வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!
சத்தியமணி
பார்க்க பார்க்க பரவசமாய்
படிக்க படிக்க நவரசமாய்
ருசிக்க ருசிக்க மதுரசமாய்
ரசிக்க ரசிக்க தமிழ்வசமாய் ()
நினைக்க நினைக்க கருத்தூறும்
சலிக்க சலிக்க சொல்சேரும்
பழிக்க பழிக்க படைப்பாகும்
களிக்க களிக்க பிறப்பாகும் ()
குதிக்க குதிக்க ஆடற்கலை
பதிக்க பதிக்க காதற்கலை
உதிர்க்க உதிர்க்க மழலைகளாய்
இனிக்கச் சேரும் செவியலையாய்
வலிக்க வலிக்க விரல்யாழில்
இழைக்க இழைக்க இசையாகும்
கொதிக்க கொதிக்க அனல்மீதில்
குழம்பும் ரசமும் மணமேற்கும்
பறக்க பறக்க பறவைகள்போல்
கறக்க கறக்க பசுபால்போல்
சிறக்க சிறக்க இவைச்செல்லும்
சிரிக்க சிரிக்க கதைசொல்லும்
படைப்பவன் என்பவன் தாயானான்
படிப்பவன் தனக்கோ தருவானான்
கவியாய் இசையாய் உண்டானான்
கவியால் தமிழுடன் ஒன்றானான்
புகழ்தனை வாங்கா தமிழுண்டோ!
போற்றியும் சேர்க்கா தமிழுண்டோ!
வேண்டாதவரையும் முத்தமிட்டு
வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!
தோண்டத் தோண்டக் கவிதரும் தமிழை வேண்டச் செய்யும் கவிதை அருமை. வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி மணி அவர்களே!
தமிழின் அருமையை எவ்வளவு பேசினாலும் சலிக்காது, புளிக்காது. இனிக்க இனிக்க தந்த சத்யமணியின் கவிதை அருமை.
வேண்டாதவரையும் வேண்டச்செய்யும்
தமிழில் ஒரு
வெற்றிக் கவிதை..
வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்..