சத்திய மணி

கொதித்து நீயும் முகிலாகு

குளிர்ந்து  நீயும் மழையாகு

விதையில் இருந்து மரமாகு

கனிகள் உதிர்ந்து விதையாகு

 

கருவம்    ஒழித்து மொட்டாகு

உருவம்    உரித்து மலராகு

இரவல்    கேட்டு இலையாகு

இருக்கும் வரையில்  விருந்தாகு

 

குழப்பம்  விலக்கும் குணமாகு

கலக்கம்  கழிக்கும்   கணையாகு

விளக்கம் வழங்கும் அறிவாகு

இலக்கம்  இல்லா    சுழியாகு

 

புரியும் வரையில் புதிராகு

புரியா   தவர்க்கும் புலனாகு

தெரியும் வரையில் தெளிவாகு

தெரியா   தவர்க்கும் ஒளியாகு

அடக்கம் என்னும் அழகாகு

அசத்தும் விந்தை  கவியாகு

அட்சயம் பகிர்ந்து அன்பாகு

அன்பைத் தந்து இறையாகு

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அன்பைத் தந்து இறையாகு

  1. /*அட்சயம் பகிர்ந்து அன்பாகு
    அன்பைத் தந்து இறையாகு */ 
    யாருக்கும் விருப்பம் இல்லையோ?
    அல்லது புரியவில்லயோ
    அல்லது நேரமில்லையோ!!!

  2. பாராட்ட வார்த்தைகளில்லை. ஒவ்வொரு வரியும் முத்துப் போல்!!.

    ////கருவம்    ஒழித்து மொட்டாகு
    உருவம்    உரித்து மலராகு////

    ////அட்சயம் பகிர்ந்து அன்பாகு
    அன்பைத் தந்து இறையாகு////

     அற்புதமான, பொருள் பொதிந்த வரிகள்!!!. வாழ்த்துக்கள் சகோதரரே!!

  3. அன்பை தந்து இறையாகு. அருமை. கருத்தாழமிக்க நல்லதொரு கவிதை
    தெளிவான வார்த்தைகள். தெளிவாக்குது நம்மை.

  4. தற்போதுதான் படித்தேன் ஐயா. அறிவியலில் தொடங்கி,  இறையியலில் முடிந்த கவிதை. 

    ‘அன்பைத் தந்து இறையாகு!’

    என்றோ படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.   


    ஒரு துறவி ஆற்றங்கரையில் தியானம் செய்துவிட்டு கண்களைத் திறந்தபோது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அந்தத் துறவி உடனே ஓடிச்சென்று அந்த தேளை கையில் எடுத்து ஆற்றங்கரையில் விட்டபோது அந்தத் தேள் அவரைக் கொட்டிவிட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தத் தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அந்தத் துறவி அதை கையில் எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. 

    இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவன், “சாமி, தேள் கொட்டும் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். 

    அதற்குத் துறவி “கொட்டுவது என்பது தேளின் இயல்பு! பிற உயிர்கள் மீது அன்பு செலுத்திக் காப்பாற்றுவது என்பது துறவியாகிய என்னுடைய இயல்பு! அனைத்தையும் துறப்பது துறவறம் அல்ல. எல்லோரையும் நேசிப்பவனே துறவி! அற்பத் தேளே அதன் இயல்பை மாற்றிக் கொள்ளாதபோது, துறவியாகிய நான் எதற்கு என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளவேண்டும்?” என்று கூறிவிட்டு புன்னகைத்தாராம். 

    ….

    ‘அன்பைத் தந்து இரையாகிவிடுவோமோ?’ என்று அஞ்சத் தேவையில்லை. ‘இறையாகவும் ஆகலாம்!’

    அன்பே சிவம்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *