இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !
காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.
இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.
ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.
இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.
ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.
மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.
உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.
அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.
ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.
வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.
என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.
வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.
நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.
பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.
ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.
பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.
இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.
இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan