Blog

  • அறுமுகநூறு (14)

     

    -சச்சிதானந்தம்

    வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை,

    வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி,

    விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து,

    வாரிக் கருணை வழங்கிடும் வேலன்!                                                                              66

     

    ஆமணக்குக் காய்போல முட்கள் முளைத்து,

    ஆந்தைகளின் அலறல்கள் அகத்தை அறுத்து,

    ஆரிருளுக் கடிமையாகிப் பேரிருளில் வாழ்ந்தவனை,

    ஆறுமுகன் அரவணைத்து அருளளித் தானே!                                                                                   67

     

    இச்சை என்னும் பறவையின் சிறகை,

    இம்மைப் பிறவியில் முழுதாய் உதிர்த்துப்,

    பிச்சை பெற்றுப் பெற்ற பிறவியைப்,

    பெற்றவ னிடமே பணிவுடன் படைப்போம்!                                                                    68

     

    வாழ்வை வெறுத்துத் தோற்றுத் துவண்டு,

    வாழும் வழிமுறை தெரியா தவர்க்கு,

    வாழும் வாய்ப்பை மீண்டும் கொடுத்து,

    வையகக் கடைமை செய்திடச் செய்வான்!                                                                     69

     

    வாழ்வை முழுதாய் வாழ்ந்து களித்து,

    வாழ்வின் பொருளை உணர்ந்த மனிதரை,

    வாழ்த்திப் போற்றி வாவென் றழைத்து,

    வேலவன் தன்னுள் கலந்திடச் செய்வான்!                                                                      70

     

    Share
  • வாழ்க்கை நலம் – 9

    குன்றக்குடி அடிகள்


    9. வாழ்க்கைத் துணை நலம்


    வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்ளவர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்கை – இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

    சுந்தரர் இல்லறவியலில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது.இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

    பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே சுழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புற திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. “கண்டதே காட்சி! கொண்டதே கோலம்” என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில்தான் பிறந்தது.

    வள்ளுவம் மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக – இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் “பேய்” என்றும் “காதல், ஆண்டவனின் சாபம்” என்றும் கூறுவார். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை, மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

    ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்த பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஓர் அனுபவ வாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கை துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

    ஒருவர் வாழ்க்கையில் ஒருவர்  ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    ஒரு பெண் தன் துணைவருக்கு – பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழிநடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதால் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

    “தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

    என்று மொழிகிறது.

    ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறை வேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான், தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்ய முடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள்.  இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் தற்காத்து ‘தற்காத்து’ என்றது குறள். அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

    அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும், புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது.மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக்கொள்வது; குடும்பத்தின் செய்திகள் அயலறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும். இத்தகு நலன்களுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம்.

    இத்தகு நலன்கள் பெண்ணினத்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !

    காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

    இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.

    ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.

    ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.

    மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

    மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.

    உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.

    அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.

    என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.

    வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.

     நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.

    ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.

    பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.

    இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.

    இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    காலமெல்லாம் கழனிக்காட்டில்

    காத்து மழையும் பாராம

    கனலா சுட்டெரிக்கும் சூரியனையும் மதியாம

    களை பறிச்சி காசு சேத்து

    கண்ணான இராசா உன்ன

    கருத்தா நானும் படிக்க வெச்சேன்

    கடல் கடந்து நீயும் காசு சேர்க்க

    கழனிக் காட்டையும் தான்

    கடனுக்கு குடுத்தேன் !!!

    கடனுந்தான் தீந்து போச்சு

    காசுந்தான்  உனக்கு சேந்து போச்சு

    கண்ணசர மறந்து காத்துக் கிடக்கும்

    கருவுல சுமந்தவ நினைப்பும்

    கனவுல வந்துபோற ஒன்னாச்சு !!!

    கருக்கல்லுல வந்துடுவியோ – இல்ல

    கண் தொறந்தா விடியல்ல வந்துடுவியோன்னு

    கண்ணு ரெண்டும் பூத்துப் போயி

    கண்ணான புள்ளை உன்ன

    காணக் காத்துக் கிடக்குறேன் உன் ஆத்தா

    கண் மூடுமுன்ன சுருக்குன்னு வந்துடனும் என் இராசா !!! 

    Share
  • மதுரையம் பதி காளி

     

    – சு.ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்…

    ஆடலில் வென்றான் ஐயன்

     

    அம்மை நீ தோற்றாய் அல்லை!

    கூடலில் போலே இங்கும்

    தோற்றவர் வென்றார் அன்றோ?

    கூடலில் கோயில் கொண்டு

    குறையறக் காக்கும் காளீ!

    தேடலில் அடியேன் வெல்ல

    தேவி நீ அருளல் வேண்டும்!

     

    மாடமா மதில்கள் சூழும்

    மதுரையம் பதிவாழ் தேவி!

    காடுவாழ் சிவனைக் கண்டு

    காதலுற் றாயோ, காளீ!

    வீடு நான் வேண்டேன்; வேறு

    விழுமிய செல்வம் வேண்டேன்!

    பாடலால் உந்தன் பாதம்

    பரவிடும் சுகமே போதும்!

     

    கண்ணனோ(டு) இடத்தை மாற்றிக்

    கம்ஸனைக் கலங்க வைத்தாய்!

    எண்ணெழுத் தறியா மூடன்

    இலக்கியம் படைக்கச் செய்தாய்!

    மண்ணிலே உயிர்கள் வாழ

    மாரியாய்ப் பொழிந்து நின்றாய்!

    உள்நினைந் துருகிப் பாடும்

    ஒருகவி போதும் தாயே!

     

    எட்டய புரத்துக் காரன்

    எம் தமிழ்ப் பாட்டுக் காரன்

    கொட்டிய கவிதைக் குள்ளே

    கொழுந்துவிட் டெரியும் தேனே!

    மட்டவிழ் மலர்கள் சூடி

    மதுரையை ஆளும் தாயே!

    பட்டமும், பரிசும் வேண்டேன்

    பதமலர் தருவாய் காளீ!

     

    பண்டரி பரத்தில் விட்டல்

    பக்தரோடி ழைந்ததைப் போல்

    பண்டொரு நாளில் சொக்கன்

    பலவிளை யாடல் செய்த

    மண்ணினை, மதுரை ஆளும்

    மரகத வல்லித் தாயே!

    திண்ணமாய் நின்னைப் பற்றத்

    திருவுளம் செய்வாய் காளீ!

     

    Share
  • கவியின் காதல்!

     

    -புவனேஷ்வர்

     

    நல்ல புகழுடைய வீணை யதன்

    நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்

    மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்

    சோதியு னக்குவய மானேன்!

     

    கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல

    மாமி தந்தஉண வேதும் – மிக

    நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு

    சிந்தை மகிழ்வுதர வில்லை;

     

    நல்ல நினைப்புடைய தோழர் அவர்

    சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு

    கள்வெறி போலிது வாச்சு வந்து

    தெள்ளமு தேயருள் வாயோ?

     

    சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்

    சோடி யாச்செல்லற் கண்டா லுன்

    னோடி ணைந்திடற் கெங்கும் எனக்

    கோடி தள்ளுதற் செய்வாய்?

     

    ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்

    உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்

    வாழுமு றைமையறியேன் நான் வந்

    திருந்தென் கலிதொலைத் திடாயோ?

     

    அஞ்சு மானொத்த பெண்ணே இது

    வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி

    நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு

    தஞ்சமென் பேன்மறுக் காதே!

     

    அருளில் பெரியவராம் மாதர் என்று

    நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி

    யிருளுன் னவனென்னை கொண்டால் அது

    ஏலா துனக்கது சொல்வேன்;

     

    திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு

    தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்

    கண்டு மணந்திடவே வந்தேன் – இது

    பண்டைமு றைமையடி கண்ணே!

     

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

     

    Share
  • எதிர்காலம் மண்ணாகலாமா?

    -வே.ம. அருச்சுணன் – மலேசியா

     

    நடந்து முடிந்த
    பதின்மூன்றாவது தேர்தலில்
    மூவினத்தின்
    அடையாளம் தெரிந்தது…..!

    மூன்று வந்தேறிகளுக்கும்
    நிலைமை தெரியவில்லை
    ஆட்டத்தை நிறுத்தவில்லை
    வயிற்றுக்காக வாடிய மக்கள்
    வந்த இடத்தில்
    வகை தெரியாமல் வாழ்கின்றன…..!

    இங்கே
    ஏற்றம் தராது மந்திரத்தை
    துணிவாய் முழங்குவதும்
    ஒருவரைவொருவர்
    தின்று ஏப்பமிட எண்ணுவதும்
    வீண் வம்பு
    சொன்னால் நம்பு…..!

    எடுப்பது பிச்சை
    பேசுவதோ கொச்சை
    பேச்சில் ஒற்றுமை
    நடப்பில் வேற்றுமை
    அகம்பாவம்
    தனக்கே எல்லாமென்ற
    குறுகிய உள்ளம்
    சிறக்குமா இந்த பெருநிலம்….?

    கேடு கெட்ட உள்ளமே
    துன்மார்க்கனே
    சுனாமி
    எந்த உருவில்
    வருமென்று தெரியுமா….?

    முதுகொடிந்த
    தமிழனுக்கு இன்னுமா
    சோதனைகளும்….வேதனைகளும்……?

    ஒரு சொல் கேளீர்
    சீன சமூகம்
    அவர்களோடு கூடிப்பழகு
    ஒற்றுமையின் உச்சம் தெரியும்
    போராடும் வல்லமை புரியும்
    அவர்கள்
    மொழி….பண்பாடு
    கணமும் மறந்ததில்லை
    எழுச்சியைக் கிஞ்சிற்றும்
    துறந்ததில்லை…….!

    யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
    யாரையும் ஏற்பதும் இல்லை
    சுயமாய் சிந்திப்பதும்
    செயல்படுவதும்
    அவர்களின் வெற்றிக் கவசங்கள்……!

    உண்மை உணர்வீர்
    இனிய வாழ்வு
    மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்…..!

    இளையோரே முன்வருவீர்
    தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
    அடிமை வாழ்வைத் துறந்தே
    சுயமாய் வாழ்வு சிறக்க
    சொந்தத் தொழில் புரிவோம்
    அடிமைத்தொழிலை மறந்து
    செல்வச் சீமானாகத் திகழ்வோம்……!

    கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
    உரக்கக்கூறுவோம்

    ஒரே குரலில்……!

    Share
  • “பகல் மின்னல்கள்”

    செல்வரகு

    “பகல் மின்னல்கள்”

    (தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை)

    சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை “பகல் மின்னல்கள்” என்ற நேரடி செய்தித் தொகுப்பு சிறப்புப் பார்வையாக ஒளிபரப்பாகி வருகிறது .

    அன்றாடம் நடக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் திறமையான செய்தியாளர்களின் நேரடித் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன.

    சட்டம் – ஒழுங்கு – அரசியல் – பொருளாதாரம் என்று, நடப்பு நாள் தகவல்களின் சரியான புள்ளி விவரங்களை இந்தப் பகல் மின்னல்கள் பதிவாக்கி வருகின்றன.

    செய்தியறையிலிருந்து அன்றைக்குரிய செய்திகள் மக்கள் குரலாக எடுத்து வரப்பட்டு , ஒளிபரப்பாகி வரும் பகல் மின்னல்களைக் காணத்தவறாதீர்கள் .

    Share
  • அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை

     

    சத்தியமணி

     

    அம்மா!அம்மம்மா !

    அன்பின் சின்னமா!!

    ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!!

    பூவாய்ச் சிந்தம்மா

    புன்னகைத்தால் தேனம்மா

    பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா

    என்னை ஈன்று எடுத்தாய்

    இன்பப் பேரில் அழைத்தாய்

    தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய்

    தரும் பாட்டை ரசித்தாய் ()

    தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய்

    தள்ளாடி நடக்கையில் தாங்கிப் பிடித்தாய்

    பசியென அழுகையில் பாலும் கொடுத்தாய்

    பள்ளிகூடம் செல்லுமெனைப் பார்த்து ரசித்தாய்

    உன்னைப்போல் தெய்வதான் உண்டோசொல்

    உன்மடியின் மகிமைக்கு உண்டோ சொல் ()

     

    வேலைக்கெனச் செல்லுகையில் ஆசி அளித்தாய்

    வெற்றிகளைக் கண்டவுடன் துள்ளிகுதித்தாய்

    ஊரார்முன் எம்பெருமைப் பேசிகளித்தாய்

    ஊட்டிவிட்டு மிச்சம்தனை நீயும் கொரித்தாய்

    அன்னையுன் பணியினைப் பாராட்டுவேன்

    என்னையுன் பணியாளாய்ச்  சீராட்டுவேன் ()

    இதற்கான மெல்லிசை ராகத்தோடு தாளத்தோடு  கேட்க விரும்பின் youtube சொடுக்கவும் (அ) email sathiyamani@yahoo.com உங்கள் விருப்பத்தை அனுப்பவும் – நன்றி

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    கல்வெட்டுக் குறிப்புகள் என்பது நாம் கடந்து போன காலத்தின் சுவடுகள், ஆவணங்கள், நம் முன்னோர் தம்மைப் பற்றி விட்டுச் சென்ற செய்திச் சேகரங்கள். நம் தேசம் எப்படியெல்லாம் இருந்தது., எப்படியெல்லாம் புகழ்பெற்றது, எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொண்டோம், எப்படியெல்லாம் இந்தக் கோயில் குளங்களைக் கட்டினோம், எப்படியெல்லாம் பிறரைச் சாகடித்தோம் அல்லது தண்டனை வழங்கி திருப்தி அடைந்தோம், எப்படியெல்லாம் பாபங்கள் செய்தோம், எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்தோம், யார் யாரைக் கொன்றார்கள், யார் யாரைக் காப்பாற்றினர், எந்தக் கோயிலில் எந்த தெய்வத்துக்கு எத்தனை விதமான ஆபரணங்கள் செய்வித்தோம், எந்த தெய்வத்துக்கு எப்படிப்பட்ட ஆராதனையை எந்த அரசன் தயவில் செய்வித்தோம், இந்த சமாதியில் உள்ள எம் முன்னோர் யாவர்.. என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகளை வருங்காலத்துக்கு எடுத்துச் சொல்ல ஒரு காலப்பெட்டகமாக நமக்கு நம் முன்னோர் ஏற்பாடு செய்ததே இந்தக் கல்வெட்டுகள்.

    திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டு புகழ்பெற்ற மகேந்திரபல்லவன் தான் ஏன் சைவத்துக்கு மாறினான் என்று குறிப்பிட்டுள்ளான் என்றால் புவனேஸ்வரில் உள்ள ஒரு கல்வெட்டு எப்படி 113 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த தமிழ் மன்னர் கூட்டத்தை ஒரு கலிங்க மன்னன் சிதறடித்தான் என்பதையும் தெரிவிக்கும். இப்படி எத்தனையோ விஷயங்கள்.. அதுவும் கல்வெட்டுகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த, இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு கல்வெட்டு விஷயம் என்பது காந்த நிலையைப் போன்றதும் அப்படியே கட்டிப் போட்டுவிடும் என்பதும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தில் கிடைத்த இரண்டு தமிழ் கல்வெட்டுகள்தான் எனது முதல் நாவல் வம்சதாராவுக்கான அஸ்திவாரம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் உள்ளேன்.

    இப்படிப்பட்ட காலப்பெட்டகம் என்று சொல்லப்படும் ஒரு அரிய விஷயங்கள் இன்னமும் ஏராளமாக மைசூரில் அரசாங்க ஆர்க்கியாலஜி அலுவலகத்தில் படியெடுக்கமுடியாமல் அழிந்து வருகின்றன என்பது எல்லா அறிஞர்களும் அறிந்த விஷயம்தான் என்றாலும், இதில் வேதனைக்குரிய விஷயம் எதுவென்றால் அப்படி அழிந்து போகும் ஆவணங்களில் முக்கால்வாசி தமிழில் வரையப்பட்டவையாகும் என்பதே. இதைப் பற்றி நண்பர் ஷஃபி முன்னா ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையில் எழுதியதை கீழேயுள்ள சுட்டியில் படிக்கலாம்.

    http://news.vikatan.com/index.php

    அதே சமயத்தில் இந்த விஷயத்தினை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் ஒரு பெண்மணி இந்த வாரம் நம் கவனத்தைக் கவர்கிறார். அவர்தாம் பேராசிரியர் சாந்தினி பீ அவர்கள்.

    சாந்தினி பீ அலிகார் பல்கலையில் சரித்திரப் பாடம் புகட்டும் ஒரு தமிழர் என்பதோடு இந்தக் கல்வெட்டு விஷயத்தைப் பலர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சாந்தினியின் முயற்சி பலனளிக்கவேண்டும், இன்னமும் சேதமாகாத கல்வெட்டுகளாவது படியெடுக்கப்பட்டு காலப்பெட்டகம் சீர் செய்யப்படவேண்டும் என்பது எம்மைப் போன்றவர்களின் விருப்பம். எதிர்கால சந்ததியினர் இன்னமும் சிறப்பாகக் கடந்த காலம் பற்றித் தெரிந்திட இந்தக் கல்வெட்டுகள் உயிர் பெறும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செயல்படவேண்டும் என்பதும் நம் அவா. பேராசிரியர் சாந்தினியின் முயற்சிகளுக்கு நம் வாழ்த்தை அள்ளி வழங்குவதோடு அவருக்கு இந்த வார வல்லமையாளர் விருதையும் வழங்கி கௌரவிக்கிறோம்.

    கடைசி பாரா: திரு ஓம் சுப்பிரமணியம் இந்த வார வல்லமையில் எழுதியது:

    சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
    வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

    தேமொழி

    திமிர் கொண்ட அழகு

    உன் கண்ணில் தெரிவதென்ன
    நெருப்பா?
    என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும்
    குறும்பா?

    உன்
    உதட்டில் இருப்பதென்ன
    சிரிப்பா?
    என்னை அதட்டி அழைக்கும்
    அழைப்பா?

    உன் பேச்சில் சொல்வதென்ன
    இனிப்பா?
    என்னை உனதாக்கச் செய்யும்
    துடிப்பா?

    திமிர் கொண்ட தென்றல் காற்றே….
    உன்னைத் தேடி வந்தால்
    உன்
    புருவத்தில் ஏளனம் ஏற்றி
    என்
    பருவத்தில் தீ வைப்பதேனடி?

    பள்ளி அறை பாடம் நடத்த
    வெள்ளி நிலா தூண்டுதடி!
    ஊதக்காற்றும் ஒத்துழைத்து
    ஒதுங்கசொல்லி கூவுதடி!

    உன் சுட்டு விரல் அசைவு
    என்
    கட்டுப்பாட்டை நொறுக்கும்!
    உன் பட்டுப் பளிங்கு மேனி
    என்னை உள் மூச்சில் வதைக்கும்!

    பஞ்சமின்றி செழித்திருக்கும்
    அஞ்சுகமே!
    பட்டு நிலா வியப்புறும்
    பெட்டகமே!

    பொன்வண்டு அறியாது
    அதனுடைய அழகை…
    உன் கண் கொண்டு
    உற்றுப்பாரடி
    உன்னுடைய பேரழகை!

    வஞ்சனையின்றி வளர்ந்த
    உன் வதனம்!
    அதை
    இந்த மாமனிடம் தாரைவார்க்க
    ஏனடி மெத்தனம்!

    பொத்தி வைத்து ஆவதென்ன
    அந்த
    கன்னிமலை அதிசயம்!
    இனி
    ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
    இது சத்தியம்!

    காமன் கோயில் சாமிக்கு
    நான் யாசிப்பது கேட்கலியா
    தீர்த்து வைக்க தேவிக்கு
    மாமன் மையல் புரியலியா!

    -தனுசு-

     
    ஓவியம்: தேமொழி
    கவிதை: கவிஞர் தனுசு

     

     
    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8>>

    Share
  • ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….

     முனைவர். ப. பானுமதி

    கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும்போது தமக்கும் விடுமுறையாக இருப்பதால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையைக் கழிக்க கிளம்பி விடுவார்கள்.

    மற்ற அலுவலர்கள் நிலை பெரிய பிரச்சனைதான். வெளியூர் செல்வது இருக்கட்டும். முக்கியமாகக் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாது. யார் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு அலுவலகம் செல்வது என்று அலையும் அல்லல் சொல்லில் வடிக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தினர்க்குக் கோடைக்கால வெய்யில் மட்டுமல்ல வறுமையும் சேர்ந்து உடலையும் மனத்தையும் எரிக்கவே செய்கிறது.

    முடி உள்ள சீமாட்டி முன்னும் முடிவாள், பின்னும் முடிவாள் என்பது போல வசதி படைத்தவர்களாக இருந்தால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று கிளம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல ஜனவரி பிப்ரவரி மாதங்களில் துண்டுப் பிரசுரங்களில் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கும் கோடை விடுமுறை வகுப்புகள் செல்வக் குழந்தைகளின் விடுமுறையில் பாதி நாட்களை எடுத்துக் கொள்ளும்.. ஆட்டம், பாட்டம், நீச்சல், கையெழுத்து, மொழி, கணிதம் என்று குழந்தைகள் பணத்தையும் காலத்தையும் மகிழ்ச்சியாகச் செலவு செய்வார்கள். வசதி இருப்பவர்களுக்கு எக்காலத்திலும் வாழ்வு சுகமாகிவிடுகிறது.

    வசதி இல்லாதவ்ர்கள் என்ன செய்வார்கள். இரண்டு சினிமாவுடன் குழந்தைகளின் கோடை விடுமுறையை முடித்து விடுகின்றனர். மற்ற நாட்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அலுவலகம் செல்கிறார்கள்.  ஆனால் தொலைக்காட்சியெல்லாம் குழந்தைகளுக்கு அலுத்துப் போய் பல நாட்கள் ஆயிற்று. எப்போது கணினி வந்ததோ அப்போதே குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி புளித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் கணினியில் விளையாடுவது பெருகிவிட்டது.

    அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், கார் ரேஸ், பைக் ரேஸ் முதலிய கணினி விளையாட்டுகள் குழந்தைகளின் கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பிக்  கொண்டுள்ளன. இவற்றைத் தவிர Stratcgic games என்று அழைக்கப் படும் ஹாரிபார்டர், பிரின்ஸ் ஆஃப் பர்சியா போன்றவை சி.டிக்களில் வலம் வந்து குழந்தைகளைக் கும்மாளமிட வைத்துள்ளன. இது மட்டுமன்று கூகுல், முகப்புத்தகம், டிவிட்டர் முதலிய வலைத்தளங்கள் எண்ணற்ற புத்தம் புதிய விளையாட்டுகளை நாள்தோறும் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பபுல் சாகா, பபுல் எபிக், பபுல் வேல்ட், பபுல் ஸ்நேக் சாகா, பிரமிட் சாகா போன்ற நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளன.

    இந்த விளையாட்டுகள் எல்லாம் குழந்தைகளின் மூளையைத் தூண்டி சிந்தனையை வளர்க்கின்றன என்பதில் உண்மை இருக்கிறது. மூளையை வளர்த்தால் மகிழ்ச்சி. ஆனால் இவ்விளையாட்டுகள் மூளையை அதிகமாக வளர்த்து சிந்தனைத் திறன் அனைத்தையும் விளையாட்டிலேயே முடக்கி விடுகின்றன என்பதே இன்றைய அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. விளையாட்டுகளில் மூளை முடங்கி விடுவது கூட அவ்வளவு அபாயம் இல்லை. இவ்விளையாட்டுகளை விளையாடும் போது மட்டுமல்ல விளையாடி முடித்து உறங்கும் போதும் மூளை விளையாட்டிலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்விளையாட்டுகளிலேயே காலத்தைக் கழி(ளி)க்கும் குழகுழந்தைகளை விசாரித்த போது அவையும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றன. மூளையை ஒட்டுமொத்தமாக இவ்விளையாட்டுகள் ஆக்கரமிப்பு செய்கின்றன என்பதே உண்மை.

    நினைவு, நினைவிலி என்னும் இரு நிலையிலும் மூளை விளையாட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மூளை நரம்பில் இருக்கும் அணுக்கள் ஒரு வினாடிக்கு சுமார் 80 முறை துடிக்கும். இவை முன்னும் பின்னும் துடிப்பதால் எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவை உருவாகின்றன. இம்மூளை நரம்பின் அணுக்கள் சில வேளைகளின் விபரீதமாக வினாடிக்கு 500 வரை துடிக்கும். அணுக்களின் இப்படிப் பட்ட அதிக பட்ச துடிப்பால் மூளை முழுவதும் அல்லது மூளையின் ஒரு பகுதி பாதிக்கப் படுகிறது. உணர்வு ரீதியாக குழந்தை பாதிக்கப் படும்போது இந்நோய் வருகிறது. இந்நோய் வரும்போதும் குழந்தைகள் உணர்வு ரீதியாகப் பாதிக்கப் படுகின்றன. கணினி விளையாட்டு இவ்விரண்டுக்கும் காரணமாகி விடுகிறது.

    ஃபிட்ஸ் எனப்படும் இந்நோய் குழந்தை பிறப்பின்போது ஆயுதம் பயன்படுத்துவதால், மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பதால், குறைந்தும் மிகுந்தும் கேட்கப் படும் ஒலிகளால், குறைந்தும் அதிகரித்தும் பார்க்கப்படும் பளிச்சிடும் ஒளிகளால் அதாவது தொலைக்காட்சியை வெளிச்சமின்றி பார்ப்பதால், அதிகப் படியான மனக்கவலையால், கால வரைமுறை அற்ற உணவுப் பழக்கத்தால், பெண்குழந்தைகளுக்குப் பூப்புக்காலத்தில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளால் என்று பல காரணங்களால் வருகிறது. கணினியும் மெல்ல மெல்ல இந்நோயைக் குழந்தைகளுக்குத் தந்து கொண்டு இருக்கின்றது. குழந்தைகளின் பொழுதைக் குடிக்கும் கணினி மெல்ல மெல்ல அவர்களின் உடல் நலத்தையும் குடிக்கிறது.

    “ஓடி விளையாடு பாப்பா – நீ

    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

    கூடி விளையாடு பாப்பா

    ஒரு குழந்தையை வையாதே பாப்பா”

     

    என்று அன்றே அறிவுரை கூறினான் பாரதி. அவன் தேசியக் கவி, சுதந்திரக் கவி என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் ஒரு குழந்தை நல மருத்துவனும்.  குழந்தைகளின் உடல், மன நலத்திற்கு எது தேவையோ அதைப் பாடியுள்ளான். இது போன்ற இயந்தரங்களுடன் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ப்பது போல வளர்த்து வாழ்விழக்கச் செய்து விடும் என்பதை அறிந்தவன் அவன்.

    கணினி விளையாட்டில் ஒரு குழந்தைதான் விளையாட முடியும். வேறு ஒருவருடன் விளையாட முடியாது. வேண்டுமானால் கணினியில் ஒவ்வொரு விளையாட்டிலும் உடன் விளையாடுபவர்களைப் போல ஒரு உயிரற்ற உருவம் விளையாடும். இப்படியே கணினியைத் தான் மட்டுமே பயன் படுத்தி விளையாடிப் பழகிய குழந்தைகள் இன்னொரு குழந்தை விளையாட வந்து விட்டால் பாண்டியன் நெடுஞ்செழியன் கன்னி யுத்தம் செய்தது போல் இந்தக் குழந்தைகள் கணினி யுத்தம் புரிய தொடங்கி விடுகின்றனர். கூடி விளையாடும் பண்பும் கணினியால் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

    ஓடி விளையாடுவது குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்பது பெற்றோர்கள் அறிந்ததே. கூடி விளையாடுவதால் நட்பு, அன்பு, பகிர்வு, ஒற்றுமை முதலிய நற்பண்புகள் வளர்வதை எவராலும் மறுக்க முடியாது.

    பெற்றோர்களே உங்களுக்கு விடுமுறை இல்லாவிட்டால் என்ன? வெள்ளைப்பணம் கைகளில் இல்லாவிட்டால்தான் என்ன? வெளியூருக்குத்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டுமா? பணக்காரர்களுக்குப் பாதாம் பருப்பு என்றால்  ஏழைக்கு என்று ஒரு பட்டானிப் பருப்பு கூடவா கிடைக்காமல் போய் விடும். அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்றால் நீங்கள் அருகில் இருக்கும் பூங்காவுக்கு, கடற்கரைக்கு,, அழைத்துச் செல்லுங்கள். அடி, கடி பட்டால் பதில் சொல்ல வேண்டிய தைரியம் உங்களுக்கு இருந்தால், உங்கள் குழந்தைகளுடன். பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள். கூடி விளையாட அனுமதியுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளின் விளையாட்டை நாள் தோறும் இரண்டு மணிநேரம் கண்டு மகிழுங்கள். கோடையை கொஞ்சமாவது இன்பமாக கழித்த புத்துணர்வு குழந்தைகளுக்குக் கிடைக்கும். ஏன்? உங்களுக்கும் கிடைக்கும். சும்மாவா சொன்னார்கள் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று. அதிலும் சுவை இருக்கத்தானே செய்கிறது!

     

     

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன்

    டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது.

    நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது.

    நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி நம் உடலில் சேகரிக்கும்படி செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலால் 2 நாள் தேவைக்கு மேலான குளுகோசை சேமிக்க முடியாது. ஆனால் ஏராளமான அளவு கொழுப்பை உடலால் சேர்க்க இயலும். ஆனால் தினமும் இன்சுலின் பிறப்பிக்கும் இந்த உத்தரவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைகிறது. இந்த சூழலில் இன்சுலினின் கட்டளையை ஏற்று சர்க்கரையை கொழுப்பாக்க உடல் மறுக்கிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

    உடலை சொல்பேச்சு கேட்க வைக்க நம் பேன்க்ரியாஸ் மேலும் அதிகமான அளவில் இன்சுலினை சுரக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் இயன்ற அளவு அதிகபட்ச இன்சுலினை பென்க்ரியாஸ் சுரக்கிறது. ஆனால் அந்த அளவு அதிக இன்சுலினயும் எதிர்க்கும் ஆற்ரலை உடல் பெறுகிறது. அதனால் நாம் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம்.

    உணவில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மிக குறைந்துவிடும். டயபடிஸ் வரும் வாய்ப்பும் குறையும்.

    இது குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

    ஆய்வு நிகழ்த்தபட்டது கனெக்டிகட் பல்கலைகழத்தில்

    குண்டாக ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் 13 பெண்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டனர். இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு நம் மருத்துவர்கள் பைந்துரைக்கும் குறைந்த கொழுப்பு உணவை உட்கொண்டது. இன்னொரு பிரிவு குறைந்த சர்க்கரைசத்து நிரம்பிய உணவை உட்கொண்டது. இரு குழுவினரும் ஒரு நாளைக்கு 500 காலரி மாத்திரமே உண்ண பணிக்கபட்டனர். 1 மாதம் முழுக்க இப்படி முக்கால் பட்டினி டயட்டை அவர்கள் மேற்கொண்டனர்.

    1 மாதம் கழித்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

    உயர்கொழுப்பு உணவை உண்ட பெண்களின் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு குறைந்த கொழுப்பு சத்து நிரம்பிய உனவை உண்ட பெண்களைன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவை விட குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயர்கொழுப்பு, குறைந்த சர்க்கரை சத்து நிரம்பிய உணவு 1 மாதத்தில் அதை உண்ட பெண்களின் உடலின் இருந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்தது. ஆக வெறும் ஒரே மாதத்தில் இந்த பெண்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய அவர்களுக்கு குறைந்த இன்சுலினே போதும் என்ற நிலை உருவானது.
    இன்னும் பல ஆய்வுகளை எழுதலாம்.

    ஆனால் அவற்றின் முடிவுகள் பெரிதும் மாறுபடுவது இல்லை.

    சர்க்கரை சத்து உள்ள உணவுகள் கெடுதல். இயற்கையான கொழுப்பு நிரம்பிய உணவுகள் உடலுக்கு நன்மையளிப்பவை.

    இதை தான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏன் இன்னும் டயபடிஸ் பேஷன்டுகளுக்கு சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன?

    அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை குணமாக்க ஆலோசனை கூறுகிறதா அல்லது அவர்களை நிரந்தரமாக சர்க்கரை நோயிலேயே இருக்க வைக்க ஆலோசனை கூறுகிறதா என்பது பலசமயம் பிடிபடுவது இல்லை.

    உதாரணமாக அந்த சங்கம் கூறுவது

    “உங்கள் உடல் சர்க்கரையை குளுகோசாக எளிதில் மாற்றிவிடும்

    உடலில் உள்ல குளுகோஸ் லெவெலை விரைவில் ஏற்றும் சக்தி படைத்தது கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுதான்

    எத்தனைகெத்தனை அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ அத்த்னைக்கு அத்தனை உங்கள் உடலில் சர்க்கரை லெவெல் ஏறும்

    நீங்கள் அதிகம் உண்னவேன்டிய உணவுகள் கார்போஹைட்ரேட் நிரம்பிய ரொட்டி, அரிசி, பாஸ்டா போன்ற உணவுகளே..”

    எதாவது புரிகிறதா?

    எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

    சர்க்கரை உண்பதால் சர்க்கரை நோய் வரும் என சொல்லிவிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நிரம்பிய உணவுகளை பரிந்துரைப்பது ஏன்?

    எனக்கு புரியவில்லை

    உங்களுக்கு புரிகிறதா?

    (அடுத்த பகுதியில் நிறைவுறும்..)


    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • வார ராசி பலன்!…13-05-13 – 19-05-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:வேலை காரணமாக வெளியிடம் செல்லும் வியாபாரிகள் காரசாரமான உணவு வகைகளைத் தவிர்த்து விட, உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் வியாபார வட்டத்தில் உதவி கேட்டு செல்லும் முன் சூழலுக் கேற்றவாறு, தக்கவரை அணுகினால், ஏமாற்றங்களை தவிர்த்து விடலாம். மாணவர்கள் வம்பிழுப்பவர்களை இனங்கண்டு ஒதுங்க, கவனச் சிதறலின்றி படிப்பில் ஈடுபட்டு அதிக மதிப்பெண் களை பெற முடியும். கணக்கு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் நீங்குவதால், சுய தொழில் புரிபவர்கள் விடுபட்ட சலுகைகளை பெற்று மகிழ்வார்கள். கலைஞர்கள் கடனாக பணம் வாங்கிசெலவழித்த நிலை மாறி விடும். பெண்கள் தங்கள் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

     ரிஷபம்: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும் இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கோடு,வேலைப்பளுவும் உயரும்.  சுய தொழில் புரிபவர்கள்  செய்யும் பொருளாதார முயற்சிகள் வெற்றி பெற தகுந்த படி  திட்டம்  இட்டு வேலை செய்வது அவசியம். வெளிவட்டாரத்தில் கவனமாக இல்லை என்றால், மாணவர்கள்  வேண்டாத  தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். கலைஞர்கள் , சுறுசுறுப்பாக செயல்பட்டால்,எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும்,   வியாபாரிகள்  வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.

     மிதுனம்: பொறுப்பான பதவி வகிப்பவர்கள் ரகசியமாய் வைக்க வேண்டிய செய்திகளை ரகசியமாகவே வைத்தால், நிம்மதியாய் உலா வரலாம். முதியவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளித்தால் புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபட இயலும். பெண்கள் அறிமுகமில்லாத இடங்களில் இயன்ற வரை சொந்த விஷயங்களை பிறரிடம் பரிமாறிக்கொள்வதை தவிர்த்து விடவும். இந்த வாரம் சில சமயம் சரக்குகள் வரும் வரை வியாபாரிகள் சிறிது பதற்றத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை அறிந்து கொண்டால் அவர்களை நல்வழிப்படுத்துவது எளிதாகும்.

     கடகம்: சொந்த மனை வாங்க எடுக்கும் முயற்சிக்குத் தேவையான பணமும், ஊக்கமும் சேரும். பெண்கள் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனி கவனம் செலுத்தி வந்தால், அயர்வின்றி வேலைகளை முடிக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற இலாக்காவில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்கள்,பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்வதே நல்லது. வேலைகளை முடிக்க முடியும். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறுவார்கள். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தால், உடல் நலம் குன்றாமலிருக்கும்.

     சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் நிலைமையை சீர்தூக்கிப்பார்த்து செயல்படுங்கள். கசப்பான அனுப வங்களைத் தவிர்த்துவிடலாம். இந்த வாரம் கடன் பிரச்னைகள் பெண்களுக்கு சற்று கொல்லை கொடுத்தாலும், தங்கள் வாக்கு வன்மையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். வியாபாரிகள் அரசாங்க விவகாரங்களில் தக்க ஆலோசனையுடன் செயல்படுவதன் மூலம் பண விரையத்தைக் குறைத்து விடலாம். பணிவாகப் பேச்சு, இதமான அணுகுமுறை இரண்டையும் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களோடு பணவரவும் வந்து சேரும்.

     கன்னி: பெண்கள் பண வரவிற்கேற்றவாறு செலவுகளை வரிசைப்படுத்திக் கொண்டால், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது கடினமாக இராது. மாணவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி வம்பு செய்பவரிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதம், கண்டிப்பு இரண்டையும் தக்கவாறு பயன்படுத்தினால், அவர்களால் பிரச்னைகள் ஏதுமிராது. பணியில் இருப்போர்கள், உயரதிகாரிகளிடம் பணிவாய் நடந்தால், உங்களுக்கு தேவையான சலுகைகள் நழுவாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்டால், உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும்.

     துலாம்: இந்த வாரம் கூட்டுத் தொழிலில் அவசியமில்லாத மாற்றம் எதையும் செய்ய வேண்டாம்.பெண்கள் புதிய உறவுகள், பண வரவுகள் இரண்டிலும் கவனமாய் இருந்தால், பிரச்னைகள் புதிதாய்த் தோன்றாமலிருக்கும்.மாணவர்கள் நண்பர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் அரவணைத்துச் சென்றால்,உங்களுக்கு தோள் கொடுக்க தயாராய் இருப்பார்கள். கலைஞர்கள் வெற்றி கிடைக்கும் வ்ரை எதிலும் அலட்சியம் இன்றி கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்குதல், பெரிய அளவில் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் நிதானமாகச் செயல்பட்டால் பல நன்மை பெறலாம்.

     விருச்சிகம்: வியாபாரிகள் வங்கி கணக்கு வழக்கு ஆகியவற்றை நேரடியாக கவனித்து வந்தால், பொருளாதாரம் இறங்காமலிருக்கும். மாணவர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதை உடனடியாக சீர் செய்தால், அதிக செலவுகள் இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புகளை தள்ளிப்போடாமல் செய்து முடித்தால், வெற்றியும் தடையில்லாமல் உங்களைத் தேடி வரும். சிலருக்கு பணியிட மாற்றமும், அதனால் அதிருப்தியும் ஏற்படலாம். முதியவர்கள் உடற் பயிற்சி, உணவு ப் பழக்கம் இரண்டிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

     தனுசு: பெண்கள் மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அஜீரணம், வயிற்று வலி முதலியவை தலைகாட்டாமலிருக்கும்பணியில் இருப்பவர்கள் பண பரிமாற்றத்தால் நல்ல நட்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மாணவர்கள் முக்கிய மான அலுவல்களில் உங்கள் முழு கவனத்தையும் திருப்பினால், விரும்பிய பலன் கிடைப்பது உறுதி.வியாபாரிகள் வரவில் காட்டும் அக்கறையை செலவிலும் காட்டி வந்தால், பொருளாதாரம் கையை கடிக்காமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு இனிமைப் பூச்சு கொடுத்தால், எதிராளிகளையும் எளிதில் வென்று விடலாம்.

     மகரம்: வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளை புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாக குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால்,நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளி தாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்வதை தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.

     கும்பம்: கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ளபணி சுமையை சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்தபின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக் .கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும்.

     மீனம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும்.பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது .சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவை பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்கு தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும்,குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 71

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    “முகம் இல் வரி”
    “காமம் மிக்க கழிபடர் கிளவி”
    (46)

    நாரையே! நாரையே!
    எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே!
    கரையில் அடித்து
    அதை உடைக்கின்ற அலைகளையுடைய
    கடல் பகுதி சார்ந்த
    எம் தலைவனுக்கு
    நீ எம் காதல் நோயை
    உரைக்கவே இல்லை.
    எனவே,
    இனி எம் கானலில் வந்துதான் அடையாதே!

    கட்டுரை
    மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்

    (47)

    அங்ஙனம் கோவலன் பாடியது போலவே
    பாடல்கள் பாடிமுடித்தனள் மாதவி;
    பின்னர் தன் மென்காந்தள் மென்விரல்களால்
    கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு
    இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும்
    இசையதனை எழுப்பி
    முறைப்படி பாடினள் மாதவி;
    அதற்குப் பின்பு
    வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினள்.

    முகம் இல் வரி
    தலைவி மாலைபொழுது கண்டு கூறுதல்

    (48)

    மாலைப் பொழுதே!
    நெய்தல் நில மக்களுக்குரிய
    ‘விளரி’ எனும் இனிய பாலைப்பண்ணை
    யான் யாழ் மீட்டிப் பாடுங்கால்,
    இளி நரம்பைத் தடவுவதற்குப் பதிலாக
    கைக்கிளை எனும் நரம்பைத் தடவும் வண்ணம்
    எனக்குத்தான் மயக்கத்தைத் தந்துவிட்டாயே!
    இங்ஙனம் பகைநரம்பு
    எனை மீட்டவைக்க வல்ல நீ
    என் உயிரை மாய்க்கவும் வல்லாய்!
    ஆதலால்,
    என் உயிரினைக் கொண்டு சென்று வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html>

    படத்துக்கு நன்றி:
    http://blondesearch.ru/index.php?key=Raja_Ravi_varma_paintings&page=1

    Share