– சு.ரவி

 

வணக்கம், வாழியநலம்

மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்…

ஆடலில் வென்றான் ஐயன்

 

அம்மை நீ தோற்றாய் அல்லை!

கூடலில் போலே இங்கும்

தோற்றவர் வென்றார் அன்றோ?

கூடலில் கோயில் கொண்டு

குறையறக் காக்கும் காளீ!

தேடலில் அடியேன் வெல்ல

தேவி நீ அருளல் வேண்டும்!

 

மாடமா மதில்கள் சூழும்

மதுரையம் பதிவாழ் தேவி!

காடுவாழ் சிவனைக் கண்டு

காதலுற் றாயோ, காளீ!

வீடு நான் வேண்டேன்; வேறு

விழுமிய செல்வம் வேண்டேன்!

பாடலால் உந்தன் பாதம்

பரவிடும் சுகமே போதும்!

 

கண்ணனோ(டு) இடத்தை மாற்றிக்

கம்ஸனைக் கலங்க வைத்தாய்!

எண்ணெழுத் தறியா மூடன்

இலக்கியம் படைக்கச் செய்தாய்!

மண்ணிலே உயிர்கள் வாழ

மாரியாய்ப் பொழிந்து நின்றாய்!

உள்நினைந் துருகிப் பாடும்

ஒருகவி போதும் தாயே!

 

எட்டய புரத்துக் காரன்

எம் தமிழ்ப் பாட்டுக் காரன்

கொட்டிய கவிதைக் குள்ளே

கொழுந்துவிட் டெரியும் தேனே!

மட்டவிழ் மலர்கள் சூடி

மதுரையை ஆளும் தாயே!

பட்டமும், பரிசும் வேண்டேன்

பதமலர் தருவாய் காளீ!

 

பண்டரி பரத்தில் விட்டல்

பக்தரோடி ழைந்ததைப் போல்

பண்டொரு நாளில் சொக்கன்

பலவிளை யாடல் செய்த

மண்ணினை, மதுரை ஆளும்

மரகத வல்லித் தாயே!

திண்ணமாய் நின்னைப் பற்றத்

திருவுளம் செய்வாய் காளீ!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மதுரையம் பதி காளி

  1. வெற்றித் தெய்வமாம் கொற்றவையின் புகழ் கூறும் பாடல் அருமை. மதுரைக் காளியை எம் கண்ணெதிரே காட்டும் ஓவியமும் அழகு. பாராட்டுக்கள் கவிஞரே!

  2. அருமையான ஓவியம் ஐயா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *