சிலம்பு – 76 (17.06.13)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்
    வலக்கையதன் பெருவிரல் வளைத்து
    மற்ற விரல்களை நிமிர்த்தி
    யாழதன் தண்டின் மீது
    அக்கையை வைத்து
    அது அசைந்திடாதபடி பிடித்தாள்.
    இடக்கையதன் நான்கு விரல்களை

    மாடகம் எனும்
    இசை வீக்கும் கருவி மீது பொருத்தி
    செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கோடம் எனும்
    பகை நரம்புகள் நான்கும்
    புகுந்துவிடாமல் நீக்கிடும்
    வழியது கடைப்பிடித்தாள்.

    முறைதவறா மரபு சார்ந்த்
    ஈரேழ் கோவையாய் அமைக்கப்பட்ட
    அந்த யாழ்தன்னில்
    முதலாக ‘உழை’ நரம்பினையும்
    இறுதியாக கைக்கிளை நரம்பினையும்
    வைத்தேதான் கட்டினாள்.

    இணை, கிளை, பகை, நட்பு எனும்
    இந்நான்கு நரம்புகளின் வழியே
    இசையது புணரும் குறிநிலையதனைப்
    பொருத்தமுறவே நோக்கினாள்.

    அது மட்டுமன்றி
    குரல் – இளி எனும்
    இரு நரம்புகளின்
    இசை ஒத்திருப்பதைத்
    தன் செவியால் அளந்தே அறிந்திட்டாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 27 – 35
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    hool.discoveryeducation.com/clipart/clip/harp.html

    Share
  • வார ராசி பலன்!…17-06-13 – 23-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டு பெற வேண்டியிருக்கும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடா மல் இருந்தாலே , பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

    ரிஷபம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!.

    மிதுனம்: பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது. மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி வாருங்கள். அதிக நேரம் பணியில் ஈடுபடுபவர்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரமிது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், எந்த நிலைமையும் சமாளித்து விடலாம். வியாபாரிகள் வாக்குறுதிகளை வழங்குவதைக் காட்டிலும் அதை நிறைவேற்றி வைப்பதில் கவனமாய் இருந்தால், சிக்கல்கள் ஏதும் வராது. அனைவரை யும் அனுசரித்துச் செல்வதன் மூலம் கலைஞர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாகும்.

    கடகம்: உங்களின் நிதி நிலைமைக்கேற்றவாறு காசோலைகளை பயன்படுத்துவது நல்லது. புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்படவும். பணியில் பொறுமையை சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாக கையாண்டால், மன அமைதிக்கு பங்கம் வராது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் நாவடக்கம் நன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நற்பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

    சிம்மம்: சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்து களை உட்கொண்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் இருப்பவர் களை கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை அலைக்கழிக்கும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களில் தராதரமறிந்து பழகிவந்தால், வீண் சங்கடங்கள் உங்களை அண்டாது. கலைஞர்கள் அபவாதங்களுக்கு இடமளிக்காதவாறு உறுதியாய் செயல் படுங்கள். வியாபாரிகள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.

    கன்னி: உயர்ந்த பதவியில் இருப்போர்கள், பிறரின் குற்றம் குறைகளை இதமாக சுட்டிக் காட்டினால், வேலைகள் தேங்காமல் முடிந்து விடும். இந்த வாரம் பெண்கள் உறவுகளி டமிருந்து அதிக சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பொது சேவையில் ஈடுபட்டுள்ள வர்கள் பொதுப்பிரச்னைகளைத் தீர்க்க, புத்திசாலித்தனமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தகுதிக்கேற்ற நட்பைத் தேடிக் கொண்டால், வீண் தலைவலியை தவிர்த்து விடலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்குத் தேவையான பக்கபலத்துடன் களம் இறங்கினால், நினைத்ததை சாதிக்க இயலும்.

    துலாம்: பணி புரிபவர்கள் உடனிருந்தே காலை வாருபவர்களிடம் உஷாராக இருந்தால், உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். பெண்கள் உபத்திரவம் தரும் அண்டை அயலா ரை அருகில் சேர்க்காதீர்கள். உங்களின் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப் பாக வைத்தால், வீண் கலக்கத்தை தவிர்த்து விடலாம். உங்களின் பழைய அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றின் உதவி கொண்டு வியாபார சிக்கலைத் தீர்க்க இது ஏற்ற வாரம். கலைஞர்கள் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் செய்ய வேண்டிய சுழலுக் குத் தள்ளப்படுவர். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனம் தேவை.

    விருச்சிகம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக் கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கிவிட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலை பளு கூடலாம்.

    தனுசு: கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் சமாளித்து விடுவீர்கள். பங்குதாரார்களின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்கள் அதிக புகழ்ச்சி எனும் வலை விரிப்பவரிடம் மாட்டிக் கொள்ளாமல் விலகியே இருங்கள். பணியிடத்தில் பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்குவதை தவிர்த்துவிடவும். சில சந்தர்ப் பங்களில்,நண்பர்களே உங்களை எதிரியாய் கருதி உங்களோடு மோதும் நிலை உருவாகும். தேவையில்லாமல் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களை பிறரிடம் கொட்ட வேண்டாம் .

    மகரம்: எதிரும் புதிரும் இருந்த உறவுகள், நெருங்கி வருவதால், பெண்கள் மகிழ்ச்சி யுடன் திகழ்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் சின்னசின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப் படுவதைத் தவிர்த்தல் நலம். தம்பதிகளுக்குள் அனுசரணையும், புரிதலும் இருந் தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வவதால், நல்ல பெயரோடு பதவி உயர்வும் வந்து சேரும். தொழிலாளர்கள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க அவர்களை தட்டிக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

    கும்பம்:வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து செயல்படுவது நலம். பெண்கள் பிள்ளைகளின் கூடாத நட்பினால் தோன்றும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளுவது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்கள் எதிர்பார்த்தவகைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களை தீர்க்க தேவையான பணம் கிடைக்கும். சுய தொழிலில் தோன்றும் கஷ்டங்களைக் கடக்க உங்கள் உழைப் பும், சாமர்த்தியமும் கை கொடுக்கும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாய் இருப்பது அவசியம்.

    மீனம்: வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்

    Share
  • பிரசரெண்ட் ஊட்டு அக்கா!

    அவர் இருந்த வரையிலும்
    எப்பவும் வரவும் போகவுமா
    இருப்பாங்க ஆளுக!
    காலையில வந்து உக்காந்துட்டு
    இட்லி தோசை வேணாம்
    பசிக்குது சோறுதான் வேணும்பாங்க!
    மத்தியான நேரத்துல வந்துட்டு
    குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க!
    கூட வந்தவனே சொல்வான்
    காப்பி வேண்டாங்க அண்ணி
    மோர் குடுங்கன்னு சொல்லுவான்!
    ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!!
    ராத்திரி நேரத்துல இரவையையோ
    சேமியாவையோ கிளறிப் போட்டாக்க
    இரசமும் பழையசோறும்
    போடுங்கன்னு சொல்லிட்டு உக்காருவாங்க
    இதுக எல்லாமே
    அவர் இருந்த வரையிலுந்தான் தம்பி
    இப்பெல்லாம் யாருமே வர்றதில்லை
    எப்பவாச்சும் ஒருக்கா
    புது ஆளுங்க வர்றாங்க
    சாப்பாடெல்லாம் வேண்டாம்
    கைச்செலவுக்குப் பணம் குடுங்க
    அண்ணன் இருந்தா குடுப்பார்தானேன்னுவாங்க
    அம்பது குடுத்தா நூறு குடுன்னுவாங்க
    நூறு குடுத்தா இரநூறு குடுன்னுவாங்க
    நானும் எடுத்தாந்து குடுப்பேன்
    எல்லாம் தெரிஞ்சே குடுக்குறதுதாந் தம்பீ
    அவிங்களாவது வந்திட்டுப் போறாங்கல்ல?!
    நீங்க உங்கப்பாவைக் கவனிச்சிக்கோங்க தம்பீ!!

    Share
  • மணவாளன்

    என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை.

    தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது கூட இதுதான் முதல்முறை. யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் வாய்த்திருக்கவில்லை. நமக்கு வேண்டிய நேரத்திலெல்லாம் காலத்தை நிறுத்தி வைக்கவா முடிகிறது? மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கிறோம். மற்றதெல்லாம் விடுபட்டுப் போய்விடுகின்றன. அப்படி விடுபட்டுப் போனதில் ஒன்றுதான் இதுவும்.

    எதுவொன்றுக்கும் ஆட்படாத வரையிலும் அதுகுறித்தான கவலையில்லை. மகன் குறித்தான கவலையில் இருக்கிறாள் லிண்ட்சி டொமினிக்! அது அவளை என்னவெல்லாமோ நினைக்க வைக்கிறது. அழுகை அழுகையாக வருகிறது. அவன் பேசினாலாவது என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தெளிவற்றுப் பேசுகிறானவன். அவன் வேறு யாருமல்ல, தன் மூத்தமகன் நேகன் கோல்டுசுமித்துதான். எதுவானாலும் அலைபேசியில்தான் பேச முடிகிறது அவனிடம். நேரில் சென்று பார்க்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.

    தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் ஏன் வேறு வேறாக இருக்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுமாயின், அது நியாயமானதும் சரியானதுமேயாகும். முதன்மைப் பெயரை விட மரபுப் பெயருக்குத்தான் அமெரிக்காவில் முக்கியத்துவம். மரபுப் பெயர் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகும். ஆனால் தகப்பன் பெயரையே மரபுப் பெயராகக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஃபேமிலி நேம், லாஸ்ட் நேம், சர் நேம், அப்பர் நேம் எனப் பலவாறாகச் சுட்டுவார்கள்.

    அமெரிக்காவுக்கு வந்த தமிழ் நாட்டுக்காரன் ஒருவன் சமூகநல அடையாள எண் வாங்கப் போனான். அங்கே கொடுத்த விண்ணப்பத்திலிருந்த ஃபேமிலி நேம் எனுமிடத்தில், ’நாட் அப்ளிகபிள்’ என எழுதி விட்டு வந்தான். பின்னர், மிஸ்டர் நாட் அப்ளிகபிள் என மற்றவர்கள் அவனை அழைக்கத் தலைப்பட்ட போது நாணிக் குறுகினான். கட்டிய மனைவி கூடக் காலமெல்லாம் சொல்லிச்சொல்லி கேலி செய்வதாய் அழுது புலம்பினான்.

    தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் வேறுவேறாய் இருப்பதை அமெரிக்காவில் எங்கும் பார்க்கலாம். நேகன் கோல்டுசுமித்து ஆப்பிரிக்க அமெரிக்கன். அதாவது அவனது தோலின் நிறம் கருப்பு. பண்புகருதி தோலின் நிறத்தைக் கொண்டு குறிப்பிடுவதில்லை. ஆங்கிலாய்டு அல்லது காகேசாய்டு, மங்கோலாய்டு, நீக்ராய்டு என மாந்தரை மூன்று பிரிவுக்குள் அடக்கினாலும், இடத்தின் பெயரால் சுட்டுவதே வழக்கு. மாந்தர் குலத்தின் வயது கூடக் கூட, நாகரிகமும் பண்பும் முதிரத்தானே வேண்டும்? இனியும் ஊனமுற்றோர் எனச் சொல்லலாகுமா?! மாற்றுத் திறனாளிகள் எனப் பண்பு பேணுகிறோம் அல்லவா?? அதைப் போலத்தான், நேகன் கோல்டுசுமித் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன். அவன் அம்மா லிண்ட்சி டொமினிக் வெள்ளை நிறத் தோலுடைய காக்கேசியன்.

    செயிண்ட் லூயி நகரின் மருத்துவமனை ஒன்றில் தாதியாக வேலை பார்த்து வந்தாள் லிண்ட்சி. அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கனான மார்க் கோல்டுசுமித்துக்கும் லிண்ட்சிக்கும் இடையே பூத்தது காதல். காதல் கண்களுக்கு நிறம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை. அதன் பயனாக, லிண்ட்சி ரோமா என்பவள் லிண்ட்சி கோல்டுசுமித் ஆனாள். லிண்ட்சி கோல்டுசுமித்தாக மாறின ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு நேகன் கோல்டுசுமித்தும் பிறந்தான். சுருள் முடியும் கறுப்பழகும், அவளைத் தாய்மைக் கடலில் ஆழ்த்திப் பேரின்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தின்  பிற்பகல் யாமப் பொழுதொன்றின் போழ்து அறிமுகமானான் காக்கேசிய ஆடவன் குவிண்ட் டொமினிக். அடுத்து வந்த குளிர்காலத்தின் போது, குவிண்ட் டொமினிக் வீட்டிற்குத் தன் கைக்குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள் லிண்ட்சி. வீடு தேடி வந்தவர்களை வரவேற்று குவிண்ட்டும் ஆதரவளிக்க, லிண்ட்சி டொமனிக்கன் ஆக பெயர் மாற்றம் கொண்டாள் அவள்.

    செயிண்ட் லூயி நகரில் இனியும் இருக்க வேண்டாமென நினைத்து, டொமினிக் தம்பதியர் தங்களது குழந்தை நேகன் கோல்டுசுமித்தோடு காலியர்வில்லில் வந்து குடியேறினார்கள்.

    நேகன் கோல்டுசுமித் என்பவன் தன்னுடைய மகனாயிற்றே? தன் மரபுப் பெயரைத் தாங்கி வளர்கிற குழந்தையை மறந்துவிட முடியுமா?? பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாரத்துக்கு ஒரு முறையாவது பார்த்து விட ஏங்கினான் அப்பன் மார்க் கோல்டுசுமித். டென்னசியில் இருக்கும் காலியர்வில் நகருக்கும், மிசெளரியில் இருக்கும் செயிண்ட்லூயி நகருக்கும் முந்நூறு மைல்கள். நெசவுதறியில் சிக்குண்ட ஊசுகோல் போல, தன் மகனைப் பார்ப்பதற்காக இங்குமங்குமாக வந்து போய்க்கொண்டிருந்தான் மார்க் .

    அடுத்த பிள்ளைப் பேறு நெருங்கி வர, தன் மகனுக்கான தாயின் கவனம் அருகி வந்தது. அதைக் கவனித்த அப்பன்காரனும் காலியர்வில் நகருக்கே குடி வந்து விட்டான்.  பின்னாளில் தன் மகனின் அம்மாவுக்குப் பிள்ளை பிறந்ததை அறிய நேர்ந்ததும், மகனைத் தன்னுடனேயே கூட்டி வந்து வைத்துக் கொண்டான் மார்க்.

    மார்க் தச்சு வேலை பார்த்தான். அருகிலிருக்கும் பண்ணைகளுக்கெல்லாம் கட்டுத்தறிகள் செய்வது, வீட்டுக்கூரைகள் செய்வது முதலானவற்றைச் செய்து வந்தான். தன் அப்பாவிடமே கைத்தொழில் கற்று வந்த நேகனும், தேர்ந்த தச்சன் ஆகிவிட்டிருந்தான். வரச் சொன்ன நாட்களில் மட்டும் போய் தன் அம்மாவைப் பார்த்து விட்டு வருவான். அங்கிருக்கும் தம்பியோடு விளையாடி மகிழ்வான். வீட்டு வேலைகள் இருந்தால் செய்து கொடுத்துவிட்டு வருவான். ஆனால் வெள்ளைக்காரத் தம்பி ஸ்டீபன் டொமினிக்குக்குத் தன் கருப்பு அண்ணனைக் கண்டாலே ஆகாது. நாளடைவில் அவன் வருவதையே நிறுத்தச் செய்துவிட்டான் ஸ்டீபன். இதற்கு நடுவில் வேறு யாருடனோ ஓடிப் போய்விட்டான் லிண்ட்சியின் நடப்புக் கணவனும் ஸ்டீபனின் அப்பனுமான குவிண்ட். சில வருடங்களில், மார்க்கும் உடல் நலம் குன்றி இறந்து போனான்.

    செத்தவன் ஒன்றும் சும்மா விட்டு விட்டுப் போகவில்லை. தன் மகனுக்கு காலியர்வில் ஒதுக்குப் புறத்தில் அழகானதொரு வீட்டைத் தச்சுப் பட்டறையுடன் கட்டிக் கொடுத்து விட்டுத்தான் போயிருக்கிறான். சின்ன வீடுதான். ஆனால் அடிப்படை வசதிகளோடும் மரங்கள் புடைத்த நல்லதொரு இயற்கைச் சூழலோடும் அமைந்திருந்தது அந்த வீடு.

    ஆர்லிங்டன் பண்ணையொன்றில் கூரை மேய்வதற்குப் போன இடத்தில், நேகனுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையான செர்ரி மூட்டிக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து செர்ரி மூட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான் நேகன். மகிழ்ச்சியாக இருந்தார்கள். இடையில் தன் தோழி ஒருத்திக்கு திருமணம் என்று சொல்லி,  இல்லினாய் மாகாணத்தில் உள்ள கெய்ரோ நகருக்குப் போனாள் செர்ரி மூட்டி.

    பத்து நாட்கள் கெய்ரோவில் இருந்துவிட்டுத் திரும்பியவள் வேறு ஆளாக வந்திருந்தாள். படுக்கையில் இருந்த நேகன் வாந்தி எடுக்கப் போனான். இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். முடிவில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் தன்னைக் கஞ்சாவுடன் மெஸ்கல் அல்லது டகீலா குடிக்க அனுமதிக்க வேண்டும் என உறுதி வாங்கிக் கொண்டாள். குடியில் தகப்பனைப் பறிகொடுத்த நேகன்,  இவளுக்கும் போதைப் பழக்கம் அண்டியிருப்பது கண்டு கலங்கி நின்றான்.

    வாரக் கடைசி வந்து விட்டால் போதும், மெம்ஃபிசு நகருக்குக் கிளம்பி விடுவாள் செர்ரி மூட்டி. ஓரிரு மாதங்கள் அப்படியாகக் கழிந்தன. மீண்டும் காலியர்வில் வீட்டிலேயே தன் ஆட்டத்தைத் துவங்கினாள் செர்ரி. இரவு நேரங்களில் கஞ்சா புகைத்து விட்டு சல்லாபத்துக்கு அழைப்பாள். கிட்ட நெருங்கினாலோ குடல் குமைந்து  வாந்தி வரும் அவனுக்கு. வராவிட்டால் தான் கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகச் சொல்லி மிரட்டினாள். வீதியில் போவோரை அழைக்கத் தலைப்பட்டாள். துயர் தாளாது, அவளைக் கொண்டு போய் மெம்ஃபிசு நகரிலுள்ள அவளது நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டான். இது நடந்து பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போனவள் போனதுதான்.

    சோவென்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்கள் எல்லாம் அவ்வப்போது சிலிர்த்தன. ஒவ்வொரு சிலிர்ப்பின் போதும் பன்னீர்த் துளிகள் தன்மீது பட்டுத் தெறிப்பதை உள்வாங்கி மகிழ்ந்தான். வானத்தைப் பார்த்தான். முகில்கள் கலைவதும் புணர்வதும் விதவிதமாய் நகர்வதுமாக இருந்தன. தனக்குப் பிடித்தமான முகில் ஒன்றின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டான். அதன் மேல் உலாப் போவதன் இன்பம் மனத்துள் ஊற்றெடுத்தது. கிழக்குப் புறத்திலிருந்த ஆலிவ் மரம் அவனைப் பார்த்துச் சிரித்தது. “யூ, ஆலி பப்ளீ” என்று கத்திக் கொண்டே போய் கீழார்ந்த கிளையப் பிடித்துக் தொங்கினான். தொங்கியதில் அது சிலிர்க்க, நீர்த்துளிகள் அவனைப் பதம் பார்த்தது. “அஃகஃகா, யூ  டுக்  ரிவெஞ்ச் ஆன் மி, இஸ் இட்?” என்று வினவிக்கொண்டே வீட்டின் முன்புறமிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே ஆலிவ் மரத்தைப் பார்த்தான். ஆலிவ் மரமும் அவனும் கண்களால் பேசிக் கொண்டு அன்புற்றுப் கலப்பதை முகில்கள் பார்த்துக் கொண்டே கடந்தன.

    மீண்டும் இருட்டி வருவதைப் போல உணர்ந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு போனான். பட்டறையில், உளி கதிர்கள் முதலான சாமான்கள்  போட்டது  போட்டபடி இருந்தன. வீடு கூட சாத்தப்படாமலேதான் இருக்கிறது. உண்மையாய் நேசிக்கும் ஆலிவ் மரமும், செர்ரி மரங்களும், மேப்பிள் மரங்களும் காவலுக்கு இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதற்கான அவசியம் அவனுக்கு இருந்திருக்கவில்லை.

    வாங்கி வந்த ரொட்டி ரெண்டு ராத்தலையும், பால் ஒரு கேலனையும் வண்டியின் பின்புறத்தில் வைத்து விட்டுக் கதவைச் சாத்தினான். யாரோ காருக்குள் முனகுவது போல இருந்தது. மீண்டும் பின்பக்கக் கதவைத் திறந்தான். மழை துளிக்கத் துவங்கியிருந்தது. யாரோ இருட்டைக் கொண்டுவந்து கார் முழுக்கத் திணித்திருந்தார்கள். காருக்குள் நெருக்கடி தாளாமல், இருட்டுதான் அழுது கொண்டிருக்கிறதா? அவற்றின் கண்கள் எங்கேயென்று துழாவினான். ஆனால், திடீரென மின்னிய மின்னல் ஒன்றில் செத்துச் சாம்பலாகிப் போனது இருட்டு. கதவை மூடிவிட்டு வந்து காரின் முன்பக்கக் கதவைத் திறக்க முற்பட்ட போதுதான் கவனித்தான்.

    ஹிக்கரி மரத்திற்குக் கீழே என்னவோ அசைவது போலவும், அசையும் அந்த எதுவோ அதுவிலிருந்துதான் சத்தம் வருகிறது என்பதையும் உணர்ந்தான். மேப்பிள் இலையின் மஞ்சள் பழுப்புக்கும் செம்பழுப்புக்கும் இடையிலான ஒரு நிறத்தில் மெலிதான துணியொன்று போர்த்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது. அருகே செல்லச் செல்ல அதற்கு இரண்டு கால்கள் முளைக்கத் துவங்கின. அட, ஆச்சரியமில்லை. இரண்டு கைகளும் இருக்கின்றன. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி மார்புக்கு மேல வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலையும் இருக்கிறது. ஒருக்களித்து இருப்பதால் சரியாகத் தெரியவில்லை. கூடவே முனகலும்.

    ”ஏய், என்னாச்சு உனக்கு?”

    “பசிக்குது”

    “சரி வா அப்ப”

    என்ன ஆச்சர்யம்? அது ஒரு பெண். அதுவும் புள்ளத்தாச்சி. அடிவயிறு பெருத்து இருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ”ஓ விழப் போகிறது, விழப் போகிறது!!”, யாரோ எட்ட இருந்து அலறினார்கள். ஒரே பாய்ச்சல், அலேக்காய்த் தூக்கினான் நேகன். கொண்டு போய்க் காரில் போட்டான்.

    “அம்மா, நான் இப்ப அங்க வரலாமா?”

    ”ஏய், நேகன்! என்ன ஆச்சர்யம்? அம்மா நினைப்புகூட உனக்கு இருக்காடா??”

    “அம்மா, அதெல்லாம் வேண்டாம். நான் இப்ப அங்க வரலாமா??”

    “ஓ, உன்னோட தம்பி கூட வெளியில போயிருக்கான். சீக்கிரமா வா, அவன் வர்றதுக்கு முன்னாடியேவும்!”

    ரொட்டியில் கொஞ்சத்தைப் பிய்த்துக் கொடுத்துவிட்டுக் கேட்டான், “உன்னோட வீடூ எங்க சொல்லு. நான் கொண்டு போயி விட்டுடுறேன்!”

    இசிக்கிய மாங்காயைப் போன்ற தலை மட்டும் ஆடியதிலிருந்து புரிந்தது அவள் ஒரு வீடில்லா ஏதிலியென்று.

    ஒரே அமுக்கு. வின்ச்செஸ்டர் சாலையிலிருந்து பல சாலைகளைக் கடந்து நியூவில்லோ சாலைக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டு வாசலியே லிண்ட்சி நின்று கொண்டிருந்தாள். “ஹாய், நேகன்! என்னோட செல்லம், வாடா வாடா!!”, அரவணைத்துக் கொண்டாள். வீட்டுக்குள்ளிருந்த தன் தம்பியின் மனைவி பமீலா எட்டிப் பார்த்துக் கொண்டே ‘அகோ’ சொன்னாள்.

    “அம்மா, எனக்கு ஒரு ஃபேவர் வேணும். உள்ள இருக்கிற அந்தப் பொம்பளைக்கு எதாவது குடுத்து இன்னிக்கி இராத்திரி இங்கயே வெச்சுகுங்க!”

    லிண்ட்சியும், பமீலாவும் காருக்கு ஓடிப் போய்ப் பார்த்து மிரண்டு போனார்கள். “யார்றா இது? போட்டுக்கத் துணி கூட இல்லையாமா?”

    “அம்மா, நானே அவளை இப்பதான் அந்த வின்ச்செஸ்டர் டாலர் ஸ்டோர்கிட்டப் பார்த்தேன். குளிர்ல நடுங்கிட்டுக் கீழ கிடந்தா!”

    “போடா! இந்த நிலைமையில, உன் தம்பி வந்தான்னா அவ்ளோதான். துப்பாக்கி எடுத்துட்டு வந்து உன்னையும் போட்ருவான். என்னையும் போட்ருவான். போயிடு, நீ இங்க இருந்து போயிடு!”

    “என்னமா சொல்ற? நான் இந்தப் பொம்பளைய என்ன செய்வேன்? ப்ளீஸ்மா, புள்ளத்தாச்சியா வேற இருக்கா?!”

    ”அங்க எங்கனாவது சர்ச்ல கொண்டு போயி உட்ரு, போ!”, வீட்டுக்குள் ஓடியே போய்விட்டாள் பமீலா.

    ”அப்ப நீயே சொல்லு. எனக்கும் சர்ச்சுக்கும் ஏழுகாத தூரம். எனக்கென்னம்மா தெரியும்?”

    “போடா, நீயே போயி என்னமோ செய். நாளக்கி போன் பண்ணு!”, அம்மாவும் உள்ளே போய் விட்டாள்.

    காருக்கு வந்தான் நேகன். அது மீண்டும் காருக்குள் சரிந்து விட்டிருந்தது. பழுப்பு நிறத் துணி சரிந்து எல்லாமும் தெரிந்தது. தன் கைகள் கொண்டு அந்தத் துணியை எடுக்கப் போனவன், சரேலெனக் கைகைப் பின்வாங்கிக் கொண்டான்.

    காலியர்வில்லுக்கும் ஆர்லிங்ட்டனுக்கும் இடையிலிருக்கிற தன் ஒதுக்குப் புற வீட்டுக்குப் போனான். டெரிக் ஓடி வந்து பாய்ந்தான். “ஏய் டெரிக்! நம்ம வீட்டுக்கு ஒரு மிஸ் வந்திருக்காங்க. பாரு!!”

    காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டான் நேகன். அம்மணமாய் எழுந்து வந்தாள் அவள். டெரிக் பதறிப் போய் தச்சுப் பட்டறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவசர அவசரமாய் அந்த மெல்லிய பழுப்புத் துணியை எடுத்து அவள் மேல் போட்டான். அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள் அவள்.

    வீட்டுக்குள் சென்று படுக்கையின் மேலிருந்த போர்வையைக் கொண்டு வந்து போர்த்தினான். மெலிதாகச் சிரித்தாள் அவள். தன்னுடைய ஒரு இலையைக் கூட அசைய விடாது நின்று பார்த்துக் கொண்டிருந்தன ஆலிவ் மரமும், மேப்பிள் மரங்களும்.

    “தண்ணி கொஞ்சம் கிடைக்குமா?”, சன்னமான குரலில் பேசினாள். இறுக்கம் தளர்ந்து இலைகளை அதனதன் போக்கில் அசைய விட்டன சுற்றியிருந்த மரங்கள். வாலை ஆட்டிக் கொண்டே வெளியே வந்து நின்றான் டெரிக்.

    ”கமான் இன்!”, தண்ணி பாட்டிலைக் கையில் பிடித்தபடி பூத்துச் சில நொடிகளேயானதொரு புது முகத்துடன் வரவேற்றான் நேகன்.

    நேராக உள்ளறைக்கு அழைத்துப் போய் தன் படுக்கையைக் காண்பித்தான். அவளும் போய்ச் சாய்ந்து கொண்டு அரைக்கால்வாசிக் குரலில் சொன்னாள், “ஓக்கே ஓக்கே!”.

    அடுக்களைக்கு ஓடினான். ஒரு தட்டில் ப்ளேக் பீன்சையும் கொஞ்சம் கெட்ச்அப் கலவையையும் போட்டு நுண்ணலையடுப்பில் வைத்துச் சூடேற்றினான். தலையை இங்குமங்கும் திருப்பிக் கொண்டு அமைதியாய் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.

    கொடுத்ததைச் சிறு கரண்டி கொண்டு தின்னத் துவங்கியிருந்தாள் அவள்.  தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழம், மெலிந்த துணியாலான துண்டு முதலானவற்றைப் பவ்யமாய் அவளது தலைமாட்டில் வைத்தான்.

    “இங்கதான் கழிப்பறை இருக்கு. இங்க தண்ணி இருக்கு!”, சொல்லிய பின் பட்டும் படாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.

    “இங்கே என்ன நடக்கு?”, என்கிற தோரணையில் டெரிக் ’வவ்’வென்றான்.

    “என்னடா அப்படிப் பாக்குறே? ச்சீ, நாயே! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! ஷி வாஸ் எபவுட் டு டை தெரியுமா? நாந்தான் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தேன். எங்கம்மா ஒரு பிட்ச். வெள்ளக்காரியாம் பெரிய வெள்ளக்காரி. ரெட் நெக் ஆளுகளே ஒரு கோழப்பசங்க. ஒரு வெள்ளக்காரி இன்னொரு வெள்ளக்காரிக்கு உதவி செய்யக்கூடாதா? எங்கப்பா சொன்னது சரிதாம் போலிருக்கு!”

    வெளியே வந்தான். தச்சுப் பட்டறைக்குப் போனான். குதூகலமாய் இருந்தது. சீவலுளியை எடுத்து வேலை பார்க்கத் துவங்கினான். பாட்டுப் பாடினான். இந்த உலகம் இனிமையானதென்றான். படகு இருந்தால் அதற்கான துடுப்பும் அமையும் எனச் சொல்லிக் கொண்டான்.

    மூலையில் கலைந்திருந்த கழிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். அடைபட்டிருந்த அரைவாசி அளவுக்கும் மேற்பட்ட இடம் ஒழுங்காகி, பட்டறையே பெரிதாகிப் போனது.

    “டே, டெரிக்! அப்படியெல்லாம் போயி அடுத்தவங்க என்ன செய்யறாங்கன்னு பாக்கக் கூடாது. அவங்களுக்குப் பிரைவசி வேணும்ல? நீ எங்கூடவே இரு!”

    சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் டெரிக். பேசாமல் பின்னால் வந்து நின்று கொண்டான்.

    சத்தத்தைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இருவரும் அமைதியை வாங்கிக் கால்களில் போட்டுக் கொண்டனர். சமையலறையிலேயே உட்கார்ந்து வேண்டியதெல்லாம் எடுத்துச் சாப்பிட்டான் நேகன். பால் மட்டும் குடித்து விட்டு, வேறெதுவும் வேண்டாமென்கிற வாக்கில் வந்து சோபாவில் ஒய்யாரமிட்டுக் கொண்டான் டெரிக்.

    கதவுகளைச் சாத்தி விட்டு பட்டறைக்குப் போனார்கள். மீண்டும் இழுவுளியால் கழிகளைச் சீவிச்சீவி மிளிர்ப்பூட்டினான்.  நாளைக்குச் செய்ய வேண்டிய வேலை எல்லாவற்றையும் முன்னிரவிலேயே செய்து முடித்து விட்டான். சத்தத்தைப் பட்டறையிலேயே இறக்கி வைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.

    தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலிருக்கும் சோபாவில் நீட்டிப் படுத்து விட்டான் நேகன். அவனுக்கு மேலே ஏறி அந்த முடக்கில் முடங்கிக் கொண்டான் டெரிக்.

    வெளியே ஆலிவ் மரத்துக்குப் பொறுக்க முடியவில்லை. தன்னுடையவன் தன்னிலிருந்து போய் விடுவானோயென்கிற இட்டுமுட்டு அதற்கு. மேப்பிள் மரத்து இலைகள் ஒன்றுக்கொன்று பொரணி பேசிக் கொண்டிருந்தன. செர்ரி மரத்துக் கிளைகளில் இருந்த டிப்பர் குருவிகள், “கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரப் போகிறது; அதற்குள் எதற்கு இந்த அரசல்புரசல்?” என்று ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஒன்றுக்கொன்று ஏககாலத்தில் ஆலிங்கனம் செய்து கொண்டன.

    எதோ கனவில் எழுகிற சத்தம் போல இருந்தது. “டே டெரிக், பேசாம இருடா. தூங்கிட்டு இருக்கன்ல?”.

    சத்தம் நன்றாகவே கேட்கிறது. திடுக்கிட்டு எழுந்தான்!

    “அகோ, மிஸ்!”

    “விடிஞ்சிடிச்சில்லயா? ஒட்டு உறவு, வீடு வாசல் இல்லாத ஒரு நாடோடி நான். போகத்தானே வேணும்?”

    உணர்வற்றுப் போய் இருளோவென்றிருந்தது. உள்ளோங்கிய குகையொன்றினூடாக இருக்கும் கைகளுக்கெதுவும் தட்டுப்படாத வெளியில் தள்ளிவிட்டது போலிருந்தது.

    முகத்தை மூடிக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தான் அவன்.

    திடுமென எழுந்து வெளியில் ஓடினான். அவன் ஏறிடவும் தெருமுனையில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து பின் மறையவும் சரியாய் இருந்தது.

    “ஹோல்ல்லி ஷிட்!”, பெருங்குரலெடுத்து இரைந்து கொண்டே எட்டி ஒரு உதை விட்டதில் ’க்க்கைன்ய்’ என்று கத்திக் கொண்டே போய் எட்ட விழுந்தான் டெரிக். அவன் வீட்டு மரங்களோடு அண்டைப்புறத்து மரங்களும் அதிர்ந்து நடுங்க, அதனதன் அடிப்பழுப்பு இலைகளெல்லாம் உதிரத் துவங்கின.

    பின்னங்கால்த் தொடைகளில் முழுப்பாரத்தையும் இறக்கி வைத்து முன்னங்கால்களால் முன்னூன்றிக் குந்திக் கொண்டு, வைத்த கண் வைத்தபடியே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.

    கேவிக்கேவி அழுது கொண்டிருக்கும் தன் மணவாளனைத் தேற்றுவதற்குத் தன்னிடம் பேசும் சக்தி இல்லையேயென்று புழுங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆலிவ் மரமும்!!

    Share
  • மரமேறி சொன்ன மந்திரப் பொருள்

    சு. கோதண்டராமன்

    இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.
    என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.
    நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை.  இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில் நனைவதனாலோ?
    சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. “இந்தப் பிஞ்சு உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.
    அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க வைக்கலாமா என்று எண்ணினேன்.
    அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட் இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள் அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன். யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே.
    மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது.
    குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம் போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள் விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது. அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
    ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த  அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில் இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப் பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில் சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி விட்டேன்.
    வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார். அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். “வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். “பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம் பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.
    ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.
    “அந்த மூலையிலே நாய் குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”
    “சரிங்க.”
    அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை. ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். “நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும் சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன்” என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான்” என்று உறுதியாகக் கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், “காக்க காக்க, கனக வேல் காக்க” என்று புலம்பிக் கொண்டிருக்கும்.
    தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும் குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், “ஏன் ஐயா, மொகம் ஒரு மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.
    நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு, “இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித் தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித் தான்”. என்றார்.
    “ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”
    “பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப் பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம். ஒண்ணும் ஆகாதுங்க.”
    உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி’ என்று பாரதியார் சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
    “மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
    “நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
    “நன்றியோட இருக்கறது.”
    “அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல சொல்றாங்க.”
    அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன். புலப்படவில்லை.
    “சொல்லுங்க.”
    “நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது. அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
    “ஆமாம்.”
    “நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத் தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது. கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு தான் இருக்கும்.”
    அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்தவர்கள்.
    “முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய வேலயையே தான் செய்வான்.
    “சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப் புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.”
    உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.
    “எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம் பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப் பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர  முடியும்.”
    முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”
    முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில் இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!

    Share
  • வாழ்க்கை நலம் – 13

    13.  நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

    குன்றக்குடி அடிகள்

    இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஓர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோர் வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லோருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

    ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

    ஆன்மாவின் உறுப்புகளான மனம், புத்தி, சித்தம் அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள், அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள். அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம்தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ண வேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமுகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும். நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனிமனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று, அன்பு அடக்கதினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லோரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்கதாகிறது.

    நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்ச்சொற்களை பிறருக்கும் தனக்கும் இன்னாதான விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

    இனிமை பயவாத இன்னாத கடுஞ் சொற்களைக் கூறின் இரத்தக் கொதிப்பு நோய் வருகிறது. மூச்சுக் காற்று அதிகம் செலவாவதால் மூப்புத் தன்மை இளமையிலேயே வந்து விடுகிறது. மற்றவர்களுடைய பகையே வளர்கிறது. காரியக் கேட்டினைச் செய்கிறது. அது மட்டுமல்ல வன்சொல் திருட்டுத்தன்மையுடையது என்பது வள்ளுவத்தின் கருத்து. எப்படி வன்சொல் திருடு? விலங்கினத்திடமிருந்து கவர்ந்து கொண்ட விலங்கியல் தன்மையின் விளைவு வன்சொல். அதனால் வன்சொல் திருடு ஆகும். இனிய சொல் அன்பினை இருபாலும் ஊற்றெடுக்கச் செய்கிறது; தோழமையை வளர்க்கிறது. வாழ்க்கைப் பணியில் ஆற்றல் மிக்க ஒத்துழைப்பை நல்குகிறது. ஆதலால் பணிவும் இன்சொல்லும் வெற்றி பொருந்திய நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள். ஒன்றின்றிப் பிரிதொன்று இல்லை. இன்சொல்லை என்றும், எங்கும் வழங்கி வாழ்வித்து வாழ்வோமாக!

    “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற”

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 14

     

    -சு.கோதண்டராமன்

     

    வாயுவாகி வெளியை அளந்தனை

    வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர்  மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம்.

    வேதத்தில்  வரும் ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ (காற்றே, நீயே கண் கண்ட தெய்வம்) என்பதற்கு விளக்கமாகப் பாரதி பதினைந்து அழகிய வசன கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சில மட்டும் கீழே சுருக்கித் தருகிறேன்

    1 ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்னேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஆண். மற்றொன்று பெண். கணவனும் மனைவியும். ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை. அவை இரண்டும் ஒன்றை ஒன்று காமப் பார்வை பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரஸப் போக்கிலே இருந்தன. இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறிவிட்டது.

                    நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன். நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என்  வரவை எதிர் நோக்கி இருந்தது. எங்கேடா போயிருந்தாய் வைதீகம்? சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாயே என்றது. அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறது என்று கேட்டேன். ஆகா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்? காற்றுத் தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது (வாயு தேவனின் உடல் ஒளி வடிவமானது என்பது வேதக் கருத்து.).

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    காற்றே போற்றி நீயே கண் கண்ட தெய்வம்.

          அவன் தோன்றிய போதிலே வான முழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன். காற்றுத் தேவன் சொல்வதாயினன் மகனே ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவு இல்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலே அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது. சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க இறக்க விட்டு விட்டேன். துயிலும் சாவு தான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி

          2 நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற் காற்று. ஹதம். இரு நூறு உயிர்கள் அழிந்தன. ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். சக்தி காற்றாகி விடுகிறாள். காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னலேற்றி, நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி, தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே யுக முடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக.

          3 வீமனும் அனுமனும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

          4 எறும்பு உண்ணுகிறது, உறங்குகின்றது, மணம் செய்து கொள்கின்றது, குழந்தை பெறுகின்றது, ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்.

          5 காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. மலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. வான் காற்று நன்று. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவன் வரும் வழியிலே எவ்விதமான அசுத்தமும் கூடாது. அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க. (சுற்றுச் சூழல் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுக்கு அன்றே வேத அடிப்படையில் வித்திட்டவர் பாரதி)

          6 நொய்ந்த வீடு, நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கி விடுவான். ஆதலால் மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம்.

          7 காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரம்ம என்று போற்றுகிறார்கள். ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. வ்யானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. உதானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க. புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

     

    Share
  • காலம் காலமாய்…


     செண்பக ஜெகதீசன்

    கட்டிமுடித்த கோபுரம்

    கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது

    கோபப்படுவதில் அர்த்தமில்லை..

     

    குறுக்கே நிற்பது காலம்தான்-

    கொட்டிக்கிடக்கும் செங்கல்கள்

    கோபுரமாகலாம்..

    கோபுரம்,

    கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..

     

    மாறுதல்தானே

    முகவரி இறைவனுக்கு…!

     படத்துக்கு நன்றி

    http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)

    பவள சங்கரி

    உள்ளார்ந்த ஒரு நெடும் பயணமே மிகவும் நீண்ட பயணம். ஒருவர் தம்முடைய இலக்கை அடைய முனையும் போது தம்முடைய உள்ளாற்றலை முழுமையாகப் பயன்படுத்தி அந்தத் தேடுதலைத் தொடங்கினால், அதன் முடிவில் தம்முடைய இருத்தலின் அடையாளத்தை அழுத்தமாக நிறுவமுடிகிறது அவரால்!

    டாக் ஹாமர்ஸ்க் ஜோல்ட்  – ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொது செயலாளர்

    அமைதியான தீர்வு!

    ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான், அன்புத் தோழி ஒருவரிடம் அது பற்றி கலந்தாலோசித்தேன். அவள் சொன்ன ஒரு யோசனை, கடுமையான சிக்கல் என்று எண்ணி பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த என் மனநிலையை நொடியில் மாற்றியமைத்துவிட்டது. அவள், ‘சங்கரி, உனக்கு இப்ப வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது மட்டும்தான் உன் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு சொல்லக்கூடியது. ஆம் உனக்கு தற்போது வேண்டுவதெல்லாம், அமைதியாக தீர்வு காணக்கூடிய மனோபாவம்!” என்றாள். அவள் சொன்ன வார்த்தைகள் உண்மையிலேயே என் இதயத்தைச் சுண்டிவிட்டது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னுடைய பல்வேறு பிரச்சனைகளையும், துணிவுடன் சமாளிக்க அந்த வார்த்தைகளே கைகொடுக்கிறது!

    ‘தீர்வு’ என்று சொல்லும்போது ஒன்றைப் பற்றிய திட்டவட்டமான அல்லது உள்ளார்வத்துடனான முடிவை எடுப்பதென்பதே. அதாவது எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியானதொரு தீர்வைக் காண்பது. உதாரணமாக, இரண்டு நீண்டகால நண்பர்கள், பங்குதாரர்களாகச் சேர்ந்து ஒரு நூற்பு ஆலையை வைத்தார்கள். நட்பில் இருந்த நெருக்கம், தொழில் என்று வந்த போது முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு சமயத்தில் சேர்ந்து தொழில் செய்வதே சிரமம் என்ற நிலை உருவானது. இருவரும் அமைதியாக தொழிலை பிரித்துக் கொண்டு விலகி விட்டார்கள். இலாபமோ, நட்டமோ, அவர்கள் எடுத்த தெளிவான முடிவினால் இருவரும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டதோடு, அடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த முடிந்தது அவர்களால். மனச்சுமையிலிருந்து சுத்தமாக விடுபட்டு வெளியேறினர் அந்த இருவரும்.

    தொழில்முறை முரண்பாடுகளோ அல்லது சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளோ, அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வு என்பது அதனை நாம் அணுகும் விதத்திலேயே அமைகிறது. நாம் கையாளும் ஒரு காரியத்தில் பாதுகாப்பற்றதொரு உணர்வைப் பெறும்போது, உடனடியாகத் தீர்வை நாடும் மனம், அதற்காக கடுமையாக போராடவும் ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் அச்சப்பட்டோ, கண்மூடித்தனமாகவோ, அல்லது கோழைத்தனமான முடிவையோக்கூட எடுக்க வேண்டிவந்துவிடும். குழப்பமான இது போன்ற மன நிலையில் எடுக்கும் முடிவுகள், நம்மை மீண்டும் தலை தூக்க முடியாத அளவிலான தீர்மானங்களைக் கூட எடுக்க வைத்துவிடும். எச்சரிக்கை தேவை!

    நியாயமான அமைதியை இலக்காகக் கொண்டு செயல்படும்போது, நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய அறிவார்ந்த உறுதிப்பாட்டின் ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குகிறோம் . அப்போதைக்கு இதன் பின்விளைவுகளைப் பற்றி உடனே அறிய முடியாமல் போனாலும் கூட, அதைப்பற்றிய விழிப்புணர்வு தேவையான காலத்தில் கட்டாயம் வரும் என்ற திடமான நம்பிக்கை மலரும்! அந்த நம்பிக்கையே மனத்தெளிவையளிப்பதோடு, அடுத்து நடக்க வேண்டியதற்கும் அச்சாரம் போட்டுவிடும்.

    அதே சமயம் தீர்வைப் பற்றிய சிந்தையே இல்லாததொரு சலனமற்ற அமைதி என்பது சூழ்நிலைக்கேற்ப பயனுள்ளதாகவோ அன்றி பயனற்றதாகவோக்கூட ஆகலாம். தன்னால் இயலாத நிலையில், ஓய்வு பெற்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு இது நல்ல முடிவாக இருக்கலாம். ஓய்வுக் காலங்களில் இப்படி நீண்ட அமைதிகாத்து அமருபவர்கள்கூட முன் காலத்திலேயே அதற்கான சரியான திட்டமிடல் மூலம், நல்லதொரு பாதையை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், தானாக காரியங்கள் நடந்துவிடும் என்று மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் விதியின் வசம் முடிவை விட்டுவிட்டு அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கமும், அச்சமும் வாட்டியெடுக்கும் குழப்பத்தில் உழல வேண்டி வரும். இது மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.
    அதனால் ஏற்படக்கூடிய எதிர்வினைகளுக்கும் தாமே காரணமாகிவிடக்கூடும். அதாவது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்றில்லாமல் குழப்பமற்ற அமைதியான மனநிலையுடன் எடுக்கும் முடிவுகள் மூலம் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற திடமான நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதே சத்தியம்.

    தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களும் இது போன்றதோரு சூழ்நிலையில், அமைதியான மனநிலையுடன் எடுக்கும் முடிவுகளே அவர்களை மீண்டும் அந்தச் சேற்றில் உழன்று, மென்மேலும் தவறு செய்யாத ஒரு உறுதியான மன நிலைக்கு ஆட்படுத்தி சரியான பாதையில் பயணிக்கும் நம்பிக்கையும் அளிக்கிறது.

    எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான மனநிலையுடன் எடுக்கும் தீர்வானது, நல்லதொரு பாதையின் பயணத்தின் ஆரம்பம். அடுத்து நடக்க வேண்டியவைகளை நம் அறிவு வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

    சிறகைச் சுமை என்று நினைத்தால் பறவைகள் பறக்க முடியுமா?

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி :

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(61)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தொடக்கம் அனைவருக்கும் ஓரே மாதிரியாக அமைந்தாலும் முடிவில் அனைவரும் வித்தியாசமான முடிவுகளையே சந்திக்கிறோம்.

    ஆனால் இம்முடிவு காலத்தின் படி எமக்குக் கிடைக்கிறது எனும் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இம்முடிவின் நிகழ்வில் எமது முயற்சியின் தாக்கங்கள் எதுவித பங்கையும் எடுப்பதில்லையா ?

    எமது வாழ்வின் போக்கை மாற்றும் சக்தி எமக்கில்லையா ?

    நிச்சயமாக இருக்கிறது . வாழ்க்கை ஒரு கட்டுப்பாடாற்ற குதிரை போன்றது அதன் மேல் மிகவும் சிரத்தை எடுத்து ஏறி உட்கார்ந்து அதன் கடிவாளத்தை இறுகப் பற்றி அதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாம் முன்னேறிப் போக நினைக்கும் பாதையில் அதைச் சீராக செலுத்துவதே ஒவ்வொரு மனிதர்களினதும் கடமை ஆகும்.

    ஆனால் இதனை ஏன் சிலரால் செய்ய முடிவதில்லை ? ஓ அதைத்தான் அவர்களது காலம் என்று சொல்கிறோமா ?

    இல்லையெனில் அக்காலத்தை மாற்றியமைக்கும் வழிகள் இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் ஒருவகை உறக்கத்தினுள் அமிழ்ந்து போயிருக்கிறார்களா?

    நாம் ஏன் இத்தகிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்கு எல்லோராலும் அழகாக சந்தர்ப்பம் சூழலை இலகுவாகக் காரணம் காட்டி விடலாம். ஆனால்ல்ல்ல்ல் இக்காரணங்கள் பல சமயங்களில் “நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு” என்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.

    அதற்காக சூழ்நிலை காரணத்தினால் தமது வாழ்க்கையில் பல சிக்கல்களை அனுபவித்து இருப்பவர்கள் இல்லை என்று நான் வாதிட வரவில்லை.

    சரி எப்படியானல் எங்கே போகிறது எனது இந்தக் கட்டுரையின் சாரம் ?

    புள்ளிக் கணக்கு விபரங்களின் படி இங்கிலாந்தின் வடமேற்கு (North West) பகுதியில் வாழும் மக்களிடையே வாழ்க்கைக் காலம் மிகவும் குறைவாக காணப்படுகிறது எனும் விப்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒரு மனிதன் நாட்டில் வாழும் பகுதியை ஒட்டியே அவன் எத்தனை வருடங்கள் வாழ்ப்போகிறான் எனும் கணக்குத் தங்கியுள்ளது என்கிறார்கள்.

    இது என்ன விந்தையாக இருக்கிறது ? ஒவ்வொரு மனிதரும் எப்போது இறக்கப் போகிறார்கள் என்பது எமது கையிலா இருக்கிறது ? பின் எப்படி இது அவர்கள் வாழும் பகுதியைச் சார்ந்ததாக இருக்க முடியும் ? எனும் கேள்வி நியாயமானதே !

    எம்முடைய வாழ்வின் முடிவு எமது கையில் இல்லை எனும் வாதம் சரியானதே ஆனால் இப்பகுதியில் வாழ்வும் மக்கள் அவர்களால் தவிர்க்கப்படக்கூடிய பல காரணங்களினால் குறைந்த வயதினிலே சாவைத் தழுவிக் கொள்கிறார்கள். இத்தகிய இறப்புகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றே இவர்கள் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆமாம் மாரடைப்பு (Heart attack) புற்றுநோய் (Lung cancer) , பாரீசவாதம்(Stroke) இது போன்ற தமது வாழ்க்கை முறையினால் தவிர்க்கப்படக்கூடிய நோய்களுக்கு இளவயதிலே தம்மைப் பலி கொடுக்கிறார்கள் என்பதுவே முன்வைக்கப்பட்ட கருத்தாகும்.

    இங்கிலாந்து போன்ற வைத்திய சிகிச்சையில் முன்னிற்கும் நாடு ஒன்றில் அவர்களினது மக்களிடையே இத்தகைய வேறுபாடு காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்.

    இவ்வறிக்கை வெளிவந்ததும் இதைப்பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல ஊடகங்களில் நிகழ்ந்தன. இவற்றில் பலவற்றில் பொதுமக்கள் பலர் தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.

    சரி இப்படியானல் இத்தகைய நோய்களின் அடிப்படைக் காரணங்கள் எவை?

    மக்களின் அன்றாட வாழ்க்கை முறை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, தேக ஆரோக்கியத்திற்கான அப்பியாசங்கள் எதுவும் செய்யாதது, அதிக அளவிலான புகைபிடித்தல், கட்டுப்பாடற்ற மது உட்கொள்ளல் இவைகளே முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

    சரி இதற்கும் அவர்கள் வாழுகின்ற பகுதிகளுக்கும் என்ன சம்மந்தம் ?

    இதற்கான ஒருவகை விளக்கத்தை மேற்கூறிய ஊடக நிகழ்ச்சி ஒன்றிலே ஒரு பொதும்கன் கூறிய கருத்தொன்றில் கேட்கக்கூடியதாக இருந்தது.

    ஒரு நடுத்தர வயதுடைய மனிதர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. அவரின் வார்த்தைகளிலே தன்னுடைய வாழ்வின் நிதிநிலைமையே தன்னை அதிக அளவில் மது உட்கொள்ள வைக்கிறது என்கிறார்.

    தான் வாழும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் ஊதியப் பணம் தேசிய அளவின் அடிப்படையில் குறைவானது எனவும். மாதக் கடைச்சிக்கு முன்னதாகவே தன்னுடைய இருப்பில் பணம் கரைந்து விடுவதாகவும் தனது குடும்ப அங்கத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத வேதனையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவ்வ்வ்வை வாங்கி உட்கொள்வதின் மூலம் தனது பிரச்சனைகளை கொஞ்ச்ச்ச நேரம் மறந்து போய் இருக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார்.

    இவ்வூடக நிகழ்வை நடத்தியவர் நீங்கள் மதுவுக்குச் செலவழிக்கும் பணம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைச் சேமித்தால் அந்தளவு பணமாவது உங்கள் கையிருப்பு இருக்குமே ? என்று கேட்ட கேள்விக்கு அப்படி கையிருக்கும் பணத்தினால் தான் நிறைவேர்ற நினைக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றார் அவர்.

    சரி இத்தகைய சுகாதார அடிப்படியிலான வித்தியாசங்கள் வாழும் பகுதிக்கேற்ப மாறுவது அப்பகுதி மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனையில் அடிப்படையிலா ? எனும் கேள்வி எழுகிறது. அதே கேள்வியின் மூலம் இதற்கெல்லாம் இங்கிலாந்து நாட்டின் அரசாங்கப் பொருளாதாரக் கொள்கைதான் காரணமா ? எனும் கேள்வியும் எழுகிறது.

    மறுபக்கம் பார்த்தால் புகை பிடிப்பது , மது அருந்துவது என்பன ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இச்சையின் அடிப்படையில் எழும் செயல்களாகும் இதற்கு அராஆஅசாங்கம் எவ்வகையில் பொறுப்பாக முடியும் ? எனும் கேள்வியும் நியாயமானதே !

    அதேசமயன் இப்புள்ளி விபர அறிக்கையில் பாதிக்கப்படும் பகுதிகள் எனும் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள சில தனிப்பட்ட பிரதேசங்கள் இதற்கு எதிர்மாறான முடிவுகளைக் காட்டுகின்றன.

    சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தான் காரணமெனில் சில பொருளார அளவில் கீழுள்ள பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு இருப்பதன் காரண்ம் என்ன ? எனும் கேள்வியை முன்வைக்கிறது அரசாங்கம்.

    இப்பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்கள் மக்கள் வாழும் பகுதிகள் என்பதை விட அஓஅகுதி மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான புரிந்துணர்வு அதிக அள்வில் இல்லை என்றும் இதற்கான புரிந்துணர்தலை அளிக்கும் அதிகாரத்தையும் கடமையையும் அந்தந்த உள்ளுராட்சி கவுன்சில்களின் பணிகளில் ஒன்றாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையைத் தனது கைகளில் எடுக்காவிட்டால் அம்மனிதனின் முன்னேற்றம் என்ருமே சறுக்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    எமக்குப் பசி எடுக்கும் போது உண்ண வேண்டும் என்பதை எப்படி அரசாங்கமோ அன்றி வேறு அமைப்புகளோ சொல்லத் தேவையில்லையோ அதே போல சீராக வாழ வேண்டும் என்பதையும் வேறு ஒருவர் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    12.06.2013

    Share
  • அன்பைத் தந்து இறையாகு

     

    சத்திய மணி

    கொதித்து நீயும் முகிலாகு

    குளிர்ந்து  நீயும் மழையாகு

    விதையில் இருந்து மரமாகு

    கனிகள் உதிர்ந்து விதையாகு

     

    கருவம்    ஒழித்து மொட்டாகு

    உருவம்    உரித்து மலராகு

    இரவல்    கேட்டு இலையாகு

    இருக்கும் வரையில்  விருந்தாகு

     

    குழப்பம்  விலக்கும் குணமாகு

    கலக்கம்  கழிக்கும்   கணையாகு

    விளக்கம் வழங்கும் அறிவாகு

    இலக்கம்  இல்லா    சுழியாகு

     

    புரியும் வரையில் புதிராகு

    புரியா   தவர்க்கும் புலனாகு

    தெரியும் வரையில் தெளிவாகு

    தெரியா   தவர்க்கும் ஒளியாகு

    அடக்கம் என்னும் அழகாகு

    அசத்தும் விந்தை  கவியாகு

    அட்சயம் பகிர்ந்து அன்பாகு

    அன்பைத் தந்து இறையாகு

    Share
  • வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

     

    சத்தியமணி

    பார்க்க பார்க்க பரவசமாய்

    படிக்க  படிக்க  நவரச‌மாய்

    ருசிக்க  ருசிக்க   மதுரசமாய்

    ரசிக்க    ரசிக்க     தமிழ்வசமாய் ()

     

    நினைக்க நினைக்க கருத்தூறும்

    சலிக்க     சலிக்க  சொல்சேரும்

    பழிக்க  பழிக்க    படைப்பாகும்

    களிக்க களிக்க    பிறப்பாகும் ()

     

    குதிக்க குதிக்க ஆடற்கலை

    பதிக்க  பதிக்க  காதற்கலை

    உதிர்க்க உதிர்க்க மழலைகளாய்

    இனிக்கச் சேரும் செவியலையாய்

     

    வலிக்க வலிக்க விரல்யாழில்

    இழைக்க இழைக்க இசையாகும்

    கொதிக்க கொதிக்க அனல்மீதில்

    குழம்பும் ரசமும் மணமேற்கும்

     

    பறக்க  பறக்க  பறவைகள்போல்

    கறக்க கறக்க  பசுபால்போல்

    சிறக்க  சிறக்க  இவைச்செல்லும்

    சிரிக்க சிரிக்க   கதைசொல்லும்

     

    படைப்பவன்  என்பவன் தாயானான்

    படிப்பவன்      தன‌க்கோ  தருவானான்

    கவியாய் இசையாய் உண்டானான்

    கவியால் தமிழுடன்  ஒன்றானான்

     

    புகழ்தனை வாங்கா தமிழுண்டோ!

    போற்றியும் சேர்க்கா தமிழுண்டோ!

    வேண்டாதவரையும் முத்த‌மிட்டு

    வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

     

     

    Share
  • அன்பே அழகானது – 3

    ராஜ்ப்ரியன்

    கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

    சொல்லுங்க.

    எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

    அப்படியா உள்ள வாங்க.

    இருக்கட்டும் சார்.

    ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

    உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

    ஓஹோ.

    இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

    8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

    சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

    சரி சார்.

    மாசத்துக்கு எவ்ளோ?.

    500 ரூபா சார்.

    ஒகே.

    திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

    தெரியும் சார்.

    இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

    என்னப்பா என கேட்டபடி வந்தான்.

    இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

    யாருப்பா இவரு ?.

    இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

    அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

    நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

    அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

    வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

    மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

    தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

    நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

    …………

    சீக்கிரம் வா தாத்தா.

    ………….

    என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

    …………..

    அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

    ஹலோ என்றதும்

    எப்படிப்பா இருக்கா ?

    நல்லாயிருக்கன்.

    அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

    அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

    நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

    நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

    அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

    அம்மாக்கிட்ட போனை தாங்க.

    பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

    என்னப்பா எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

    எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

    டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

    போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

    இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

    புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

    வேலை அதிகமாயிருக்கும்மா.

    ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

    வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

    அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.

    நல்லாயிருக்கன் பாட்டி.

    பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

    என்னடா சொன்னாங்க பாட்டி.

    ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

    உம்.

    எப்போ ?

    அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

    தொடரும்……………

    Share
  • சம்பு நடம்பயிலும் தருணம்

     

    -சு.ரவி

    ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்..

    விரிசடை முகிலென வான்மேல் பரவிட

    பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட

    ஏழுலகங்களும் தூளி பறந்திட

    பூத கணங்களின் கோஷ மெழுந்திட

    கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட

    அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட

    கைத்தா மரையினில் டம டம டம வென

    வைத்தொரு டமருகம் இடியென ஒலிதர

    சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்

    மேளம், தாளம், பஞ்சமுகம், பறை

    கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை

    சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்

    விசை நடனம் தரும் இசை வடிவம்.

    சம்பு நடம்பயிலும் தருணம்

    ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.

     

    பார்க்க, படிக்க, ரசிக்க…

    Share
  • அனுதாபம்

     

    -கீதா மதிவாணன்

     

    உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

     

    நான் கலங்கிநிற்கும்போதெல்லாம்

    கருணை காட்டுகிறாய் நீயும்.

    ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும்

    நன்றியால் நிறைகிறேன் நாளும்!

    ஆனாலும் அந்நன்றிக்கடனானது

    எனையழுத்தும் அதிபாரமானது.

    உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

     

    என்னுடைய ஒரு பெருமூச்சேனும்

    உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?

    அவ்விழிகளில் வழியக்கூடுமோ

    இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை?

    சத்தியத்தை மூடிவைக்கலாம்,

    சத்தத்தை எதுவரை முடியும்?

    உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

     

    அடுத்தவருக்கு தன் துயரை

    அளிக்க இயல்பவர் யாரே?

    அடுத்தவர் துயரை தனதாய்

    ஏற்க இயல்பவர் யாரே?

    ஏன் நமக்கிடையே இப்படியொரு

    ஏமாற்றுப் பண்டமாற்று?

    உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

     

    இத்தகு பாதையில்தான் நம் பயணம்

    ஏனோ ஏற்கமறுக்கிறோம் நாமும்.

    ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்…

    பரஸ்பரம் துக்கம் பகிரவியலாதவனாய்!

    அடுத்தவர் படும் வேதனை கண்டு

    தானும் வேதனை காட்டுவோரெல்லாம்

    அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம்

    மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார்.

    உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.

    உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!

    உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

     

    (மூலம் : ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதிய ‘ஸம்வேதனா’ என்னும் இந்திக்கவிதை.

    தமிழாக்கம்: கீதா மதிவாணன்)

    Share