இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(61)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தொடக்கம் அனைவருக்கும் ஓரே மாதிரியாக அமைந்தாலும் முடிவில் அனைவரும் வித்தியாசமான முடிவுகளையே சந்திக்கிறோம்.
ஆனால் இம்முடிவு காலத்தின் படி எமக்குக் கிடைக்கிறது எனும் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இம்முடிவின் நிகழ்வில் எமது முயற்சியின் தாக்கங்கள் எதுவித பங்கையும் எடுப்பதில்லையா ?
எமது வாழ்வின் போக்கை மாற்றும் சக்தி எமக்கில்லையா ?
நிச்சயமாக இருக்கிறது . வாழ்க்கை ஒரு கட்டுப்பாடாற்ற குதிரை போன்றது அதன் மேல் மிகவும் சிரத்தை எடுத்து ஏறி உட்கார்ந்து அதன் கடிவாளத்தை இறுகப் பற்றி அதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாம் முன்னேறிப் போக நினைக்கும் பாதையில் அதைச் சீராக செலுத்துவதே ஒவ்வொரு மனிதர்களினதும் கடமை ஆகும்.
ஆனால் இதனை ஏன் சிலரால் செய்ய முடிவதில்லை ? ஓ அதைத்தான் அவர்களது காலம் என்று சொல்கிறோமா ?
இல்லையெனில் அக்காலத்தை மாற்றியமைக்கும் வழிகள் இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் ஒருவகை உறக்கத்தினுள் அமிழ்ந்து போயிருக்கிறார்களா?
நாம் ஏன் இத்தகிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்கு எல்லோராலும் அழகாக சந்தர்ப்பம் சூழலை இலகுவாகக் காரணம் காட்டி விடலாம். ஆனால்ல்ல்ல்ல் இக்காரணங்கள் பல சமயங்களில் “நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு” என்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.
அதற்காக சூழ்நிலை காரணத்தினால் தமது வாழ்க்கையில் பல சிக்கல்களை அனுபவித்து இருப்பவர்கள் இல்லை என்று நான் வாதிட வரவில்லை.
சரி எப்படியானல் எங்கே போகிறது எனது இந்தக் கட்டுரையின் சாரம் ?
புள்ளிக் கணக்கு விபரங்களின் படி இங்கிலாந்தின் வடமேற்கு (North West) பகுதியில் வாழும் மக்களிடையே வாழ்க்கைக் காலம் மிகவும் குறைவாக காணப்படுகிறது எனும் விப்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் நாட்டில் வாழும் பகுதியை ஒட்டியே அவன் எத்தனை வருடங்கள் வாழ்ப்போகிறான் எனும் கணக்குத் தங்கியுள்ளது என்கிறார்கள்.
இது என்ன விந்தையாக இருக்கிறது ? ஒவ்வொரு மனிதரும் எப்போது இறக்கப் போகிறார்கள் என்பது எமது கையிலா இருக்கிறது ? பின் எப்படி இது அவர்கள் வாழும் பகுதியைச் சார்ந்ததாக இருக்க முடியும் ? எனும் கேள்வி நியாயமானதே !
எம்முடைய வாழ்வின் முடிவு எமது கையில் இல்லை எனும் வாதம் சரியானதே ஆனால் இப்பகுதியில் வாழ்வும் மக்கள் அவர்களால் தவிர்க்கப்படக்கூடிய பல காரணங்களினால் குறைந்த வயதினிலே சாவைத் தழுவிக் கொள்கிறார்கள். இத்தகிய இறப்புகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றே இவர்கள் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள்.
ஆமாம் மாரடைப்பு (Heart attack) புற்றுநோய் (Lung cancer) , பாரீசவாதம்(Stroke) இது போன்ற தமது வாழ்க்கை முறையினால் தவிர்க்கப்படக்கூடிய நோய்களுக்கு இளவயதிலே தம்மைப் பலி கொடுக்கிறார்கள் என்பதுவே முன்வைக்கப்பட்ட கருத்தாகும்.
இங்கிலாந்து போன்ற வைத்திய சிகிச்சையில் முன்னிற்கும் நாடு ஒன்றில் அவர்களினது மக்களிடையே இத்தகைய வேறுபாடு காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்.
இவ்வறிக்கை வெளிவந்ததும் இதைப்பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல ஊடகங்களில் நிகழ்ந்தன. இவற்றில் பலவற்றில் பொதுமக்கள் பலர் தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.
சரி இப்படியானல் இத்தகைய நோய்களின் அடிப்படைக் காரணங்கள் எவை?
மக்களின் அன்றாட வாழ்க்கை முறை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, தேக ஆரோக்கியத்திற்கான அப்பியாசங்கள் எதுவும் செய்யாதது, அதிக அளவிலான புகைபிடித்தல், கட்டுப்பாடற்ற மது உட்கொள்ளல் இவைகளே முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
சரி இதற்கும் அவர்கள் வாழுகின்ற பகுதிகளுக்கும் என்ன சம்மந்தம் ?
இதற்கான ஒருவகை விளக்கத்தை மேற்கூறிய ஊடக நிகழ்ச்சி ஒன்றிலே ஒரு பொதும்கன் கூறிய கருத்தொன்றில் கேட்கக்கூடியதாக இருந்தது.
ஒரு நடுத்தர வயதுடைய மனிதர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. அவரின் வார்த்தைகளிலே தன்னுடைய வாழ்வின் நிதிநிலைமையே தன்னை அதிக அளவில் மது உட்கொள்ள வைக்கிறது என்கிறார்.
தான் வாழும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் ஊதியப் பணம் தேசிய அளவின் அடிப்படையில் குறைவானது எனவும். மாதக் கடைச்சிக்கு முன்னதாகவே தன்னுடைய இருப்பில் பணம் கரைந்து விடுவதாகவும் தனது குடும்ப அங்கத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத வேதனையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவ்வ்வ்வை வாங்கி உட்கொள்வதின் மூலம் தனது பிரச்சனைகளை கொஞ்ச்ச்ச நேரம் மறந்து போய் இருக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார்.
இவ்வூடக நிகழ்வை நடத்தியவர் நீங்கள் மதுவுக்குச் செலவழிக்கும் பணம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைச் சேமித்தால் அந்தளவு பணமாவது உங்கள் கையிருப்பு இருக்குமே ? என்று கேட்ட கேள்விக்கு அப்படி கையிருக்கும் பணத்தினால் தான் நிறைவேர்ற நினைக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றார் அவர்.
சரி இத்தகைய சுகாதார அடிப்படியிலான வித்தியாசங்கள் வாழும் பகுதிக்கேற்ப மாறுவது அப்பகுதி மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனையில் அடிப்படையிலா ? எனும் கேள்வி எழுகிறது. அதே கேள்வியின் மூலம் இதற்கெல்லாம் இங்கிலாந்து நாட்டின் அரசாங்கப் பொருளாதாரக் கொள்கைதான் காரணமா ? எனும் கேள்வியும் எழுகிறது.
மறுபக்கம் பார்த்தால் புகை பிடிப்பது , மது அருந்துவது என்பன ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இச்சையின் அடிப்படையில் எழும் செயல்களாகும் இதற்கு அராஆஅசாங்கம் எவ்வகையில் பொறுப்பாக முடியும் ? எனும் கேள்வியும் நியாயமானதே !
அதேசமயன் இப்புள்ளி விபர அறிக்கையில் பாதிக்கப்படும் பகுதிகள் எனும் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள சில தனிப்பட்ட பிரதேசங்கள் இதற்கு எதிர்மாறான முடிவுகளைக் காட்டுகின்றன.
சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தான் காரணமெனில் சில பொருளார அளவில் கீழுள்ள பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு இருப்பதன் காரண்ம் என்ன ? எனும் கேள்வியை முன்வைக்கிறது அரசாங்கம்.
இப்பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்கள் மக்கள் வாழும் பகுதிகள் என்பதை விட அஓஅகுதி மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான புரிந்துணர்வு அதிக அள்வில் இல்லை என்றும் இதற்கான புரிந்துணர்தலை அளிக்கும் அதிகாரத்தையும் கடமையையும் அந்தந்த உள்ளுராட்சி கவுன்சில்களின் பணிகளில் ஒன்றாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையைத் தனது கைகளில் எடுக்காவிட்டால் அம்மனிதனின் முன்னேற்றம் என்ருமே சறுக்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எமக்குப் பசி எடுக்கும் போது உண்ண வேண்டும் என்பதை எப்படி அரசாங்கமோ அன்றி வேறு அமைப்புகளோ சொல்லத் தேவையில்லையோ அதே போல சீராக வாழ வேண்டும் என்பதையும் வேறு ஒருவர் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
12.06.2013