-கீதா மதிவாணன்

 

உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

 

நான் கலங்கிநிற்கும்போதெல்லாம்

கருணை காட்டுகிறாய் நீயும்.

ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும்

நன்றியால் நிறைகிறேன் நாளும்!

ஆனாலும் அந்நன்றிக்கடனானது

எனையழுத்தும் அதிபாரமானது.

உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

 

என்னுடைய ஒரு பெருமூச்சேனும்

உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?

அவ்விழிகளில் வழியக்கூடுமோ

இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை?

சத்தியத்தை மூடிவைக்கலாம்,

சத்தத்தை எதுவரை முடியும்?

உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

 

அடுத்தவருக்கு தன் துயரை

அளிக்க இயல்பவர் யாரே?

அடுத்தவர் துயரை தனதாய்

ஏற்க இயல்பவர் யாரே?

ஏன் நமக்கிடையே இப்படியொரு

ஏமாற்றுப் பண்டமாற்று?

உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

 

இத்தகு பாதையில்தான் நம் பயணம்

ஏனோ ஏற்கமறுக்கிறோம் நாமும்.

ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்…

பரஸ்பரம் துக்கம் பகிரவியலாதவனாய்!

அடுத்தவர் படும் வேதனை கண்டு

தானும் வேதனை காட்டுவோரெல்லாம்

அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம்

மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார்.

உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.

உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!

உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

 

(மூலம் : ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதிய ‘ஸம்வேதனா’ என்னும் இந்திக்கவிதை.

தமிழாக்கம்: கீதா மதிவாணன்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அனுதாபம்

  1. //என்னுடைய ஒரு பெருமூச்சேனும்

    உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?//

    மிகவும் அருமை. மூலக் கவிதை படித்தவருக்கும், அழகான தமிழாக்கம் செய்த திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *